
மாயோன் 12
மகிழனது ஷேர்ட் காலரை பற்றி அவனை வர்ஷாவின் அறைக்குள் இழுத்து வந்தான் சத்யன்…
அறையின் ஓரத்தில் ஒரு பெரிய ஜன்னல்… அதன் வழியே சூரிய கதிர்கள் அறைக்குள் நுழையாமல் இருக்க… திரையிட்டு அவ்வழி மறைக்கபட்டிருந்தது…
காயம் முழுவதும் குணமடையாத நிலையில் வலியில் நெஞ்சை பிடித்து கொண்டு சத்தியனை புரியாத பார்வை பார்த்தான் மகிழன்.
அவனது பார்வைக்கு கோவத்தை பதிலாக கொடுத்தவன்… அருகில் இருந்த ஜன்னலின் திரை சீலையை சற்றென்று நீக்கினான்…
திரை சீலை விலகவும் சூரிய கதிர்கள் அங்கே கட்டிலில் உணர்வற்று படுத்து கிடக்கும் வர்ஷாவின் முகத்தில் படர்ந்தது…
கண்களை மூடி திறந்த சத்யன், மகிழனது கரத்தினை பிடித்து இழுத்து வந்து வர்ஷா படுத்துக்கொண்டிருக்கும் கட்டிலின் விளிம்பில் தள்ளினான்…
“பாருடா அவளை நல்லா பாரு… இவளோட இந்த நிலைக்கு காரணம் உங்க அப்பாவி நந்தினி தான் ” என்று கோவத்தில், ஆக்ரோஷமாக சத்யனின் வார்த்தைகள் வெளி வந்தது…
அவனை புரியாமல் பார்த்த மகிழன், தனது பார்வையை உயர்த்தி கட்டிலின் மீது கிடக்கும் அந்த உருவத்தை பார்த்தவன்…உடனே பயத்தில் ஒரு அடி அவளை விட்டு தள்ளி நகர்ந்தான்…
” என்ன பார்க்கவே முடியலை இல்லை… எப்படி இருந்தவள் தெரியுமாடா இவள் ” என்றவன் அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த வர்ஷாவின் ஆளுயர புகைப்படத்தை காட்டினான்.
அந்த புகைப்படத்தை வியந்து பார்த்த மகிழன்,அப்படியே பார்வையை திருப்பி கட்டிலில் படுத்து கிடப்பவளின் தற்போதைய நிலையை வலியோடு பார்த்தான்.
அதனை பார்த்தவனுக்கு “அவளா இவள் ” என்ற கேள்வி வந்தது… அவளது தற்போதய நிலையை கண்டு..
அந்த புகைப்படத்தில் இளமைக்கே உரிய வனப்பில் மின்னி கொண்டிருந்தாள் வர்ஷா… ஐந்து அடிக்கும் சற்று உயரமாக, அறுபது கிலோ எடையில் இருந்தவள்,
இப்போது எலும்பில் சதை ஒட்டி கொண்டு, மொத்தமே முப்பத்தியைந்து கிலோவாக கால்கள் கூட நீட்ட முடியாமல் கட்டிலில் உடலை குறுக்கி படுக்க வைக்க பட்டிருந்தாள் அவள்…
எந்த பெண்ணும் அனுபவிக்க முடியாத, அனுபவிக்க கூடாத வேதனையை எல்லாம் அனுபவித்து இந்த நிலையில் உள்ளாள் பெண்ணவள்…
இடைவரை தாண்டி அலை அலையாய் வளர்ந்திருந்த கூந்தல் இன்று கழுத்துவரை பூனை முடியாக சுருண்டு இருந்தது…
காந்தம் போல ஈர்க்கும் அவளது வேல்விழிகள் இரண்டும் இன்று இமைக்க மறந்து விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தது…
இமைக்க மறந்த அவள் விழிகள் எதையோ தேடிக்கொண்டிருந்தது… இருப்பினும் அந்த பார்வையில் இருக்கும் தேடலை யார் அறிவார்? அவளது தேடல் எதுவோ? யாரோ? காரணமறியா கனவுலகில் அனைத்து உணர்வுகளும் மரத்து போய் ஜடமாய் காட்சியளித்தாள் பெண்ணவள்…
சத்யன், மகிழனிடம் வர்ஷாவை பற்றியும் அவளது இந்த நிலைக்கு காரணமானவர்களை பற்றியும் கூறி முடிக்க… மகிழனது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது…
வாழ வேண்டிய வயதில் அந்த பெண்ணின் வாழ்க்கை, இப்படி கயவர்கள் சூழ்ச்சியால் சிதைந்து போய்விட்டதே! என்று எண்ணி மனம் வருந்தினான்.
” இவளை எப்படி எல்லாம் வாழ வைக்கணும்ன்னு நாங்க ஆசைபட்டோம் தெரியுமா? துறு துறு ன்னு எங்க காலையே சுத்தி சுத்தி வருவாள்… ஆனால் இன்னிக்கு எழுந்துக்க கூட முடியாமல் எந்த உணர்வும் இல்லாமல் இப்படி படுத்த படுக்கையா கிடக்கிறாள்… இதுக்கு எல்லாம் காரணம் அவள், அந்த நந்தினி, அவளை சும்மா விட சொல்லுறியா? சொல்லுடா சும்மா விட சொல்லுறியா? இதே நிலைமை உங்க கீர்த்திக்கு வந்து இருந்தால் நீ இப்படி தான் அமைதியா இருப்பியா? ” என்று மகிழனது சட்டையை பிடித்து உலுக்கினான் சத்யன்…
அவர்கள் மனதில் இருப்பது ஆறாத காயம் அல்லவா? எப்படி அதற்கு அவனால் ஆறுதல் கூற முடியும்? முடிந்த வரை மௌனமாக நின்றான் மகிழன்.
