

முகம் 05
துவாரகாவும் சித்தார்த்தும் விருந்து, தேன் நிலவு எல்லாம் முடித்து நேற்று தான் ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த ஒரு மாதமும் பார்த்திருக்கப் பறந்திருந்தது. தேன் நிலவு முடித்து இங்கே இன்னும் ஒரு வாரம் இருப்பதாக இருக்க, சித்தார்த்துக்கு அவசர வேலை ஒன்று வந்ததால் இன்றே கிளம்ப வேண்டிய சூழ்நிலை…
மாலை புறப்பட இருக்க, துவாரகா முகத்தைத் தூக்கி வைத்தபடி உடையை அடுக்கிக் கொண்டிருக்க, இவனோ மெத்தையில் படுத்தபடி மனைவியைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை உணர்ந்தும், அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாளில்லை.
அவனோ அவள் கவனத்தை ஈர்க்கத் தலையணையை அவளை நோக்கி ஏறிய, அவளோ அவனைத் திரும்பி முறைத்தாள்.
“என்னடி புருஷன முறைக்கிற, மாமா குட் மார்னிங் முத்தம் இன்னும் தரலன்னா இந்தக் கோபம்? வேணும்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தான, இப்படியா முறைப்பாங்க?” என்று கேட்க, அவன் எறிந்த தலையணை நியூட்டனின் மூன்றாம் விதிக்குக் கட்டுப்பட்டது போல அவனை நோக்கியே வந்தது.
அதில் சிரித்தவனோ எழுந்து அவளருகே வந்து அவளைப் பின்னிருந்தே அணைத்தபடி “டேய் துவா, அதான் சொன்னேனேடா, மொழியும் அபியும் நாளைக்கு இந்தியா வர்றாங்க. அவ வரும்போது நான் அங்க இருக்கணுமே! இப்போதைக்கு இங்க அவளுக்குனு இருக்குறது நான் மட்டும் தானே! அவ அப்பா அம்மா கிட்ட அவ பேசுறத விட்டு ரொம்ப வருஷமாச்சு. அவ எனக்காக வர்றா, அப்போ நான் இல்லனா நல்லா இருக்குமா சொல்லு? என்றவன்,
“சாரிடா துவா, எனக்குப் புரியுது உனக்கு இங்க வீட்ட விட்டுட்டு வர எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு. பட் ஐ ப்ரோமிஸ் யூ, முடியுமான நேரம் உன்னக் கண்டிப்பா இங்க கூட்டிட்டு வருவேன் சரியா? இன்னும் வன் வீக்ஸ்ல மெடிக்கல் கேம்ப் இருக்குல்ல. அப்போ இங்க தான தங்கப்போறோம். இப்படி போய்ட்டு அப்படி வந்துடலாம் சரியா?” என்றான்.
அவளுக்கு அதெல்லாம் புரியாமல் இல்லை. ஆனால் சட்டெனப் போக வேண்டும் என்றதும் கவலையாகி விட்டது.
போன வாரமே தேன் நிலவு முடிந்து வந்திருக்க வேண்டியது. ஆனால் இவனால் தான் அதுவும் முடியாமல் போனது. சரி இந்த ஒரு வாரம் இருக்கலாம் என்றால் அதிலும் சிக்கல்.
‘இனிமேல் எங்கே வீட்டில் இருப்பது?’ என்ற கவலையென எல்லாம் சேர்ந்து சற்றுக் கோபம் எட்டிப்பார்த்து விட்டது.
இப்படி வந்து அவன் தன்னிலை விளக்கம் கொடுத்ததும் அவன் மனைவியால் தாங்கமுடியவில்லை…
அவன் பக்கமாகத் திரும்பி அவன் முகம் பார்த்தவளோ “என்னங்க நீங்க, சாரி எல்லாம், இப்போ நான் கேட்டேனா? சட்டுனு போகணும்னு சொன்னதும் கொஞ்சம் கஷ்டமாகிடிச்சு வேற ஒண்ணுமில்ல. உங்க அபி கூட நானும் ஃபிரண்ட் ஆகணும்ல சோ நாம போகலாம்” என்றாள் அவன் மீசையில் ஆசையாய் முத்தம் வைத்து…
அவள் புரிதலில் மட்டுமல்ல அவள் முத்தத்திலும் கிறங்கியவன் “நீ என்ன ஏமாத்திட்ட போ, இப்படிலாம் முத்தம் கிடைக்கும்னா இன்னும் ஒரு வாரம் ஹனி மூன் எக்ஸ்டென்ட் பண்ணி இருப்பேனே!” என்றவன் அவள் இதழுடன் அவன் இதழை மெல்ல உரசினான்.
