Loading

அவள் பயந்துக் கொண்டு கண்களை மூடியநொடி அவனது கைகள் அந்தரத்திலேயே நின்றது. ஏனோ அவளது முகபாவனை அவனை சுண்டி இழுத்தது. வசீகரிக்கும் புன்னகையினை உதிர்த்தவன் அவளையே இமை மூடாதுப் பார்க்க, அவன் அடிக்காமல் இருப்பதை உணர்ந்த பெண்ணவளோ கண்களைத் திறந்தாள்.

 

“எதுக்கு இப்படி சிலை மாதிரி நிற்குறீங்க?”

 

“கோவில் சிலை மாதிரி இருக்க உன்னை பார்க்குறதுக்கு நானும் சிலை மாதிரி நிற்கலாம் தப்பில்லை.” அவன் வாய் அவனுக்கே கேட்கும் வண்ணம் முணுமுணுத்தது.

 

“என்ன சொல்றீங்க?”

 

“நான் என்ன சொன்னா உனக்கு என்ன வந்தது…மேடம்? அப்புறம் சொல்லுங்க மேடம் என்ன பண்ணலாம்?”

 

“என்ன பண்ணனும்?”

 

“ம்ம்ம்… லவ் பண்ணுவோமா?”

 

“அடிங்கு. என்ன பேசுற நீ? இப்படி தப்பா பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்.”

 

“ஓய் என்ன மரியாதை குறையுது. சும்மா விளையாட்டுக்கு சொன்னா, உடனே பொங்கிடுவியா? ஓ உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா. என் ரேஞ்ச் என்ன? என் பெர்ஸ்னாலிட்டி என்ன? அதுக்கு எல்லாம் துளியும் சம்மந்தமில்லாத உன்னை போய் எப்படி நான் லவ் பண்ணுவேன்னு நீ நினைக்கலாம். காமெடி பண்ணிட்டு.” என்றவன் சிரிக்க அவளுக்கோ கோபம் தலைக்கேறியது.

 

‘திருட்டு பையன் என்னலாம் பேசுறான்? முன்ன பின்ன முகத்த கண்ணாடியில பார்த்திருப்பானானேனு டவுட்டா இருக்கு. இதுல சார்க்கு உலக அழகன்னு வேற நினைப்பு.’ மனதில் வறுத்தெடுத்தவள் அவனை முறைத்தாள்.

 

“ஹலோ ரொம்ப பேசுறீங்க? உங்களை விடவே நான் அழகு தான்.”

 

“அழகா..?நீயா? அத நான் சொல்லணும்” என்றவன் வயிற்றை பற்றிக் கொண்டு சிரிக்க, அவன் சிரிப்பு அவளை மேலும் கடுப்படையச் செய்தது.

 

“இங்க பாருங்க எனக்கு கோபம் வருது. கோபத்துல அடிச்சேனா தாங்க மாட்டீங்க?”

 

“ஏம்மா, இப்படி மறுக்கா மறுக்கா காமெடி பண்ற?” மேலும் அவன் சிரிக்க, அவனை மாறி மாறி ஆணவனின் நெஞ்சின் மீதே தன் கைகளால் அடித்துவிட்டாள். 

 

அவனும் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே சுதாரித்தவன் பெண்ணவளின் இரு கைகளையும் பற்றி அவள் தன்னை அடிக்காதவாறு அணைத்துக் கொள்ள, மிக நெருக்கமாக அவனை ஒட்டி நின்றவள் திடுக்கிட்டு போனாள்.

 

“எவ்வளவு தைரியம் இருந்தால் என்னையவே அடிப்ப? உன்னை என்ன பண்ணலாம்.” 

 

“அய்யோ சாரி திருடன் சார். என்னை மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் இப்போ என்னை விடுங்க.”

 

“அதெல்லாம் விடமுடியாது. என்னையவே அடிக்குற அளவுக்கு வர்ற, உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.”

 

“தெரியாமல் பண்ணிட்டேன். உங்களை மாட்டி கூட விடமாட்டேன். ப்ளீஸ் என்னை விடுங்க.” 

