விழி வழியே சரணடைந்தேன் -19

Loading

அத்தியாயம் 19

 

முகம் கோபத்தில் சிவக்க தன் முன்னே நின்றவனின் சட்டை காலரை கொத்தாக பிடித்தவள் “புரிஞ்சு தான் பேசுறீங்களா? என் மனசு காதல் எல்லாம் உங்களுக்கு விளையாட்டு பொருளா?” என்று சீற அங்கிருந்தவர்கள் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர். 

 

“கனி கையை எடுமா.. நான் சொல்றதை பொறுமையா கேளு” என்று கூற சட்டையை விட்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

 

“கனி நில்லு..” அவனின் குரலை கண்டு கொள்ளாதவள் துரிதமாக நடக்க “கனி உன் பதிலில் தான் என் உயிர் இருக்கு.. நான் ஆபரேஷன் பண்ண சம்மதிக்குறேன்” என்று சொல்ல சட்டென அவளின் நடை நின்றது. 

 

தாலி கட்டிய கணவன் இன்று இன்னொருவரின் காதலியாக நடிக்க சொல்லுகிறான். அவனின் மேல் கடும் கோபம் வந்தது. ஆனால் அவனின் உயிரும் அதில் சம்மந்தபட்டிருக்கும் என்றால் அதையும் அவள் செய்ய தயாராக இருந்தாள். 

 

அவளின் அருகில் வந்தவன் “கனி நான் சொல்றத பொறுமையா கேளுமா.. ஒருத்தரோட உயிர் உன்னால் காப்பாத்த படுத்துன்னா அதை பண்றதில் தப்பு இல்லையே” என்று கேட்க கையெடுத்து தடுத்தாள் கனி. 

 

“எப்போ நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்தீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு.. அருண் யாரோ தான்.. பட் உங்களுக்கு தனியா முடிவெடுக்குற அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கத்தியவள் வெளிவர துடித்த கண்ணீரை துடைத்து விட்டு “இதுவும் உங்களுக்காக மட்டும் நான் சம்மதிக்குறேன்.. எல்லாரும் என்னை பிளாக்மெயில் பண்ணியே காரியம் சாதிக்க கத்துகிட்டாங்க.. உங்க கூட நடந்த கல்யாணமும் இப்போ நடக்குற விஷயத்துலேயும் எதுவும் என் சம்மதத்தோட நடக்கவே இல்ல” என்று கூறிவிட்டு முன் நடக்க அவளின் பேச்சில் அதிர்ந்து நின்றான் கீதன். 

 

அவனுடனான கல்யாணம் அவள் காதல் இல்லாமல் நடந்தது என்று நினைத்து கொண்டிருக்க அவளை மிரட்டி நடத்தியிருப்பார்கள் என்று அவன் நினைக்கவே இல்லையே.. அப்போது இத்தனை நாளும் வலியுடனே தான் அவனுடன் வாழ்ந்தாளா? இந்த கேள்வியே அவனுக்கு வலித்தது. இத்தனை மாதங்கள் அவள் மனதில் எத்தனை காதலுடன் குடும்பம் நடத்தியிருந்தால் இந்த வார்த்தை சொல்லி விட்டு சென்றிருப்பாள்? ஆனாலும் அதை புறம் தள்ளியவன் அருணின் நலனை நினைத்து பார்த்தான். 

 

கீதனுக்கு கடவுள் கொடுத்த காலங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை அருண் அவளுக்கு பொருத்தமாக இருப்பானோ என்று மனம் நினைக்க அதுவும் வலித்தது. தான் உருகி உருகி காதலித்த மனைவியை அவள் தன் கருவை சுமக்கும் காலத்தில் இன்னொருத்தன் நலனுக்காக தாரை வார்த்து கொடுக்கும் நிலைமை எவருக்கும் வர கூடாது. 

 

கனி கோபமாக கிளம்ப அவளின் பின்னோடு சென்றான் கீதன். விஷ்வாவிடம் தன் முடிவை பற்றி சொல்ல அவனுக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்தது. 

 

“கீதன் இது சரியா வரும்னு எனக்கு தோணலை.. அதுவும் உங்க மனைவி கர்ப்பமா இருக்கும் போது தேவையா?” என்று கேட்க கோபமாக முறைத்து கொண்டிருந்த கனியை பார்த்தவன் “என்னால் அவளுக்கு வாழ்க்கை முழுசும் சந்தோஷத்தை கொடுக்க முடியுமா தெரியல.. பட் என்னை மாதிரி இன்னொரு உயிர் வலியால் துடிக்க வேண்டாம்” என்று கூற அவனின் கன்னத்தில் அறைந்தாள் கனி. 

