
இதயம்-26
எல்லாமே நடந்து முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது. வாழ்க்கை ரொம்பவே அமைதியாய் போய்க் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது. கேண்டி க்ரஷ் தீ விபத்து சம்மந்தமான அத்தனை விசாரனைகளும் முடிந்து, காப்பீட்டுத் தொகை கிடைத்து, மறு சீரமைப்பு வேலைகள் வெகு தீவிரமாய் நடந்துக் கொண்டிருந்தன.
இதற்கிடையில், நிஷாவும், ஆகாஷும் தன் தந்தையின் தொழிலைப் பார்க்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். ஆதனிடம் மீண்டும் மோதி, மூக்குடைப்படக் கூடாதென்பதிலுமே உறுதியாய் இருந்தனர்.
ஷியாம் சம்யுக்தாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். தன் அலுவலகத்திலேயே அவளுக்கு பிடித்தமான வேலையொன்றை வாங்கிக் கொடுத்திருந்தான்.
இலகுவாய் பேர் சொல்லி அழைத்துப் பேசினாலும் கூட, சம்யூ இன்னும் ஷியாமை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் சொல்லவில்லை. ஆகாஷ் விஷயத்தில் அவள் பட்டவேதனையும் வலிகளும், அவமானமும் சேர்ந்து, அவளுக்குள் தயக்கத்தையும் பயத்தையும் விதைத்திருந்தது.
ஆனால், எத்தனை காலமாய் இருந்தாலும் தன்னவளுக்காக காத்திருக்க தயாராகவே இருந்தான் ஷியாம்.
“நான் உன்னைக் காத்திருக்க வைக்கிறேன்னு உனக்கு கோபம் வரலையா ஷியாம்!”
“காதலில் காத்திருப்பும் சுகமானது தான். நீ என்னைப் பிடிக்கலைன்னு சொல்லலியே, வெய்ட் தானே பண்ண சொல்லுறே? உன் மனசு மாறுவதற்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் வெய்ட் பண்ண தயாராய் இருக்கேன். எனக்கு நீ பழைய குப்பையெல்லாம் மறந்து நீ நீயாக இருக்கணும். அது தான் வேணும்.!” அவன் சொன்னதும், அவன் கரத்தோடு தன் கரத்தினைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் சம்யுக்தா.
கண்களில் நீர் திரண்டு, அவன் தோள்பட்டையில் வழிந்தது. அவள் கண்ணீரின் ஈரம் அவனைச் சுட,
“ஈஸி சம்யூ பேபி! அதெல்லாம் முடிஞ்சு போன கதை! இதையெல்லாம் மனசில் வச்சு என்ன பண்ண போறே.? எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு, நமக்காக மட்டும் யோசி பேபி! நான் இருக்கேன் உனக்காக எப்பவும். இப்படி சின்னப் பிள்ளை போல் அழக் கூடாது. என் சம்யூ ரொம்பவே ஸ்ட்ராங்கானவள். அழமாட்டா, அவள் சின்னக் குழந்தை இல்லை!” எனச் சொன்னபடியே, அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி நெற்றியில் முத்தம் வைத்தான்.
அவன் தந்த தைரியத்திலும், அத்து மீற முயலாத நெற்றி முத்தத்திலும் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பினாள் சம்யுக்தா.
இதுதானே உண்மையான காதல்! தனக்கானவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்வது தானே உண்மையானக் காதல். சம்யுக்தா எப்படி இருக்கிறாளோ, அப்படியே ஏற்றுக் கொண்டான் ஷியாம். ஷியாமின் அன்னை சாவித்ரிக்கும் கூட, சம்யுக்தாவை தன் மருமகளாய் ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி தான்.