 

“பண்ண தப்புக்கு தண்டனை தராமல் விடுறதா… வாய்ப்பு இல்லை.” என்றவன் அவளை சுழற்றி மறுபுறம் திருப்ப, அவளது முதுகு அவனது நெஞ்சோடு அழுந்தியது. ஆணவனது முகத்திலோ பெண்ணவளின் கார்க்கூந்தல் அடித்துக் கொண்டே இருந்தது. அவளும் அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் அவனோ அவளை இறுக்கமாக பிடித்தபடி நின்றான். 

 

அவள் முன்புறமாக நோக்கி இருந்ததால் அவன் முக பாவனை அவளுக்கு தெரியவில்லை. நந்தா புன்னகையுடன் நின்றான். ‘என் செல்லக்குட்டி, என் அழகி.’ என்று மனதில் அவளைக் கொஞ்சியபடி பெண்ணவளின் கார்க்கூந்தலின் வாசனையை நுகர்ந்தான்.

 

“ஹாஹா, என்ன மீரா சீயக்காய் வாசனை ஆளை தூக்குதே.” என்றவன் கூறவும் அவள் கோபம் கொண்டாள்.

 

“என்ன?”

 

“என்ன மேடம் கத்துற? பக்கத்து ட்ரேல மீரா சீயக்காய் சரம் தொங்குது பார். அதோட வாசனை உனக்கு வரலை.”

 

“அது வந்தா என்ன? வரலைனா என்ன? ப்ளீஸ் என் கையை விடுங்க. உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் தரேன் முதல்ல என்னை விடுங்க.” என்றவள் கூறியநொடி அவனது பிடி விலகியது.

 

“மெய்யாலுமே துட்டு தருவியா?”

 

“சத்திரமா தரேன்.”

 

“அப்போ விடுறேன்.” என்றவன் அவளது கைகளை விடுத்து தள்ளிவிட, பதறி போய் கீழே விழுந்தாள் மது.

 

‘ராட்சசன் பணம்னு சொன்னதும் எப்படி ஃபோர்ஸா தள்ளுறான் பாவி பைய.’ என்றவள் மனதில் அவனை வறுத்தெடுத்தாள்.

 

‘இவனுக்கு பணம் கொடுத்தால் நம்மளை விட்ருவான்.’ என்று அவள் மனம் நினைக்க, அதையும் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் கூறினாள்.

 

“என்ன பார்த்தால் எப்படி தெரியுது?” என்றவன் முறைக்கவும், “அவ்வளவு நல்லவனா சார் நீங்க?” என்றிவள் கேட்க,

 

“எனக்குனு ஒரு டிக்னிட்டி இருக்கு. இந்த மாதிரி தானா வந்து சிக்கியிருக்குற… உன்கிட்ட போய் பணம் வாங்குவேனா? இதுவே எனக்கு எதாவது வொர்க் கொடு. எவன் மண்டையாவது பொளக்கணுமா? பொளக்குறேன், அதுக்கு வேணா நீ டபுள் மடங்கா பணம் கொடு சரியா.” 

 

‘அதானே பார்த்தேன்.’ என்று சலிப்புடன் பார்த்தாள் மது.

 

“இப்போ சொல்லு. என்னை பத்தி என்ன நினைக்குற?”

 

“நீங்க கடமை தவறாத திருட்டு வேலை புரியும் தர்மாவான்னு நினைக்குறேன் திருடன் சார்.” என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி அவள் கலாய்க்க, “எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.” என்று பெருந்தன்மையாக பதிலளித்தான் நந்தா.

 

“சரி இதுக்கு மேல இங்க இருக்கிறது சரியா வராது. என்னோட வா. உன்னை பத்திரமா வெளிய கூப்பிட்டு போறேன்.”

 

“உன்னை நம்பி எல்லாம் வரமுடியாது.” 

 

“என்ன சொன்ன? என்ன நம்பி…”

 

“அய்யோ திருடன் சார், நீங்க போங்க. நான் இங்கயே தங்கிக்குறேன்.”

 

“எதுக்கு நான் போனதும் என்னை நீ மாட்டி விடவா. அது எல்லாம் முடியாது வா மிஸ் மது.” என்றவன் அவளது இருகைகளையும் பற்றி அழைத்தபடி செல்ல வேறு வழியின்றி அவனோடு சென்றாள் மதுவர்ணிகா. அவன் வந்த வழியிலேயே அவளையும் அவன் அழைத்துக் கொண்டு செல்ல, அந்த வழியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். 

