Loading

சாதுர்யா ரங்கனின் மிரட்டலில் இப்போது நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டாள். காதல் வாழ வைக்க… வீழ வைக்க அல்ல என்று அவளுக்கு ஒருவாறாக புரிய ஆரம்பித்துவிட்டது. அத்தானின் பாரா முகம் மனதுக்குள் பாரமாய் அழுத்தினாலும் அவனுக்கும் இதே பிரிவு தானே… அவன் மட்டும் என்னை விட்டு நிம்மதியாக இருக்கிறானா என்ன என்று தனக்குள்ளே கேள்வி பதில் நடத்திக்கொண்டாள்.

இருவருக்குமே மனதில் வெறுமை பரவும் பொழுது அவர்களுக்கே உரிதான அந்தரங்க சீந்தல்கள், காயாத முத்தத்தின் எஞ்சியிருக்கும் எச்சில் ஈரம் தான் ஆறுதல். அவற்றை நினைத்து மனதில் உற்சாகம் எழ மெல்லிய நகையுடன் அடுத்த விஷயம் நோக்கி பிராயாணம்.  சாதுர்யா சொன்னபடிக்கு சிவில் சர்வீஸ் எழுத தன்னை தயார் செய்ய ஆரம்பித்தாள். மனம் கொஞ்சம்

சஞ்சலத்திலிருந்து மீண்டது. பெரும்பாலும் கல்லூரி நூலகம் அவளை விழுங்கி கொண்டது. இத்தனை பொக்கிஷங்கள் படிக்க என்று மலைத்துபோனாள்.

 

பொருளாதாரமும் அரசியல் சார்ந்த சமூகமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று  பிணைந்து செல்கிறது, இந்தியாவின் தற்போது உள்ள அரசியல் நிலைக்கும் முந்தைய நிலைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் படிக்க தொடங்கியவளுக்கு உலக அளவிலான பொருளாதாரமும் அரசியல் சூழ்நிலைகளும் இந்தியாவுடனான ஒப்பீடுகளும் இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டின.

சமூகம் என்பதில் பெண் ஒதுக்க பட முடியாது. பெண்களின் நிலை பற்றிய தொகுப்புகளையும் அவள் விட்டு வைக்கவில்லை.

 

அவள் எங்கோ இழுத்துபட அவற்றின் போக்கில் நீந்துகிறாள். தான் ஆட்சியில் இருந்தால், இவற்றை சரி செய்வேன். அப்படி இப்படி என ஆயிரம் யோசனைகள்.

 

ஆட்சிகட்டிலில் அமர்வது அவ்வளவு சுலபமா?ஆனால்…

 

 

எப்படியும் தேர்வுக்கு தயாராகியே தீர்வது என்னும் உறுதியில் நின்றாள் சாதுர்யா.

அவளின் பிடிவாதம் வீட்டினர் எல்லோருக்கும் தெரிந்ததே! படிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டதால் மற்றவர்களுடன் பேசும் நேரம் எல்லாம் குறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒரு முறையாவது அம்மா அப்பாவிடம் பேச விடும் பெண்  இப்போதெல்லாம் பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் அழைக்கிறாள். எப்படியும் தன் அண்ணன் மகனுக்கு இவளைத் திருமணம் செய்து அனுப்பி விடும் மனநிலையில் இருக்கும் மாலதிக்கு இவள் இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்வு எழுதுவதில் கூட எந்த விருப்பமும் இல்லை. வெங்கடேசனுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான் என்றாலும் கூடவே மாலதியின் நினைப்பில் தன் எண்ணங்களை சொல்வதில்லை.

ஆனால் பெற்றோர்கள் இருவருக்குமே பெண் அடிக்கடி தங்களிடம் பேசுவது இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம். அவளை தங்களுடனேயே வைத்துக் கொள்ளலாம் என்றால் அவள் இங்கு வருவதற்கு தயாராக இல்லை.  வெளிநாடு செல்ல முடிந்தால் என ஏங்கிய மனம் இப்போது பெற்ற பெண் அருகில் இல்லாமல் இதெல்லாம் என்ன என்று யோசித்தது இருவருக்குமே.

பேத்தி உடன் இருந்தால் வீட்டின் பெரியவர்களுக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கும் என்ற நினைப்பில் தான் வெங்கடேசன் தன் பெற்றோருடன் தன் மகள் மூன்று நான்கு வருடங்கள் இருக்கட்டும் என்று சம்மதித்தார்.

 

 பாட்டி -தாத்தா இருவரின் செல்லத்தில் சாதுர்யாவின் பிடிவாத குணங்களும் வளர்த்துவிட்டது. மாலதியின் ஒரே ஆறுதல் ரங்கன் தற்போது இந்தியாவில் இல்லை என்பது மட்டுமே! அவள் மனம் ஏதேதோ புரியாத மொழிகளை சொல்லுவது காரணமாக இருக்கலாம். பெற்றவள் ஆயிட்டே!

 

சாதுர்யா ஒருமுறை தில்லிக்கும், இன்னோர் முறை சென்னைக்கும் தாத்தா துணையுடன் சென்று வந்தாள் பயிற்சி வகுப்புகள் பற்றி விசாரிக்க. தில்லியில் வகுப்புகள் நன்றாக இருந்தாலும் தாமுவின் முகம் இறங்கி விட்டது. அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்வரை சாதுர்யா தங்களுடன் இருப்பாள் என்று நினைத்திருந்தார் அந்த முதியவர்.

