Loading

 

அத்தியாயம் 17

 

“நீ இதற்கு மேல் சரிப்பட்டு வர மாட்ட. முதல்ல உன் துணி எல்லாம் பேக் பண்ணு.” எனச் சஞ்சய் கூறியவுடன் தாரைத் தாரையாகக் கண்ணீர் வடிந்தது வசுந்தராவிற்கு.

 

‘தன் வீட்டிற்கே தன்னை திரும்ப அனுப்பப் போகிறானா.? இதற்குத்தானா தன்னை விரும்பித் திருமணம் முடித்தான்.? அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது. அய்யய்யோ.! அம்மா, என்ன எல்லாம் சொல்லித் திட்டு வாங்களோ தெரியலையே.’ என நினைத்து, பயந்து மருகியவள். கண்ணீரை அடக்க முடியாமல் அப்படியே நின்றிருக்க. பெண் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதில் பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அவளை ஏறிட்டு பார்க்க, கண்ணீர் வழிந்தோடும் கண்களும், கேவல் வெளிவராமல் அடக்கும் நடுங்கிய இதழ்களோடும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவை பார்த்தவன் அதிர்ந்து.

 

“ஹேய்.எதுக்கு இப்போ, இப்படியொரு அழுக.?” என்று கேட்டபடியே அவளின் அருகில் வேகமாக நெருங்கியவன் ஒற்றை கைக்கொண்டு அவளை அனைத்த படி அவள் நாடியை நிமுர்த்தி கேட்க. ஒன்றும் பதில் கூற முடியாமல் மேலும், மேலும் கண்ணீர் வழிந்தோடியது அவளுக்கு.

“எதுக்குடி இப்ப இப்படி அழுகிற.?” என்றவன் அவள் கண்களைத் துடைத்துவிட்டு கேட்க

 

“நீங்கதானே என் துணி எல்லாம் பேக் பண்ண சொன்னீங்க.”

“ஆமா சொன்னேன்.”

“எங்க வீட்டுக்கே என்னைத் திரும்ப அனுப்ப போறீங்களா.?” எனப் பாவமாகக் கேட்டவளை பார்த்தவன்,

“உங்க வீட்டுக்கு உன்னைத் திரும்ப அனுப்பிட்டு நான் என்ன பண்றது.?அதுக்காகவா நான் உன்ன கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேன்.” என்றவன்,

 

“அதுவும் இல்லாம இனிமே, அது உன்னோட வீடு கிடையாது. இதுதான் உன்னோட வீடு புரிஞ்சுதா.?” எனக் கேட்டவனை பார்த்தவள், புரிந்ததாகத் தலையசைக்க.

“இங்கேயே உன்னை விட்டா. எங்க அம்மா கூடவே சுத்திட்டு இருப்ப. என்னைக் கண்டுக்காம. ரெண்டு நாள் கழிச்சு தான் போறதா பிளான். ஆனால் இப்போ உன்னால தான் பிளான் மாத்தி  நாளைக்கே  கிளம்புறோம்…”

“கிளம்புறோமா எங்க.?” “ஹனிமூன்க்கு மா. நீ என்ன நெனச்ச.?” என்றவனின் பதிலைக் கேட்ட பிறகே சற்று தெளிந்தாள். அழுகையும் நின்றிருந்தது. “ஹனிமூன்க்கா.?” என்று மறுபடியும் மெதுவான குரலில் கேட்க

 

“ஆமா, நீ என்னைத் தெரிஞ்சுக்கணும். நான் உன்னை நல்ல தெரிஞ்சுக்கணும். அதுக்கு தான். உனக்கு உடம்பு கொஞ்சம் பெட்டரான பிறகு போலாம்ன்னு நினைச்சிருந்தேன்.ஆனா இப்ப பிளான் உன்னால தான் மாறுச்சு. அதான், நாளைக்கே உன்னைப் பேக் பண்ணிடனும்னு முடிவு பண்ணிட்டேன்.”

 

“நீங்கச் சொல்லவே இல்லையே.?” “அதுக்கு நீ என் பக்கத்துல இருக்கணுமே. நீ தான் எங்க அம்மா பின்னாடி வால் பிடிச்சு சுத்திட்டு இருந்தியே. அப்புறம் எப்படி நான் உன்னிடம் சொல்ல முடியும்.? அம்மாவ கரெக்ட் பண்ண கூடாது அம்மா பெத்த பையன முதல்ல கரெக்ட் பண்ணனும் புரிஞ்சுதா.”என்று லேசாக அவள் நெற்றி முட்டிக் கூறியவன்.

