
அத்தியாயம் – 26
“ஏய் கிறுக்கு பிடிச்சிருச்சா உனக்கு, பின்னாடி வண்டி வரது தெரியல, வயித்துல பிள்ளைய வச்சிகிட்டு கண்மண் தெரியாம ஓடி வர” என்று உச்சஸ்தாயில் கத்தினான் கருணா,…
கருணாவின் கோபத்திலும் தெரிந்த தன் மீதுள்ள அக்கறையில் உள்ளம் மகிழ்ந்து போன நித்யா… “அதான் நீ காப்பாத்திட்டியல்ல, ஒன்னும் ஆகவும் இல்லைல, இதை விடு கருணா நான் சொல்றதை கேளு” என அவள் விளக்கம் தர முயல,… “உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? உன் விளக்கம் எனக்கு தேவை இல்லை, என்னை பொறுத்த வரையில் நீ நம்பிக்கை துரோகி, சாகுற வரைக்கும் நீ செய்ததை மறக்க மாட்டேன்” அவன் தன் சொல்லில் உறுதியாய் நிற்கவும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது,….
“நம்பிக்கை துரோகி நம்பிக்கை துரோகினு சொல்றியே, நான் அப்படி உனக்கு என்னடா பண்ணேன், உன்னை எனக்கு எத்தனை நாளா தெரியும், ஒரு வாரம் ஒரே ஒரு வாரம் உன்கூட இருந்தேன் அவ்வளவு தான், உனக்கு சின்ன வயசுல நடந்த கொடுமையையெல்லாம் கேட்டு என் மனசு துடிதுடிச்சது உண்மை தான், அன்புக்காக ஏங்குற உனக்கு அன்பை வாரி வழங்கி உன்னை நல்ல மனிதனா வாழ வைக்கணும்ங்கிற எண்ணத்துல, உங்கூடவே இருக்கேன்னு சொல்லி வாக்கு கொடுத்ததும் உண்மை தான், அன்னைக்கு என்னோட குடும்பத்திலுள்ளவங்களை பத்தி கூட நினைக்காம உனக்காக உனக்காக மட்டுமே அந்த முடிவை எடுத்தேன், எனக்கு நடக்கயிருந்த கல்யாணத்தை நிறுத்த நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் முடியல, விதி எப்படி விதிச்சிருக்கோ அப்படி தான் நடக்கும்,….
நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் துரோகம் பண்ணிடேன்னு சொல்றியே, நீ எதுவும் பண்ணலையா, என்னை ஏன்டா கடத்துன?, ஆள் மாறி என்னை கடத்தியிருந்தாலும் உண்மை தெரிஞ்சதும் என்னை ஏன் நீ போக விடல, அப்படி பார்த்தா நீயும் தான் தப்பு பண்ணிருக்க, நியாயமா பார்த்தா நான் உன்மேலே கோபம் தான் பட்டிருக்கணும்” என உணர்ச்சி வேகத்தில் கோபவார்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தவளுக்கு, தலை ஓரு மாதிரி கிறுகிறுவென்று சுற்றியது, சற்று நொடிகளில் எல்லாம் கண்கள் சொருகி விழ போனவளை கருணா வந்து தாங்கி பிடிக்கும் முன், ரிஷி வந்து தாங்கினான்,….
“நித்து என்னாச்சு” என்றவனின் முகத்தில் அத்தனை கலக்கம் தெரிந்தது மனைவியை எண்ணி,…
கணவனின் குரலில் புது தெம்பு வந்தது போல், அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே அவனை நோக்கியவள்…. “ஒன்னுமில்ல மித்து, நான் நல்லா இருக்கேன்” என்றாள் கணவனின் பயம் அறிந்து,….
இவ்விருவரையும் கருணா கூர்விழிகள் மாறாமல் நோக்க, இருவரும் கொஞ்சம் விலகி நின்று அவனை பார்த்தனர்,… நித்யாவிற்கு இன்னும் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றினாலும் அவளால் முடியவில்லை, மனதோடு சேர்த்து உடலும் சோர்வானது, தூக்கம் வருவது போல் இருந்தது,… “மித்து போலாம்” என்றாள் கணவனிடம்,…
கருணாவை அழுத்தமாக பார்த்து கொண்டிருந்த ரிஷியும் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு, இடத்தை விட்டு நகர முற்பட்ட நேரம்…. “ஒரு நிமிஷம்” கருணாவின் குரல் அவர்களை நிற்க வைத்தது,…
ரிஷி நித்யா இருவரின் பார்வையும் கருணாவின் மீது இருக்க, அவனோ,… “ஜாக்கிரதை” என்ற ஒரு வார்த்தை தான் கூறினான் ரிஷியை பார்த்து, நித்யாவிற்கு அவன் தன் கணவனை மிரட்டுவது போல தான் இருந்தது அவனின் அவ்வார்த்தை, ஆனால் ரிஷிக்கு அப்படி தோன்றவில்லை, அவனது உணர்ச்சி துடைத்த முகத்தை வைத்து நித்யா அவனது வார்த்தையை தவறாக புரிந்து கொண்டாள், ஆனால் ரிஷி எதையோ சிந்தித்தான்,… கருணாவிடம் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவன்,… “தேங்க்ஸ்” என்றான், நித்யா தான் ரிஷி எதற்காக நன்றி கூறுகிறான் என்பது புரியாமல் பார்த்தாள், அவள் விளக்கம் கேட்கும் நிலையிலும் இல்லாததால் வாய்மூடியே நின்றாள் கணவனின் கையணைப்பில்,..
