12-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 12

வீட்டிற்கு வந்த வசந்தி சோபாவில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்தவள் கோபத்துடன்,
“ஏம்மா அப்பாக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை. நாங்க எல்லாம் பாட்டிக்குப் பேத்திங்க கிடையாதா.? அவ ஒருத்தி மட்டும் தான் பேத்தியா.? பாட்டியோட சொத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு. நான் இதைச் சும்மா விடமாட்டேன். எங்க மாமியார் வீட்டுக்கு இதைப் பத்தி தெரிஞ்சா எவ்ளோ பெரிய பிரச்சினையாகும். அத பத்தி எல்லாம் அப்பா கொஞ்சமாவது கவலைப்படுறாரா.? அவருக்கு அவரோட செல்ல மகள் மட்டும் சந்தோஷமா இருந்தா போதும். மத்தவங்க எல்லாம் எப்படி போனாலும் பரவால்ல. நீங்க எப்படிமா இதெல்லாம் கேட்டு அமைதியா இருந்தீங்க.?”

“அடி போடி. நான் அமைதியா இருந்தத நீ பார்த்தியா.? எல்லாம் கேட்டாச்சு.கேட்டதுக்கு தான் உங்க அப்பா அவ்வளவு நீளமா பேசுறாரு.”

“அப்படி என்ன சொல்றாரு.?”

“இதோ இந்த மகாராணி மட்டும்தான் அவங்க அம்மாவ பாத்துக்கிட்டாளாம். அதனால அவங்க அம்மா உயில் எழுதறதுக்கு பதிலா உங்க அப்பாவையே உயிலா நெனச்சு சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்களுடைய நகை மொத்தத்தையும் இவ கிட்ட தான் ஒப்படைக்கனும்னு.” வெளியே சத்தம் கேட்டு எழுந்து வந்த வசுந்தராவை பார்த்த கோகிலா பேச,

“ஏன் இவ ஒருத்தி மட்டும் தான் பாத்துக்கிட்டாளா பாட்டிய.? நான் கூடத் தான் பாத்துக்கிட்டேன். ஒருநாள் இவ குளிக்கப் போயிட்டா அவங்க தண்ணி தண்ணின்னு கேட்டுட்டு இருந்தாங்க நான் தான் அவங்களுக்கு தண்ணி கொடுத்தேன்.” என்றாள் சத்தமாக. “ஹ்ம்க்ம்.! அதெல்லாம் உங்க அப்பா கண்ணுக்குத் தெரியாதுடி.” என்றார் கோகிலா மாமியார் மீதும் கணவரின் மீதும் கொண்ட கோபத்தில்.

‘தண்ணி கொடுத்தாளா ஒரு வயசானவங்களுக்கு தலையைத் தூக்கி தண்ணி கொடுக்கணும் என்கிறது கூடத் தெரியாம அப்படியே அவங்க வாயில தண்ணீரை சரித்து அது அவங்களுக்கு போற ஏறி, இருமல் வந்து.எவ்வளவு கஷ்டப்பட்டாங்க.’ என்று வெளியே சொல்லத் தைரியம் இல்லாமல் தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டாள் வசுந்தரா.

“இன்னைக்கு என்ன ஆனாலும் சரி அப்பா வந்தவுடனே நான் இத பத்தி கேட்காம விடப் போறதில்லை.? எனக்கான பங்கை வாங்காம போகப் போறதும் இல்லை.” என்று சட்டமாகச் சோபாவில் அமர்ந்திருந்தாள் தந்தையின் வரவை எதிர்பார்த்து. வசுமதி.

