Loading

நித்திலனின் விரல் கட்டு அவிழ்க்கப்பட்டு முற்றிலுமாய்க் குணமடைந்த நிலையில், தேனிலவுக்கென அவர்கள் மாஞ்சோலையில் திட்டமிட்டிருந்த சுற்றுலா இடங்களுக்கெல்லாம் சென்று வந்தனர்.

அடுத்து வந்த ஒரு வாரம் முழுவதும் மாஞ்சோலையின் இயற்கை எழிலை வெவ்வேறு காட்சி கோணங்களில்(view point) கண்டு ரசித்தனர்.

கோதையாறு, மணிமுத்தாறு, பாபநாசம் காரையாறு என இவை அனைத்தும் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் காண, வெவ்வேறு கோணங்களில் பச்சை பசேலென அடர்ந்த காட்டினுள் ஊடுருவி பாயும் நதியாய்க் காட்சியளித்தன.

தேயிலைத் தோட்டத்தினுள் நின்று பலவிதமான  சுயமிக்களை(selfie) எடுத்துக் கொண்டனர். சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனைக்குச் சென்று வந்தனர். இயற்கை மூலிகைக் காற்றைச் சுவாசித்து வனாந்திரக் காட்டினுள் நடைப் பயணம் சென்று வந்தனர்.

மொத்தத்தில் இந்த மாஞ்சோலை சுற்றுலா பயணம் இவர்கள் இருவருக்கும் மறக்க முடியா நினைவுகளாய் மனப்பெட்டகத்தில் சேமிக்கப்பட்டது.

அன்று நித்திலனின் கையேட்டினில் படித்ததைப் பற்றி அவனிடம் ஏதும் வினவவில்லை நிவாசினி.

அவனைப் பற்றி அவள் அறிந்து கொள்ள முற்படுவதே இல்லை என அவன் தான் எப்பொழுதும் கூறிக் கொண்டே இருப்பானே, ஆகையால் அவனிடம் கூறாது இக்கையேட்டினை படித்து விட்டு அவனைப் பற்றித் தனக்கு அனைத்தும் தெரியுமெனத் தக்க சமயத்தில் கூறிப் பெருமைபட்டு கொள்ளலாமென எண்ணினாள் நிவாசினி.

அவளின் திருமணத்திலேயே பவானியின் மேலாளர் சிவகணேசன் அவளிடம் இவனது விமானப் பராமரிப்புப் பணியினைப் பற்றிக் கூறியிருந்தமையால், அதனைப் பற்றி மட்டும் அவனிடம் கேட்டாள். ஏன் அப்பணியினை விடுத்து இந்த வானொலி வேலைக்கு வந்தானெனக் கேட்டாள். அந்த வேலை மிகுந்த மனவுளைச்சலை தந்ததால் சற்று அதிலிருந்து விலகி இளைப்பாற இந்த வானொலி பணிக்குத் தற்காலிமாய்ச் சேர்ந்து கொண்டதாகவும், தற்போது அந்த விமானப் பணியில் அவன் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், மீண்டுமாய் அதில் அவன் பணியாற்றுவானெனவும் உரைத்திருந்தான் நித்திலன்.

அவனின் முதல் காதல் பற்றி அவளறிய முற்படவில்லை. அது வீணான மனவலியையே உண்டு செய்யுமென அதைப் பற்றிக் கேளாது விட்டிருந்தாள்.  தினம் ஓர் இடமென இருவரும் வெளியில் சென்று வந்து கொண்டிருந்ததால் அதன்பிறகு அவனின் கையேட்டினைப் படிக்கவும் நேரமற்று தான் போனது அவளுக்கு.
அக்கையேட்டினை பற்றி மறந்தே போயிருந்தாள் அவள் எனக் கூறலாம்.

பவானிக்கு நிவாசினி அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளனைத்தும் சிக்னல் பிரச்சனையால் அவளைச் சென்றடையாதிருந்தது.

