
அருணாசலத்திற்கு இவற்றையெல்லாம் கவனிக்க நேரமில்லை. அமைச்சரும் ஆகிவிட்ட பிறகு அவருக்கு இங்கு பூங்குவளையில் இருப்பதை விட சென்னையில் இருக்கும் நேரம்தான் அதிகரித்துவிட்டது. குருவை யோசித்துதான் இன்னும் இங்கேயே. நடுவில் கொஞ்சகாலம் சென்னைக்கு குடும்பத்தை மாற்றியவருக்கு குருவின் செய்கைகள், அத்துமீரல்கள் பிடிக்கவில்லை. திரும்ப இங்கே வந்தாயிற்று.ஆனால் என்றாயினும் சென்னை அவர்களை இழுத்துக்கொள்ளும். சிவன் குடும்பம் சென்னையில் தங்கி விட்டது. சாந்தா படிக்கிறாள்.
சொந்த மண்ணில் இருந்தாலும் கூட அருணாச்சலத்தால் மகனின் அந்தரங்க விஷயங்களில் எல்லாம் தலையிட்டு கருத்து சொல்ல முடியாது. மருமகளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையிலும் அவர் இல்லை. அருணாச்சலத்தின் மனதளவில் தன் மனைவி சந்தோஷமாக இருப்பது மட்டுமே பிரதானம்.
சிவம் இங்கு வேலை செய்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் மகளின் கண்களில் காணப்படும் சோர்வு அவருக்கு உள்ளூர குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலேயே அருணாச்சலத்துடனேயே அவரது பயணம்.
குருபரன் என்ன செய்து கொண்டிருக்கிறான்,தன் மகளுடன் ஒழுங்காக இருக்கிறானா என்று கண்காணிக்கும் வேலை வேறு இப்போது சிவத்திற்கு கூடி விட்டது. சாந்தா இப்பொழுது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும். அதைப்போல உமாவும் வேலையை விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். இதுபோன்ற விஷயங்கள் இராமல் இருந்திருந்தால் சிவன் என்றோ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பார். அவரால் தன் மூத்த மகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
காலம் மிக வேகமாக பயணம் செய்கிறது. இதோ அதோ என்று உமாவுக்கும் சரி ரத்னாவுக்கும் சரி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.
இன்னும் இரண்டு மாதங்களில் ரத்னா தனது இளநிலை பட்டப் படிப்பை முடித்து விடுவாள். இத்தனை வருடங்களில் சங்கரன் மீதான காதல் அவளுக்கு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சங்கரன் போன்ற கணவன் கிடைக்கத் ‘தான்’ நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவள் நினைக்காத நாளே இல்லை. அவர்களது உறவு இயற்கையிலேயே அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விட்டது.
திலகா விற்கு தன் அண்ணன் மகள் மீது கோபம் இருந்தாலும் கூட இப்போதெல்லாம் இவர்கள் வீட்டிற்கு வந்து உறவாடி விட்டு செல்கிறாள். அவள் எப்போது வந்தாலும் அவளுடன் சங்கரனின் தங்கையும் வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க ரத்னாவும் சரி சங்கரனும் சரி தயாராக இல்லை. உறவுகள் இன்றி தன்னந்தனியாக இருப்பது அவர்கள் இருவருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் திருமணம் முடிந்து விட்டாலும் இருவருமே பக்குவம் போதாத சிறுவயதினர்தான். அதனால் உறவு என்று வருபவர்களை இரு கைகள் நீட்டி அணைத்துக் கொள்ளவே இருவரும் விரும்புகிறார்கள். திலகாவின் வார்த்தைகள் பல சமயங்களில் விஷம் தடவிய கூர் ஆயுதமாக தாக்கினாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவள் வருவது ஆறுதல் அளிக்க இருவரும் அவளுக்கு பணிந்து செல்ல தொடங்கினார்கள். இதனாலேயே எல்லாம் திலகா தன் கோபத்தை மறப்பதாக இல்லை. தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது சங்கரனின் கடமை. எங்கே தான் இங்கே வந்து செல்லாவிட்டால் தன் கடமையை உதறிவிட்டு விடுவானோ மகன் என்ற யோசனையில் தான் அவள் இங்கு வந்து செல்வதே!
திலகாவை பொருத்தவரைக்கும் சங்கரன் தேவைதான். அவன் சம்பாதிக்கும் பணம் அவனை விடப் பெரியது. ஆனால், ரத்னா… அவள்மீது தீராத வன்மம் கொண்டார்கள் திலகாவின் குடும்பத்தினர். ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமானால், ரத்னாவின் நிலை சொல்லுவதற்கில்லை.