அன்னையிடம் தன் கோபத்தை கொட்டி தீர்த்தவள் வேக மூச்சுகளை எடுத்தவாறு சோபாவில் அமர்ந்திருக்க. அவளுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் வசுந்தரா. அதுவரை அவளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்தார்கள் கோகிலாவும், வசந்தியும். தண்ணீரைக் கொண்டு வந்த தன்னிடம் நீட்டிய தங்கையை நிமிர்ந்து பார்த்தவள்,

“ஏன்டி.? அப்பா எல்லா நகையும் உனக்குத் தான் சொல்றாங்க, நீ ஒரு வார்த்தை கூட எனக்கு அவ்ளோ நகையும் வேண்டாம்பா. எனக்கு மட்டும் தருவது நியாயமா இருக்காது. அக்காவுக்கும் தங்கச்சிக்கும் சரி பாகமா பிரிச்சு குடுங்கன்னு சொல்றதுக்கு வாய் வரல இல்ல உனக்கு.”என்று கோபத்துடன் கேட்க அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா.

“என்ன அப்படி பார்க்கிற.? ஓ.! இவ நமக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்டா, இவளுக்கேன் நமக்கு வரப் பங்க  கொடுக்கணும்னு நினைக்கிறியோ.? இந்த உன்னுடைய கெட்ட  எண்ணத்தினால் தான் டி நாங்க எல்லாருமே உன்னை விட்டுத் தள்ளி நிக்கிறோம்.”
‘அப்படி என்ன அவளின் கெட்ட எண்ணம்.?’ என்று யோசித்தவளாக நெற்றியை சுருக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்தவள்.

“என்ன ஒன்னும் புரியாத மாதிரி பார்த்துக் கிட்டே இருக்க. அப்பாவும் பாட்டியும் உன் மேல அதிக அன்பு செலுத்துவது தான் எங்க கோபத்துக்கான காரணமே. அது என்ன நீ மட்டும் அப்படியொரு உசத்தி அவங்களுக்கு.? அவங்க சொல்ற வேலையெல்லாம் நீ தட்டாமல் செஞ்சதுனால தானே உன்னை அப்படி தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. ஆனா அப்படி கொண்டாடுற அளவுக்கு உன்கிட்ட எதுவுமே கிடையாது. அழகு, அறிவு எல்லாமே எங்களைவிடக் கம்மிதான்.”

எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளை உடைக்கும் ஆயுதமாக மட்டம் தட்ட. சட்டென்று கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள அன்னையின் பக்கம் பார்வையை திருப்பியவளை பார்த்தவள், இன்னும் தன் ஆங்காரம்  அடங்காமல்,
“அம்மாவை எதுக்கு பாக்குற.?, இதுவரைக்கும் அவங்க சொன்ன பேச்சு எதையாவது கேட்டு இருக்கியா நீ? பாட்டி, அம்மாவை என்ன எல்லாம் கொடுமை படுத்தினாங்கன்னு உனக்குத் தெரியுமா.? அவங்கள போய் நீ விழுந்து, விழுந்து கவனிச்ச  அதுதான் அவங்க மேல இருந்த கோபம் உன் மேல திரும்பிருச்சு அம்மாவுக்கு.” என்றவளின் கூற்றில்.

‘அப்படித்தானா.?’ என்று அம்மாவையே பார்த்திருந்தாள் வசுந்தரா.சில, பல கோபம் மகளின் மேல் இருந்தாலும் எப்போதும் அவளை வெறுத்ததில்லை கோகிலா. ஆனாலும் இன்று பெரிய மகள் கூறுவதில் அவருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் இருக்க அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அனைத்தையும்.

“சொல்லுடி உன்ன தான் கேட்டுகிட்டு இருக்கேன். எதுக்காவது பதில் இருக்கா உன் கிட்ட.? எப்பவாவது அம்மாவை மதிச்சு நடந்து இருக்கியா.? அவங்க சொல்பேச்சு கேட்டு இருக்கியா.?” என்று கேட்டுக் கொண்டிருந்தவளை
“உங்க அம்மாவோட எந்தப் பேச்ச மா அவ கேட்காமல் இருந்திருக்கா  இதுவரைக்கும்.?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ரகுபதி.

அதுவரை குரலை உயர்த்தி ஆங்காரமாகப் பேசிக் கொண்டிருந்தவள் சற்று நிதானமானாள். தந்தையிடம் பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருப்பதால் அவரின் அதிகபட்ச கோபத்தை தூண்டாமல் தான் கேட்க வேண்டியதை  கேட்க நினைத்திருந்தவள் சற்று அமைதியை கையில் எடுத்துக் கொண்டாள்.

