Loading

நந்தாவை அழைத்து வரலாம் என்று ஆர்வமாக கூறும் சைத்ராவை ஒரு நிமிடத்திற்கும் மேல் நிதானமாக பார்த்தவள், “எதுக்கு?” என்றாள் சர்வ சாதாரணமாக.

 

“என்ன கேள்வி மது? நந்தாவை மிஸ் பண்ணிட போறோம்?” 

 

“அவரு போகட்டும். அதுதான் அவருக்கு நல்லது.” என்றவள் அவளது கைகளை எடுத்துவிட்டு நகர்ந்துக் கொள்ள, சைத்ராவின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி மொத்தமும் வடிந்துப் போனது.

 

“மது, என்ன பண்ற? நீயும் அவரை விரும்புற, அவரும் உன்னை விரும்புறாரு. இனி என்ன தான் உன் பிரச்சனை?”

 

“இத்தனை நாள் அவரை நான் கஷ்டப்படுத்திட்டேன். இனியாவது அவன் சந்தோசமா இருக்கட்டும்… சிம்பிள்.” 

 

“மது, இரண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழ வேண்டியது தானே? ஏன் பைத்தியக்காரி மாதிரி பேசுற?”

 

“நான் இவ்ளோ பெரிய முடிவு எடுக்குறேனா அதுக்கு காரணம் இல்லாமல் இருக்குமா?” என்றவளை கேள்வியாக எதிர்க்கொண்டது சைத்ராவின் கண்கள்.

 

“அப்படி என்ன காரணம்?” என்றவள் சாதாரணமாக கேட்க, அவளோ வெற்றுப் புன்னகையை உதிர்த்தவள், விறுவிறுவென மேசையின் அருகே விரைந்து சென்றவள், அதன் மீது திருப்பி வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தினை எடுத்துக் கொண்டது மட்டுமின்றி அதனை சைத்ராவிற்கு காட்ட, அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்துக் கொண்டது.

 

“என்ன மச்சி, ரொம்ப ஷாக்கா இருக்கா?” என்று மது கேட்க, சைத்ராவோ கண்களை மூடி திறந்தவள், “இது எப்படி உங்கிட்ட?” என்றாள் நலிந்த குரலில்.

 

ஆம் அந்த புகைப்படத்தில் நந்தாவின் மொத்த குடும்பமும் இருக்க, அதே புகைப்படத்தில் நந்தாவின் வலப்புறம் சைத்ராவும், இடப்புறம் அவளது பெரியம்மாவின் மகள் அக்சராவும் நின்றிருந்தனர்.

 

“ஒரு பதினைந்து நிமிசம் முன்னாடி வரைக்கும் என்கிட்ட இந்த போட்டோ இல்ல. ஜஸ்ட் நீ இந்த ரூம்க்கு வரதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் கிடைச்சது.” என்றவளின் பார்வை வீச்சினை சைத்ராவால் சமாளிக்க இயலவில்லை.

 

நந்தா தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரம் அவனது உடைகளுக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று கீழே விழுந்திருந்தது. அந்நொடி செல்லும் அவசரத்தில் அவனும் கவனிக்கவில்லை. அவன் தந்த காயத்தில் அவளும் கவனிக்கவில்லை. அவன் சென்றதும் பால்கனியிலிருந்து அழுது கரைந்தபடி வந்தவளது காலடியில் புகைப்படம் தட்டுப்பட, அதை எடுத்துப் பார்த்தவள் அந்நொடி ஸ்தம்பித்துப் போனாள். சைத்ராவும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்தும் கூட தெரியாதது போலவே இருந்தார்களே? என்றெல்லாம் எண்ணியவளது தலை வின்னென்று ஒருபுறம் வலித்தது.