” உங்க வலி எனக்கு புரியுது, நீங்க சொல்லுறது உண்மையா இருந்தால், தெரிந்தோ தெரியாமலோ இந்த பொண்ணோட இந்த நிலைமைக்கு நந்தினியும் ஒரு காரணம்… ஆனால் கண்டிப்பா நந்தினி இதை தெரிஞ்சி பண்ணி இருக்க மாட்டாள்… அவளோ கல்நெஞ்சகாரி இல்லை எங்க நந்தினி ” என்றவனை கொலை வெறியுடன் பார்த்த சத்யன்…
“முட்டாள்… இவ்ளோ சொல்லுறேன், மறுபடியும் அவளை நம்பி! நான் நாசமா தான் போவேன்னு சொன்னால் என்னடா அர்த்தம்… கூட பொறந்த தங்கச்சியோட உயிரவே எடுக்க பார்த்தவள்டா அவள்.. ” என்றவனை மகிழன் புரியாமல் பார்க்க…
கீர்த்திக்கு அன்று நடந்த அந்த கொடூரத்தை சத்யன் கூறி முடிக்கவும்… இடிந்து போய் அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் மகிழன்…
அவன் கூறிய தினத்தை நினைத்து பார்த்தவனுக்கு ஒருவேளை அது உண்மையோ? என்று ஒருகணம் தோன்ற, பதில் பேசமுடியாமல் நின்றான்…
கீர்த்தி அவன் உயிர் அல்லவா? அவளையே காவு கொடுக்க நினைத்த நந்தினியை இத்தனை வருடகாலம் மனதில் காதலாய் சுமந்ததை நினைத்து, முதல் முறையாக கூனி குறுகி நின்றான்…
நந்தினி அவனுக்கு அத்தை மகள் மட்டுமே, ஆனால் கீர்த்தி அவனுக்கு மகள் போன்றவள்!!
தனது பதினைந்து வயதில், கீர்த்தி கைகுழந்தையாக இருந்த போது, அவளை தன் கைகளில் ஏந்தியவன், அப்போதே அவளை தன் மகளாக தான் பார்த்தான்… அப்படி இருக்க தன் மகளுக்கு துன்பம் அளிக்க நினைத்தவளை அவனால் எப்படி மன்னிக்க இயலும்…
இமைகளை மூடி தன் கண்ணீரை உள் இழுத்து கொண்டவன், மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து நேராக வர்ஷாவின் அருகில் வந்தான்…
அவளோ உணர்வில்லாமல் விட்டத்தை வெறித்து பார்த்து படுத்துக் கொண்டிருக்க… நடுங்கிய விரல்களுடன்,கரத்தினை அவள் அருகில் கொண்டு சென்ற மகிழன், வர்ஷாவின் தலையை மெதுவாக வருடி கொடுக்க… அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளி பெண்ணவளின் நெற்றியை நிறைத்தது…
*******
காலை பொழுதில் பால்கனி கதவுகள் வழியே சூரிய ஒளி முகத்தில் படர… மெல்ல கண்களை சுருக்கி விழித்து கொண்டாள் கீர்த்தி…
கண்விழித்தவள் மெல்ல எழுந்து கொள்ள முயற்சி செய்யவும், ஏதோ ஒன்று தன்னை அழுத்துவதை போல உணர்ந்தவள் பாரம் தாங்க முடியாமல் பக்கவாட்டாக திரும்பி பார்க்க… அங்கு அவளது இடையின் மீது கை போட்டு அணைத்தவாறு அபிமன்யு உறங்கிகொண்டிருந்தான்…
அதனை கண்டு அதிர்ச்சியில் ” அய்யோ அய்யோ அய்யோ ” என்று கத்த தொடங்கினாள் கீர்த்தி..
அவளது சத்தம் கேட்டு எரிச்சலாக கண்களை திறந்தவன்” எதுக்குடி இப்படி கத்துற… மனுஷனை கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடுறியா ? அமைதியா தூங்குடி ” என்றவன் அவளை மேலும் தன்னோடு நெருக்கி கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான்…
அவனது இறுக்கம் பெண்ணவளுக்கு வலியை கொடுக்க… ” கொலை… கொலை…கொலை ” என்று கத்தினாள்…
கோவத்தில் கண்களை திறந்து அவளை முறைத்தவன்.. ” என்னடி ?” என்று கேட்க…
” மூச்சு முட்டுது தள்ளி போங்க… எதுக்கு இப்போ என் பக்கத்துல வந்து படுத்தீங்க? என்கிட்ட ஏதாவது தப்பா நடந்துக்க பார்த்தீங்க, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.. தள்ளி போங்க ” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்…
” தள்ளி போக முடியாது என்னடி பண்ணுவ? ” என்றவன், அவளது முகத்துக்கு நேராக தனது முகத்தை கொண்டு போக, பயத்தில் அவளுக்கு பேச்சு வரவில்லை…
” சொல்லுடி என்ன பண்ணுவ? ”
” அது… அது நான் உங்க கூட சண்டை.. என்கிட்ட பேசாதிங்க தள்ளி போங்க ” என்றவள் இதழ் சுளிக்க… மெல்ல புன்னைத்தவன்…
” ஒஹ் அப்போ! நீ என் மேல கோவமா இருக்க? ”
” ஆமா பின்ன இல்லையா? என்னை பாம்பை விட்டு கொல்ல பார்த்தீங்க தானே ” என்றவள் சிறுப்பிள்ளையாக சினம் கொள்ள…அவளது பொய் கோவம் அவனை ஈர்த்தது…
மீண்டும் அவளை கோவம் கொள்ள வைக்கும் பொருட்டு, இன்னும் அவளை நெருங்கியவன் தன் விரல் கொண்டு மென்மையாக அவளது கன்னம் வருட… உடல் சிலிர்த்தவள் அதை வெளிக்காட்ட விரும்பாமல், கண்களை உருட்டி அவனை முறைத்து பார்த்தாள்…
” என்னடி? பார்வை எல்லாம் பலமா இருக்கு, என்ன விஷயம்? ” என்று கேட்டவன், தன் இதழ் கொண்டு அவளது காது மடலை வருட.. ” தள்ளி போங்க என் பக்கத்துல வராதீங்க, நேத்து என்னை என்ன பண்ணீங்க, நீங்க எப்படி என் பக்கத்துல வந்தீங்க? ” என்று கூறி கோவத்தில் அவனை தள்ளிவிட பார்த்து மெத்தையில் இருந்து துள்ளி கொண்டிருந்தாள்…
