
அத்தியாயம்: 17
அவன் டெல்லி சென்ற பின் அவள் ஆதித்துக்கு அனுப்பிய குரல் பதிவுகளை ஒலிக்க விட்டிருந்தான், அனைத்தும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் அவள் அனுப்பியிருந்த குரல் பதிவுகள் ஒவ்வொன்றாய் கேட்க ஆரம்பித்தான்.
“க்ரிஷ் சேஃபா போயிட்டியா.? நான் இப்போ தான் ஷிஃப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன் நான் தூங்க போறேன் பை பை” என்ற அந்தக் குரல் பதிவு முடிந்தது இந்த முறை அவளின் குரல் கேட்டு அவளின் நினைவில் தத்தளிக்க வில்லை, அவள் இயல்பாகத் தான் தன்னிடம் பேசியிருக்கிறாளா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.அடுத்த குரல் பதிவு ஒலிக்க ஆரம்பித்தது.
“க்ரிஷ்.! நான் தூங்கியே முழிச்சிட்டேன் இன்னும் நீ கால் கூடப் பண்ணலை, சரி ஓகே பிஸியா இருக்கப்போல, நான் ஷாப்பிங் கிளம்புறேன் உன்னைத் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போறேன்” என்ற அந்தக் குரல் பதிவு முடிந்திருந்தது. அவள் குரல் கேட்டு அவன் இதழில் குறுநகை தவழ்ந்தது. அவள் தன்னை விட்டுச் செல்ல வில்லை என்பதற்குச் சாட்சியே அந்தக் குரல் பதிவுகள் தான் என்று நம்பினான். அடுத்தக் குரல்பதிவை ஒலிக்க விட்டான்.
“க்ரிஷ்.! உன்னோட ஷர்ட் சைஸ் என்னன்னு மெசேஜ் போடேன், ஃப்ரெண்ட்ஸோட ஷாப்பிங் வந்தேன், ஒரு ஷர்ட் பார்த்திருக்கேன் உன் சைஸ் தானான்னு தெரியலை, நீ சொன்னால் உடனே வாங்கிடுவேன்” என்ற அவளின் குரல்பதிவில் இருந்த உற்சாகம் அவனால் உணர முடிந்தது.
“ஏய் க்ரிஷ் ஷர்ட் சைஸ் கேட்டேனே சொன்னீயா.? போ உன் மேல் கோபமா இருக்கேன்” என்ற அவளின் சோகமான குரல் பதிவை கேட்ட போது, அவளின் வருத்தம் தெளிவாய்ப் புரிந்தது.
‘என்ன இது.? இவள் நான் பேசிய பின் மிக இயல்பாய் தான் குரல் பதிவுகளை அனுப்பியிருக்கிறாள் பிறகு எப்படி அவள் என்னிடம் சொல்லாமல் சென்றிருக்க வாய்ப்பிருக்கும், கோபம், அன்பு, பாசம் அனைத்தையும் முகத்திற்கு நேர் காட்டிவிடும் இயல்பில் இருப்பவள் தான் ஆரா. என்னிடம் மறைக்க வேண்டிய காரணம் என்ன இதை நான் கண்டறிவேன் ஆரா, உன்னையும் தான்’.
நான் ஆதித் கிருஷ்ணா, இப்போது என் காதலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன், எங்குச் சென்றாள் என்னவள் என்ற கேள்விக்கு விடையை நான் அறிவேன், ஆனால் எதற்காக அவள் என்னிடம் இருந்து விலகி சென்றாள் என்ற விடையை என்னால் கண்டறிய முடியவில்லை, ஆனால் என் காதலின் தேடல் என்றும் முற்று பெறாது.
