Loading

மரம் தேடும் மழைத்துளி 16

 

முருகனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ருக்மணியின் எண்ணங்கள். எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. சிறுவயதில் இருவரும் ஒன்றாக விளையாடியது. தனக்காக பரிந்து பேசியது. தனக்காக சண்டையிட்டது என்று ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளும் அறியாமல் இதழ் மலர்ந்து இருந்தாள். “நல்லா தானே இருந்தீங்க! எப்ப இருந்து மாமா உங்களுக்கு இப்படி ஒரு குணம் வந்துச்சு? அதுவும் என்னை கஷ்டப்படுத்தி பாக்கணும்னால்… நான் உங்களுக்கு பிடிச்சவள் இல்லையா? மாமா… இப்ப இருக்கிற குணம் பொய்யா? இல்ல முன்னாடி நீங்க நடந்துக்கிட்டது நாடகமா? எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. உங்களோடைய வாழப்போறோம்னு எம்புட்டு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? அப்படி இருந்த என்னைய, ஏன்டா கல்யாணம் முடிச்சோம்னு யோசிக்க வச்சிட்டீங்க. அதுதான் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. உங்கள சபிக்கணும், திட்டணும்னு எனக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை. ஒரு வார்த்தையில் இல்லாட்டிலும், ஒரு வார்த்தையிலே திருந்திட மாட்டீங்களாங்கற எதிர்பார்ப்பு தான். அதற்குப் பிறகு நீங்க உண்மையிலேயே திருந்துட்டீங்கன்னு உங்க கண்ணு, எங்கிட்ட ஒவ்வொரு முறையும் மன்றாடுச்சு. அதுவும் எனக்கு தெரியும் மாமா. நான் ஒரு முட்டாள் சிறுக்கி, மேலும் மேலும் கடுமையா நடந்துகிட்டேன். எனக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாது மாமா. அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க மாமா. நான் சபிச்சதால சத்தியமா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நானும் மனசார உங்களை சபிக்கல மாமா. ஆத்திரத்தில் அறிவை இழந்துட்டேன். கோபத்துல கொட்டிக் கவிழ்த்துடுட்டேன் அவ்வளவுதான். அப்படியே என்னோட சாபத்தால தான் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க மாமா. அந்த சாபமெல்லாம் என்னையவே சேரட்டும். நீங்க நல்லா இருக்கணும்.” என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கண்கலங்கி விட்டாள் ருக்மணி. அதே நேரத்தில் முருகனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. சிறிய முனகல், கால் விரல்கள் அசைவு. என்று படிப்படியான முன்னேற்றத்தை பார்த்த ருக்மணி மகிழ்ந்தாள்.

 

இருக்கையில் இருந்து எழுந்து சென்ற ருக்மணி, அறைக்கு வெளியே பார்வதி படுத்திருக்கும் இடத்திற்கு சென்றாள்.

 

அங்கே பார்வதியும் சரவணனும் இத்தணை நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதுதான் கண் அயர்ந்தார்கள். உறங்குபவர்களை எழுப்ப மனம் இல்லாமல் எழுந்து கொண்டாள்.

 

மாடிப்படியை விட்டு இறங்கிச் சென்று. அருகில் மருத்துவர் அறை என்ற பலகையை பார்த்து, அந்த அறைக்குள் நுழைந்தாள் ருக்மணி, “இப்ப சேத்தூரிலிருந்து வந்திருக்கிற முருகனுடைய பொண்டாட்டி நானு. அவருக்கு நினைவு திரும்பிகிட்டு இருக்கு. ஒரே முணக்கமா இருக்கு. வலிக்குது போல இருக்கு. அந்த டாக்டர் இங்க வந்து சொல்ல சொன்னாங்க. அதான் வந்தேன். கொஞ்சம் வரீங்களா?” என்று அங்கிருந்த மருத்துவரை அழைக்க. அவரும் அவளோடு எழுந்து மாடிக்கு வந்தார்.

 

முருகன் அனுமதிக்கப்பட்ட போது அவனது நிலவரம் என்ன என்பதை அவனது கட்டிலில் கட்டப்பட்டிருந்த சிறு ஏட்டை பார்த்து தெரிந்து கொண்டார் மருத்துவர்.

 

எம்மா…என்று வலியின் கேவலோடு மெல்லிய குரலில் அழைத்துக்கொண்டிருந்தான் முருகன்.

