Loading

மாயோன் – 5

அந்த முதல் சந்திப்பு இப்போதும் அவனது இதயத்தில் இதமான ஒரு உணர்வை கொடுக்க… இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை வெளிப்பட்டது…

அந்த முதல் சந்திப்பு அவன் மனதில் காதலை உருவாக்கவில்லை எனினும் அன்றே அவன் மனதில் அவள் நினைவுகள் காதலாய்ப் பதிந்திருந்தது ஒரு விதையாக… ஆனால் அன்று அதை அவன் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை அந்த இரண்டாவது சந்திப்பில் அப்படியொரு நிலையில் விக்ரமன், ஸ்ருதியை காணாமல் போய் இருந்தால்… நிச்சயம் கடைசி வரை அவள் கொடுத்த அந்த அழகான நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்ந்திருப்பான்… அவனது மனதில் காதலாய் அவள் பதிந்திருந்ததைக் கடைசி வரை அவன் உணர்ந்திருக்க மாட்டான்..

அவளது கரத்தில் மென்மையாக இதழ் பதித்தவன்… அவளது முகத்தைப் பார்க்க… அவளோ இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்…

சிரித்தபடியே அவளது தலையை அவன் வருடி கொடுக்க… சத்யனிடம் இருந்து அழைப்பு வந்தது.

சலித்த படியே அழைப்பை ஏற்றான் விக்ரமன், “ம்ம்ம் சொல்லு சத்யா”

“சார்… அந்த மகிழன் வந்துட்டான்… கூடவே அந்த நந்தினியும் வந்து இருக்கா” என்று அவன் கூற…

“ம்ம்ம்” என்றவன், தனது மாஸ்கை எடுத்து அணிந்தபடி, ஒரு கணம் ஸ்ருதியை பார்த்தவன்… ஏக்கத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

மருத்துவமனையின் வாசலில் மகிழனுடன் சேர்ந்து நந்தினி உள்ளே வரவும்… விக்ரமன் வெளியே செல்லவும் நேரம் சரியாக இருந்தது…

விக்ரமனை நந்தினி கடந்து செல்லும் போது, விக்ரமனோ அவள் அறியாதவாறு அவளது காலை இடறி விட்டான்.. நந்தினியோ அதைக் கவனிக்காமல் கீழே விழ போக… ஒரு கையில் அவளைப் பிடித்து நிறுத்தினான் விக்ரமன்.

அவளோ எதிரில் மாஸ்க் அணிந்திருந்தவனைப் புரியாமல் பார்த்தபடி அப்படியே இருக்க… “நீங்க இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்” என்று கூறினான் விக்ரமன்.

அவனது குரல் நன்கு பரிச்சயப்பட்ட ஒருவனின் குரலாக அவளுக்குத் தோன்றவே… நந்தினி அவனைக் கூர்ந்து கவனித்தாள். அதற்குள், “தாங்க்ஸ் பிரதர்” என்று விக்ரமனிடம் கூறிய மகிழன் நந்தினியின் அருகில் வரவும்… தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நின்றாள் அவள்.

“ஒன்னும் இல்ல தானே நந்தினி” என்று மகிழன் கேட்க…

“ஒன்னும் இல்லை மாமா…” என்று கூறியவள் விக்ரமனை பார்க்க… அவனோ அவளைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டினான்… அவளோ அதிர்ந்து, ‘என்ன இது’ என்று யோசிக்கும் முன் விக்ரமன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி இருந்தான்.

செல்லும் அவனை யோசனையுடன் பார்த்தபடி நந்தினி நிற்கவும்… அவளது தோளில் கை வைத்து தன் பக்கம் திரும்பிய மகிழன், “என்ன நந்தினி… வா போகலாம்” என்று கூறி அழைக்க… அவளும் அவனுடன் சேர்ந்து, இருவருமாகக் கீர்த்தி இருக்கும் அறைக்குள் வந்தனர்.

