Loading

அவளது மனம் போல் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது எல்லா பெரிய விஷயமாக இதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுத்து யோசிக்க வேண்டாமா என்று யோசித்தாலும்,இன்னொரு பக்கம் கணவன் மனைவி உறவை உறுதி செய்வது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் தானே! தாலிக்கயிறு என்ற ஒன்று வெளி உலகத்தில் பெண்ணின் திருமணத்தை அறிவிக்க தானே! குங்குமம் தானே இருவரது உறவையும் உறுதிப்படுத்துகிறது. இந்த உறவு எவ்வளவு தூரம் சரியானது என்றெல்லாம் தனிமையில் அவனுக்கு குழப்பம்தான் அதிகரித்தது. மனதளவில் இருவரும் கணவன் மனைவி தான். அதற்கு ஊரை கூட்டி சாட்சி சொல்ல வேண்டியதில்லை. ஆனால், படிக்கும் நேரத்தில் எல்லோரும் இந்தப் பெண்  என்னையே நினைத்துக் கொண்டிருந்தால், கல்வி என்றானாலும் முக்கியம்   ஆயிட்டே…  என்று மனதினுள் மருகினான்.

 

ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் கூட இவர்களது காதல் தோற்கக் கூடும் என்று தெரிந்திருந்தால், காந்தர்வ திருமணம் செய்து கொண்டதை அவளே மறுக்கக் கூடும் என்று வருங்காலத்தில் அறியும் சக்தி அவனுக்கு இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை பாதை முள்ளால் இல்லாமல் மலரினால் அலங்கரிக்க பட்டிருக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறதா இல்லை நரகத்திலா…

 

சாதுர்யா படிப்பில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட போதிலும், ரங்கனின் ஞாபகங்களில் இருந்து வெளிவந்த படிப்பை உள்ளே செலுத்துவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ரங்கன் இப்போதெல்லாம் அவளிடம் சுத்தமாகவே பேசுவதை தவிர்த்து வருவதன் பலனாக அவனது கோபத்தின் அளவு அவளுக்கு தெளிவாக புரிகிறது. இப்போது இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளும் ரங்கன் அந்தப் பெண்ணின் காதலனோ கணவனோ இல்லை. 

 

அவள் மீது ஆழமான பிரியம் வைத்திருக்கும் அவளது அத்தான். அவனுக்கு இந்த பெண் ஒழுங்காக படித்தாக வேண்டும். சமூகத்தில் அவளுக்கென்று ஒரு இடம் இருத்தல் வேண்டும். படிப்பதற்கு ஏதேனும் லடாய் செய்தால் சிறுவயதிலிருந்தே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டு இவளுடன் அமர்ந்து விடுவான் ரங்கன். படிப்பு என்றும் அமர்ந்துவிட்டால் அவன் கடுமையான ஆசிரியன். இப்பொழுதும் இவளிடம் அதே கடுமையை காட்டுகிறான். பெண் உள்ளுக்குள் தவித்தாலும், அவன் அவள் மீது கொண்டிருக்கும் வாஞ்சையை நினைத்து பெருமை கொள்கிறாள். முதல் வருட பாடங்களிலிருந்து எடுத்து அவற்றை ஊன்றிப் படித்து விட்டு இரண்டாம் வருட பாட புத்தகங்களை எடுத்து வைத்தாள். இப்பொழுது படிக்கும்போது பாடங்கள் என்றால் புரிவது போல் இருந்தது. கூடவே தன் அருகிலேயே அத்தான்  அமர்ந்திருப்பது போல் யோசனை செய்து கொண்டே படித்ததனால் இன்னும் கொஞ்சம் சுலபமாகவே பாடங்கள் புரிந்தன. தன்னை நினைத்து தன்  மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டாள்   சாதுர்யா.

 

 தில்லியில் இருந்தவரை நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை யாருக்கும் அஞ்சாத மனம் என்றெல்லாம் பாரதியின் புதுமைப் பெண்ணாக இருந்தவள், இன்று ஏன் இப்படி ஆகிவிட்டாள் என்பது அவளுக்கே புரியாத புதிராக இருக்கும் போது வெளியில் அவள் மாற்றத்தைப் பற்றி பேசுபவர்களை என்ன சொல்வது?

சாதுர்யாவிற்கு நிச்சயம் தெரியும் ரங்கன் விரும்பியது அந்தப் பெண்ணைத் தான். இப்படி காதலாகி கசிந்துருகி நிற்கும் பெண்ணை அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

 

 தன்னைத் தொலைத்து வாங்கப்படும் காதலில் அவனுக்கு உடன்பாடு இல்லை. “நீ நீயாக இருக்கணும் சாதுர்யா, எல்லாத்துக்கும் என்னோட முகத்தை பார்ப்பதை முதல்ல நிறுத்து”என்று அவன் வெளிநாடு செல்லும் முன்பே சத்தம் போட்டு இருந்தான். அவள் தன் இலட்சியங்களை விட்டுவிட்டு தன்னுடன் வர வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் பார்த்து பிறந்த குழந்தை அவள். அவளை ரங்கன் முழுமையாக காதலிப்பதால் தான் அவள் மீதான பொறுப்பையும் அதிகமாக காட்டுகிறான். அவன் வெளிப்படுத்தும் விதம் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம். ஆனால், காலம் எவ்வளவுதான் மாறினாலும் மனம் ஒரு முறை தடம் மாறிவிட்டால் வாழ்க்கைப் பாதையும் நிச்சயம் மாறிவிடும்.

