Loading

31

 

மருத்துவமனையிலிருந்து திரும்பி கூடத்தில் சோர்வுடன் வந்து அமர்ந்தாள் சிவப்ரியா. அருகே அவளது தந்தை அமர, அவர் புஜத்தினைப் பற்றிக் கொண்டு தோள் சாய்ந்தவள் கண்ணோரம் மெல்லிய நீர் பூத்தது…

 

“டேய்.. சிவா” ராமராஜன் அழைக்க,

 

“கஷ்டமா இருக்குப்பா” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

 

சுபிக்ஷா மற்றும் சுடர் அவர்கள் முன்வந்து அமர,

 

“விஷ்ணு பாவம்ப்பா.. அ..அன்னிக்குத்தான் ஆசையா அவளும் எம்பிராயிடரி கத்துக்கனும்னு என்கூட வந்தா. அந்த முதல் நாள் அவ கடைசி நாளாயிடுச்சு.. ஆனா அவளுக்காக யாரும் கண்ணீர்கூட விடலையேப்பா.. செத்தது நான்னு நினைச்சுத்தானே எல்லாரும் அழுதுருப்பீங்க? இப்ப நான் சாகலை, என் விஷ்ணுதான் செத்தானு தெரிஞ்சப்பகூட யாரோ ஒருத்தர் கிடைச்சா போதுமுனுதானே எல்லாருக்கும் தோன்றியிருக்கும்? அப்ப என் விஷ்ணுக்காக யாருமே ஃபீல் பண்ணாததுக்கு நான் காரணியாகிட்டேன்ல?” என்று கண்கள் கலங்கி அவள் கேட்டாள்.

 

மகள் பேசியதைக் கேட்டப் பெரியவருக்குக் கண்கள் கலங்கியது.

 

அவள் தாடை பற்றி, தன் முகம் பார்க்கச் செய்தவர், “உண்மையைச் சொல்லவா? நீ சொன்னது உண்மைதான். நீ கிடைச்சுட்ட, ஆனா நீ விஷ்ணு இல்ல சிவானு சொன்னப்ப, எங்களுக்கு யாரோ ஒருத்தர்.. தொலைஞ்சவ கிடைச்சதே போதும்னு தான் தோனுச்சு.. ஆனா நீ சொல்றியே, விஷ்ணுக்கான ஏக்கத்தை நீயே பரிச்சுட்டனு.. அது உண்மை இல்லடா கண்ணம்மா.. உண்மையைச் சொல்லனும்னா, விஷ்ணுக்கான எங்க ஏக்கத்தையும் வருத்தத்தையும் நீ போக்கிருக்க.. இன்னிக்கு நீ விஷ்ணு இல்ல சிவானு நினைக்கும்போது, எனக்குத் தோன்றினதெல்லாம், எம்பொண்ணு விஷ்ணு தான், அவ இல்லாம இந்த அப்பா கஷ்டப்படக்கூடாதுனு, உன் ரூபத்துல கொஞ்சநாள் வாழ்ந்துட்டுப் போனதா பட்டுச்சு. விஷ்ணு ஆசப்பட்ட வாழ்க்கையை, அவ சார்பா நீ வாழ்ந்துருக்கடா.. உண்மைலயே இதுக்கு நீ விஷ்ணுவைக் கஷ்டப்படுத்திட்டோமேனு நினைக்காம அவளுக்காக சந்தோஷம் தான் படனும்” என்று கூற,

 

தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

 

“விஷ்ணு இல்லனு எனக்கு வருத்தம் இல்லவே இல்லடா இப்ப” என்றவர் அவள் தலைவருடி, “உன் ரூபத்துல நான் என் ரெண்டு பொண்ணுங்களையும் பாக்குறேன்டா.. என் ரெண்டு பொண்ணுங்களுமே உயிரோடதான் இருக்காங்க. என்கூடவே தான் இருக்காங்க.. உன்னில் இருக்காங்க” என்று கூற,

 

“அ..அப்பா..” என்ற கேவலுடன் அவரை தாவி அணைத்துக் கொண்டாள்.