 

சட்டென்று கண்டுகொண்ட பெண் ‘சென்னை என்றால் நினைத்த போது ஸ்ரீரங்கம்  வர முடியும் தாத்தா, நா சென்னையிலேயே படிக்கிறேன்’ என்று விட்டாள்.

 ஆனால் எனக்கு அவள் டெல்லி செல்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

 

 அவள் படித்திருந்த புத்தகங்கள் மூன்றாம் வருட இறுதி தேர்வுகள் சமயத்தில்  அவளுக்கு   பெரிய அளவில் உதவி செய்தது. ஒவ்வொரு விஷயங்களையும் ஆழ்ந்து கற்கும் திறனை வளர்த்துக் கொண்டிருந்தாள் பெண். நுண்ணிய அறிவுதிறன் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. தங்களுக்கு இதெல்லாம் இருக்கிறது என்று தங்களைப் பற்றிய நல்லவை கூட அறிந்து கொள்ளாத மனிதர்கள் தான் அதிகம். சாதுர்யா தனது திறமைகளை மீண்டும் தூசி தட்டி எழுப்புவதில் மும்முரமாகி விட்டாள் . ரங்கனுடன் கூட முன்புபோல் அவளால் பேச முடியவில்லை. ஆனால் ரங்கனுக்கு இவளின் நடத்தையில் உள்ள மாறுதல்கள் தாத்தாவின் மூலம் தெரிந்ததால் அவளின் மனோநிலையை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

 காதல் என்னும் மலரின் நுண்ணிய வாசனையில் மனம் முழுவதும் நறுமணத்தில் இருக்கச் செய்யும் பொழுது அதை வெளியே காண்பிக்காமல் மறைப்பது பெரும் அவஸ்தை. அதை மனதிற்குள் பூட்டி கொண்டு மகிழ்ந்தாலும் கூட    வெளியே யாராவது கண்டு பிடித்து விட்டால் என்ற பயம் வேறு ஆட்டிப்படைக்கும். இதற்கு நடுவில் வெறும் வாசம் மட்டுமாய், காதலனும் காதலியும் பிரிந்து இருக்கும் தருணங்கள் அது வெறுமையின் உச்சம்.உயிர் வரை கொல்லும்.ஆனால் அவற்றையெல்லாம் கடந்து வந்து தான் தீர வேண்டும். வெறும் காதல் மட்டும் என்றும் சோறு போடாது. காதல் என்னும் உணர்வு போல பசி,தாகம், சமூக நிலை போன்ற உணர்வுகளின் தாக்கமும் அதிகம். வயிறு பசிக்கும் பொழுது காதல் என்றுமே தலை தூக்கப் போவதில்லை.

கைக்கும் வாய்க்கும் தகராறு வந்துவிட்டால் காதல் ஒரு காத தூரம் ஓடிவிடும்.இதுதான் நிதர்சனம்…

 

உழைக்க வேண்டும். சமூகத்தில் நிலைக்க வேண்டும். இந்த சமூகத்திற்காக தன் பங்களிப்பை கொடுக்க வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து எல்லோராலும் நாட்டு சேவை செய்ய முடியாது.

ஆனால், தொழில் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் இந்த சமூகத்திற்கு தன்னால் ஆன நல்ல விஷயங்களை செய்ய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் ரங்கனுக்குள் ஆழமாய் உண்டு. வருஷம் தவறாமல் சரியான தொகையை வரிகட்டும் குடும்பம் அவர்களது.

சாதுர்யாவும் தீவிரமாக இவற்றை நம்புபவள் தான். ஆனாலும் ரங்கன் மீது அவள் வைத்திருக்கும் பேரன்பு அவளை கொஞ்சம் திசை மாறச் செய்தது,மீண்டும் சுதாரித்துக்கொண்டாள். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இருவரது நேசத்தை மாற்றபோவதில்லை. இருவரும் எப்படியும் மனதளவில் கணவன் மனைவிதான் எனும் எண்ணமே அவளை உந்தி செல்ல போதுமானதாக இருக்கிறது.

ஆனால், தன் அத்தானுக்கு தன்னிடம் எப்படி இவ்வளவு நிர்தாட்சிண்யமாக முகம் திருப்ப முடிகிறது… என்பது அவளுக்கு பெரிய அதிசயமே!

 

இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பார்த்துக் கொள்ளவில்லை… அருகருகே இருந்து காதல் வசனம் பகிர்ந்து கொள்ளவில்லை. வெவ்வேறு நாடுகளில் இருப்பு.ஆனாலும் அவர்களுக்குள்ளான காதல் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

ஒரு வழியாக பெண் சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கினாள். முதல்கட்டமாக தாத்தாவுடன் சென்னை சென்று  அகாதமியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை கவனித்துவிட்டு, தனக்கான மகளிர் விடுதியையும் சென்னையில் இருக்கும் தனது அப்பாவின் நண்பர் மூலம் தயார் செய்து கொண்டாள். எந்த விதத்திலும் பெண்ணுக்கான பாதுகாப்பில் குறைந்து விடக்கூடாது என்று வெங்கடேசனும் சரி தாமோதரனும் சரி மிகத் தெளிவாகவும் தீவிரமாகவும் இருப்பவர்கள். அந்த வகையில் தங்கள் வீட்டு பெண்ணிற்கு பக்காவாக எல்லாவற்றையும் செய்துவிட்டார் தாமோதரன். இன்னும்கூட அவரது நண்பர்கள், ஆட்சிப் பணியில் இருந்து ரிட்டையர்(ஓய்வு பெற்றவர்கள்)ஆனவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கும் பேத்தியை அழைத்துக் கொண்டு சென்ற தாமோதரன் அவளை அறிமுகப்படுத்தி, அவளது மனதில் தான் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் வராமல்,உதவிகள்  செய்ய இங்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தோன்றச் செய்து, கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு பேத்தியுடன் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டார்.

