
ஆராவின் வாழ்க்கைத் தன்னால் பாழ் ஆகும் முன் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க முடிவெடுத்தாள். அவளால் ஏற்கனவே ஆரா மற்றும் அபூவின் வாழ்க்கையில் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது என்பது காரிகாவிற்குத் தெரியவில்லை.
அவளது எண்ணங்கள் மீண்டும் தங்களது முதல் சந்திப்பிற்குச் சென்றது.
சில நாட்கள் கழித்து, ஆராவும், காரிகாவும் உற்றத் தோழிகளாக மாறிய பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பொதுவான விஷயங்களைப் பற்றிய பேச்சுக்கள் முடிந்த பின்னர் காரிகா ஆராவைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தாள். அதனால் அவளிடம் குடும்பத்தைப் பற்றி வினவினாள்.
“உன் ஃபேமிலி பத்திச் சொல்லு?”என்று காரிகா கேட்டதும் ஆராவின் முகத்தில் இருந்த புன்னகை உடனே மறைந்தது.
அதைக் கண்டு கொண்டவளோ, என்னாச்சு? என்று அவளை யோசனையாகப் பார்க்க,
அப்படியும் ஆரா பதில் சொல்லாமல் இருந்ததால்,”என்னாச்சு ஆரா? உன் ஃபேமிலிப் பத்திக் கேட்டது உனக்குப் பிடிக்கலையா?”எனக் கேள்வியாகவே கேட்டு விட்டாள்.
“அதெல்லாம் இல்லை ரிகா. எனக்குன்னு ஃபேமிலி இருந்தாங்க. ஆனால் இப்போ இல்லை. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒரு ஆக்ஸிடென்ட்டில் இறந்துட்டாங்க. நாங்க கொஞ்சம் வசதியான ஃபேமிலி. அதனால் என் பேரில் தான் சொத்தை எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க. அந்தப் பணத்தில் தான் படிக்கிறேன்”என்று அவள் கூறிய பிறகுக் காரிகாவிற்கு ஆராவின் மீது பரிவு ஏற்பட்டது.
தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆரா.
அதற்குப் பிறகு எதுவும் நடவாதது போல் உடனே புன்னகையை இதழ்களில் கொண்டு வந்தவள் காரிகாவின் முகத்தைப் பார்த்தாள்.
எப்படி இதெல்லாம்? என்று அவளை வியந்து நோக்கினாள் காரிகா.
ஏனெனில் உடைந்து அழுவாள் என்று நினைத்தால், புன்னகை முகமாக மாறி விட்டாளே!
அதைக் கண்டு கொண்டு,”நான் இப்படித் தான் ரிகா! சீக்கிரம் சரி ஆகிடுவேன். நீ உன் ஃபேமிலி பத்திச் சொல்லு”என்று அவளிடம் ஆர்வமாகக் கேட்டாள் ஆராத்ரிகா.
“இல்லம்மா. செம்ம சோகமாக இருக்கும்”என்றவளுடைய விழிகள் கண்ணீரால் நிரம்பியதைக் கண்ட ஆராவிற்கு மனம் தாளவில்லை.
“அப்போ வேண்டாம்மா. சொல்லாதே.
உனக்குக் கஷ்டமா இருக்கும்”என்று அவள் தன் கதையைக் கூற வருவதற்குள் தடுத்து விட்டாள்.