“ஏன் ஆன்ட்டி! என்னை நினைச்சு உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையே? கல்யாணத்திற்கு முன்னாலேயே இந்தப் பொண்ணு எப்படியெல்லாமோ இருந்தாளே, நம்ம பையனுக்கு தகுதியானவள் தானான்னு நினைக்கிறீங்களா ஆன்ட்டி?” என்ற சம்யுக்தாவின் கேள்விக்கு,
“ஒரு பொண்ணா இருந்துட்டு, நானே உன்னை புரிஞ்சுக்கலைன்னா வேற யார் புரிஞ்சுப்பா சம்யூ? உன்னோட மனசு எனக்கு புரியுது. இதைப் பற்றி ரொம்ப யோசிக்காதே, சாக்கடையில் தெரியாமல் விழுந்துட்டா வாழ்க்கை முழுசும் அதை நினைச்சு அழுதுட்டேவா இருக்கோம், குளிச்சு தலை முழுகிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க போய்டுறோம் இல்லையா? இதுவும் அதே போலத்தான். கடந்தக் காலத்தை நினைச்சு நிகழ்காலத்தை நரகமாக்கிக்காதே டா! நமக்கு கிடைச்சிருக்கிறது ஒரேயொரு வாழ்க்கை. கடந்தகால கசப்புகளை நினைச்சுக்கிட்டே, இனிப்பான எதிர்காலத்தையும் கசப்பா மாத்திக்கிறோம். என் மருமகளுக்கு அது வேண்டாமே..!” சம்யூவின் தலை கோதியபடியே அவர் சொன்ன பதிலில் நிஜமாகவே நெகிழ்ந்து தான் போனாள் சம்யுக்தா.
சதாசிவம் என்கிற பெயரே யாருக்கும் நினைவில் இல்லை. நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு, அவர் யாருக்கும் உண்மையாகவும் இல்லை.
‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்!’ எனும் சிலப்பதிகாரத்தின் வாக்கிற்கேற்ப, அரசியலில் பிழை செய்த அவருக்கும் சரி, பரமேஷ்வருக்கும் சரி, தண்டனை கிடைத்துவிட்டது. ஆனால் கிடைத்த தண்டனை கொஞ்சம் குறைவு தான். தன் இறப்பபைக் கூட, இன்னொருவர் கரத்தில் தந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தார் சதாசிவம்.
மற்றவர்களின் மனதில் அழியாது நிற்பதை விட, கட்டிய மனைவி, பெற்ற மக்களுக்காவது நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக இருந்திருந்தால், மனைவி மக்களின் மனதிலாவது நீங்கா இடம் பிடித்திருப்பார். ஆனால், இப்படி மரணத்தோடு அவர் ஒட்டுமொத்தமாய் மற்றவர் மனங்களிலிருந்தும் மறைந்து போனது கூட, ஒருவகையில் அவருக்கான தண்டனை தான்.
*******
தன் கணவனின் கரத்தோடு கரம் கோர்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள் சிம்மவாஹினி.
“இங்கே எதுக்கு ஆதன்?” அவள் கரம் அவன் கரத்தினை மிக இறுக்கமாய் அழுந்தப் பற்றியது. கரத்தினில் மிக மெல்லிய நடுக்கம் ஓடிப் பரவியது.
“இங்கே வேண்டாம் ஆதன்! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!” குரல் கூட நடுக்கம் கண்டது. அவன் முதன்முறையாய் பார்த்த, தைரியமான, தெளிவான வாஹினி தொலைந்து போய், சின்னஞ்சிறு சிறுமியைப் போல் கண்களில் பயம் அப்பியிருக்க, தயங்கியபடியே நடந்து வந்த அவளைப் பார்க்க, வேதனையாக இருந்தது அவனுக்கு.
“சிமி! நான் இருக்கேன் சிமி! ஏன் பயப்படுறே? நான் உன் கூடவே இருக்கேன். பயப்படாதே!” அவள் கரத்தினில் அழுத்தம் தந்தது, தைரியப்படுத்த முயன்றான் ஆதன்.