 

 சாதுர்யா சென்னை கிளம்புவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ரங்கன் வந்து அவள் முன்னே நின்றான்.

இருவருக்கும் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. மௌனமாய் ஒருவருக்கு ஒருவர் தங்களது உணர்வலைகளை கடத்திக் கொண்டார்கள். இருவருக்குமே கண்கள் நிறைந்து விட்டது. திருச்சிக்கு கூட்டிக்கொண்டு போய் அவளுக்கு வேறு ஏதேனும் தேவை இருக்கிறதா… என்று கேட்டு பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான் ரங்கன்.

 ஆம், அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திச் செல்லும் அருமை காதலியாகிய மனைவியை வழி அனுப்புவதற்கு பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் ரங்கன். இன்னும் ஜெட்லாக் கூட அவனுக்கு தீரவில்லை. ஆனாலும், அவளுக்காக தனது கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டான். ரேணுவுக்கும் அவளது அவர் கணவருக்கும் ரங்கனின்  மன நிலை புரிந்தது. அதனால் இருவரும் வேறு ஏதும் குறைகள் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளின் அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு என்பதை இருவருமே உணர்ந்திருந்தார்கள்.

 

 

 

இரண்டு நாட்களும் ரங்கனும்-சாதுர்யாவும் பகல் நேரங்களில் ஒருவரை ஒருவர் பிரியாமல் சேர்ந்தே இருந்தார்கள். திருமணத்திற்கு முன்னரான

அச்சாரங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட உணர்வுகள் பகிரப்படாத உணர்வுகளை தூண்டிவிட்டது.

ரங்கனோ ‘இன்னும் ஒரு வருஷத்தில் நான் மீண்டும் இந்தியா வந்து விடுவேன். பிறகு நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்’ என்றான் பெண்ணிடம். சொல்ல துடித்த ஆயிரம் வார்த்தைகளையும் விழுங்கிக் கொண்டவள் வார்த்தைகள் தொண்டையில் சிக்க வெறுமனே தலையை அசைத்தாள். அவளை இறுக்கி அனைத்துக்கொண்டான் ரங்கன். காவிரியின் மாலை நேர ஸலசலப்பும், நிலவின் ஒளியும் ஆள் அரவம் அற்ற தனிமையும்  அவனிடம் அவளை உன்னுள் புதைத்துக்கொள் என தூண்ட  பெண்ணை இன்னும் இறுக்கிகொண்டான். உணர்ச்சிகளை அடக்க அவன் படும் பாடு அவளுக்கும் புரிந்தது. உணர்ச்சிகள் கரை உடைப்பதற்குள் இருவரும் சுதாரித்துக்கொண்டார்கள். மணநாள் எப்போதும் எனும் ஏக்கம் அப்பட்டமாய் இருவரின் உடல் மொழியில் புரிய சிரிப்பொலியில் அவ்விடம் நிறைய வீட்டுக்கு கிளம்பினார்கள்.

 

பெண் அவளை சென்னையில் தானே கொண்டு போய் விடுவதாக ரங்கன் சொன்னாலும், தாத்தா -பாட்டி இருவருமே நீ இப்பொழுது தான் வந்து இருக்கிறாய். வயலூர் சென்று ஓய்வு எடு என்று விட்டார்கள். குடும்பத்தின் பெரியவர்களை இன்றுவரை எதிர்த்து பேசி பழக்கம் இல்லாத காரணத்தினால் அரைமனதுடன் வயலூர் நோக்கி புறபட்டான் ரங்கன் .

சென்னைக்கு கிளம்பிய பெண்ணுக்கோ ஏதேதோ எண்ண அலைகள் முட்டி மோத மௌனமாய் காரில் ஏறிகொண்டாள். தாமு அவளை சென்னையில் விட உடன் செல்கிறார்.

பெண் மனதில் ஏதோ விபரீதம் என்று தோன்ற அதை வாய்விட்டு சொல்லினாள் இல்லை. அன்னபூரணி மரணத்திற்கு வந்துவிட்டு சென்றபிறகு மனதளவில் ரத்னா  மிகவும் தனிமையை உணர ஆரம்பித்து விட்டாள். அக்கா வீட்டில் சகஜமான உறவு இல்லை. ஸ்கந்தன் உடன் தனது நேரங்களை செலவழிக்க அவள் மனம் விரும்பியது. ஆனால் பெயருக்கு கூட அங்கு சென்று குழந்தையையும் அக்காவையும் பார்த்து வர இயலாது.

 பெண் தன்னுடன் இருக்க வேண்டும் என்றுதான் சிவம், அருணாச்சலம் மூலமாக அவளை மாற்றல் கொடுத்து இங்கு சென்னை கூட்டி வந்தது. ஆனால் சிவம் மீதான வருத்தம் அவளுக்கு கொஞ்சம் கூட குறையாத காரணத்தால் தன் அப்பாவுடன் வந்து இருப்பதற்கு அவள் மறுத்து விட்டாள்.