 

மகளின் தலைகோதியபடி கண்ணீரோடு அவளை அரவணைத்துக் கொண்டவர், “நீ என் உசுருடா.. என் சாமி.. உங்கம்மாவை நான் எத்தனைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணேன்னு உனக்கே தெரியும்.. அப்படிப்பட்டவ சாவுலருந்து என்னோட உயிர்ப்பை மீட்டுக் கொடுத்த தேவதைங்கடா நீங்க ரெண்டுப் பேரும்.. கண்டதையும் நினைச்சுக் கலங்காதடா கண்ணம்மா.. எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. எதுவும் யோசிக்காத.. உனக்காக நாங்க இத்தனைப் பேர் இருக்கோம்” என்று கூற,

 

அவள் மனதில் அபூர்வனின் நினைவு வந்து போனது.

 

தந்தையை இன்னும் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

 

அவள் அருகே வந்தமர்ந்து, அவள் தோள் தொட்ட சுபிக்ஷா, “சிவா.. ஸ்டிரெயின் பண்ணாதடா. இன்னிக்குத்தான் ஸ்டிட்ச் பிரிச்சிருக்கு” என்று கூற,

 

“ஆமாடா கண்ணம்மா.. போதும்” என்று மகள் முகம் தாங்கியவர் அவள் கண்ணீர் துடைத்தார்.

 

“போதும்டா.. ஒன்றுமில்ல. எதுவும் யோசிக்காமப் போய் படு” என்று ராமராஜன் கூற,

 

இடவலமாய் தலையசைத்து அவர் கரம் பற்றியவள், “உங்ககிட்டப் பேசனும்ப்பா” என்றாள்.

 

மகளைப் புரியாமல் பார்த்தவர், “என்னடாமா?” என்க,

 

அவள் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

 

“எ..என்னைத் தப்பா நினைச்சுட மாட்டீங்கல்லப்பா?” என்று கேட்க,

 

“டேய்..” என்று பதறியவர், “அப்பா உன்னை அப்படி நினைப்பேனாடா? அவ்வளவு தான் உன் மனசுல எனக்கான நம்பிக்கையை விதைச்சுருக்கேனா?” என்று கேட்டார்.

 

கண்ணீரோடு அவர் கரம் பற்றியவள், “அ..அங்கக் காட்டுக்குள்ள.. என்னை வச்சுருந்தான்ல?” என்று கேட்க,

 

“அபூர்வனா?” என்று சுபிக்ஷா கேட்டாள்.

 

அவளைத் திரும்பிப் பார்த்து மெல்ல தலையசைத்தவள், தந்தையைப் பார்த்து, “அபூவை எனக்கு ஏற்கனவே தெரியும்” என்று கூற,

 

அவள் குரல் கூறிய உரிமை, அவர்கள் மூவரையும் குழப்பியது.

 

“தெரியும்னா?” என்று சுடரொளிவானன் கேட்க,

 

“நான் எம்பிராயிடரி கிளாஸ் போனேன்ல? அதுக்குப் பக்கத்துலருந்த கவர்மென்ட் மெடிகல் காலேஜ்ல தான் அவன் எம்பீபீஎஸ் படிச்சான்” என்றவள், சிரம் தாழ்த்தி, “ஒரே பஸ்லதான் போவோம்” என்றாள்.

 

மூவருக்கும் ஏதோ புரிவதைப் போல் இருந்தது.

 

“அ..அவன் கண்ணு பச்சக்கலர்ல இருக்கும்.. அந்த வயசுக்கு.. அது எனக்கு ஒரு ஆர்வத்தைக் குடுத்துச்சு. எத்தனை பஸ் வந்தாலும், அவனுக்காகவே அந்த பஸ்லதான் போவேன்.. அவனும் பார்த்தான்.. பேசினான்.. ரெண்டுபேரும் பேசினோம்” என்றவள் மனதில் அன்றைய நினைவுகள் ஊர்கோலமாய்.

 

அவளையும் மீறி, அந்த நினைவு தந்த இதம் அவளைப் புன்னகைக்க வைத்தது.

 