குழந்தை பேறு பற்றிய பேச்சுகள் இரு இடங்களிலும் தொடங்கி விட்டது. அன்னத்தின் கண்களில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் லட்சியம் செய்யும் நிலையிலும் உமா இல்லை.
அவள் மனதில் இரண்டு விஷயங்கள் ஒன்று குழந்தை பிறக்கும் சமயம் குரு கைமீறி போய்விடக்கூடும் என்ற பயம். மற்றொன்று இவனைப் போல ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம். இவனுக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை என்று அவள் தீர்க்கமாய் நம்பினாள். இதையெல்லாம் வாய் விட்டு சொல்ல அவளால் இயலவில்லை. குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக மூன்று வருடங்களாய் அவள் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறாள். இது அவளுக்கு மருத்துவருக்கும் உண்டான ரகசியம். உனக்கு குரு மீது ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கை வரவில்லை.
இங்கு திருச்சூரில், திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு புழு பூச்சி கூட வழி இல்லை என்று ரத்னாவின் மாமியார் அவளை ஏளனம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். இவ்வாறு திலகா பேசும்போதெல்லாம் ரத்னா அமைதியாகி விடுவாள். குழந்தை போது வேண்டாம் என்பது சங்கரன் எடுத்த முடிவு. அதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருப்பவனும் அவனே. என்று குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஒரு விரும்புகிறானோ அப்பொழுது அவனது தடைகளை தூக்கி எறிந்துவிட போகிறான். இவற்றையெல்லாம் திலகாவின் முன் கடை விரிக்க ரத்னாவுக்கு இஷ்டமில்லை. அவளது படிப்பு முடிந்து விட்டது. இனி சங்கரன் தான் யோசிக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் இருவரின் தனிப்பட்ட, அந்தரங்க விஷயம் என்று ரத்னா நினைத்தனாலயே இதைப்பற்றி வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.
மாமியாரிடம் இதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஒரு நொடியில் அவள் கூறி விடுவாள் தான். சங்கரன் இதனால் மனம் சுணங்கு வானோ என்று வாளா இருக்கிறாள். அத்தோடு தன் மகன் முன் இதையெல்லாம் பேசும் தைரியம் திலகத்திற்கு கிடையாது. ஒருவேளை மகன் நேரடியாகவே சொல்லி விடக் கூடும் என்று வராதீர்கள் என்று. திலகத்தின் கணவர் இன்னும் தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. சிவனுக்கு தன் தங்கையின் மகன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மனதில் ஒரு சுணக்கம் அதனால் அவரும் தன் மகளுடனோ தன் மருமகனுடனோ எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
நிதானமாக ரத்னா தன் கணவனிடம் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேச தொடங்கினாள். அதுவும் அவன் இளகி இருக்கும் கூடலின் சமயத்தில்.
‘யோசிக்கிறேன் ரத்னா’என்றவனுக்கு யோசிக்க எந்த தயக்கமும் இல்லை போலும்! தடை சாதனத்தை அப்போதே நீக்கிவிட்டான். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சி அந்த நிமிடத்தில் இருந்து அவர்களுக்குள் தொடங்கியது. தடையற்ற முதல் கூடல். என்றும் போல் சந்தோஷமாகவே அவனது ஆசைகளுக்கு இடம் அளித்தாள் பெண். அவளது பிதற்றல்களை சங்கீதம் என ரசித்து அவளை சந்தோஷத்தின் உச்சியில் நிறுத்திகொண்டாடினான் சங்கரன்.
மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகள் எழுத தொடங்கி இருந்தாள் ரத்னா. சங்கரனின் தொழிலிலும் ஏற்றம் தான். மேலும் வருடம் ஒன்று கடந்த பிறகும் கூட ரத்னா கரு தரிக்கவில்லை. இருவரும் மருத்துவரிடம் சென்று காண்பிக்க, குழந்தை பிறப்பில் எந்த பிரச்சனையும் இல்லை தானே நிகழும். அதுவரை காத்திருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் மருத்துவர்.