“உங்கிட்ட சொல்றதுக்கு என்ன ஆரா? என்னை அவ்வளவாக என் ஃபேமிலிக்குப் பிடிக்காது. துரதிர்ஷ்டம்ன்னு நினைச்சாங்க. அதனாலேயே வெறுத்து ஒதுக்கிட்டாங்க. எதுவுமே செய்யாமல் கடனே – ன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். படிப்பைக் கூட ரொம்பப் போராடிக் கேட்டதால் தான் படிக்க வைக்குறாங்க. மெரிட்ல சீட் கிடைச்சதால் காலேஜ் வரைக்கும் வர முடிஞ்சது. வேற ஒன்னும் சொல்ற அளவுக்கு இல்லை”என்று அவள் கூறியதைக் கேட்டதும் பெற்றப் பெண்ணையே துரதிர்ஷ்டம் என்று நினைக்கும் பெற்றோரும் இருக்கின்றார்களா? என்று ஆராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஏன் அதிர்ச்சியாகப் பார்க்கிற?” எனக் காரிகா இயல்பாக கேட்டாலும் அவளது குரலில் வேதனை படிந்திருந்தது.
“இப்படியெல்லாம் பேரண்ட்ஸ் யாராவது இருப்பாங்களான்னு நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை ரிகா. அதுஜதான் ஷாக் ஆகிட்டேன்”
“ம்ஹ்ம். ஆனால் இது உண்மை தான். இப்படி அபூர்வமாகச் சிலர் இருக்காங்க”
காரிகாவின் நிலையறிந்து ஆராவும் அவளிடம் அக்கறை எடுத்துக் கொண்டு நன்றாகவே பேசினாள்.
இந்த நேரத்தில் தான் அவர்களுக்குக் கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதற்கான சுற்றறிக்கை வந்திருந்தது.
“டூருக்கு நீயும் வர்ற தானே ரிகா?”அவளும் கண்டிப்பாக வர வேண்டும் என்று நினைத்தாள் ஆராத்ரிகா.
“வீட்டில் பர்மிஷன் கேட்கனுமே ஆரா! விடுவாங்களான்னுத் தெரியலயே!”
“நீ வந்து தான் ஆகனும். எந்தக் காரணமும் சொல்லாதே! உன் வீட்டுக்குத் தெரியாமல் போகலாம். அந்த நாலு நாளைக்குள்ளே அவங்க என்ன உன்னைக் காலேஜில் வந்து பார்க்கவா போறாங்க? டூருக்கு எப்படி காசைக் கட்டுறதுன்றதைப் பத்தி எல்லாம் யோசிக்காதே! அதை நானே கட்டிட்றேன்”என்றவளோ,
தன் தோழியைச் சுற்றுலாவிற்கு வர வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாள்.
“ஃபீஸ் எல்லாம் ஒரு பிராப்ளமே இல்லை! எங்கிட்ட பணம் இருக்கு. ஆனால் நீ சொல்ற மாதிரிப் பண்ணினால் அது எப்படியாவது எங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடுச்சுன்னு வச்சுக்கோ, நான் அவ்வளவு தான் தொலைஞ்சேன்”எனத் பெற்றோரை நினைத்துப் பார்த்துப் பயத்தில் நடுங்கிப் போய் அவளிடம் உரைக்கவும்,
“நீ பயப்பட்ற அளவுக்கு எல்லாம் எதுவும் ஆகாது. உன் பேரை நானே லிஸ்ட்டில் கொடுத்துட்றேன். பணத்தையும் கட்டிட்றேன். உனக்கு இருபத்தி நாலு மணி நேரம் இருக்கு! அதுக்குள்ளே நீ உன் மனசை சரி பண்ணிக்கிட்டுப், பேக் செஞ்சிட்டு வந்து எனக்கு இன்ஃபார்ம் பண்ணு. நானும் போய்த் தேவையானதை எல்லாம் எடுத்து வைக்கிறேன். என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்துப் போய் ரெடியாகு! ப்ளீஸ்”என்றவளது அன்புக் கட்டளைக்குக் கட்டுண்டுச், சுற்றுலாவிற்குச் செல்லத் தயாராகும் வேலையில் இறங்கினாள் காரிகா.