 

“ஒன்னும் இல்ல சார். நீங்க நல்லா இருக்கீங்க. ஒன்னும் இல்ல. உங்க வைஃப் பக்கத்திலேயே இருக்காங்க. ஹாஸ்பிடல்ல சேஃபா இருக்கீங்க.” என்று முருகனது காதின் அருகில் குனிந்து. மருத்துவர், அவனை தேற்றும் விதமாக ஆறுதல் மொழிகளில் சொன்னார்.

 

அத்தனை வலிகளில், அவன் மனைவி அருகில் இருக்கிறாள் என்ற வார்த்தை. பெரிய ஆறுதலாக இருந்தது முருகனுக்கு. ரு.க்.கு. என்று மெல்லிய குரலில் மனைவியை அழைத்தான்.

 

முருகனின் முகத்தின் அருகில் தன்னுடைய தலையை குனிந்து. அவன் காதில் கேட்கும் அளவில், சத்தம் இல்லாமலும் மாமா… என்று அழைக்க. அவளது கலங்கிய கண்களில் இருந்த நீர்த்தேக்கம், மடைதிறந்த வெள்ளமாய் கொட்டியது. அந்த அருவி நீரானது முருகனது கன்னத்தில்பட்டு தெரித்தது. அதுவரை மயங்கி கிடந்த கண்கள். உணர்வுற்று மெல்ல திறந்தன.

 

மருத்துவர், முன்பு செலுத்திய அதே ஊசி மருந்தை எடுத்துக் கொண்டு வந்து. மீண்டும் முருகனது இடுப்பில் செலுத்தினார்.

 

வீங்கிய முகத்தில் இமையை திறக்க முடியாமல் திறந்ததனால் முருகனது கண்ணில் கண்ணீர் தேங்கி விழியோரம் வழிந்து ஓடியது.

 

ருக்மணி, “வலிக்குதா மாமா? கொஞ்சம் பொறுத்துக்கோங்க சரியாயிடும். கண்ணு மூடி தூங்குங்க.” என்றார்.

 

“நீ என்கிட்ட இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது வலி இருக்குமா ருக்கு.” இன்று சிந்தித்தவன் ருக்மணியிடம், “மன்னிச்சிரு” என்று மருகிய குரலில் சொன்னது. அவள் காதுகளில் சரியாக விழவில்லை.

 

“என்னது மாமா?”.என்று மறுமுறை கேட்க.

 

முருகனுக்கு, மூக்கை மறைத்து மாட்ட பட்டிருக்கும் மாஸ்க்கை பிடுங்கி எறியும் அளவிற்கு கோபம் வந்தது. ஆனால் கை ஒத்துழைப்பு தர மறுத்தது. அதனால் வலிக்கு அடங்கி போய். குரலை உயர்த்தி சொல்ல முயற்சிதான். “மன்னிச்சுக்கோ” என்று சொல்லும் போது.

 

மருத்துவர், “பேசிட்டே இருந்தால் தையல் போட்ட இடம் வலிக்கும் சார். தூங்குங்க, காலையில பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

 

ருக்மணிக்கு அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும். அவனை தொடுவதற்கு இடமில்லாமல் உடல் எங்கும் மறைக்கப்பட்டிருந்த கட்டுகளால் அவள் எண்ணிய எண்ணம் ஈடேறவில்லை.

 

ருக்மணி, “மாமா… டாக்டர் உங்கள உறங்குனு சொன்னாரில்ல. எதுவாக இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.” என்று அன்பாய் அவனிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தாள்.

 

அப்போதுதான் பார்வதி தன்னிடம் சொல்லவில்லையே என்று கோபம் கொள்வார் என்று ருக்மணிக்கு தோன்றியது. “மாமா… அத்தையை கூப்பிட்டு வாரேன்.” என்று சொல்லிவிட்டு. வெளியே வந்து உறங்கிக் கொண்டிருந்த பார்வதியை எழுப்பி. “மாமா கண்ணு முழிச்சிருக்காரு.” என்று சொன்னதும்.

 

பார்வதி, பதறி அடித்துக் கொண்டு, எழுந்து வேகமாக அந்த அறைக்கு உள்ளே சென்று முருகனைப் பார்த்து. வாய் பொத்தி அழுதார். முருகனும் வாய் பேச முடியாமல் கண்ணீர் சிந்தினான் பார்வதியின் உடன் சென்ற சரவணனையும் பார்த்து வருந்தினான்.