வயது அதிகம் இல்லை என்பதால் இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரத்னாவுக்கு அவள் விரும்பியபடி பணி கிடைத்துவிட அவர்களின் வாழ்வு மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. ரத்னாவும் பகல் பொழுதுகளில் வேலைக்கு சென்று விடுவதால் அவளை கொம்பு சீவி விடும் வாய்ப்புகள் திலகாவுக்கும் அவள் மகளுக்கும் கிடைக்கவில்லை. சங்கரன் எதிரில் ரத்னாவை பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.
இங்கு, கட்சியில் மேல் இடத்துடன் ஏற்பட்ட உரசலால் அருணாச்சலம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் தன்னை தனியாக பிரித்து தனிக்கட்சி தொடங்கி விட்டார். கட்சியின் பாதி ஆதரவாளர்கள் இவர்களது கட்சியில் சேர்ந்து கொண்டு விட்டார்கள். வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாகவே போட்டியிடுவது என்றும் திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டார் அருணாச்சலம். கட்சியை மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமாக அருணாசலத்திற்கு வேலை கூடிப்போய் விட்டது. சிவனும் தீரனும் இருபத்தி நான்கு மணி நேரமும் அவருடனேயே தங்கினார்கள்.
பழைய கட்சியின் விசுவாசி ஒருமுறை அருணாசலத்தை கத்தியால் வயிற்றில் குத்த வர, தீரன் இடையிட்டு அந்த கத்திகுத்தை தனதாக்கிக் கொண்டான். வீரனை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை செய்தி மூலமாக தெரிந்துகொண்ட ராகாயிக்கு அவனுடன் இருந்த அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க மனம் ஏங்கியது. கொள்ளை நோயில் தீரன் தனது மனைவியையும் மகளையும் இழந்து பல வருடங்கள் ஆயிற்று. இன்று அவன் யாருமற்ற அனாதை தான். தான் போனால் அது சரியாக வராது என்று புரிந்த ராக்காயி கண்ணீரில் அவனுக்கு மருந்து இட முற்பட்டாள். பத்து வயது நிரம்பியதான ராகாயியின் மகள் தன் தாய் அழுவதை பார்த்து தானும் அழுதாள். ராக்காயி மனதில் காதல் இன்னும் அழியவில்லை. தொழில் மாறினாலும் பெண்ணின் மனம் மாறுமா?
திருச்சியிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் தன் அப்பாவுக்கு தெரியாமல் கஞ்சா தோட்டம் வாங்கி போட்டிருக்கிறான் குரு. அடிக்கடி அங்கே போவது அவன் வழமையே. அப்படி செல்லும் தருணங்களில் அங்குள்ள தனது சகாக்களுடன் மது அருந்திவிட்டு சீட்டு ஆடுவதும், பெண்களை வரச் சொல்லி குத்தாட்டம் போடுவதும் அவர்களின் பொழுது போக்கு. உமாவை கலியாணம் முடித்த பிறகு மங்கையர் சகவாசம் மட்டும் தாற்காலிக விடுமுறை எடுத்து சென்றுள்ளது.
இந்தமுறை தன் தனி தோட்டம் வந்த பொழுது அரை போதையுடன் சீட்டாடிகொண்டிருக்கும் பொழுது….
திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் குருபரனுக்கு சொந்தமாக கஞ்சா தோட்டம் இருக்கிறது. அங்கே செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் கூடிக் குலாவும் அந்த நேரம் குருவுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருவரோடு ஒருவர் குடிப்போதை பாதி ஏறியும் பாதி சுய புத்தியுமாய் சீட்டு ஆட உட்கார்ந்து கொண்டும் பேசிக் கொண்டும் ஒரு கலவையான நிகழ்வுகள் அங்கே.