தனியாக வேறு ஒரு இடத்தில் தனக்கான வீட்டை எடுத்துக்கொண்டு அலுவலகம் போய் வருகிறாள். இளம் விதவையான அவளுக்கு அலுவலகத்தில் ஆண்கள் பார்க்கும் பார்வை கொஞ்சம் வருத்தம் தான். நிறைய ஆண்கள் அவளது அழகை தான் பார்க்கிறார்கள். அவள் மனம்,அதில் இருக்கும் போராட்டங்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. சில ஆண்கள் பரிதாபப் படுவது போல் நெருங்கி வர முயற்சிக்கிறார்கள். அந்த சமயங்களில், இவர்களுக்கு என்ன தெரியும் எனக்கும் என் கணவனுக்குமான காதல் என்று ஏளனமாக நினைத்துக் கொள்வாள். அங்கு வேலை செய்யும் பெண்கள் இவளுடன் நன்றாக பழகுகிறார்கள் தான். ஆனாலும் ஏதோ ஒரு எல்லைகோடு. ஏதாவது விசேஷம் என்றால் இவளுக்கு அழைப்பு இருப்பதில்லை. மனம் மிகவும் சோர்ந்துபோய்… ஒரு சில சமயங்களில் சாந்தா ‘அக்கா நீ இங்க கனடா வந்து விடுகிறாயா’ என்று கேட்கிறாள் தான். ஆனால் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்கும் நிலைமையில் ரத்னா இல்லை. எவ்வளவு நாள் அடுத்தவர்  உதவியில் வாழ முடியும்… அதுவும் மத்திய அரசு வேலையில் இருக்கும் பொழுது அதை விட்டுவிட்டு செல்ல அவளுக்கு விருப்பமில்லை. எல்லாவற்றையும்விட ஏதோ ஒன்று அவளை இங்கேயே நிறுத்தி வைத்திருக்கிறது.

 இன்னொரு திருமணம் செய்து கொள்வது பற்றி ஓரிரு சமயங்களில் உமாவும், சிவனும்

அவளிடம் தொலைபேசியில் பேசினார்கள். ஆனால் அந்த வார்த்தையே அவளுக்கு கசிந்து வழிந்தது.சங்கரனுடன் கூடிக் களித்த நொடிகளை அவள் மனதில் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாள். அவற்றையெல்லாம் இன்னொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால்… அவளுக்கு குமட்டியது.

ஷங்கரனுடன் ரத்னாவுக்கு காதல் இருந்தது. அந்த காதலை இன்னொருமுறை இன்னொருவருடன்… அவளால் மனதளவில் கூட இதை நினைக்க முடியவில்லை. தெள்ள தெளிவாக திருமணம் பற்றி இன்னொரு முறை தன்னிடம் யாரும் பேச வேண்டாம்  என்று சொல்லிவிட்டாள் ரத்னா.

திடீரென சிவம் வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கியவள்  எதுவும் பேசவில்லை. ‘வேலைக்கு போகலியா’ என்று சிவன் கேட்டதற்கு விடுப்பு எடுத்திருப்பதாக சொல்லிவிட்டாள். இரண்டு முறை சாந்தா, உமாவுக்கு அழைத்து பேசினாள். ராகாயி வீட்டுக்கு சிவனுடன் சென்று அவளையும் அவள் பதினாறு வயது மகளையும் பார்த்துவிட்டு வந்தாள்.

 

நெஞ்சை அழுத்தும் துக்கம்  குறைவதாக இல்லை… தன் அக்காவுக்கும் அப்பாவுக்கும் நீண்ட கடிதம் எழுதியவள் சிவன் வீட்டு டிவி இழுப்பில் சிவனின் கடிதத்தை வைத்து விட்டு உமாவை காண அவள் இருப்பிடம் சென்றாள்…

தங்கையை கண்டவுடன் உமாவின் கண்கள் நிறைந்து போயிற்று. தங்கை அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாமல், அடிக்கடி வந்து போக கூட வழியின்றி நானெல்லாம் என்ன அக்கா… என்று உமா பலமுறை மனதில் அழுததுண்டு. இதோ இப்போது கூட குரு பெங்களூரு போய் நாலு நாட்கள் ஆகிறது. அதனால் தான் ரத்னாவை உமா வீட்டில் வைத்து உறவாட முடிகிறது. ரத்னா ஸ்கந்தனுடனேயே பொழுதை கழிக்கிறாள். பழைய கலகலப்பு இல்லை. ஆனால் பெறாத மகனுடன் கிரிக்கெட், கேரம்  என்று விளையாடி மாலையில் கிளம்பிவிட்டாள். அருணாச்சலம் தில்லி சென்றிருக்கிறார், சிவம் அவருடன். நேரே ரத்னா வீட்டுக்கு செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல், என்னை தேட வேண்டா.

நான் செல்லும் தூரம் அதிகம்… என்று சிவனுக்கு ஒரு குறுஞ்சேதி ரத்னா போனிலிருந்து வந்தது. அதை கவனிக்காமல் தூக்க மாத்திரை உபயத்தில் நித்திரா தேவி பிடியில் அவர்.

 

முன்னதாகவே தீர்மானித்த படிக்கு அலுவலகத்திற்கு இரண்டு மாத விடுப்பும் எழுதி கொடுத்துவிட்டு இதோ இங்கு ரயிலடியில்.