“அடடா ஒன்னுமே பண்ணாத ஆளுதான் நீங்க, ஒருவாரம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய் ரெண்டு வாரம் தங்குன ஆள் தானே நீங்க” என்றாள் வெட்கத்தை மறைத்து…
“இவ்வளவு அழகான பொண்டாட்டி இருந்தா, யாரா இருந்தாலும் ஒரு வாரம் என்ன ஒரு மாசமே எக்ஸ்டென்ட் பண்ணலாம். ஆனா ஒன்னு அவங்க வைஃப் என் பொண்டாட்டி மாதிரி ஃபுல் கோப்ரேஷனோட டெடிகேடட் ஸ்டுடென்டா இருக்கணும்” என்று விஷமத்துடன் புன்னகைத்து அவளிடம் செல்ல அடிகளையும் கடிகளையும் பெற்றுக்கொண்டான்.
_______________________
அன்று தங்கை ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் மதியமே வீட்டுக்கு வந்திருந்தான் ஜெயதீரன்.
வந்தவன் நேராகப் பின் தோட்டத்து வீட்டுக்குச் சென்று உடைமாற்றி பெரிய வீட்டுக்கு வர, முதலில் அவனை வரவேற்றுது என்னவோ கோபமாக அமர்ந்திருந்த இணர்வி தான்.
இவனைக் கண்டதும் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவளருகில் அமர்ந்திருந்த தன் தாய் மீனாட்சியிடம் அவன் என்னவென்று புருவம் உயர்த்தி வினவினான்.
அவரோ அவள் கோபமாக இருப்பதாகச் சைகை செய்ய, இவனுக்கு ‘ஏன்’ என்பது புரியாவிட்டாலும் ‘ஏதோ சொதப்பி இருக்கிறோம்’ என்று மட்டும் புரிந்தது.
நேரே உணவு மேசைக்குச் சென்றவன் அங்கே அமர, அவள் எழும் அறிகுறியே இல்லை. எப்போதும் அவன் அமர்ந்ததும் அவனருகில் வந்து ஒட்டிக்கொண்டு அமர்பவள், இன்று அருகில் கூட வரவில்லை.
“அப்போ கோபம் ரொம்ப பெருசு போலயே! என்னடா தீரா பண்ணி தொலைச்ச” என்று தனக்கு தானே முணுமுணுக்க, மீனாட்சி வந்துவிட்டார் அவனுக்குப் பரிமாற…
“என்னமா, ஏன் கோபமாம்? ஏதாச்சும் சொன்னாளா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அவரும் அதே மெல்லிய குரலில் “ஈவ்னிங் வந்ததுல இருந்தே இப்படித்தான் உக்காந்திருக்கா, டிரஸ் கூட இன்னும் மாத்தல, அங்க தோட்டத்து வீட்டுக்கும் போகல” என்று அவருக்குத் தெரிந்ததைச் சொல்ல,
இவனை முறைத்தபடியே வந்த வேதவல்லியோ தட்டில் உணவைப் போட்டு அவளருகே சென்று அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினார்.
“அத்தைக்கு சொல்லிருக்கா, பாருங்க, அங்க இருந்து முறைப்பு எல்லாம் பலமா இருக்கு” என்று அவன் தாயிடம் கிசுகிசுக்க,
அங்கே வேதவல்லியோ “அந்த ராஸ்கல் நம்மள பத்தித்தான் இணர் ஏதோ சொல்லுறான். இன்னைக்கு பேசாத அவனோட” என்க, அவளும் அவனை முறைத்தபடி அடுத்த கவலத்தை வாங்கிக் கொண்டாள்.