காதலும் திருமணமும் நமக்கு எந்தவிதத்திலும்  முன்னேற்றத்தை தடை படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது. ரத்னாவும் கூட திருமணத்திற்குப் பிறகுதான் தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்து  விட்டாள்.

 

 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால்  மட்டும் பெண் இருந்து பயனில்லை. அவனுடனேயே அவளும் பிரயாண படவேண்டும். அதற்குப்பின் எப்பொழுதும் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரங்கனின் அம்மா ரேணுகா தன் கணவனின் தொழிலுக்கு தன்னால் இயன்றவரை நிர்வாகத்தில் உதவி செய்கிறாள்.

 

ரங்கன் மற்றும் சாதுர்யாவின் பாட்டி லட்சுமி அம்மாள் கணவனுக்கு துணையாக தான் இருக்கிறாள். அவர் சிறந்த நிர்வாகி என்று தாமோதரன் நினைக்கும் அளவிற்கு.

 

இப்படி பெண்களை பார்த்தவனுக்கு மனதின் எதிர்பார்ப்புகள் எத்தகையதாக  இருக்கக் கூடும்?

அவன் யோசிப்பதில் என்ன தவறு?அவள் மீது தீராக்காதலை கொண்டுள்ளவன் அவள் தனக்குக் கீழே இருக்கவேண்டும் என நினைப்பானா என்ன?

 

பெண்ணை ஆண் அடிமையாக்கலாம்… அன்பால், காதலால்!அப்படி பார்த்தால் அவளும் அவனும் ஒருவருக்கொருவர் அடிமைகள்தான். இருவரின் உயிர் மூச்சு உள்ளவரை. அவர்கள் பிரிவை சந்தித்தாலும் காதல் குறையாது.

 

சாதுர்யா பிடிவாதமாக படித்தாள். அவனை, அவனது கோவத்தை வெற்றி கொண்டு தன்னுள் அவனை சிறை கொள்வதற்காக. நேற்றும் அவளுக்கு ரங்கனின் கோபத்தை கண்டால் பயம் தான். இன்றும் வரும் காலத்திலும் கூட அவனுக்கு கோபத்தைக் கண்டு அவளுக்குள் ஒரு நடுக்கம்தான். ரங்கனுக்கு எப்போதும் கோபம் வெளிவராது. வந்துவிட்டால்… அது வேறுதான்.

 

அந்த செமஸ்ட்டரில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் அவள் மனதிற்குள்  நம்பிக்கை காலூன்றி விட்டது. தனது அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த சாதுர்யா தனது மதிப்பெண்களையும் ரங்கனுக்கு இமெயில் செய்துவிட்டாள் . தனிமையில் இருக்கும்போது ஆற்றங்கரையில் அவன் கொடுத்த முத்தத்தின் எச்சங்கள் அவளை தூங்கவிடாமல் செய்கிறது. தன்னை விட்டுவிட்டு அவன் எப்படி இருக்கிறான் எனக்கு மட்டும் ஏன் இப்படி… என் சுயத்தை தொலைத்து எப்படி அவனை மட்டும் யோசிப்பவள் ஆனேன் என்ற பெண்ணின் மனதில் எக்கச்சக்க கேள்விகள்.

 

 காமனின் கணைகளை தனியாக என்று சமாளிக்க முடியாமல் திணறினாள் பாவை. இரவுகளில் அவனின் அணைப்புக்காக, பகல்களில் அவனின் அழைப்புக்காக ஏங்கினாள் அவள்.

 

வேலை முடித்து வந்தவனுக்கு அவளது இமெயில் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. யூ நாட்டி என்று கொஞ்சியவன் மதிப்பெண்களை பார்த்துவிட்டேன். இது தொடர வாழ்த்துக்கள் என்று மட்டும் பதிலுக்கு ஈமெயில் செய்துவிட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான். அவனுக்கும் பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருந்தது. இரவும் பகலும் அவன் படித்தாக வேண்டும். என்றடா தன் மனைவியை பார்ப்போம் என்று அவன் மனமும் பேயாட்டம் தான் போடுகிறது. இளமையின் வேகம், இரவிலும் பகலிலும் அவள் துணையை மனம் தேடுகிறது. அவளை தன்னுடன் இறுக்கிக் கொள்ள, அவளின் கழுத்தில் வாசம் பிடிக்க, அவளின் மடியில் கிறங்கி கிடக்க இளமை அவனை அலைக்கழிக்கிறது. முத்தத்தில் பெண்மை அவனை பாடாய் படுத்துகிறது.

 

ஆனால், படித்து முடித்துவிட்டு ஒரு வருடம் ஸ்பெயின் சென்று அத்தையிடம் கொஞ்சம் தொழில் கற்றுக் கொள்ளலாம் என்று அவன் யோசித்து இருக்கிறான். என்றும் ஏட்டுச்சுரைக்காய் மட்டும் கறிக்கு உதவப் போவதில்லை .அனுபவ பாடமே ஒருவனை செதுக்கும் என்ற தீவிர நம்பிக்கை அவனுக்கு உண்டு. மேற்கத்திய நாடுகள் முழுவதும் தனது தொழிலை பரப்ப வேண்டும் என்ற வெறி அவனுக்குள். பெண்ணின் காதல் அவனை போராடி ஜெயிக்க தூண்டுகோள். யார் சொன்னது காதலில் விழுந்தவர் வாழ்க்கையிலும் விழுவார் என்று… ‘நான் வெற்றிக்காக பிறந்தவன் என்று அடிக்கடி மனதிற்குள்ளும் சொல்லிக் கொள்வான்.