அவள் எண்ணம் முழுவதும் குருவிடம் மட்டுமே. அவள் கிளம்ப காரணம் அவன் மட்டும் தான்.

“சொல்லடி சிவசக்தி… பெண்களுக்கு இத்துணை துன்பங்கள் ஏன் வைத்தாய்?”

 

ரத்னா கடிதம் எழுதி வைத்துவிட்டு  சென்றவள்… அதன் பிறகு எங்கே போனாள் என்று ஒரு தகவலும் இல்லை. விடுப்பு எடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது. அது சிறிது ஆறுதல், தவறான முடிவுக்கு எதுவும் செல்லவில்லை.ஆனாலும் சிவனுக்கு பதட்டம் குறையவில்லை. ஏதோ ஒரு வகையில்  தன் பெண் தனது கண்முன்னேயே இருக்க வேண்டும் என்றுதான் தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு மாறுதல் வாங்கி கொடுத்தார். ஆனால் இன்று அந்தப் பெண் எங்கே போனாள் என்றே தெரியவில்லை… மூன்று பெண்கள் பிறந்த பொழுதும் அவர்கள் விஷயத்தில் தான் கையாளாகாத தகப்பன் தான். அவள் செல்ல காரணங்கள் தெரியவில்லை. இன்னும் அவள் வைத்து விட்டு சென்ற கடிதம் இவர் கைகளில் கிடைக்கவில்லை. கிடைக்கும்போது எப்படி உணரப் போகிறாரோ…

சென்றவளோ விடுப்பை நீட்டித்து, மாற்றலுக்கும் விண்ணப்பித்திருந்தாள். முதலில் அலுவலகம் சம்மந்தமாக யோசித்த சிவன் பின்னர் ஏனோ அந்த வழியில் தொடராமல் விட்டுவிட்டார். ஒரு வேளை  தடுமாற்றம் அவரை யோசிக்க விடாமல் செய்திருக்கலாம்.

ரத்னா சென்றதிலிருந்து உமாவுக்கும் குற்ற உணர்வு. அவள் வந்து சென்ற நாளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டி பார்த்தாள். மனம் அமைதியடைய மறுத்தது.

ரத்னா அமைதியாக சாந்தாவுக்கு மெயில் அனுப்பியவள் மேகலையா  மாநிலத்திற்கு மாற்றல் வாங்கி கொண்டாள். அதிகம் யாரும் மாற்றல் வேண்டாத இடம், ஆதலால் அவளுக்கு இலகுவாகவே அவள் கேட்டபடிக்கு கிடைத்தது அருணாச்சலம் விஷயத்தை கண்டுபிடித்துவிட்டாலும் சிவனிடம் கூட சொல்லவில்லை. இனியாவது அந்த பெண் நிம்மதியாக வாழட்டும் என்று மௌனம் காத்தார்.

காலம் எல்லா புண்களையும் ஆற்றும்.  ரத்னாவுக்கு மீண்டும் ஒரு திருமண வாழ்க்கை அமையலாம்.அவள் மனதும் அமைதி கொள்ளும் என்று நம்பலாம். காலம் அவளுக்காக வைத்திருப்பது என்ன என்பது பெரிய மர்மம்தான்!

குரு அவனுக்கு தான் ரத்னாவை நழுவ விட்ட தவிப்பு. அவன் கண் வைத்து முதல் முதலில் தப்பித்து பறந்த பறவை அவள். ஆனால் அப்பாவை மீறி அவளை தேட முடியாது.

தனது கோபம் மற்றும் கையாலாகாத்தனம் இரண்டையும் உமாவின் மீது இறக்கி வைத்தான். வாய்விட்டு இதுதான் காரணம் என்று அவன்உமாவிடம் கூற முடியாது.ஆனால் தனது ஆணாதிக்கம் காட்ட தடை ஏது?கேட்க வந்த தனது தந்தையை கூட கணவன் மனைவிக்கு இடையில் வருவதற்கு நீ யார்?

ஒருவேளை அம்மா போனப்பிறகு இவள தாரமா பாவிக்கிறிரோ… இல்ல அதுக்கும் முன்னயேவா… ஓஹோ, அதனால தான் பெத்த மகனை விட்டு இவளுக்கு உள்ளாட்சி தேர்தல் சீட் குடுத்தீரா … இந்த புள்ள எனக்கு பொறந்ததா… இல்ல ஒமக்கா எனும் சரமாரி கேள்விகளில் மொனமாய் ஒதுங்கிவிட்டார். தவமிருந்து பெற்ற மகன் இவ்வாறெல்லாம் பேசுவார் என்று அவர் கனவில் கூட நினைத்ததில்லை உமாவுக்கு உடம்பு முழுவதும் திராவகத்தில்  குளித்த உணர்வு. அவளாள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. கண்ணீரால் கூட அவளது கவலையை இறக்க முடியவில்லை. அர்த்தம் புரியாமல் வெறும் வார்த்தைகள் மட்டும் புரியும் நிலையில் குழந்தை அம்மாவின் கால்களில் தனது இரண்டு கரங்கள் கொண்டு

இறுக்கமாய் கட்டி கொண்டு அமர்ந்திருந்தான். குரு போட்டிருந்த சத்தத்தில் குழந்தை பயந்துதான் விட்டது.