அங்கே அவனுக்கோ உண்ணவே முடியவில்லை, உணவை வாய்வரை கொண்டு சென்று முடியாமல் தட்டிலேயே வைத்திருந்தான்.
எப்போதும் வீட்டில் இருக்கும்போது முதலில் அவளுக்கு ஊட்டி விட்ட பிறகே அவன் உண்ணுவது வழக்கம். இன்று அவள் அருகிலே வராமல் இருக்க, இவனால் உண்ண முடியவில்லை.
உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு அவள் அருகே அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தவன், வேதவல்லி அடுத்த கவலத்தை அவளுக்கு நீட்டிய இடைவெளியில் இவன் அவளுக்கு ஊட்டிவிட்டிருந்தான்.
அதில் பெண்கள் இருவரும் திகைக்க, இவனோ புன்னகையுடன் உண்ணத் தொடங்கி இருந்தான்.
சரியாக அந்த நேரம் சோகமே உருவாய் உள்ளே நுழைந்த பரஞ்ஜோயிடம் “வா ஜோதி, சாப்பிட்டியா? உனக்கும் வைக்கட்டுமா?” என்று மீனாட்சி கேட்டும் அவனிடம் பதிலில்லை.
அவரோ மீண்டும் அவன் தோளில் தட்டி “டேய் ஜோதி, பேசுறது காதுல விழுதா? என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று கேட்க,
அவனோ “அத ஏன் மீனாம்மா கேக்குறீங்க?” என்று ஆரம்பிக்க,
“சரிடா கேக்கல, ம்மா நீங்க கேக்காதீங்க. பொண்டாட்டிக் கிட்ட அடி வாங்குன கதைய ஊரெல்லாமா சொல்லுவாங்க” என்ற தீரன் மீண்டும் சாப்பாட்டில் கவனமாக…
“நீ பேசாதடா எல்லாம் உன்னால தான்” என்று தீரனிடம் காய்ந்தவன்,
“இன்னைக்கு பரணிக்குக் கவிதை போட்டி இருந்திச்சுமா, அதுக்கு கட்டாயம் வான்னு தேனு சொல்லித்தான் அனுப்பிச்சு. சரி இவன் எப்படியும் அங்க போவான் தானே இவன் கூட நாமலும் போவோம்னு இருந்தா, இவனும் மறந்து என்னையும் மாட்டி விட்டுட்டான்” என்று அவன் பேசிக்கொண்டிருக்க, அங்கிருந்தவர்கள் அவனை எங்கே கவனித்தனர், பார்வை எல்லாம் இணர்வியிடம் தான்.
தீரனின் காதிலோ ‘இன்னைக்கு வந்துடுவல்ல ஜெய்’ என்ற இணர்வியின் குரல் தான் ஒலித்தது.
ஜோதி ஆரம்பித்துச் சில வினாடிகளில் அவளின் கோபத்துக்கான காரணம் புரிந்த தீரனோ மானசீகமாய் தலையிலடித்தபடி சாப்பாட்டு தட்டுடன் சமையலறை நுழைந்து, போன வேகத்திலேயே மீண்டும் அவன் அவளிடம் வர,
அவளோ தனது பையில் இருந்த சான்றிதழ் ஒன்றையும் சிறிய பரிசுக் கோப்பை ஒன்றையும் அவன் கையில் கொடுத்து அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
கோபமாய் செல்லும் அவளைத் தடுக்காமல் கையில் இருந்ததையே பார்த்தவனது மூளை, அவன் தவறு எவ்வளவு பெரிது என்பதை அக்கணம் உணர்த்தி இருந்தது.
மீனாட்சியோ “என்ன தீரா இது? உனக்கு வேலைனா என்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாமே! இந்தக் கழுதையும் எங்கிட்ட சொல்லல” என்று தீரனிடம் ஆரம்பித்தவர்,
“ஏன் வல்லி உனக்கு முன்னவே தெரியுமா? சொல்லி இருக்க வேண்டியது தான?” என்று வேதவல்லியிடம் முடித்தார்.