ஆனால், அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்க போகும்  பெரிய தோல்வி அவனை எங்கு கொண்டு சேர்க்கும்… அவன் கரை சேர வேண்டுமென்று நான் யாசிக்கிறேன்.

 

உமாவும் சரி,ராகாயியும் சரி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள். உமாவுக்கு வெளி உலகம் புதிதாய் தெரிகிறது. ராகாயிக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும் நேரம் இது. உமாவின் வெற்றிக்கு அருணாச்சலம் காரணமென்றால் ராகாயிக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு தேடிக் கொடுத்தது சிவம்.

 

இப்போதெல்லாம் வீரனும் ராக்காயியும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டது. அவளின் பழைய வாழ்க்கை பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை. அவளது இப்பொழுது வாழும்  நேர்மையான வாழ்வு அவனுக்குள் மன திருப்தியை கொடுக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கட்சிக்குள் நுழைந்த பிறகு அவளுக்கு வேறு விதமான தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டது. அவளது பெண்ணும் வளருகிறாள். ராக்காயி மனதுள் ஆயிரம் பயங்கள். அவளது வாழ்க்கை பற்றியும் தனது கடந்த காலத்தை பற்றியும் அவள் எண்ணி மருகாத நாட்களே இல்லை. அது மனதில் கலகத்தை உண்டு பண்ணியிருக்கிறது. 

ஒரு பெண்ணாக பெண்கள் சந்திக்கும் ஆயிரம் கொடூரங்கள் அவளுக்கு தெரியும். இப்பொழுது அவளுக்கும் அவள் பெண்ணுக்கும் தேவை  தகுந்த துணை. வீரனை அவள் மனம் விரும்புகிறது தான். ஆனால் நிஜம் வேறு.

 

உமாவுக்கு தேர்தலில் கிடைத்த வெற்றி ஒரு பக்கம் குருவின் மனதில் அமிலத்தை ஊற்றினாலும் இன்னொரு பக்கம் மனைவியின் பதவியை வைத்து தான் பெறும் லாபங்கள் என்ன என்று அவன் மனது கணக்கிட தொடங்கிவிட்டது.

 

அவனால் முடிந்த அளவில் மனைவியின் பெயரை வைத்து எதை எதை சாதித்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் செய்ய தொடங்கி விட்டான். ஆற்றங்கரையில் மணல் கொள்ளை ஆரம்பித்து, கஞ்சா விற்பனை போதைப்பொருள்கள் கடத்துவது பெண்களைக் கூட சமயத்தில் வெளிநாடுகளுக்கு விற்பது என்று அவன் அக்கிரமங்கள் அரக்கனை விட மோசமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனைவியின் பதவி வைத்து இப்பொழுதெல்லாம் அவனை கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கவும் அழைக்கிறார்கள். சமயத்தில் தனது அப்பா பங்கேற்கும் கூட்டங்களில் கல்லெறிதல் அழுகிய முட்டையை, தக்காளியை மேடை நோக்கி வீசுதல் போன்ற விஷயங்களையும் தனது ஆட்களை வைத்து செய்கிறான். இது அருணாசலத்திற்கு சிவனுக்கும் தெரியும் தான். இதை வைத்து ஆளும் கட்சி மீது வீண் பழிகளை சுமத்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அருணாச்சலம்.

 

ரத்னா தன் தங்கை சாந்தாவிடனும் அம்மாவுடனும்  வாரம் ஒரு முறை பேசுவது அவள் வழக்கம். சமயத்தில் சங்கரனும் அவர்களுடன் பேசுவான். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது  ரத்னா குழந்தை மீதான தனது ஏக்கத்தை பற்றி சொல்லிக்கொண்டே அழுது விட்டாள். அவள் அழுவதைப் பார்த்த சங்கரனுக்கும் கண்கள்  கண்ணீரை சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை ஸ்கைப்பில் பார்த்துக் கொண்டிருந்த சாந்தாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.ரத்னாவை விட சிறியவள். திருமணம் முடிக்காதவள். அவர்களுக்கு என்ன சொல்லிவிட முடியும்?

அந்தரங்கத்தையும் பேசுவதற்கு அவளால் முடியாது. இருந்தாலும் ஒருவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு,  “அக்கா நா சொல்றத கேளுங்க. குழந்தை எப்போ பிறக்குமோ அப்ப பிறக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் இளமை இருக்கு. மனசு போட்டு அலட்டிக்காதீங்க. ரெண்டுபேரும் ரிலாக்ஸா இருங்க. பீச்சுக்கு போயிட்டு வாங்க. ரெண்டு பேரும் நிறைய ஒண்ணா நேரத்தை செலவு பண்ணுங்க. குழந்தைய பத்தி பேசாதீங்க. நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்க கல்யாணம் பண்ணிக்கல. ஒண்ணா வாழ்க்கை வாழ கல்யாணம் பண்ணி இருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க கா” என்றுவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள். அவள் சொல்வதில் இருப்பதில் இருக்கும் நியாயம் இருவருக்குமே புரிந்தது. கொஞ்ச நாட்களாய் குழந்தை ஏக்கத்தில் அவர்கள் செய்ய விட்டிருந்தது என்ன என்பதும் புரிந்துவிட்டது. ஊர் உலகத்துல இருக்குறவங்களுக்காக நாம வாழ முடியாது. காதலை விட்டு கல்யாண வாழ்க்கை  ஜெயிக்காது, இனிமே நாம காதல தொடர்வோம் ரத்னா என்றான் சங்கரன்.

