
33
“எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்.. என்ன தான் பண்றீங்க? யாருகிட்ட இவ்ளோ நேரம் பேச்சு?” என்று சுபிக்ஷா கேட்க,
“சாரி சுபிமா..” என்று கருப்பசாமி கூறினான்.
“என்ன சாரி சுபிமா? நானும் காலைல கூப்பிட்டேன் எடுக்கலை. மதியம் கூப்பிட்டேன் எடுக்கலை. இப்ப ஈவ்னிங். அதுவும் போடும்போதெல்லாம் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்னே வருது” என்று அவள் அலுத்துக்கொள்ள,
அவளிடம் அவனால் பொய் கூறவும் முடியவில்லை, மெய் கூறவும் முடியவில்லை. அப்படியான சூழல்களில் அவன் கையில் எடுப்பது மௌனத்தைத்தான்..
“ம்ம்.. அமைதியாகிடுங்க” என்றவள், “வரவர ரேஞ்சர் சரியில்லையே” என்க,
“அட என்ன சுபிமா? நான் அப்படியா சொல்லுங்க” என்று தாஜா பண்ணத் துவங்கினான்.
“இந்த சுபி ரொம்ப கராரான ஆளு. இந்த தாஜாக்கெல்லாம் சரிவர மாட்டா” என்று அவள் கூற,
பக்கென்று சிரித்தவன், “சரி எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று கேட்டான்.
“உங்க பர்த்டே வருது.. உங்களை மீட் பண்ண முடியுமா? லீவ் கிடைக்குமா உங்களுக்கு?” என்று சுபிக்ஷா கேட்க,
“என் பர்த்டேவ யாரு உனக்குச் சொன்னது?” என்று கேட்டான்.
“ஆமா பெரிய ராஜ ரகசியம்..” என்றவள், “அதெல்லாம் நாங்க கரெக்ட் பண்ணிடுவோம்” என்க,
மீண்டும் புன்னகை பூத்தவன், “லீவ்லாம் கிடைக்குமா தெரியலையே” என்றான்.
“நீங்க வரமுடியுமா முடியாதா?” என்று அவள் கேட்க,
“இது என்னமா இப்படி கேட்குற? நான் இன்னும் அதுபத்தி யோசிக்கவே இல்ல.. லீவ் கேட்டாதானே தெரியும் கிடைக்குமானு” என்று கூறினான்.
“ரேஞ்சர்.. கிடைக்குமானு கேளுங்க. கிடைக்குன்னா வாங்க” என்று அவள் கூற,
“கிடைக்கலைனா?” என்று கேட்டான்.
“ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் வருவேன்” என்று அவள் கூற,
“அம்மா தாயே.. வேண்டாம்மா. நீங்க ரெண்டு முறை இங்க வந்து பட்டது போதும்” என்று உண்மையான பயத்தோடு கூறினான்.
“முன்னதான் நான் பயப்படனும். இப்ப நான் பயப்பட வேண்டாம். இப்ப அந்த காட்டுக்கே நான் ராணியாக்கும்” என்று அவள் கூற,
“ராணியா?” என்று கேட்டான்.
“ஆமா.. நீங்க ராஜானா.. நான் ராணி தானே?” என்று அவள் நாணம் கொள்ள,
அவன் இதழிலும் அழகாய் புன்னகை மலர்ந்தது.
“அத்தான் இப்ப எங்க இருக்காங்க?” என்று சுபிக்ஷா கேட்க,
“அத்தானா?” என்று கருப்பசாமி புரியாமல் கேட்டான்.
“ஆமா.. அபூர்வன் அத்தான்” என்று அவள் கூற,
“அண்ணாவா?” என்றவன், “எதுக்கு இந்த கேள்வி?” என்று ஆழம் பார்த்தான்.