“உனக்கு எதாவது ஆகிடுச்சுன்னா? எனக்குன்னு யார் இருக்கா? மறுபடியும் என்னைத் தனிமையோடு போராட விட்டுடுடாதே ஆதன். அது விரும்பி ஏத்துக்கிட்டாலும் கூட, ரொம்பவே கொடுமையானது.” கண்களில் நீர் தேங்கச் சொன்னவளின் விழிகளில் முத்தம் வைத்தவன்,
“ஹேய்! பயந்தாங்கொள்ளி, இவ்வளவு பயம் உனக்கு அவசியமில்லை. உன்னை விட்டுட்டு போற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. நீ விரட்டும் போதே நான் போக மாட்டேன். இப்போ நீ என்னை வேணும்ன்னு சொல்லும் போது, உன்னை விட்டு எப்படி போவேன்?” எனச் சொன்னான்.
வர வேண்டிய இடம் வந்ததும், செருப்பைக் கழற்றிவிட்டு, மண்ணில் கால் புதைய நடந்து வந்தவளின் கண்ணில் பொல பொலவெனக் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. வறண்டு போய், வெறுமனே காட்சியளித்த நிலத்தில், இலைகள் மொத்தமும் உதிர்ந்து போய், எலும்புக் கூடாய் காட்சியளித்த மரங்கள், அங்கே நடந்தக் கொடுமைகளுக்கு கொடுர சாட்சியாகி இலையுதிர்த்து நிற்பதாய் அவளுக்குத் தோன்றியது.
வயோதிகர் ஒருவர், யுத்தத்தில் காயமுற்று மயங்கிய அல்லது உயிரிழந்த நிலையிலுள்ள பெண்ணொருவரை தனது கைகளில் ஏந்தியவாறு, ஒரு சிறுவனுடன் முன்னோக்கி வரும் வகையில் சிலையொன்று அங்கே அமைக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்த யுத்தத்தின் ஒரே சாட்சி! அந்தச் சிலையைப் பார்த்ததும் தன் தாய் தந்தையின் ஞாபகம் தன்னால் வந்து ஒட்டிக் கொண்டது வாஹினியிடம்.
முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.
அந்தக் கிராமத்திற்குத்தான் அவளை அழைத்து வந்திருந்தான் ஆதன்.
அன்று நடந்த நிகழ்வுகளின் பிடியில் சிக்கித் தவித்து, தன் ஒட்டு மொத்த உணர்ச்சிகளையும் உள்ளுக்குள் புதைக்க சிரமப்பட்டவள், அது முடியாமல் போகவே கேவி அழத் துவங்கியிருந்தாள்.
காலின் கீழே வெதுவெதுப்பான குருதி ஆறு ஓடுவதைப் போன்ற பிரம்மைக் கூட அவளுக்கு எழுந்தது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபியின் முன் நின்றிருந்தவளுக்கு, கண் முன்னே அன்றைய நாளின் நினைவுகளும், அவர்கள் தப்பிச் சென்ற மறுநாளே நடைபெற்ற பெரும் படுகொலையும், பார்த்த கேட்ட விஷயங்களும் நினைவிற்கு வந்து, கொல்லாமல் அவளைக் கொன்று தொலைத்தது.
இத்தனை நேரம் வெறும் கேவலாய் இருந்த அழுகை, வெடித்துச் சிதறி, பெரும் சத்தத்துடன் வெளிப்பட, தன்னவளை தன் மார்பில் தாங்கிக் கொண்டான் ஆதன் ரித்விக்.
“போதும் கேண்டி! அழுதது போதும். இதற்கு மேல் நீ அழக் கூடாது. அழவும் விட மாட்டேன். நான் உன்னை இங்கே எதுக்காகக் கூட்டி வந்தேன்னு தெரியுமா?” தான் மார்பில் புதைந்து அழுதுக் கொண்டிருந்தவனின் முகம் நிமிர்த்திக் கேட்டான் அவன்.