 

அதன் பிறகு இருவரும் புதிதாய் திருமணமான ஜோடி போல தங்களை பாவித்துக் கொண்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்தது. கணவனது அன்பில் மூழ்கி எழுந்தாள் ரத்னா. குழந்தை பற்றி இருவருமே யோசிப்பதில்லை. திலகாவும் திலகாவின் கணவரும் அப்ப போது சங்கரனின் மனதை மாற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அவன் மனைவி விட்டு நகர்வதற்கு கூட தயாராக இல்லை. இவையெல்லாம் சேர்ந்து திலகாவின் மீதான வன்மையை கூட்டி விட்டது திலகாவின் குடும்பத்தினருக்கு. சங்கரன் இவர்களுடன் வந்து தன் மனைவியுடன் வாழ்வதற்கு தயாராக இல்லை. ரத்னாவிற்கு நல்ல சம்பளம் வருகிறது தான். ஆனால் அவளும் தனது சம்பளம் பற்றி எல்லாம் திலகா குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில்லை . மொத்தத்தில் திலகா குடும்பத்தைப் பொறுத்தவரை ரத்னாவை சங்கரனிடமிருந்து பிரிப்பது தான்  முக்கிய தேவை என்றாகிவிட்டது.

 

இரண்டாம் திருமணம் பற்றி வீட்டிற்கு வந்திருந்த திலகாவும் திலகா கணவரும் பேசப் பேச ரத்னாவுக்கு கண்களில் கண்ணீர். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு டென்ஷன் அதிகமாகி  வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுதுதான் ரத்னாவும் சங்கரனும் மனதிற்கு துன்பம் தரும் விஷயங்களை தூர ஒதுக்கிவிட்டு இன்பமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். அது பொறுக்காதது இப்படி ஒரு சண்டை. எப்படியும் சங்கரன் மறுப்பான் என்று தெரிந்தே, வீடு தேடி வந்து சங்கரனிடம் திலகா இந்த பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருப்பது அவளுக்கு சற்றும் பொறுக்கவில்லை. குழந்தையை மையமாக வைத்து பேசும் போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷமான நிலை மாறிவிடும் என்பது அவளின் கணக்கு. இது அடிக்கடி நடப்பதுதான்.இன்றும் அதுதான் நடந்தது.

 

தமிழ்நாட்டிற்கு லோடு ஏற்றி செல்ல வேண்டிய டிரைவர் வராத காரணத்தினால் இன்று சங்கரனே வண்டியை எடுப்பதாக  இருந்தது. திலகா தான் வந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு கணவருடன் கிளம்பிவிட்டாள். சங்கரனுக்கு தான் உள்ளூர பதட்டம். ரத்னா எவ்வளவு சொல்லியும் தானேதான் போயாக வேண்டும் வேறு யாரையும் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டு சங்கரன் கிளம்புவதற்கு தயாராகிறான் முதன் முறையாக தன் மனைவியின் பேச்சை மீறிக்  கொண்டு அவன் எடுக்கும் முடிவு இது .

 

 ரத்னாவிற்கு ஏனோ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. வயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு. அவளை மெல்ல மெல்ல சமாதானம் செய்ய முற்படுகிறான் கணவன். அவன் கிளம்பி ஆகவேண்டும். இருவரும் இரவு உணவு சாப்பிட உட்காருகிறார்கள். வழக்கம்போல தன் தட்டில் சோற்றைப் பிசைந்து கவளங்களாக்கி மனைவியின் வாயில் ஊட்டி விடுகிறான் கணவன். ரத்னாவினால் அதை விழுங்க முடியவில்லை. திலகா வந்து செல்லும் நேரங்களில் இப்படித்தான். சங்கரனால் பெற்றவளை வராதே என்று சொல்ல முடியாது. வாயை திறக்காமல் இருந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டான்.

 

 சாப்பிட்டுவிட்டு சங்கரன் கிளம்ப, தலையில் பல்லி வேகமாக விழுகிறது. அது என்னவென்று கூட பார்க்காமல் வேகமாக வெளியே செல்கிறான். பின்னாடியே வந்த ரத்னாவுக்கும் கால் தடுக்கி நகம்  பெயர்ந்து அங்கேயே அமர்ந்து விடுகிறாள்.

 

விடிகாலையில், அவளது அலைபேசி மணி எழுப்ப சங்கரன் தான் அழைக்கிறான் என்று நினைத்துக்கொண்டு  அவசரமாக அலைபேசியை காதில் வைக்கிறாள்.