 

அவளையும் மீறி அழுகை பீறிட, புகைப்படத்தை மேசையின் மீது வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் பெண். குளிர் நீரை முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டிருந்த தருணம் தான் சைத்ரா அறைக்குள் நுழைந்திருந்தாள். மது என்ற சைத்ராவின் அழைப்பு இவள் காதுகளுக்கு எட்டவும், தன் அழுகையை மொத்தமாக நிறுத்தியிருந்தவள், தீர்க்கமான முடிவினை எடுத்தப்படி வெளியே வந்தாள்.

 

மதுவும் தனக்கு தெரிந்த விசயத்தை வெளியே காட்டாது அவள் போக்கிலேயே மனதிலிருந்ததை பேசியும் இருந்தாள். அந்நொடி தன் காதலை உணர்வது போல வெடித்து அவள் அழ ஒரே காரணம், தன் தோழியும் இவ்விசயத்தை மறைத்து விட்டாளே என்பது தான்.

 

“அப்போ மது , இப்போ நீ பேசுனது எல்லாம்?” என்றாள் சைத்ரா சங்கடத்துடன்.

 

“பின்ன நீ எவ்ளோ தூரம் நந்தாக்கு சப்போர்ட் பண்றேனு தெரிஞ்சுக்க வேண்டாமா? இவ்ளோ நாள் அவனோட இருந்து பழகி புரிஞ்சுக்க முடியாத காதலை நீ சொன்னதும் தான் நான் புரிஞ்சுகிட்டேன்னு நினைச்சியா சைத்து?” என்றவளின் கூற்றில் உறைந்து நின்றது என்னவோ சைத்ரா தான்.

 

“அப்போ நந்தா மேல உனக்கு லவ் இல்லையா?” 

 

“ஏன் இல்லாமல்… அவன் மேல லவ் இருக்கிறத என்னைக்கோ நான் உணர்ந்துட்டேன். என் நந்தா மேல தான் எனக்கு லவ். ஆனால் இத்தனை நாளா நான் எவ்வளவு டார்ச்சர் பண்ணியும் தன்னை வெளிக்காட்டிக்காமல் உண்மையை மறைச்சுட்டு இத்தனை நாளா என்னோட வாழ்ந்துட்டு இருந்த ரகுநந்தன் மேல ரொம்பவே வருத்தம். ரொம்ப ரொம்ப வருத்தம்.” என்றுக் கூறும்போதே அவளது கண்களிலிருந்து தாரையென கண்ணீர் வழிந்தோடியது.

 

“மது…” என்றவள் உதடுகள் துடிக்க அவளைக் காண,

 

“என்ன சைத்து பேரு சரியா சொன்னேனா?” என்றாள் வலியிலும் புன்னகையுடன்.

 

“ம்ம்ம்.” என்றவள் தலையை மேலும் கீழும் ஆட்ட, 

 

“அப்புறம் உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சைத்து. எங்க என்னோட பேசுனா நந்தாவை பத்தி உளறிடுவேனு நினைச்சு தானே இத்தனை நாளா பேசாமல் இருந்த?” என்றவள் கேட்ட நொடி தன்னை சரியாக புரிந்து வைத்திருந்த தோழியைக் கண்டு மிக வேகமாக தலையாட்டினாள் சைத்ரா.

 

“அப்போ ஏன் அப்படியே நிற்கிற? வா…” என்றவள் இரு கைகளை நீட்ட, தவறிழைத்த குழந்தை, தாயின் அரவணைப்பை கண்டதும் ஓடி வந்து அணைத்து ஆறுதல் தேடுமே அது போல விரைந்து வந்தவள் மதுவர்ணிகாவை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

“சாரி மது, ரகு தான் சத்தியம் வாங்கிட்டான். அவன் சத்தியத்தை என்னால மீற முடியலை. அதுனால தான் கொஞ்ச மாசமா உன்னோட நான் பேசலை.” என்று தேம்பி அழுதவளது முதுகை இதமாக வருடிவிட்ட மதுவோ, “ஐ நோ யூ மச்சி.” என்று கூற, சைத்ராவின் மனம் நிரம்பியது.

