
மரம் தேடும் மழைத்துளி 18
சுபத்ராவின் வீட்டு வாசலில் சொந்தபந்தங்கள் நிறைந்த வேன் ஒன்று வந்து நின்றது.
மணி, “அன்னம்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. செத்த முன்னாடி வா” என்று அன்னத்தை அழைக்க, அன்னமும் வேகமாக வாசலுக்கு வந்து நின்றாள்.
வேனிலிருந்து இறங்கி வரும் சரவணன் வீட்டாரை, மணியோடு சேர்ந்து நின்று கைகூப்பி, “உள்ள வாங்க… உள்ள வாங்க…” என்று வரவேற்றாள்.
தரகர் மணியிடம், “அண்ணாச்சி சவுக்கியங்களா?” என்று நலம் விசாரித்தபடி அருகில் வந்து நின்றுகொண்டு, சரவணன் குடும்பத்தினருக்கு மணி மற்றும் அன்னத்தை, “இவங்கதான் பொண்ணோட அப்பா அம்மா” என்று வாசலிலேயே அறிமுகம் செய்து வைத்தார்.
கிருஷ்ணரும் லட்சுமியும் வணங்கியபடி, “நாங்கதான் மாப்பிள்ளையோட அப்பா அம்மா” என்று தங்களைச் சுயமாக அறிமுகம் செய்து கொண்டார்கள்.
அன்னம், “வணக்கம் அண்ணி, வணக்கம் அண்ணே… உள்ள வாங்க. மத்ததை வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்” என்று வரவேற்க, அனைவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
விசாலமான அந்த வீட்டின் முன் அறையில், இருபுறமும் மரத்தாலான பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. வந்தவர்களை அதில் அமரச் சொன்னார்கள். ஆண்கள் அனைவரும் பெஞ்சில் அமர்ந்து கொள்ள, பெண்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்தார்கள்.
தரகர் மணியை நோக்கி, “அண்ணாச்சி, சொந்தக்காரங்க யாரையும் அழைக்கலையா?” என்று கேட்க,
மணி, “பொண்ணு பாக்குறதுதானே… பூ வைக்கிறதுக்கும் நிச்சயதார்த்தத்துக்கும் அழைச்சுக்கலாம்னு யாருக்கும் சொல்லல” என்றார்.
அந்த அறையின் வாசலில் வந்து நின்ற மீனா மற்றும் உமாவைப் பார்த்த
சுசீலா (சுந்தரியின் மாமியார்), “உங்களுக்கு மொத்தம் மூணு பொண்ணா?” என்று மணியிடம் கேள்வி கேட்டார்.
மணி, “இல்லல்ல… எனக்கு ஒரே பொண்ணுதான். இவங்க ரெண்டு பேரும் என் பொண்ணுகூட படிச்சவங்க” என்றார்.
அன்னம் உமாவைப் பார்த்து, “வந்திருக்கவங்களுக்கு நீ காபி எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, மீனாவிடம், “நீ சாப்பிட எடுத்து வச்சிருக்கிறதைக் கொண்டு வந்து கொடு” என்றார்.
தரகர், “அன்னம்மா… பிள்ளைகளை ரொம்ப விரட்டாதீங்க, பயப்படுற மாதிரி தெரியுது” என்க,
அன்னமோ, “காலையிலிருந்து ஒரு வேலையும் பாக்கல. இவளுக ரெண்டு பேத்துக்கும் நான்தான் எடுபிடி வேலை பார்த்துட்டு இருக்கேன். சுபாவை அலங்காரம் பண்ணப் போறோம்னு அங்க போய் உட்கார்ந்துட்டாளுக. இப்போ சமையல்கட்டுல எடுத்து வைத்திருக்கிறதைக் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னா, விரட்டி வேலை வாங்குறேன்னு சொல்றீங்க! பாக்குறதுக்குத்தான் பயந்த பிள்ளைகள் மாதிரி தெரியுவாளுக, ஆனா மத்தவங்களை பயங்காட்டிடுவாளுக!” என்றாள்.
அன்னம் சொன்ன தொனியில் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
மணி, “அதெல்லாம் இருக்கட்டும்… சம்பந்தக்காரங்க வீட்டுல இருக்கிற உறவுக்காரங்க யார் யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று கேட்க,
கிருஷ்ணன் அங்கிருந்த அனைவரையும் ஒவ்வொருவராக உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். மணியும் அன்னமும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நின்றார்கள்.