“ஹெலோ மேடம்… ரொம்ப எதிர்பார்க்காதீங்க, நேத்து நயிட் உனக்கு பீவர் சரியாகிடுச்சான்னு பார்க்க வந்தேன்… அப்போ உனக்கு பீவர் அதிகமாகி குளிரில உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.. அந்த நேரத்தில உன்னை பார்க்க வந்த என்னோட கையை பிடிச்சி இழுத்து, பக்கத்துல படுக்க வச்சு என்னை கட்டி புடிச்சு தூங்கினது நீ… இப்போ ஏதோ நான் தப்பு பண்ண மாதிரி பேசுற? உண்மையை சொல்லணும்னா நேத்து நீதான் என்கிட்ட தப்பு தப்பா நடந்து கிட்ட.. நான் தான் பாவம் சின்ன பொண்ணு தெரியாமல் ஏதோ பண்ணுதுன்னு சொல்லி உன்னை தலையில் தட்டி தூங்க வச்சேன் ” என்றவனை இமைக்காமல் விழிவிரித்து பார்த்து கொண்டிருந்த கீர்த்தி…
” பொய் சொல்லாதீங்க, நேத்து நீங்க எனக்கு போட்ட ஊசில தான் ஏதோ தப்பான மருந்து கலந்து இருக்கீங்க அது தான் நேத்து நடந்த எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை…”
” அடிங்க… என்னை யாருன்னு நெனச்ச? ” என்று ஏதோ பேச வாய் எடுத்தவன் பின் தன்னை சமாளித்து கொண்டான்…
” பின்ன நீங்க நடிகர் தானே? அப்ரோம் எப்படி இந்த ஊசி எல்லாம் ” என்றவள் அவனை சந்தேகமாக பார்க்க…
” ப்ச் இன்னும் உனக்கு நம்பிக்கை வரலன்னா, நேத்து நீ என்னை என்னென்ன பண்ணியோ அதை நான் இப்போ பண்ணி காட்டவா? என்னை மாதிரி நீ பொறுமையா இருக்கியான்னு பார்க்கலாம் ” என்றவன் குறும்பாக சிரித்தபடியே அவள் இதழ்களை நோக்கி வர…
” ஒன்னும் சொல்ல தேவை இல்லை… தள்ளி போங்க நான் ப்ரஷ் பண்ணனும் ” என்று கூறியவளை பார்த்து வசீகரமாக சிரித்தவன்..
” ஒஹ் ப்ரஷ்( brush) பண்ணிட்டு வந்து பிரெஷ்( fresh )ஆஹ் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு சொல்லுறியா? ” என்றவனை பார்த்து இதழ்களை பிதுக்கி அழ தயாரானவளை பார்த்து …
” போதும்… போதும் காலையிலேயே அழுது வடியாத” என்றவன் எழுந்து நேரத்தை பார்க்க… அது ஒன்பது மணியை காட்டியது…
“உன்கிட்ட வாக்குவாதம் பண்ண எனக்கு நேரமில்லை, எனக்கு ஷூட்க்கு லேட் ஆச்சு ” என்று கூறியவன் அவளது கழுத்தை தொட்டு பார்த்து ” பீவர் சரி ஆகிடுச்சு… நான் திரும்பி வரும் வரை கையையும், காலையும் வச்சிட்டு சும்மா இரு வந்து சண்டை போடுவோம் ” என்றவன் விறுவிறுவென அங்கிருந்து வெளியே சென்றான்..
அவன் சென்றபிறகு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டவள் ” அப்பப்பா மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு… முதலில் எப்படியாவது இங்க இருந்து போகணும்.. நிமிஷத்துக்கு ஒருக்கா இவர் குணம் மாறுது, நம்மளால முடியாதுப்பா, கொஞ்சம் இல்லைனா நேத்து இந்த ஆளு என்ன கொன்னு இருப்பான்.. ஏன் பாம்பை விட்டு என்ன கொல்ல பார்த்தீங்கன்னு கேட்டால்! காக்கை சித்திரம், வௌவால் சித்திரம்னு கலர் கலரா கதை சொல்லி மாஸ்டர் மாதிரி கிளாஸ் எடுக்கிறார்… நயிட் என்னன்னா ஊசி போட்டு என்ன கொல்ல பார்க்குறாரு? ஐயோ இனிமேல் ஒரு நிமிஷம் கூட இந்த மனுசன் வீட்டுல இருந்தால் நம்ம உயிருக்கு உத்தரவாதம் இல்லை… இவரு ஷூட்டிங் போற நேரமா பார்த்து வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகிடனும் ” என்றவள் தன் சொந்த கணவனிடம் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு செல்வது போல… அவன் வாங்கி கொடுத்த ஆடைகளை எல்லாம் அவனை திட்டி கொண்டே அவளது பையில் நிறப்பினாள்.. அப்போது பையின் மற்ற பக்க திறப்பினை திறக்கவும் அதில் ஒரு காகிதம் இருந்தது… அதில் ” அதியன் ” என்று எழுதி இருந்ததை பார்த்தவள்… ” ஒஹ் இது தானே அக்கா போன் பண்ண சொல்லி கொடுத்த நம்பர் , இது தொலைஞ்சு போச்சின்னு நெனச்சேன், இங்க தான் இருந்து இருக்கு ” என்றவள் அப்போது எதார்த்தமாக திரும்பும் போது மேசையில் இருந்த விக்ரமனின் போன் கீர்த்தியின் கண்களில் பட்டது.. அதனை பார்த்து ” ஐய் ” என்று துள்ளி குதித்தவள்…
வேக வேகமாக அதியனது நம்பர் எழுதி இருந்த பேப்பரை எடுத்து கொண்டு… விக்ரமனது கைபேசியையும் கையில் எடுத்தவள்… மெல்ல பூனை நடை நடந்து கதவருகில் வந்து சுற்றி சுற்றி பார்த்தாள்… அங்கு யாரும் இல்லை என்று உறுதி படுத்தி கொண்டவள்… வேகமாக உள்ளே ஓடி வந்து பால்கனி பக்கத்தில் நின்று விக்ரமனின் கை பேசியை உயிர்ப்பிக்க… அது பாஸ்வேர்ட் கேட்டது…