“தெரிஞ்சுக்கத்தான்.. என் ஓரகத்தி பாவம் ரொம்ப நாளா அவரைப் பத்தி எதுவும் தெரியாம, தெரிஞ்சுக்கவும் முனையாம, அவங்க வருவாங்கனு ஒரு நம்பிக்கையோட இருக்கா. எனக்கு அவளைப் பார்க்க பாவமா இருக்குபா” என்று வருத்தமாக சுபிக்ஷா கூற,
“அவ நம்பிக்கை வீண் போகாது.. அண்ணா கண்டிப்பா வருவாங்க..” என்றான்.
“இப்ப எங்க இருக்காங்க? சொல்லுங்களேன்.. நான் அவகிட்ட சொல்ல மாட்டேன்” என்று சுபிக்ஷா கேட்க,
“உங்கண்ணா லேப்ல தான்” என்றான்.
“சுடரண்ணாவா?” என்று அதிர்வாய் கேட்டவள், “சொல்லவே இல்ல என்கிட்ட” என்க,
“ஏ முந்திரி.. உடனே போய் கேட்டுடாத.. அண்ணா யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிருக்கான். முக்கியமா சிவாக்கு” என்று கூறினான்.
இங்கு இவர்கள் ஸ்வீட் நத்திங்ஸ் தொடர,
அங்கு அறையில் அமைதியாகப் படுத்திருந்த பிரம்மவதனிக்கு மனதில் சொல்ல முடியாத பாரம்..
‘இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காரா? ச்ச! இது தெரியாம அவர சுட்ட செங்கல் அது இதுனு சொல்லிட்டோமே..’ என்று நினைக்க,
அன்று ஒருநாள், அவனை ‘மனுஷனாயா நீ? ஜடம்! உணர்ச்சிகளே இல்லாதவன்’ என்று திட்டியது நினைவு வந்தது.
‘சுடரண்ணா அன்னிக்கே சொன்னான்.. அவரோட பாஸ்ட் தெரியாம நான் அப்படியெல்லாம் பேசிருக்கவே கூடாது’ என்று நினைக்கையில் தன்னையும் அறியாமல் பிரம்மாவின் கண்ணோரம் கண்ணீர் சுரந்தது.
ஆம்! இத்தனை நேரம், கருப்பசாமி சுபியின் அழைப்பை ஏற்காததன் காரணம் பிரம்மா தான்.
ஓயாமல் அவனுக்கு அழைத்து, பேசிப் பேசி, ராஜசிம்மனின் கடந்தகாலத்தை அவனிடமிருந்து கரந்திருந்தாள்.
அனைத்தையும் ஒப்பித்தவனிடம், ‘நான் இதெல்லாம் கேட்டேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க ப்ளீஸ்’ என்று அவள் கூறியிருக்க,
‘இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல.. ராஜுக்கு ஒரு நல்லது நடந்தா சரி’ என்று நினைத்துக் கொண்டான்.
மாதங்கள் ஆறு கடந்திருந்தது.
சுடரொளிவானன் வீட்டில் கலகலப்பு குறையாமல் பொங்கி வழிய, சுடரொளி வானன் மற்றும் ப்ரீத்தியின் திருமணம் குறித்த ஏற்பாடுகள் பற்றிப் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
அப்படி இப்படியென்று அவ்வீட்டார் நிலையாகி, பழைய கசடுகள் மறந்து, ஆசுவாசம் பெற்று, பெண்கள் நால்வரும் பணியில் சேர்ந்து நிலைபெற இத்தனை காலம் ஓடியிருந்தது.