“சொல்லுமா. உன்ன தான் கேட்கிறேன்.?” என்ற படியே ஒற்றையாக இருந்த சோபாவில் அமர்ந்த ரகுபதிக்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்த வசுந்தரா அவரின் அருகிலேயே நின்று கொண்டாள். மகளிடமிருந்து தண்ணீரை வாங்கி அருந்தியவர் கேள்வியாக வசுமதியை பார்க்க.

“ஏம்பா.? எவ்ளோ விஷயங்கள்ல அம்மா பேச்சைக் கேட்காமல் நடந்து இருக்கா.”
“அதுதான் என்ன விஷயம்.? எப்போ நடந்தா.? எல்லாமே சொல்லு பாக்கலாம். ஒரு வேலைக்காரி மாதிரி வீட்ல எல்லா வேலையும் அவ தான் செய்றா. அடிமை மாதிரி தான் நடத்துறா உங்க அம்மா அவள. மக மாதிரியா நடத்துறா.?”
“ஏங்க.?” என்று கோபத்துடன் ஆரம்பித்த கோகிலாவை முறைத்து பார்த்தவர்,
“எங்கே இல்லை என்று சொல்லுவியா நீ.?”என்று கேட்க முறைத்தபடியே அமர்ந்திருந்தார் அவர்.
“சரிப்பா அதெல்லாம் விடுங்க. நான் உங்ககிட்ட முக்கியமா பேச வந்து இருக்கேன்.”
“நீ இந்த நேரத்துல வந்து இருக்கேன்னும் போதே தெரியுதே, ஏதோ பேச வந்திருக்கேன்னு. சொல்லு கேட்போம்.” என்றார் அவரும்.

“ஏம்பா பாட்டியோட நகை அவளுக்கு மட்டும் தானா.? எங்களுக்கெல்லாம் கிடையாதா? நாங்க எல்லாம் பாட்டியோட பேத்திங்க கிடையாதா.?” என்று கேட்டவளை பார்த்தவர் “அதற்கான பதிலைத் தான் உங்க அம்மா கிட்ட சொல்லிட்டேனே. உன் தங்கச்சியும் அதைக் கேட்டுட்டு தான் இருந்தா. அவ உன்கிட்ட சொல்லல இத.” என்றபடி சின்ன மகளைத் திரும்பிப் பார்க்க. அதுவரை அம்மாவின் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தவள் மேலும் அவரை நெருங்கியவளாக அமர்ந்து கொண்டாள்.

“ஏம்பா இந்த வீட்டில் நடக்கிற எதுவுமே எனக்குத் தெரிய கூடாதுன்னு நினைக்கிறீங்களா?”
“நான் அப்படி சொல்லவே இல்லையே. ஒரு விஷயம் உனக்குத் தெரிய வந்து, மூத்த மகளா நியாயமா நடக்குற பெண்ணாக இருந்தால் நானே உங்கிட்ட எல்லாமே கூப்பிட்டு சொல்லுவேன். ஆனால் நீ.?”என்று அவர் கேள்வியாக நிறுத்த,
“என்ன இப்ப நான்  நியாயமா நடக்கல.?”

“எப்போ நீ நியாயமா நடந்து இருக்க.?” என்று அவரின் மறு கேள்வியில் சடைந்தவளாக,

“போதும்பா. தேவையில்லாதது பேசாதீங்க. இப்போ நான் பேச வந்தது பாட்டியுடைய நகையைப் பத்தி மட்டும்தான். அந்த நகையில எங்களுக்குப் பங்கு தருவீங்களா.? மாட்டீங்களா.?”

“கட்டாயமா தரமாட்டேன். பாட்டி சொல்லிட்டே போயிருக்காங்க.அந்த நகை வசுந்தராவுக்கு மட்டும் தான். அதனால அதுல எந்த மாற்றமும் இல்லை.”

“சரி, பாட்டி நகையைத் தான் நீங்க அவளுக்குக் கொடுக்குறீங்க. அது இல்லாம நீங்க வேற அவளுக்கு நகை வாங்க போறேன்னு சொல்லி இருக்கீங்க.”