தேனிலவினை நிறைவு செய்து மறுநாள் காலை சென்னைக்குக் கிளம்பலாமென முடிவு செய்து, அதற்கு முந்தைய நாள் முன் மாலை பொழுதில் அவர்கள் வழமையாய்ச் செல்லும் நீரோடைக்குச் சென்றிருந்தனர் நித்திலனும் நிவாசினியும்.

அந்த நீரோடையின் ஓரமாய் இருந்த சிறிய குன்றில் அமர்ந்து ஓடும் நீரில் கால்களை நனைத்தவாறு வைத்துக் கொண்டு இருவருமாய்ப் பேசிக் கொண்டே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த நேரம், அவ்விடத்தை நோக்கி ஒரு மகிழுந்து வருவதைக் கண்டனர்.

அதில் ஓட்டுனர் இருக்கையிலிருந்த பாலனைக் கண்டதும் இருவரும் அவ்வண்டியினை நோக்கிச் செல்ல,  அவ்வண்டியின் பின்னிருக்கையிலிருந்து இறங்கியிருந்தனர் நிவாசினியின் வயதையொத்த ஒரு பெண்ணும், கல்லூரி படிக்கும் வயதிலுள்ள ஒரு பையனும்.

அதிலிருந்து இறங்கிய அப்பெண் நித்திலனை நோக்கி ஓடி வந்து அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு அவனின் நலனை தனது பார்வையால் ஸ்பரிசித்து ஆராய, நிவாசினிக்கு அது அவள் கனவில் வந்த பெண்ணெனக் கண்டதும் புரிந்து போயிற்று.

அப்பெண்ணைக் கண்டதும் நித்தலனின் முகம் முதலில் விகசித்துப் பின்பு கோபத்தைப் பிரதிபலித்தது.

தன் கையைப் பற்றியிருத்த அவளின் கையை உதறியவன், “இனி உன்னை எங்கேயும் நான் பார்க்கவே கூடாதுனு சொல்லிருந்தேனா இல்லையா?” அவள் மட்டுமே கேட்கும் வகையில் அடிக்குரலில் சீறியிருந்தான்.

அவனின் கோபத்தில் மனங்கலங்கிய அப்பெண்ணும், “இல்ல நிலன்! உனக்கு அடிபட்டிருக்குனு கேள்விபட்டு எப்படி நான் பார்க்காம இருக்க முடியும்” அவன் மட்டுமே கேட்கும் வகையில் பரிதவிப்புடன் அவள் கூற, அருகிலிருந்த நிவாசினியின் காதினில் அச்சொற்கள் விழுந்தன.

நிவாசினிக்கு இப்பெண்ணைக் கண்டதே பேரதிர்ச்சி என்றால் அவளின் பேச்சு மேலும் அவளுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

நிவாசினியைத் தன்னருகே இழுத்து நிற்க வைத்த நித்திலன், “இவ பேரு நிவேதா. அவன் முத்தரசன். பாலா மாமா பிள்ளைங்க இவங்க இரண்டு பேரும்”  என இருவரையும் நிவாசினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நிவாசினியின் மனம் மகிழ்வை இழந்து குழப்பத்தில் தத்தளித்தது.

“அன்னிக்கு ஹாஸ்ப்பிட்டல்ல கடைசியா கைல கட்டு அவிழ்க்க வந்தனைக்கு உன்னைப் பார்த்தேன்ல நித்திலன். அதை இவங்ககிட்ட சொன்னதும் உன்னைப் பார்த்தே ஆகனும்னு ஒரே அடம். அதான் நாளைக்கு நீ கிளம்புறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவை பார்த்துடட்டுமேனு கூட்டிட்டு வந்தேன்ப்பா” என்றார் பாலன்.