அங்கே பேசிக் கொள்வது அவரவருக்கு ஒன்றும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் உணர்வுகள் தங்கள் எல்லைகளை மீறி ஒருவித பிரயாணம். மிஞ்சிப்போனால் ஆறு பேர் அங்கு அமர்ந்து இருக்கலாம். சீட்டு மும்முரத்தில், ஒருவன் வென்று விட மற்ற ஐவரும்,அவன் மீது பாய திரும்பவும் அந்த ஆட்டத்தை கலைத்து இன்னொரு ஆட்டம். இந்த அழகில் குருவின் இன்னொரு நண்பன் இரண்டு பெண்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். குரு முழுதாக என்றுமே திருந்த போவதில்லை. அதில் இந்த கதையை வாசிப்பவர்களுக்கு என்றுமே சந்தேகம் வேண்டாம். அவன் என்றும் அக்மார்க் ****தான். ஆனால் உமாவை திருமணம் செய்தபின்னர் ஒரு சிறு மாற்றம். அங்கு ஊரில் இருக்கும்போது வேறு எந்த பெண்களையும் நாடிச் செல்வதில்லை. அதைப் போல் இங்கு வந்தாலும்கூட எல்லா நேரங்களிலும் பெண்களுடன் சல்லாபம் என்பதை மாற்றிக் கொண்டிருக்கிறான். ஏனோ எல்லா பெண்களிடமும் அவன் மனம் உமாவைதான் தேடுகிறது. அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
‘ பெண்களை கூட்டி வந்த நண்பன் முதல் சாய்ஸ் குருவுக்கு தான். குரு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல குரு இன்று எனக்கு மூடு இல்லை என்று மறுத்து விட்டான். அவன் சொன்னதைக் கேட்டதும் போதையில் மற்றும் நண்பர்கள் அவனை கலாய்க்க தொடங்க, பெண்களை கூட்டி வந்த நண்பனும் இதில் சேர்ந்துகொண்டு பேச, பேச்சின்போது ஒரு நண்பனின் பேச்சு ,திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குருவால் ‘ஒரே ஒரு குழந்தையைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் வந்து நின்றது. இன்னொரு நண்பன், குருவுக்கு ஒருவேளை பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்குத் தான் தகுதி இருக்கோ?குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி இல்லையோ… என்று சிரித்துக்கொண்டே நக்கலடிக்க குருவின் குரங்கு மனம் அவர்கள் பேச்சில் இன்னும் எரிச்சல் அடைந்தது. கோபத்தை அடக்கமுடியாமல் கையிலிருந்த சீட்டுகளை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு, தன் அருகில் இருந்த பாட்டிலிலிருந்து முழுவதுமாக தன் வாய்க்குள் சரித்துக் கொண்டான். வந்திருந்த இரு பெண்களும் அவனுடன் இருக்க தயாராக, அவளில் ஒருத்தியை அணைத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். ஏனோ நண்பர்களுடன் சண்டையிட்டால் தன் பக்கம் இன்னும் கீழ் சாய்ந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ அவர்களுடன் மேலும் பேச்சை வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லை. ஆனால் திருமணம் ஆகி நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஏன் மனைவி கருதரிக்கவில்லை என்னும் கேள்வி அவனை யோசனையில் ஆழ்த்தியது.ஒரு வேளை நண்பர்கள் சொல்லுவது போல்… அவனுக்கு குழந்தை பெற தகுதி இல்லையோ எனும் சந்தேகம் அவனுக்கே வந்துவிட்டது.
உடன் வந்த பெண்ணுடன் மனசு லயிக்காமல் அவளுடன் பாதியிலேயே விட்டுவிட்டு தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்து விட்டான்.
நீ இதுக்கு கூட லாயக்கு இல்லையா என்ற ஒரு பார்வை அவளிடமிருந்து வருவதுபோல் இவனுக்கு ஒரு மாயத்தோற்றம். மறுநாள் விடிகாலையிலேயே நண்பர்கள் ஒருவருடனும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். போதை இன்னும் முழுதாய் தெளியவில்லை. ஆனாலும் அவன் இங்கு வரும் நேரமெல்லாம் டிரைவரை கூட்டிக்கொண்டு வர மாட்டான். தானே தான் காரை ஓட்டிக்கொண்டு வருவான். அதனால் திரும்பி செல்வதும் அவனே தான் சென்றாக வேண்டும் எனும் நிலை. விடிகாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் அவன் கைகளில் கார் பறந்தது. நடுவில் இரண்டு முறை போலீசில் மாட்டினான். தன் அப்பாவின் பெயர் சொன்னதும் அவனை போலீஸ்காரர்கள் நீங்க போங்க சார் என்று மரியாதையாய் அனுப்பிவைக்க தன் அப்பா தனியாய் கட்சி ஆரம்பித்ததுமே இவ்வளவு மரியாதை இருக்கிறதே, இன்னும் அவர் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு சில கணக்குகள். கனவிலேயே அவ்வளவு சந்தோஷம் அவனுக்குள். பணம்- சொத்து- ஆட்சி- அதிகாரம் இவை சேர சேர ஏறும் போதை எத்தனை சரக்கு உள்ளே சென்றாலும் வரப்போவது இல்லை என்று நினைத்துக்கொண்டான் குரூ. ஒருவிதத்தில் அதுவும் நிஜம்தான்!
