Loading

அத்தியாயம் 28

 

 

வாகனங்களின் நெரிசலை தாண்டி அந்த வாகனம் தாறுமாறாய் இயங்கிக் கொண்டிருந்தது. மகஷோ கழுத்தில் கத்தி இருக்கும் பயத்தில் அதை வேகமாக இயக்க முற்பட்டான். வளைந்தும் நெளிந்தும் சென்றுக்கொண்டிருந்த அந்த மகிழுந்து பாலத்தில் ஏறிய போது,

 

“சொல்லு, யார் சொல்லி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?” அவனை மிரட்டினாள்.

 

“ஆரா முதலில் கத்தியை கீழே வை நான் உன்னைக் காப்பாத்த தான் வந்திருக்கேன்” பயத்தில் உளறினான் மகேஷ்,

 

“வாட்? என்ன விளையாடுறீயா மகேஷ்? நார்வே போயிட்டு வா பேசிக்கலாம்ன்னு தானே சொன்ன ஆனால் இப்போ? ப்ரோக்ராம் கேன்சல்ன்னு சொல்லுற? என்ன தான் நினைச்சிட்டு இருக்க? நீ ஆட்டி வைக்கிறதுக்கெல்லாம் ஆட நான் என்ன பொம்மலாட்ட பொம்மையா?” கோபமாய்க் கேட்டாள் ஆரா.

 

“இல்லை ஆரா! மஹதிக்கு நீ உயிரோட இருக்கிறது தெரிஞ்சிருச்சு. நீ நார்வே போனாலும் அவ உன்னைச் சும்மா விட மாட்ட. அதான் இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன்” என்றான் அவன்.

 

“எல்லாம் இருக்கட்டும், க்ரிஷ் தான் என்னைக் கொல்றதுக்கு இப்படி ஒரு ப்ளான் பண்ணியிருக்கான்னு என்கிட்ட சொன்னீயே அது பொய் தானே” எனக் கேட்டாள் ஆரா.

 

“அது வந்து?”

 

“வாயை திறந்து சொல்லுடா துரோகி, இல்லை உன்னைக் கொண்ணுட்டு ஜெயிலுக்குப் போறதுக்கும் தயங்கமாட்ட இந்த ஆரா”

 

“ஆரா.” என இழுத்தான் அவன்,

 

“உன் கத்தியை உனக்கு எதிரா திரும்பும்ன்னு நீ எதிர் பார்க்கலை தானே, ஆரா ஒன்னும் பண்ணமாட்டன்னு தானே நினைச்சிட்டு இருந்த? உனக்கு ஒரு விசயம் சொல்லவா? என்னோட க்ரிஷ் டெல்லில இருந்து கிளம்பிட்டான். இந்தத் தருணத்துக்காகத் தான் நான் காத்துக்கிட்டு இருந்தேன். உன்னையும் அந்த மஹதியையும் என்ன பண்ணுறேன்னு பாரு” எனக் கோபம் கொண்டு பேசினாள். முகமெல்லாம் வியர்த்து போய் ஆராவை பார்த்தான் மகேஷ்.

 

“என்ன பார்க்கிற? நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும் டா. என்னோட க்ரிஷ்க்கும், நீ பண்ணிட்டு இருக்க இந்த ஃப்ராடுதனத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைன்னு எனக்கு முன்னாடியே தெரியும், ஆனால் நான் நீ சொன்னதை நம்பின மாதிரி நடிச்சேன். முட்டாள்கிட்ட முட்டாள் மாதிரி நடிக்கிறது தானே புத்திசாலி தனம். என்னோட க்ரிஷ் வர்ற வரைக்கும் நான் உயிரோட இருக்கணும், அவனைச் சுத்தி இவ்வளவு பிரச்சனை நடக்குதுன்னு சொல்லணும்” என அவள் பேசிக்கொண்டிருந்த போது. காரை இயக்கிக் கொண்டிருந்த மகேஷ் சாலையின் ஓரம் நிறுத்த முற்பட்டான். ஆனால் அதை நிறுத்த முடியவில்லை.