முத்தரசனைக் கண்ட நித்திலனின் முகத்தில் பாசம் பரவ, அவனின் தலைமுடியைக் கலைத்து, “எப்படிடா இருக்க? காலேஜ்லாம் எப்படிப் போகுது?” எனக் கேட்டுக் கொண்டே நடந்தான்.

நித்திலன், நிவாசினி, நிவேதா, முத்தரசன் ஆகிய அனைவரும் பேசிக் கொண்டே விடுதியை நோக்கி நடக்க, பாலன் வண்டியை எடுத்துக் கொண்டு விடுதியை நோக்கிச் சென்றார்.

விடுதிக்குப் போகும் வழியில் தான் இந்த நீரோடை இருந்ததால் இங்கேயே இவர்களைக் கண்டதும் நேரே வண்டியை இங்குத் திருப்பியிருந்தார் பாலன்.

மாலை வேளை அவர்கள் விடுதியை அடைந்த நேரம் வானம் மேகமூட்டத்துடன் இருள் கவிய தொடங்கி இருந்தது.

“சரி நீங்கலாம் கிளம்புங்க! மழை பெய்ய ஆரம்பிச்சிட்டா மழைல வண்டி ஓட்டிட்டுப் போகக் கஷ்டமாயிருக்கும்” என்றான் நித்திலன்.

“ஏன்ங்க வந்ததும் கிளம்பச் சொல்றீங்க? வீடு வரை வந்துட்டு எதுவும் சாப்பிடாம போனா நல்லாவா இருக்கும். இருங்க நான் காபி போடுறேன். எல்லாரும் காபி குடிப்பீங்க தானே” எனக் கேட்டுக் கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள் நிவாசினி.

“அய்யோ பால் இல்லையே! எல்லாரும் கடுங்காபி குடிப்பீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து அவள் வெளிவர, “தங்கமான பொண்ணுப்பா” என நிவாசினியைப் பற்றி நித்திலனிடம் புகழ்ந்து கொண்டிருந்தார் பாலன்.

சிரித்துக்கொண்டே நிவாசினியின் அருகில் வந்த நிவேதா, “நீங்க அன்பா எது கொடுத்தாலும் நாங்க குடிப்போம் ஹனி” என்றாள் நிவேதா.

அவளின் ஹனி என்ற அழைப்பில் சற்று முகம் சுருங்க, அங்கிருந்து சென்று விட்டாள் நிவாசினி.

மீண்டுமாய் அவளுடன் சமையலறை நோக்கி நிவேதா செல்ல, “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” எனக் கேட்டாள் நிவாசினி.

“சொல்லுங்க ஹனி” என அவள் கூறவும், “என்னை ஹனினு கூப்பிடாதீங்க!  அப்படிக் கூப்பிடுற உரிமை அவருக்கு மட்டும் தான் உண்டு. தப்பா எடுத்துக்காதீங்க! நீங்க என்னை ஹாசினினு கூப்பிடலாம்” நிவாசினி கூறவும், கண்கள் மின்ன தான் அவளைப் பார்த்திருந்தாள் நிவேதா.

சரியெனத் தலையசைத்த நிவேதா, சமையலறை தாண்டி பின் கட்டிலிலுள்ள பரந்தவெளி இடத்தில் வானத்தை ரசித்தவாறு நின்றாள்.

முகப்பறையில் அமர்ந்திருந்த பாலன் மற்றும் முத்தரசனுக்குக் காபியினை வழங்கியவள், நித்திலனைத் தேடி பின்கட்டிற்குள் செல்ல, அங்கு அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் நிவேதா.

“நிவாசினிக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா நிலன்?” எங்கோ வெறித்து நோக்கியவாறு அவள் கேட்க,
இல்லையெனத் தலையசைத்தான் நித்திலன்.

அதற்கு மேல் அவர்கள் பேசுவதைக் கேட்கும் திறனற்றவளாய் சமையலறை சென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் நிவாசினி.