“அவனைப் பிடிக்கும்.. ஒரு ஆர்வம்.. அவன்கூட பேசினேன்.. அந்த ஒரு வருஷம்.. ரெண்டு பேரும் ஒன்னாவே தான் போவோம். நிறையா.. நிறையா பேசுவோம்.. அவன் கஷ்டத்தையெல்லாம் என்கிட்ட சொல்லுவான்.. என் கஷ்டத்தை அவன்கிட்டச் சொல்லுவேன்.. பர்ஸனலா எதும் எங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிட்டதில்ல.. ஆனா எங்க உணர்வுகளை ஷேர் பண்ணிக்கிட்டோம்.. அந்த நாள் முழுக்க நடக்குற அத்தனையையும் அந்த ஒருமணிநேரப் பயணத்தில் பேசித் தீர்த்துடுவோம்..” என்றவள் தந்தையைப் பார்த்து, “அந்த வயசுக்கான ஒரு ஆர்வம்.. அவன்கூட பேச ரொம்ப பிடிச்சுது.. அ.. அவனையும்.. ஆனா அது.. அது.. காதல் இல்ல.. அவனைப் பிடிக்கும். அவ்ளோதான்..” என்றவள், மெல்ல கண்கள் மூடினாள். அன்பெனும் கடலைக் காதலென்ற சிறு குளமாக மட்டுமே ஏன் கொள்ள வேண்டும்? அன்றைய நாள் அவன்மீது அவள் கொண்ட பேரண்பு காதல் தான் என்று நிரூபித்து நம்ப வைக்க அவள் விளையவில்லை‌.

 

அவன் முகம் அவள் மனதில் ஊர்கோலம் வந்தது.

 

“ஆனா இப்பவும் அது அன்பு மட்டுமன்று தோனலைப்பா” என்க,

 

மூவரும் அவளை வியப்பாகப் பார்த்தனர்.

 

“அந்த ஆக்ஸிடன்ட் நடக்காம இருந்து, எங்கப் பயணம் தொடர்ந்திருந்தா, நிச்சயம் அது காதல்ல தான் தொடர்ந்துருக்கும்னு உறுதியா சொல்வேன்ப்பா.. அ..அவன் வேறப்பா.. அவன்.. இங்க என்னமோ பண்றான்” என்று தன் நெஞ்சைக் குத்திக் கொண்டவள், “என்னைத் தூக்கிட்டுப் போய் வச்சுருந்தான்.. என் நினைவுகள்ல அவன் இல்ல.. ஆனா அவன் அருகாமையும் உணர்வும் எனக்குள்ள கலந்துருந்துச்சு.. அவனை நம்பி அத்தனை நாள் அந்தக் காட்டுல எப்படித் தனியாருந்தேன்னு ரொம்ப குழம்பினேன்.. எல்லாம் நினைவு வந்த பிறகுதான், பாதுகாப்பான இடத்துல இருந்துருக்கோம்னு தெளிவா புரிஞ்சுது..” என்று கண் திறந்தாள்.

 

“அவன் இப்ப எங்கனு தெரியலைப்பா.. ஆனா வருவான். எனக்காக வருவான்.. எனக்கு இந்த உறவுக்கு என்னப் பெயர்னு தெரியலைனு அவன்கிட்ட அழுதேன்ப்பா.. எல்லாரையும் போல நான் செத்துட்டேன்னு நினைச்ச அவன் அந்தக் காட்டில் அநாதை போல தவிச்சுருக்கான்.. அந்த நொடிதான் என்மேல அவனுக்கிருந்த காதலை உணர்ந்திருக்கான்.. எனக்கு அது காதலானு தெரியலையேனு சொன்னேன்.. ஆனா இப்பத் தோனுதுப்பா.. அவன் எப்படி இருந்தாலும், யாரா இருந்தாலும், அவன் மட்டும்தான் வேணும்னு தோனுது..” என்றவளாய் தந்தையைப் பார்த்து, “நீங்க சொல்லுங்கப்பா.. இது காதல் தானே? அம்மாவைப் பார்க்கும்போது உங்களுக்கும் இப்படித் தானே தோன்றியிருக்கும்?” என்று கேட்க,

 

மகளை வியப்போடு பார்த்தார்.

 

“ப்பா.. ந.. நான்.. தப்பாப்பா?” என்று குழப்பமும் கலக்கமுமாய் அவள் கேட்க,

 

மனிதர் உருகிப் போனார்.

 

அவள் கன்னம் பற்றி, “என் பொண்ணு உண்மைலயே தெளிவா இருக்கா.. என் பொண்ணு என்னிக்குமே தப்பில்லடா.. நீ தப்பில்ல..” என்று கூற,

 

கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக அவரைப் பார்த்தாள்.

 

“அந்தத் தம்பி இப்ப?” என்று அவர் கேட்க,

 

“தெரியாது. ஆனா வருவான். கண்டிப்பா வருவான். உங்க முன்ன வந்து, உங்கப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்பான். எனக்கு நம்பிக்கை இருக்குப்பா” என்று கூறினாள்.

