
மரம் தேடும் மழைத்துளி – 26
சரவணன், ரவியின் இழுவைக்கு ஈடுகொடுத்து நடந்து கொண்டிருக்கிறானே தவிர, சுயமாய் பெயர்ந்து செல்லவில்லை.
தன்னுடைய தகப்பனின் சொல்லுக்காக மட்டும் சரவணன், ருக்மணிக்குத் தாலி கட்டவில்லை. தன்னுடைய அண்ணன் மகன் தகப்பனை இழந்துவிட்டான் என்ற பரிவால், பார்க்கப் போன சித்தப்பனால் தர்மசங்கடம் வந்துவிட்டது என்ற அவச்சொல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அதேபோல, எதிர்காலத்தில் ருக்மணிக்கு யாராவது வாழ்க்கை கொடுக்க முன்வந்தால், அது தன்னுடைய அண்ணன் மகனின் மனநிலையை முழுமையாகப் பாதித்துவிடும் என்ற பயமும் அவனுக்குள் இருந்தது. ‘அப்போது அடைக்கலம் கொடுத்தாலும், அவனுடைய தாய் மீதான தவறான சிந்தனையை யாராலும் மாற்ற முடியாதே’ என்ற வருத்தமும் அவனை இப்படிச் செய்ய வைத்துவிட்டது.
அதேபோல தனக்கும் திருமணம் நடந்துவிட்டால், வரப்போகும் மனைவி தனது குழந்தை பாசத்தை இயல்பாக எடுத்துக்கொள்வாள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ருக்மணியோடு தன்னை இணைத்துப் பார்த்து, யாராவது குதர்க்கமாக யோசித்துவிட்டால் அது பேராபத்து என்ற ஒட்டுமொத்த விளைவுகளையும் யோசித்துப் பார்த்தவன், யாரோ ஒருவன் வாழ்க்கை கொடுக்கட்டும் என்று காத்திருக்காமல், தானே கொடுக்கத் துணிந்துவிட்டான். ஆனால், அதற்குப் பிறகு தன்னுடைய நிலையை யோசிக்க மறந்துவிட்டான். (ருக்மணி இவனை முழுமையாக ஏற்றுக் கொள்வாளா? இப்பொழுதும் தினேஷுக்கு இவன் தகப்பன் இல்லையே!)
“தாலியைச் சுலபமாக் கட்டிட்டேன். ஆனா, இவள் என்னை குடும்பத்துக்குள்ள சேர்த்துக்க மாட்டான்னு சிந்திக்க மறந்துட்டேனே!” என்று சரவணன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், ருக்மணியின் வீடு வந்துவிட்டது.
சுப்புலட்சுமி, “மாரி… பிள்ளைகளை ஒண்ணா நிப்பாட்டு, ஆரத்தி எடுத்துடுவோம்” என்றதும், கூனிக் குறுகி நின்று கொண்டிருந்த ருக்மணி படாரென்று நிமிர்ந்து பார்த்து, சுப்புவை முறைத்தாள்.
ரவி ருக்மணியிடம், “என்ன அப்படிப் பார்க்குற? சும்மா கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டாதான் தப்பு. இப்போ ஆரத்தி எடுத்தால்தான் மாப்பிள்ளை உனக்குத் தாலி கட்டியிருக்கிற விஷயம் நாலு பேருக்குத் தெரியும். அதுக்காகத்தான் அம்மா ஆரத்தி எடுக்கணும்னு சொல்லுது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அண்டை வீட்டார்கள் ஓரிருவராக வந்தார்கள். அதனால் எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் ருக்மணி தலைகவிழ்ந்து கொண்டாள்.
நடந்த அத்தனைக்கும் முழுமுதற் காரணமான கனகம் முன்னே வந்து, மாரியம்மாளிடம், “என்ன அக்கா… எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க?” என்றாள்.
சுப்பு முந்திக்கொண்டு, “வாங்க தாய்களா… எங்க ருக்குவுக்கும் இந்தத் தம்பிக்கும் கல்யாணம் நடந்துச்சு. ஆரத்தி எடுக்கணும்னு நிப்பாட்டி வச்சிருக்கோம். நானும் என் தங்கச்சியும் அதுக்குத் தகுதி இல்லாதவங்களாய்ப் போயிட்டோம். நீங்க யாராவது ஒருத்தர் ஆரத்தி கரைச்சுச் சுத்திப் போடுங்கம்மா” என்று கனகத்திடமே பொறுப்பைக் கொடுத்தாள்.