 ‘என்று’ அன்னபூரணிக்கு உமா கொள்ளி இட்டாளோ அன்று முதலே அன்னபூரணி- அருணாச்சலம் இருவரையும் தனது அம்மா அப்பாவாக பாவித்து கொண்டாள். இவ்வளவு கேவலமாக இந்த உறவை கொச்சைப்படுத்துவதற்க்கு பதிலாக  தனக்கும் தன் மகனுக்கும் விஷத்தை ஊற்றி கொன்றிருக்கலாம் என்று நினைத்தாள்.  தன் தங்கை காணாமல் போன மன உளைச்சல் வேறு.

இந்த ராக்ஷஸனை எப்படி அடக்குவது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எது எல்லாம் நடக்க கூடாது என நினைத்திருந்தாளோ அது எல்லாம் வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. கைகட்டி மன உளைச்சலுடன் வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவள்முன் வேறு உபாயம் எதுவும் தென்படவில்லை. அவன் முன்பை விட பலம் ஆகிவிட்டான் என்பதில்  கிஞ்சித்தும் சந்தேகமில்லை. குருவின் நடை உடை பாவனை எல்லாமே மாறி விட்டிருந்தது. அத்தனையிலேயும் தான் அரசியல்வாதியின் மகன். தன்னிடம் பணம் அதிகம் எனும் அகம்பாவம் அதற்கும் மேலே கூட ஏதோ ஒன்று… கிட்டத்தட்ட ஒரு ரவுடி போல மாறிவிட்டது அவனது நடத்தை. அன்று வீட்டை விட்டுச் சென்ற  குரு பிறகு பத்து நாட்களுக்கு ஆள் அரவமே இல்லை.

இது வழக்கம்தான் என்றாலும் தளர்ந்து போனாள் உமா. வெறும் சதைக்காக திருமணம் முடித்து, வெளி பகட்டுக்காக குழந்தையும் பெற்று, இந்த நொடி வரை குடும்பத்தின் மீது பாசம் வைக்காமல் சுகபோக வாழ்க்கை பற்றி மட்டுமே பிராதானியம் என்று வாழும் இவர்களைப் போன்ற மனிதர்களை பூமாதேவியும் விழுங்க மாட்டாளா… என்ற ஏக்கம் அவளுக்குள்.

இரு மனங்கள் சேரும்போது இடவேண்டிய முடிச்சு அல்லவா அந்த மூன்றுமுடிச்சுகள். வெறும் கட்டில் இன்பம் துய்க்கவா இந்த உறவு?நான் துக்க கடலிலும் அவன் இன்ப கடலிலுமாக… கேள்விகள் அவளுக்குள் முட்டி மோதினாலும் பதில் தருவார்கள் தான் யாருமில்லை. இதோ அதோ என்று திருமணம் முடிந்து பதின்மூன்று  முழு வருடங்கள் முடிந்து விட்டது. நிலை இல்லாமல்தான் சென்றுகொண்டிருக்கிறது அவளது வாழ்க்கை.

அருணாசலத்தின் அரசியல் வாழ்க்கை எந்த தொய்வும் இன்றி நன்றாகத்தான் முன்னேறி விட்டார். ஆனால் இன்னும் ஏனோ மக்கள் அவருக்கு ஆளும் கட்சிக்கான வாய்ப்பை வழங்கவில்லை.  ஸ்கந்தன் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டான். இப்போது அவன் ஐந்தாம் வகுப்பு.  அசாத்திய உயரம். கண்களில் எப்போதும் ஒரு கோபம். நேர்மை… உமாவுக்கு சில சமயங்களில் தன் மகனை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். குருவுக்கு இப்படி ஒரு மகன் பிறப்பான் என்று அவள் மனதில் நினைத்ததில்லை. குழந்தை பெறவே யோசித்தாள்.

சாந்தா தனது மேற்படிப்பை முடித்துவிட்டு  வேலையில் சேர்ந்துவிட்டாள். உடன் வேலை செய்யும்

ஆஷி தோஷ் என்னும் பெங்காலி பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டுவிட்டாள். பாறுகுட்டிக்கு கனடா பழகி விட்டதால் அவளும் மகள் குடும்பத்துடன் தங்கிக்கொண்டு விட்டாள். அவளது மாதாந்திர செலவிற்கு சிவம் பணம் அனுப்பி விடுகிறார். அவரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை போய் ஒரு மாதம் இருந்து விட்டு வருகிறார். பணமும் செல்வாக்கும் கூடிவிட்டது அவருக்கு. வெளிநாட்டு பயணம் இப்பொழுதெல்லாம் அவருக்கு கடினமாக இல்லை.

இப்போதெல்லாம் சிவனுக்கும் கூட உயிர் பயம் வந்துவிட்டது. அருணாச்சலத்துடன் எப்போதும் இருக்கும் நிலையில் அவருக்கான பகைவரும் உருவாகி விட்டார்கள். அதனால் மனைவியை இங்கு அழைத்து வருவதற்கு அவருக்கு உடன்பாடில்லை. அவர் முழுநேர அரசியல்வாதியாகா விட்டாலும், அருணாசலத்தின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்கு சிவத்திற்கு உண்டு.  அருணாச்சலத்தை இருக்கும் நெருங்கிய நட்புகள் எல்லாம் இன்று வேறு வர்ணம் பூசிக் கொண்டு எதிரில் நிற்க, உண்மையான விசுவாசி சிவம் என்ற நிலைக்கு மேலே, சம்பந்தி என்ற உறவை மீறி, வயது ஏற ஏற இருவரும் கொள்ளும் வெளியில் தெரியும் அளவிற்கு பாசப்பிணைப்பு உண்டாகியிருக்கிறது. ஏறக்குறைய சிவம் சுமார் முப்பது வருடங்களுக்கு குறையாமல் அருணாச்சலத்துடன் இருக்கிறார். அருணாச்சலத்தின் குடும்ப நலத்திற்காக தனது மகளை பலி கொடுக்கும் அளவிற்கு விசுவாசி அவர். பின்னர், நெருங்கிய நட்புணர்வு வராமல் போக காரணம் என்ன?