 

“இங்க இருந்து கீழ குதிக்கணுமா? என்னால முடியாது.”

 

“உன்கூட நான் இருக்கேன்ல நம்பி வா.” என்றவன் அவளை கைப்பிடித்து அழைத்து அவன் ஏறி வந்த கயிற்றிலேயே இறங்க சொன்னான். முதலில் மறுத்தவள் அவனது அதட்டலில் வேறுவழியின்றி கயிற்றை பற்றிக்கொண்டு கீழே பார்க்க, பயந்தவள் பாதி வழியிலேயே கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

 

“அய்யய்யோ பயமா இருக்கு இதுக்கு மேல நான் போக மாட்டேன்.” என்றவளது உடல் அன்னிச்சையாக நடுங்கியது.

 

“வாய் மட்டும் இல்லைனா உன்னை எல்லாம் நாய் தூக்கிட்டு போயிடும். சரியான பயந்த பேடியா இருக்க.” என்றவன் அவளை கழுவி ஊற்ற,

 

“யோவ் உனக்கு அறிவு இருக்காயா? கீழ விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.”

 

“பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன். இறங்குறியா இல்லை கீழ தள்ளி விடவா?”

 

“இல்லை இறங்கிடுறேன்.” என்றவள் ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி மெதுவாக இறங்கத் தொடங்கினாள்.ஒரு வழியாக அவள் இறங்கியதும் அவனும் இறங்கினான். கயிற்றை பற்றிய அவளது கைகள் சிவந்து போனது. அதன் எரிச்சல் மேலோங்க கைகளை ஊதியவள், இது அனைத்திற்கும் காரணம் நீ தான்டா சண்டாளா என்று பார்வையாலே அவனை முறைத்தாள் இந்த பாவை.

 

“இப்போவாவது போக விடுவியா? இல்லை பின்னாடியே வரப் போறியா?”

 

“இந்த ராத்திரில தனியா போய்டுவியா நீ?”

 

எங்கு தன்னுடைய ஸ்கூட்டி இங்கேதான் நிற்கிறது என்று கூறினால் அதையும் பறித்துவிடுவானோ என்கின்ற பயத்தில் மறைத்தவள், “அது எல்லாம் போயிடுவேன். உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாங்க திருடன் சார்.” என்றாள் சமாளிப்பாக.

 

“சரி வா பஸ் ஸ்டாப் வரை துணைக்கு வரேன்.”

 

“அய்யோ அது எல்லாம் எதுக்கு நான் பார்த்துக்கிறேன். எப்படியும் பஸ் வரப் போறதில்லை.”

 

“அதுதான் நானும் யோசிச்சேன். அதுவரைக்கும் உனக்கு பாதுகாப்பா நிற்குறேன். விடிஞ்சதும் பஸ் வரும் நீ ஏறி போயிடு.”

 

‘இவன் விடமாட்டான் போலயே.’ என்று தவித்துப் போய் பார்த்தாள் மது. நந்தாவின் கண்கள் கூட கேணியைத் தேடியது. அவளது கைகளை பற்றியபடி அவள் விருப்பத்தைக் கூட கேட்காது அழைத்துக் கொண்டு சென்றவன் கேணியை ஒருபுறம் தேட, அவ்விடம் சாலையில் இருவரையும் கடந்து சென்றது காவல் துறையின் வாகனம்.

 

“அய் போலீஸ்” என்றவளோ உற்சாகமாக கூற,

 

“அடிங்கு… மாட்டிவிட நினைச்ச மவளே ரிலீஸ் ஆகி வந்தாவது தேடி உன்னை வெட்டுவேன்.” என்றவன் மிரட்டவும் அரண்டு போனாள் மது.

 

“என்ன இப்படி எல்லாம் பேசுற?” என்றவள் அவனது முறைப்பைக் கண்டதும், “பேசுறீங்க?” என்றாள் கலவரத்துடன்.

 

“அடுத்து இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன். செயல்ல காட்டுவேன்.” என்றதும் வாயை மூடிக்கொண்டாள் மது.

 

போலீஸ் வாகனமோ இருவரையும் கண்டதும் திரும்பி வந்தது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் இருவரையும் இந்நேரத்தில் தனியாக நிற்பதைக் கண்டு விசாரிக்க, தாங்கள் இருவரும் காதலர்கள் என்று வாய்க்கு வந்த பொய்யினை எல்லாம் அவன் கூற, வாயிருந்தும் பேச இயலாத நிலையில் தவித்துப் போய் நின்றாள் மது.