” அறிவு களஞ்சியமே அடுத்தவங்க போன்ல பாஸ்வேர்ட் போட்டு இருக்கும்னு கூடவா உனக்கு தெரியாது ” என்று தன்னை தானே திட்டி கொண்டவள் திரும்பி நிற்க… அப்போது கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்தான் விக்ரமன்…
அவனை கண்டு பதட்டத்தில் அதியனது நம்பர் இருந்த பேப்பரை பின்னால் மறைத்து வைத்தாள் கீர்த்தி, அவளது செயலில் சந்தேகம் கொண்டவன் ” உன் முழியே சரி இல்லையே என்னடி திருட்டு தனம் பண்ணுற? ” என்று கேட்டபடி அவளை நெருங்கி வர… உடனே அவள் கையில் இருந்த அவனது போனை அவன் முன்னே நீட்டியவள் ” சும்மா கேம் இருக்கான்னு எடுத்து பார்த்தேன் ” என்று அசடு வழிந்தபடி கூறியவளை… ஆழ்ந்து பார்த்தவன் அவளை நெருங்கி வரவும்… விக்ரமனது அலைபேசி சிணுங்கியது…
உடனே அந்த அலைபேசியை கீர்த்தியின் கையில் இருந்து பிடுங்கியவன், ” சொல்லு சதீஷ் இதோ கிளம்பிட்டேன் ” என்றவன் அவளை சந்தேகமாக பார்த்தபடி அங்கிருந்து வெளியே சென்றான்…
அவன் வெளியே செல்லவும் நிம்மதி பெருமூச்சு விட்டவள்… ” ஆமா நான் ஏன் இவருக்கு பயப்படனும் ” என்று தன் தலையில் தட்டி கொண்டாள்…
சென்ற நொடியே போன் பேசியபடி மீண்டும் அவளது அறைகதவினை திறந்து கொண்டு விக்ரமன் உள்ளே வரவும் ‘ என்ன தான் வேணுமாம் இந்த மனுசனுக்கு எப்போ பாரு தொல்லை பண்ணிக்கிட்டு ‘என்று கீர்த்தி சலித்து கொண்டாள்…
உள்ளே வந்தவன் மெத்தையில் ஒரு போனை வைத்து விட்டு ” இதுல கேம் இருக்கு விளையாட்டிட்டு இரு ” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்…
அலைபேசியை பார்த்தவளது கண்கள் இன்பமாய் மின்ன, அவளது மூளையில் சட்டென மின்னல் வெட்டியது… உடனே விரைந்து வந்து அந்த அலைபேசியை உயிர்பித்தவள்… அதியனது நம்பரை அதில் டயல் செய்தாள்…
******
” பாய் பேபி ” என்று தன்னுடன் இரவை பங்குபோட்டு கொண்ட பெண்ணவளின் இதழ்களில் முத்தமிட்டு சரத் வழி அனுப்பி வைக்க…
அவளோ அங்கே அமைதியாக அமர்ந்திருந்த அதியனை பார்த்து ” சரத் இது யாரு? ” என்று கண்களில் போதையுடன் கேட்க.
” அம்மா தாயே அவன் பக்கம் கண்ணை திருப்பாத… இருக்குற கடுப்புல உன்னை இங்கேயே கொன்னு புதைசாலும் புதைச்சிடுவான்…போய்டு ” என்று கூறி அவளை அனுப்பி வைத்தவன்… அதியனது அருகில் வந்து அமர்ந்தான்.
” அதி ஏன்டா எப்போவும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க ? ” என்று சரத் கேட்க…
” நீ ஏன்டா இப்படி கண்ட பொண்ணுங்களை எல்லாம் வீட்டுக்கு அழைச்சிட்டு வர? ” என்று கேட்டான்…
” சாத்தான் வேணும்னா மனசு மாறி வேதம் ஓதலாம், ஆனால் என்னால அதை எல்லாம் கேட்க முடியாது பிரதர்… ”
” எப்படியோ போ எனக்கு என்ன ? ” என்றவன் லேப்டாப்பில் தெரிந்த வர்ஷாவின் உருவத்தை கையால் வருட, அதை பார்த்து தலையில் அடித்து கொண்ட சரத் ..
” ஒன்னு இந்த உலகத்தில நல்லவனா வாழனும் இல்லை கெட்டவனா வாழனும்… எப்படி வாழ்ந்தாலும் சரி,ஆனால் சாகுற வரை ஒரே மாதிரி வாழனும்… அதை விட்டுட்டு கோபியர்கள் கொஞ்சும் ரமணா, சீதையை பார்த்து ராமனா மாறணும்னு ஆசைப்பட்டால் எல்லாத்தையும் இழந்து உன்னை மாதிரி வனவாசத்தை தான் அனுபவிக்க வேண்டி வரும், அதுல எனக்கு உடன்பாடு இல்லை… ” என்றவனை அதியன் புரியாமல் பார்க்க…
” புரியலையா ? உலகத்தில் உள்ள எல்லா பொண்ணையும் சொந்தம் கொண்டாடிய ஒருத்தன்.. ஒரு பொண்ணை பார்த்து நீ தான் என் உலகம்ன்னு சொல்லி அவள் பின்னாடி போக தயாரானான் அப்படின்னா கடவுள் அவனுக்கு தரமான கிளைமேக்ஸ் வச்சு காத்துட்டு இருக்காருன்னு அர்த்தம்… சோ எப்படி வேணும்னாலும் வாழலாம் ஆனால் திருந்தி மட்டும் வாழ கூடாது… இந்த உலகம் திருந்தியவனை ஒரு போதும் நம்புறது கிடையாது தேவை இல்லாமல் கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காமல் அதை எல்லாம் மறந்து, பழையமாறி வாழுற வழியை பாரு அது தான் உனக்கு நல்லது ” என்று கூறிய சரத் எழுந்து கொள்ளவும்… அதியனது அலைபேசி சிணுங்கியது…
அதியனது அலைபேசி சிணுங்கியது… ஆனால் அந்த சத்தம் அவனது செவியில் விழவில்லை போலும்! அமைதியாக அமர்ந்திருந்தான்…
” டேய் அதி உன் போன் தான் ” என்று சரத் கூற…
” ஒஹ் ” என்று கூறி நிதானத்துக்கு வந்தவன், அலைபேசியின் திரையை பார்க்க அதில் ‘ லாயர் சிவா ‘ என்று இருந்தது ..