கனகம் அதிர்ச்சியோடு ருக்குவைப் பார்க்க, அவளது கழுத்தில் புதிதாய்க் கட்டியிருந்த தாலி தொங்கிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “ரொம்பச் சந்தோஷமா இருக்கு அக்கா… இந்த வயசுல இப்படி நடக்கக்கூடாதது நடந்துடுச்சேன்னு நாங்க எல்லாம் ரொம்ப வருத்தப்பட்டோம். இப்பதான் நிம்மதியா இருக்கு. தம்பியோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்” என்றாள்.
பக்கத்து வீட்டு முத்துலட்சுமி, “நானும் இது எப்படியும் கல்யாணத்துலதான் முடியும்னு எதிர்பார்த்தேன். அது மாதிரியே நடந்துருச்சு” என்று குத்தலாகவும், அதே நேரத்தில் நல்ல உள்ளத்தோடு சொல்வதைப் போலவும் சொன்னாள்.
பக்கத்து வீட்டுத் தங்கம், ‘அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலியாகும்னு காத்திருந்த பையன்… எப்படித் தாலி கட்டியிருப்பான்னு தெரியலையே?’ என்ற யோசனையோடு, “மாரியக்கா, தம்பி வீட்டுல இருக்குற எல்லாரும் சம்மதிச்சுதான் இந்தக் கல்யாணம் நடந்துச்சா?” என்று கேட்டாள்.
அதற்கு ரவி வேகமாக, “மாப்பிள்ளை வீட்டுல இருக்குற எல்லாருக்கும் முன்னாடி வச்சுதான் கல்யாணம் நடந்துச்சு. ஆனா வீட்டுக்குள்ள சேர்த்துக்கல. அதனால நாங்க அழைச்சிட்டு வந்துட்டோம்” என்றான்.
முத்து அசட்டுச் சிரிப்போடு, “அதுவும் சரிதான்… ஒரு புள்ள குட்டி ஆச்சுன்னா எல்லாம் சரியாப் போகும்” என்றாள்.
சுப்பு, “என்ன தாயி… ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டு மத்ததைப் பேசுவோம்னு பேசாமல், வாசலிலேயே நிப்பாட்டி வச்சு 1008 கேள்வி கேக்குறீங்க?” என்றாள்.
கனகம், “இந்தா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வாரேன் அக்கா…” என்று தன் வீட்டுக்குள் சென்று, மஞ்சளும் குங்குமமும் ஒன்றாய்க் கலந்த நீரில், ஒற்றை வெற்றிலையையும் அதன் மேல் சூடத்தையும் வைத்துக்கொண்டு வந்தாள்.
ரவி, சரவணனை இழுத்து ருக்மணியின் அருகில் நிறுத்தினான். ருக்மணி நெருப்பாய் ரவியைப் பார்த்தாள். சுப்பு தன் கையில் வைத்திருந்த குழந்தை தினேஷை ருக்மணியின் கையில் கொடுத்தாள். மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் ருக்மணி.
கனகம் சூடத்தைக் கொளுத்தி, ருக்மணி சமேத சரவணனுக்கு ஆரத்தி சுற்றினாள்.
குதர்க்கம் பிடித்த முத்து, “விரும்பித் கட்டிக்கிட்ட இரண்டு பேரும் எதுக்கு வீராப்பு காட்டிக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கமா மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கீங்க? சிரிச்ச முகமா இருங்க” என்றாள்.
ருக்மணிக்குக் கூடி நின்று பேசும் ஒவ்வொருவருடைய வார்த்தையும் கூரிய முள்ளாய்த் தைத்தது.
அதே வீதியில் சில நல்லவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தங்கலட்சுமி டீச்சர், கூட்டத்தைப் பார்த்துவிட்டு ருக்மணியின் வாசலுக்கு வந்தார். “எதுக்காக முத்து எல்லாரும் கூட்டமா நிக்கிறாங்க?” என்றபடி கூட்டத்திற்குள் வந்தார்.
முத்து, “நம்ம ருக்குவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு டீச்சர்…” என்றாள்.