 

சரவணன், “நீ கண்விழித்ததே மிக்க மகிழ்ச்சி.” என்று தெரியப்படுத்தும் விதமாக ஒரு புன்னகை செய்துவிட்டு. அறையை விட்டு வெளியே வந்தான்.

 

வாசலில் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்த ருக்மணியை பார்த்து “டாக்டர் வந்து பார்த்தாங்களா? இல்ல போய் கூட்டிட்டு வரணுமா?”

 

“இப்பதான் நான் போய் கூட்டிட்டு வந்தேன். ஊசி போட்டு விட்டுட்டு போயிருக்காங்க.”

 

“சரி நான் கொஞ்ச நேரம் முழிச்சி இருக்கிறேன். நீங்க போய் படுங்க.” என்று ருக்மணியை சரவணன் உறங்கச் சொல்ல.

 

“இல்ல நானே பாத்துக்குறேன். எனக்கு தூக்கம் வரும்போது உங்கள கூப்பிடுறேன். நீங்க போய் படுங்க.” என்று ருக்மணி சரவணனை சொன்னாள்.

 

சரவணன், அதற்கு ஒரு புன்னகையை பதிலாக தந்து விட்டு. முருகனை பார்த்துக் கொண்டிருந்த பார்வதியை “இனி எந்த பயமும் இல்லை. வாங்க பெரிமா கொஞ்ச நேரம் தூங்கலாம். அவனுக்கும் ஊசி போட்டு விட்டு இருக்காங்க. ஓய்வெடுக்கட்டும்.” என்று அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 

ருக்மணி அந்த அறைக்குள் சென்று. முருகனின் அருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். முருகன் கண்ணயர்ந்ததும். அந்த கட்டிலுக்கு கீழே தனது சேலையின் முந்தானையை விரித்து தன்னை குறுக்கி படுத்து உறங்கினாள்.

 

மறுநாள் காலையில் பொழுது புலர்ந்து நெடுநேரம் கழித்தே முருகன் கண்விழித்தான். காயம் பட்டபோது ஏற்பட்ட வலியை, உணரும் முன்பே உரைநிலைக்கு சென்று விட்டான். தற்போது வரை மருந்தின் வீரியத்தால் வலியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான். தற்போது வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்ல. “வலிக்குதே… முடியலயே…” என்ற வாசகங்களை மந்திரம் போல உச்சரிக்க தொடங்கியிருந்தான்.

 

மருத்துவமனையின் மருத்துவர்கள், வரிசையாக ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டே வரும்போது. முருகனின் முறை வரும்போதே அவனை கண்டு கொண்டார்கள். அதுவரை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. அதன் பிறகே அவனுக்கு முழுமையான சிகிச்சை எடுக்கப்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடிக்க மதியம் 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு நேரமும் வலியை தாங்கிக் கொண்டு, பொறுக்க முடியாத நேரத்தில் முடியலையே… என்று முனங்கிக் கொண்டு அவர்களோடு ஒத்துழைத்து

படுத்திருந்தான்.

 

பரிசோதனைகள் முடிந்த பிறகு, காயங்களின் இடம், தன்மையை பொறுத்து வலியை மறக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டது. உடன் இருந்த ருக்மணி, பார்வதி மற்றும் சரவணனுக்கு அதற்குப் பிறகே ஓய்வு கிடைத்தது. அதுவரை சாப்பிடாமல் அலைந்து திரிந்தவர்கள் நாலு மணிக்கு உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.

கை கழுவி முடிக்கும் தருணத்தில். கோமதியும், சங்கரும், துர்காவை அழைத்துக் கொண்டு முருகனை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.

 

கோமதி, முந்தானை சேலையால் வாயை பொத்திக்கொண்டு, அழுதபடி பார்வதியிடம் ஓடிவந்தாள்.

 

பார்வதி, “கோமுதங்கம். அழுகாதடா… அண்ணனுக்கு ஒன்னும் இல்லடா… டாக்டர்கள் எல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்கடா… அழுவாதடா…” என்று அவளை தேற்றப்போய் இவர் அழுதார்.

 

ருக்மணி, முருகனின் மனைவி என்பதால் அவளிடம் ஒரு வார்த்தை கேட்டு விட வேண்டும் என்பதற்காக, அவளிடமும் வந்து நின்ற கோமதி, “ருக்கு…. அண்ணனை நல்லா பாத்துக்கோ” என்று தேம்பினாள்.

 

ருக்மணி அவளிடம் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல். அமைதியாக நின்று கொண்டாள்.