 மறுநாள் காலையில், சங்கரன் உடம்பு முழுக்க கட்டுகளுடன் நடுவீட்டில் படுக்க வைக்கப்படுகிறான். தலைமாட்டில் யாரோ விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டு தாங்கள் இருவரும் சாப்பிட இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் ரத்னா. நடந்தது எதுவும் அவளுக்கு புரியவில்லை. திலகா எல்லாவற்றுக்கும் காரணம் ரத்னா என்று பழி சுமத்துகிறார்கள். அது எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெண் இல்லை. அவள் அழவில்லை. சிலைகள் என்றும் அழுவதில்லை. அவள் அலுவலகத்திலிருந்து   உடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவளை அணைத்துக் கொண்டு அழ வைக்க முயற்சி செய்கிறார்கள். சிவனும் கூட வந்துவிட்டார். அவருடன் உமாவும் கூட வந்து இருக்கிறாள். ரத்னா என்ன தான் அதிர்ச்சியில் உறைந்து இருந்தாலும், அவள் உடலோ தன் வேலையை செவ்வனே செய்தது. அவள் வயிற்றில் பூத்திருந்த சிறு மொட்டு ரத்தமாய் கீழே. ஆனால் அதை உணரும் நிலையிலும் கூட அவள் இல்லை. அதைப் பார்த்தவர்கள் அனைவருக்கும்  அதிர்ச்சி. எல்லோரும் கண்ணீரில் கரைய, உயிரை உருக்கி விட்ட நிலையில் ரத்னா.

 

பத்து நாட்கள் சடங்கில் கூட கலந்து கொள்ள விடாமல் ரத்னாவை விரட்டியடித்தார்கள் திலகாவின் குடும்பத்தினர். சங்கரனின் உடல் எடுத்த உடனேயே கிளம்பி விட்டாள் உமா. அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்ப வருவதாக சொல்லிவிட்டு சென்ற சிவனுக்கும் திருச்சி செல்லும் போது உடலுக்கு சற்று முடியாமல் போக வரும் வழியிலேயே சிவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் உமா. ரத்னாவின் வாழ்க்கை இப்படி முடிந்து விடும் என்று உமா கனவில் கூட நினைக்கவில்லை. ‘இதற்காகவா இந்த பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பி வைத்தோம்’ என்ற எண்ணம் அவளை கூறு போட்டது. இந்த சிறுவயதில் அடுத்து இந்த பெண் என்ன செய்யப்போகிறாள் என்று துடித்தது உமாவின் மனம்.

 

பத்து நாட்கள் எப்படியோ அங்கு சமாளித்து இருந்தவளுக்கு, சங்கரன் உடன் வாழ்ந்த வீட்டிற்குள், நுழைவதே பெரும் பாடாகி போயிற்று. கணவனுடன் வாழ்ந்த  காதல் வாழ்க்கை அவளை அணு அணுவாக கொன்றது. அவன் கொடுத்து விட்டுச் சென்ற ஈர முத்தங்களும் காதல் மொழிகளும் அவளை மூச்சுத் திணற வைத்தது.  திலகாவின் வீட்டினர் சங்கரனின் சொத்துக்கள் எதிலும் ரத்னாவுக்கு பங்கு கிடையாது என்று அவளை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். சங்கரனும் அதற்கு ஏற்றார்போல் தொழில் எல்லாவற்றிலும் திலகாவின் பெயரில்தான் தொடங்கியிருந்தான். சிவமும் உமா குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் அவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் அவர்களாலும் கூட ஒன்னும் செய்ய முடியாது.

 

கணவனே போயாயிற்று. அவன் கொடுத்திருந்த கருவும் போயிட்டு. இனி இந்த சொத்துக்களை வைத்துக்கொண்டு மட்டும் என்ன செய்வது என்ற மனநிலையில் இருந்தாள் ரத்னா . அவளுக்கு போராட சுத்தமாக இஷ்டமில்லை.

 

கணவனுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த திருச்சூரில் இருப்பதற்கும் ரத்னாவால் முடியவில்லை.

 

அம்மாவும் தங்கையும் கனடாவிலிருந்து வர இயலாத சூழ்நிலை. சிவனுக்கும் திருச்சூர் வருவதற்கு அந்த சமயத்தில் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சங்கரனின் மரணம் அவர் தலையில் பெரிய இடியை இறக்கி இருந்தது. ரத்னா அவருக்கு துணையாக இருக்க வேண்டியவர் மருத்துவமனையில். இந்த சமயம் நிஜமாகவே அனாதையாகி போனாள் ரத்னா.

 

அடுத்து என்ன என்று ரத்னா யோசித்துக் கொண்டிருக்கும்போது, சென்னைக்கு மாற்றலாகி உத்தரவு வந்தது. இந்த உத்தரவு தானாக வந்ததா… இல்லை தடிகொண்டு கனிய வைக்கப்பட்டதா?

 

தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று உமா இவளை சங்கரன் என்னும் காதலை வைத்து பூட்டி இருந்தாள். ஆனால் இனி அந்த பூட்டி இல்லை.

இனி ரத்னா நிலை… நெஞ்சு நடுங்குகிறது.