மகிழன், கீர்த்தியின் அருகில் வந்து அவளை எழுப்பினான். கண்விழித்த கீர்த்தி, “மாமா” என்று அழைத்தபடி மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

இதனைக் கண்ட நந்தினிக்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போன்று இருந்தது.. பின்னர் அவளே, “கீர்த்தி எழுந்திரு” என்று உரக்க கூற… அவள் போட்ட சத்தத்தில் குழந்தை மிரண்டு எழுந்து அமர்ந்தது.

“எதுக்கு இப்படி மிரட்டுற… சின்னப் பொண்ணு அவள்” என்று கூறிய மகிழனின் தோள்களைக் கட்டி கொண்ட கீர்த்தி, “அப்படிச் சொல்லு மாமா… இவள் எப்போ பாரு இப்படித் தான்…” என்று புகார் கூறினாள்.

“சரிடா பாப்பா… உங்களுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்று மகிழன் கேட்க

“பரவாயில்லை மாமா நம்ம வீட்டுக்குப் போலாம்” என்று கூறினாள். அதுவே நந்தினிக்கும் சரி என்று பட்டது. உடனே டாக்டரிடம் பேசியவள், கீர்த்தியினை அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்கு வந்தாள்.

இதை அனைத்தையும் அங்கிருந்து பார்த்து விட்டு தான் விக்ரமன், மருத்துவமனையில் இருந்து சென்றான்.

கீர்த்தியின் கழுத்தில் இருந்த ‘v’ செயினை அங்கு யாரும் கவனிக்கவில்லை. கவனிக்கும் மனநிலையிலும் இல்லை.

கீர்த்தியை வீட்டில் விட்டுவிட்டு நந்தினியும், மகிழனும்… அம்பிகாவை காண மருத்துவமனையை நோக்கி வந்தனர்.

கீர்த்தியிடம் இருவருமே அம்பிகாவின் நிலை பற்றிக் கூறவில்லை. இப்போது அந்தத் தகவலை அவளுக்குக் கூறி அவளையும் காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருந்தனர். கீர்த்தியோ வீட்டிற்கு வந்தவுடன் மருந்தின் வீரியத்தில் தூங்கி இருந்ததால் அவளாலும் அம்பிகாவை பற்றி யோசிக்க முடியாமல் போனது.

மருத்துவமனையில்…

“நந்தினி அத்தைக்கு எப்போ குணம் ஆகுமாம்?” என்று மகிழன் கேட்க…

“தெரியல மாமா… தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டா மூணு மாசத்தில கூடச் சரி ஆகிடும் அப்படின்னு சொல்லுறாங்க.”

“மூணு மாசம் வரை ஹாஸ்ப்பிட்டல்ல வச்சே பார்க்கணுமா?” மகிழன் வருத்தப்பட்டு கேட்டான்.

“அவசியம் இல்லை மாமா… நாளைக்கே வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடலாம்.” என்று நந்தினி கூற…

“அத்தையைப் பார்த்துக்க வேணும்னா நர்ஸ் ஏற்பாடு பண்ணிக்கலாமா நந்தினி…”

“இல்லை மாமா நானே பார்த்துகிறேன்” என்று அவள் கூற, சரி என்ற மகிழனும் அடுத்த நாள் அம்பிகாவை ஆம்புலன்ஸ் மூலம் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அப்போது தான் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக் கண் விழித்த கீர்த்திக் கண்களைக் கசக்கியவாறே எழுந்து வெளியே வர.. மகிழனோ அம்பிகாவை கைகளில் ஏந்தியபடி உள்ளே வந்தான்..

அதனைக் கண்டு “அம்மா” என்று பதறி அவர் அருகில் வந்த கீர்த்தி அழ தொடங்கவும்.. அவளைப் பிடித்துக் கொண்டாள் நந்தினி.