 

 மத்திய அமைச்சரவையில், எப்படியாவது தனது மருமகளையும் ஒரு அமைச்சராக்கி விடும் வேகம் அவருக்கும் உண்டு. ஆனால் இனி தேர்தலில் இதெல்லாம் போட்டியிடுவதில்லை என்று உமா தெளிவாக சொல்லிவிட்டாள்.

 அன்றைய  பேச்சுக்களுக்கு பிறகு தனது பேரன் வளரும் வரை அவனிடம் இந்தக் கட்சியை ஒப்படைக்கும் வரை தான் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கூட பிரார்த்தனைகளும் அவருக்கு தொடங்கிவிட்டது.

என்னதான் வாரிசு அரசியல் கூடாது என்ற வாதம் வைக்கப்பட்டாலும், சில சமயங்களில் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதில் சரி தவறு என்றெல்லாம் பேசுவதற்கு இடம் இருக்காது. அவருக்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை. அறுபதுகளில் இருக்கிறார். பேரன் வளர்ந்து வரும் வரை இருப்பார் என்று நம்புவோமாக!

——————————————-

சாதுர்யா சென்னை வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. ரங்கன் பற்றிய எண்ண அலைகலோடயே படிக்கவும் பழகிக்கொண்டாள். அவள் தனது வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் தன் மனதிற்கு இனியவனை பார்த்துவிட்டாள். ஒருவேளை அவர்கள் நெருக்கமாக இருக்கும் போது சந்திக்கும் கடைசி சந்திப்பாக இது கூட இருக்கலாம்.

 ரங்கன் இப்போது ஸ்பெயினுக்கு  சென்றுவிட்டான். அத் தை வீடும், தொழிலும் அவனை முழுதாக உள்ளிழுத்து  கொண்டன. வாரத்திற்கு ஒரு முறை இருவரும் பேசிக் கொண்டார்கள். நடுவில் ஓரிரு முறை அவன் போர்ச்சுகல்லுக்கும் என்று தன் மாமன் மாமியை பார்த்து வந்தான். மாலதியும் மகிழ்ந்தாலும் கூட  அவள் நடத்தையில் எந்த மாறுபாடும் இல்லை. அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியும் மாமனின் மகள் அவனுக்கு  முக்கியம்.

 

 ஓரிரு வருடங்களில் ஸ்பெயினை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டான். அங்கேயே தங்கி விடலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கூட அவனுக்காக காத்து இருக்கும் பெண்ணுக்காக அவன் இந்தியா வந்து தான் ஆக வேண்டும். அத்தோடு அந்தப்பெண் அடைய விரும்பும் லட்சியம் அவனை வெளிநாட்டு வாசியாக மாறுவதற்கு இடம் தராது. இப்படி எல்லாம் எண்ணித்தான் ரங்கன் அடிக்கடி சிரித்து கொள்வான்.

 சாதுர்யா சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்முறை எழுதும்போது இரண்டாம் கட்டம் வரை சென்று விட்டாள். ஆனால் அதற்குப் பிறகு வைக்கப்பட்ட தேர்வில் அவளால் வெற்றி பெற இயலவில்லை.மனமுடைந்த நிலையில் அவள் மனசு தேடியது முழுக்க முழுக்க ரங்கனை தான். ஆனால் தேர்வில் வெற்றி பெறும் வரை தான் அவள் முன் தோன்றுவது இல்லை என்பதில் ரங்கன் தீவிரவாதியாக இருந்தான்.

 தாமோதரனும் லக்ஷ்மியும் தான் அவளைத் தேற்றி மீண்டும் தேர்வுக்கு தயாராகும்படி பணித்தார்கள். நடுவில் ஒருமாதம் ஸ்ரீரங்கம் சென்று இருந்துவிட்டு வந்தாள் சாதுர்யா. இப்போது மீண்டும் சென்னை செல்ல வேண்டும் என்பது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை. மனதில் தேவைப்பட்ட நெருப்பை குறைந்து விட்டதாகவே அவளுக்கு யோசனை. ஆனாலும் வேறு தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்வதை விட படிப்பதே சாலச் சிறந்தது என்று முடிவு செய்துகொண்டு மீண்டும் தன் பிரயாணத்தை தொடங்கினாள்.

 

சென்னையில் அவளது பின்புறம் என்ன என்றெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மற்ற மாணவர்களைப் போல அவளும் சாதாரணமாக படிக்க வந்தவள். அவளும் தன்னைப் பற்றி எல்லாம் யாரிடமும் பேசியதில்லை. தாமு வரும்பொழுது கூட தன்னை பற்றி எல்லாம் பெருமை பேச மாட்டார்.வயதான காலத்தில் தனது அனுபவங்களை பற்றி எல்லாம் பேசி சுற்றி இருப்பவரை ஓய்ந்து போகச் செய்வதில் என்ன பெருமை என்பார்.