 

“என்ன பேச்சு பேசறீங்க? உங்களை மாதிரி ஒரு நல்லவன், காதல் கணவன் எனக்கு யாரும் கிடைக்கவே முடியாது.. ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லை.. எத்தனை வருசம்னே தெரியாத நிலையில் இப்போ நீங்க தனியா தவிக்கணுமா? உங்க நிலைமை தெரிஞ்சும் எதுக்கு இப்படி பண்றீங்க?” என்று அழ அவளை தன்னோடு அணைத்து கொண்டான் கீதன். 

 

“இந்த நிலைமையில் நீ அழ வேண்டாம்டா.. நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. இங்கே பெங்களூரில் தான் இருக்க போறேன்.. நம்ம குழந்தை பிறந்ததும் முதலில் கையில் நான் தான் வாங்குவேன்” என்று கூறி அவள் கண்ணீரை துடைக்க விஷ்வாவுக்கு இந்த நொடி அருணின் நிலை கஷ்டத்தை கொடுத்தது. அவனால் தானே இந்த அன்பு தம்பதியர் பிரியும் நிலை ஏற்படுகிறது. 

 

“சாரி கீதன்.. அருண் நிலைமை தான் உங்களை பிரிக்குது.. நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. அதுவும் கனி கர்ப்பமா இருக்கும் போது உங்க கூட தான் இருக்க நினைப்பாங்க.. ப்ளீஸ் நானே இதை பார்த்துக்குறேன்.. அவனுக்கு உண்மை எப்படினாலும் தெரிய வேண்டியது தானே.. கனிஷ்கா எப்படி இருக்கான்னு யாருக்கும் தெரியல.. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஊர்ல சொன்னாங்க.. அவ புருஷன் இறந்து போயிட்டான்.. பட் இதை நான் அருண் கிட்ட இன்னும் சொல்லல.. வீணா கஷ்டப்படுவான்.. இப்போதும் அவனால் நீங்க பிரிய வேண்டாம்” என்று கூற மறுத்தான் கீதன். 

 

“டாக்டர் சொன்னதை கேட்டீங்க தானே விஷ்வா.. இன்னும் அருண் டென்ஷன் ஆனா அவனுக்கு மனநிலை பாதிக்க சான்ஸ் இருக்கு” 

 

“அதனால் இன்னொருத்தர் வாழ்க்கை வீணாக என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது கீதன்” என்று விஷ்வா விளக்கி கொண்டிருக்கும் போதே “சார் அவர் ஊசி போடவே விட மாட்டேங்குறார்.. கனி கனின்னு தட்டி விடுறார்” என்று வெளியே வந்து சொன்னாள் நர்ஸ். 

 

“நீங்க உள்ளே போய் பாருங்க விஷ்வா.. கனி வருவா” என்ற கீதன் விஷ்வா உள்ளே சென்றதும் “கனி என்னை நீ நம்புனா இப்போ அவர்கிட்ட போய் பேசு.. அவரை அமைதியா இருக்க சொல்லு.. நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று சொல்ல “அப்போ நீங்களும் உள்ளே வாங்க” என்று அழைத்தாள் கனி. 

 

எந்த கணவன் தான் மனைவி இன்னொருவரின் காதலியாக போவதை பக்கத்தில் இருந்து பார்ப்பான்? 

 

“நான் வரலடா.. நீ போய்ட்டு வா.. நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று கூறி விட்டு வெளியே செல்ல கனி அவனை முறைத்து விட்டு வேறு வழி இல்லாமல் அருணின் அறைக்கு சென்றாள்.

 

அங்கு அவனை விஷ்வா சமாதான படுத்தி கொண்டிருந்தான். “அருண் அமைதியா இரு.. கனி வருவாங்க” என்று கூறி கொண்டிருக்கும் போதே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த கனியை பார்த்து அருண் “கனி.. வந்துட்டியா?” என்று சந்தோஷ பட்டான். 

 

விஷ்வா தயங்கி நிற்க அருணின் அருகில் சென்றவள் “ஊசி போட விடுங்க அருண்.. நாம அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்ல நர்ஸ் ஊசியை செலுத்திய போது எதுவும் சொல்லாமல் நின்றான் அருண். 

