Loading

இந்த அரசியல் மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பது அருணாசலத்திற்கு தெரிந்த நொடிகள் இது. இரண்டு நாட்கள் உயிர் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக கண்விழித்தாள்  சாதுர்யா. அவள் உடல் நிலை மிகவும்  சிக்கலாக இருந்தது. ஆனால் அவள் அடிமனதில் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. ஸ்கந்தன்  குரல் அருகில் கேட்காமல் சற்று தவித்துப் போனாள். 

சமீபகாலங்களில் மனதிற்கு ஆறுதலாக இருப்பவன் அவன் மட்டும்தான். அவனுக்கும் அவளுக்குமான பந்தம் உமாவுக்கு  அவள் மகனுக்குமான பந்தத்தை போன்று இறுக்கமாக தான் இருக்கிறது. அவன் இப்பொழுது குழந்தை இல்லை தான், பதினெட்டு வயது வாலிபன். ஆனால் அவள் கண்களுக்கு அவன் குழந்தையாக தான் தெரிகிறான். தான் அவனை விட எட்டு வயது தான் பெரியவள் என்பதை கூட மறந்து விட்டிருந்தாள்.

அவள் உயிர்த்தெழுந்து வருவதற்கு அவனும் ஒரு காரணம். அவ்வளவு உடல் தேறி வருவதற்குள் தேர்தல் நடந்து முடிந்து விடும். சற்று உட்கார முடியும் நிலையில் அருணாச்சலம் சிவனும் வெளியில் நடந்தவற்றைச் சொல்ல பெண்ணின் முகத்தில் அதிருப்தி. கேவலம் எனது உயிருக்காக இத்தனை மோசமாக நடந்து கொண்டார்களா கட்சி தொண்டர்கள் என்று அவளுக்கு சலிப்பு வந்துவிட்டது. தனக்கு இத்தனை பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை ஆனால், நாட்டின் நல்ல குடிமக்களாக தன் கட்சி தொண்டர்கள் ஒருவர் ஒருவரும் இருக்கவேண்டும் என்று அவள் மிகவும் எதிர்பார்க்கிறாள்.’ ராணுவக் கட்டுப்பாடு தனது கட்சியில் அவசியம்’ என்று அவள் உணர்ந்த தருணம். 

சாதுர்யா விழித்த பிறகு ஸ்கந்தன் அவளை விட்டு நகரவேயில்லை. அவள் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று ஒரே புலம்பல். எப்படி அவனை சமாளிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. மெல்ல மெல்ல தனது எண்ணங்களை அழுத்தமாக புரிய வைத்தாள் அவனுக்கு. நாட்டின் நலனுக்கு இளைஞர்களின் தேவை,எவ்வளவு முக்கியம் என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் இருந்த நாட்களில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தாள். அவளின் சிறுவயது, படிப்பு கல்லூரி,லட்சியம் ஒன்றுவிடாமல் ஒரு நல்ல தோழனிடம் பகிர்ந்து கொள்வது போல். அவளது வார்த்தைகள் எல்லாவற்றிலும் விரவி வந்திருந்தது ரங்கனின்  பெயர். அவள் பேச்சில் இருந்து ஸ்கந்தன் புரிந்துகொண்டது ரங்கனுக்கும் அவளுக்கும் இருந்த நேசத்தை. இப்பொழுது முழுமையான ஆண்மகனாக இருக்கும் ஸ்கந்தனுக்கு அவள் பேச்சுகள் புரியாமல் இருக்க சாத்தியமில்லை. அவனுக்கு தன் அப்பா மேல் கோவம் கூடிக்கொண்டே போனது.