நேரே பூங்குவளை வீட்டுக்கு வந்தவன் வீட்டில் யாரும் இல்லாததை கண்டு, தங்கள் தனி அறையில் மனைவியை தேடிக்கொண்டு சென்றான். அவளோ, தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். என்றுமே அவனை நகர விடாமல் செய்யும் அவளது வடிவழகு இன்று ஏனோ வேலை செய்யவில்லை. அவளிடம் இன்றைய குழந்தை பற்றிய பேச்சுக்களை முடித்து விட வேண்டும் என்ற துடிப்பு குருவிடம். கணவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த உமாவுக்கு அவன் தோற்றம் சிறு யோசனையை கொடுத்தது. நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் காபி டிபன் எடுத்து வைக்கிறேன் என்றுவிட்டு ஜிம்மிலேயே தனியாக இருந்த அவளது பாத்ரூமிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். அவன் எதை பேச காத்துக் கொண்டிருக்கிறான் என்பது சுத்தமாக தெரியவில்லை. ஆனால் உமாவின் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது. ஏதோ மீள முடியாத சூழலில் சிக்கப் போவது போன்ற உணர்வு. மிகவும் தவித்துப் போனாள். அன்னபூரணியோ தன் மகனுக்கு சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கோவிலில் தொட்டில் கட்டி விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறாள்.
இதை எல்லாம் நினைத்து உமாவுக்கு உள்ளூர உதறல் தான். வெளியே காண்பித்து கொள்ள விருப்பம் இல்லை அவளுக்கு. இவள் சொன்னபடிக்கு குருவும் தங்களது அறைக்கு சென்று குளித்துவிட்டு தயாராகி வந்தான். அவனுக்கும் கொஞ்சம் மனதை சமப்படுத்திக் கொள்ள நேரம் தேவைப்பட்டது. நண்பர்கள் எவ்வளவுதான் இழிவாக கிண்டல் பண்ணினாலும் கூட அவற்றையெல்லாம் அப்படியே தூக்கி மனைவி மீது சுமத்த அவனுக்கு இஷ்டமில்லை.
அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது முதலில் தெரிய வேண்டும். ஒருவேளை அவளுக்கு குழந்தை மீது விருப்பம் என்றால் இருவருமாக முதலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு மேல் காலத்தை தள்ளிப் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. குருவை பொருத்தவரை பேர் சொல்லும் பிள்ளை என்றெல்லாம் அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை ஆள்வதற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம்.. ம்ஹும் அதுவும் இல்லை. ஆனால் தான் ‘ஆண்தான்’ என்பதற்கு சாட்சி சொல்ல பிள்ளை வேண்டும். மற்றபடிக்கு அவனுக்கு இந்த நிலையே பிடித்துதான் இருக்கிறது. எந்த தொல்லையும் இல்லை. விருப்ப நேரத்திற்கு மனைவி. அவனைப் பொறுத்தவரை மது எப்படியோ, கஞ்சா எப்படியோ, பிற பெண்கள் எப்படியோ அப்படித்தான் உமாவும். “போதை தரும் பேதை” ஆனால் உமா மட்டுமே அவனுக்கே அவனுக்கானவள்.