“அக்கா அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று அவள் அழுதபடியே கேட்க…

“ஒன்னும் இல்லை கீர்த்தி… அம்மா சீக்கிரமே சரி ஆகிடுவாங்க” என்று கூறிய நந்தினி அவளை ஆதரவாக அணைத்து கொண்டாள்…

மெத்தையில் அம்பிகாவை படுக்க வைத்த மகிழன்… அவருக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கூட இருந்து பார்த்துக் கொண்டான்.

கீர்த்தியோ அழுது அழுது ஓய்ந்தவள் அம்பிகாவின் அருகில் அவரது கைகளைப் பற்றியபடியே அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அனைவருக்கும் சமைத்து முடித்த மகிழன்… முதலில் அம்பிகாவிற்கு அதனை அள்ளி கொடுத்தான். அதனை வாங்கி உண்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஆனால் வார்த்தை வரவில்லை.

பின்னர் அங்கு விரக்தியாக அமர்ந்திருந்த கீர்த்தியின் தலையை வருடி கொடுத்த மகிழன்… “பாப்பா வா சாப்பிடலாம்…” என்று அழைக்க, அவளோ வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

இருந்தும் மனம் கேட்காமல் இரண்டு இட்லியை தட்டில் வைத்து எடுத்து வந்து கீர்த்தியின் அருகில் அமர்ந்தான் மகிழன்.

“எனக்குப் பசிக்கல மாமா… வேண்டாம்” என்று கீர்த்திக் கூற…

மகிழனோ குழந்தைக்குக் கதை சொல்லி உணவூட்டுவது போல அவளுக்கு ஊட்டி விட்டான்.

சாப்பிட்டு முடித்தவள், “மாமா” என்று கண்ணீருடன் அழைக்க…

“ஒன்னும் இல்லை பாப்பா, எல்லாம் சரி ஆகிடும்” என்று கூறியவனின் மடியில் படுத்து கொண்டாள்.

அவனும் புன்னகையுடன் அவளது தலையை வருடி கொடுக்க, அப்படியே தூங்கி போனாள் பெண்ணவள்… அவனுக்கு எப்போதும் அவள் குழந்தை தான்…

கீர்த்தித் தூங்கியவுடன் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்த மகிழன் அடுத்து நந்தினியின் அறை கதவை தட்டினான்.

வெளியே வந்த நந்தினி, “என்ன மாமா?” என்று கேட்க…

“நீ சாப்பிட்டியா?” என்றான் மகிழன்.

“எனக்கு வெளியே கொஞ்சம் வெளியே வேலை இருக்கு மாமா, நான் போய்ட்டு வந்திடுறேன்… அங்க சாப்பிட்டுக்கிறேன்… நீ வீட்டை பார்த்துக்கோ”

“என்ன வேலை? எங்க போற?”

“மாமா ப்ளீஸ் என்கிட்ட இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க” என்றவள் அங்கிருந்து விறுவிறுவென்று வெளியே சென்றாள்.

செல்லும் அவளைப் பார்த்து சலிப்பாகத் தலையாட்டி கொண்டான் மகிழன்.

******

இங்கு நந்தினியோ ஒரு ரெஸ்டாரண்டில்… அமர்ந்து காபி அருந்தி கொண்டிருக்க… அவள் அருகில் வந்த வெயிட்டர் ஒருவன் ஒரு மொபைலை அவள் அருகில் வைத்து விட்டுச் சென்றான்.

நந்தினி அவனைப் புரியாமல் பார்க்க…. அவனோ “அதியன்” என்று மட்டும் வாயசைத்து கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

அது நந்தினிக்கு நன்கு புரிந்தது… அவனது பெயரை கேட்டு, பதட்டமும், மகிழ்ச்சியும் அவளது முகத்தில் ஒருசேர வந்து போனது. உடனே அந்த மொபைலை யாருக்கும் தெரியாமல் எடுத்தவள், ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

அவளுடைய ஒவ்வொரு செயலையும் அவளைப் பின் தொடர்ந்து வந்த விக்ரமனின் ஆட்கள் கவனித்துக் கொண்டு இருந்தனர். அதை நந்தினி கவனிக்க மறந்தாள்.