 

சரவணனை பார்த்த சங்கர், “என்ன மாப்ள சொன்னாங்க?” என்று கேட்க.

 

சரவணன், “ஒன்னும் இல்ல மாமா. அடி கொஞ்சம் பலம்தான். கழுத்தெழும்பு கிராக்கா இருக்குனு சொன்னாங்க. தலையில அடிபட்டு காது வழி ரத்தம் வெளில வந்ததால. எதுவும் ஆயிருக்காதுன்னு எதிர்பார்த்தோம். ஆனா ரத்தம் உரைஞ்சி இருக்கிறதா சொன்னாங்க. அதை ஊசி மருந்து மூலமா கரைச்சுடலாம்னு நம்பிக்கையா சொல்லி இருக்காங்க. நாளைக்கு காலையிலேயே கழுத்து எலும்பு கிராக்குக்கு கட்டு போட்டுட்டு நார்மல் வார்டுக்கு மாத்தி விட்றதா சொல்லி இருக்காங்க.”

 

சங்கர், “இப்போ ஏதாவது சாப்பிட்டாரா?”

 

“எதுவும் கொடுக்கல. குளுக்கோஸ் மட்டும் தான் ஏறுது. சின்ன பிள்ளைக பால் குடிக்கிற பாட்டில் வாங்கி, அது வழியா தண்ணியும் காப்பியும் கொடுக்கிறோம். நிமிர்ந்து உட்கார்ந்தாதனே மாமா சாப்பிட முடியும். தண்ணி குடிக்கிறதுக்கும் அண்ணாந்து குடிக்க வேண்டி இருக்குன்னு பாட்டல்ல குடுக்க சொல்லி இருக்காங்க. நாளைக்கு கழுத்துக்கு கட்டு போட்டதுக்கு அப்புறம் தான் எதுவும் சாப்பிட சொல்லுவாங்கனு நினைக்கிறேன்.”

 

சங்கர், “பசி..பாதி உறக்கம் வராது.”

 

“என்ன செய்ய இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கிட்டா பொறுத்து போகணும்தானே மாமா”.

 

என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், சரவணன் மொபைல் ஃபோனுக்கு கதிர் அழைப்பு விடுத்தான்.

 

சரவணன் சங்கரிடம், “கதிர் மாமா கூப்பிடுறாரு. ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துருறேன் மாமா.” என்று சொல்லிவிட்டு சற்று விலகி நின்று போனை அட்டென்ட் செய்தான்.

 

கதிர், “மாப்ளே… உங்க அண்ணே எப்படி இருக்காக? டாக்டர்கள் என்ன சொன்னாக?’”

 

“ராத்திரி 12:30 மணிக்கு கண்னு முழிச்சான். இப்ப வரைக்கும் மாத்தி மாத்தி செக் பண்ணி இருக்காங்க. நாளைக்கு கழுத்துக்கு கட்டு போட்டுட்டு. நார்மல் வார்டுக்கு மாத்தி விடுறதா சொல்லி இருக்காங்க.”

 

“சரி மாப்ள நைட்டுக்கு கூட தங்குறதற்கு நான் இன்னைக்கு வாரேன். நாளைக்கு கருப்பும். நாளை கழிச்சு கணேசனும் வர்றதா சொல்லி இருக்காங்க. நீங்க புறப்பட்டு வீட்டுக்கு வாங்க. ஆளும் பேறுமா சேர்ந்து பார்த்துக்குவோம். ஒத்தையில பார்த்தால் அசதியாக இருக்கும் இல்லையா?”

 

“இருக்கட்டும் மாமா. நான் வீட்ல சும்மா தானே இருக்கேன். அடுத்த வாரம் திங்கள் கிழமை வேலைக்கு போறேன். அதுவரைக்கும் வேலை வெட்டி கிடையாது. நானே இருந்து பாத்துக்கிறேன். அதுக்கு மேலையும் ஆஸ்பத்திரியிலே தங்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சுன்னால் உங்க கிட்ட சொல்றேன். நீங்களும் அவங்க ரெண்டு பேரும் வந்து பாத்துக்கோங்க. நானும் ஊடால ஒரு நாள் வாரேன்.”

 

“சரி மாப்ள நீ சொல்றபடியே செஞ்சிருவோம். உனக்கு வருத்தம் ஒன்னும் இல்லயே?”

 

“என்ன மாமா எங்க அண்ணனை பாக்குறதுக்கு நான் வருத்தப்பட?”

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்