“நாளைக்கு கிளம்புறோம். அங்க போய் நீ ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ. ஓகேவா.?”

“ரெண்டு நாள் எல்லாம் தேவைப்படாது.”எனத் தன்னை மீறிக் கூறி  இருந்தாள் மென் குரலில்.

“ஹான் என்ன சொன்ன.?”என்று அவன் கேட்ட பிறகே தான் கூறியதின் அர்த்தம் புரிந்தவள் ஒன்றும் இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்டி, அவன் குடித்து வைத்த பால் டம்ளரை எடுத்துக்கொண்டு தனக்கான பாலையும் வேகமாக அருந்திவிட்டு, அதை வைத்து விட்டு வரும் சாக்கில் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

 

“நாளைக்கு எத்தனை மணிக்குப் போகணும்.?”என உள்ளே வந்தபடியே கேட்க,

“நாளைக்கு ஒரு மணிக்குப் பிளைட். நாம வீட்ல இருந்து ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பனும்…”

“எங்க போறோம்.?”

“டெல்லிக்கு.”

“ஓஹ்.!” என்று கேட்டுக்  கொண்டாள்.

 

இதுதான் அவளின் முதல் வெளியூர் பயணம். ஆனால் ஏன் டெல்லிக்கு எனக் கேட்பாளென எதிர்பார்த்து இருந்த சஞ்சய்க்கு அவள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருப்பதைக் கண்டு

“டெல்லி உனக்கு ஓகேவா.?”

“நீங்க எங்க கூட்டிட்டு போனாலும் எனக்கு ஓகே தான். நான் இதுவரைக்கும் எந்த வெளியூருக்கும் போனதே இல்லை.” என்றவளின் பதிலில் அவன்தான் அமைதியுற நேர்ந்தது.

 

“இங்க வா.” என அழைத்தவன். ஒரு பெரிய ட்ராலி சூட் கேஸை அவள் அருகே வைத்தவன்

“நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து இதிலேயே டிரஸ் அடுக்கிடு…” என்ற படி குளியலறை நோக்கிச் செல்ல. “எத்தனை நாளைக்கு.?” என்றவளின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தவன்.

“எப்படியும் நாம திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.”

“அப்போ ஏழு டிரஸ் எடுத்து வைக்கவா.?”

“அவ்ளோ டிரெஸ் தேவைப்படாது. ஒரு நாலு எடுத்து வைப்போதும்.” என்ற படியே உதடு மடித்து புன்னகையை மறைத்தபடி குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

 

“ஏழு நாளைக்கு எப்படி நாலு டிரஸ் பத்தும்.” என யோசித்தபடியே அவன் ஏதோ ஞாபகத்தில் சொல்வதாக எண்ணியவள், அவளின் கணக்குப்படி ஏழு நாளுக்குத் துணிகளை அடுக்கி வைத்தாள். இவன் வெளி வருவதற்கும் அவள் துணிகளை அடுக்கிப் பெட்டியை மூடுவதற்கும் சரியாக இருந்தது.

 

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா.?” “வச்சுட்டேன்.”

“சரி, சீக்கிரம் தூங்கு. காலைல பதினொரு  மணிக்கு எல்லாம் நாம ஏர்போர்ட்ல இருக்கணும். சீக்கிரம் எழும்பிக் கிளம்பனும்.”

“அத்தை மாமா கிட்ட சொல்லிட்டீங்களா.?”

“நாளைக்கு சொல்லிக்கலாம்.” என்றவன், அவன் இடத்தில் சென்று படுக்க, இவளும் அவளுக்கான இடத்தில் படுத்தாள்.

 

அடுத்த நொடியே இழுபட்டு,  சஞ்சயின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

“காலைல இருந்து ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்க என்கிட்ட.”என்றபடியே அணைப்பின் இறுக்கத்தை கூட்ட பெண் அவளுக்குத்தான் மூச்சு முட்டியது.

