மரம் தேடும் மழைத்துளி 19

Loading

 

​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 19

​ருக்மணிக்கு முருகனின் நிலை ஓரளவுக்கு விளங்கினாலும், அவனுக்குச் சாதகமாகப் பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘இவனுக்கு என்ன பதில் சொல்வது?’ என்ற தயக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

​“என்ன ருக்கு? ஒன்னும் பேசாமல் என்னையே பார்த்துட்டு இருக்கே?”

​“இல்ல… நான் ஏதாவது சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு…”

​“நீ என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். நான் உன்னை கேவலப்படுத்தணும்னே செஞ்சதைக் கூட மறந்துட்டு, என்னோடு இப்படி சேர்ந்து உட்கார்ந்திருக்கியே… இந்த நல்ல குணம் கொஞ்சமாவது எங்க அம்மாவுக்கு இருந்திருந்தால், எங்க அப்பாவைத் திருத்தி நல்லபடியா வாழ வச்சிருப்பாள்ல.”

​“ஆம்பளைங்க செய்யுற ஒவ்வொரு காரியத்தையும் அசட்டை செய்யாமல் (கண்டுக்காமல்) இருக்குற பொம்பளைங்கதான் நல்லவங்கன்னு அர்த்தமா மாமா? நீங்க செஞ்சதை நான் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை!” என்று ருக்மணி சட்டென்று சொன்னதும், முருகன் அதிர்ந்து விழித்தான்.

​முருகனின் கைக்குள் இருந்த தன் கையை அவள் கட்டாயப்படுத்தி உருவிக்கொண்டாள். பிறகு, அவனது கைமேல் தன் கையை வைத்து அழுத்தமாகப் பிடித்தபடி தொடர்ந்தாள்: “அதேபோல, நான் உங்களை விட்டு விலகப் போறதும் இல்லை. ஏன்னா, உங்க காதல் எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியாது. ஆனா, என்னோட காதல் உண்மையானது. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நான் இந்த வீட்டுக்குள்ள இருக்கிறேனே தவிர, வேற எதுக்கும் இல்லை. எங்க அம்மா இன்னமும் நான் சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காங்க. அவங்களுக்காக நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்.

​நீங்க ஏதாவது ஒரு தப்பை, ஒரு தடவை செஞ்சா சகிச்சுட்டுப் போயிருக்கலாம். ஆனா, ஒவ்வொரு முறையும் மனசுல வஞ்சத்தோடவே என்கூட பழகுறீங்க. இப்போ என்னோட உட்கார்ந்து பேசுற இந்த நிமிஷத்தைக் கூட நான் சந்தோஷமா பார்க்கல. இதுக்கு பின்னாடி என்ன மர்மம் இருக்குமோன்னு பயமா இருக்கு. நீங்க உடம்பு முடியாமல் இருந்தப்ப, ‘ஐயோ பாவமே, இப்படி நடந்துடுச்சே’ன்னு எல்லார் மேலயும் வர்ற இரக்கம்தான் உங்க மேலயும் எனக்கு வந்ததே தவிர, நிஜமான பாசம் வரல. நீங்க செஞ்ச எதையும் மறக்கிற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படல.”

​ருக்கு எந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறாள் என்பதை அவள் வார்த்தைகளிலிருந்தே முருகன் தெரிந்து கொண்டான். ‘மீண்டும் நான் திருந்திவிட்டேன்’ என்று வெற்று வாக்குறுதி கொடுத்து அவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை. அதேபோல, அவளைத் தேற்றுகிறேன் என்ற பெயரில் மீண்டும் ஒருமுறை காயப்படுத்தவும் அவன் எண்ணவில்லை. அமைதியாக அவள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான்.

​’இத்தனை தூரம் பேச்சு வளர்ந்த பிறகு எதற்காக ஒளித்து மறைத்துப் பேச வேண்டும்?’ என்று முடிவு செய்த ருக்மணி தொடர்ந்து பேசினாள்:

​“நம்ம கதையைப் போலத்தான் உங்க அம்மாவோட கதையும் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க உங்க அப்பாவோட இன்னொரு முகத்தைப் புரிஞ்சுக்க முடியாத சின்ன வயசுங்கிறதால, உங்க அப்பா நல்லவர்னு இன்னமும் நம்பிட்டு இருக்கீங்க. உங்க அம்மா, எங்க அப்பா கூடப் பிறந்த அத்தைங்கிற காரணத்துக்காக அவங்களுக்குப் பரிந்து பேசுறேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க. ‘பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’னு சொல்லுவாங்க. அதுபோல உங்களையும், உங்க நடவடிக்கைகளையும் பார்த்துப் புரிஞ்சுகிட்டதால, உங்க அப்பாவும் இப்படியேதான் இருந்திருப்பாருன்னு ஒரு அனுமானத்துல சொல்றேன். என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.