உமாவும் மீனாவும் வந்திருந்தவர்களுக்குக் காபியும் பலகாரமும் கொடுத்து உபசரித்தார்கள். இத்தனை கலகலப்பு, கலவரங்களுக்கு நடுவில் குனிந்த தலை நிமிராமல் அமைதியாக அமர்ந்திருந்தான் சரவணன்.
சுசீலா, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க… அப்பவாவது மாப்பிள்ளை தலை நிமிர்ந்து பார்க்கிறாரான்னு பாக்கலாம்” என்றார்.
சரவணனுடன் அமர்ந்திருந்த முருகன், அவனைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “அவன் எப்போதுமே அமைதியானவன்; புது இடத்தில கொஞ்சம் கூச்சப்படுவான்” என்றான்.
கிருஷ்ணன் ருக்மணியிடம், “இந்த பிள்ளைகளோட போய் பொண்ணைக் கூட்டிட்டு வாம்மா” என்று சொல்ல, ருக்மணி எழுந்து நின்றாள்.
அவளோடு மீனாவும் உமாவும் சுபத்ராவை அழைத்து வர அறைக்குள் சென்றார்கள்.
நீளவாக்கில் அமைந்திருந்த, ஆறு பத்திகளை உடைய அந்த வீட்டின் கடைசியில் இருக்கும் சமையற்கூடத்திற்குப் பக்கத்து அறையில், ஒரு புதுவிதமான பரிதவிப்போடு அமர்ந்திருந்தாள் சுபத்ரா.
ருக்மணி, மீனா மற்றும் உமாவோடு ஒவ்வொரு அறையாகக் கடந்து வரும்போது, ‘இவ்வளவு நீளமான வீடா!’ என்று பிரமித்துக்கொண்டே வந்தாள்.
சுபத்ராவைக் கண்டதும் புன்னகைத்தாள் ருக்மணி.
பதிலுக்குச் சுபத்ராவின் இதழ்களும் மலர்ந்தன. ருக்மணி ஏதேனும் பேச வேண்டுமே என்பதற்காக, “உங்க வீடு ரொம்ப நீளமா இருக்கே… இவ்வளவுதானா?” என்று சுபத்ராவிடம் கேட்க,
சுபத்ரா, “சமையல்கட்டைத் தாண்டி கொல்லைப்புறம் இருக்கு, அதுல ஒரு கிணறு இருக்கு… அவ்வளவுதான்” என்று சாதாரணமாகச் சொன்னாள்.
உமா ருக்மணியைப் பார்த்து, “நீங்க மாப்பிள்ளையோட தங்கச்சியா?” எனக் கேட்க, ருக்மணி இல்லை என்று தலையசைத்தாள்.
“இல்ல… வந்தவுடனே வீட்டோட மதிப்பை கணக்கு பண்றீங்களே, அதனால நாத்தனாரா இருப்பீங்களோன்னு ஒரு டவுட்ல கேட்டேன்… சாரி!” என்றாள் உமா.
சுபத்ரா தன் கண்களை உருட்டி, உமாவைப் பயமுறுத்துவது போல் மிரட்டினாள்.
உமாவோ, “சரிம்மா… நான் வாயைத் திறக்கல” என்று அமைதியானாள். ருக்மணியும் மீனாவும் ‘களுக்’ என்று சிரித்தார்கள்.
மீனா, “நாங்க எப்பவும் இப்படித்தான் பேசிப்போம், நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று ருக்மணியிடம் கூற, அதற்கும் ‘சரி’ என்பது போல் புன்னகையுடன் தலையாட்டினாள் ருக்மணி.
ருக்மணி கட்டியிருக்கும் புடவையின் நேர்த்தியைப் பார்த்த சுபத்ரா, “எனக்கும் இது மாதிரி கட்டுறதுக்குச் சொல்லிக் கொடுப்பீங்களா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அன்னம் அங்கு வந்துவிட்டார்.
அன்னம் ருக்மணியிடம், “என்னம்மா… நீயும் இவகளோடு சேர்ந்து அரட்டை அடிக்க நின்னுகிட்டே?” என்று உரிமையோடு கேட்க,
ருக்மணி, “இல்லம்மா… இந்தா அழைச்சிட்டு வாரேன்” என்றாள்.