தான் சொன்னதைப் போலவே தோழியின் பெயரைச் சுற்றுலாவிற்கு வர விரும்புபவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டு, அதற்கானப் பணத்தையும் செலுத்தி விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
காரிகாவிற்கு முடிவெடுக்க இருபத்தி நான்கு மணி நேரம் எல்லாம் தேவைப்படவில்லை. கால் மணி நேரத்திலேயே ஆராவிற்குக் கால் செய்து, தான் சுற்றுலாவிற்கு வருவதாகச் சம்மதம் சொல்லித், துணிகள் மற்றும் இதர பொருட்களையும் பையில் அடுக்கியாயிற்று என்றத் தகவலையும் உடன் சேர்த்து அவளிடம் தெரிவித்து விட,
“சூப்பர்! ரொம்ப சந்தோஷம். நானும் பேக்கிங் முடிச்சுட்டேன். இந்த நாலு நாளும் எல்லார் கூடவும் நல்லா என்ஜாய் பண்ணு”என அவளுக்கு அறிவுறுத்தி விட்டு ஆரா அழைப்பை வைத்து விடவும்,
அவளின் நட்பில் இருந்து கிடைக்கும் சந்தோஷமே விரைவில் தன்னைப் புதியவளாக மாற்றி விடும் என்ற நம்பிக்கையுடன், தாங்கள் சுற்றுலா செல்லும் நாள் வந்து விடவும், ஆரா தனக்கு ஊட்டியிருந்த தன்னம்பிக்கை, உற்சாகம் மற்றும் தைரியத்தை உடன் வைத்துக் கொண்டு அனைவருடனும் சுற்றுலாவிற்குச் சென்றாள் காரிகா.
இவள் சுற்றுலா சென்ற விஷயம் இவளது வீட்டிற்குத் தெரியவே இல்லை!
அதுவே காரிகாவிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.
ஆனாலும் அதற்கடுத்து வந்த நாட்களில் தனது பெற்றோரிடம் எப்போதும் போல் செல்பேசியில் பேசியவளோ, தான் சுற்றுலா சென்றதை வாய் தவறிக் கூட அவர்களிடம் தெரிவிக்கவில்லை அவள்.
இதையெல்லாம் இன்று இப்போது தனது இல்லத்தில் இருந்து கொண்டு நினைத்துப் பார்த்து முடித்து விட்டுத் தன் விழிநீரைச் சுண்டி விட்டுக் கொண்டாள் காரிகா.
“நம்மக் காலேஜ் டைமில் நீ எப்படி என்னை நல்லா பார்த்துக்கிட்டு, உனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தியோ, அதே மாதிரி நான் உனக்கு இப்போ இருக்கனும்னு ஆசைப்பட்டேன் ஆரா! ஆனால் அதை என்னால் செய்ய முடியலை! அட்லீஸ்ட், இதுக்கப்புறம் உன்னைத் தொல்லை செய்யாமல், உனக்கு உபத்திரவம் பண்ணாமல் இருக்கனும்னு நினைக்கிறேன்!”என்று முடிவெடுத்து விட்டவளோ,
தன் கல்லூரி நாட்களில் தனக்குக் கிடைத்த ஆராவின் நட்பையும், பாசத்தையும் பற்றி அன்றைய பொழுது முழுவதிலும் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்தாள் காரிகா.
ஆனால் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்த ஆராத்ரிகாவோ சடாரென்று எழுந்து அமர்ந்தாள்.
பாதி உறக்கத்தில் இருந்து எழுந்ததால், தலை பாரமாக இருந்தது.
தண்ணீர் போத்தலில் நீரைப் பருகியவள் கடிகாரத்தைப் பார்த்து தற்போது நேரம் மதியம் இரண்டு என்பதை அறிந்து கொண்டாள்.
“நல்லவேளை லன்ச் சாப்பிட எழுந்துட்டேன்! இல்லைன்னா அத்தை தான் மனசுக் கஷ்டப்பட்டு இருப்பாங்க”என நிம்மதி அடைந்து வேகவேகமாக முகத்தைக் கழுவி விட்டுக் கீழே வந்தாள் ஆராத்ரிகா.