​இப்படி தினம் தினம் ஒரு சித்திரவதையை அனுபவிக்கிற பொம்பளை, அடுத்த முறை புருஷன் நெருங்கி வரும்போது ஏமாறுவதற்குத் தயாரா இல்லாமல், எரிந்து விழுந்து விரட்டியிருப்பாள். அதனாலதான் அவளே சண்டைக்காரியா உங்களுக்குத் தெரிந்திருப்பாள். இன்னொரு விஷயம் சொன்னீங்களே… ‘உங்க அப்பா பேசக் கூடாதுன்னு சொன்ன மேஸ்திரி கூடவே அம்மா பேசிட்டு இருப்பாங்க’ன்னு. உங்க அப்பா கொடுக்காத ஆறுதலை இன்னொருத்தர் கொடுத்தா, அவங்க கூட மன அமைதிக்காகப் பேசத் தான் செய்வாங்க. அதுல என்ன தப்பு இருக்கு?

​ஒரு பொம்பளையை இழிவுபடுத்த ஆம்பளைங்க கடைசியா எடுக்குற ஆயுதம்—’அவ நடத்தை கெட்டவ’ அப்படிங்கிற பேருதான். அவ நடத்தையில சந்தேகப்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போறதுதான் ஒரு ஆம்பளத்தனமா? கேவலமா இல்லை? தன்னோட கேவலமான புத்தியைப் பிள்ளைக்கும் விதைத்துவிட்டுப் போறது எவ்வளவு பெரிய துரோகம்! தான் இல்லாத இடத்தில் தன்னைப்போல ஒருத்தனை நிறுத்தி வச்சிட்டுப் போறது எவ்வளவு பெரிய அசிங்கம்! அந்த அசிங்கத்தைத்தான் உங்க அப்பா செஞ்சுட்டுப் போயிருக்காரு.

​நீங்க சொன்னீங்களே, ‘எங்க சித்தப்பா மாதிரி பொறுப்பானவர்’னு… உங்க சித்தப்பா பொறுப்பானவர்தான், அதை நான் ஒத்துக்குறேன். அந்தப் பொறுப்பான மனுஷன், உண்மையிலேயே உங்க அம்மா தப்பானவங்களா இருந்திருந்தா, இப்படிப் பக்கத்துல பங்காளி வீட்டைத் தந்து தங்க வைத்திருப்பாரா? தன்னோட அண்ணனை விட மதினிதான் உசத்தின்னு நினைச்சிருப்பாரா? அன்னைக்கே விரட்டி அடிச்சிருக்க மாட்டாரா? அண்ணன் காணாமல் போனதுக்குக் காரணமா இருந்த மதினிக்கு, எதுக்காக இத்தனை காலம் மதிப்பும் மரியாதையும் கொடுத்துட்டு இருக்காரு? இதைப் பத்தி என்னைக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா மாமா? இப்போ என்கிட்ட சொன்ன மாதிரி, ஒரு நாளாவது உங்க சித்தப்பாகிட்ட, ‘எதுக்காக அம்மாவை இங்கே தங்க வச்சிருக்கீங்க?’ன்னு கேட்டிருக்கீங்களா மாமா?” என்று அவள் கேள்விகளை அடுக்க, “இல்லை” என்பது போல மெல்லத் தலையசைத்தான் முருகன்.

​“நீங்க இந்தக் கேள்வியை உங்க சித்தப்பாவைப் பார்த்துக் கேட்டிருந்தால், இப்படி மனசுக்குள்ளேயே வச்சுப் புழுங்கி, நீங்களும் தப்பா மாறியிருக்க மாட்டீங்க.