 

“இந்த நேரத்துல இங்க சுத்த வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லுங்க? என்னடா பிராத்தலா?” என்றவர் இருவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பேச, மதுவின் கண்கள் கலங்கியது என்றால் உடல் கூசி போய் நின்றாள்.

 

“சார், தப்பா பேசாதீங்க. எதையும் விசாரிக்காமல் இப்படி பேசுறது ரொம்ப தப்பு” என்றவன் ஆள்காட்டி விரல் நீட்டியபடி கோபத்தில் கூற, இன்ஸ்பெக்டரது கோபம் அதிகரித்தது. இருவரைம் விசாரிப்பதற்காக மிரட்டி இழுத்து சென்று விட்டார்.

 

காவல் நிலையத்திற்குள் காலடி வைத்த மதுவிற்கு கோபமாக வந்தது. “எல்லாம் உன்னால தான். ஏன் என்ன அசிங்கப்படுத்துன? நான் தான் வரலைனு சொன்னேன்ல.” என்றவள் கண்கள் கலங்கிப் போய் அவனை முறைத்தாள்.

 

“சாரி மது. இந்த விசயத்தை நான் சரி பண்றேன்.” என்றவன் இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசத் தொடங்கினான். 

 

“சார், உண்மையாவே நாங்க லவ்வர்ஸ் சார். நான் வேணா இங்கயே இருக்கேன். அவளை மட்டும் வீட்டுக்கு அனுப்பிடுங்க.”

 

“என்னடா, எந்த ஊருல இந்த நேரத்துல லவ்வர்ஸ் ஜோடியா சுத்திட்டு இருப்பாங்க. பொய்யா சொல்ற? இதுல என்ன பார்த்து கை வேற நீட்ற?” என்றவர் ஓங்கி அறைய,

 

“சார், தப்பு எதுவும் சரியா விசாரிக்காமல் என்னை நீங்க அடிக்குறதே தப்பு.” என்றவன் முறைத்தான்.

 

“பொறுக்கி நாயே என்னையவே எதிர்த்து பேசுறியா? மீடியா முன்னாடி உங்க இரண்டு பேரோட போட்டோ போட்டு கிழிக்குறேன். அப்போ சொல்லு உன் உத்தம நியாயத்தை.” என்றவர் அவனை பிடித்து தள்ளியிருக்க, அதைக் கண்ட மதுவிற்கோ தூக்கி வாரிப்போட்டது.

 

“சார், நான் தப்பான பொண்ணு இல்லை. எங்க அப்பாக்கு வேணா போன் பண்ணி கேளுங்க.” என்றவள் கலங்கிய விழிகளுடன் கூற, அவரோ அவளை ஏளனமாக பார்த்தார்.

 

“இப்போ மீடியா ஆளுங்க வருவாங்க. அவங்ககிட்ட போய் சொல்லு. ச்சீ போ.” என்று உதாசீனமாக பேசிவிட்டு அவர் சென்றுவிட நடுங்கிப் போனாள் பெண். அவளைப் பார்த்து பாவம் கொண்ட கான்ஸ்டபிள் ஒருவர் தான் அவளது தந்தையின் எண்ணை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார். அவர் தகவலை தெரிவித்த அடுத்த பதினைந்தாவது நிமிடம் தாமோதரனும், பிரபாவதியும் அவ்விடம் வந்திருந்தனர்.

 

“ம்மா…” என்றவள் அன்னையைக் கட்டிக் கொண்டு அழ, தாமோதரன் தான் தன் மகளது தலையை ஆறுதலாக வருடினார்.

 

“நான் தப்பு பண்ணலைப்பா.”

 

“எங்களுக்கு உன்னை பத்தி தெரியும்டா.” என்றவரோ கோபத்துடன் இன்ஸ்பெக்டர் அறை நோக்கிச் சென்றார்.