“நாம சில்லுனு ஒரு காதல் குந்தவி போல இருக்கனும்னு நினைச்சா இவங்க இரண்டு பேரும் என்னை அழகி படத் தேவயானி போல நடந்துக்க வச்சிடுவாங்க போலயே! இதென்ன புதுப் பிரச்சனை முருகா” மனத்தோடு புலம்பினாள் நிவாசினி.

“நான் சொல்றதை கேளு நிவேதா. நம்மளோடது எந்த மாதிரியான உறவுமுறையா இருந்தாலும், அந்த உறவு என்னுடைய திருமண வாழ்க்கைல பிரச்சனையை உண்டு பண்ணும்ன்ற பட்சத்துல அதை நாம வளர்த்துட்டுப் போறது எனக்கு எந்தவிதத்திலும் சரியாப் படலை”  திட்டவட்டமாய்த் தீர்க்கமாய் உரைத்தான் நித்திலன்.

அவனுரைத்தது மனத்தை வதைத்து வலிக்கச் செய்தாலும், அது தானே நிதர்சனம் என்றெண்ணிய நிவேதாவும் கலங்கிய கண்களைத் துடைத்தவளாய்,
“எனக்கு எப்பவும் உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் நிலன்! என்னால உன் சந்தோஷத்துக்குப் பங்கம் வந்தா கண்டிப்பா என்னால தாங்கிக்க முடியாது. நான் சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கிறேன். அப்ப தான் இந்தப் பிரச்சனை எல்லாத்துலருந்தும் வெளி வந்து நான் நிம்மதியா இருக்க முடியும்” அவள் கூறவும், அதை வெகுவாய் ஆமோதித்தான் நித்திலன்.

“நான் பாலா மாமாட்ட பேசிறேன்! உன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றேன்” அவன் கூறவும், கோபத்துடன் அவனைப் பார்த்தவள், “அதான் உனக்கும் எனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டல. இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். நீ ஒன்னும் அதுல தலையிட தேவையில்ல”  காட்டமாய் உரைத்தவளாய் முகப்பறை நோக்கி நடந்தாள்.

சமையலறை தாண்டி தானே முகப்பறை செல்ல முடியும். அவள் கோபமாய்ச் சமையலறையைத் தாண்டிச் செல்ல, “நிவே..”என அழைத்தவாறே அவளின் பின்னே சென்றவன் சமையலறையைக் கடக்கையில் அங்கிருந்த நிவாசினியைப் பார்த்து விட்டு அங்கேயே நின்று விட்டான்.

அவனின் ‘நிவே’ அழைப்பில் நிமிர்ந்து அவனைக் கண்டவளின் கண்களில் ஏகத்துக்கும் ஏமாற்றமும் பரிதவிப்பும் தென்பட்டது. கண்ணீர் அணைத் தாண்டி உடைப்பெடுக்கக் காத்திருந்தது.
தாங்கள் பேசியதை அவள் கேட்டிருப்பாளோ என எண்ணியவாறே நிவாசினியின் அருகில் செல்ல அவன் முற்பட்ட சமயம், “நித்திலன் நாங்க கிளம்புறோம்” என அழைத்தார் பாலன்.

அவன் முகப்பறை செல்லவும் முகத்தைத் துடைத்தவளாய் இவளும் அவனுடன் இணைந்து சென்றாள்.

“இருங்கப்பா அண்ணாகிட்ட நான் அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்”  எனக் கூறியவனாய் நித்திலனை தனியே அழைத்துச் சென்றான் முத்தரசன்.

நித்திலன் முத்தரசனை அந்தத் திறந்தவெளி இடத்திற்கு அழைத்துச் சென்று, “என்னடா பெரிய மனுஷா? என்ன சொல்லனும் என்கிட்ட?”  அவன் தலையைக் கலைத்து விளையாடியவனாய் கேட்டவனின் கண்கள் அவனைப் பாசமாய் ஸ்பரிசித்திருந்தன.