 

“அய்யோ ஆரா! வண்டி ப்ரேக் பிடிக்கலை முதல்ல இந்தக் கத்தியை எடு, நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். உன் மேல் வச்ச காதல்ல தான் இதெல்லாம் செஞ்சேன்” என அவன் சொல்வதைக் காதில் வாங்காதவள்.

 

“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம் மகேஷ், முதல்ல நீ வண்டியை போலீஸ் ஸ்டேசன்க்கு விடு. அப்பறம் பொறுமையா உட்கார்ந்து உன்னோட கதையை நான் கேட்கிறேன். ஃப்ரெண்டுன்னு நம்பி உன்கிட்ட என்னோட பிரச்சனையைச் சொன்னதுக்கு நீ எவ்வளவு அட்வான்டேஜ் எடுத்துகிற இடியட்” என அவள் திட்டிக்கொண்டிருந்தாள்.

 

“நிஜமாதான் சொல்லுறேன் ப்ரேக் பிடிக்கலை ஆரா” என அவன் கத்தினான். வண்டியின் வேகத்தில் ஆரா கையில் இருந்த கத்தி கீழே விழுந்தது. அவள் இருக்கையில் பொத்தென வந்து விழுந்தாள்.

 

“ஆரா சீட் பெல்ட் போட்டுக்க” என மகேஷ் சொன்ன போது வாகனம் பாலத்தில் இருந்து கீழ்நோக்கி இறங்கியது.

 

“சீட் பெல்ட்டெல்லாம் போட முடியாது” எனத் திமிராய் பதில் சொன்னாள், அவன் மேல் இருந்த கோபம் அவளை அப்படிப் பேச வைத்தது. அவனும் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முயன்று தோற்றுப் போனான். சீறிபாய்ந்த வாகனம் முன்னே சென்றுக்கொண்டிருந்த காரில் விரைந்து போய் இடித்ததில் அந்த நொடியில் அங்கு விபத்து ஏற்பட்டது. 

 

அதே நொடியில் டெல்லியில் இருந்து புறப்பட்ட ஆதித் கிருஷ்ணா சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிருந்தான்.

 

அந்த விபத்தில் மகேஷ் லேசான காயங்களுடன் தப்பித்திருந்தான். ஆரா தான் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அவளின் பின்னந்தலையில் இருந்து குருதி வழிவதை பார்த்து பயந்து போனான் மகேஷ். அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு அழைத்துச் சொல்லியிருந்தார்கள். மகேஷூம் ஆராவும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றனர். மகேஷ் முதல் நாளிலே சிறிய கட்டுடன் குணமாகியிருந்தான். ஆரா இரண்டு நாட்கள் கழித்தும் சுயநினைவை பெறவில்லை. ஆனால் அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டான் மகேஷ். மஹதி அவர்களைத் தேடி வந்துவிடக் கூடாது என்ற பயமும் மகேஷூக்கு இருந்தது.

 

மஹதி கொடுத்த பணத்தை ஆராவின் சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தான் மகேஷ். மருத்துவரின் அறையில் கைகளைப் பிசைந்துக்கொண்டு அமர்ந்திருந்தான் மகேஷ்.

 

“டாக்டர் ஆராவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே” என்றான்.

 

“நாங்களும் எல்லாச் சிகிச்சையும் செஞ்சுட்டோம், ஆரத்யா இன்னுமே அன்கான்ஸியஸா தான் இருக்காங்க, பார்ப்போம் வீ ஹோப் ஃபார் தி பேட்டர்” எனச் சொல்லிவிட்டு மருத்துவர் ஆராவின் ரிப்போர்ட்களை ஆராய்ந்துக்கொண்டிருந்தார்.

 

“நீங்க ஆரத்யாவோட ப்ரதரா?” என மருத்துவர் கேட்ட நொடியில், தாம்பூலம் மாற்றமல், நிச்சயம் செய்யாமல் அவள் கழுத்தில் தாலி கூடக் கட்டாமல் ஒர வார்த்தையில் அந்த நொடியில் அவளைத் தன் மனைவியாக்கி கொண்டான் இந்த மகேஷ்.