 

அவர் கமிஷ்னர் வழியாக போனில் இன்ஸ்பெக்டரை மிரட்டியிருக்க, அவர் நந்தாவிடமும், மதுவிடமும் மன்னிப்பைக் கேட்டார். அதன் பின்னரே தன் மகளுடன் நந்தாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்ததுமே நந்தா தன் காதலன் அல்ல என்று கூற நினைத்திருந்தாள் மது. அவள் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது போல,

 

“உன் காதலை அப்போவே சொல்லியிருந்தால் இரண்டு பேருக்கும் இந்நேரம் கல்யாணம் பண்ணி வெச்சிருப்போம். ஏன் வருணி மாப்பிள்ளையை எங்களுக்கு நீ அறிமுகப்படுத்தலை.” என்ற அன்னையின் கூற்றில் அதிர்ந்து போய் நின்றாள் மதுவர்ணிகா. நந்தாவும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தானே தவிர்த்து எதுவும் பேசவில்லை. பேசினால் அவன் குட்டு தெரிந்து விடும் அல்லவா..!

 

“மாம், அது இல்லை…”

 

“என்ன அது இல்லை. இப்போ பாரு கண்டவனெல்லாம் தப்பா பேசுற மாதிரி நடந்திருக்கு. முதல்ல நீ இந்த விசயத்தை மறைச்சது தப்புடா. ஆனால் அன்னைக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளையை நீ மறுத்தப்பவே எங்களுக்கு புரிஞ்சு போச்சு. உன் மனசுல வேற ஒரு பையன் இருக்கான்னு. இப்படி தான் அன்னைக்கு சந்தோசமா போனப்போ, சரி எங்க வருங்கால மாப்பிள்ளையோட தான் வீட்டுக்கு வரப் போறனு பார்த்தால் தனியா வந்து அதிர்ச்சி கொடுத்த. அதுக்கு அப்புறம் சரியா நீ பேசவே இல்லை. நாங்களும் நீயா சொல்லட்டும்னு காத்திருந்தோம். ஆனால் நீ கடைசி வரை சொல்லவே இல்லை. கடைசியில கான்ஸ்டபிள் சொல்லி தான் உன் காதலை எங்க வருங்கால மருமகனை பார்க்க வேண்டியதா போச்சு.” என்று பிரபாவதி கூறவும் தாமோதரன் பேச்சைத் தொடர்ந்தார்.

 

“ஆமா வருணிமா. அன்னைக்கே நாங்க முடிவு பண்ணிட்டோம் உன் சந்தோசம் தான் எங்க சந்தோசம். உன் மனசுக்கு பிடிச்சவரோடையே உன் கல்யாணம் நடக்கும்.” என்று புன்னகையுடன் கூறும் தந்தையிடம் எவ்வாறு கூறுவது என்று தடுமாற்றத்துடன் பார்த்தாள் பெண். 

 

உமாபதியும் அவ்விடம் வந்தவன், “வாவ்! மாமா, ரொம்ப ஹேண்டஸமா இருக்காருக்கா. உங்க ஜோடி பொருத்தம் சூப்பரோ சூப்பர்.” என்று மலர்ந்த முகத்துடன் அவனும் கூற, தன் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கண்டு சிலை போல நின்றவளால் எதுவுமே பேச இயலவில்லை. 

 

“ஏன்டா, எதுக்கு எதுவும் பேசாமல் நிற்குற?”

 

“அது ஒண்ணும் இல்லைங்க நம்ம பொண்ணு ஷாக் ஆகிட்டா. இவ்வளவு சீக்கிரமா நம்ம ஏத்துப்போம்னு எதிர்பார்த்திருக்க மாட்டாள்.” என்று பிரபாவதி கூற, பெண்ணவளின் மன ஓட்டங்கள் சிந்தித்தபடியே இருந்தது.

 

“சரி நான் கிளம்புறேன் அங்கிள்.” என்று நந்தா தப்பித்தால் போதும் என்ற நோக்கில் நகரப் பார்க்க, அவளும், “நம்ம நாளைக்கு இது பத்தி பேசிக்கலாம் மாம் அவரு போகட்டும்.” என்றவளும் கூற, சரி என்று சம்மதித்தனர் அவளது பெற்றோர்.

 

அவனை வழி அனுப்புவதற்காக வெளியே அவனை அழைத்து வந்தவள், அவனை முறைத்து பார்த்தாள்.

 

“ஏன் அமைதியா இருந்தீங்க. உண்மையை சொல்ல வேண்டியது தானே?”

 

“அப்போ எப்படி சந்திச்சோம்னு கேள்வி வரும். நான் திருடன்னு நீ சொல்றதுக்கா? ஆமா நீ ஏன் அமைதியா இருந்த?”