 

பின் தன் இறுகிய பிடியை லேசாக்கி அவள் முகத்தைப் பார்த்தவன். “என்னது இது புடவை எல்லாம்.?” என்றான் ரசனையான பார்வையுடன். “இல்ல, சும்மாதான். ஆனால் அத்தை புடவை தான் கட்டணும்னு அவசியம் இல்லை. நீ வீட்டில் இருக்கிற மாதிரி சல்வார் போட்டுக்கோ அப்படின்னு சொன்னாங்க.”

“அம்மா சொல்ற பேச்சை எல்லாம் கேட்காதே. உனக்குச் சல்வார் போடப் பிடிச்சிருந்தா போடு. ஆனா அதிகமா புடவையே  கட்டிக்கோ.” என்றவனின் கைகள் அவள் இடையே மென்மையாக வருடியது. அதில் கூசி சிலிர்த்தவள் கண்களை இறுக மூடிக்கொள்ள. மூடிய விழிகளில் அழுத்தமாக முத்தமிட்டு நகர்ந்து படுத்தவன். பெருமூச்சுட்டபடி

 

“தூங்கு காலையில சீக்கிரம் எழும்பனும்.” என்ற படியே கண்மூடி கொண்டான். அவளும் அவன் சொல் பேச்சு தட்டாதவளாகக் கண்களை இறுக மூடிக் கொள்ள, உறக்கமும் சஞ்சய் விட்டுச் சென்ற வேலையை, தான் தொடர்ந்து அவளை இறுக அணைத்துக் கொண்டது.

 

இருவரும் கீழே இறங்கி வரும்போது எட்டு மணியைக் கடந்திருந்தது. ஆறு மணிக்கே எழுந்து கிளம்பிய வசுந்தரா கீழே செல்ல முற்பட்டபோது அவளைத் தடுத்த சஞ்சய்

“ரெண்டு பேரும் ஒன்னாவே கீழ இறங்கி போகலாம்.” என்று கூறிவிட்டான். எனவே அவனும் கிளம்பி வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.

பெரிய ட்ராலி சூட்கேசு உடன் இறங்கி வரும் மகன் மற்றும் மருமகளை பார்த்த அனுபமா,

“எங்கடா கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்.? சொல்லாம கொள்ளாம.” என விளையாட்டாகக் கேட்கப் பதறிப் போனவள் வசுந்தரா மட்டுமே.

 

“நேத்து முழுக்க மாமியாரும் மருமகளும் என்னைக் கண்டுக்கிட்டிங்களா.? உங்க கிட்ட நான் சொல்றதுக்கு. என்னமோ புதுசா கல்யாணம் ஆனவங்க நீங்கதாங்கற மாதிரி ஒன்னாவே சுத்திட்டு, பேசிக்கிட்டே இருந்தீங்க ரெண்டு பேரும்.”

“டேய் புதுசா வந்த மருமக நம்ம வீட்டைப் பழக வேண்டாமா?”

“வீட்ட பழக வேண்டும் தான். அதற்கு முன்னாடி கட்டுன புருஷன் என்னைப் பழகனும்.” என்றவனின் நேரடியான பதிலில் சிரித்த பிரபு அமைதியாகக் காலை உணவை உண்டு கொண்டிருந்தார்.

 

“ரெண்டு நாள் கழிச்சு தான் போகலாம்னு இருந்தேன். அவ உங்க கூடவே சுத்திட்டு இருந்தா. இது சரிப்பட்டு வராதுன்னு நேத்து மாலையே டிக்கெட் போட்டுட்டேன்.” “எங்க போறீங்க.?”

“டெல்லி. ”

“டெல்லிக்கா.?”

“ஆமா.”

“அங்க மட்டும் தானா.? அதுக்கு அப்புறம்.”

“சஸ்பென்ஸ்.” என மனைவிக்குக் கேட்காத வகையில் அம்மாவிடம் வாயசைத்துக் கூறியவனை பார்த்தவர்

“ஹ்ம்ம்… என்ஜாய்.”என்று விட்டு உணவு மேசையை நோக்கி நடந்தவர்.

 

“எத்தனை மணிக்குப் பிளைட்.?”

“மதியம் ஒரு மணிக்கு.”

“அதுக்கு எதுக்கு இப்பவே கிளம்பி வந்து இருக்கீங்க. வீட்ல இருந்து பதினோரு மணிக்குக் கிளம்புனா போதாது.?”