“வந்துட்டியா ஆரா! உங்கத்தை சமையலை முடிச்சுட்டு உனக்காக சேமியா பாயாசம் செஞ்சுட்டு இருக்கா. அவளும் வரட்டும். மூனு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்”என்று நாச்சிமுத்து மருமகளிடம் கூறிக் கொண்டு இருக்கும் போதே அங்கே பாயாசத்தைப் பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டு வந்து அதைச் சாப்பாட்டு மேசையில் வைத்தார் நீலவேணி.
“அத்தை! சேமியா பாயாசம் எல்லாம் செஞ்சிக் கலக்குறீங்க! அதுவும் உங்க கையால் செஞ்ச சமையலே எனக்கு ஸ்பெஷலானது தான்!”என்று தனது மாமியாரிடம் அவரது சமையல் திறமையைப் பற்றி முழு மனதுடன் வெளிப்படையாகவே பாராட்டினாள்.
“இன்னும் உனக்கு விதவிதமாகச் சமைச்சுப் போடனும்னு எனக்கு ஆசையாக இருக்கு! அதுக்கு நான் ஒரு லிஸ்ட்டே போட்டு வச்சிருக்கேன்! ஆனால் அதையெல்லாம் தினமும் செஞ்சிக் கொடுத்தால் போர் ஆகிடும்! நாளைக்குக் குலோப்ஜாமூன் செய்யவா?”என மருமகளிடம் கேட்டுக் கொண்டே எல்லா உணவுப் பாத்திரங்களையும் கொண்டு வந்து வைத்து விட்டோமா? என்று ஒருமுறை மேற்பார்வை பார்த்து விட்டுத் தானும் நாற்காலியில் அமர்ந்தார் நீலவேணி.
“இன்னைக்கும், நாளைக்கும் இனிப்பே சாப்பிட்டால் மருமகளுக்கு ஒத்துக்காமல் போயிடும்மா. அதனால் நாளைக்கு வேற ஏதாவது செஞ்சிக் கொடு”என்று மனைவிக்கு அறிவுறுத்தினார் நாச்சிமுத்து.
“சரிங்க” என்றுரைத்து விட்டு உணவைப் பரிமாற அதற்குப் பிறகு மூவரும் தங்களது மதிய உணவுண்டு முடித்தனர்.
காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்ந்தவளோ, மதியம் உறங்கி எழுந்ததும் தன் அத்தை மற்றும் மாமாவின் அன்பான வார்த்தைகளால் கலகலப்பான மனநிலைக்கு மாறி விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
“அபூர்வனுக்கு நாளைக்கு ஃப்ரைட் ரைஸ் செஞ்சிக் கொடுக்கனும்மா. நீயும் இங்கே வந்து சமைச்சு ரொம்ப நாளாச்சே? அதனால் நீயே அதை சமைச்சுரு! உன்னால் கிச்சனில் ரொம்ப நேரம் நிற்க முடியாதுன்னா சொல்லு! அதை நான் பாத்துக்கிறேன்”என்றவரோ,
அவளுக்கும் தனது கணவனுக்காக சமைத்துக் கொடுக்க ஆசையாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் அவளிடம் இவ்வாறு கேட்டிருந்தார் நீலவேணி.
அதில் மகிழ்ச்சியாக,”அதெல்லாம் என்னால் கிச்சனில் ரொம்ப நேரம் நிற்க முடியும்த்தை. நாளைக்குச் சமையலை நானே பார்த்துக்கிறேன்”என அவருக்குச் சம்மதம் அளித்தவளோ,
பல நாட்களுக்குப் பிறகுத் தன்னுடைய அத்தை, மாமாவுடன் உரையாடி மகிழ்ந்தவள் அபூர்வனின் வரவிற்காக காத்திருந்தாள் ஆராத்ரிகா.