 

அவள் தலையை மென்மையாகக் கோதியவர், “அப்படி வந்து, என் பொண்ணோட நம்பிக்கையை காப்பாத்தினா, அவனை விட ஒருத்தன், உன்னை நல்லபடியா வச்சுக்குறவனா நான் தேடினாலும் கிடைக்காதுடா கண்ணம்மா.. உனக்காகவும் உன் காத்திருப்புக்காகவும் அப்பா காத்திருக்கேன்” என்று கூற,

 

“தேங்க்ஸ் ப்பா” என்றபடி அவரை அணைத்துக் கொண்டாள்.

 

சுபிக்ஷாவிற்கும் சுடரொளிவானனுக்கும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.

 

“போதும்டா.. போ. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்று அவர் கூற,

 

சுபிக்ஷா அவளை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

 

“அந்தத் தம்பியைப் பத்தி உனக்கெதாவது தெரியுமா சுடர்?” என்று ராமராஜன் கேட்க,

 

மென்மையான புன்னகையுடன் தலையசைத்தவன், “நம்ம சுபியோட லவ்வர் கருப்பசாமி இருக்கார்ல? அவரோட அண்ணாதான் அபூர்வன்ப்பா” என்று கூறினார்.

 

சுடரை அவர் அதிர்ந்துபோய் பார்க்க, அவர்களுக்கிடையான உறவைப் பற்றி விளக்கியவன், மேலும் ஒரு விடயத்தைக் கூற, அது அவரை இன்னும் இன்பத்தில் ஆழ்த்தியது.

 

“நம்பிக்கையா இருங்கப்பா..” என்று சுடர் கூற,

 

“எனக்கு என் புள்ள மேலயும் நம்பிக்கையிருக்கு, என் பொண்ணோட காதல் மேலயும் நம்பிக்கை இருக்குப்பா” என்று கூறினார்.

 

அங்கு சிவகாமி வீட்டில் பெரும் சலசலப்பு..

 

“என்ன பிரம்மா பேசுற நீ?” என்று சிவகாமி கோபமாகக் கேட்க,

 

“சொன்னா புரிஞ்சுக்கோ சிவாக்கா.. எனக்கு மனசில்லை” என்றாள்.

 

“பிரம்மா.. என்ன பேச்சு இதெல்லாம்?” என்று ராஜசேகர் கேட்க,

 

“மாமா ப்ளீஸ்.. லீவ் மீ. என்னால ஒரு முடிவை இப்போதிக்கு எடுக்க முடியாது” என்றவளாய் எழுந்து அறைக்குள் சென்றாள்.

 

அவர்கள் வாதத்தின் காரணம் இதுதான். ராஜசேகர் சொந்தத்தில் பிரம்மவதனியைப் பெண் கேட்டு, கடந்த மாதம் ஒரு வரன் கிடைத்தது. பிரம்மவதனி காதில் அச்செய்தியைப் போட்டு மட்டும் வைப்போம் என்று நினைத்த சிவகாமி, குறைந்தது இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்வாள் எனதான் எதிர்ப்பார்த்தாள்.

 

ஆனால் அவள், எனக்குத் திருமணமே வேண்டாம் என்று கூறுவாள் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

 

‘ஏன்?’ என்ற கேள்வியை விதவிதமாகக் கேட்டுப் பார்த்து கத்தியும் பார்த்துவிட்டனர்.

 

அரை மணி நேரம் வாதம் நீடித்ததே அன்றி அவள் பக்கமிருந்து காரணங்கள் வரவில்லை. சிவகாமிக்கு அது பெரும் வேதனையாய் அமைய, “அவ ஏதோ குழப்பத்துல இருக்கா சிவா.. கொஞ்ச நாள் போகட்டும்” என்று ராஜசேகர் மனைவியைத் தேற்றினான்.

 

அறைக்கு வந்த பிரம்மாவிற்கு மூச்சடைக்கும் உணர்வு..

 

அவளுக்கு ராஜசிம்மனைத் தன்னவனாக யோசிக்க முடியவில்லை. ஏனோ ஆரம்பத்திலேயே அவனைத் தவறான அபிப்பிராயத்தில் பார்த்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் கிளம்பும் முன், உணர்வற்றவனின் முகத்தில் அவள் கண்ட உணர்ச்சி மிகுதி, தொந்தரவு செய்வதாய் உணர்ந்தாள்…

 

இதுவரை அவளிடம் யாரும் காதலைச் சொல்லி அவள் மறுத்ததில்லை. முதன்முறை அதை அனுபவித்து செயலாற்றும்போது, அவன் முகம் காட்டிய சொல்லொண்ணா வேதனை, அவளை என்னவோ செய்தது.