***********
நித்யா கூறியவற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான் கருணா, ஒரு கடத்தல் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தவன் பல நிமிட நேரமாக அவளை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான், அவன் உடல் குணமாகி கண்விழித்ததும் அவன் முதலில் தேடினது நித்யாவை தான், அவளுடன் வாழ வேண்டும் என பல கனவு கொண்டிருந்த போது தான் அவனே எதிர்பாரா விதமாய் தலையில் காயம் பட்டு படுத்த படுகையாகி போனான், அவன் கண்விழித்த போது தான் தன் நிலையையே உணர்ந்தான், டாக்டர் நர்ஸிடம் நித்யாவை பற்றி கேட்டான், அவர்கள் தெரியாது என்று கூறியதும் தான் உடனடியாக இங்கிருந்து போக வேண்டும் என கூச்சல் போட தொடங்கினான், இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இருக்கும் நிலையில் வெளியே போவது உடல்நிலைக்கு ஆபத்து என்பதால் அவனுக்கு வழுக்கட்டாயமாக மயக்கமருந்து செலுத்தி மருத்துவமனையிலேயே இருக்கும் படி செய்தார் மருத்துவர், அவன் மயக்கம் தெளிந்து எழுந்த போது பொறுமையாக அவனுக்கு எடுத்து கூறினார் இந்த நிலையில் அவன் வெளியே போவது அவன் உடல்நிலைக்கு நல்லதல்ல என்று, மருத்துவர் கெஞ்சி கேட்டதால் அவனும் அமைதியானான், மூன்றுநாட்கள் பொறுமையாக இருந்தான், அதற்கு மேல் அவனால் முடியவில்லை, உடல்நிலையும் முழுதாக குணமானது போல தான் இருந்தது, மருத்துவர் சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பி விட்டான் மருத்துவமனையிலிருந்து,
மருத்துவமனையின் வாயிலுக்கு பக்கத்திலேயே தான் அவனது ஆட்களும் நின்று கொண்டிருந்தனர், கருணா இத்தனை நாட்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்ததால் அவனை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை, அதனால் தான் அவன் ஆட்களாலும் அவனை வந்து பார்க்க முடியாமல் போனது, கருணா கண்விழித்து விட்ட செய்தியை ஒரு செவிலியர் மூலம் அறிந்து கொண்டவர்கள், அவனுக்காக தான் வாசலிலேயேயே காத்திருந்தனர் கடந்த மூன்று நாட்களாக, அவர்கள் எதிர்பார்த்தது போல் கருணா வரவும், கருணாவை முழுதாக பார்த்து விட்ட சந்தோசத்தில் அவனை கட்டி தழுவினர், கருணாவும் தான் நலமாக இருப்பதை எடுத்துரைத்தான், பின்னர் நித்யாவை காண போகும் விஷயத்தை கூறினான், அவனது ஆட்களுள் ஒருவனுக்கு மட்டும் நித்யாவை பற்றி தெரியும், நித்யாவிற்கு ரிஷியுடன் திருமணமான விவகாரமும் தெரியும் என்பதால், அவன் கருணாவிடம் அதை பற்றி தெரிவித்தான், கருணா மிகவும் கோபம் கொண்டான், நித்யா அப்படியெல்லாம் கல்யாணம் செய்திருக்க மாட்டாள் என அவனிடம் சண்டையிட்டு விட்டு அவர்கள் வைத்திருந்த ஜீப்பை எடுத்துக் கொண்டு, அவள் வீட்டிற்கு வண்டியை விட்டான்,
கருணாவை பார்த்ததும் செந்தூரத்திற்கு அடையாளம் தெரியா விட்டாலும், வருணேஷ் அடையாளம் கண்டு கொண்டான், அவனது திடீர் வருகை வருணேஷிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கு என அவனது முகமே காட்டி கொடுக்க தான் செய்தது, நித்யா எங்கே என கேட்டான் கருணா, தன் தங்கை ரிஷியின் மனைவியாக அவனது பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறாள் என்ற தைரியத்தில், நித்யாவிற்கு ரிஷியுடன் திருமணமான விஷயத்தை பற்றி கூறினான் வருணேஷ், தன் தாய் தமையனின் வற்புறுத்தலால் தான் அவள் நிச்சயம் இந்த திருமணத்தை செய்திருப்பாள், முதலில் அவளிடம் பேசி கையோடு தன்னுடன் அழைத்து சென்ற பிறகு இவர்களை கவனித்து கொள்ளலாம் என ஒற்றை முறைப்புடன் கிளம்பிவிட்டான் ரிஷியின் வீட்டை நோக்கி,….