 

ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேசுவதற்குள் ஓராயிரம் முறை மூச்சை இழுத்து விட்டாள் கனிமொழி. அதன் பிறகு அருண் பேசியதெல்லாம் அவளின் காதில் விழவே இல்லை. அவள் மனம் முழுவதும் இப்போது தவித்து கொண்டிருக்கும் கணவன் கீதன் மீதே இருந்தது. 

 

அவளுக்கு தெரியும் அவனின் காதல். ஆனால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்து அவனின் வாழ்க்கையை அழித்து கொண்டு இருப்பதை யார் அவனுக்கு புரிய வைக்க? கீதனும் கனியின் நினைவில் தான் இருந்தான். இன்று அவர்களின் காதலுக்கு பரிசாக அவளின் மணி வயிற்றில் அவனது உயிர் உதித்ததை அறிந்த நாள். அதே நாளில் தான் அவளை பிரியவும் செய்கிறான். 

 

அவள் கீதனுடனான திருமணத்தை விருப்பம் இல்லாமல் செய்தது அவனுக்கு தெரியும். ஆனால் மிரட்டி செய்ய வைத்தது இன்று தான் தெரிய வந்தது. இதுவரை தெளிந்திருந்தவன் மனதில் அது இன்று குட்டையை குழப்பி விட்டு சென்றிருந்தது. 

 

சிறிது நேரத்தில் அவனுக்கு அழைத்த விஷ்வா அருண் மற்றும் கனியை பற்றி சொல்ல, காரில் காத்து கொண்டிருந்தவனுக்கு தானே மனைவியை தள்ளி வைத்தது போல் தோன்றியது. 

 

விஷ்வாவிடம் கனியை அழைத்து வருமாறு சொல்லியவன் மனைவி வந்ததும் அவளின் முகத்தை கூட பார்க்காமல் காரை தனது வீட்டை நோக்கி செலுத்தினான். கனியும் அவனுடன் பேச விரும்பாமல் வெளியே பார்த்து கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்தவர்கள் வேறு வேறு அறைக்குள் முடங்கி கொள்ள முதல் பிரிவு அவர்களுக்குள் ஆரம்பமானது. 

 

*********************

 

“காதல் வந்தாலே

காலு ரெண்டும் தன்னாலே

காத்தா சுத்துதே

உந்தன் பின்னாலே

ஆசை வந்தாலே

ஐ லவ் யூ சொன்னாலே

கண்ணு ரெண்டும் சுத்துதே

உந்தன் முன்னாலே” 

 

சித்தார்த் பாடி கொண்டே தனது மடிகணினியில் அன்றைய ஆய்வுக்கான கோப்புகளை பரிசோதித்து கொண்டிருக்க அவனின் முன்னால் வந்தான் பென். 

 

“சார்…” 

 

அவனின் குரலில் நிமிர்ந்து பார்த்த சித்தார்த் என்னவென்று கண்களால் கேள்வி கேட்க “இன்னைக்கு நைட் வில்சன் வீட்ல பார்ட்டி இருக்கு” என்றான். 

 

“ஓ.. இது வேற இருக்கே.. மறந்துட்டேன்.. நீ கிளம்பு பென்.. நானும் கனியும் போயிட்டு வரோம்” என்று கூற பென் தயங்கி நின்றான். 

 

“சார் இந்தியாவுல இருந்து வேற பொண்ணு அனுப்ப கிடைக்கலையாம்.. ஜார்ஜ் போன் பண்ணிருந்தான்” எனவும் “இட்ஸ் ஓகே பென்.. வேற வழியில் வில்சனை கவனிச்சிக்கலாம்” என்றவன் அவன் வெளியே சென்றதும் தன் கட்டிலில் துயில் கொண்டிருந்தவளை திரும்பி பார்த்தான். 

 

“கியூட்டி என் காதல் கொஞ்சம் அதிகமாவே சுயநலம் பிடித்தது.. அதனால் வேற வழி இல்ல.. இன்னைக்கு நீ தான் வில்சனுக்கு பாடம் சொல்லணும்” என்று நினைத்து கொண்டான். இவனின் திட்டம் எதுவும் அறியாதவள் வழக்கம் போல் காலை பத்து மணிக்கு எழுந்து பார்க்க அப்போதும் சித்தார்த் வேலை செய்து கொண்டிருந்தான். 

 

“ரொம்ப வேலையா சித்து?” 