 

அதை மீறி அவளால், தனக்கான ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலாதென்று அவள் உள்மனம் கூறிய மெல்லொலியில், திருமணமே வேண்டாமென்று திடீர் முடிவைக் கூறியிருந்தாள்.

 

காதல், உணர்ந்தவரையும் சரி உணரப்பெறவுள்ளவரையும் சரி, ஒரு பாடு படுத்திவிட்டுத்தான் ஓயும் என்பது, எத்தனை உண்மையல்லவா?

 

‘யூ சுட்ட செங்கல்.. உன்னால நான் இங்க அந்த சிவகாமிகிட்ட செருப்படி வாங்கப் போறேன்.. ஏன்யா என் லைஃப்ல வந்த நீ? ச்சை.. உனக்காகவெல்லாம் பாவப்பட்டு நான் கடுப்பாவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை’ என்று பிரம்மா மனதோடு அவனை வருத்தெடுக்க, அவள் மனம் திண்டாடித் தவித்தது.

 

‘அவர் நம்ம உணர்வைப் புரிஞ்சுக்காதது தப்புனா, அவர் கோபத்துக்குப் பின்னாடி இருக்கும் காரணத்தை நீ புரிஞ்சுக்காததும் தப்புத்தான்’ என்று சுடர் கூறிய வாக்கியமும்,

 

‘என் லைஃப்ல நான் நினைச்சு சந்தோஷப்படுற மாதிரி யாரையும் பார்க்கவும் இல்ல, அப்படி எந்த நினைவுகளும் இல்ல’ என்று ராஜசிம்மன் கூறியதும் அவள் மனதில் வந்து போனது.

 

பல வாக்கியங்களை அசைபோட்ட அவள் மனம் இறுதியாக, ‘அவரைப் பத்தித் தெரிஞ்சுக்காம நானா ஒன்னு நினைச்சுட்டு நோ சொல்றதுக்கு, தெரிஞ்சுக்க ட்ரை பண்ணினா என்ன? தெரிஞ்சுக்குறதால ஓகே சொல்லிடுவேனா தெரியலை.‌ பட் எனக்கும் ஒருத்தரை ஜட்ஜ் பண்ணாம என்னோட விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து மட்டும் ரிஜக்ட் பண்ணினதாவாது இருக்கும்ல?’ என்று நினைத்தாள்…

 

நினைத்ததும் ஒரு யோசனை உருவாக, உடனடியாக அதை செயலாற்றத் துவங்கினாள்.

 

அங்கு தனது பொதிகளைத் தயார் நிலையில் வைத்திருந்த ராஜசிம்மனின் முன், கருப்பசாமியும் அபூர்வனும் கலக்கத்துடன் நின்றிருந்தனர்.

 

“இப்ப எதுக்குடா நீ டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கின?” என்று கருப்பசாமி ஆற்றாமையாய் கேட்க,

 

இறுக்கம் பூசிய முகத்துடன் அவனைப் பார்த்தான்.

 

அவன் மனதில் சொல்ல முடியாத வலியும் வேதனையும்…

 

“என்னால முடியல கருப்பு.. எனக்கு இங்கேயே அவ நினைவுகள மட்டும் தாங்கிட்டு இருக்க முடியும்னு தோணல.. நெஞ்செல்லாம் வலிக்குது” என்று இறுகிய குரலில் கூறியவன் கண்களில் அதீத வலி…

 

அபூர்வனால் அதை புரிந்துகொள்ள முடிந்தது. அந்த வேதனையை அவனும் அனுபவித்திருக்கின்றானே..

 

“என் வாழ்க்கைல நான் ஆசைப்பட்ட முதல் ஆள் அவதான்.‌ ஆனா கடைசியும் அவளாவே ஆவான்னு நினைக்கலை” என்று கூறும்போது பாறையாய் இறுகிய அவன் கன்னத்தில் கண்ணீர் கோடென வடிந்தது.