“டிராபிக்ல  போகுறதுக்கே ஒரு மணி நேரம் ஆகிடும்.”

“சரிடா அப்பக் கூடப் பத்து மணிக்குக் கிளம்பினா போதுமே.?”

“அவங்க வீட்டுக்குப் போயிட்டு. அவங்க அப்பா அம்மா கிட்டயும் சொல்லிட்டு கிளம்பலாம்னு பிளான்…”

“பரவாயில்லையே. கல்யாணம் முடிஞ்சதும் என் பிள்ளைக்குக் கூடப் பொறுப்பு வந்துடுச்சு.” என்று கேலி செய்த அம்மாவைப் பார்த்தவன்

 

“உங்க பையன் எப்பவுமே பொறுப்பு தான். உங்க கண்ணுக்குத் தான் அது தெரியல…” என்ற படியே காலை உணவை உண்ண ஆரம்பித்தான் மனைவியுடன் சேர்ந்து.

“நீங்கச் சாப்டீங்களா.?” என அம்மாவைக் கேட்டபடி.

“அப்புறம் எப்போ கிளினிக் போறதா இருக்கீங்க.?”

“ரெண்டு நாள் கழிச்சு போறதா இருந்தேன். இப்பதான் நீ உன் மனைவிய கூட்டிட்டு ஹனிமூன் கிளம்பிட்டியே. இன்னிக்கு ஒரு நாள் விட்டுட்டு, நாளிலிருந்து போயிட வேண்டியதுதான்.”

“ஆமா, ஆமா உங்க பேஷன்ட்ஸ் வேற உங்களுக்காகக் காத்துட்டு இருப்பாங்க.?

“கட்டாயமா…” என்றார் இவரும்.

பின்பு உண்டு முடித்தவர்கள் பெற்றோரிடம் விடைபெற்றுச் சென்றார்கள் வசுந்தராவின் வீட்டை நோக்கி.

 

சஞ்சய் உடன் தன் வீட்டை நோக்கிப் பயணப்பட்டாள் வசுந்தரா. ஊருக்குச் செல்வதற்கு முன்பு அவளின் பெற்றோரிடமும் கூறிவிட்டு செல்ல வேண்டும் எனச் சஞ்சய் கூறியது பெண் அவளின் மனதில் பெரும் மகிழ்வை ஏற்படுத்தியது.

 

அன்னையோ, சகோதரிகளோ தன்னை பற்றி நினைக்கமாட்டார்கள். ஆனால் தன்னை நினைக்கும் ஒரே உயிரான தந்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பவே இவளும் ஆசைப்பட்டாள்.

இவர்கள் செல்லும்போது ரகுபதி பிரட்டில் ஜாம் தடவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர்கள் உள்ளே வருவதை பார்த்ததும் பரபரப்புடன் எழுந்தவர்

“வாங்க மாப்பிள்ளை, வா மா, வசுந்தரா.” என இருவரையும் வரவேற்றார். இவ்வளவு காலையிலேயே சொல்லாமல் வந்திருக்கிறார்களே என்ற சிந்தனையுடன். இவர்களின் குரல் கேட்டு உள்ளே இருந்த கோகிலாவும் வெளிவந்து

“வாங்க மாப்பிள்ளை, வா வசுந்தரா நல்லா இருக்கியா.?” எனக் கேட்டபடியே அவர்களைச் சோபாவில் அமர வைக்க. நேற்று துவைத்த துணிகள் மடிக்கப்படாமல் சோபாவில் மூட்டையாகக் குவிந்திருந்தது. அதை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுக் கணவனை அமர வைத்தவள்.

“என்னப்பா பிரட் சாப்பிடுறீங்க.?”எனத் தந்தையை பார்த்துக் கேட்க.

“இதாவது வாய்ச்சதே.”  என மெதுவாக முணுமுணுத்தார் அவர்.