” சிவா தான் கால் பண்ணி இருக்கான்… ஆனால் அவன் ஏன் எனக்கு கால் பண்ணனும்? ” என்ற அதியன் அழைப்பை ஏற்க போகும் முன் அதனை அவனிடம் இருந்து வாங்கினான் சரத்…
” என் போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால உனக்கு கால் பண்ணி இருப்பான் போல ” என்று சமாளித்து விட்டு அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் அழைப்பை ஏற்றான்…
” அந்த நந்தினி… ” என்று எடுத்த எடுப்பிலேயே நந்தினியை பற்றி சிவா பேச…
” எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கேன், அவன் நம்பருக்கு போன் பண்ணாதன்னு… அப்படியே பண்ணாலும், இப்படி தான் ஹெலோ சொல்லி பேசாமல் எடுத்த உடனே எல்லாத்தையும் உளருவியா ?”
” சாரி சரத் ஏதோ ஒரு நியாபகத்தில் பேசிட்டேன் ”
” உன்னை எல்லாம் வச்சுட்டு… சரி விடு நந்தினியை பத்தி ஏதோ சொல்ல வந்த ? ”
” ஆமாடா நேத்து ஒரு கேஸ் விஷயமா ஹாஸ்ப்பிட்டல் போயிருந்தேன் அப்போதான் நந்தினியை பற்றி ஒரு விஷயம் தெரிய வந்தது… ”
” என்னடா ? அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? ”
” கிட்டத்தட்ட பிரச்சனை தான்டா… அவள் மலையில் இருந்து கீழே விழுந்து இப்போ கோமா ஸ்டேஜில் இருக்காளாம்”
” என்ன சொல்லுற, இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்? ”
” நான் பார்க்க வந்த பெசன்ட் நந்தினிக்கு பக்கத்து அறையில் தான் இருக்காங்க… அறைக்கு வெளியே பரதன் இருந்தான்.. அவன் போன்ல யாரு கிட்டயோ நந்தினின்னு பேர் சொல்லி பேசிட்டு இருந்தான்… நானும் சந்தேகம் வந்து அவன் போன பிறகு அங்க போய் பார்த்தேன், அப்போது தான் எனக்கு தெரியும் அது நம்ம நந்தினின்னு, அப்புறம் அங்கு வேலை பாக்குற எனக்கு தெரிஞ்ச டாக்டர் மூலமா அவளை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன், கோமாவில தான் இருக்காள், ஆனால் எப்போ வேணும்னாலும் சுயநினைவு வரும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்கலாம் ”
‘பரதன் அங்க இருக்கான் அப்படின்னா அப்போ நந்தினி விக்ரமன் கிட்ட மாட்டிக்கிட்டாளா? இது நல்லத்துக்கு இல்லையே… இவளை ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்துக்கிறான் அப்படின்னா அந்த பையில் அவன் கையில் கிடைச்சிடுச்சா? அப்படி கிடைச்சு இருந்தால் கண்டிப்பா அமைதியா இருக்க மாட்டானே… அப்போ கீர்த்தி எங்க போய் தொலைஞ்சா தெரியலையே ? ‘என்று மனதோடு புலம்பியவன்…
” டேய் சிவா நான் சொல்லுற மாதிரி பண்ணு, அவளுக்கு நினைவு வந்து விக்ரமன் கிட்ட பையில் பத்தி உண்மையை சொல்லுறதுக்குள்ள அவளை அங்க இருந்து இடமாற்றி நம்ம இடத்துக்கு கொண்டு வரணும் அதுக்கு சரியான நேரம் பார்த்து ஏற்பாடு பண்ணிடு ”
” டேய் இது ரொம்ப கஷ்டம்டா நான் மாட்டிகிட்டேனா அவ்ளோ தான் என்னால முடியாது… ”
” எதுக்கு எடுத்தாலும் பயந்து சாகாத, நீ டெய்லி நந்தினியோட ஹெல்த் பத்தி டாக்டர் கிட்ட மட்டும் கேட்டு வச்சிக்கோ… இந்த ரெண்டு வாரத்தில அவளுக்கு பழைய நினைவுகள் வரலன்னா பிரச்சனை இல்லை, ஆனால் ஒருவேளை வந்துட்டா… அவ்ளோ தான் அதனால கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ… நான் இன்னிக்கே மும்பைக்கு கிளம்பி வரேன் ” என்று சரத் கூறினான்…
” ம்ம்ம் சரிடா நீ கிளம்பி வா, நீ வரும் வரை முடிந்த அளவுக்கு நந்தினியை பாத்துகிறேன்… ” என்று கூறிய சிவா அழைப்பை துண்டித்தான்…
பேசிமுடித்துவிட்டு, சிறிது நேர யோசனைக்கு பின் மீண்டும் அதியனை நோக்கி வந்த சரத் ” இன்னிக்கு மும்பை போகலாம்னு இருக்கேன்டா ” என்று கூற .. ஒரு நொடி அதியனது கைகள் நடுங்கியது…
” என்னடா திடீர்ன்னு ? ”
” சும்மா போகணும் தோணிச்சு, அப்படியே நந்தினியை பத்தி… “என்று கூறி நிறுத்திய சரத் “சரி நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? ” என்று கேட்டான்.
” ஒன்னும் இல்லை, வர்ஷா அங்க இருப்பா இல்லை ? ” என்றவன் சரத்தை வலியுடன் பார்க்க…
” ம்ம்ம் இருப்பாள், எவன் கூடயாவது ” என்ற கூறிய சரத்தின் சட்டையை, கோவத்தில் பற்றிய அதியன்
” வேணாம் சரத் … இன்னொரு முறை இப்படி பேசாத,அப்புறம் அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன் ” என்றான் ஆக்ரோஷமாக…
” சரிடா பேசல விடு, அப்படி என்ன தான் காதலோ ” என்று சலித்து கொண்டான் சரத்..