“நல்ல விஷயமாச்சே… மாப்பிள்ளை யாரு?” என்று கேட்டுக்கொண்டே ஆரத்தி சுற்றுபவர் அருகில் வந்து பார்த்தார்.
சரவணனுக்குப் பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த தமிழ் ஆசிரியை தங்கலட்சுமி, சரவணன் முகத்தைப் பார்த்தவுடன் சந்தோஷமானார்.
சரவணன் மரியாதை நிமித்தமாக, “டீச்சர்…” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான்.
தங்கலட்சுமி, “வாழ்த்துகள் சரவணா… இந்தச் சின்ன வயசுலயே எவ்வளவு மெச்சூர்டா ஒரு டிசிஷன் எடுத்திருக்கே! உன்னோட நல்ல மனசுக்கு நீ ரொம்பவே நல்லா இருப்பப்பா…” என்றார்.
சரவணன் வராத புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “நன்றி டீச்சர்…” என்றான்.
தங்கலட்சுமி, ருக்மணியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, “சரவணனைக் கட்டிக்கிறதுக்கு நீ பூ எடுத்துப் போட்டுப் புண்ணியம் செய்திருக்கணும் ருக்கு. அப்படி ஒரு புண்ணியப் பயன்தான் இன்னைக்கு உனக்குக் கிடைச்ச வாழ்க்கை. எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா. நீங்க ரெண்டு பேருமே என்கிட்ட படிச்சவங்கதான். அந்த வகையில ரெண்டு பேருமே நல்ல குணம் உள்ளவங்க. இன்னைக்கு வாழ்க்கையில ரெண்டு பேருமே ஒண்ணா சேர்ந்து இருக்கீங்க. நீங்க நல்லா இருப்பீங்க” என்று மனதார வாழ்த்தினார்.
தங்கலட்சுமியின் ஆறுதலான வார்த்தைகள் ருக்மணிக்கு அழுகையை வரவழைத்துவிட்டன.
தங்கலட்சுமி, “அழாதேடா அம்மா… அழுகாதே. உன்னோட மனநிலை என்னன்னு எனக்குத் தெரியும். இந்த வாழ்க்கை உனக்கு ரொம்ப அவசியம். அதைவிட உன்னைச் சரவணன் நல்லாப் பார்த்துப்பான். அந்தச் சந்தோஷத்துல, இன்னைக்கு வேண்டாதவனா உன் பக்கத்துல நிக்கிற சரவணனை, நீயே யாருக்கும் விட்டுக் mạngூடாதுன்னு நினைப்பே. அன்னைக்கு கண்டிப்பா நான் சொன்ன இந்த வார்த்தை உன்னோட நினைவுக்கு வரும். நீ வேணா பாரேன், நீ ரொம்ப நல்லா இருப்படா” என்று அவர் வாழ்த்துக் கூற, சுற்றி நின்று கொண்டிருந்த பெண்கள் இழிவாக முகபாவனை காட்டிக்கொண்டு, சிறுநகை புரிந்து கொண்டிருந்தார்கள்.
“டீச்சர், உள்ள கூட்டிட்டுப் போங்க. பொண்ணு மாப்பிள்ளைக்குப் பால் பழம் கொடுக்கணும்” என்று இடையில் புகுந்து எடக்கு செய்தாள் கனகம்.
தங்கலட்சுமி, “ஆமாம்மா… கனகம் சொன்னது கரெக்டா இருக்கும். பால் பழம் கொடுக்கணும், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணனும்… இன்னும் எவ்வளவு வேலை கிடக்கு! எதுக்குக் கூட்டம் போட்டு வழிமறிச்சுப் பேசிக்கிட்டு இருக்கணும்? வாங்க எல்லாரும் கிளம்புவோம்” என்று முதல் ஆளாய் ஒதுங்கிக் கொண்டார்.
மற்றவர்களும் டீச்சரோடு சேர்ந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டார்கள். ருக்மணி அனைவரையும் முந்திக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
மாரியம்மாளுக்குச் சரவணன் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு. இப்போது மகளுக்கு வாழ்க்கை கொடுத்த மகான் என்ற உயர்ந்த நிலையில் அவரை மனதில் வைத்துக் கொண்டாடினார். திகைப்போடு நின்று கொண்டிருந்த சரவணனை, “வாங்க தம்பி… உள்ள வாங்க” என்று மகிழ்வோடு வரவேற்றார்.