‘ஒருவேளை சாதுர்யாஅம்மா ரங்கன் சாரை திருமணம் செய்து கொண்டிருந்தால் அவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை எல்லாம் வரப்போகிறது’ என்ற துக்கம் பொங்கியது.  சாதுர்யா ஏன் தன் அப்பாவை திருமணம் செய்துகொண்டு இங்கு வந்து இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை. புரிந்தும் புரியாமலும் இருந்த விடலை பருவ சமாச்சாரங்கள் முழுமையாக புரிந்து பொழுது அவன் தன்னுள் நொறுங்கிதான் போனான். தன் மகள் வயதில் இருப்பவளை எப்படி இவ்வாறெல்லாம் செய்ய முடியும் என்று அவன் யோசிக்காத நாள் இல்லை. பதினாறு வயதில்  ஒருவிதமாக புரியும் விஷயங்கள் இருபது வயதில் தெளிவாக தெரிந்து விடும். பெண்ணவளை பார்க்கும் போதெல்லாம் ஸ்கந்தனின் மனதில் குற்ற உணர்ச்சிதான். அவளுக்கு என்ன பரிகாரம் செய்வது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை.

ஒரு மாதம் கழித்து மீண்டு வந்தவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான் ஸ்கந்தன். மாலதி வெங்கடேசன் இருவரும் கிளம்பி தில்லிக்கு சென்றார்கள். மாலதிக்கு தன் மகளை விட்டு செல்வதற்கு மனமில்லை. அருணாச்சலம் தைரியம் சொன்னதால் லக்ஷ்மி -தாமு கூட கிளம்பி ஆயிற்று . ஸ்பெயினில் இருக்கும் ரங்கனுக்கு தன் மனைவியை எப்படியாவது சந்தித்தாக வேண்டும் என்று வெறியே வந்துவிட்டது. மனதில் இருப்பதை சாதிக்காமல் விடுவதற்கு  அவன் பழைய ரங்கன் இல்லையே! ஸ்பெயினில் இருந்து இந்தியாவிற்கு பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொடுக்கும் தொழில் வல்லான் அவன். அவன் கோட்டை விட்ட ஒரே விஷயம்  அவன் மனைவி மீதான அவனது உரிமை.

சாதுர்யாவை ரேணுகாவும் அவள் கணவரும் அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றார்கள். அவர்களிடம் ரங்கனை பற்றி  பேசுவதற்கு பெண்ணுக்குள் தயக்கம் உண்டு. ஆனால் அவர்கள் கடைசியாக வந்திருந்தபோது, “அத்தானுக்கு எப்படியாவது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுங்கள். அப்போது தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்” என்று கதறி விட்டாள் சாதுர்யா அவள். தனது கணவனை இன்னொருத்திக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்கும் மனைவியின் நிலை வார்த்தைகளால் வடிப்பதற்கு இல்லை இதே துன்பத்தை தான் அவனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பது பெண்ணுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இவளோ சாதிக்கப் பிறந்தவள். திருமண வாழ்க்கை சரியாக அமைய கூடாது என்பது அவள் தலைவிதி. அதை மாற்றுவதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. அதோடு அத்தானை திருமணம் செய்துகொண்டு அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு இவள் யார்?

ரேணுகாவுடன்   சாதுர்யா பேசிக்கொண்டு இருப்பவற்றை கேட்டுக்கொண்டு வந்துவிட்டான் ஸ்கந்தன். அவள் அறையில் நுழைவதற்கு அவனுக்கு என்றுமே அனுமதி தேவைப்படவில்லை.

அவன் கேட்டதில் சாதுர்யா ரங்கன் இடையே நடந்த திருமணமும் அடக்கம். ஸ்தம்பித்து நின்று விட்டான் அவளது பெறா மகன்.இவ்வளவு நடந்த பிறகும் கூட பெண்ணை கைவிடாமல் திருமணம் செய்துகொண்ட ரங்கன் மீது ஸ்கந்தனுக்கு கோவில் கட்டும் அளவுக்கு மரியாதை வந்து விட்டது.

பாண்டிச்சேரியின் பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் பயிலும் மாணவன் ஸ்கந்தன். ஆனால்,சாதுர்யாவை விட்டு விட்டு செல்வதற்கு அவனுக்கு மனமில்லை. சென்னைக்கு வந்து விடுகிறேன் என்று அவன் சொன்னால்  அவனம்மா அவனை அவ்வாறு அனுமதிப்பதற்கு இல்லை. ஒருவாறாக எனது உடல் நிலையை காரணம் காண்பித்து இதற்கு மேலும் நீ விடுப்பு எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி அவனை அனுப்பி வைத்தாள்  சாதுர்யா.