” வெளியே எங்கேயாவது போய்ட்டு வருவோமா சரத் மனசே சரி இல்லடா ”
” மூணு வருசமாவாடா ஒரு மனுஷனுக்கு மனசு சரி இல்லாமல் இருக்கும்… இதுக்கு தான்டா காதல் பண்ணி நாசமா போகதீங்கன்னு சொல்லுறது… கேட்டால் தானே. ”
” என் பீலிங் உனக்கு புரியாது சரத்”
” சரி கண்ணீர் வடிக்காத எங்க போகலாம் சொல்லு ”
” கோவிலுக்கு போலாம்டா கொஞ்சம் அமைதியா இருக்கணும் ”
” நீ சாமியார் ஆகமா விட மாட்ட போல.. அங்க எல்லாம் வேண்டாம் வா பார் க்கு போவோம் ”
” அப்போ நான் வரல ”
” சரி சரி வா கோவிலுக்கே போவோம், இப்போ எல்லாம் அதை கூட லவ்வர்ஸ் பார்க்கா ஆக்கிட்டானுங்க… அது தெரியாமல் இவனும் அங்கு போய் அமைதியை தேடனும்னு நினைக்கிறான் ” என்று இருவரும் கோவிலுக்கு கிளம்பி சென்றனர்…
*******
அதியனது நம்பரை கைபேசியில் டயல் செய்த கீர்த்தி.. பால்கனி கம்பியின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்…
போன் ரிங் ஆகவும்… கீர்த்தியின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது…
அதே போல எதிர் முனையில் அவளது நம்பரை திரையில் பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன் அழைப்பை ஏற்றான்…
எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்படவும், முகத்தில் புன்னகை தவழ ” ஹெலோ அதியன் சாரா? நான் நந்தினியோட சிஸ்டர் கீர்த்தி பேசுறேன் ” என்றாள்..
அதனை கேட்டு எதிர்முனையில் இருந்தவனது உதடுகள் அழுத்தம் பெற, அமைதியாக இருந்தான்..
” ஹெலோ … ஹெலோ சார் கேக்குதா? லைன்ல இருக்கீங்களா? ” என்ற கீர்த்தி போனை எடுத்து பார்க்க. ‘ லைன்ல தானே இருக்காங்க அப்புறம் ஏன் பேசமாட்டிங்குறாங்க ‘ என்றவள் மீண்டும் போனை காதில் வைத்து…
” ஹெலோ அதியன் சார் நான் கீர்த்தி… நந்தினி தங்கச்சி, நான் பேசுறது கேக்குதா? ” என்றவள் சற்று உரக்க பேசவே, எதிர்முனையில் இருந்தவன் காதில் இருந்த போனை எடுத்து சற்று தள்ளி வைத்து கொண்டான்…
” ஹெலோ… ஹெலோ ” என்று அவள் மீண்டும் கூறவே…
” ம்ம்ம் ” என்று அந்த பக்கம் இருந்து பதில் வந்தது…
” ஒஹ் நல்லவேளை பேசிட்டீங்க, நான் கூட உங்களுக்கு காது கேட்கல போலன்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்… நான் கீர்த்தி, நந்தினி அக்கா இங்க வந்த அப்ரோம் உங்களுக்கு கால் பண்ண சொன்னாங்க ” என்று அவள் கூற… அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… ‘ என்னடா இது பதிலே காணோம், சரியான நம்பருக்கு தான் போன் பண்ணி இருக்கோமா ‘ என்று யோசித்தவள்.. பேப்பரில் இருந்த எண்ணையும், கைபேசியில் இருந்த எண்ணையும் மீண்டும் சரி பார்த்து கொண்டாள்… ‘ சரியா தானே இருக்கு அப்புறம் ஏன் பேச மாட்டிங்குறாங்க ‘ என்றவள் மீண்டும்
” நீங்க அதியன் சார் தானே? ” என்று சந்தேகமா கேட்க, எதிர் முனையில் இருந்து உடனே பதில் வந்தது… அந்த பதிலை கேட்ட நொடி பெண்ணவள் உடல் தானாக நடுங்க தொடங்கியது… ‘நான் இப்போ கேட்டது உண்மை தானா இல்லை என் மன பிரம்மையா? ‘ என்று தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டவள், தயக்கத்துடன் தன்னை சமாளித்து கொண்டு ” ஹா…ஹாலோ ” என்று மெல்ல கூற…
” ஸ்ரூதி…. ” என்ற அதே வார்த்தை மீண்டும் அவள் செவிகளில் கேட்க, கீர்த்தியின் முகம் நொடியில் மாறி கண்கள் எல்லாம் இருள் சூழ தொடங்கியது. பயத்தில் மூச்சு முட்டியது… அப்படியே அருகில் இருந்த கம்பியை பிடித்து, தன்னை சமாளித்து நின்றுகொண்டாள்…
முகமெல்லாம் வியர்த்து நடுங்கிய குரலுடன் ” ஹெலோ அதியன் சார் “என்று கீர்த்தி உரைக்கவும்…
” அதியன் இல்லை விக்ரமன்…” என்று பதில் கொடுத்த அபிமன்யு, கீர்த்தியின் அறைக்கு வெளியே குரூரமாக புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தான்…
‘விக்ரமன்’ என்று பெயரை கேட்டு பயத்தில் கீர்த்தியின் கைகள் நடுங்கியது, பிடிமானம் இன்றி அவள் கையில் இருந்த போன் நழுவி கீழே விழுந்து சுக்கு நூறாய் உடைந்து போனது… ஆனால் அதை கூட உணரும் நிலையில் அவள் இல்லை.