ரவி இப்போதும் சரவணன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
சுப்பு, “காலையிலேயே திதி கொடுக்கப் போறோமேன்னு சோறு வடிக்காமல் வந்துவிட்டேன் மாரி. நீயும் சமைச்சிருக்க மாட்டேல்ல? எங்களுக்கும் சேர்த்துச் சோத்தைப் பொங்கு, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடுவோம்” என்றாள்.
மாரியம்மாள், “ஆமா அக்கா… வா, யாரும் இன்னும் சாப்பிடலையே” என்று சமைக்கத் தொடங்கினாள்.
ருக்மணி குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு, “இங்கே என் வயிறு கொதிச்சுக்கிட்டு இருக்கு! உங்களுக்கு உலையைக் கூட்டி சோறு வடிச்சு, ஊருக்கெல்லாம் பந்தி வைக்கணுமாக்கும்? எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு நான் என்ன செய்வேன்னே தெரியாது. மரியாதையா ரெண்டு பேரும் ஓடிப்போயிருங்க” என்று தன் தாய்மார்கள் இருவரையும் விரட்டினாள்.
மாரியம்மாள், “என்னடி ரொம்பத்தான் பேசுறே? அப்படி நாட்டுல நடக்கக்கூடாத ஒண்ணா நம்ம வீட்டுல நடந்துடுச்சுன்னு இந்தத் குதி குதிக்கிறே? ஊருக்குள்ள இருக்குற ஒவ்வொரு கதையைக் கேட்டுப் பாரு. புருஷன் உசுரோட இருக்கும்போதே இன்னொருத்தனை கூட்டிட்டு ஓடிப்போயிருவாளுங்க. அதை அந்த நிமிஷம் பேசிட்டு அடுத்த நிமிஷம் மறந்து போயிருவாளுங்க. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதை எல்லாரும் நினைச்சுக்கிட்டேவா இருக்காங்க? பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டதா அர்த்தமில்லை. உனக்கு மட்டும்தான் கோபம் வருமா? எனக்கும் கோபம் வரும்டி! நீ நான் சமைச்சதைச் சாப்பிடாதே, எங்களுக்கெல்லாம் பசிக்குது நாங்க சாப்பிடுறோம், வேடிக்கை பாரு” என்று சொல்லும்போது குழந்தை தினேஷ் அழுதான். “புள்ள அழுகுது, போய் பாலைக் கொடுத்துப் படுக்க வை. வந்துட்டா நாட்டாமைத்தனம் பண்ண!” என்று திட்டிவிட்டு சமையலில் கவனம் செலுத்தினார்.
சிறிது நேரத்தில் வீட்டு வாசலில் லட்சுமியும் சுந்தரியும் வந்து நின்றார்கள்.
லட்சுமி, “வீட்டுல எவடி இருக்கா? வெளிய வாங்கடி!” என்றாள் சத்தமாக.
மாரியம்மாள் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்தார். “வாங்க மதினி… வா தாயி சுந்தரி.”
சுந்தரி, “நாங்க உங்க வீட்டுல வந்து விருந்து சாப்பிட வரல. எங்க அண்ணனைக் கூட்டிட்டுப் போக வந்திருக்கோம். அவனை வெளியே அனுப்புங்க” என்றாள்.
மாரியம்மாள், “வீட்டுக்கு உள்ள வந்து பேசுங்க மதினி” என்றார்.
லட்சுமி, “ஏய் நிறுத்துடி! வார்த்தைக்கு வார்த்தை மதினினு கூப்பிடாதே, எரிச்சலா இருக்கு. அந்த மானங்கெட்ட பையன் உன் மகளுக்குத் தாலி கட்டிட்டா உறவு சொல்லி கூப்பிடுவியோ? கூப்பிடுடி அந்தப் பொசகெட்ட பயலை!” என்று கத்தினாள்.
வெளியில் லட்சுமியின் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள் இருந்த ரவி, சரவணன் மற்றும் சுப்புவும் விழுந்தடித்து ஓடி வந்தார்கள்.
அதேபோல தெருவில் இருந்த சிலரும் வேடிக்கை பார்க்க ஓடி வந்தார்கள்.