உள்ளே வந்து மொபைலை ஆன் செய்தவள்… அதில் ‘அதியன்’ என்று இருந்த எண்ணிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றான் ‘அதியன் சக்ரவர்த்தி’

“ஹாய் நந்த்” என்று அவன் உல்லாச குரலில் கூற… இவளுக்குப் பத்தி கொண்டு வந்தது.

“நான் வாழ்வா? சாவா? அப்படிங்குற நிலையில் இருக்கேன். உனக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா… இப்படிச் சிரிக்கிற?” என்று கேட்டு அவள் பொரிந்து தள்ளினாள்.

“சரி ஓகே பேபி கூல்…”

“ம்ம்ம்… கீர்த்தி நாளைக்குக் கோயம்புத்தூர் வந்திடுவாள்… எங்க அப்பா வீட்டுக்கு தான் வர சொல்லி இருக்கேன். அட்ரஸ் உனக்கு மெயில் பண்ணி இருக்கேன். அப்புறம் அவள் கிட்ட பைல் எங்க இருக்கு அப்படிங்குற இடம் கோட் வேர்டுல இருக்கும்…”

“இதுக்குப் பேசாமல் நீ பைலை கீர்த்திக் கிட்ட கொடுத்து அனுப்பலாமே”

“முட்டாள் மாதிரி பேசாத? அந்த விக்ரமன் என்னோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டு இருக்கான்… அதுவும் அவளை நம்பி அந்த பைலை கொடுக்குறது… முடியாத காரியம்… யாராவது ஐஸ் வாங்கிக் கொடுத்தால் கூடப் போதும், இவள் அப்படியே அந்த பைலை அவங்க கிட்ட தூக்கி கொடுத்திடுவாள். சரியான முட்டாள். அதுக்குத் தான் இந்தக் கோட்வேர்ட்” என்றவள் பைல் இருக்கும் அந்த இடத்தைப் பற்றியும் அதனை எப்படி எடுப்பது என்பதைப் பற்றியும் முழுவதுமாகக் கூறினாள்.

“சரி நான் பார்த்துக்கிறேன்… அந்த விக்ரமனால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக்கோ”

“ம்ம்ம் அவனால என்னை எதுவும் பண்ண முடியாது… நீங்க அங்க இருக்கும் வரை அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்று தைரியமாகக் கூறினாள் நந்தினி.

“சரி உன் தங்கச்சி போட்டோ இருந்தா அனுப்பு” என்று அதியன் கேட்க…

“எதுக்கு? நீ தான் அவளைப் பார்த்து இருக்கியே…”

“ம்ம்ம்… பார்த்து இருக்கேன் தான் ஆனால் நியூ போட்டோ ஏதாவது இருந்தால் பார்க்கலாமேன்னு கேட்டேன்” என்று அவன் கேட்கவும், அவனை நாலு நல்ல வார்த்தையில் திட்டுவிட்டு நந்தினி அழைப்பை துண்டித்தபடி, வெளியே வந்தாள்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த நந்தினி தனது காரில் ஏறி வண்டியை உயிர்ப்பிக்கப் பார்க்கவும்… காரின் முன் பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் சத்யன்.

“ஏய்” என்று நந்தினி கத்த வாயெடுக்கவும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சத்யன்.

“இந்தப் பக்கம் வா” என்றவன் தானே டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை எடுக்க… அவளோ அவனைக் கொலைவெறியுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ரொம்ப ரொமான்டிக்கா எல்லாம் பார்க்காதடி… இப்போ மாமனுக்கு ரொமான்ஸ் பண்ணுற மூடு இல்லை” என்றவன் அவளது கன்னத்தை மெல்ல கிள்ளவும்… முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நந்தினி.

“இப்போ எங்க போறோம்” என்று நந்தினி எரிச்சலாகக் கேட்க…

“உன் வீட்டுக்கு தான்டி செல்லம்…” என்று சிரித்தபடியே பதில் கூறினான் சத்யன்.

“என் வீடா?”