 

“நீங்க தான உண்மையை சொல்லக் கூடாதுனு சொன்னீங்க?”

 

“அய்யய்யோ இது உலக மகா நடிப்பா இருக்கே. அடச்சீ, உண்மையை சொல்லு?”

 

“அவங்க சந்தோசத்தை உடைக்க மனசு வரலை. அதுவும் இல்லாமல் நான் குழப்பமா இருக்கேன்.”

 

“என்ன குழப்பம்?”

 

“பேசாமல் நம்ம ஏன் கல்யாணம் பண்ணக் கூடாது.”

 

“ஆளை விடு தாயே, என் ரேஞ்ச் என்ன..?” என்று பழைய பல்லவியை அவன் பாட, அவனது வாயினைத் தன் கரம் கொண்டு பொத்தினாள் மதுவர்ணிகா. அவளது கரம் அவனது இதழ்களை அழுத்த, ஏக்கமான பெருமூச்சொன்று அவனையும் அறியாமல் வந்தது.

 

“கத்தாதீங்க. எனக்கு இந்த கல்யாணம் பண்ற ஐடியா எதுவும் இல்லை. ஆனால் நான் சந்தோசமா இருக்கணும் அதை எல்லாரும் பார்க்கணும். அதுக்காக நம்ம நடிக்கணும்.” என்றவளது கரத்தை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளை உறுத்து விழித்தான்.

 

“அடிப்பாவி, பூமர் மென்ற மாதிரி அசால்ட்டா சொல்ற? கல்யாணம்னா அவ்வளவு சாதாரணமா போச்சா?”

 

“ஹலோ கல்யாணம் சாதாரணம் இல்லைதான். ஆனால் நமக்கு நடுவில நடக்க போறது அக்ரிமெண்ட் கல்யாணம். ஒரே வருசம், கல்யாணம் பண்ணி நீ நடிச்சா மட்டும் போதும். அப்புறம் நம்ம டிவோர்ஸ் வாங்கிக்கலாம்.”

 

“எத பஞ்சு மிட்டாய் வாங்கிக்கலாம்னு சொல்ற மாதிரி சொல்ற.” 

 

“சும்மா இல்லை நீ நடிக்குறதுக்கு பணம் தரேன்.”

 

“பணமா, எவ்வளவு தருவ?” என்றவன் உடனே கேட்க அவள் மனமோ, ‘அப்படி வாடா வழிக்கு. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பணம் தானே எல்லாம்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

“அஞ்சு லட்சம் தரேன்.”

 

“இது எல்லாம் பத்தாது. சேர்த்து வேணும் மேடம்.”

 

“பத்து தரேன்.” 

 

“ம்ம்ம்…ஓகே, இந்த டீலுக்கு ஒத்துக்கிறேன்.” என்றவன் கூறவும், “சரி” என்று தலையசைத்தவள் அன்று சத்தியமாக நினைக்கவில்லை. இவன் தன்னை ஒரே நாளில் இத்தனை பாடுபடுத்துவான் என்று.

 

அவள் இவ்வாறு செய்ய ஒரு காரணம் ரகு மட்டுமே, அவன் முன்பு தான் சந்தோசமாக இருப்பதாக வாழ்ந்துக் காட்ட நினைத்தாள். அது மட்டுமல்லாது அன்று தனக்காக பேசும் பெற்றோர்களது அன்பில் உருகிப் போனவளால் அந்த அன்பையும் நம்பிக்கையையும் இழக்க மனம் வரவே இல்லை. அவர்களுக்காகவும் அம்முடிவினை எடுத்தாள் மது.

 

அன்றைய சூழலில் நந்தா அவளிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை. அவனிடம் பேசியது வைத்து பணம் கொடுத்தால் எது வேண்டுமென்றாலும் செய்வான், மத்தபடி அவனால் தனக்கு

எந்த தொந்தரவும் வராது என்றும் நினைத்து தான் அவனிடம் திருமண ஒப்பந்தம் பற்றி பேசினாள். 

 

கனவிலும் நினைக்காத வண்ணம் இன்று அவன் இவள் உயிரை வாங்க, தற்போது மயங்கியபடி அவன் கைகளில் கிடக்கிறாள் மதுவர்ணிகா.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்