அவரோ “எனக்கே வந்து தான் சொன்னா அண்ணி, நான் பார்த்துப்பேன்னு கூட்டிட்டு வந்தா மட்டும் போதுமா? நல்லா பார்த்துக்கவும் செய்யணும். இதுக்கு தான் மலரக் கட்டிக்கச் சொன்னேன். கேட்டா தானே! அவங்க அவங்க பிடிவாதம் தானே அவங்களுக்கு முக்கியம்” என்று தீரனை ஜாடை பேசியவர் அங்கிருந்து கோபமாய் செல்ல,
“இவ ஒருத்தி…” என்று அழுத்துக்கொண்ட மீனாட்சி, “தீரா போப்பா போய்ச் சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வா. அவ ஒழுங்காவே சாப்பிடல” என்றதும் தான் அங்கிருந்து எழுந்தே சென்றான்.
“என்ன ஜோதி பண்றது இவனை? நீ கொஞ்சம் பேசிப் பாரேன். இங்க வீட்டுல இல்லாம அவங்க மட்டும் தனியா எத்தனை நாளைக்கு இருக்குறது. இத்தனை வருஷம் ஓடிடிச்சு, அப்பாவும் பையனும் இன்னும் பேசிக்கவே இல்லையே!” என்றார் பரஞ்ஜோதியிடம்…
“ம்மா, அவனுக்குப் பிடிக்காததை நான் என்னைக்குமே அவனைப் பண்ண சொல்லவே மாட்டேன். அது உங்களுக்கே தெரியும். அவன் என்ன வேணும்னேவா சின்னய்யா கூடப் பேசாம இருக்கான். அவரும் இப்போ வரைக்கும் இணர்விய ஏத்துக்கலயே! அன்னைக்கு அவன் அவளோட வந்து நின்னப்போ வெளிய போகச் சொன்னதே சின்னய்யா தானே, அப்போ அவரா கூப்பிடுற வர உரிமையா எப்படி இங்க வந்து தங்குவான்? இப்போவும் அவன் இங்க வர்றதும் கூட உங்களுக்காகவும் பெரியய்யாக்காகவும் தான்” என்றான் நீண்ட விளக்கமாய்…
மீனாட்சியோ அவன் பேச்சில் இருந்த உண்மையில் அமைதியாக நிற்க, இவனுக்கோ மனது கேட்கவில்லை…
“மீனாம்மா, எல்லாம் சீக்கிரமே சரியாகும். கவலைப்படாதீங்க, சின்னய்யா கோபமே இவன் நல்லதுக்காகத் தானே! காலம் எல்லாத்துக்கும் மருந்து. அவங்க இந்த வீட்டுக்குள்ள உரிமையா வந்து தங்குற நாள் ரொம்ப தூரத்துல இல்லை” என்றான்.
“என்னோட வேண்டுதலும் அதுதான் ஜோதி, என் பையன் அவன் குடும்பத்தோட இங்க உரிமையா வாழனும்” என்றார்.
_________________
கோபமாய் வெளியே சென்ற இணர்வியோ, அங்கே தோட்டத்தில் எப்போதும் அவர்கள் அமரும் மரத்தின் கீழ் தான் அமர்ந்திருந்தாள்.
இவனும் சற்று நேரத்திலேயே எதுவும் பேசாமல் அவளருகில் வந்து அமர்ந்து கொள்ள, இருவரிடமும் மௌனம். அவனுக்கோ மறந்துவிட்ட குற்ற உணர்வு, அவளுக்கோ அவன் வரவில்லை என்ற கோபம்.
சிறு நேரம் இடைவெளிக்குப் பின் தீரனே ஆரம்பித்தான்.
“இணர், என்னப்பாருடி…” என்க, அவளிடம் சத்தம் இல்லை, மெல்லிய விசும்பல் மட்டுமே!
அதற்கு மேல் பொறுக்கவில்லை அவனுக்கு, அவளை அப்படியே தூக்கி அவன் மடியில் இருத்தி மாறி மாறி இரு கன்னத்திலும் முத்தமிட்டு மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தான்.