இதுநாள்வரை அவன் பிள்ளை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. வாழ்க்கை அவன் எண்ண போக்கிற்கு தகுந்தபடி சிறு கற்கள் கூட இல்லாமல் பதவிசாகதான் சென்று கொண்டிருக்கிறது. பணம் -காசு ஆடம்பர வாழ்வு எதற்கும் குறைவில்லை. இன்று மற்றவர்கள் கைநீட்டி கேள்வி கேட்கும் வரை குழந்தை இல்லாததின் ஆழத்தைப் பற்றிய சிந்தனை எல்லாம் அவனுக்கு கிடையாது. இப்போது நிலையே வேறு. என்னதான் நண்பர்கள் குடிபோதையில் பேசியிருந்தாலும் மற்றவர்களும் இதே போல் தான் இவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்இன்னும் கால தாமதப்படுத்தி தனது ஆண்மையை பற்றி கேள்விகள் எழுவது அவனைப் பொறுத்த வரைக்கும் பெரிய அடி. தட்டில் இட்லியை வைத்துக்கொண்டு இருந்தாள் உமா. அவளை வெறித்து பார்த்துக் கொண்டே குருவின் சிந்தனைகள் இவ்வாறாக சென்று கொண்டிருந்தது. கைகள் தாமாகவே இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டது. குருவின் ஆழ்ந்த மௌனம் உமாவுக்கு பயத்தை கொடுத்தது . திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் மௌனியாய் ஒருநாளும் இருந்ததில்லை. வீட்டின் நடு கூடம் என்றும் கூட பார்க்காமல், கூடத்திலேயே அவளிடம் சீண்டல்களை தொடர்ந்து கொண்டிருப்பான். குரு சாப்பாட்டு கூடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவன் பெற்றோர் கூட கூடத்திற்குள் வரமாட்டார்கள்.அவனது நடவடிக்கைகள்…தானும் லஜ்ஜையற்று நடந்துகொண்டு உமாவையும் சேர்த்து தரம் இறக்கி காட்டி விடுவான்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆனால் உமாவால் நிம்மதி அடைய முடியவில்லை.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்து உமாவை கூட்டிக்கொண்டு தங்களது அறைக்குள் சென்றவன், நேராகவே’ நாம குழந்தை பெத்துக்கலாம் உமா என்றான்’. எந்த பீடிகையும் அலங்கார வார்த்தைகளும் , கொஞ்சல்களும் அதில் இல்லை. அதைவிட அவளிடம் அபிப்ராயம் கேட்கும் குரல் தொனியும் இல்லை. அதிர்ச்சி அதிகமாகி உறைநிலை எட்டியிருந்தாள் பெண். கணவனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வீட்டில் உள்ள அன்னபூரணி முதல் அவளை சுற்றியுள்ள தெரிந்தவர்கள் எல்லோரும் கேட்பது தான். எல்லோருக்கும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள். இப்போது கணவனை எவ்வாறு சமாளிப்பது?
அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் உமா. அவளுக்கு வாயில் வார்த்தைகள் வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால் சொல்லத்தான் முடியாது. உள்ளூர ஒரு ஆசை உண்டு அவளுக்கு. அது ‘உன்னை மாதிரி பொறுக்கிக்கு, ரவுடிக்கு குழந்தை பெத்து தரது ஒரு கேடா ‘என்று கேட்க வேண்டுமென. கேட்க முடியாமல் தான் இத்தனை வருஷங்களாக அவள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொண்டாள்.
நேரடியாக அவன் கேள்வியை மறுக்க இயலாமல் ‘நாம நல்லா தானே இருக்கோம் டார்லிங்… இப்போ என்ன அவசரம்? குழந்தை பிறந்தா உடம்பு அழகு குறைஞ்சு போய்டும். ஸோ கொஞ்ச வருஷங்கள் ஆகட்டுமே ‘என்று கிள்ளை மொழியில் கொஞ்சி பேச, அவனோ அவளது குரலும் உடல் மொழியும் கூறும் செய்தியில் மயங்கினான். முதல் நாள் அந்த பெண்ணிடம் தேடியதை இங்கே தொடர்ந்தான். கூடலின் முடிவில் அவனுக்கு நிறைவுக்கு பதிலாக நண்பர்களின் கிண்டல் ஞாபகம் வர, ஒரு பிடிவாதத்துடன் ‘நாம இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை பெத்துக்கணும் உமா. உன்னால முடியாதுன்னா முதல்ல டாக்டர பாப்போம். இன்னும் தள்ளி போனா நா உன்ன தள்ளி வச்சிட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்குவேன். ஹாங்… கவலை படாதே, வேற எவ வந்தாலும் கூட உன்கிட்டயும் வந்து போக இருப்பேன் ‘என்றவனை கண்டு அவளுக்கு உள்ளே அருவருப்பு. அவன் சொன்ன கடைசி வார்த்தை… கடவுளே!எனக்கு ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கை என்று மருகினாள்.
மனைவிக்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லை என புரிந்துகொண்டான் குரு.
மனதை தேற்றிகொண்டு அடுத்த நாளே பெண் மருத்துவரை அணுகி, குழந்தை பிறக்க தேவையான விஷயங்களை கேட்டறிந்தாள் உமா . குழந்தை என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைக்க?
அடுத்த அவளது மாதந்திர நாட்களில் வெளிப்படையாகவே தனது கோவம் ஆத்திரம் எல்லாவற்றையும் அவள் மீது இறக்க தொடங்கிவிட்டான் குரு. அவனது இந்த முகத்தையும், குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தீவிரத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் உமா. கணவனின் இந்த பரிமாணம் அவளுக்கு புதியது. அவனுக்குள் இருக்கும் வேறு ஒரு நபர் பார்க்கும் குருவை விட கொடூரமானவன் என்று அவளுக்கு புரிந்தது. ஒவ்வொரு மாதமும் இதுவே தொடர்கதையாக குறிப்பிட்ட ஒரு வருடத்திற்குள் குழந்தை இல்லை என்றால் மறுமணம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். தன் மனைவியின் மீது இருந்த மோகத்தை விட தனது சுய கவுரவம் முக்கியம் என்பது போல அவன் நடத்தை.