 

“நோ! என்னோட வொஃய்ப் சார் ஆரா. ப்ளீஸ் எப்படியாவது அவளைச் சரி பண்ணிடுங்க சார்” எனக் கைகூப்பிக் கெஞ்சியவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

 

மேலும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் ஆரா கண்விழித்தாள். ஆனால் அவளின் நினைவுகள் அவளை விட்டு மறைந்து போயிருந்தது, மகேஷூக்குச் சாதகமாய்ப் போனது. உடனே அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினான். மீரா என்ற பெயரில் அவளை அனுமதித்தான். ஆராவிடம் தன்னைக் கணவன் என்று சொன்ன போது. அவள் அதை நம்பவில்லை. போலியான புகைப்படங்கள். போலியான திருமணச் சான்று ஏற்பாடு செய்வது அவனுக்கு ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. அவனிடம் தான் மஹதி கொடுத்த பணம் நிறைந்து வழிந்ததே. அந்தப் பாழடைந்த வீட்டை புதுப்பித்தான். அவர்கள் இருவரும் அங்கு வாழ போகிறார்கள் என்ற சந்தோசத்தில் அனைத்தையும் ஒற்றை ஆளாய் செய்தான்.

 

“மீரா! இது தான் நம்ம வாழப் போற இடம், இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட ஆசை கனவு எல்லாத்தையும் உன்னோட மஹி நிறைவேத்துவேன்” எனச் சொன்ன போது தலையில் கட்டுடன் அவனைத் திரும்பி பார்த்தவளுக்கு எதுவும் விளங்கவில்லை. அமைதியாய் நின்றாள்.

 

“என்ன பார்க்கிற மீரா நீ என்னை மஹின்னு தான் கூப்பிடுவ” என அவன் சொன்னான்.

 

“ம்ம்ம்” என்ற பதில் மட்டும் அவளிடம் இருந்து வந்தது. அவளின் கைபிடித்து அந்த வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றான். அங்கிருந்த அவளின் தாய் தந்தையின் புகைப்படம். மகேஷ் சொல்வது உண்மையாய் இருக்குமோ என ஆராவை யோசிக்க வைத்தது. ஏனென்றால் அவளின் தாயின் சாயலில் தானே ஆரா இருந்தாள். அதனால் என்னவோ மகேஷின் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

 

“எனக்கு ஏன் எதுவுமே நியாபகம் இல்லை?” என அவள் கேட்டாள்.

 

“ஒரு சின்ன ஆக்ஸிடண்ட் மீரா, வேறு ஒன்னும் இல்லை சீக்கிரமே உனக்குப் பழைய நினைவுகள் வந்திடுமன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” என அவளை வார்த்தைகளால் ஏமாற்றிக் கொண்டிருந்தான் இந்த மகேஷ்.

ஆராவின் மீது அவனுக்குக் காதல் இருந்தாலும், அவன் அவளை நெருங்க முயற்சிக்க வில்லை எங்கே தன்னை வெறுத்து விடுவாளோ என்ற பயமும் அவனைத் தொற்றிக்கொண்டது. எல்லாம் சரியாகத் தான் சென்றுக்கொண்டிருந்தது. அவனின் திட்டபடி. 

 

ஆராவை வெளிநாட்டிற்க்கு அழைத்துச் சென்று அங்கு யார் கண்ணிலும் படாமல் வாழ்வதே அவனின் அடுத்தக் கட்ட திட்டமாக இருந்தது. மஹதியிடம் இருந்தும் ஆதித் கிருஷ்ணாவிடம் இருந்தும் மறைந்து வாழ்வது அவனுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.