அழுததில் முகம், மூக்கு எல்லாம் இரத்தச் சிவப்பாய் சிவந்திருக்க, கலங்கிய கண்களோடு, அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“வேறே எதுக்கு? என்னை அழ வைக்கிறதுக்கு தானே? நான் யார் கிட்டேயும் என் உணர்ச்சிகளைக் காட்டவே மாட்டேன். என்னைப் போய் அழ வச்சிட்ட, இடியட்! நான் அழ மாட்டேன். நான் ஸ்ட்ராங்கா நிற்பேன். அதுவும் உன் முன்னாடி அழ மாட்டேன்.!” சிறு பிள்ளை போல், முகத்தை தூக்கியபடி, அவனிடமிருந்து விலகி நின்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“இது தான் என் சிமி! மை ஹிட்லர்! என்னோட கேண்டி! இது தான் உன் கிட்டே எனக்கு பிடிச்சதே!” நெகிழ்வுடன் சொன்னவன்,
“நாம மறுபடியும் முதலில் இருந்து ஃப்ரெஷ்ஷா ஸ்ட்ராட் பண்ணுவோமா கேண்டி க்ரஷ்?” கண் சிமிட்டிக் கேட்டான் அவன்.
“ஹான்?” என்ன கேட்கிறான் எனப் புரியாது மலங்க விழித்தவளிடம்,
“நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் நீ என்னைக் காதலிக்கணும்ன்னு அவசியமில்லை! ஆனால், என்னை ப்ளீஸ் கல்யாணம் பண்ணிக்கோ! ஒருவேளை கல்யாணத்தில் உனக்கு விருப்பமில்லைன்னா நாம காதலிக்கலாமே..!” என அவன் சொன்னதும், அவன் சொன்ன தோரணையில் பட்டெனச் சிரித்துவிட்டாள் சிம்மவாஹினி.
“காதலிக்க விருப்பமில்லைன்னா கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னா காதலிக்கணுமா? சரியான லூசு ஆதன் நீ..!” எனப் புன்னகையுடன் சொன்னவள் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்துக் கொண்டாள். இத்தனை நாட்களில் முதன் முறையாய், இவன் என்னவன் என்கிற உணர்வு அவளுக்குள் வந்திருந்தது.
“ஹேய், கேண்டி க்ரஷ்! நீ தாலியைக் கழற்றிக் கொடுத்ததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான் தெரியுமா? நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க இப்படியொரு இடம் கிடைக்குமா? விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லைன்னு சொல்லுவாங்க! இங்கே உயிர்கள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உறங்கவில்லை. வீரர்கள் விதைக்கப்பட்ட இந்த இடத்தில், இந்த இரத்த பூமியில் இவங்க ஒவ்வொருத்தரையும் சாட்சியாய் வைத்து, நான் இந்தத் தாலியை உன் கழுத்தில் கட்டறேன். உன் அப்பா அம்மாவோட ஆசிர்வாதத்தோட, நீ அவங்களை தொலைச்ச அதே மண்ணில் கல்யாணம் பண்ணிக்கிறது தான் எனக்கு சரின்னு தோணிச்சு. போன முறை உன் சம்மதமில்லாமல் கட்டினது தப்புத்தான். இப்போ கேட்கிறேன் உனக்கு சம்மதமா?” முதன் முறையாய் அவன் சம்மதம் வேண்ட, இத்தனை நேரம் அவன் சொன்னதிலேயே நெகிழ்ந்திருந்தவள், நீர் தாங்கிய விழிகளுடன் கண்ணசைவில் தன் சம்மதத்தை தெரிவிக்க, பொன்தாலி அணிவித்து மீண்டும் தன் சரிபாதியாய் தன்னவளை இணைத்துக் கொண்டான் ஆதன் ரித்விக்.
தன் மென் கரத்தில் தாலியை ஏந்தி பார்த்தவளின் விழிகளிலிருந்து உருண்டோடிய நீர்த்துளி தாலியின் மீது விழுந்த அதே நேரம், ஆகாயத்திலிருந்து ஒற்றை மழைத்துளி அவள் நெற்றி மீது ஆசிர்வாதமாய் விழுந்தது.