 

“ராஜ்..” என்று கருப்பு அவனை அரவணைக்க,

 

“அவ நோ நோனு சொல்லும்போது தெரியலைடா.. தொண்டையை முட்டுற வலியோட இங்கருந்து போகும்போது கடைசியா அவ முன்னாடி போய் நிக்கும்போதும் அவளுக்கு நான் வேணாம்னு சொல்லும்போதுதான் புரிஞ்சுது.. எ..என் காதல்.. அது எவ்ளோ ஆழமா இருக்குனு தான் யோசிச்சேன்.. ஆனா அவளுக்கு வேண்டியபடி அது இல்லனு அப்பத்தான் புரிஞ்சுது..” என்றான்.

 

“ராஜ்..” என்று அபூர்வன் அவன் தோள் தொட,

 

“அவளுக்கு நான் வேணாமாம்” என்று முற்றுமாக உடைந்துபோன குரலில் கூறினான்.

 

“டேய்..” என்று கருப்பசாமி கலங்கி அழைக்க,

 

“என்னால முடியலடா.. ந..நான்.. என் வாழ்க்கைல.. அது எதுவும் என்னை சிரிக்க விடலை.. இப்ப நினைச்சாலும் மூச்சு முட்டுது… இ..இதோ.. இந்த தழும்பு.. இதைப் பாக்கும்போதெல்லாம் என் காதுக்குள்ளக் கேட்குற அந்த சப்தம்.. கண்ணாடி பாக்குறதை நான் விட்டு எத்தனை வருஷம் ஆச்சு.. ஆனா அவ பாக்க வச்சாடா.. சிரிக்க வச்சா என்னை.. மனசார.. இனியும் சிரிக்க, சந்தோஷமா இருக்க அவ வேணும்னு மனசு சொல்லிச்சு.. ஆனா இனி பெயருக்குக்கூட சிரிக்கவே முடியாதுங்குற நிலையை அவளே குடுப்பானு நினைக்கலையே” என்று கரைந்தான்.

 

“டேய் ராஜ்.. அப்படிலாம் நினைக்காதடா” என்று கருப்பசாமி கூற,

 

“முடியலடா.. எனக்கு இடம் மாற்றம் தேவை.. என்னால வேற எதுவும் யோசிக்க முடியல‌. அவ லைஃப்ல எனக்கு இடமில்லைங்குறதை என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல‌. எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும்..” என்று கூறினான்.

 

அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்த அபூர்வன், “நீ போடா.. எல்லாத்தையும் மறந்துடுனு சொல்ல மாட்டேன். மறக்க முடியாது. ஆனா ஒன்னு. உனக்கானதா இருக்கும் ஒன்னு எதுவா இருந்தாலும், எப்படி தடைபட்டாலும் உன்னை வந்து சேரும். உன் சந்தோஷம் அவனு நினைச்ச. உண்மையில் அவதான் உன் நிரந்தர சந்தோஷம்னா அவ உனக்குக் கிடைப்பா. அப்படி இல்லைனா உனக்கான நிரந்த சந்தோஷம் வேற எங்க இருந்தாலும் உன்னை வந்து சேரும். ஆனா ஒன்னு.. அதுக்கு முதல்ல, உன் சந்தோஷத்தின் ஆணிவேர் உனக்குள்ளத்தான் இருக்குனு நீ புரிஞ்சுக்கனும். உன் பாஸ்ட்ல நடந்ததெல்லாம் ரொம்ப கொடுமையானது தான்.. இல்லைனு சொல்ல மாட்டேன். உன் இடத்துல நானோ கருப்போ இருந்தா நிச்சயம் அதை உன் அளவு தாங்கித் தாண்டி வந்திருக்க மாட்டோம்.. அவ்வளவு கஷ்டத்தைத் தாங்கி வந்துட்ட.. இதையும் தாண்டி வருவ. ஆனா, அதையெல்லாம் தாண்டினதோட இல்லாம இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புறது உன் மனசுலதான் இருக்கு. உனக்காக நாங்க இருக்கோம். எப்பவும் இருப்போம்.. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ” என்று கூற,

 

ராஜசிம்மன் நெகிழ்ந்து போனான்.

 

“கருப்புக்கு மட்டுமில்லடா.. நான் உனக்கும் அண்ணன்தான்” என்று அபூர்வன் மனதிலிருந்து கூற,

 

அபூர்வனை இறுக அணைத்துக் கொண்டான்.

 

தானும் அவனை அணைத்துக் கொண்ட அபூர்வன் அவன் தோள் தட்டி, “பாத்துக்கலாம்டா..” என்று கூற,

 

அவனை கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்த ராஜசிம்மன், “தேங்க்ஸ் அண்ணா” என்று உளமாரக் கூறினான்..

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்