 

அவளின் குரலில் திரும்பி பார்த்தவன் “ஒருத்தருக்கு சிப் பொருத்தியிருந்தது.. அதன் செயல்பாடுகள் சரியா இருக்கான்னு செக் பண்றேன்” என்று கூற “நானும் பார்க்கவா?” என்று கீழே இறங்கி வந்தாள் கனிஷ்கா. 

 

“சரி வா..” என்று தள்ளி அமர அவனின் அருகில் வந்தவள் அவனின் பின்னால் நின்று குனிந்து பார்த்தாள். 

 

“இதுல எப்படி செக் பண்ற சித்து?” 

 

“இது தான் அவரோட மூளையின் செயல்திறன்.. ஒருத்தருக்கு மூளை இல்லனா எதுவுமே பண்ண முடியாது.. இங்க பாரு..” என்றவன் சிப் பொருத்தியிருந்த இடத்தை காட்டி “அதுல ஏதாச்சும் வித்தியாசம் தெரியுதா?” என்று கேட்டான். 

 

கூர்ந்து பார்த்தவள் “இல்லையே..” என்று உதட்டை பிதுக்க “என்னை ஒரு வழியாக்க போறா” என்று நினைத்து கொண்டவன் அதில் ஒரு சிவப்பு ஒளி அவனின் மடிகணினியில் தெரிவதை காட்டினான். 

 

“இது மூலமா தான் அவரோட மெமரிஸ் எல்லாம் சேவ் ஆகுறது வச்சு கண்டு பிடிக்குறோம்..” என்றான். 

 

“ஓஹோ.. அப்போ என்னோடதும் உன்கிட்ட இருக்கும் தானே..” என்று கேட்க “இருக்கு.. பட் அதை உனக்கு காட்ட முடியாது..” என்று மறுத்தான். 

 

“அடுத்தவங்களோடது காட்டுற.. என்னோடதும் காட்டு” என்று வற்புறுத்த அவளை தன் முன்னே இழுத்தவன் மடிகணினியை மூடி வைத்து விட்டு “என்ன காட்ட சொல்ற?” என்று சரசமாக கேட்டான். 

 

“என்னோடது நீ சேவ் பண்ணி வச்சிருப்ப தானே.. எனக்கும் சிப் பொருத்தியிருக்க.. அதனால் என்னோட நினைவுகளும் இருக்கும் தானே” 

 

“இருக்கும்.. ஆனா அது உனக்கு தேவையில்லாதது..” 

 

அவனின் மறுப்பில் கோபம் வர “நீ எதுவும் எனக்கு காட்ட வேண்டாம்.. நான் போறேன்” என்று எழும்ப தன்னை நோக்கி இழுத்தான். 

 

“இவ்ளோ நேரம் நான் கட்டுப்படுத்திட்டு இருந்ததே பெரிய விஷயம்.. இப்படி ஒரு கோலத்தில் என் முன்னாடி வந்து எதுக்கு என்னை தூண்டி விடுற?” என்று அவன் சொன்ன பின் தான் அவள் தன் ஆடையை பார்த்தாள். 

 

நேற்று அவனின் சட்டையை அணிந்திருந்தாள். அது அவளின் முழங்காலுக்கு மேலேயே முடிந்திருக்க அவன் கூப்பிட்டதும் அப்படியே எழுந்து வந்திருந்தாள். 

 

இப்போதும் அவனின் செயலில் கூச்சம் வர “சித்து நான் இன்னும் குளிக்கல” என்று எழும்ப எதுவும் சொல்லாமல் விட்டவன் “இன்னைக்கு நைட் வில்சன் வீட்ல பார்ட்டி.. ரெடியா இரு” என்று கூற “எப்போவும் பார்ட்டி தானா? அலுத்து போகுது” என்று கூறிவிட்டு செல்ல “இது தான் லாஸ்ட் பார்ட்டி” என்று சிரித்தான். 

 

“அப்போ இனிமேல் பார்ட்டின்னு கூப்பிட மாட்டியே சித்து.. அங்க எதுவும் பிடிக்க மாட்டேங்குது” என்று சலித்து கொண்டாள். 

 

“வேற என்ன பிடிக்குது உனக்கு?” என்று குறும்பாக கேட்க “அது தான் டெய்லி பாக்குறியே” என்றவள் குளிக்க செல்ல “வர வர மரியாதை தேயுது.. பட் ஐ லைக் இட்” என்று சிரித்தான் சித்தார்த். 

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்