“நல்லா வளர்ந்துட்டடா! காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.

“இல்ல அண்ணா! எனக்கு எல்லா விஷயத்துலயும் இன்ஸ்பிரேஷன் நீங்க தான் அண்ணா!  உங்களைக் கேட்டு தானே மரைன் என்ஜினீயரிங் எடுத்து இப்ப படிச்சிட்டு இருக்கேன்!  இப்ப ஒரு குழப்பம்” எனக் கூறி அவன் சற்றாய் தயங்க,

“என்னடா தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லுடா” அவனை ஊக்கினான்.

“லவ் பண்றதை பத்தி என்னணா நினைக்கிறீங்க?” எனக் கேட்டான்.

“டேய் யாரையும் லவ் பண்றியாடா?” கண்கள் மின்ன பூரிப்புடன் கேட்டான் நித்திலன்.

“இல்லணா நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க நீங்க” அவன் அக்கேள்வியிலேயே நிற்க,

“ஹ்ம்ம் லவ் பண்றது தப்பில்லைடா! ஆனா நீ பண்றது லவ் தானான்ற தெளிவு உனக்கு இருக்கனும். நம்ம வாழ்க்கை முழுவதும் நிறையப் பேரை கடந்து போவோம். சில பேரை தான் நம்ம வாழ்க்கை முழுக்க இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்! அதுக்காக அப்படித் தோணுற எல்லாரையும் நம்ம காதலிக்கிறோம்னு அர்த்தம் இல்ல. அப்படி நமக்குத் தோணுற நபர்கள்ல யாரு நம்மளோட குணத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஒத்து வருவாங்கனு பார்த்துக் காதலிக்கனும்னு தான் நான் சொல்லுவேன். ஏன்னா காதல் வேணா உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட பொதுவான விஷயமா இருக்கலாம். ஆனா உங்க இரண்டு பேரோட வாழ்க்கையைச் சார்ந்து யாரெல்லாம் இருக்காங்கனு யோசிச்சு அவங்களுக்கு உங்க கல்யாணம் எந்த விதத்துலயும் பிரச்சனையை உருவாக்காம இருக்கனும்னு நினைச்சு தான் முடிவு செய்யனும். இதெல்லாம் டீன் ஏஜ்ல யோசிக்கத் தோணாது. மனசு அப்ப காதலை உணர்வுபூர்வமா தான் அணுகும். இருபத்தஞ்சு வயசுல தான் காதலையும் அறிவுபூர்வமா யோசிக்க வைக்கும். இதை எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் காதல்ல முக்கியம் பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் தான்” என்றான் நித்திலன்.

நித்திலனின் கைகளைப் பற்றிக் கொண்டு “தேங்க்யூ அண்ணா! இரண்டு நாளா மனசு ரொம்பக் குழப்பமா இருந்துச்சு. இப்ப தெளிவாகிட்டேன் அண்ணா”  என்றவாறு அவனை அணைத்துக் கொண்டான் முத்தரசன்.

முத்துவை அணைத்திருந்த நித்திலன் நிமிர்ந்து பார்க்க, சற்றாய் தெளிந்த முகத்துடன் பின்கட்டு வாசலில் சாய்ந்து கைகளைக் கட்டியவாறு அவனைப் பார்த்திருந்தாள் நிவாசினி.

முத்து எதற்காக இக்கேள்வியினைக் கேட்டானென நித்திலன் கேட்கவில்லை.
ஆயினும் அவனுக்குத் தேவையான அறிவுரை அளித்துவிட்ட திருப்தியில் இருந்தான். இருவருக்குமான பிணைப்பு இது தான். முத்துவிற்குத் தேவை எனும் போது ஆலோசனை வழங்கி ஒதுங்கி விடுவான் நித்திலன். ஏன் எதற்கெனக் கேள்விகள் கேட்க மாட்டான். அதுவே முத்துவை நித்திலனிடம் வெகுவாய் ஒட்டுதலுடன் பழக வைத்தது. அவனே உழன்று எழுந்து பாடம் கற்று கொள்ளட்டுமென விட்டு விடுவான். அனுபவத்தை விடப் பெரிய பாடத்தை எவரும் வழங்க இயலாதெனத் தெரிந்து வைத்திருத்தான் நித்திலன்.