விழி மலர்த்தி அண்ணாந்து அவள் ஆகாயத்தை நோக்க, ஆதனும் அண்ணாந்து பார்த்தபடியே நிற்க, இயற்கை தன் ஆசிர்வாதத்தை வஞ்சமில்லாமல் வாரியிரைத்தது. பெரிய பெரிய துளிகளாய் சற்று நேரத்தில் மழை பெய்யத் துவங்கியிருக்க, பேரிரைச்சலோடு பெய்த பெருமழையின் ஆசிர்வாதத்தில் நனைந்தபடி ஆதனும் அவனின் சிமியும். இது வெறும் மழையின் ஆசிர்வாதம் மட்டுமல்லை, அங்கே விதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களின் ஆசிர்வாதமல்லவா.?
தங்கள் மடியிலிருந்து வளர்ந்த பெண்ணுக்கு, நல்ல வாழ்க்கை அமைகிறதென்றால் கண்ணுக்குத் தெரியாமல் காற்றோடு காற்றாய் கலந்திருந்தாலும் அவர்கள் மனம் மகிழ்ந்து நெகிழத்தானே செய்யும்.
தாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தாலும், புதைக்கப்பட்டிருந்தாலும், அடையாளமில்லாமல் அழிக்கப்பட்டிருந்தாலும் கூட, மீதமிருக்கும் ஒவ்வொரு உயிரும், உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் அவர்களின் அடையாளம் தானே? அதிலும் தனக்கென்று தனியான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட வாஹினி அவர்களின் இரத்தம் தானே? மண்ணும் மனமும் குளிர, மழை பொழிந்துக் கொண்டிருக்க, கண்களில் கரை புரண்டோடும் கண்ணீரின் தடம் தெரியாமல், ஆதனின் கரத்தை இறுகப் பற்றியபடி அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தாள் சிம்மவாஹினி. இயற்கை தூவும் அட்சதையில் அவர்களின் மனமும் இதமாய் நனைத்துக் கொண்டிருந்தது.
“முள்ளி வாய்க்கால் போயிருந்தேன் – அந்த
முல்லைத் தீவையும் மோதிவந்தேன்
முள்ளில் கிழிந்த என் கண்களிலே – நீர்
முட்டித் தெறித்ததை யாரறிவார்?
ஆனந்த புரத்தைக் கடக்கையிலே – என்
ஆவி துடித்ததை என்னசொல்ல?
நானந்தத் துயரம் சொல்வதற்கு – என்
நான் படும் பாடு கொஞ்சமல்ல
இந்த இடம்தான் அந்தஇடம் – எம்
இலட்சம் உயிர்களைக் கொன்றஇடம்
சொந்தம் சொல்லி நானழுதால் – விண்
சுற்றும் கோள்கள் நின்றுவிடும்
சாகாத காற்றின் சப்தங்களில் – எம்
சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல்துகள் – மண்ணில்
ஆங்காங் கலைவதைக் கண்டறிந்தேன்
எரிவாய்ப் பட்ட சருகுகளாய் – உடல்
இற்றுப் போனவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்ட நண்டுகளாய் – ஈங்கு
நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?
தாயிடம் பால்கொண்ட பிள்ளையரை – ஒரு
தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக் கூடுகளைச் – சீன
அமிலம் ஊற்றியே அழித்தாராம்
படர்ந்து கிடக்கும் வெறுமையிலே – இனம்
பட்ட பெருந்துயர் சிலஅறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென்ன – ஏ
நந்திக் கடலே நீயறிவாய்
தோண்டு மிடத்தில் தங்கம்வரும் – என்று
சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டு மிடத்தில் குருதிவரும் – என்று
சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்
மைநீட்டிச் செய்த நிறம்படைத்த – பல
மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே – சிலர்
கரங்களுமில்லை கைகுலுக்க
மண்ணில் விழுந்த மழைத்துளிகள் – அவை
மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த்தியாகம் – வெறும்
இறப்புக் கணக்கில் சேர்வதில்லை
அழிந்து போனது போலிருக்கும் – ஆயின்
அருகம் புல்லுக் கழிவேது?
பொழியும் ஒருதுளி பட்டவுடன் – அது
பொட்டென் றெழுமே அழியாது
எந்த யுகத்தில் போர்களில்லை? – அட
எந்த யுகத்தில் தோல்வியில்லை?