அவளோ திமிர, “சாரி இணர், உன் ஜெய் மறந்துட்டேன்டி… நான் தான் ஒரு லூசுன்னு தெரியும்ல, நீயாச்சு எனக்கிட்ட மார்னிங் சொல்லி இருக்கலாமே!” என்றவன் ஒவ்வொரு பேச்சுகிடையேயும் முத்தமிடுவதை நிறுத்தவில்லை…
அதற்கு மேல் முடியாதவளாய் அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, விசும்பல் அழுகையாக மாறி இருந்தது. இவனோ முதுகை தட்டிக் கொடுத்துப் பேசிக்கொண்டே தான் இருந்தான்.
சிறிது நேரத்தில் அழுகை குறைந்து அவனை முறைக்க, “சாரிடா செல்லம், நிஜமாவே மறந்துடிச்சு, என்னத் தேடுனியா?” என்க,
“ம்ம்ம், ரொம்ப… இன்னைக்கு எல்லாரும் அம்மா அப்பா கூட வந்தாங்க தெரியுமா? எனக்குத் தான் பொயம்ல ஃபர்ஸ்ட் பிரைஸ். நான் உன்ன தான் தேடுனேன் நீ வரவே இல்லை, பரணியும் நானும் வாசலையே பார்த்தோம் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் பேட் பாய்ஸ்” என்றாள் நான்கு வயது இணர்வி…
“அச்சோ சாரிடி செல்லம், சாரிடா…” என்றவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தபடியே இருந்தான்.
“ஜெய் மீசை குத்துது…” என்று அவள் சிணுங்க, அவனுள்ளே இன்னொரு குரலும் சேர்ந்து ஒலித்தது. அதனை முயற்று விரட்டியவன், அப்போதும் அவளை விட்டானில்லை…
அவளது கன்னங்களில் முத்தம் கொண்டு அவன் மன்னிப்பை யாசித்துக் கொண்டேதானிருந்தான் அந்தக் காவலன்.
“சரி என் செல்லத்துக்கு என்ன வேணும், இப்போ என்ன கேட்டாலும் அப்பா தருவேணாம்” என்று அவள் பிஞ்சுக் கன்னத்தில் மீண்டும் முத்தம் வைக்க,
“நிஜமாவா ஜெய்” என்று கோபம் மறந்து புன்னகைக்க, இவனும் அவள் புன்னகையில் இணைந்து கொண்டான்.
“ப்ரோமிஸ்டா” என்றதும்,
“அப்போ நாம வெளில போவோமா? ரொம்ப தூரமா… கேக்குறது எல்லாம் வேணும்…” என்று ஆரம்பித்தவள், பிஞ்சு விரலை ஒவ்வொன்றாய் நீட்டி மேலும் ஆசைப்பட்டியல்கள் சொல்ல, அவனும் “ம்ம்ம்” கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“ஜெய், பரணி கூடக் கவலையா இருக்கான் தெரியுமா? ஜோதிப்பா கூட வரல தானே!” என்று அவள் கேட்க,
“அந்த ஜோதிகாவ டீல்ல விட்டுட்டு, நாம மூனு பேரும் போவோம் சரியா, துவா அத்தை ஊருக்குக் கிளம்பினதும் நாமலும் கிளம்பலாம்” என்றதும்,
“ஐஐ ஜாலி… நான் பரணிகிட்ட சொல்லப்போறேன்” என்றவள் அருகில் இருக்கும் பரஞ்ஜோதியின் வீட்டை நோக்கி ஓட,
“பார்த்துப் போடி… விழுந்துடாம” என்றவனின் குரல் எங்கே அவள் காதில் கேட்டது அவள் தான் சிட்டாய் பறந்து விட்டாளே!
செல்லும் மகளையே பார்த்திருந்தவனைக் கலைத்தது சித்தார்த்தின் குரல்…
“தீரா…” என்ற சத்தத்தில் திரும்பியவனோ,
“சொல்லுங்க மாப்பிப்பிளை?” என்றதும் எதிரில் இருந்தவன் கொதித்து விட்டான்.