மூவரும் இவர்களிடம் விடைபெற்று செல்ல, இங்கு நிவாசினி மறுநாள் காலை பயணத்திற்காகத் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளாய் தன்னிடம் ஏதும் கேட்பாளென இவன் காத்திருக்க, இரவுணவு உண்டு படுக்கும் வரையில் அவள் அவனிடம் ஏதும் கேட்கவும் இல்லை. கலகலவெனப் பேசவும் இல்லை.  எதையோ மனத்திற்குள் யோசித்தவளாய் அவள் சுற்றிக் கொண்டிருப்பதை அவதானித்திருந்தான்.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவளை தன்னருகில் அவனிழுக்க,  அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.

“அடியே என் ஹனி பொண்ணே, என்கிட்ட எதுவும் கேட்கனும்னு தோணுச்சுனா கேட்டுடு! இப்படி உனக்குள்ளயே வச்சு மருகாத”
அவன் மார்பிலிருந்த அவளின் தலையைக் கோதியவாறே கூறினான்.

தனது தாடையை அவன் நெஞ்சில் பதித்து நிமிர்ந்து நோக்கியவள், “நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே!” என்றாள்.

மென்னகைப் புரிந்தவனாய் மாட்டேனென அவன் தலையசைக்க,  எழுந்து அமர்ந்தவள், அவனின் சட்டை பொத்தானைத் திருகியவாறே, “நான் உங்களைச் சந்தேகப்படுறேனு நினைக்காதீங்க ஆனா இனி அந்த நிவேதா பொண்ணுகிட்ட நீங்க பேசக் கூடாது” என்றாள்.

அவன் கண்களில் ஆச்சரிய பாவனை விரவி வழிய சரியெனத் தலையை அசைத்து, பொத்தானைத் திருகிய அவளின் கையை மிருதுவாய் வருடினான். அந்நேரம் அவனின் அந்த நிநி டாட்டூ அவளின் கண்களுக்குப் புலப்பட, முத்தரசனிடம் நித்திலன் பேசியதை கேட்டதில் சற்றாய் அமைதியாகியிருந்த அவளின் மனம் இப்பொழுது இந்த டாட்டூவை கண்டதில் மீண்டுமாய்க் கலவரத்திற்குள்ளானது.

அவளின் கண்கள் வேதனையைப் பிரதிபலித்ததைப் பார்த்ததும், மீண்டுமாய் அவளை இழுத்து தன் கை அணைப்பிற்குள் வைத்து கொண்டவன், “உனக்குப் பிடிக்காதது நான் என்னிக்கும் செய்ய மாட்டேன்டா!  இனி நான் நிவேதாகிட்ட பேச மாட்டேன் சரியா” அவன் ஆதுரமாய் அவளின் தலையைக் கோதியவாறே கூற,  இவளின் மனம் அந்த டாட்டூவிலேயே நின்று நிலைகொள்ளாமல் தவித்தது.

இந்த நிநி நித்திலன் நிவேதாவாக இருக்குமோ என அவளின் மனம் சந்தேகம் கொண்டு பதறியது. இதை அவனிடம் கேட்டால் நிச்சயமாய் அவனைச் சந்தேகபடுவதாய் எண்ணுவான். அதிலும் தீர விசாரிக்காமல், கண்ணால் கண்ட காட்சிகளையும் கனவினையும் வைத்துச் சந்தேகிப்பதும், அதைக் கேட்டு சண்டையிடவதும் முறையற்ற செயலென எண்ணியே இத்தனை நேரமாய் நித்திலனிடம் ஏதும் அவள் கேளாது இருந்தாள். ஆனால் இப்பொழுது இந்த டாட்டூ,  இதைச் சந்தேகிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

சென்னை சென்றதும் அவனது அண்ணியிடம், அவனது அண்ணணின் அங்கத்தில் எங்கேனும் நிநி டாட்டூ உள்ளதா என வினவ வேண்டுமென மனத்தில் குறித்துக் கொண்டாள்.