அந்த யுகத்தை எருவாக்கு – நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு.
– கவிப்பேரரசு வைரமுத்து.
****
ஓயாமல் ஓடிவந்து கரைதொட்டு செல்லும் அலைகள், அவள் பாதம் தொட்டு ஸ்பரிசிக்க, கணவனின் தோள் வளைவில் சாய்ந்திருந்தாள் சிம்மவாஹினி.
ஓயாமல் சப்தமிசைக்கும் ஆழியின் நீர் பரப்பில், பூரண நிலவின் கதிர்கள் பட்டுத் தெறித்து ஜொலித்துக் கொண்டிருந்தது.
கேண்டி க்ரஷ் மீண்டும், புதுப் பொலிவு பெற்றதில் பூரித்துப் போயிருந்தாள் சிம்மவாஹினி. அதிலும் இந்தியாவின் மிகச் சிறந்த சமயல் வல்லுநர் கேண்டி க்ரஷை திறந்து வைத்ததில் தலை கால் புரியவில்லை அவளுக்கு.
“இதெல்லாம் எப்போ பண்ணினே? என்கிட்டே சொல்லவே இல்லை?”
“சொல்லிட்டு பண்ணினால் அது சர்ப்ரைஸ் ஆகாது கேண்டி!”
“ம்ப்ச்! ஆனால், இந்தப் பொட்டிக் கடைக்கு இவ்வளவு பெரிய பப்ளிசிட்டி ரொம்ப அதிகம் தான்.!”
“இது பொட்டிக் கடை இல்லை. என் கேண்டியோட அடையாளம். அடையாளத்தின் முதல் செடி. இந்த செடி உலகம் முழுதும் வளர்ந்து கிளை பரப்பப் போகுது. விரல் விட்டு எண்ணவே முடியாத கிளைகளோடு, இந்த செடி ஆலமரமாய் வளர்ந்து நிற்கணும்.!”
“ஓ! இவ்வளவு பேசற யாரோ தான் கொஞ்ச நாள் முன்னே, பொட்டிக் கடைன்னு சொன்னதா ஞாபகம்.!” நமட்டுச் சிரிப்போடு சொன்னவளின் கரங்கள் கடல் நீரோடு விளையாடிக் கொண்டிருந்தது.
“அது.. இந்த அடங்காப் பிடாரியைப் பற்றி, தெரியாமல் புரியாமல் பேசினது. இப்போ இந்த அடங்காப் பிடாரி யாருன்னு எனக்கு தெரியுமே.!” கண்கள் தோளில் சாய்ந்திருந்த மனையாளை மோகமாய் மொய்த்தது. மார்டன் அவுட் ஃபிட்டில் கழுத்தில் மஞ்சள் தாலி துலங்க, அப்ஸரஸாய் அமர்ந்திருந்தாள் வாஹினி.
“இப்போ மட்டும் என்ன புரிஞ்சுதாம் என்னைப் பற்றி?” கேள்வி அவனுக்குத்தான், ஆனால், வாஹினியின் பார்வை எங்கோ இருந்தது.
“எல்லாமும் தான். என் சிமி யாருன்னு புரிஞ்சுது. அவளோட மனசு என்னன்னு புரிஞ்சுது. அவளோட அடையாளம் எதுன்னு கூடப் புரிஞ்சுது.”
“தேங்க்ஸ் ஆதன் என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு. ஆனால், கேண்டி க்ரஷ் மட்டும் என் அடையாளம் இல்லை. நீயும் தான். நான் இப்போ மிஸஸ்.ஆதன் ரித்விக். உனக்கு தெரியுமா தெரியாதா? இப்படி வளவளன்னு பேசிட்டே இருக்கிறதுக்குத்தான் என்னைக் கூட்டிட்டு வந்தியா? நான் உன் பொண்டாட்டி, பக்கத்து வீட்டு பொண்ணு ஒண்ணும் இல்லை.” எனச் சொன்னவள் அவன் பதில் சொல்லும் முன்னரே தன் இதழ்களை அவன் இதழ்களுக்குள் புதைத்திருந்தாள்.