அழைப்பை துண்டித்து விட்டு கீர்த்தியின் அறைக்குள் நுழைந்த விக்ரமன்… இதழ் வளைத்து சிரித்தபடி அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கி வந்தான்…
பயத்தில் உறைந்து போய் நின்றுகொண்டிருந்த கீர்த்தியின் பின்புறம் நெருங்கி நின்ற விக்ரமன்… மெல்ல அவளது காது பக்கமாக குனிந்து ” பேபிக்கு என்ன ஆச்சு? பீவர் இன்னும் குறையலையா? ” என்று மெல்லிய குரலில் கேட்க.. திடீரென அவன் குரல் கேட்கவும் பெண்ணவள் உடல் தூக்கி வாரி போட்டது…
அவன் குரல் காதருகில் கேட்கவும் சட்டென திரும்பி நின்று அவனை மிரண்ட விழிகளுடன் பார்த்தாள் கீர்த்தி.. அப்போது அதீத பயத்தின் வெளிப்பாடாக அவளது நெற்றியின் ஓரம் வியர்வை துளிகள் வழிந்து கொண்டிருந்தது…
” ஏசி ஆன்ல தானே இருக்கு அப்புறம் ஏன்? உனக்கு முகமெல்லாம் இப்படி வியர்த்து இருக்கு ? ” என்று எதுவும் அறியாதவன் போல கேட்ட விக்ரமன் தன் விரல் கொண்டு அவளது நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வை துளிகளை நீக்கினான்… அவளோ இன்னும் நிதானத்திற்கு வாராமல் பயத்துடன் விழித்து கொண்டிருக்க…
” எதுக்கு இவ்ளோ பயம் ? ” என்ற விக்ரமன் அவளை தாண்டி கீழே பார்க்கவும்… அவனது பார்வையை உணர்ந்து தன்னிசையாக அவளும் கீழே பார்க்க… அங்கு போன் உடைந்து கிடந்தது. அதனை பார்த்து விட்டு அபிமன்யுவை பார்த்தவள் அச்சம் கொண்டு எச்சில் விழுங்கி கொள்ள… மெல்ல புன்னகைத்தவன்,
” போன் உடைச்சிடுச்சா? அதுக்கு தான் இந்த பயமா? ” என்று கேட்டான்..
‘அவனிடம் என்ன கூறுவது’ என்று தவித்த கீர்த்தி ” ம்ம்ம் ” என்று மட்டும் கூறி தலை குனிய… அவளை பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன்… அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கவும், நொடியில் தன் முகத்தை மாற்றி கொண்டு அவளை பார்த்து இதமாக புன்னகைத்தான்.
” இந்த போன் இல்லைன்னா என்ன? வரும் போது வேற போன் வாங்கிட்டு வரேன், அதுல இன்னும் நல்லா கேம் விளையாடு… வேணும்னா நானும் உன்கூட கேம்ல ஜாயின் பண்ணிக்கிறேன்… ஆனால் அதுல ஒரு கஷ்டம் என்னன்னா உன்னால என்னை எதிர்த்து ஜெயிக்க முடியாது… ” என்றவனை அவள் புரியாமல் பார்க்க… ” கேம்ல சொன்னேன் டியர் ” என்று கூறி மெலிதாக புன்னகைத்தவன் அவளது கன்னத்தில் தட்டிவிட்டு நொடிப்பொழுதில் அங்கிருந்து வெளியே சென்றான்…
அவன் சென்றபிறகு அந்த இடத்திலேயே அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள் கீர்த்தி… அவளுக்கு நடந்தது அனைத்தும் கனவா? நனவா?என புத்தியில் உரைக்கவே நேரம் எடுத்து கொண்டது… சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள்.. கதவு தட்டப்படும் சத்தத்தில் நிதானத்திற்கு வந்து… துப்பட்டவினை கொண்டு தன் முகத்தை துடைத்து கொண்டாள்…
” வாங்க ” என்று அவள் அறைக்குள் இருந்து குரல் கொடுக்க.. வேலைக்கார பெண்மணி உணவை எடுத்து வந்து உள்ளே நுழைந்தாள்… அவரிடம் இருந்து உணவை வாங்கி மேசையில் வைத்தவள், தலையசைத்து அவர்களை வெளியே அனுப்பினாள்…
திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தவள் ” அக்கா, அந்த நம்பர் அதியன் சாரோடது அப்படின்னு தானே சொன்னா? அப்புறம் எப்படி அது மாறி இருக்கும்… ஒருவேளை அந்த விக்ரமன் என்னை கடத்தி வைச்சு இருந்த சமயம் மாறி இருக்குமோ? அப்படியே நம்பர் மாறி இருந்தாலும் அதுல ஏன் அவங்க மறுபடியும் அதியன்னு எழுதி இருக்கணும் என்ன நடக்குதுன்னே புரியலயே” என்று எண்ணியவளுக்கு திடீரென நந்தினி கொடுத்த தேவன் சக்ரவர்த்தியின் பைல்கள் நியாபகம் வந்தது… வேக வேகமாக தனது பையை எடுத்து அதில் பைல் இருக்கிறதா? என்று தேடி பார்த்தாள்… ஆனால் அந்த பைல் இருந்த சுவடே இல்லை.. ” எங்க போச்சு? பையிலை இந்த பைக்குள்ள தானே வச்சுயிருந்தேன், எப்படி காணாமல் போகும்… அப்போ கண்டிப்பா என்னை கடத்தி வச்சியிருந்த சமயம் தான் மாத்தி இருக்கனும்.. நான் மயக்கமா இருந்த நேரமா பார்த்து பையிலை எடுத்துட்டு, நம்பரை மாத்தி வச்சு இருப்பானோ? அய்யோ இது தெரியாமல் நான் வேற அவனுக்கே போன் பண்ணி பேசிட்டேனே… ஒருவேளை நான் இருக்குற இடம் தேடிவந்து என்னை கொன்னுடுவானோ ? ” என்று எண்ணியவளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது…
” இப்போ என்ன பண்ணுறது இதை யாருக்கிட்ட சொல்லி உதவி கேக்குறது… அக்கா என்னை நம்பி தானே அந்த பைலை கொடுத்தாள்.. அதை இப்படி தொலைச்சுட்டு உக்கார்ந்து இருக்கேனே கடவுளே… என்னை ஏன் இப்படி சோதிக்கிற ? ” என்று கண்களில் நீர் திரள உடைந்து போய் அமர்ந்திருந்தாள்…
காணவில்லை என்று கீர்த்தி தேடிய பைல்கள் அனைத்தும் நேற்றே விக்ரமனின் கரத்தால் எரித்து சாம்பலாக்க பட்டத்தை அறியாத பேதையவள் பிதற்றிக்கொண்டிருந்தாள்…