அவளின் குரல்பதிவுகளை ஒவ்வொன்றாய் கேட்கும் போது அவள் என் மீது வைத்திருக்கும் காதலை என்னால் உணர முடிந்தது, ஆம் பிரிவில் தான் காதலின் ஆழத்தை கண்டறிய முடியும் என்றால் அது உண்மை தான். இந்தப் பிரிவு அவள் மீதான காதலை அதிகபடுத்துகிறது,
அவளின் குரலை மட்டும் இசையைக் கேட்டுக்கொண்டு ஜீவித்துக் கொண்டிருக்கிறேன், எனக்குள்ளும் காதல் எனும் விதையை விதைத்தவள், அது ஆலமரமாய் வேர்ரூன்றி நிற்கையில் எங்கோ சென்றாள், முடிந்தால் என்னைக் கண்டுபிடி என்று சவால் விடுகிறாயா ஆரா.? இல்லை என்னைத் தொடர்ந்து வராதே என்பதற்காகச் சொல்லிக்கொள்ளாமல் சென்றாயா.? எதையும் முகத்திற்கு நேர் சொல்லி பழக்கப்பட்டவள் தானே நீ பின் ஏன் இந்த விளையாட்டு என் காதலே.? என்றெல்லாம் அவள் எதிரில் நின்று கேட்க ஆசைதான், ஆனால் அவளின் அழகிய வதனம் கண்டு, அவள் விழி பார்த்து பேச வழியில்லாத போது எங்கனம் இவையெல்லாம் கேட்பது.
என்னவளை அழைத்துப் பேசவும் வழியில்லை, இப்போது என் உயிர் மூச்சாய் விளங்குவதென்னவோ என்னவளின் குரல், அதிலிருக்கும் வசீகரம் எந்தப் பெண்ணிடமும் நான் உணரவில்லை, அவளின் குரலை கண்டு காதலித்தேனா.? என்றெல்லாம் தெரியவில்லை அவள் அறிமுகம் ஆவதற்கு முன்னே அவள் குரல் தான் என்னிடம் அறிமுகமானது. முதல் முறை அவளின் குரலை கேட்ட போது என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் தான் வான்மழையாய் பொழிந்ததோ.? என்றெல்லாம் தோன்றுகிறது. அவளின் அருகாமையில் வாழ்ந்த சுகமே வாழ்நாளுக்குப் போதும் தான் ஆனால் என் ஜென்மம் தீர என்னவள் என்னருகில் வேண்டும்.
என்ன ஆதித் கவிதையெல்லாம் பேசுறன்னு என் மானம்கெட்ட மனசு திட்டுறது உங்களுக்கும் கேட்கலாம், ஆம் காதலிப்பதால் கவிதை மொழி பேசுகிறாயா.? என்று நீங்களும் கேட்கலாம், அதற்கு என் பதில் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள், இல்லை காதலிப்பதாலோ, காதலிக்கபடுவதாலோ கவிதைகள் உயிர் பெறுவதில்லை, மாறாக அந்தக் காதலில் பிரிவு என்று நேர்கிறதோ அன்று ஒரு புதுக் கவிஞன் இந்த உலகிற்க்கு அறிமுகமாவன், நான் என் காதலில் பிரிவை சந்தித்தேன் இன்று அவளின் கவிஞன் மட்டும் ஆகவில்லை, அவளின் முதல் ரசிகனாகி போனேன்.
இந்தக் காதல் இன்னும் என்ன என்ன வித்தையெல்லாம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை, இன்று கவிஞனாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களிடமே, தேவதாஸாக அறிமுகம் செய்து வைக்கப் போகிறதோ.? அய்யோ அப்படியெல்லாம் நடந்து விடக் கூடாதென்று என் மனம் கூச்சலிடுவது உங்களுக்கெல்லாம் கேட்கிறதா.? அப்படிக் கேட்கவில்லை என்றால் நீங்கள் காதலிக்க வில்லை என்று அர்த்தமில்லை, நீங்கள் காதலில் பிரிவை சந்திக்க எந்த வாய்ப்பும் அமையவில்லை என்று தான் அர்த்தம்.