தன்னவனின் மனநிலை தற்போது எந்த நிலையில் இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தாள்.
உனக்குக் குழந்தையைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று தன்னிடம் அவன் கேட்டதை மறக்க முடியுமா என்ன?
தன் கைகளை வயிற்றில் பதித்து,’சுயநலமாக யோசிச்சிட்டு இருக்கிற உன் அம்மாவை மன்னிச்சிரு செல்லம் ! ஆனால் எனக்கு இதை தவிர வேறு வழி தெரியலை!’என்று தன் மகவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா.
தான் எப்படி திடீரென்று உறக்கத்தில் இருந்து கண் விழித்து எழுந்தோம்? என்று மனதில் எழுந்த கேள்விக்கு ஆராவிற்கே பதில் தெரியவில்லை!
அவளது தோழி காரிகா செய்து வைத்த அதிகப் பிரசங்கித்தனமான செயலால், தன் நிம்மதி பறி போனதை நினைத்து தாங்கள் கல்லூரியில் படிக்கும் போது அவளுக்காக எல்லாவற்றையும் பார்த்துப், பார்த்து செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று காலம் கடந்து ஞானோதயம் பிறந்தது அவளுக்கு.
அங்கே காரிகாவிற்கு அவளது செயலின் எதிர்கால விளைவுகளை எண்ணிக் கலக்கம் உண்டானது என்றால்,
இங்கோ காரிகாவிடம் தனது திருமண வாழ்க்கையைச் சுமூகமாக கொண்டு செல்லக் காரிகாவிடம் உதவி கேட்டது தவறோ என்ற ஐயம் தோன்றியது ஆராத்ரிகாவிற்கு!
மொத்தத்தில் இப்போது நடந்தது, இனிமேல் நடக்கப் போவதற்கு எல்லாம் ஆரம்பமே இவள் தானே!
ஆனால் காரிகாவின் மீது அக்கறை மற்றும் நம்பிக்கை வைத்திருந்தவளுக்குக் கணவனிடம் அதை வைக்கத் தோன்றி இருக்கவில்லையே!
அதேபோல் தனது வயிற்றில் இருக்கும் சிசுவையும் யோசித்துப் பார்க்கவில்லையே!
ஆராத்ரிகாவும், காரிகாவும் தம்மைத் தாமே குற்றம் சாட்டிக் கொண்டாலும் கூட இதில் மிகவும் பாதிக்கப்பட்டது யார்? என்பதைப் புரிந்து விட்டிருந்தார்கள்.
இதே சமயம் ஆராவின் குற்றமுள்ள நெஞ்சம் கனிஷ்காவை நினைத்து குறுகுறுக்கலானது.
தங்களது தோழி என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவள் தனக்கு உதவி செய்வதாக வாக்களித்து விட்டிருந்தாள்.
இப்போது அதைச் சரியாக கடைபிடிக்கவும் செய்து கொண்டு இருக்கிறாள் கனிஷ்கா.
ஆனால் அவளும் கூடத் தாங்கள் இருவரால் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பாளே!
அவளிடம் எப்படியாவது பேசித் தன்னுடைய தற் போதைய மனநிலை மற்றும் உடல்நிலையைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
ஆனால் ஒருபக்கம், ஆராத்ரிகா தனது தோழிகளை வைத்து தன் கணவனை ஏமாற்றிக் காய் நகர்த்திக் கொண்டு இருந்தாள் என்றால்,
இங்குத் தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டுத் தன் மனைவியை இப்படியே விட்டால் நிலை இன்னும் மோசமாகி விடுவதற்குள் இதற்கு ஒரு தீர்வுக் காண வேண்டும் என்று அள் படித்த கல்லூரியின் முதல்வரின் எண்ணிற்குத் தனது செல்பேசியில் இருந்து அழைப்பு விடுத்து விட்டுக் காத்திருந்தான் அபூர்வன்.
– தொடரும்