கருப்பசாமிக்கும் சுபிக்கும் முதலில் திருமணம் செய்யவோமா? இல்லை, ப்ரீத்தி சுடருக்குச் செய்வோமா என்ற பேச்சுத் துவங்க, தன் அண்ணனுக்கு முடிந்த பிறகு தான் தனக்கென்று கருப்பு திட்டவட்டமாகக் கூறியிருந்தான். முன்பே தன்னவளிடம் அவன் அனுமதி கேட்டு நின்று, அவள் உருகியதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட ரசனையான பக்கங்கள்…
சுடர் ப்ரீத்திக்கு இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயம் அடுத்த நாள் திருமணம் என்று முடிவாகியிருக்க, அன்றுதான் சென்று பத்திரிக்கை அடிக்க வடிவமைப்புத் தேர்வு செய்துக் கொடுத்துவிட்டு, துணிகள் எடுத்து அனைவருமாக உணவகம் சென்று உண்டுவிட்டு வந்தனர்.
அனைவரும் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்க, சிவப்ரியா புன்னகையும் மௌனமுமாக அமர்ந்திருந்தாள்.
அவ்வப்போது அவளைப் பார்த்த கருப்பசாமிக்கும் மனம் கனத்துதான் போனது. இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களையெல்லாம் அவன் அண்ணன் அனுபவிக்கத் தவறுவது கருப்புக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.
சுடரொளிவானனின் முயற்சியில், அபூர்வன் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறத் துவங்கியிருந்தான்.
அவன் உடலில் தழும்பைப் போல் ஆங்காங்கே பச்சை நிறம் மாறியிருந்தது. ஆனால் நிறம் மாறிய இடத்தில் எல்லாம், அடர் கருமை நிறம் அப்பிக் கொண்டது.
இயல்பில் நல்ல சிவப்பான நிறம் அபூர்வன். பச்சை நிறம் நீங்கி, அவன் நிறம் மீள, அவனது உடலில் ‘மெலனின்’ என்ற சுரபியைத் தூண்டிவிட வேண்டியதானது. அதனால் கருமை நிறம் பெறத் துவங்கி, பச்சையும் மறையத் துவங்கியது.
அபூர்வனுக்கு இது உண்மையில் கொஞ்சம் மன அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. உடலில் கருப்பும் பச்சையுமாக பிய்த்து பிய்த்து நிறம் சிதறிக் கிடக்க, கண்ணாடியில் முகம் பார்ப்பதற்குக் கூட சங்கடப்பட்டுப் போனான்.
இப்படியிருக்கும் தன்னைத் தன்னவள் ஒதுக்குவாளா என்று அவன் நினைக்கவில்லை. அவனுக்கு அவள் காதல் மீது அலாதியான நம்பிக்கை.. ஆனால் அதற்கானத் தகுதியைத் தான் இழப்பதாக அவன் மனம் தவறான எண்ணங்களை விதைக்கத் துவங்கியது.
நிலையில்லா உலகில், நிலையற்ற அழகைக் கொண்டுப் பிறப்பதா இந்தக் காதல்? இன்றிருக்கும் அழகு நாளை மண்ணாய் போகும். ஆனால் காதல் அப்படியா?!
அண்ணனின் எண்ணம் உணர்ந்த தம்பியவனும் அவனிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் அவை எடுபடுவதாக இல்லை.. இன்று சிவப்ரியாவிடம் பேசியே தீரவேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தான்.
“சரி லேட்டாச்சு.. எல்லாரும் போய் தூங்குங்க.. நாளைக்குப் பேசிக்கலாம்” என்று ராமராஜன் கூற,
நல்ல பிள்ளைகளாய் அவரவர் இல்லம் திரும்பினர்.
கருப்பசாமி அங்கு சுடர் வீட்டில் தங்குவதாக இருக்க, “ஒரு நிமிஷம்..” என்றவிட்டு சிவப்ரியாவைத் தேடிச் சென்றான்.
வாசலில் தந்தையோடு அவள் மெல்ல நடைபோட,
“சிவா..” என்று அழைத்து அவளை நிறுத்தினான்.
அவளும் ராமராஜனும் திரும்பவும், “உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று கருப்பசாமி கூற,
அவள் தன் தந்தையைப் பார்த்தாள்.
“பேசிட்டு வாடாமா” என்றபடி அவர் செல்ல,
தந்தை சென்றதும், “சொல்லுங்க” என்றாள்.