மயிலிறகாய் இந்தக் கிருஷ்ணனின் மனதை வருடிச்சென்றவள், எங்கோ ஒளிந்துக்கொண்டு நான் படும் அவஸ்தைகளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாளோ.? அப்படியானால் அவளின் சாயலில் இருந்த பெண்ணை விரட்டி சென்ற என்னையும் கண்டிருப்பாள் தானே.? கண்டிப்பாக இருக்காது அவ்வாறு பார்த்திருந்தாள், என் எதிரில் வந்து நின்று உன் ஸ்மைலி இங்குத் தான் இருக்கிறேன் என்று என்னைக் கட்டி அணைத்திருப்பாளோ.? அவளின் நினைவுகள் என்னைத் தீயாய் எரிக்கவில்லை, குளு குளு உணர்வை கொடுக்கிறது, இதயம் திருடிச் சென்றவளை களவாட காத்திருக்கிறது.
இப்போது இமிக்ரேஷன் ஆபிஸில் அமர்ந்துக்கொண்டு இந்தக் காதல் நினைவெல்லாம் தேவையா ஆதித் கிருஷ்ணா.? என என் மனம் கேள்வி கேட்கிறது, முட்டாள் மனமே அவளுக்ககாகத் தானே இங்கே வந்து காத்திருக்கிறேன் என்று சொல்ல தோன்றினாலும் சொல்லவில்லை, இப்போது என் மனம் பதற துவங்கிறது, அன்று அந்த ஃபளைட்டில் பயணம் செய்திருக்கிறாளா என்ற தகவல் தேடி வந்தவனுக்கு என்ன பதில் கிடைக்கப் போகிறது என்ற பதற்றம், இந்தத் தகவலை இருந்த இடத்தில் இருந்தே இந்த ஆதித் கிருஷ்ணாவால் பெற முடியும், ஆனால் இங்கு அமர்ந்திருப்பது பிஸ்னஸ்மேன் ஆதித் கிருஷ்ணா அல்ல, தன் மீராவை தொலைத்துவிட்ட கிருஷ்ணனாய் இங்கு அமர்ந்திருக்கிறேன், என் கரங்கள் ஏனோ நடுங்க ஆரம்பிக்கிறது, அங்குச் சில கோப்புகளை எடுத்து வரும் ஆபிசர் தன் கண்ணாடியை சரி செய்து மிடுக்காய் வருவதைப் பார்த்தால், என்ன சொல்ல போகிறாரோ என்ற பயம் வரத் தான் செய்கிறது, பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறேன், அவர் சொன்ன தகவலில் என் மனம் ஒரு நிமிடம் நின்றது இயல்பாய் துடிக்த்தோடு என் இதயம் இப்போது படபடத்தது.
ஆம் அவள் அன்று அந்த விமானத்தில் செல்லவில்லை, அதற்கான ஆவணங்கள் என் கரங்களில் இருக்கிறது. அவளின் கனவை அவள் தேடிச் செல்லவில்லை என்றால் என்னை விட்டு எங்குச் சென்றாய் ஆரா??
என் காதலுக்கு உரிமையானவள் என்னருகில் இல்லையே.? இப்போது அவள் எதற்கு என மனக் கண்ணாடியில் கண் சிமிட்டி சிரிக்கிறாள்.? சிரிக்காதே ஸ்மைலி என் மனக் கண்ணாடியில் இருக்கும் பாதரசம் உன் புன்னகை கண்டு கரைந்து விடும் எனச் சொன்ன போது ஒற்றை இமையை மூடி திறந்து நக்கலாய் சிரிக்கிறாளே.? சாவால் விடுகிறாளா.? உன்னால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது என்று சாவால் விடுகிறாளா.?