​உங்க அம்மா உங்களைக் கொண்டு போய் மேஸ்திரிகிட்ட விட்டுட்டு வந்ததும், மேஸ்திரி உங்களைக் கொத்த வேலைக்கு அனுப்பிட்டாருன்னு சொன்னீங்களே… உதவி செய்றவங்க அவங்களால முடிஞ்ச உதவியைத்தானே செய்வாங்க? உங்க அம்மாவுக்கும் அவருக்கும் தப்பான ஒரு தொடர்பு இருந்திருந்தால், உங்க அப்பா ஓடிப் போறதுக்கு முன்னாடியே உங்க அம்மாவும் ஓடிப்போயிருப்பாங்களே… ஏன் ஓடலை? உங்க அம்மாவுக்காக அவர் எதையும் செய்யத் துணிஞ்சிருந்தா, அந்த மேஸ்திரியே உங்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, உங்க அம்மாவைத் ‘தங்கம்’னு தாங்கி, ‘பொன்னு’ன்னு பாதுகாத்து வச்சிருப்பாரே! அப்படியா செஞ்சாரு? நீங்க, உங்க குடும்பம் சுயமா சம்பாதிச்சு வாழணும்னுதானே உங்களுக்கு ஒரு வேலையை அமைத்துக் கொடுத்தாரு?

​உங்க அப்பா உங்க அம்மாவைச் சந்தேகப்பட்ட மாதிரி, மேஸ்திரியோட பொண்டாட்டி அவரை ஏன் இன்னும் சந்தேகப்பட மாட்டேங்குறாங்க? என்னைக்காவது ஒரு நாள் அந்த அம்மா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னு சண்டை பிடிச்சிருக்காங்களா? அவர் மேல நிஜமாவே தப்பு இருந்தா, இத்தனை நாளா தப்பிச்சிருக்க முடியுமா? மறைமுக வாழ்க்கை எத்தனை நாளைக்குத்தான் வாழ்ந்திட முடியும்? அதை ஏன் நீங்க புரிஞ்சுக்கல மாமா?”

​ருக்மணியின் எந்தவொரு கேள்விக்கும் முருகனிடத்தில் பதில் இல்லை. அவன் விக்கித்துத் தவித்தான். ‘பேசியது போதும்’ என்று நினைத்த ருக்மணி, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

​அவள் கீழ் வீட்டில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். பார்வதியும் அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டார். அவளிடம் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை; அவள் இயல்புக்கு மாறாக நடக்கிறாள் என்றும் எண்ணவில்லை.

​முருகன் அவளைத் தன் மாடி அறைக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவள் கேட்டுவிட்டுச் சென்ற கேள்விக் கணைகள் அவனது மூளையைக் குடைந்து கொண்டிருந்தன. கண்ணை மூடி உறங்க முயற்சி செய்து பார்த்தான், முடியாமல் போனது. இந்த மனப் பரிதவிப்பின் விளைவாக அவனுக்கு உடல் வியர்த்துக்கொட்டியது. தலைநிமிர்ந்து உட்காரக் கூட அவனால் முடியவில்லை. அதனால் விரிப்பில் படுத்துக்கொண்டு, புரண்டு புரண்டு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தான். இதுவே அவனுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட முதன்மைக் காரணமாய் அமைந்தது.

​மறுநாள் காலையில், நேற்று இரவு எதுவுமே நடக்காதது போல சாதாரணமாகச் சென்று முருகனை எழுப்பினாள் ருக்மணி. முருகனும் எந்தவொரு வார்த்தையும் பேசாமல் எழுந்து, தன் வேலைக்காகப் புறப்பட்டுச் சென்றான்.

​ருக்மணி, பார்வதி மற்றும் சரவணன் ஆகியோர் ஒரே மில்லில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையில் பார்வதியும் ருக்மணியும் கேண்டினில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மேஸ்திரி அங்கே வந்தார்.

​பார்வதியைப் பார்த்து, “முருகன் வந்து என்னைப் பார்த்து, என் கையைப் பிடிச்சு மன்றாடி மன்னிப்பு கேட்டுட்டுப் போறான். எதற்காக அப்படி நடந்துக்கிட்டான்னு தெரியல” என்று ஆச்சரியமாகச் சொன்னார்.

​பார்வதிக்கும் அதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. ஆனால், ருக்மணிக்கு விஷயம் பளிச்சென்று விளங்கியது.

​“அத்தே… நேரம் ஆகுது, சீக்கிரம் சாப்பிடுங்க” என்று துரிதப்படுத்துவதைப் போல, அந்தப் பேச்சுக்கு உடனே முட்டுக்கட்டையிட்டாள்.

​“அடி இருடி!” என்று ருக்மணிக்குப் பதில் சொல்லிவிட்டு, மேஸ்திரியிடம், “சரின்ணே, என்ன ஏதுன்னு கேட்டுட்டு அப்புறமா சொல்றேன்” என்று கூறிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினார் பார்வதி. மேஸ்திரியும் சரி என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.

​மாலையில் வேலையை முடித்துக் கொண்டு வந்த முருகன், தன் தாய் பார்வதியை அழைத்து, அவரது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “என்னை மன்னிச்சிடும்மா” என்று உருகினான்.