அதன்பின் மனம் சற்றாய் சீராக நிமிர்ந்து அவள் அவனைப் பார்க்க,  அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான்.

இவளும் அவனை அணைத்தவாறு உறங்க முற்பட, அவ்வப்போது வந்து செல்லும் அலைபேசியின் நெட்வொர்க்கினால் நித்திலனின் புலனத்தில் வந்த குறுஞ்செய்திகளின் ஒலி அவள் செவியைத் தீண்டியது.

நித்திலன் நிவாசினி இருவருமே தங்களது கைப்பேசித் தொடுதிரையின் வரைவு கடவுச்சொல்லை மற்றவருக்குத் தெரிவித்திருந்தனர்.

அவளெடுத்துப் பார்க்க, “நாளைக்குக் கிளம்புறீங்களா?” எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் அவனின் அண்ணன் நிரஞ்சன்.

நிரஞ்சன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததோ புலனத்தில் இருந்த அவர்களது குடும்பக் குழுவிற்கு.

“இப்படி ஒரு ஃபேமிலி க்ரூப் வாட்ஸ்சப்ல வச்சிருக்காங்களா? என்னை ஏன் அந்த க்ரூப்ல ஆட் பண்ணலை இன்னும்?” எண்ணியவாறே அதிலிருந்த குறுஞ்செய்திகளைப் படிக்கலானாள்.

அதில் கண்ட ஒரு செய்தியில் அவளின் கண்கள் நிலைக்குத்தி நின்றன.

“அடேய் அண்ணா முதல் வேலையா நாளைக்குப் போய் உன் நெஞ்சுல நிநினு டாட்டூ குத்திக்கிற” என்று அனுப்பியிருந்தான் நித்திலன்.

அன்று அவர்கள் அந்தப் பேருந்தில் பயணப்பட்டிருந்த போது, இவன் அந்த நிநி விளக்கம் கூறிய பிறகு அன்றிரவு இந்தச் செய்தியை அனுப்பி இருக்கிறானென அதிலிருந்த தேதியை வைத்து அறிந்து கொண்டாள்.

தன்னிடம் பொய் உரைத்திருக்கிறான்,
தன்னை ஏமாற்றியிருக்கிறான் என அவன் மீது பெருங்கோபம் எழுந்தது அவளுக்கு.

அந்த நிநி நித்திலன் நிவேதா தானா? அவனின் பழைய காதலை தன்னிடம் மறைக்க விதவிதமாய்த் தன்னிடம் பேசியிருக்கிறானா எனக் கோபம் வந்தது அவளுக்கு.

ஆனால் அவன் உன் மீது வைத்த அன்பு உண்மையாயிற்றே! இது நாள் வரை அவன் அன்பில் பொய்யை நீ கண்டதில்லையே என அவளின் மனசாட்சி அவனுக்காகப் பரிந்து வர,  அன்பு உண்மையாய் இருந்தால் பொய்யுரைக்கலாமா? ஏமாற்றலாமா? என மூளை கேள்வி கேட்டது.

இப்படியாக மூளைக்கும் மனத்திற்குமான வாக்குவாதத்தில் சோர்ந்தவளாய் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை அவள் காணப்போகும் கனவின் பயனாய் அவனை விட்டு பிரிந்து செல்லும் முடிவினை எடுக்கவிருப்பதை அறியாத பேதையவளும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்