நீ என்ன தான் சண்டித்தனம் செய்தாலும் என் தேடல் முடியாது மை டியர் ஸ்மைலி எனச் சொல்லிக்கொண்டேன், என் மனதோடு அல்ல, என் மனதில் குடியிருக்கும் என்னவளிடம் சொல்லிக்கொண்டேன். அழகாய் சிரித்துக்கொண்டிருந்தவளின் முகம் இப்போது ஹோலி விளையாட்டில் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டது போல் அவள் முகம் சிவந்தது, சீதா ராமம் படத்தில் சீதாவின் முகத்தில் சாயம் பூசப்பட்டிருப்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள், ஆனால் அவள் சீதாவும் இல்லை நான் ராமனும் இல்லை, இந்தக் கிருஷ்ணனின் ஆரா அவள், அவள் கோபம் கண்டு என மனக் கண்ணாடிகள் சுக்கு நூறாய் உடைந்தது, உயிரில் எங்கோ வலிக்கிறது, ஆனால் வலிக்கிற இடம் தான் தெரியவில்லை, இந்த வலிக்கு மருந்து என்னவாக இருக்கும்.? அவள் என் எதிரில் வந்து நின்று சிரித்தாலே போதும் என் வலிகள் காணாமல் தொலைந்து போகும்.
நார்வே நாட்டிற்குச் செல்வது தான் அவளின் கனவாக இருந்தது. அதற்குச் செல்ல வேண்டும் என்றால். அவள் பிராயணம் செய்திருக்க வேண்டும் ஆனால் அவளின் பாஸ்போர்ட் எண் வைத்து விசாரித்த போது அவள் அங்குப் பயணிக்கவில்லை என்று நான் தெரிந்ததுக்கொண்ட நொடி. அவள் என்னிடம் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடுகிறாளோ என்று தோன்றியது.
நார்வே நாட்டின் நள்ளிரவு சூரியனை காண வேண்டும் என்பது அவளின் ஆசை ஏக்கம் கனவு எல்லாமே காதலா.? கனவா என்று கேட்டதால் தான் அவள் கோபம் கொண்டு சொல்லாமல் சென்றிருப்பாளோ.? என்று எண்ணினேன்.அத்தனை கேள்விகள் மூளையைக் குடைகிறது பதில் சொல்லதான் என்னவள் என்னருகில் இல்லை, என்னருகில் அமர்ந்து என் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் அளிப்பாள், நார்வே நாட்டின் நள்ளிரவு சூரியனை இருவரும் சேர்ந்து காண்போம் என்ற நம்பிக்கையில் ஆராவை தேடி அலையும் கிருஷ்ணன், மீராவின் கிருஷ்ணன் அல்ல என் ஆராவின் கிருஷ்ணன்.
அவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எண்ணிக்கொண்டிருந்த வேளையில். ராகவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஆதித்! ராகவ் பேசுறேன்” என்றான் ராகவன்.
“சொல்லுடா, ஆராவோட செல்போன் சிக்னல் செக் பண்ண சொன்னேனே பண்ணிட்டியா?”
“ஹம்ம் பார்த்தேன் டா கடைசியா சென்னை ஏர்போட்ல சிக்னல் லாஸ்ட் ஆகிருக்கு, இப்போ வரைக்கும் ஆன் ஆகலை. நீ உடனே கிளம்பி வர்றீயா??” என ஆதித்தை அழைத்தான் ராகவன்.
“ஆரா ஃப்ளைட்ல போகலை டா. டிக்கெட்ஸ் எடுத்திருக்கா ஆனால் போகலை. அவ என்கிட்ட எதோ கேம் விளையாடுறான்னு தோணுது. அவளோட ஃப்ரெண்ட் சுதாவுக்கு மட்டும் கால் பண்ணி பேசியிருக்கா? ஆனால் என்கிட்ட பேசலை. எனக்குச் சந்தேகமா இருக்கு” என ஆதித் சொன்ன போது,
“ஆரா மிஸ்ஸிங்ன்னு நீ கேஸ் ஃபைல் பண்ணு ஆதித். மீடியாவுக்குப் பயந்திட்டு இருந்தன்ன வேலைக்கு ஆகாது.ஆரத்யா கடத்தப் பட்டிருக்கலாம்ன்னு எனக்குத் தோணுது ஆதித். நீ முதலில் கிளம்பி வா கம்ப்ளைன்ட் மட்டும் ஃபைல் பண்ணு” எனக் கேட்ட ஆதித்க்கு ராகவ் சொல்வது சரி என்றே தோன்றியது.