“பின்ன இல்லையா… லேப் தானே உன் வீடு! கோவில்! எல்லாம்… அங்க தான் போகப் போறோம்”

“நான் வரல மரியாதையா சொல்லுறேன் வண்டியை நிறுத்து”

“உன் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம்… வேணும்னா ஒரு உம்மா குடு வண்டியை நிறுத்துறேன்” என்ற சத்யனை வெட்டவா? குத்தவா? என்ற பார்வை பார்த்தவள், அதன் பிறகு அமைதியாக இருந்தாள். சத்யனிடம் பேசி ஜெயிப்பது முடியாத காரியம் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும் அதனால் வந்தது தான் இந்த அமைதி… அமைதியாக இருந்தவள் அப்படியே கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவர்களின் வண்டி விக்ரமனின் இடத்தை அடைந்திருந்தது.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக… சுற்றி இருநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் நடுவில் இந்த ஆராய்ச்சி கூடம் அமைந்திருந்தது. விக்ரமனின் கோட்டை என்றே கூறலாம்… இங்கு என்ன நிகழ்ந்தாலும் அது வெளி உலகத்திற்குச் சிறிது கூடத் தெரிய வராது… இங்கு இப்படி ஒரு ஆராய்ச்சி கூடம் இருப்பது கூட யாருக்கும் தெரியாது… வெளியாட்கள் யாராவது வந்து பார்த்தால் இது வெறும் ஒரு வீடு போன்ற அமைப்பில் தான் தெரியும். ஆனால் அதில் ஒரு பகுதி ஆராய்ச்சி கூடமாக தரை தளத்தில் அமைந்து இருந்தது… அதனால் ஆராய்ச்சி கூடத்தைச் சுற்றி மட்டும் எப்பொழுதும் இருபது நபர்கள் காவல் இருப்பார்களே தவிர வெளி பகுதி முழுக்கக் காடு போன்ற தோற்றத்தில் தான் இருக்கும்… இருப்பினும் அந்த இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தான் இருந்தது.

அந்த இடத்தைச் சுற்றி பார்த்தவள் “இங்க எதுக்கு அழைச்சிட்டு வந்த? அந்த விக்ரம் அழைச்சிட்டு வர சொன்னானா?” என்று அவள் ஆக்ரோஷமாகக் கேட்டாள்.

“அட… இதுவே நீ இப்போ தான் கண்டு பிடிக்கிறியா? விளங்கும், ஆமா பின்ன என்ன உன்கூட ரொமான்ஸ் பண்ண அழைச்சிட்டு வந்தேன்னு நெனச்சியா?” என்று நக்கலாகக் கேட்டவனின் பேச்சை பொருட்படுத்தாமல் திரும்பி தனது காரில் ஏற முற்பட்டாள் நந்தினி.

அவளது செயலை சலிப்பாகப் பார்த்தவன்… அவளது கரம் பற்றி இழுத்து வந்து ஆராய்ச்சி கூடத்திற்குள் அழைத்துச் சென்றான்.

அங்கு விக்ரமனோ அவர்களைப் பார்த்த படி படியில் இருந்து இறங்கி வந்தான்.

அவனது நெஞ்சில் தெரிந்த ‘s’ என்ற டேட்டுவே அது விக்ரமன் என்று அவளுக்கு எடுத்து கூறியது..

“நீயா?” என்று அவள் அதிர்ந்து கேட்க…

“நானே தான்… என்னமோ என்னைப் புதுசா பாக்குற மாதிரி ரொம்பத் தான் ஷாக் ஆகுற?” என்று கேட்டவன்… அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்…

அவனைக் கண்களால் எரித்துக் கொண்டிருந்த நந்தினியின் முன்னே சொடக்கிட்ட விக்ரமன், “உட்காருங்க டாக்டர்” என்று கூறி அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையைக் காட்டினான்.