“அண்ணா விஷயமா பேசணும்” என்று கருப்பு கூற,
மென்மையான புன்னகையுடன், “நீங்க பேச வரும்போதே புரிஞ்சுது. என்னவாம் அவனுக்கு?” என்று கேட்டாள்.
“அவன் சரியில்ல சிவா.. எனக்கு இப்போலாம் அவனை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு” என்று கருப்பசாமி மிகுந்த மன வருத்தத்தோடு கூற,
புருவங்கள் சுருங்கியவள், “ஏன்? என்னாச்சு?” என்று கேட்டாள்.
“அவன்.. நம்ம சுடர் கிட்டத்தான் ஜெனிடிகல் தெரபி போயிட்டு இருக்கான்” என்று கூற,
அத்தகவல் அவளுக்குப் புதிதென்றாலும் பெரிதாக அதிர்வைத் தரவில்லை.
“ஓ.. ரொம்ப நல்ல விஷயம்.. இப்ப எப்படி இருக்கான்? ட்ரீட்மென்ட் எப்படிப் போகுது?” என்று சிவப்ரியா கேட்க,
“நல்லாதான் போகுது.. ஆனா..” என்றவன், தனது அலைபேசியை எடுத்து, அவனது தற்போதைய புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.
அபூர்வனுக்குத் தெரியாமல் கருப்பசாமி எடுத்த படம் அது. வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை அவன் படித்துக் கொண்டிருக்கும்போது எடுத்த படம் அது.
மென்மையான புன்னகை சூடியிருந்த சிவப்ரியாவின் விழிகளில் ரசனையெனும் ஓவியம் சேர்ந்து பார்வை மெருகேறியது.
“அழகா இருக்கான் சார்.. எனக்கு இந்த பிக் அனுப்புறீங்களா?” என்று அத்தனை ஆசையாகக் கேட்டவள் உண்மையில் அவன் கண்களுக்கு ஆச்சரியமாகத்தான் தென்பட்டாள்.
“அவன் ரொம்ப இன்ஃபீரியரா ஃபீல் பண்றான் சிவா” என்று கூற,
அவனைப் புரியாத பார்வை பார்த்தவள், “இல்ல.. புரியல” என்றாள்.
“முன்ன உடம்பு முழுக்க பச்சை நிறத்துல இருந்தது. இப்ப அங்கங்க பச்சை, அங்கங்க கருப்பா இருக்கான். ஒரு மாதிரி பேட்ச் பேட்சா இருக்குறது ரொம்ப ஆடா(odd) இருக்க போல உணருறான். கண்ணாடி பாக்க மாட்டான். உன்னை நினைச்சு நிறைய யோசிக்குறான்.. அ..அவன் உனக்கு தகுதியில்லையோனு யோசிக்குறான்” என்று கருப்பசாமி கூற,
“வாட்?” என்று அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள்.