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை. மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றான் ஸ்கந்தன். அவன் மனதிற்குள் எப்படியாவது தான் ஒரு ஐ பி எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு அடி ஆழத்தில் உண்டு. ஆனால் தன் அம்மாவின் ஆசைக்காக தான் மருத்துவம் சேர்ந்தான். சாதுர்யா மருத்துவமனையில் இருந்த பொழுது மருத்துவத்தின் அவசியம் அவனுக்கு புரிந்தது. ஆனால் தனது கனவை நோக்கி எப்படி பயணம் செய்வது என்பது தான் புரியவில்லை. சில சமயங்களில் இப்படித்தான்… வீட்டில் இருப்போரின் கனவுகளுக்கும் தனது லட்சியம்களுக்கும்  இடையே இளைஞர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். தனது லட்சியம் பற்றி அவன் சாதுர்யாவிடம் வாயைத் திறந்து சொல்லியிருந்தால் அவளும் புரிந்துகொண்டு அவனுக்கு உதவி இருப்பாள். ஆனால் அவனுக்கு ஏனோ வாயைத்திறந்து சொல்வதற்கு தயக்கம். சொல்லாத வார்த்தைகள் எப்படி புரியும்?

நினைத்தவாறே   சாதுர்யாவின் ஓட்டு வங்கி அவளை ஏமாற்றவில்லை. அவளுக்கு எதிராக போட்டியிட்டவரை விட இரண்டு லகரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினாள்  சாதுர்யா.

அருணாச்சலம் இது தான் சரியான தருணம் என்று மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவளுக்கு அரசியல் புதிது. நீந்துவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அருணாச்சலம்.

ஒருவழியாக அவளும் மத்திய இணை அமைச்சராக டெல்லி சென்று பதவி ஏற்றாள். பதவியேற்பு விழா முடிந்த பிறகு தனது சிறுவயது தோழர்களை எல்லாம் சந்தித்து விட்டு வந்தாள். அவளின் பார்வை மட்டும் இலக்கின்றி விரிந்தது. அவளுக்கு இவையெல்லாம் போதாது அவள் தேடுவது வேறு ஒன்று.

குரு அவன் நிழல் உலகில் பெரிய தாதாவாக விட்டான். குரு என்ற பெயரும் கூட பயத்தை உண்டு பண்ணும் அளவிற்கு மாறிவிட்டது. பெரும்பாலும் அவனது பயணங்கள்   வியாபாரங்கள் வெளிநாடுகள் சார்ந்தவையாகவே இருக்கிறது. இத்தனைக்கும் பிறகும் இந்த குருவும் அருணாச்சலத்தின் மகன் குருவும் ஒன்றுதான் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அருணாச்சலம் ஒரு வகையில் மறைமுகமாக தனது மகனின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணமாகி விட்டார். அவருக்கே தெரியாத விஷயம் தன் மகன் எவ்வளவு கொடூரமாக மாறி போனான் என்பது. அவனைப் பொறுத்தவரையில் சாதுர்யா ஜென்ம பகையாளியாகி போனாள். அவளை தீர்த்துக்கட்ட சரியான தருணம் எது என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதை செய்வதற்கும் அவனுக்குள் தயக்கம். ஏதோ ஒரு வகையில் என்றாவது அவளது வளர்ச்சி தனக்கு உதவக்கூடும் எனும் எண்ணம்  அவனுக்குள் உண்டு. ஆனால், அருணாச்சலம் எந்த காலத்திலும் அவனை அரசியலில் சேர்த்து கொள்ள போவதில்லை. அரசியல் வாழ்க்கையில் அவனுக்கு பங்களிக்க போவதில்லை என்பது தெளிவாக  தெரிகிறது. அவன் என்ன செய்கிறான் என்று எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் சிவனும் இல்லை. அவருக்கு சாதுர்யாவை வைத்து குருவை பழிவாங்க வேண்டும். அவளது பாதுகாப்பு முக்கியம். அவளது நிலை சிறப்பாக இருக்க வேண்டும்.

இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சாதுர்யா அடிக்கடி தனது தொகுதிக்கு செல்கிறாள். கட்சி நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறாள். மக்களுக்கு அவள் முகம் நிரம்ப பரிச்சயமாகி விட்டது. தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் மிக விதிக்கிறாள். அவள் விதித்த கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் சலசலப்பை உண்டுபண்ண போதும் நிஜமான தொண்டர்கள், விசுவாசிகள் அவள் சொல்வதைக் கேட்டு நடக்கும் பொழுது மற்றவர்களும் இதற்கு உடன்படுகிறார்கள்.

ஆகக்கூடி அந்த கட்சியில், மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவி ஆகி கொண்டு வருகிறாள். இதோ ஸ்கந்தன் கூட மூன்று வருடங்கள் மருத்துவத்தில் முடித்து இருக்கிறான்.

ரங்கன் அவளைப் பார்ப்பதற்கு அருணாச்சலத்தின் வீட்டிற்கு அன்று உரிமையுடன் நுழைந்தவன்,  சாதுர்யாவை தன்னுடன் வந்து விடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் கூட அவள் மறுத்து விட்டாள். நேரடியாகவே சொல்லிவிட்டாள் எனது லட்சியங்களை முடிக்கும்வரை எனக்கு ஓய்வும் இல்லை சந்தோஷமும் கிடையாது என்று.

‘உனக்காக காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றவன் மனதாலும் கூட வேறு ஒரு பெண்ணை நினைக்காமல் அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  முழு ஈடுபாட்டையும் காட்டியதன் விளைவோ என்னமோ இன்று அவன் யோசிக்க முடியாத அளவிற்கு பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி. அவன் அளிக்கும் நிதி இந்திய அளவில் அனைத்து கட்சிகளுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அரசியலில் பணம் முக்கிய பங்கு என்றால் அதைத் தரும்  தொழிலதிபர்கள் கிங் மேக்கர் ஆகி விடுகிறார்கள்.  அவனும் அப்படித்தான் சாதிக்கிறான்.

இந்த நிலையில் மாநில தேர்தல் வர சாதுர்யா தனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறாள். தனது எம்பி பதவியையும் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு தமிழகம் வந்து சேர்ந்து விட்டாள் சாதுர்யா.

அவள் வருவதற்கு முன் செய்த பெரிய நிகழ்வு ஒன்று உண்டு. பாராளுமன்ற கட்டிடத்தில் அவள் கண்ட நபர் அவளை திகைப்பில் ஆழ்த்திவிட்டார். அது வேறு யாருமல்ல, ரத்னா தான். இத்தனை வருடங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக மேகாலயா சென்று சில வருடங்கள் பணி புரிந்த பிறகு மாற்றல் கிடைத்து உத்திரபிரதேசம். அங்கு சென்றவள் போன வருட ஆரம்பத்தில் தான் பாராளுமன்றத்தில் பணி நியமனம் பெற்று வந்திருக்கிறாள். வந்த இடத்தில் அங்கு உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 

இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள். உமா உடனான புகைப்படத்தில் மட்டுமே ரத்னாவை பார்த்திருக்கிறாள் சாதுர்யா. அவளைப் பார்த்தவுடன் நேராகச் சென்று எந்த பேச்சும் பேசவில்லை. தன்னை அறிமுகம் செய்து கொள்ளவும் இல்லை.ரத்னா பற்றிய முழு விபரங்களை சேகரித்தாள். பிறகு  இணை அமைச்சர் என்ற பதவியை பயன்படுத்தி ரத்னாவை சில காலம் தனது அறையிலேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். அருணாச்சலத்தின் கட்சியை சேர்ந்த பெண் இந்த இணையமைச்சர் என்பது ரத்னாவின் மனதிற்குள் ஏதோ ஒரு தாக்கம். தன் அக்காவைப் பற்றிய நினைவுகள், அவள் குழந்தை இப்பொழுது வளர்ந்து இருப்பான் என்ற எண்ணம். பல்வேறு எண்ணங்கள் மூலம் உணர்ச்சி பிழம்பாக இருந்தாள் ரத்னா.

மெதுமெதுவே நடப்பவற்றை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சாதுர்யா, ஒருநாள் ஸ்கந்தனது சிறுவயதில் உமாவுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் தற்போது தன்னுடன் சேர்த்து அவன் எடுத்துக் கொண்ட  புகைப்படத்தையும் சேர்த்து  தனது மேஜை மீது எதேச்சையாக  வைப்பது போல் வைத்து வைத்திருந்தாள்.