 

“இப்போ தான் என்னால மூச்சு விடமுடியுது. இத்தனை நாளா சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.” என்று உரைக்கும் தன் தோழியை பிரித்து அவளது கண்ணீரை தனது துப்பட்டாவால் அழுந்த துடைத்தாள் மதுவர்ணிகா.

 

“மது, இது எல்லாம் ரகு உனக்காக தான் பண்ணான். உன்னை அந்தளவுக்கு நேசிக்குறான். அவன் இவ்வளவு தூரம் தன் குடும்பத்தை எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு திருடனா உன் முன்னாடி வந்து நின்னதுக்கு காரணம் ஒன்னு மட்டும்தான். தன்னோட அடையாளத்தை பயன்படுத்தி ஒருத்தன் உன் வாழ்க்கையை அழிக்க பார்த்திருக்கான். அந்த அடையாளத்தை திரும்ப சொல்லி இவன் வந்தாலும் உனக்கு ரகுவரன் தான் நினைவில வருவான். அப்படி வராமல் அவனை அவனாகவே நீ நேசிக்கணும்னு எதிர்ப்பார்த்தான். அதுக்காக தான் இந்த திருடன் வேசம் எல்லாமே. உனக்காக தன் அடையாளத்தை இழக்கவும் தயாரா இருந்தான் மது. அந்தளவு உன் மேல அவனுக்கு லவ்.” என்றவள் கூற, மதுவோ பக்கவாட்டில் திரும்பி சுவற்றை வெறித்துப் பார்த்தாள்.

 

“மது… என்னை புருஞ்சுக்கிட்ட உன்னால ரகுவை புரிஞ்சுக்க முடியலையா?” என்று சைத்ரா கவலை தோய்ந்த குரலில் கேட்ட நொடி,

“இல்லை ரகுவை என்னால புருஞ்சுக்க முடியலை. முடியவும் முடியாது.” என்றவள் பிடிவாதமாக கூற, சைத்ராவின் முகமே அரண்டு போனது.

                               ***

சன்னல்களும், கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க, இருள் அவ்வறையை சூழ்ந்திருந்தது. சூரிய வெளிச்சம் அறையில் வராத அளவிற்கு திரைச்சீலைகள் இருக்க, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருந்தான் ரகுவரன். வாழ்க்கையே இருண்டது போன்ற உணர்வு. 

 

“உன்னை மாதிரி ஒரு கேவலமான மனுசனை நான் பார்த்ததே இல்லை. ச்சே, இப்போ நீ பண்ணது எல்லாம் நம்ம குழந்தை மேல இருக்குற கேர்னு நினைச்சேன்டா. இப்போ தானே தெரியுது உன் கேவலமான புத்தி. ச்சீ போ. என் மூஞ்சியில முழிக்காத.” என்று அவள் பேசிய வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

 

கடைசியாக மானசா பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தை சுக்கு நூறாக கிழிக்க, வலியில் உழன்றவன் மதுபானத்தை எடுத்து வாயில் சரித்துக் கொண்டிருந்தான்.

 

“உன்னை நானா என் வாழ்க்கையில வர சொன்னேன். ஏன்டி வந்த? இரண்டு நாளா நீ பேசுனது மட்டும் தான் என் காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு” என்றவனோ பாட்டிலை போட்டு உடைக்க, கண்ணாடி சில் ஒன்று தெறித்து வந்து அவன் கன்னத்தை பதம் பார்த்தது. 

 

காயத்தின் வலியைக் காட்டிலும் ஆறாத காயமாக அவளது பேச்சின் வலியும், அவள் கடைசியாக கூறிச்சென்ற வார்த்தைகளின் ரணமும் அவனை வதைத்தது. மானசா என்று தான் கர்ப்பம் என்று உரைத்து சென்றாளோ அன்றிலிருந்து அவன் உறக்கம் தொலைந்துப் போனது.