நித்யாவிற்கு திருமணம் ஆகியிருந்தாலுமே அவள் கண்டிப்பாக தன் நியாபகத்துடன் தான் இருப்பாள், தான் அழைத்தால் மறுக்காமல் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் வந்தவன் முதலில் கண்டது முகம் கொள்ளா புன்னகையில் கணவன் கையில் தட்டாமலை சுற்றிய நிலையில் அதீத சந்தோஷத்த்திலிருந்த நித்யாவை தான், அவனுக்கு கோபத்தோடு சேர்த்து வேதனையும் ஏற்பட்டாலும் அவளை தன்னுடன் அழைத்து சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை தன்னுடன் வருமாறு அழைத்தான், அவள் மறுத்து அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறவும் முதலில் திகைத்தவன், அவள் தன்னுடன் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவள் கணவன் ஒருவன் அருகில் இருக்கிறான் என்பதை கூட எண்ணாமல் அவள் குழந்தையுடன் சேர்த்து அவளை அழைத்தான், அவனுக்கு அவள் வேண்டும், அவள் பாசம் அன்பு வேண்டும் என்பதற்காகவே அவள் இன்னொருவனின் மனைவி, அது வேறொருவனின் குழந்தை என தெரிந்தும் அழைத்தான், அவளோ அவள் கணவனை நேசிப்பதையும் அவனை விட்டு வர மாட்டேன் என்று கூறுவதையும் கேட்டு அவனால் தாங்கி கொள்ள இயலவில்லை,
இனி வரும் வாழ்வை அவளுடன் சேர்ந்து வாழவேண்டுமென்று அத்தனை ஆசை கனவு கண்டு கொண்டிருந்தவனுக்கு அவளது சொற்கள் கோபத்தை மூட்ட, அவளை இனி தன் ஜென்மம் முடியும் வரை பார்க்க கூடாது என சபதமெடுத்துவிட்டு தன் வீட்டிற்கு வந்தவன், கத்தினான் கதறினான், அவனால் சட்டென்று அனைத்தையும் மறந்து கடந்து வந்து விட முடியவில்லை, அவனது கோபத்தில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் உடைந்து நொறுங்கியது, அதிகமாக ஸ்ட்ரைன் செய்த காரணத்தினால் ஆபரேஷன் செய்திருந்த காயத்திலிருந்து ரத்தம் கசிய, கொஞ்ச நேரத்தில் மயங்கி சரிந்தான், அவனின் ஆட்கள் தான் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர், சிகிச்சை செய்ய பட்டது, ஒரு வாரம் மயக்க நிலையில் இருந்தவன் மீண்டும் கண்விழித்தான், அவனது அடியாட்கள் தோழர்களாய் இருந்து ஆறுதல் கூறினர், நித்யாவை முழுவதுமாக வெறுத்தான், மறக்க நினைத்தான் முடியவில்லை, ஏனென்றும் தெரியவில்லை, உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வர, மீண்டும் ரவுடிசம் செய்ய ஆரம்பித்தான், அவள் செய்ய கூடாது என்று சொன்ன காரணத்தினால் இப்போது கொலைகள் முதல் செய்ய ஆரம்பித்தான், பணம் கொடுத்தால் யாரையும் கொல்வான் இந்த கருணாகரன்,…
இன்று நித்யாவை மறுபடியும் சந்தித்தது, அவள் கேள்விகள் கேட்டது அனைத்தும் நினைவலைகளிலிருந்து அகலாமல் மீண்டும் மீண்டும் வந்து தோன்றி இம்சை செய்தது, ‘நீ தவறு செய்யவில்லையா கருணா’ எனும் அவளின் வார்த்தைகள் கோபத்தை தூண்டினாலும் அவள் கேட்பதும் நியாயம் தானே என்றும் தோன்றியது, தான் கடத்த வேண்டிய பெண் அவள் இல்லை என தெரிய வந்ததும் அவன் விட்டிருக்கலாமே, ஏன் விடவில்லை அவனுக்கும் தற்போது காரணம் தெரியவில்லை, அப்போதே அவளை விட்டிருந்தால் அவளால் தான் மனமுடைந்து போயிருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது என்று நொந்து போனவனின் பார்வை டேபிளின் மீதிருந்த ரிஷியின் போட்டோவின் மீது வந்து நிலைத்து நின்றது….
ரிஷியை கொலை செய்ய சொல்லி அவனுக்கு பல பணக்கட்டுகளை வாரிவழங்கிருக்கிறார் அமைச்சர் சந்தனப்பெருமாள், பணத்திற்காக ரிஷியை கொலை செய்வானா கருணா? அல்லது அவனை காப்பானா?