“நான் கிளம்பிட்டேன்” என அவன் சொன்ன போது,
“அந்தப் பொண்ணு சுதாகிட்ட, ஆரா பேசினதா சொன்னல்ல அந்தப் பொண்ணையும் கூட்டிட்டு வா” என ராகவ் சொல்ல சரியெனத் தலையசைத்திருந்தான்.
**************
ராகவ் சொன்னது போல் சுதாவை சென்னைக்கு வரவழைத்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. அவளுடன் சேர்ந்து அவளின் காதலன் விக்கியும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். சுதாவின் வரவிற்காக வெகு நேரம் காத்திருந்தான் ஆதித். அந்தக் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தவனுக்கு ஆராவை பற்றிய நினைப்பு அதிகமானது. ஏன் தனக்கு அவள் அழைத்துப் பேசவில்லை என்ற கோபமும். ஆபத்தில் ஏதும் மாட்டிக்கொண்டாளோ? என்ற பயமும் ஒரு சேர அவனை அச்சுறுத்தியது.
“ராகவ், இவ தான் சுதா, ஆராவோட க்ளோஸ் ப்ரெண்ட்” என ராகவிடம் சுதாவை அறிமுகப்படுத்தினான் ஆதித். அவளோ பயத்தில் விக்கியின் கையை அழுத்தமாய்ப் பிடித்தாள்.
“ஓகே!! சுதா உங்களுக்கு ஆராவை எத்தனை வருசமா தெரியும்?” என்ற கேள்வியை எழுப்பினான் ராகவ்”
“ஒரு ஒன்றரை வருசம் இருக்கும். மேட்ரிமொனில வொர்க் பண்ணுறப்போ பழக்கம் ஏற்பட்டுச்சு”
“கடைசியா ஆராவை எங்கே பார்த்தீங்க?”
“ஆராவை கடைசியா? அவளோட திங்க்ஸ்லாம் கொடுக்கும் போது பார்த்தேன்” என்றாள்.
“நல்லா யோசிச்சு சொல்லுங்க சுதா, உங்க இரண்டு பேரோட கடைசிச் சந்திப்புல என்ன பேசிக்கிட்டீங்கன்னு நினைவு இருக்கா?” எனக் ராகவ் கேட்ட போது. சுதாவின் விழிகளில் நீர் தேங்கி நின்றது.
“நீங்க பயப்பட வேண்டாம் பொறுமையாய் சொல்லலாம்” என்றான் ராகவ்.
“ராகவ், அவ ஆராவோட ஃப்ரெண்ட் ஏன் இப்படி விசாரிக்கிற” என ஆதித் கேட்ட போது,
“சுதா உண்மையைச் சொன்னால் தான் நம்ம ஆராவை கண்டுபிடிக்க முடியும்”
“வாட்??” என அதிர்ந்தான் ஆதித், அதே நேரத்தில் சுதாவின் கரத்தை மெல்ல விடுவித்து விலகி நின்றான் விக்கி.
“நான் எதுவும் பண்ணலை” எனச் சுதா அழ துவங்கிய போது.
“என்ன நடந்தது, ஆரத்யா யார்க்கிட்டையும் எதுவும் சொல்லாமல் உங்க கிட்ட மட்டும் சொல்லிட்டு போனதற்கான காரணம்??” என அழுத்தமாய் அவளைப் பார்த்தான் ராகவ்.
“விக்கி, என்னை நம்பு, எனக்கும் நடந்ததுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்றாள் சுதா.