“என்னாச்சுப்பா.?” என அவள் மறுபடியும் கேட்க

 

“உங்க அம்மாக்கு காலைல எந்திரிச்சு சமைக்க முடியலையாம். அதான் பிரட் ஜாம் வச்சு ஒப்பேத்திக்கிட்டு  இருக்கேன்.” என்றவரின் பதிலில் பாவமாகத் தந்தையை பார்த்தவள். அன்னையையும் திரும்பிப் பார்க்க “நான் என்ன வயசு வந்த சின்னக் குமரியா.? இழுத்துப்போட்டு எல்லா வேலையும் செய்வதற்கு. அதுவும் கொஞ்ச வருஷமா எந்த வேலையும் செய்யாம இப்போ உடம்பும் முடிய மாட்டேங்குது.” என்று மருமகன் முன்னிலையில் தன்னை மறந்து புலம்பி இருந்தார்.

 

“ஏன் அத்தை, வசந்தி தான் இருக்காளே.?” எனச் சஞ்சய் கேட்க “நானே காலேஜ் போயிட்டு இருக்கேன். நான் எப்படி மாமா வேலையையும் செய்ய முடியும்.?”எனக்  கேட்டாள்.

“இதுக்கு முன்னாடி உங்க அக்கா தானே எல்லாம் செஞ்சா.? அப்ப அவளுமே காலேஜ், ஸ்கூல் எல்லாம் போயிட்டு தான இருந்தா.?” எனக் கேட்க. தான் கூறாமலேயே கணவன் தன் வீட்டின் நிலையை நன்கு அறிந்து வைத்திருக்கிறான். அதோடு அல்லாமல் இந்த வீட்டில் தன் நிலை என்ன என்பதையும் சேர்த்தே அனுமானித்திருக்கிறானென அறிந்தவள் சங்கட முற்றவளாக,

 

“நான் ஏதாவது உங்களுக்குச் செய்து தரவாப்பா.?” எனக் கேட்க

“இல்ல மா வேண்டாம். நீயே முதல் தடவை இப்பதான் வந்திருக்க மாப்பிள்ளை கூட வீட்டுக்கு. உக்காரு.” எனக் கூற

“இருக்கட்டும் பா.” என்றவள் வேகவேகமாக அங்கங்க சிதறி கிடந்தவைகளை ஒதுக்கிவிட்டு துடைப்பத்தை எடுத்து வீட்டைச் சுத்தமாகக் கூட்டி முடித்தவள். அடுப்படியில் சென்று பார்க்க இரவு சமைத்த பாத்திரங்கள் சிங்கில் குவிந்து கிடந்தன. அவைகளை கழுவுவதற்கு சென்றவளை “வசந்தரா.” என்று கணவன் அழைக்கும் குரல் கேட்டது.

 

“நாம எதுக்கு வந்திருக்கும்னு தெரியுமில்ல.”என்ற கணவனைப் பார்த்தவள்

“இல்ல பாத்திரம் மட்டும் கொஞ்சம் இருக்கு, கழுவி வச்சிடுறேன்.” “வேண்டாம் மா, பாத்திரம் கழுவுறதுக்கு ஒரு ஆளு சேர்த்து இருக்கேன். அவங்க வருவாங்க. நீ உட்காரு. வந்தவங்களுக்கு ஒரு காப்பியாவது போட்டுக் குடுப்பியா.?”  என மனைவியைப் பார்த்துக் கேட்க. அவர் முகத்தைக் கடுகடு என வைத்துக் கொண்டே சமையலறையை  நோக்கிச் செல்ல முயல,

 

“இல்ல வேண்டாங்க மாமா. வரும் போதுதான் சாப்பிட்டு வந்தோம்.நாங்க ஊருக்குப் போறோம். அதை உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு தான்  வந்தோம்.”

“அப்படிங்களா மாப்பிள. எந்த ஊருக்கு.?”

“என்ன மாமா ஹனிமூனா.?” என்று வேகமாகக் கேட்டிருந்தாள் வசந்தி. “ஆமா.” என்று அவளிடம் தலையசைத்தவன் மாமனாரை பார்த்து,

“டெல்லிக்கு.”என்றான்

“எதுல போறீங்க மாமா.”

“பிளைட்ல.”  என்றவனின் பதிலில் “பிளைட்டா.!” என ஆச்சரியப்பட்டுக் கொண்டாள் சின்னவள்.

 

“சந்தோஷமா போயிட்டு வாங்க. ஒரு காபி குடிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது. குடிச்சிட்டு போகலாம்.” என்றவர் மனைவியைப் பார்க்க அவர் சமையலறை உள் சென்றார் மகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே.