அவளோ எப்போதும் போல இல்லாமல் எந்த வித பதட்டமும் இன்றி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

“ம்ம்ம்… பைல் எங்க நந்தினி?” என்று முடிந்த அளவுக்குப் பொறுமையாகவே கேட்டான் விக்ரமன்.

“என்கிட்ட எந்தப் பைலும் இல்லை… அப்படியே இருந்தாலும் அதை உன்கிட்ட கொடுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என்றவள் அவனை அழுத்தமாகப் பார்த்தபடி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

அவளது செயலை பார்த்து இதழ் வளைத்துச் சிரித்துக் கொண்ட விக்ரமன்…

“ம்ம்ம் ரொம்பத் தைரியமா வந்திருக்கப் போல… அந்தத் தைரியத்தைக் கொடுத்தது யாரு அதியனா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேட்க…

நந்தினியின் கால்கள் அப்படியே தரையில் பதிந்தது. அதனைக் கேலியாகப் பார்த்தவன், “எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறியா?” என்று அவன் கேட்க… நந்தினியின் முகம் வியர்த்து வடிந்தது.

“இங்க பாரு நந்தினி உனக்குக் கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்… அந்தப் பைலை என்கிட்ட கொடுத்துடு இல்லை… அந்தத் தேவன் சக்ரவர்த்திக் கேஸை நான் மறுபடியும் போலீஸ் காரர்களைக் கையில் எடுக்க வைப்பேன்”

“அப்படிப் பண்ணா நீ தான் மாட்டுவ? எனக்கு அதில எந்தப் பிரச்சனையும் இல்லை… எனக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்ததும் இல்லை… அதுல என் தப்பு எதுவுமே இல்லை” என்று அவள் பதட்டத்தில் பேசி கொண்டே போக, அதனைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரமன்.

“இது நல்ல கதையா இருக்கே… நான் வேணும்னா இதை விடப் பெட்டரா உனக்கு ஒரு கதை சொல்லவா? ஒரு இடத்துக்குக் கொள்ளை அடிக்க… நாலு பேரு போனாங்களாம்! அப்போ அவங்க கூட வந்த ஒருத்தன் கோணி பையைத் தொலைச்சிட்டானாம். அந்த நேரம் பார்த்து அந்த வழியில் கோணி பையோட ஒருத்தன் வந்தானாம். அவனைப் பார்த்த அந்தக் கொள்ளைக்காரங்க… அவன் கிட்ட அந்தக் கோணி பையைக் கேட்டாங்களாம் ‘ஒரு பொருளை எடுக்க வேண்டியது இருக்கு அது எடுத்து முடிச்ச உடனே இந்தக் கோணி பையை உங்க கிட்ட கொண்டு வந்து தந்திடுறோம்…’ அப்படின்னு அவங்க சொன்னாங்களாம்… ஆனால் அவன் ‘என்னால கொடுக்க முடியாது… நீங்க என்னை ஏமாத்திட்டு என் கோணி பையைத் திருடிட்டு போயிட்டால் நான் என்ன பண்ணுவேன்? வேணும்னா நானும் உங்க கூட வரேன் அந்தப் பொருளை எடுத்து முடிச்ச உடனே என் கோணிப்பையை என்கிட்ட திருப்பிக் கொடுத்துடுங்க’ அப்படின்னு சொன்னவனை வேற வழி இல்லாமல் அந்தக் கொள்ளைகாரர்களும் அழைச்சிட்டு போய் ஒரு வீட்டில இருக்கப் பணம், நகை எல்லாத்தையும் அவனோட கோணிப்பையில் நிரப்பிட்டு வந்துட்டாங்களாம்… அதற்கு அப்புறம் திருடுன பணத்தில் கொஞ்சத்தை எடுத்து அந்தக் கோணிப்பை காரனுக்கு அவங்க கொடுக்க… அது வேண்டாம் அப்படின்னு சொன்ன அவன்… தன்னோட கோணிப்பையை மட்டும் தூக்கிட்டு போயிட்டான்… ஆனால் கொள்ளைகாரர்களைப் புடிச்ச அந்தப் போலீஸ்… திருட்டுக்கு உடந்தை அப்படின்னு சொல்லி அந்தக் கோணிக்காரனையும் புடிச்சி ஜெயில்ல போட்டுட்டாங்களாம்… இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது” என்று விக்ரமன் கேட்க… அவளோ புரியாமல் முழித்தாள்.