 

குழந்தை வளர வளர இந்த வாழ்க்கையில் இதுவே பெரிய சந்தோஷம் என்று மௌனமாகவே இருக்க பழகிக் கொண்டாள் உமா. ஸ்கந்தன் தனது விளையாட்டால், அறிவார்ந்த அவனது பேச்சால் வீட்டிலிருந்து பெரியவர்கள் எல்லோரையும் கட்டிப் போட்டான். பள்ளியிலும் நன்றாக படிப்பவன் என்பதால் அவன் மீது இதுவரை எந்த புகார்களும் பள்ளியிலிருந்து வரவில்லை. அரசியல் தொடர்பு கொண்ட குடும்பம் என்பதாலோ என்னமோ அவனுக்கு நண்பர்கள் மட்டும் அமையவில்லை. அதற்கும் சேர்த்து வீட்டில் அம்மா பாட்டி இருவரின் உடனேயே உரையாடுதல், விளையாட்டு என்று நேரத்தை போக்குதல்,பாட்டி தாத்தாவிடம் கதை கேட்டல் என்பது போன்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தாத்தா அருணாச்சலம் இப்போது அடுத்த தேர்தல் வேலையில் மும்மரமாக இருப்பதாலோ என்னவோ பேரன் மீது அவ்வளவு தூரம் ஈடுபாட்டை காண்பிக்க முடியவில்லை. 

 

இவர்களது குடும்பம் இன்னும் சென்னை வரவில்லை. திருச்சியில் தான் ஸ்கந்தனின் படிப்பு. தினமும் ஸ்கந்தன் பள்ளி செல்லும் போது அம்மாவும் அவனுடன் காரில் சென்று விட்டு வருவாள். அம்மா பிள்ளை இருவருக்கிடையே பாசத்தின் முடிச்சு இறுகி இருந்தது. இவ்வளவு காலத்திற்கு பிறகும் கூட குரு திருந்துவதாக இல்லை. மனைவிடம் திரும்புவதாகவும் இல்லை. அவளிடம் தனிச்சிறப்பாக மற்ற பெண்களிடம் இல்லாதது எதுவும் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றவில்லை.

 

உமா ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கிறாள். ஆனால் பெயரளவுக்குத்தான். அவளுக்குள் இருக்கும் சுயத்தை தேடித்தேடி அவளும் களைத்து போனாள் . வெறும் அவளிடம் கொடுக்கப்படும் கோப்புகளில் மட்டும்தான் கையெழுத்து போட அவளுக்கு அனுமதி. மற்ற எல்லா விஷயங்களையும் கட்சி கவனித்துக் கொள்ளும். அவளுக்கு தன் மாமனார் சொன்ன படிக்கு இந்த தேர்தலில் நின்றிருக்கக்கூடாது என்று காலம் கடந்து தான் தோன்றியது. அருணாச்சலம் அவரது பதவியை தன் முழு அரசியல் செல்வாக்குக்குள் முடக்கி விட்டிருந்தார். உமாவால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பல விஷயங்கள் அவள் கையை மீறி சென்றுகொண்டிருந்தது. அவளுக்கு தெரிந்திருந்தும் அவளால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. வெறும் பொம்மை போல் இயங்கிக் கொண்டு இருந்தாள். அவள் தலையிடக் கூடிய ஒரே விஷயம் ஸ்கந்தன் தான். அன்னபூரணிக்கும் இப்போதெல்லாம்  உடம்பு அவ்வளவாக சரியில்லை. கொஞ்ச நாளாக வெகுவாகவே மனதை அலட்டி கொள்கிறாள். காரணங்கள் யாருக்கும் விளங்கவில்லை.

 

சிவனை கூட்டிக்கொண்டு எப்பொழுதும் கணக்கு பார்க்க தோப்புகளுக்கு  சென்று பார்வையிடுவது அனுப்புவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இதையெல்லாம் செய்வதற்கு சிவனால் அவளுடன் கூட வர முடிவதில்லை. முன்பெல்லாம் உமாவையாவது கூட கூட்டி செல்ல முடியும். இப்போதெல்லாம்  அலுவலகம் செல்வது அத்துடன் குழந்தையின் பொறுப்பு என்று உமாவை நேரம் தனக்குள் இழுத்துக் கொண்டது.

 

 

இதுபோல், இந்த முறையும் தான் மட்டுமே டிரைவரை அழைத்து கொண்டு மாந்தோப்புக்கு கணக்கு வழக்குகள் பார்க்கவந்த அன்னபூரணி கண்டது குருபரன் மது -மாது என்ற இருவித போதைகளுடன் தன்னை மறந்து லயித்திருந்தது தான். எப்பொழுதும் குரு இங்கு வரும் பொழுதெல்லாம் தோட்டத்திற்கு காவல் இருக்கும் காவலாளியை விடுப்பு கொடுத்து அனுப்பி விடுவான். வெளி உலகத்திற்கு தெரியாமல் செய்ய வேண்டிய பல விஷயங்களை அவன் செய்வது இங்கிருந்துதான்.

 

பெற்ற மகனை எந்த கோலத்தில் காணக்கூடாதோ அந்த கோலத்தில் கண்ட தாய்க்கு, இத்தனை வருஷங்கள் ஆகியும் மகன் திருந்தவில்லை என்பது அடி ஆழம்வரை ரணமாக தாக்கியது. ஏற்கனவே உடல் சோர்வு, காரணம் தெரியா மனச்சோர்வு… இத்துடன் இதனைக் கண்டவளுக்கு படபடப்பாய் இருக்க ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு காரில் வீடு திரும்பி விட்டாள்.