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் பெருசா வாழ்க்கைல எதுவும் ஆசைப்பட்டதும், சந்தோஷப்பட்டதும் இல்ல. ஆனா அதேநேரம் நான் அவன் அளவுக்கும் சரி, ராஜ் அளவுக்கும் சரி வாழ்க்கைல கஷ்டப்பட்டதும் இல்ல.. எனக்குனு யாருமில்லைனு நான் கஷ்டப்பட்டத விட, எனக்காக ராஜ் இருக்கான் என் காடு இருக்குனு மனசை தேத்திக்கிட்டது தான் அதிகம்.. ஆனா, என்னை ஆசைப்பட வச்ச முதல் ஆள் சுபி..” என்று கூறும்போது அவன் முகத்தில் அலாதியான கனிவு…
சிவப்ரியா அதில் மெல்ல புன்னகைக்க, “எனக்காக ஒரு ரத்த சொந்தம் இந்த உலகத்துல இருக்குனு, அபூர்வன் அண்ணா வந்து உணர்த்தினது என் வாழ்க்கையோட திருப்புமுனை. அந்த நேரம் நான் உணர்ந்த வலி, சந்தோஷம் இரண்டுமே அளவிட முடியாதது. அவன் மேல.. திடீர்னு அண்ணானு நிறுத்தினவன் மேல அவ்ளோ பாசம் வருமானு எல்லாருக்கும் தோன்றலாம். அவன் என் அண்ணன்னு உணரும் முன்னவே அவன் கண் பார்வைக்குத் தன்னைப் போல கட்டுப்பட்டு நின்னவன் நான். சொல்லத் தெரியாத, கண்ணுக்குத் தெரியாத ஒரு பாசத்தை அப்பவே உணர்ந்தேன். இப்ப, எனக்காக இந்த உலகத்துல கடவுள் விட்டுவச்ச மிச்சம் என் அண்ணன்னு அவ்ளோ சந்தோஷமா உணருறேன். ஆனா அப்படி எனக்கு சந்தோஷம் கொடுத்தவன் இப்ப சந்தோஷமா இல்ல” என்றான்.
கடைசி வரிகளைக் கூறும்போது, கருப்பசாமியின் கண்களில் மெல்லிய நீர் திரளாய் திரண்டு நின்றது.
“அவன் இப்ப சந்தோஷமா இல்ல. அவனை சந்தோஷமா வச்சுக்கனும்னு தினம் என்னென்னமோ செய்றேன். வேலை நேரம் போக மீதி நேரம் பூரா அவன்கூடத்தான் இருக்கேன். அவனைக் கூட்டிட்டு, எங்க சின்ன வயசு கதைகளைப் பேசிட்டு அந்தக் காட்டுக்குள்ள நடக்கும்போது, தாய்மடி சேர்ந்த சேய்களா எங்களை உணர்ந்தேன். ஆனா எதுவும் அவனை நிலை திருப்புவதா தெரியலை எனக்கு. எனக்கு புரிஞ்சதுலாம் ஒன்னுதான்.. அவனுக்கான மருந்து நீ..” என்று கருப்பசாமி கூற,
சிவப்ரியா நெகிழ்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
தனது அதீத பிரியத்திற்கு உரிய ஒருவரின் சந்தோஷம் தன்னைவிட வேறு ஒருவரிடம் தான் உள்ளது என்பதை புரிந்துகொண்டு, உணர்ந்து கொண்டு, அதை அமைத்துக் கொடுப்பதற்கு எத்தனை ஆழமான நேசம் இருந்திட வேண்டும்? காதலுக்கு மட்டுமே உரித்தான இலக்கணம் அல்ல அது. எந்த உறவாயினும், நம் பிரியம் மிகுந்தவர்களின் சந்தோஷத்திற்குரிய பிரியமானவர்களிடம் அவர்களை ஒப்படைக்கும் மனம் கொண்ட மாமனிதர்கள் அமைவது வரத்தினும் பெரிது.
அந்த நொடி, அப்படியான வரத்தினும் பெரிய பொக்கிஷமாக கருப்பசாமி அவள் கண்களுக்குத் தெரிந்தான்.
“நீங்க தம்பியா கிடைக்க அவன் குடுத்து வச்சுருக்கணும்” என்று சிவப்ரியா கூற,
“அவன் கிடைக்க நான் தான் குடுத்து வைக்கனும்” என்று புன்னகைத்தபடி தன் கண்ணீர் துடைத்தான்.
“எனக்கு அவன் சந்தோஷமா இருக்குறதைப் பார்க்கனும் சிவா” என்று ஆசையும் ஏக்கமும் நிறைந்த குரலில் கருப்பசாமி கேட்க,
“அவ்ளோதானே? உங்கண்ணனுக்குக் கொஞ்சம் பேயோட்ட வேண்டியிருக்கு.. ஓட்டி சரி செய்துடலாம்” என்று சிரித்தாள்…