 

மதுவை அன்று ஹோட்டலில் சந்தித்த பின்னர் அவள் மீது கொண்ட வன்மம் கூட மறந்து தான் போனான். இத்தனை தூரம் தன்னை பலவீனப்படுத்திவிட்டு சென்றவளை அடுத்த நாளில் அவனே தேடியும் வந்தான். 

 

“அந்த கண்ணுக்கே தெரியாத குழந்தையை வேண்டாம்னு சொல்ல ஒரே காரணம் தான்டி. எங்க அந்த குழந்தையும் பொறந்து என்ன மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு. அதை கூட உன்னால புருஞ்சுக்க முடியலை.” என்றவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அந்நேரம் அவனது நண்பன் சந்துரு அவனை காண்பதற்காக அவ்விடம் வந்திருந்தான். 

 

அவன் தான் அன்று தாரிகா அளித்த புகாரிலிருந்து அவனை விடுவித்து மும்பைக்கு அழைத்துச் சென்று, வேலையும் வாங்கிக் கொடுத்திருந்தான்.

தன் நண்பனைக் காண தற்போது வந்திருந்தவனோ, அறையில் அவன் கத்தும் சத்தம் கேட்டு கதவினைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தான்.

 

“டேய், என்னடா பண்ணி வெச்சுருக்க?” சந்துருவின் குரலில் அவனை போதையில் நிமிர்ந்து பார்த்தான் ரகுவரன்.

 

“டேய் மச்சான், எனக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது?” என்று குரலை தாழ்த்தியவன் கேட்க,

 

“க்கூம்… இந்த டயலாக் உன்னை பார்த்து தான்டா மத்தவங்க சொல்லணும்.” என்றவன் சலிப்பாக அவனைக் காண, அவனோ ஓவென அழத் தொடங்கினான்.

 

“மானசா, என் குழந்தையை தான்டா சுமக்குறா. அந்த குழந்தைய நானே அழிக்க சொல்றேன்னா எனக்கும் வலி இருக்காதா? அவ பாவம்டா. அவளால எப்படி தனியா குழந்தையை வளர்க்க முடியும்? இந்த சமூகம் அவளை எப்படி கேவலப்படுத்தும் தெரியுமா?” என்றவன் போதையிலும் அவளை எண்ணி கலங்கிப் போனான்.

 

“டேய் ஏன்டா, இப்படி எல்லாம் பண்ற? டேய், உனக்கு அழ எல்லாம் தெரியுமா? மத்தவங்களை அழ வெச்சு தானே பார்ப்ப.” என்று விளையாட்டாக சந்துரு கேட்கவும், போதையிலும் அவன் வார்த்தை ஈட்டி முனை போல குத்தி கிழித்தது.

 

“நீ கூட என்ன கலாய்க்குறியே மச்சான்?” என்று விரக்தியின் விளிம்பில் ஆணவன் உரைக்க, “சாரி மச்சான்” என்று மன்னிப்பையும் கேட்டான் சந்துரு.

 