“என்னடா மாப்பிளை மாப்பிளைனு எனக்கே ஞாபகப்படுத்துறியா? அப்போ நான் உன் தங்கச்சி புருஷன் மட்டும் தான். அப்படி தானே!” என்று கத்த, தீரனிடம் அமைதி…
மீண்டும் சித்தார்த்தே “இதோ பாரு தீரா, உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் உன் பிடிவாதத்தை விட்டுட்டு நடக்குற வேலையப் பாரு, எத்தனை நாளைக்கு இதே கோபத்தைத் தூக்கிட்டுச் சுத்தப் போற, உனக்கான வாழ்க்கை உனக்காகக் காத்திட்டு தான் இருக்கு” என்றான்.
தீரனோ கேலிப்புன்னகையை உதட்டில் தவழ விட்டபடி “எனக்கான வாழ்க்கையா??? அது தான் எப்போவோ முடிஞ்சி போச்சே!” என்றான்.
“தீரா இது விதண்டாவாதம்” என்க,
“என்ன புதுசா என் வாழ்க்கை பத்தி எல்லாம் அக்கறை உனக்கு? எப்பவும் உன் ஃபிரண்ட் தான உனக்கு முக்கியம். என்ன இப்போ உன் சத்தியம் உன்னத் தடுக்கலையா?” என்றான் நக்கலுடன்…
“தீரா, என்னடா எனக்கு உன்மேல் அக்கறையே இல்லைங்கிற மாதிரி பேசுற. வலிக்கிது தீரா, என்னை நீ விலக்குறது தான் தாங்க முடியல. நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் போனா நான் என்னடா பண்ணுறது சொல்லு, நான் உன்னப் பார்ப்பேனே அவளையா???” என்று சித்தார்த் உடைந்து பேச,
தீரனோ “சரி சரி ஃபீல் ஆகாத விடு, இத்தனை வருஷமா சரி ஆகாததா இப்போ ஆகப்போகுது. அவ ஒரு பைத்தியக்காரி நீ சொல்லலைனா என்னால கண்டுபிடிக்க முடியாதா? சத்தியம் அது இதுனு உன்னத்தான் கஷ்டப்படுத்துறா இடியட். நான் நினைச்சிருந்தா அன்னைக்கே அவ எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சிருக்க முடியும். ஆனா எனக்கு வேணாம்னு தான் நானே விலகி இருக்கேன்” என்றவன்,
சிறிது நிதானித்து “உன்மேல இப்போவும் கோபம் கொஞ்சம் இருக்கு தான். ஆனா மன்னிச்சு விட்டுடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்று நிறுத்த, சித்தார்த் பாய்ந்து அவனை அணைத்திருந்தான்.
நண்பனின் பாராமுகம் எத்தனை வதைத்தது அவனை… உரிமையாய் பேச முடியாமல் தவித்தது கொஞ்சமா??? தீரனும் மனதார நண்பனை அணைத்துக் கொண்டான்.
சித்தார்த் மீது அவனுக்குக் கோபம் என்றும் இருந்ததில்லை. அவனுக்காகவே அவனைத் தவிர்த்தான்.
‘தன்னிடம் மறைக்கின்றோமே’ என் குற்றவுணர்வு இன்னும் அதிகரிக்குமே! என்று தான் அவனுடன் பேசுவதையே குறைத்துக் கொண்டான்.
“என்ன உன் பொண்டாட்டினு நினைச்சிடியா? விடுடா என்னை” என்க, சித்தார்த்தோ வீம்புக்கென்று இன்னும் இறுக அணைத்தான்.
“அடடே அவனுகளா நீங்க?” என்று கேட்டபடி ஜோதி அங்கே வர, இப்போது சித்தார்த் அணைத்தது ஜோதியை என்றாகிப் போனது.
“அடேய் அடேய் விடுடா என்னை, தேனு பார்த்திச்சி செத்தேன் நானு. ஏற்கனவே யாரு என்னத்த பத்த வெச்சதுனு தெரியல, இவன் கூடச் சுத்துறதையே சந்தேகமா பார்க்குது, இதுல நீ கட்டிப்புடிச்சிட்டு வேற நிக்கிற” என்று பொய்யாய் அலற,
அவன் பேசியது கேட்டதோ? இல்லை அவனது கெட்ட நேரமோ தேன்மொழி அங்கே அவர்களை நோக்கி வந்தாள்.