 

ஒரு பாட்டு கச்சேரியை முடித்து விட்டு மறுநாள் கணவன் மனைவியாய் இருவரும் சேர்ந்து நார்வே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான் மகேஷ். அப்போது தான் ஆதித் கிருஷ்ணாவிடம் மாட்டிக்கொண்டான். ஆதித்திடம் இருந்து தப்பிக்க மஹதியின் உதவியை நாடியிருந்தான் மகேஷ். இத்தனை நாள் மறைந்து மறைந்து வாழ்ந்துக் கொண்டிருந்தவன். ஆதித் கிருஷ்ணாவிடம் ஆரா மாட்டிக் கொண்டதாகவும். ஆரா தற்போது அனுமதிக்கபட்டிருக்கும் மருத்துவமனையைப் பற்றி விவரங்களைச் சொன்னவன். தன்னை ஆராவிடம் மீண்டும் சேர்த்து வைக்கவும் கெஞ்சினான். ஆரா இப்போது அனைத்தையும் மறந்து போயிருக்கிறாள் என்பதைத் தெரிந்தவுடன் இதற்குச் சம்மதித்து ஆராவை மீண்டும் கடத்தி மகேஷிடம் ஒப்படைப்பதாக வாக்கு கொடுத்திருந்தாள். அதே போல் ஆராவை கடத்தும் முயற்சியில் லாவண்யாவின் வரவால் தோற்று போனாள் மஹதி.

 

இன்று:

 

குருதி வழிந்த முகத்துடன் அனைத்தையும் ஆதித் கிருஷ்ணாவிடம் சொல்லிக்கொண்டிருந்த மகேஷை பார்த்து ஆதித் கிருஷ்ணாவுக்குக் கோபம் தான் வந்தது. மகேஷை விட ஆராவை தன்னிடம் இருந்து பிரிப்பதில் மஹதி செய்த காரியத்தைச் சற்றும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மகேஷை கொன்று விடலாம் என்ற கோபம் அவனுக்குள் இருக்கத் தான் செய்தது.

 

“ஆராவோட அம்மா அப்பா பத்தி எதுக்குடா அவக்கிட்ட சொன்ன இடியட்” எனக் கோபம் கொப்பளிக்க ஏற்கனவே உடைந்து போன மகேஷின் முக்கை மீண்டும் உடைத்து விட்டு எழுந்தான்.

 

“விக்கி! இவனை என்ன பண்ணணும்னு உனக்குத் தெரியும்ல பார்த்துக்கோ” எனக் கட்டளையாய் சொன்ன ஆதித் கிருஷ்ணா அங்கிருந்து புறப்பட்டான்.

 

“நான் பார்த்துக்கிறேன் ஆதித், நீ ஆரா தங்கச்சியைப் போய்ப் பாரு. பாவம் உன்னைக் காதலிச்சதை தவிர அவ எதுவும் பண்ணலை. அதுக்கு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” எனக் கவலை பட்டுக்கொண்டான் விக்கி.

ஆராவை பிரிந்து நண்பன் பட்ட துயரை அறிந்து அவனின் துன்பத்தில் உடனிருந்தவனுக்குத் தெரியாதா? அவர்கள் காதலின் ஆழம்.

 

அவனின் கருஞ்சிறுத்தை முன்பை விட இந்த முறை வேகமாக சீறிப் பாய்ந்தது ஆரா இருக்கும் மருத்துவமனை நோக்கிய பயணம். ஒரு சின்னக் காகிதம் அதைப் படித்து விட்டு அவள் தான் கடிதம் எழுதி வைத்திருக்கிறாள் என நினைத்துத் தவறு செய்து விட்டோம் என ஆதித்க்கு தோன்றியது.

 

அவளை அவன் வஞ்சித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் ஆரா எவ்வளவு துன்பங்களை அனுபவத்திக் கொண்டிருந்தாளோ? அவளை நினைத்து இவன் மது அருந்தி திரிந்துக்கொண்டிருந்த போது. அவள் தன் உயிருக்காகப் போராடியிருக்கிறாள். என்பதை நினைக்கும் போதே அவனின் மனம் வலித்தது. பெண்ணுக்குப் பெண் தான் எதிரி என்பது போல மஹதியால் இத்தனை விசயங்கள் நடந்திருக்கிறது. ஆனால் அவனோ அவள் கைபிடித்து மோதிரம் பூட்டி அவளை நிச்சயம் செய்து அடுத்துத் திருமணத்திற்குத் தயாராகி இருக்கிறான்.