சுபத்ரா அன்னத்திடம், “யாரு எவருன்னு தெரியாத ஒருத்தர் ‘வாம்மா’ன்னு கூப்பிட்டதும் கூடவே எந்திரிச்சு போயிடுவோமா? நீங்க யாருன்னு கேள்வி கேட்க மாட்டோமா? அதுமாதிரிதான் அவங்க வந்து பேசிட்டு இருக்காங்க. அதைப்போய் அரட்டை அடிக்கிறாங்கன்னு அசால்டா பேசுறீங்க… அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்ற நினைப்பு உங்களுக்கு இருக்கா இல்லையா?” என்று மிரட்டும் தொனியில் தன் தாயைக் கேட்க,
ருக்மணி புன்னகையை மறைத்துக் கொண்டு அன்னத்தைப் பார்த்தாள்.
அன்னம் ருக்மணியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, சுபத்ராவிடம்,
“பொண்ணு சரியான வாயாடி கழுதைன்னு இந்த பிள்ளை போயி வீட்ல சொல்லப் போகுதுடி” என்றார்.
முன் அறையிலிருந்து மணியின் குரல் கேட்டது, “எம்மா… வெளியில வாங்க.”
அன்னம், “அப்பா கூப்பிடுறாரு, கிளம்புடி” என்று ஒருபுறம் கையைப் பிடித்து இழுக்க, மறுபுறம் ருக்மணி சுபத்ராவின் கையைப் பிடித்துக் கொள்ள, இருவரும் அவளை முன் அறைக்கு அழைத்து வந்தார்கள். மீனாவும் உமாவும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
“பொண்ணு லட்சுமி கடாட்சமா இருக்கு” என்று லட்சுமி சொல்ல, “அதனாலதான் லட்சுமியோட வீட்டுக்கு மருமகளா வரப்போறா” என்றார் கிருஷ்ணன்.
சுபத்ரா ஓரவிழியால் அமர்ந்திருக்கும் ஆண்களில் மாப்பிள்ளையைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டாள். தலைநிமிராமல் அமர்ந்திருக்கும் சரவணனின் கண்ணியம் அவளுக்குப் பிடித்திருந்தது. சரவணன் அழகிலும் மோசமில்லை; மாநிறமாக இருந்தாலும், கம்பீரமான தோற்றத்தில் மிடுக்காக இருந்தான்.
சுசீலா சுபத்ராவை நோக்கி, “உன்னோட பேரு என்னம்மா?” என்று கேட்க, “என் பேரு சுபத்ரா” என்றாள் அவள்.
சுசீலா சரவணனிடம், “மருமகனே… பொண்ணு எப்படி நிமிர்ந்து கம்பீரமா பதில் சொல்றா! நீங்க ஏன் குனிந்த தலையை நிமிர மாட்டேங்குறீங்க?” என்றார். உடனே, புன்னகைத்த முகத்தோடு நிமிர்ந்து அமர்ந்தான் சரவணன்.
சுசீலா, “பொண்ணை நல்லா பாத்துக்கோங்க” என்று சரவணனிடமும், “நீயும் மாப்பிள்ளையை நல்லா பாரும்மா” என்று சுபத்ராவிடமும் சொல்ல, இருவரும் அடக்கப்பட்ட புன்னகையோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சுசீலா, “ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குல்ல?” என்று கேட்டதும், இருவரும் ஒருசேர ‘பிடிச்சிருக்கு’ என்பது போல் தலையசைத்தார்கள்.
சுசீலா, “சம்பந்தக்காரங்க ரெண்டு பேரும் மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசுங்க” என்றார்.
கிருஷ்ணன், “எங்களுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருந்தால் காலம் கடத்தாமல் சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்” என்றார்.
மணி, “எங்களுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு. பங்குனி, சித்திரை கழியட்டும்… வைகாசியிலே கல்யாணத்தை நடத்திடலாம்” என்றார்.
குருசாமி (சுசீலாவின் கணவர்), “வைகாசியில கல்யாணத்தை வச்சுக்கோங்க. அதுக்கு முன்னாடி ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்” என்றார்.
தரகர், “வர்ற வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள்தான். அப்போ முதல்ல பொண்ணுக்குப் பூ வச்சுக்கிடுவோம். அப்புறம் ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சுட்டு வந்து, ஒரு நாள் நிச்சயதார்த்தமும், வைகாசி மாசம் கல்யாணமும் வச்சுக்கிடுவோம்” என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னார்.
அன்னம், “தரகர் சொன்னபடியே செஞ்சுக்கலாம்” என்க, லட்சுமியும், “எங்களுக்கும் பரிபூரண சம்மதம்” என்று தெரிவித்தார். அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அன்றைய இரவுப் பொழுது… மாடியில் இருக்கும் தனி அறையில், ருக்மணியின் அருகில் வந்து அமர்ந்தான் முருகன்.