அன்னையின் பார்வையை புரிந்தவளாக அவளும் எழுந்து சென்றாள் தாயை பின்பற்றி.

பின்னே வந்த மகளைப் பார்த்தவர்

 

“எப்படி இருக்க.? உங்க மாமியார் வீட்ல உன்ன நல்லா  பார்த்துக்கிறாங்களா.?” என கேட்ட படியே, அவள் பதில் கூறுவதற்கு கூட அனுமதிக்காமல், கையில் எடுத்த பால் பாத்திரத்தை அவள் கைகளில் கொடுக்க.வேகமாக அதை வாங்கியவள் ஒரு துணி கொண்டு அடுப்பைச் சுத்தமாகத் துடைத்துவிட்டு காபி போடுவதற்கு ஆயத்தமானாள்.

 

“அப்புறம் நான் சொன்னது ஞாபகம் இருக்கா.?”

“எதைப் பற்றி மா.?”  எனக் கேட்டாள்.ஒன்றும் புரியாமல். “உன்கிட்ட நான் என்ன சொல்லி அனுப்பினேன்.? உன்னை இவ்வளவு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கிறது சும்மா இல்ல. இப்போ உன்னோட சம்பளமும் கிடையாது. அதனால உன்னால முடிஞ்ச பணத்தை மாச, மாசம் எனக்குக் கொடுக்கணும்னு சொன்னேனே.”

“நான்தான் இப்ப வேலைக்குப் போகலையே.?”

“வேலைக்குப் போகலைன்னா என்ன.? பணக்கார வீட்ல தானே கல்யாணம் பண்ணி போயிருக்க. உன் புருஷன் கிட்ட கேளு. கைச்செலவுக்குக் காசு கொடுங்கன்னு. அதைக் கொண்டு வந்து எனக்குக் கொடு. இல்ல, இல்ல நீ வீட்டுக்கு எல்லாம் வர வேண்டாம். உங்க அப்பா என்ன.? எதுன்னு விசாரிபாரு.? அதனால உன் தங்கச்சியோட அக்கவுண்டுக்கு அனுப்பி வச்சிடு.”என்று வேகமாகத் திட்டமிடும் அன்னையைப் பார்த்தவளுக்கு பயத்தில் நெஞ்சை அடைத்தது.

 

“அது எப்படி.?”என இவள் ஆரம்பிக்கும் போதே

“இப்ப ஏதாவது பணம் வச்சிருக்கியா.?” எனக் கேட்டவர், “முதல்ல ஒரு வாஷிங் மெஷின் வாங்கணும். என்னால துணியைத் துவைக்க முடியல. உன்கிட்ட பணம் இருந்தா கொடுத்துட்டு போ.” என்றதற்கு அவள் பதில் கூறும் முன்பே இவர்களைத் தேடி உள்ளே வந்திருந்தார் ரகுபதி.

“உன்னைக் காபி போடச் சொன்னா, நீ அவளை வேலை வாங்கிட்டு இருக்கியா.? அது தெரிஞ்சு தான் நான் உள்ளே வந்தேன்.” என்றவரிடம் “பரவாயில்லை பா.”என்றவாறு நான்கு டம்ளர்களில் காஃபியை ஊற்றியவள் வரவேற்பறைக்கு வருவதற்கு முன்,

 

“அப்பா ஒரு வாஷிங் மெஷின் வாங்கிடுங்களேன். எல்லா துணியையும் கையில துவைக்கணும்னா பாவம் அம்மாவால முடியாது.”

“ஏன்மா.? நீ அப்படித்தானே இத்தனை வருஷமா செய்த.”

“என்னால முடிஞ்சது பா. நான் செய்தேன். அவங்களால முடியல. ப்ளீஸ் பா.” என்றவளின் கண்களில் என்ன பார்த்தாரோ

 

“சரி சீக்கிரம் வாங்க பார்க்கிறேன்.” என்ற படி அவளோடு வெளியில் வந்தார். கணவன் கூட இருப்பதால் மகளிடம் பணம் எதையும்  பெறவோ, கேட்கவோ முடியவில்லை

கோகிலாவினால்.

 

காபியை அருந்தி முடித்தவர்கள் அவர்களிடமும் விடைபெற்றுச் சென்றார்கள் காத்திருந்த காரில். விமான நிலையத்தை நோக்கி.

 

தொடரும்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்