“என்ன நடந்துச்சோ அதைச் சொல்லிடு சுதா? ஆராவை ஆதித் எவ்ளோ காதலிச்சான், காதலிச்சிட்டு இருக்கான்னு எனக்குத் தெரியும். அவளுக்காக அவனோட குடும்பமே வேண்டாம்ன்னு தூக்கி ஏரிஞ்சிட்டு வந்திருக்கான்” என விக்கி சொல்லிக்கொண்டிருந்த போது.
“ஆரா என்கிட்ட எதுவும் சொல்லலை. அவளோட திங்க்ஸை கொடுத்திட்டு கிளம்பிட்டா”
“ஓகே!! எங்கே வந்து கொடுத்தாங்க”
“பாண்டிச்சேரி வந்து தான் கொடுத்தாள்” எனப் பதிலளித்தாள் சுதா.
“அப்போ நீங்க எதுக்காகப் பதினெட்டாம் தேதி ஏர்போட்ல ஆராவை பார்க்க வந்தீங்க”
“அவளைச் செண்ட் ஆஃப் பண்ண வந்தேன்” என்றாள்.
“செண்ட் ஆஃப் பண்ணீங்களா?”
“ஆமாம் பண்ணினேன்”
“அவங்க ப்ளைட்ல போயிட்டாங்க அப்படித் தானே” எனக் கேட்டான் ராகவ்
“ஆமாம்” என உறுதியாய் சொன்னாள் சுதா
“செண்ட் ஆஃப் பண்ண வந்த நீங்க எதற்காக அவங்களை உங்க கையோடு அழைச்சிட்டு அந்தக் கால் டாக்ஸில ஏறி போனீங்க?” எனக் கேட்டதும் அவளோ மருண்டு விழித்தாள்.
“அது வந்து அது வந்து” என அவள் திணறிய போது அதிர்ந்து நின்றான் ஆதித் கிருஷ்ணா.
“சுதா!! சொல்லுங்க என்னோட ஆரா எங்கே இருக்கா??” எனக் கோபமாய்க் கத்தியிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“நான் அவளை எதுவும் பண்ணலை”
“யார் என்ன பண்ணினாங்க, உங்களோட அந்தக் கால்டாக்ஸில பயணிச்ச அந்த வெள்ளைச் சட்டை போட்டிருந்த நபர் யாரு??” என ராகவ் அவளை முறைத்தபடி கேட்டான்.
“எனக்குத் தெரியாது” என்ற பதில் அவளிடம் இருந்து,
“ஆதித், சாரி டூ சே திஸ், ஆராவை யாரோ கிட்நாப் பண்ணியிருக்காங்க, அதுக்கு இந்தச் சுதா துணை போயிருக்காங்க, அண்ட் ஏர்போட்ல கிடைச்ச சிசிடீவி ஃபுட் ஏஜ்” என ஆதாரங்களை அடுக்கினான் ராகவ்.
இந்தப் பிரபஞ்சமே அரைநொடி நின்றதை போல் உணர்ந்தான் ஆதித் கிருஷ்ணா.
தேடலில் தொலைந்தேன்.!
காதலில் கரைந்தேன்.!
பிரிவில் நேசங்களை
கற்றுத் தருகிறது இந்த
காதல்!!!
காதலுடன் அவள் எதிரில்
மண்டியிடும் வேளைக்காக
காத்திருக்கும் இதயம்.!
என் இதயம் கொடுத்து
அவள் காதல் பெற காத்திருக்கிறது.!
நள்ளிரவு சூரியனை காண நினைத்தவள்
கண்ணாமூச்சி ஆடுவதேனோ.?
எங்குத் துவங்கி எங்கு முடிப்பதென்று
புரியவில்லை.!
தேடலில் தொடங்கினேன்
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்
இன்னும் தேடல் தொடரும்
காதல் கரம் சேரும் வரை.!