 

 உமாவும் குருபரனும் ஒற்றுமையாக குடும்பம் செய்யவில்லை என்பது அன்னத்திற்கு தெரியும். ஆனால் மருமகள் என்றுமே எதையுமே காட்டிக் கொண்டதில்லை. குருவை இதுவரை உமா குறை சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. அப்படி என்றால் மருமகளின் சம்மதத்தின் பேரில் தான் இத்தனையும் நடக்கின்றது என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள் அன்னம். பிறகு தன்னைத்தானே தேற்றியவாறு தன் கணவன் மற்ற பெண்களுடன் கூத்தடிப்பது எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவளாய், வெகு காலம் கழித்து, தன் மருமகளுக்கு இந்தத் திருமணத்தின் மூலம் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டோம் என்ற எண்ணமே அன்னத்திற்கு நெஞ்சு வலியை வர வைத்து விட்டது. ஒருவாரம் குழப்பத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்த அன்னம் துக்கம் தாங்காமல் தூங்கும் பொழுது உயிர் உடலை விட்டு சென்றுவிட்டது. மனதில் நினைப்பவற்றை எல்லாம் முன்புபோல் அருணாசலத்திடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். 

 

அரசியலுக்காக அருணாச்சலம் இதுவரை இரண்டு விஷயங்களை பலி கொடுத்துவிட்டார். ஒன்று குருவின் வாழ்க்கை. இதோ இப்பொழுது அன்னத்தின் உயிர்.

என்றுமே அன்னபூரணி தன் மருமகளிடம் மனம் விட்டு பேசியது கிடையாது. ‘அவள் அடிமனதில் ‘தான்’மாமியார், அதிலிருந்து கீழே இறங்கி வர கூடாது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது’.    அன்னபூரணி எவ்வளவோ நல்லவள் தான். 

 

ஆனாலும், அவள் முடிவு  கணவன்- மகன்- மருமகள் -பேரன் பணம்- நகைகள் சொத்து அந்தஸ்து -எல்லாமும் இருந்துகூட மன நிம்மதியின்றி துயரத்தில் தனிமையில். அவ்வளவு சொத்துக்களையும் கட்டி ஆளத் தெரிந்த அந்த பெண்மணிக்கு மகனை திருத்தி கொண்டுவரும் திறமை மட்டும்

வாய்த்திருக்கவில்லை. அதில் அவளது உயிர் பறிபோய் விட்டது.

 

 வழக்கம்போல் சாந்தாவும் பாறு குட்டியும் இந்தியா வரவேண்டாம் என்று உமா சிவன் மூலம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள். உமா அவள் மனதில் ரத்னா சென்னை வந்திருப்பது பற்றிய க்லேசம் உண்டு. தன் அப்பாவுடன் ரத்னா இங்கு வந்துவிட வேண்டாம் என்று உமாவுக்கு ஆயிரம் பிரார்த்தனைகள் மனதில். ஆனால் அவற்றையெல்லாம் வாய்விட்டு சொல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. மகனை கையிலேயே பிடித்துக் கொண்டு மாமியாருக்காக கடமைகளை நிறைவேற்றினாள் அந்த பெண். குரு அவன் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி அம்மாவின் இறப்பு பற்றி தகவல் தெரிவிப்பது?

 

மனைவியின் இழப்பில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார் அருணாச்சலம். இறுதிக் காரியங்களை யார் செய்வது என்ற சலசலப்புக்கு நடுவே தானே தனது மாமியாருக்கு கொள்ளி இடுவதாக சொல்லிவிட்டாள் உமா. சிவன் ஸ்தம்பித்து போனார். சிவனுடன் வந்திருந்த ரத்னாவுக்கு தன் அக்காவைப் பார்த்து உடம்பு சிலிர்த்தது. உமா எவ்வளவு சொல்லியும் ரத்னா இந்த விஷயங்களில் இதற்குமேல் விட்டுக்கொடுக்க முடியாது என்றுவிட்டு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு வந்து இருந்தாள். இரண்டு பெண்களிடமுமே மறுத்துக் கூறும் தைரியம்  சிவன் அவருக்கு இல்லை. அவருக்கு மட்டுமல்ல…அங்கு இருக்கும் யாருக்குமே அருணாச்சலத்தின் மருமகளிடம் பேசும் தைரியம் இல்லை.

தர்ம சாத்திரம் உறவுகளில் முப்பத்து ஆறு பேருக்கு கொள்ளியிடும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. நெருங்கிய உறவுகளான மகன், மகள், கணவன், மனைவி,மகன் அருகில் இல்லாவிட்டால் மருமகளும் கூட கொள்ளியிடலாம். காலமாற்றத்தில் பல விஷயங்கள் மாறியது போல, பெண்ணுக்கான இந்த அதிகாரமும் மறுக்கப்பட்டு விட்டது. இதுபோல் நடக்கும் விஷயங்கள் தர்மத்திற்கு புறம்பானதாகவும், புரட்சிகரமான விஷயங்களாகவும்

சித்தரிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டது. சமூகம் ஆணை மட்டுமே சார்ந்ததாகி விட்டது. உலகம் முழுவதும் இப்படித்தான். இனம், மதம், நாடு எந்த பாகுபாடும் இன்றி பெண் ஆணுக்கு கீழேதான். போகப்பொருள் பெண் என்று விதைக்கப்பட்டு இன்று இவ்வாறு…

 

வந்திருந்த அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உமா செய்வது சரியா தவறா என்ற குழப்பம். அவர்கள் வீட்டு விஷயத்தில் வாயை விட முடியாது  என்ற எண்ணம். எதிர்கட்சியில் இருந்து வந்திருந்தவர்களுக்கு குரு எங்கே போனான் என்பது பற்றி அறியும் ஆர்வம்… இப்படியாக, ஸ்கந்தன் நெய் பந்தம் தூக்க, உமா என்னும் நெருப்பு தன் மாமியாருக்காக இடுகாடு சென்றது.