இதைக்கண்ட ரத்னாவுக்குள் பதட்டம். உமா இறந்துவிட்டது பற்றி எல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இரண்டு நாட்கள். ஸ்கந்தனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்  என்று மண்டையை உடைத்துக் கொண்டு தனது கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவருக்கும் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை. மூன்றாவது நாள் இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்று அலுவலகம் முடிந்த பிறகு சாதுர்யாவிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்  ரத்னா. 

சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாதவள்  சாதுர்யா. இதற்கான பதிலை விரைவில் தெரிவிப்பதாக சொன்னவள் அதற்கு மேல் எந்த விபரங்களையும் ரத்னாவிடம் சொல்லவில்லை.

தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஒருநாள் ரத்னாவுக்கு தொலைபேசியில் அழைத்த சிவம் அவளை தில்லியில் இருக்கும் ஒரு முகவரிக்கு கணவனுடன் செல்ல சொன்னார். ரத்னா தனது தந்தையுடன் தொடர்பில் இல்லை  என்றாலும் சிவனுக்கு தன் மகளைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரிந்து கொண்டுதான் இருந்தது.அருணாசலமும் ரத்னா விஷயத்தை அப்படியே விட்டுவிடவில்லை. அவள் எங்கு செல்கிறாள்,அவளது நிலை என்ன என்பது பற்றியெல்லாம் அவருக்கும் கவலை உண்டு.

அவள் இங்கிருந்து சென்றதற்கு காரணம் தனது மகன் குரு தான் என்பதற்கு அவரால் செய்ய முடிந்த பிராயச்சித்தம் அந்த பெண்ணின் வாழ்க்கையில் குறுகிடாமல் பாதுகாப்பது என்பதில் அருணாசலமும் சரி, ரத்னாவின் அப்பா சிவமும் சரி தெளிவாக இருந்தார்கள்.

அந்த முகவரிக்கு தனது கணவனுடன் சென்ற ரத்னா ஸ்கந்தனை நேரில் பார்த்து அழுது விட்டாள்.

அவள் இந்த இனிய அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையாக பார்த்த தனது அக்காவின் மகன் இன்று தன் முன்னே இளைஞனாக. தனது அக்கா மகனை இறுக்கி கட்டிக்கொண்டு தனது அன்பை பகிர்ந்தவள் கண்களில் இருந்து நீர், எனக்கு எந்த அணையும் தேவையில்லை என்று வழிந்துகொண்டிருந்தது. அவளின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவளது கணவனால்  கூட முடியவில்லை. ரத்னாவின் தோளில் அணைத்து அவளை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

அந்த வீடு சாதுர்யாவின் தோழி ஒருத்தியின் வீடு. அந்தத் தோழி பள்ளியில் இவளுடன் கூட படித்தவள். அவளது தந்தையும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். திருமணமாகி டெல்லியிலேயே தங்கிவிட்டாள் அந்த தோழி.  ஊடகங்களின் கண்ணில் படாமல் ஒவ்வொரு விஷயமும் செய்வதற்குள் அப்பப்பா…

ஊடகங்கள் இன்று தனது அத்துமீறல்களால் பலரது அந்தரங்கத்துக்குள் மூக்கை நுழைக்கின்றனர்.

‘கேட்டால் அதற்கு பெயர் பத்திரிக்கை சுதந்திரம்!’

உயிரைக் காப்பாற்ற வேண்டிய சமூகக் கடமை இருந்தும்,உயிர் துடிப்பதை கேமராவில் பதிவு செய்து அதையும் காசாக்கும் நிலையில் இன்று சில ஊடகங்கள்.அதுவும் பெரிய மனிதர்களின் தனிப்பட்ட விஷயங்கள் ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக அன்று முழுவதும் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பபடுவது இதுதான்.

இதற்கு பயந்து தான் சாதுர்யா, தான் பதவி விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு சாதாரணமான நிகழ்வாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தாள். வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவள் தனது சிறு வயது தோழியை சந்திப்பதற்காக தான் என்று தோன்றும்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்