ருக்மணியின் கையை ஆசையோடு பிடித்தவன், “என் தம்பிக்கு பார்த்திருக்கிற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ இல்லையா ருக்கு?” என்றான்.
“உங்க தம்பியும் கொடுத்து வச்சவர்தான். நல்ல பொண்ணு, ஒரே பொண்ணு, நிறைய சொத்துப்பத்து இருக்கிற இடம்” என்றாள் ருக்கு.
“என்னதான் சொத்துப்பத்து இருந்தாலும், சரவணன் மாதிரி மாப்பிள்ளை கிடைக்கிறதுக்கு அவ கொடுத்து வச்சிருக்கணும் ருக்கு. என்னை மாதிரி சரவணன் குடிகாரன் கிடையாது, அயோக்கியத்தனம் பண்ணத் தெரியாதவன், பொண்டாட்டியை மரியாதையா நடத்தத் தெரிஞ்சவன். அந்த வகையில அந்தப் பொண்ணு ரொம்ப பாக்கியசாலி” என்றான்.
ருக்மணி அவன் முகத்தை ஆழமாகப் பார்த்தாள்.
“இப்போ நான் நல்லவனா இருக்கலாம். ஆனா ஆரம்பத்துல உன்னை ரொம்ப மோசமா நடத்திட்டேனே… என்னை மாதிரி பொண்டாட்டியை நடத்தக் கூடாதுன்னு என் தம்பி அவன் மனசுல உறுதிமொழி எடுத்திருப்பான்ல, அதான் சொன்னேன்” என்று எதார்த்தமாகச் சிரித்தான்.
ருக்மணி, “நான் உங்களைக் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா… எதனால ஆரம்பத்துல உங்களுக்கு என்னை பிடிக்கல?” என்று வெளிப்படையாகவே கேட்டாள்.
முருகன், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ருக்கு. நீயும் எங்க அம்மா பிறந்த வீட்டுலேயே பிறந்த பிள்ளையா இருக்கிறதால, எங்க அம்மாவோட குணம் உனக்கும் இருக்குமோன்னு ஒரு பயம், ஒரு தயக்கம் எனக்குள்ள இருந்தது” என்றான்.
“உங்க அம்மாவுக்கு அப்படி என்ன குணக் குறைபாடு?”
“எங்க அம்மாவும் நல்லவதான்… ஆனா அவளுக்கு எங்க அப்பாவைப் பார்த்தாலே பிடிக்காது. அமைதியா இருக்கிற வீட்டுல அவரைப் பார்த்த உடனே சண்டைக்கு இழுப்பாள். எங்க அப்பாவும் நல்ல மனுஷன்தான், எங்க சித்தப்பாவைப் போல அவரும் பொறுப்பானவர். ஆனா எதுக்கு எங்க அம்மாவுக்கு அவரைப் பிடிக்கலைன்னு தெரியல. எங்க அப்பாவுக்குப் பிடிக்காத விஷயத்தையே பார்த்துப் பார்த்துச் செய்வாள்.”
“எங்க அப்பா அவளை வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னாரு. ஆனா எங்க அம்மா வீம்புக்காக வேலைக்குப் போய், அங்க இருக்கிற மேஸ்திரிகள்கூட சகட்டுமேனிக்குப் பேசிச் சிரிக்கிறதும், விளையாடுறதுமா எங்க அப்பாவை வெறுப்பேத்துவாள். ஒரு கட்டத்துல எங்க அப்பா, ‘அந்த மேஸ்திரியை நீ வச்சிருக்கியா?’ன்னு கோபத்துல கேட்டு சண்டை போட ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கு பிறகாவது எங்க அம்மா வேலையை விட்டு நின்றிருக்கணும். ஆனா அவ, எங்க அப்பா கேட்ட கேள்விக்கு ‘ஆமா’ன்னு வீம்புக்குப் பதில் சொல்லிட்டு, வேலையைத் தொடர்ந்து பார்க்கக் கிளம்பிட்டா.”
“இவளோட இருந்து தினம் தினம் சண்ட போட முடியாமல் எங்க அப்பா வீட்டை விட்டு வெளியேறி போயிட்டாரு. நான் அஞ்சாப்பு வரைக்கும் தான் பள்ளிக்கூடம் போனேன். என்னை அதுக்கப்புறம் எங்க அம்மா அந்த மேஸ்திரிகிட்டயே கூட்டிட்டு போய், அவருக்குத் தெரிஞ்ச கொத்தனார் கூட வேலைக்கு அனுப்பி வச்சுட்டா…”