“உனக்கு நான் எவ்வளவு நகை போட்டேன்.?”

“இப்ப எதுக்கு அது.?”

“கேக்குறதுக்கு பதில் சொல்லுமா.”

“பதினைந்து பவுனு தான் போட்டீங்க.”

“ஆமா, அது நான் மட்டுமே உழைச்சு சம்பாதிச்சு உனக்குப் போட்ட நகை. ஆனா இப்போ வசுந்தராவுக்கு நான் வாங்கி இருக்கிறது வெறும் பத்து பவுன் மட்டும் தான். உனக்குப் போட்டதை விடக் கம்மிதான்.”

“ஆனாலும் அவளுக்குத் தான் பாட்டி நகை வருதே. அதுவே நாற்பது பவுன் மேல வரும் போலயே.”
“அதை எதுக்குமா நீ கணக்கு எடுக்குற.? நான் உனக்குப் போட்டது மட்டும்தான் நீ பார்க்கணும். அப்படி பார்த்தா உன்னைவிட ரொம்ப குறைவா தான் நான் அவளுக்குச் செய்றேன். ஆனா இப்ப வரைக்கும் ஏன்ன்னு ஒரு வார்த்தை கூடக் கேக்கல.”

“அது எப்படி கேப்பா.? எல்லாரையும் விட அதிகமாக அவளுக்குத் தானே கிடைக்குது.” என்றார் அதற்கு மட்டும் பதிலாகக் கோகிலா.

“உன்னோட சின்ன மாமனாருக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தானே.”என்று பெரிய மகளைப் பார்த்துக் கேட்க.
“ஆமா.” என்றாள் யோசனையுடன் வசுமதி.
“நம்ம மாப்பிள்ளை தானே அவருடைய வேலைகளோடு சேர்த்து அவங்க சித்தப்பா உடைய நிலங்களையும் பராமரிக்கிறார்.” “ஆமா.” என்றவளின் பதிலில்,
“உங்க சின்ன மாமனார் அவருடைய சொத்தை அவர் மகளுக்கும் உன் கணவருக்கும் சரி பங்கா பிரித்துக் கொடுக்கிறதா தானே சொல்லி இருக்காரு.?”
“ஆமா.?” என்றாள் இவளும்.
“அதுக்கு மாப்பிள்ளையோட அக்காவோ தம்பியோ பங்கு கேட்டாங்களா.?”

“இல்ல, கேக்கல.?”
“அப்படி கேட்டா கொடுத்துத் தானே ஆகணும்.”
“அது எப்படி கொடுக்க முடியும். அவங்கள வந்து எங்க சின்ன மாமனார் கூடத் துணையா இருக்காங்க. என் புருஷன் மட்டும் தான் எல்லா வேலையும் பார்க்கிறார்.”

“அதே மாதிரிதான் பாட்டியின் நகை வசுந்தராக்கு மட்டும்தான்.” எனத் தெளிவாகப் புத்தியில் உறைக்கும் அளவுக்குச் சொல்லிவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தார் ரகுபதி.
எங்கு வந்து எதில் முடித்திருக்கிறார் தந்தை என்பதை பார்த்தவள் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தவளாக

“சரிப்பா அதைக் கண்ணுலயாவது நாங்க பார்க்கிறோமே.” என ஆதங்கமாகக் கேட்க
“பாலிஷ் பண்ண கொடுத்து இருக்கேன். கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் கிடைக்கும். அப்பப் பாத்துக்கோங்க.” என்றவாறு தன் அறையை நோக்கி எழுந்து சென்றார் ரகுபதி.

வெகு அமைதியாக விடிந்தது சஞ்சய் வசுந்தராவின் திருமண நாள். சொன்னது போலவே ரகுபதி, திருமணத்திற்கு ஒரு நாள்  முன்பாகவே நகைகள் அனைத்தும் மெருகேற்றிக் கொண்டு வந்திருந்தார். பார்த்த வசுமதிக்கு பொறாமையில் வயிறும் கண்களும் எரிந்தது. இன்றைய ஆன்டிக் டிசைன் மாடலில் அவ்வளவு அழகாக மிளிர்ந்தது நகைகள்.