 

“நீ ஒரு ஸ்டுப்பிட் ஆதித். நீ உன்னைப் பத்தி மட்டும் யோசிச்சிட்டு இருந்தப்போ, ஆரா அங்கே எவ்வளவு துன்பங்களைப் பட்டிருக்கா? அவ உன்னை விட்டு போயிடுவான்னு எப்படி நீ நினைச்ச ஆதித். எல்லாம் உன்னால தான். ஆராவோட இந்த நிலைமைக்கு முழுக்காரணமும் நீ தான் நீ மட்டும் தான் காரணம்” தன்னையே திட்டிக்கொண்டான் ஆதித் கிருஷ்ணா.

 

ஆம் ஆராவை அவன் டெல்லியில் இருந்து வந்தவுடன் அவளைத் தேட முயற்சி செய்திருந்தால் இத்தனையும் நடந்திருக்காது. ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு அவளின் காதலை மதிப்பிட்டது தான் ஆதித் கிருஷ்ணா செய்த பெரிய தவறு. ஆராவை பற்றி முழுவதுமாய் அறிந்த அவனே அவளை நம்பவில்லை என்பதை ஆரா அறிந்தால் என்ன செய்வளோ? என்றெல்லாம் தோன்றியது அவனுக்கு. அனைத்து எண்ணங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு மருத்துமனையின் வாயிலில் நின்றது அவனின் கருஞ்சிறுத்தை. 

 

ஆரா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி விரைந்தான் ஆதித் கிருஷ்ணா.

 

கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஆரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். லாவண்யா அவள் அருகில் அமர்ந்திருந்தால். அஜய் நடந்தபடி அறையை அளந்துக்கொண்டிருந்தான். தன் அண்ணனை பார்த்தவுடன் ஒடி வந்து கட்டிக்கொண்டாள் லாவண்யா.

 

“ஹே லாவ்! என்ன ஆச்சு?” என ஆதித் கேட்டான்.

 

“ஒண்ணுமில்லை அண்ணா, லவ் யூ” என்றாள்.

 

“என்ன நடக்குது அஜய்” என அஜயை பார்த்து கேட்டான் ஆதித்.

 

“மேடம்க்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சி சார்” என்றான் பவ்யமாக.

 

“இன்னும் என்ன மேடம்ன்னு சொல்ற அஜய்” என அஜயிடம் தொடங்கியவள்,

 

“அண்ணா! எனக்கு அஜய் பத்தி தெரிஞ்சிடுச்சி, அதோட நான் உன்னோட தங்கச்சியில்லைன்னும் தெரிஞ்சிடுச்சு” என்றாள்.

 

“ஏய் லாவ்குட்டி யார் சொன்னது, அப்படியெல்லாம் இல்லை நீ என்னோட தங்கச்சி தான், என் கூடப் பொறந்த தங்கச்சி” என அவளுக்கு அந்த விசயம் தெரியக் கூடாது என ஆதித் மறைக்க முற்பட்டான்.

 

“அண்ணா! எனக்குத் தெரியும், நீ கவலை படாதே அதுக்கெல்லாம் நான் கவலை படலை. உன்னோட அன்பு என்னை எப்போதும் தள்ளி வச்சி பார்த்தில்லை அண்ணா. ஆரா அண்ணியைப் பாரு வா” எனப் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த ஆராவை காட்டினாள்.

 

“ஆரா எதாவது பேசினாளா?”

 

“இல்லை அண்ணா! ஆனால் உன்னைப் பத்தி எந்த ஞாபகமும் அவங்களுக்கு இல்லை” என்றாள் லாவண்யா.

 

“ம்ம்” என்ற தலையசைப்பில் அஜயை பார்த்தவன்,

 

“அப்பறம் அந்த மஹதி” என அஜயை பார்த்து கேட்டான் ஆதித்.