​மதியம் மேஸ்திரி சொன்னதை மறந்தே போன பார்வதிக்கு, முருகன் மீண்டும் வந்து மன்னிப்பு கேட்டதும் மேஸ்திரியின் ஞாபகம் வந்தது.

​பார்வதி, “மன்னிப்பு கேட்கணும்னு ஏதாவது வேண்டுதல் வச்சிருக்கியாடா?” என்று கேட்டார்.

​“இல்லம்மா… நான் என் உயிர் போற வரைக்கும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டே இருந்தாலும் தப்பில்லைம்மா…” என்று சொன்னவன், சட்டென்று பார்வதியின் காலில் விழுந்து, காலைக் கட்டிக்கொண்டு கதறி அழுதான்.

​பார்வதிக்கு முருகனின் செயல்களைப் பார்த்துப் பித்து பிடித்துவிட்டதோ என்று தோன்றியது. “ஐயோ காலை விடுடா… காலை இழுத்துத் தள்ளிவிட்டுடாதே!” என்றபடி, நின்ற இடத்திலேயே அமர்ந்து கொண்டு அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். “என்ன ஆச்சு? இன்னைக்கு ஏன் இப்படி நடந்துக்கிறே? எலுமிச்சம்பழம் வேணா பிழிஞ்சு கொடுக்கட்டாய்யா?” என்று கரிசனத்தோடு (பதற்றத்துடன்) கேட்க…

​சமையலறையில் நின்று கொண்டிருந்த ருக்மணி, தன் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள். அதே நேரத்தில், மாமியாரின் இந்த எகத்தாளப் பேச்சு (நையாண்டி), முருகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை மீண்டும் எழுப்பிவிட்டு விடுமோ என்றும் பயந்தாள்.

​ஆனால் முருகன் திருந்தி நெடுநாட்கள் ஆகிவிட்டதே, இதற்கெல்லாம் அவன் எதற்காகக் கோபப்படப் போகிறான்? “எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும்னு பயப்படுறியாம்மா…?” என்றான் மெதுவாக.

​“எதுக்கு இப்படி கண்ணுல கண்டவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுட்டு இருக்கேன்னு தெளிவா சொல்லிட்டா, நானும் பயப்படாம இருப்பேன்ல ராசா…”

​“அப்பா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னாடி, உன்னையும் மேஸ்திரி மாமாவையும் சேர்த்து வச்சு தப்புத் தப்பா என்கிட்ட சொன்னாரும்மா. அன்னைக்கு அதை உண்மைன்னு நினைச்ச நான், இன்னைக்கு வரைக்கும் அந்த நினைப்பை மாத்திக்காமலேயே இருந்துட்டேன். உங்க ரெண்டு பேரோட அருமை எனக்குப் புரியாமலே போயிடுச்சும்மா… நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு எடுத்துச் சொல்ல இன்னொரு ஆள் தேவைப்பட்டிருக்கும்மா… என்னை மன்னிச்சிடும்மா,” என்று அவன் அழுதான்.

​இத்தனை நாட்களாகத் தான் பெற்ற பிள்ளையே தன்னைத் தவறாக எண்ணிக்கொண்டிருந்திருக்கிறான் என்பது பார்வதிக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அதுவரை இயல்பாக இருந்த அவரது முகம் அப்படியே இருண்டு போனது.

​பார்வதி மெல்லிய குரலில், “பிள்ளைகளுக்காக வாழ்ந்து ஜெயிச்சுட்டேன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா, நான் இவ்வளவு காலம் ஏமாந்து போயிருந்தேன்னு இப்பதான் தெரியுது. ஆனாலும், என் பிள்ளை இப்போதாவது என்னை புரிஞ்சுகிட்டானேன்னு நினைக்கும் போது ஆறுதலா இருக்குடா” என்றார்.

​முருகன், “என்னை மன்னிப்பியாம்மா?”

​“நான் மன்னிக்காம எங்கடா போகப் போறேன்? இப்போவே இந்த பேச்சை இதோட விட்டுடு. மேஸ்திரி மாமாகிட்ட என்னைக்கும் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தக் கூடாது. பாவம், அவரு வருத்தப்படப் போறாரு. நமக்கு உதவிக்கு வந்தது ஒரு குத்தமானு அவரு யோசிச்சுடப் போறாரு,” என்றார் பார்வதி பெருந்தன்மையுடன்.

Click on a star to rate it!

Rating 3.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்