~~~~
நேற்று இரவு கீர்த்தியின் உடல் நிலையை பற்றி அறிய வந்த விக்ரமன், அப்படியே அவளை பார்த்தவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
பார்வையை சுழலவிட்டவனுக்கு மேசையின் மீதிருந்த கீர்த்தியின் பையில் கவனம் திரும்பியது…
‘வந்ததிலிருந்து அதை ஒரு பொக்கிஷமாக தூக்கி கொண்டு அலையும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது?’ என்று அறிய நினைத்த விக்ரமன் அவளது பையினை எடுத்து பார்க்க… அதில் விக்ரமன் சம்மந்த பட்ட ‘ தேவன் சக்ரவர்த்தியின் ‘ பைல்கள் இருந்தது… அதை புருவம் சுருக்கி பார்த்தவன்… மீண்டும் தேட… ஒரு கோல்ட் கார்ட் இருந்தது மேலும் அதில் கண்ணை மயக்கும் ஒரு கிறீன் பட்டர்ப்ளை படம் வரையப்பட்டிருந்தது… அதனை பார்த்து ‘என்ன இது ?’ என்று யோசனையாக இருந்தவன், மேலும் பையை எடுத்து பார்க்க அதில் ஒரு மெட்டல் க்யூப் மற்றும் அதியன் அலைபேசி நம்பர் எழுதி இருந்த காகிதமும் இருந்தது…
அதியனது பெயரை அந்த காகிதத்தில் பார்த்த விக்ரமனின் முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகள் என்ன வகையான உணர்வு என்று வரையறுக்க பட முடியாமல் இருந்தது.. ஆழ்ந்த பெருமூச்சு விட்டு அதியனது நம்பர் இருந்த பேப்பரை தன் மொபைலில் போட்டோ எடுத்து கொண்டவன், பின்னர் அதே போல ஒரு பேப்பரில் அதியன் என்று பெயர் எழுதி அதில் தன்னுடைய நம்பரை எழுதி கீர்த்தியின் பையினுள் வைத்து விட்டான்…
எந்த சூழ்நிலையிலும் கீர்த்தி அதியன் மற்றும் சரத்தின் கையில் கிடைத்த விட கூடாது என்பதற்காக தான் அதனை செய்தான். சரத்தினை பற்றி நன்கு அறிந்த விக்ரமன் தெரிந்தே எப்படி அவளை அவன் கையில் ஒப்படைக்க துணிவான்?
எப்படியும் நந்தினி கீர்த்தியை அதியனிடம் செல்லும் படி தான் கூறி இருப்பாள்! என்று அறிந்த விக்ரமன் அவளுக்கு அரணாக அவளுடனே இருந்தான்…
வேட்டைக்காரனின் இலக்கு புலி என்றாலும், மானை வைத்து புலியை வேட்டையாட அவனுக்கு மனமில்லை…
இந்த வேட்டைகாரனுக்கு புலியை வேட்டையாட வேண்டிய கட்டாயம் உள்ளது தான்! ஆனால் அதற்கு பொறியாக என்றும் தன் மனம் கவர்ந்த புள்ளி மானை பலிகொடுக்க அவன் விரும்பவில்லை.
அந்த புலியை விட இந்த புள்ளி மான் அவனுக்கு முக்கியம் என்பது தான் அவன் செயலுக்கு காரணம்…
அவர்களை பற்றி நன்கு அறிந்த விக்ரமன், கீர்த்தியை எப்படி அவர்களிடம் செல்ல அனுமதிப்பான்… ஸ்ரூதி விஷயத்தில் செய்த தவறை கீர்த்தி விஷயத்தில் அவன் செய்ய விரும்பவில்லை… அந்த ஒரே காரணத்துக்காக தான் அதியனை சந்திக்க விடாமல் கீர்த்தியை தன் கைக்குள் வைத்து பார்த்துக்கொண்டான்…
” இதுல நம்ம கேஸ்க்கு தேவையான பைல் இல்லை அப்போ அந்த பைல் எங்க தான் இருக்கும், ” என்று யோசித்த விக்ரமன், பின்னர் தனக்கு எதிராக நந்தினி தயார் செய்த தேவன் சக்ரவர்த்தி பைலை எடுத்து வந்து தீயிட்டு எரித்தான்…
அப்போது சத்யனிடம் இருந்து விக்ரமனுக்கு அழைப்பு வந்தது…
” சொல்லு சத்யா ? அவன் கண் முழிச்சிட்டானா? ” என்று மகிழனை பற்றி கேட்டான் விக்ரமன்…
” முழிச்சிட்டான், அப்புறம் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு தேவாவை பத்தி எல்லாமே சொல்லிட்டேன் ” என்று தயங்கியபடியே சத்யன் கூற…
” ம்ம்ம் நல்லது தான், அவன் கண்டிப்பா புரிஞ்சிப்பான் ”
” அதியன் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா? ‘ என்று சத்யன் கேட்க..
அதியனை பற்றி சத்யன் கேட்கவும் கண்களை மூடி திறந்த விக்ரமன் ” இல்லை ” என்று கூறி அழைப்பை துண்டிந்து விட்டு அதியனது நம்பர் இருந்த காகிதத்தை கசக்கி டஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தான்.
தனது அறைக்குள் வந்த விக்ரமன், தனது லேப்டாப்பை எடுத்து உயிர்ப்பித்து, அதிலிருந்த பழைய போட்டோ ஒன்றை விவ் செய்து பார்த்தவனின் கண்களில் நீர் திரண்டது… இமைகளை தட்டி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவன், கண்களை மூடிக்கொள்ள ‘ மன்னிச்சிடு விக்ரமா இனிமேல் இந்த தப்பு நடக்காது ‘என்ற ஒருவனது குரல் சிந்தையில் ஒலிக்க, விக்ரமனின் மனம் கனத்து போனது… உடனே லேப்டாப்பை மூடியவன்… கண்மூடி தூங்க முயற்சித்தான்…
ஆனால் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல் போகவே மீண்டும் கீர்த்தியின் அறைக்குள் வந்தான் விக்ரமன்… அங்கு கீர்த்தியோ அமைதியாக உறங்கி கொண்டிருக்க அவளது பக்கத்தில் வந்தவன் அவளை அணைத்து கொண்டு நிம்மதியாக கண் அயர்ந்தான்…
அதியனது விஷயத்தை அவன் மறக்கவில்லை, மறைக்க நினைத்தான்..
விக்ரமன் அதியனை பற்றி சத்யனிடம் மறைக்க காரணம் என்னவோ? அதை யார் அறிவார்? அதனை அறிந்தவன் விக்ரமன் ஒருவன் மட்டுமே…