“இதான் நீங்க கடைக்குப் போற லட்சணமா??” என்று கேட்ட மனைவியின் குரலில் அடித்துப் பிடித்து சித்தார்த்தை விலக்கி நிறுத்தியவன்,
“இதோ இதோ போய்ட்டேன் தேனு” என்று அசடு வழிய, அவளோ அவனைக் குறுகுறுவெனப் பார்த்து வைத்தாள்.
“நீங்க சரியே இல்ல, அப்போவே உங்க மேல ஒரு கண்ணு வைக்கச் சொல்லி தீரா ஐயா சொன்னாங்க, இனிமேல் இன்னும் கவனிக்கணும் உங்கள” என்று அவனை முறைத்து விட்டுச் செல்ல,
ஜோதியோ “அடப்பாவி நீயாடா அந்த எட்டப்பன்… இப்போவும் அவளா வந்தாளா? நீ வரவெச்சியா?” என்று சந்தேகமாகக் கேட்க,
“பார்த்தியா என்னச் சந்தேகப்படுற, தோஸ்து தோஸ்துனு சொல்லுவ அதெல்லாம் பொய்யா கோபால்” என்றவன்,
“உங்க ரெண்டு பேரோட பாசப்பிணைப்பைப் போட்டோ எடுத்து ‘ஜோதிகா சில் வித் சித்துனு’ கேப்ஷனோட ஸ்டேட்டஸ்ல வெச்சேனா அது பை மிஸ்டேக் தேனுவுக்கும் போயிடிச்சு. வாட் கேன் ஐ டு” என்று தோளைக் குழுக்கியபடி சிரிக்காமல் சொல்ல, சித்தார்த்தோ வாய்விட்டுச் சிரித்தே விட்டான்.
“அடேய் என் வாழ்க்கைல கும்மி அடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு, அவ எதுக்கு என்ன திட்டலாம்னு காரணம் தேடிட்டுத் திரியும்போது, நீயே போய் லட்டு மாதிரிக் காரணம் குடுக்குற பார்த்தியா நல்லா வருவடா” என்று புலம்ப, அதில் சித்தார்த், தீரன் இருவரும் மேலும் சத்தமாகச் சிரித்து வைத்தனர்.
ஜோதியோ சித்தார்த்தைப் பார்த்து “நீயுமாடா சிரிக்கிற பாவி” என்க,
“பின்ன, இத்தனை நாள் என்கூட பேசாம இருந்தல்ல, அதுக்கு பழி வாங்க வேணாமா? இவன் பேசல்லனதும் என்னை டீல்ல விட்ட தான அனுபவி” என்றான்.
“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு… பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று…” என்று ஸ்லொவ் மோஷனில் பாடலைப் பாடியபடியே ஒவ்வொரு எட்டாய் பின்னே வைக்க,
“அப்போ இன்னும் போகல நீங்க?” என்று தேனு அவன் பின்னே பரணி, இணர்வியோடு நின்றாள்.
அவள் என்னமோ சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் பரஞ்ஜோதி காதுகளிலோ ‘எப்போ வருவீங்க?’ என்ற மைனா படப் பாணியில் கேட்டதில் நொந்தே விட்டான் அவன்.
அவன் அசைவற்று நின்றதை ஒரு பார்வை பார்த்தவளோ தீரனிடம் “ஐயா, துவாம்மா நேரம் ஆகுதுன்னு உங்கள வரச் சொன்னாங்க” என்று சொல்லிச் செல்ல,
பரஞ்ஜோதியின் தலையில் தட்டிய தீரனோ “முழிக்காம வந்து சேரு” என்று சித்தார்த்துடன் முன்னே நடக்க, அவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
அவர்கள் மூவரும் பள்ளிக் காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள், அதன் பின்னர் ஒவ்வொரு துறைக்கு முன்னேறி அடுத்த கட்டத்துக்குப் பயணித்திருந்தாலும் அந்த நட்பு இன்றைளவிலும் அப்படியே தான் இருக்கிறது.
நான் பெரியவன், நீ சிறியவன் என்ற பாகுபாடு எல்லாம் சிறிதும் அவர்களிடத்தில் வந்ததில்லை, வரவும் அவர்கள் அனுமதித்ததில்லை.
ஈர்க்கும்…