“நான் கெட்டவன் தான் மச்சான். ஆனால் என்ன கெட்டவனா மாத்துனது இந்த சமூகம் தான். ஆசையா வளர்க்க வேண்டிய அம்மாவே என்ன கைவிட்டுட்டு ஓடி போயிட்டாங்க. இரண்டு வயசு குழந்தையான எனக்கு அப்போ பாசம் காட்ட யாருமில்லை. அம்மா போன விரக்தியில குடிச்சுட்டு அப்பாவும் திரிய, ஒருபக்கம் என்னை பார்த்துக்குற பேர்ல கொடுமை பண்ற அத்தை. அதையும் தாண்டி ஓரளவு வளர்ந்து வந்துட்டு இருந்தப்போ, என் அப்பாவுக்கு வந்த தீராத நோய். அப்பாவை காப்பாத்த எங்க எல்லாம் போராடுனேன் தெரியுமா? பத்து வயசு பையனு கூட பார்க்காமல் என்னை கேவலமா ட்ரீட் பண்ணுச்சு இந்த சமூகம். அன்னைக்கு பணம் மட்டும் இருந்திருந்தா எங்க அப்பாவை நான் காப்பாத்தியிருப்பேன். ஏன்னா என்ன இருந்தாலும் என் அப்பா என்னை விட்டு போக நினைச்சதே இல்லை. இப்படிபட்ட சூழ்நிலையில வளர்ந்த எனக்கு பொண்ணுங்க மேல எப்படிடா நம்பிக்கை வரும்? பணம் இருந்தால் வாழலாம். அந்த வயசுல நான் தெரிஞ்சுகிட்ட ஒன்னு அதுக்காக தான் பணக்கார பொண்ணுங்களை ஒரு கருவியா பயன்படுத்துனேன். அது தப்பா இருந்தாலும் நான் வளர்ந்த சூழல்ல எனக்கு சரின்னு தான் பட்டுது.

 

அந்த மதுவர்ணிகா, அவதான் என்னை முழுமையா நம்புனா, அப்புறம் நான் வேற ஒருத்தன்னு தெரிஞ்சதும் அவளாகவே போயிட்டா. இப்போ அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்றா. இந்த தாரிகா இவளை எல்லாம் நானாவாடா தேடி போனேன். வர்ணிகா போனதும் சோகத்துல தாடி வளர்த்திட்டு திரிய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை மச்சான். தானா வந்த தாரிகாவுக்கு ஓகே சொன்னேன். ஆனா அதையும் வர்ணிகா கெடுத்துட்டா. ஆனால் அப்போ நிஜமாவே பீல் பண்ணேன் மதுவர்ணிகாவையும் சேர்த்து இழந்துட்டேன்னு.” என்றவன் சோகமே உருவாய் கூற, அவனது தோளை ஆதரவாக பற்றினான் சந்துரு.

 

“மச்சான், உனக்கு எப்போதும் சொல்றது தான். எல்லா பொண்ணுங்களும் கெட்டவங்க இல்லை. அவங்க உணர்வுகளோட விளையாடுறது ரொம்ப தப்புடா.”

 

“ம்ம்ம்… உண்மைடா உண்மை. மானசா என் வலிக்கு மருந்தா அவளையே எங்கிட்ட தந்தவடா. அவளை போய் தப்பா பேசிட்டேன் மச்சான்.” என்று கண்கள் கலங்க அவன் கூற,

 

“அப்புறம் என்னடா மானசாவோட சேர்ந்து வாழ வேண்டியது தானே?”

 

“அது மட்டும் முடியாதுடா. இங்க ஒருத்தன் என் தலையில ஏறி ஆடுறான். அவனை நினைச்சாலே பத்திகிட்டு வருது. மதுவர்ணிகா யாருடா? ஒரு காலத்துல நான் காதலிச்ச பொண்ணுடா. ஆனால் அவ இப்போ அவனோட மனைவி. ஃபேஸ்புக்ல அவன் இவ கழுத்துல தாலிக்கட்டுற போட்டோ பார்த்ததும் பத்திக்கிட்டு வந்துச்சுடா எனக்கு. அந்த கோபத்துல தான் கோவைக்கு வந்திருக்கேன். ஆனால் அதே சமயம் மானசா அவளும் என்னை கொல்லாம கொல்றாடா” என்றவனோ பற்களை கடிக்க, அவன் கோபம் கொள்ளும் அளவிற்கு யாரவன் என்ற ரீதியில் பார்வையை பதித்தான் சந்துரு.

 

“மச்சான், யாருடா அவன்?” என்றவன் கேட்ட நொடி,

 

“ரகு… ரகுநந்தன்” என்றவன் உரைக்க சந்துருவின் முகமோ யோசனையில் விரிந்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்