 

அருணாச்சலத்தை, சிவனும் வீரனும் கைத்தாங்கலாக கூட்டி சென்றார்கள்.

அவர் மனம் முழுவதும் அன்னபூரணிக்காக கதறிக் கொண்டிருந்தது. முதன்முறையாக இனி வாழ்வில் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்று பயந்தார்.

 

உமாவின் அந்த செய்கை அரசியல் அளவில் பெரும் பரபரப்புகான விஷயம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து பதினாறு நாட்கள் ஆன பிறகு, நிதானமாய் தம்மை தேற்றிக்கொண்டு அருணாச்சலம், இனி மகனை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற தீர்க்க முடிவுக்கு வந்திருந்தார். நடந்த விஷயங்கள் அவருக்கு தன் மகனைப் பற்றிய நன்றாகவே புரிய வைத்து விட்டது. ஒரு மாதம் கழித்து வந்த குருவுக்கு தாயின் மறைவு பெரிய தாக்கத்தை ஒன்றும் ஏற்படுத்திவிடவில்லை. பத்தோடு பதினொன்று போல அப்படியா… என்று விட்டு சென்றுவிட்டான். இது அருணாசலத்திற்கு அதிர்ச்சியாகிவிட்டது. உமா வழக்கம் போல் விழுங்கிக்கொண்டாள்.

 

மனைவி மறைந்த பிறகு இனி அங்கு இருக்க முடியாது என்று முடிவு செய்து அருணாச்சலம் மொத்த குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றிவிட்டார். இந்த புதிய சூழல் உமாவுக்குமே தேவையாகத்தான் இருக்கிறது. ஆனால் உவப்பாக இல்லை. ரத்னா என்ன… குருவின் கண்களிலா படப் போகிறாள் என்று கொஞ்சம் தைரியத்தை வரவைக்க முயற்சி செய்தாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. ரத்னா சிவனுடன் அவரது வீட்டில் வசிக்கவில்லை. சிவன் இருப்பது தென்சென்னையில். ரத்னா இருப்பது வடசென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறாள். அப்பாவுடன் இருப்பதற்கு அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

 

ஆனால் உமாவின் நினைப்பையே பொய்யாக்கும் படியாக கணவன் இறந்த பிறகு பிறகு ரத்னா சென்னை வந்திருப்பதை பற்றி அறிந்துகொண்ட குரு ரத்னாவை பற்றிய மீதி விவரங்களை தனது கூலிப்படை ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டான். அவசரப்பட்டு எதுவும் செய்துவிட வேண்டாம் என்று கொஞ்ச காலம் தள்ளி போட்டான். அம்மாவின் இறப்பு அன்று யார் யார் வந்தார்கள் என்று வீட்டில் இருக்கும் சிசி டிவி மூலம் பார்த்தவனுக்கு ரத்னாவின் அழகு  பித்தம் கொள்ள செய்வதாய் இருந்தது. குரு உமாவை திருமணம்  நிச்சயம் செய்து கொள்ளும்போது ரத்னா சிறு பெண்ணாக பள்ளி சென்று கொண்டிருந்தாள். பிறகு ஏனோ அவளுக்கு முதலில் திருமணம் செய்வித்து கேரளா அனுப்பி விட்டார்கள்.இத்தனை வருட திருமண வாழ்க்கையும், வயதும் கேரள மண்ணும் அவளின் வனப்பை மெருக்கேற்றி விட்டிருந்தது. கணவன் மறைந்து ஒரு வருஷம் முடிந்த பிறகும் அவளால் சங்கரனின் இழப்பை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவள் சோகத்தை அவள் கண்களும் வாடிய முகமும் களை இழந்த நெற்றியும் பறை அறிவித்தது. அவற்றை எல்லாம் ஆராயும் நிலையில் குரு இல்லை. அவன் கண்கள் முழுவதும் அவளது இளமை அழகை ஸ்கேன் எடுத்து ரசித்தது. அவளை என்று சுகிப்போம் என்றே யோசனை.

 

இவற்றை எல்லாம் அறியாத ரத்னாவும் சரி, உமாவும் சரி வாழ்க்கை பாதை நேராக செல்வதாகவே உணர்ந்தார்கள்.

 

அன்னபூரணியின் இறுதிக்கு வந்திருந்த ராகாயியும் ரத்னாவும் தோழிகள் ஆகிவிட்டார்கள். வாழ வேண்டிய வயதில் ரத்னாவின் இழப்பு நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ராகாயிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சிவன் மீதும் அவளுக்கு வருத்தம் உண்டு. இப்போது உமா நிமிர்ந்து விட்டதை பார்த்து சந்தோஷிக்கும் ஒரு ஜீவன் அவள். அருணாச்சலம் மீதும் சிவன் மீதும் உள்ள விஸ்வாசத்தை மீறி, அந்த பெண்களிடம் இவளுக்கு ஒரு உணர்வு, பரிவு உண்டாகிவிட்டிருந்தது. ரத்னாவை பார்க்கும் போது தன் மகளின் ஞாபகம் ராக்காயி மனதில்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்