கடற்கரையின் உப்புக்காற்றோடு, அவளின் வாசம் துளித் துளியாய் அவன் சுவாசத்திற்குள் கலந்தது. அவள் முத்தமிட்டு மூச்சு விட்டதில், பெரு மூச்சு விட்டது காற்று.
கடல்காற்று காற்று அவள் கார்குழல் கலைக்க, கடலலை அவர்களை மோதி நாணப்பட்டு, மோனம் கலைக்க விரும்பாது பின்வாங்க, தன்னோடு சேர்த்து தன்னவளை அள்ளிக் கொண்டவன், தங்களுக்கென தனிப்பட்ட முறையில் புக் செய்யப்பட்டிருந்த கடற்கரை ரெஸாட்டின் தனியறைக்கு பூப் போல் அவளை ஏந்திக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
“அப்படி என்னடி உனக்கு அவசரம்?” எனக் கேட்டாலும் அவன் வன்மையான இதழ்கள் அவள் கன்னம் உரசியது.
“ஏன் பொண்ணுக்கு ஆசையும் அவசரமும் இருக்கக் கூடாதா என்ன?!” பதில் கேள்வி கேட்டபடியே தன்னோடு சேர்த்து அவனை இறுக்கிக் கொண்டாள் அவள்.
இனி பேச்சுக்கு இங்கே நேரமில்லை. சொல்லாமல் அவள் சொல்வது அவனுக்குப் புரிந்தது.
அவளின் கலைந்த கார்கூந்தல் காட்டுக்குள் தொலைந்து, இதழ் வரிகளின் புதிர்களில் விடை தேடி, தேகம் தொட்டு மாயம் செய்து, அவளின் இதயக் கூட்டுக்குள் இடம் பிடித்திருந்தான் அவளின் ஆதன்.
கண்கள் கிறங்கி, அவன் கரங்களில் நெகிழ்ந்து உருகி, தன்னைத் தந்து அவனைப் பெற்று, அவனுக்குள் இரண்டறக் கலந்து ஈருயிர் ஓருயிராய்க் கலந்திருக்க, விழியோடு விழி நோக்கி, அவன் நெற்றி மீது முத்தம் வைத்து, அவனின் பரந்த மார்புக்குள் புதைந்து போனாள் அவனின் சிமி. போர்வையே ஆடையாய் அவன் திண்ணிய தோளில் தலை வைத்திருந்தவள், அண்ணாந்து அவன் முகம் பார்த்து,
“லவ் யூ ஆதன்! இந்த மூணு வார்த்தைக்குள்ளே என் முழுக் காதலையும் அடக்க முடிமான்னு தெரியலை. ஆனால் அதைத் தவிர எனக்கு வேற வார்த்தையும் தெரியலை.” எனச் சொன்னாள். கணவனின் கையணைவில் முகம் சிவந்து பிரகாசித்தது.
“என் சிமிக்கு வெட்கமெல்லாம் வருதே! ஹேய்! கேண்டி க்ரஷ் அழகா இருக்கே டி! இந்த அடங்காப்பிடாரியை வெட்கப்பட வச்ச பெருமை என்னையே சாரும். நீ வார்த்தையால் சொல்லாவிட்டாலும் கூட உன் காதல் எனக்கு புரியும். நீ கொடுத்த முத்ததிலேயே அதைப் புரிஞ்சுக்கிட்டேன். லவ் யூ கேண்டி க்ரஷ்! காலம் முழுசும் சண்டைப் போட்டுக்கிட்டே காதல் பண்ண நீ எனக்கு வேணும்.!” மீண்டும் அவள் இதழ்களுக்குள் தன் இரண்டாம் தேடலைத் துவங்கினான் ஆதன்.
அவன் கன்னம் பற்றி முயன்று அவன் பிடியிலிருந்து விடுபட்டவள்,
“எனக்கு ஒரு சந்தேகம், உன் அப்பா அக்கௌண்ட்டிலிருந்து எடுத்தியே அந்த பணத்தையெல்லாம் என்ன செஞ்சே?” எனக் கேட்டாள் வாஹினி.