“சே. இப்படி கண்ணிலேயே காட்டாமல், இவ்வளவு நாள் இந்த அப்பா இப்படி ஒளிச்சு வச்சு அவளுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டாரே.”  என்று திரும்பவும் புலம்ப ஆரம்பித்தாள். அந்த நகைகளைப் பார்த்த வசந்திக்கு அவ்வளவாக நகைகள் பிடிக்கவில்லை.

“அக்கா அப்படி ஒன்னு ரொம்ப நல்லா இல்ல. எல்லாமே கருப்பா இருக்கு. எனக்குப் புடிக்கல.”
“அடியே. இன்னைக்கு உள்ள ட்ரெண்ட் தெரியுமா உனக்கு.? காலேஜ்ல படிக்கிறவ தானே நீ.? இது அவ்வளவுமே ஆன்ட்டி கலெக்ஷன்ஸ். இப்போ இருக்கிற ட்ரெண்ட். அதுவும் ரொம்ப பழைய நகைகள் தங்கத்தோட பியூரிட்டியும் ரொம்ப அதிகம் அதோட விலையும் ரொம்ப ரொம்ப அதிகம்.”என்றாள்  அவளும்.

“ட்ரெண்டோ.? ட்ரெண்ட் இல்லையோ.? எனக்கு எப்பவுமே யெல்லோ கலர் நகை தான் பிடிக்கும்.” என்றாள் தனக்கு பிடித்ததை பற்றி.
ரகுபதி தன் சார்பாக மகளுக்குப் பத்து பவுனுக்கும் வளையலாக வாங்கி கொடுத்திருந்தார். அதுவும் ஆன்டிக் மாடலில் அவ்வளவு அழகாக இருந்தது. எது கிடைத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவளுக்கு அனைத்தும் சிறப்பாகவே நடந்தேறியது.
இவை அனைத்தையும் வெறும் பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருந்தார் கோகிலா.

திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டில் எடுத்துக் கொடுத்திருந்த  ஆகாய நீல நிற காஞ்சிபுர பட்டுப்புடவையில் தேவதையாக மிளிர்ந்தாள்  பெண். சொன்னது போலவே வசந்தி தன் தோழியின் அக்காவிடம் பொறுப்பை  ஒப்படைத்திருக்க. அவரும் அழகாகவே தன் கைவண்ணத்தை காட்டி இருந்தார். வசுந்தராவின் ஸ்கின் டோனிற்கு ஏத்த மாதிரி மேக்கப் செய்திருக்க. வானுலக மங்கையாகவே ஒளிர்ந்தாள்  பெண் அவள். பார்த்தவர்கள் அனைவருக்குமே இப்படிப்பட்ட அழகியா இவள் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

பார்க்கும் மற்றவர்களுக்கே இப்படி இருக்க அவளை விரும்பி மணமுடிக்கும் ஆண் அவனுக்கோ மயங்காத நிலை தான். அக்னிகுண்டத்தின் முன்பு சிறு கண் எரிச்சலுடன் அமர்ந்திருந்தவன், ஒரு விதமான சந்தோஷ மயக்கத்திலும் பெண்னவளிடம்  லேசாகத் தலையசைத்து சம்மதம் கேட்க, அதே  தலையசைப்போடு அவளும் சம்மதம் வழங்கினாள். இந்தச் செயல் நிறைய பேர் கண்களுக்கு அகப்படவில்லை. ஆனால் பார்த்த சிலருக்கும் ஒரு அழகிய கவிதைபோல் இருந்தது அப்பரஸ்பர சம்மதம்.

உற்றார் உறவினர்களோடு பெற்றோர்களும் அட்சதை தூவ  தன் மனதிற்கினியவளை மூன்று முடிச்சுட்டு தன் சரிபாதியாக ஆக்கிக் கொண்டான் சஞ்சய். மனம் நிறைந்த மகிழ்வுடன்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்