இன்னொருபுறம் அருணாச்சலம் சென்னையில், மிகத் தீவிரமாக தனது கட்சியை முன்னேற்றுவதில் ஈடுபட்டிருந்தார். தேர்தலில் எப்படியும் முதலமைச்சர் பதவியை பெறுவது அவரது நோக்கமாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல அவர் போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே என்ற நிலையில் வெகு அபூர்வமாக சிவனையும் கூட்டிக்கொண்டு வீரம் துணையுடன் தன் மனைவியை சந்திக்க பூங்குவளை வந்தார் அருணாச்சலம். மனைவி யை விட்டுவிட்டு தனியாக சென்னையில் இருப்பது அவருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. என்னதான் வயதாகி விட்டாலும் தனக்கான துணை தனது மனைவி தான் என்று தீர்மானம் என்றுமே ஒரு உண்டு.
குரு கொடுத்த நேரப்படி பன்னிரெண்டு மாதங்களில், இப்போது பதினோராவது மாதம். குரு சொன்னதை செய்து விடுவானோ என்ற பயம் உமாவை ஆட்டிப்படைத்தது. சிவனிடம் அவள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவளது முகத்தைப் பார்த்து ஜீவன் வெகுவாக கவலை அடைந்தார். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அந்த தகவல்களை தன் மகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சிவனின் விருப்பமாக இருந்தாலும் கூட உண்மை இவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை. அவளைப் பொருத்தவரை சிவன் எந்த வீட்டில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவனுக்கு தெரிந்தே தண்ணி திருமணம் முடித்து வைத்த தந்தை பற்றி அவளுக்கு மரியாதை விட்டுப் போயிற்று. அதனால் தந்தையையும் தாயையும் தூர நிறுத்திய பழகிக் கொண்டாள்.
ஒருவழியாக, தேர்தல் நாள் வர, அருணாச்சலம் தன் தொகுதியில் மீண்டும் எம் எல் ஏ வாக நிற்க, வீட்டிலோ உமா மயங்கி விழுந்து இருந்தாள்.
உமா மீண்டும் எழுந்து கொள்வாளா?
மயங்கி விழுந்தவளை தன் கைகளில் தாங்கி கொண்டான் குருபரன். அவன் மனதிற்குள் இந்த முறை நிச்சயம் மனைவி கரு தரித்து இருக்கலாம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாச்சலம் தனது அலுவலக அறைக்குள்ளேயே தான் இருந்தார். வெளியே வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்ததால், தன் வீட்டிற்குள் இருந்தவருக்கு நிஜமாலுமே டென்ஷன்தான். புதிதாக கட்சி தொடங்கி தனியாக தேர்தலில் களம் காண்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அவர் கட்சி தொடங்கி வெறும் இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த முறை அவர் பெறும் வாக்குகள் தான் அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலையெழுத்து. அது அவருக்கு புரிந்தது,
அதனாளேயே பதட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மருமகளும் மயங்கி விழுந்தது அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு பண்ணியது. உடனடியாக குருவை அழைத்து,’ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு லேடி டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடு குரு என்றார்.