“இது இப்போ ரொம்ப முக்கியமா? இப்போ கேட்க வேண்டிய கேள்வியா இது?” சலித்துக் கொண்டான் அவன்.
“ஆமா, இப்போ கேட்க வேண்டிய ரொம்ப முக்கியமான கேள்வி, பதில் சொல்ல வேண்டியது புருஷனா உன் கடமை!”புன்னகையுடன் சொன்னாள் அவள். பழைய வாஹினியைப் பார்த்த மகிழ்ச்சியில்,
“புலம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக கொடுத்துட்டேன். நான் தான் கொடுத்தேன்னு யாருக்கும் தெரியாது. மக்கள் கிட்டே இருந்து பிடுங்கின பணம் தானே, மக்களுக்காகவே பயன்படட்டும். வெளிநாடுகளில் கஷ்டப்படும் தமிழர்களுக்கு, தங்களுக்கான உரிமையைப் பெற இந்த அமைப்பு உதவி செய்யும். உன்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது வாஹினி.!” எனச் செய்ததைச் சொன்னான் அவன்.
‘எனக்காகவா? எனக்காக செய்திருக்கிறானா.?’ என்ற கேள்வி மனதில் எழ, அவன் செயலில் இன்பமாய் அதிர்ந்தவளுக்கு மகிழ்ச்சியில் தொண்டை அடைத்தது.
“எனக்காகவா ஆதன்?” என அவள் கேட்டதும்,
“உனக்காக மட்டும் தான் கேண்டி க்ரஷ்! இது கொஞ்சம் தான். உனக்காக இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு..!”
அவன் சொன்னதில் கண்களில் நீர் தேங்க, உள்ளம் ஒட்டுமொத்தமாய் அவன் செயலில் உருகிப் போக, அவனுக்குள் விரும்பியே தொலைந்து போனாள் அவனின் கேண்டி க்ரஷ்.
“நீயென தின்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் – நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே – என்றன்
வாயினி லேயமு தூறுதே – எண்ணம்
மாவென்ற பேர்சொலும் போழ் திலே – உயிர்த்
தீயினி லேவளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!”
அவள் காதுக்குள் பாரதியாரின் கவிதையை காதலோடு அவன் சொல்ல,
“பாரதியார் கவிதையை காப்பியடிச்சுட்டு உன்னோட சொந்தக் கவிதை மாதிரி பில்ட் அப் வேற, ஃப்ராடு!” என அவள் சிரிக்க, அவளின் புன்னகையில் தன்னைத் தொலைத்தவனின் இதயக் கூட்டிற்குள் அவள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தாள்.
தாங்கிப் பிடிக்க தகுதியான கைகள் மட்டும் இருந்தால் மட்டும் போதும், தடுமாறவோ, தடம் மாறவோ அவசியமில்லாது வாழ்க்கைப் பயணம் சுகமானதாக இருக்கும். நம்மைத் தாங்கியக் கரங்கள் நம்மை, நாம் சேர வேண்டிய இடத்தில் கொண்டு சேர்க்கும். வாஹினியைத் தாங்கிப் பிடிக்க ஆதனின் வலிமையான கரங்கள் இருக்கையில், இனி அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே நிலைத்திருக்கும்.
அவர்கள் குழந்தைப் பருவத்தில் பட்ட வேதனைகளும், வலிகளுமே, ஒருவருக்கு மற்றொருவரைப் பரிசளித்திருக்கிறது. இனியாவது அவர்கள் இணை பிரியாது, இன்பமாய் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..!
-நிறைந்தது-
கதையோடும் என்னோடும் பயணித்து ஆதரவு நல்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பும் நன்றிகளும்.
என்றும் அன்புடன்,
சுசி கிருஷ்ணன்❤
கதை ஏப்ரல் 30 வரை தளத்தில் இருக்கும் டியர்ஸ்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிருங்கள்.❤