 பெண்ணும் தன் அப்பா வெளியுறவுத் துறையின் மூலம் வெளிநாடு சென்றிருக்கும் ஐ எஸ் ஆபிஸர் என்றெல்லாம் யாரிடமும் சொன்னதில்லை. என் ரங்கனைப் பற்றிப் கூட யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தனது டெல்லி தோழர்களிடம் மட்டும் அடிக்கடி பேசுவாள். அவள் மனம் மீண்டும் டெல்லி போக வேறு விரும்பியது.

 

 ஒரு பத்து நாட்களுக்கு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு டெல்லி சென்று தனது நண்பர்களுடன் நேரம் செலவிட போவதாகவும், திரும்பி வரும்வரை வீட்டிற்கு பேசப்போவதில்லை. அங்கிருந்து திரும்பி வந்தவுடன் அழைக்கிறேன் என்று தனது பெற்றோருக்கும், தாத்தா பாட்டி,ஏன் ரங்கனுக்கு கூட தெரிவித்து விட்டாள்.

 தாமு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பெண் பதிலேதும் சொல்லவில்லை. ரங்கன் அவள் இவ்வாறு முடிவு எடுத்திருப்பது மிகவும் தவறு. தினமும் வீட்டிற்கு அழைத்து பேசு என்று சொன்னவற்றை எல்லாம் மறுப்பு கூறாமல் கேட்டுக்கொண்டாள். இதிலேயே ரங்கனுக்கு தெரிந்துவிட்டது   இவள் தான் செல்வதை கடைப் பிடிக்கப் போவதில்லை என்று.

 

 டெல்லி சென்று, தனது நண்பர்களுடன் பொழுதைப் போக்கியவள் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும வீட்டினருக்கு மெயில் செய்ய மறக்கவில்லை.புகைப்படங்களில் சாதுர்யா அத்தனை அழகாக இருந்தாள். ரங்கநாதன் கண்களை வேறு எங்கும் கொண்டு செல்லவே முடியவில்லை.

 அவனது இன்பாக்ஸ் முழுவதும் அவளது படங்கள் நிரப்ப, அவளது இன்பாக்ஸ்  ஸ்மைலிகள் நிரப்பின.நண்பர்களுடன் எட்டு நாட்கள் சந்தோஷமாய் பொழுதை கழித்துவிட்டு, சென்னை வந்தவள் இரவாகிவிட கேப் டிரைவரை உணவு சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலில் நிறுத்த சொல்ல  இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, கேபில் திரும்பவும் ஏறும் பொழுது மயங்கி காருக்குள்ளேயே சரிய அந்த கார் இ.சி. ஆர். ரோடை நோக்கி பறந்தது. ஆம், அவள். கடத்தபட்டாள் 

ஒருவழியாக சிவம் தனது மகள் ரத்னா எழுதி வைத்திருந்த கடிதத்தை தனது அலுவலக அறையில் இருந்த மேசை இழுப்பில் கிடைக்கப் பெற்றார். அது என்ன காகிதம் இவ்வளவு நன்றாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துப் படித்தவர் மனோ நிலையை யாராலும் கணிக்க முடியாது. அதில் ரத்னா எழுதியிருந்தது இவ்வளவுதான்…

 

அன்புள்ள அப்பாவிற்கு,

உங்களுக்கு எங்கள் மூவரின் மீதும் அன்பு இருக்கிறதா என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் பழக்க தோஷத்தில் இவ்வாறு ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் இவ்வளவு விரைவாக செய்து வைத்த திருமணவாழ்க்கை எனக்கு நிலைக்கவில்லை.

உமாக்காவின் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவு எங்கள் மூவரையும் பிரித்து வைத்ததுடன் அல்லாமல் உங்களுக்கும் தனிமையை பரிசளித்து விட்டது. அக்கா கணவனுடன் வாழ்ந்தாலும் அது திருமண வாழ்வாக இல்லை. என் நிலைமை சொல்லவே தேவையில்லை.

சாந்தாவிற்காவது நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் அவளது வாழ்க்கையில் மட்டும் தலையிட்டு விடாதீர்கள். எங்கள் இருவரின் வாழ்க்கை நிலையில்லாதது ஆனதுபோல் அவளுக்கும் ஆக வேண்டாம்.

உமா அக்காவின் கணவர் அவரது பார்வை என் மேல் உள்ளது என்பது தெரிந்ததனால்தான் உமா அக்கா  என்னை சீக்கிரமாக வீட்டிலிருந்து திருமணம் செய்வித்து அனுப்பினாள். எதனாலோ விதி என்னை மீண்டும் இங்கேயே வர வைத்து விட்டது. இப்போது மீண்டும் கழுகின் பார்வை என் மீது. அக்காவிற்கு சக்களமாய் வரச் சொல்கிறான் அவன். என்னால் தாங்க முடியவில்லை. நான் வேலையை விட மாட்டேன். நல்ல வேளை… இதுவாவது என் கையில் என்று இருக்கிறது. என் கணவர் உறுதியாய் நின்றதன் பலன் இது.நான் போகிறேன். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருப்பேன். தற்கொலை செய்து கொள்வது எனது நோக்கமல்ல.அக்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். என்னை தேட வேண்டாம்.

இப்படிக்கு,

ரத்னா.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்