அன்னபூரணிக்கு தன் மகனுடன் மருமகளை மருத்துவ மனைக்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசைதான். ஆனால், கணவர் தனியாக வீட்டில் இருப்பார் என்ற எண்ணத்தினால் குருவை கிளம்ப சொல்ல, அங்கே கூடத்தின் ஒரு ஓரத்தில் தனக்கு தன் மகளுடன் எந்த சொந்தமும் இல்லை என்ற மன வருத்தம் முகத்தில் தெரிய கைகளை பிசைந்துகொண்டு நின்றுகொண்டிருந்தார் சிவம். அன்னபூரணியோ மருமகள் உமா தனது தந்தையிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இத்தனை வருடங்களில் தனது மருமகளின் இந்த முகம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியது உண்டு. இத்தனை வருடங்கள் ஒருவராலும் மனதில் உள்ள வெறுப்பையும் ஆதங்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியுமா…என்ற ஆச்சரியம் எப்போதுமே அன்னபூரணிக்கு உண்டு. அவளைப் பொறுத்தவரை குருபரன் தன் மனைவியுடன் நன்றாகத்தான் நடந்து கொள்கிறான். மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். அவளது கண் பார்த்து நடக்கிறான் என்று கூட சொல்லலாம். அப்படி இருந்தும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு தந்தை மீதான வெறுப்பு ஏன் என்றுதான் புரியவில்லை. தனது மனதில் இந்தப்பெண் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?அருணாச்சலத்தோடு அன்னபூரணி இதையெல்லாம் பகிர்ந்து கொண்டது கிடையாது. சிவம் இப்பொழுது அருணாச்சலத்தின் கட்சியில் முக்கிய நபர் ஆகிவிட்டார். கட்சியில் தனது அதிகாரத்தை சிவன் காட்டவில்லையே தவிர, அவர் அருணாச்சலத்தின் சம்பந்தி என்பதும், இவரது ஒற்றைச்சொல் அருணாச்சலத்தை ஆட்டுவிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
உண்மையை சொல்லப்போனால் அருணாசலத்துடானான இந்த நெருக்கம் உமாவின் திருமணத்திற்கு பிறகு வந்ததுதான். அதற்கு முன்பு வரை சிவன் சாதாரண கணக்கப்பிள்ளை. உண்மை விசுவாசி மட்டுமே!
ஆனால், இன்றோ சிவனின் மரியாதை எவ்வளவு கூடிவிட்டது? அற்ப விஷயங்களுக்காக உமாவை சிவன் குரு போன்ற ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தது
உமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உள்ளுர அந்தரங்க அறையில் வெறும் சதை சுகம் கொடுக்கும் தாழ் நிலை தானே எனக்கு என்ற எண்ணம் அவளை பெற்றவருடன் இணங்க விடவில்லை. இந்த திருமணத்தினால் தானே அம்மாவுடனும் தங்கைகளுடனும் நான் விலகி இருக்க வேண்டியதாகி விட்டது என்ற கோபம் வேறு அவளுள். பணக்கார வீட்டில் அலங்காரப் பொருட்களுடன் ஒன்றாக பொம்மை போல் சதாசர்வகாலமும் அலங்காரம் செய்துகொண்டு குருபரன் முன்னெப்போதும் நின்றுகொண்டு கணவன் என்ற உரிமையில் நடந்து கொள்ள முடியாமல், அவநம்பிக்கையுடன் காலம் கடத்துவது உமாவின் மனதில் அருவருப்பை கொடுத்தது. இதையெல்லாம் ஒரு பெண்ணான அன்னபூரணி யார் கூட புரிந்துகொள்ள முடியாத பொழுது வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்?
நடக்கும் நாடகங்களை பலகாலமாக அன்னபூரணி பார்த்துக் கொண்டிருந்தாலும் சிவனின் மீது அவளுக்கு ஒரு பரிதாப உணர்வு என்றுமே உண்டு. அந்த குடும்பத்தை பொருத்தவரை சிவன் ஒரு நன்றியுள்ள விசுவாசி, இன்று நேற்றல்ல…வெகுகாலமாக.
சட்டென்று முடிவெடுத்தவளாக அன்னபூரணி சிவனிடம்
‘ “நீங்களும் போயிட்டு வாங்களேன் சிவம். ரெண்டுபேருக்கும் பதட்டம் குறையும் ‘என்று அவர்களுடன் அனுப்பி வைக்க, சிவன் முன்னிருக்கையில் டிரைவருடன் அமர்ந்துகொள்ள குருபரன் உமாவும் பின்னிருக்கையில். முன்னே இருக்கும் கண்ணாடி வழியாக உமா தன் தந்தையை பார்த்துக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தாள்.
அவளது கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு சிவனிடம் பதில் இல்லை. தலையைத் தொங்கப் போட்டவாறு தான் அவர் பயணம். உமாவின் பார்வையோ உணர்வுகளை தொலைத்து வெறுமையாய் அவரைப் பார்த்துக் கொண்டு வந்தது. குருவின் கண்களில் தெரியும் அலட்சியம் அவள் மனதை சுட்டாலும் சிவனுக்கு இது கண்டிப்பாய் தேவை என்று அவள் மனம் வாதிட்டது. வாய்விட்டு பாசத்துடன் அப்பா என்று அழைக்க அவளுக்கு நா வரவில்லை.