 

“போயிட்டாங்க சார்” என்றான் அஜய்.

 

“ஒகே முதலில் உங்களோட விசயத்துக்கு வரேன்”

 

“லாவண்யா இங்கே வா” எனத் தன் கைவளைவிற்க்குள் தன் தங்கையைக் கொண்டு வந்தவன்.

 

“உனக்கு அஜயை பிடிச்சிருக்கு தானே” என்றான்.

 

“பிடிச்சிருக்கு அண்ணா” என்றாள் லாவண்யா.

 

“அஜய்க்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் மா, அவன் உன்னைப் பத்தி என்கிட்ட பேசினப்ப, அவனை ட்ரைவரா இருக்கச் சொன்னால் போயிடுவான்னு நினைச்சேன். பட் ஹி ஸ்டாண்ட் ஃபார் யூ. நான் காதலிக்காத பேசதன்னு சொல்ல மாட்டேன். நீ மெட்சூர்டான பொண்ணு உன்னோட படிப்பு முடியட்டும், தென் உன்னோட கேரியர் இல்லை பேஷன் எதையாவது செட் பண்ணி அதை ஃபாலோ பண்ணு. உனக்கு மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா வரும் போது பண்ணிக்க.” என்றவன் அஜய் புறம் திரும்பி.

 

“ஆராவை இவ்வளவு நேரம் பார்த்துக்கிட்டதுக்கு நன்றி அஜய். இது உங்களுக்கான நேரம் பேசி முடிவெடுத்துக்கங்க. லாவ்குட்டியை பத்திரமா வீட்டில் வந்து விட்டுருங்க” என அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்து விட்டு மருத்துவரை பார்க்க சென்றான் ஆதித்.

 

“மிஸ்டர் ஆதித், ஷி இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்”

 

“நிஜமாதான் சொல்றீங்களா?” எனக் கேட்டான் ஆதித்.

 

“யெஸ்! அவங்களோட டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வச்சுப் பார்த்தில் அவங்க நார்மலா தான் இருக்காங்க. விபத்து ஏற்பட்ட சின்ன அதிர்வில் அவங்களுக்கு மறதி ஏற்பட்டிருக்கு பட்.” என அவர் இடை நிறுத்தி அவனிடம் சொன்ன தகவல்கள் ஆதித் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

 

“வாட்” எனக் கோபம் கொண்டான் ஆதித் கிருஷ்ணா.

 

“உண்மையைத் தான் சொல்றேன் மிஸ்டர் ஆதித். அவங்களுக்கு ஏற்பட்டது ஒரு டெம்ப்ரவரி மெம்மரி லாஸ் தான். கரேக்ட்டான மெடிசன்ஸ் அவங்க எடுத்திருந்தால் அவங்களுக்கு நினைவு திரும்பி இருக்கும். அவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மெடிசன்ஸ் கொடுக்காதனால தான். அவங்களோட நினைவு திரும்பாமல் இருந்திருக்காங்க” என மருத்துவர் சொல்வதைக் கேட்டவுடன் ஆதித் கிருஷ்ணாவுக்குப் புரிந்து போனது இதற்க்கும் காரணம் அந்த மகேஷாகத் தான் இருக்கும் என்று. மருத்துவரின் அனுமதியோடு அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொண்ட ஆதித் கிருஷ்ணா தன்னவளை வீல் சேரில் அமர வைத்து அழைத்துச் சென்றான். அப்போதும் அவள் உறக்கத்தில் தான் இருந்தாள்.

 

தனது வாகனத்தின் முன்னிருக்கையில் தன் காதல் பெண்ணை அமரச் செய்தவன் அவளுக்குச் சீட் பெல்ட் போட்டுவிட்டான். காரின் கதவை அடைத்து விட்டு காரின் இருக்கையில் வந்தமர்ந்தவன் காரை இயக்க ஆரம்பித்தான். அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது லாவண்யா அஜயின் வாகனம். தூரத்தில் இருந்து இவர்கள் புறப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது மஹதியின் விழிகள்.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்