“புரியலையா? அவன் தான் திருடினான்! நான் கோணிப்பையை வச்சிட்டுக் கூடதான் நின்னேன் அப்படின்னு சொன்னால் குழந்தை கூட நம்பாது… போலிஸ் எப்படி நம்புவாங்க? அது போலத் தான் இதுவும்… குத்தினவனுக்கு மட்டும் தான் தண்டனை அப்படின்னு சொல்லுறதுக்கு இது ஒன்னும் கொலை வழக்கு இல்ல… இங்க கூட இருந்தவனுக்கும் தண்டனை இருக்கு… பிகாஸ் இட்ஸ் க்ரைம்”

“ஆனால் இது எல்லாம் நீ தானே பண்ண… அப்புறம் எப்படி எனக்குத் தண்டனை கிடைக்கும்” என்று நந்தினி புரியாமல் கேட்க…

“உண்மை தான் எல்லாமே நான் தான் பண்ணேன்… அந்த 100 பேரை தீ வச்சி அழிச்சது கூட நான் தான்… அப்படித் தானே நீ சொல்ல வர… ஆனால் ஆதாரம் இல்லையேமா ”

“என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கும்” என்று நந்தினி உரக்க கூற…

“உன் ஆதாரத்தை எல்லாம் வச்சி என்னை ஒன்னும் பண்ண முடியாது அது உனக்கும் ரொம்ப நல்லாவே தெரியும்… என் பொறுமையைச் சோதிக்காமல் அந்த பைல் எங்கன்னு சொல்லிடு”

“சத்தியமா சொல்ல மாட்டேன்… என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்… அது யாருக்கிட்ட போகணுமோ அவங்க கிட்ட போய்ச் சேர்ந்திடும்… உன்னால ஒன்னும் பண்ண முடியாது விக்ரமன்… நீ முடிஞ்ச… நீ தோத்துட்ட விக்ரமன்… நான் ஜெயிச்சிட்டேன்… தேவநந்தினி இந்த விக்ரமனை ஜெயிச்சிட்டாள்” என்றவள் நொடியில் மேசையில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து அவனது கழுத்தில் குத்த போக அவனோ அவளது கையைத் தடுத்துப் பிடித்துக் கொண்டான்.

அதனைப் பார்த்த சத்யன், “ஏய்” என்று கூறியவாறு அவள் அருகில் வர பார்க்க… அவனைப் பார்வையாலேயே விலக்கி நிறுத்தினான் விக்ரமன். ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது போல இருந்தது அந்தப் பார்வை…

“பயந்துட்டேன்னு நெனச்சியா? நான் இப்பவும் அதே தேவநந்தினி தான்டா” என்றவளை பார்த்து ஏளனமாகச் சிரித்தவன்… அடுத்த நொடியே அவளது கையில் இருந்த கத்தியை பிடிங்கி அவளது கழுத்தில் வைத்தவன்… அவளது முகத்தை அருகில் இருந்த மேசையில் வைத்து அழுத்தினான்.

நந்தினியோ அவனை அனல் தெறிக்கப் பார்க்க… விக்ரமனோ “நான் எப்பவும் அதே விக்ரமன் தான்டி… என் கிட்ட விளையாட நினைக்காத… நான் திரும்ப விளையாட ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட” என்றான்.

தளிர் மலரவள்! தரை தழுவ புடவை கட்டி, தன் கார்மேக கூந்தலை காற்றில் அலைபாயவிட்டபடி, அந்த ஜன்னலின் வழியே தெரிந்த, செந்நிற வானத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து, நடந்து வந்த அபிமன்யு… அவளது முதுகு புறத்தில் ஒட்டியவாறே உரசி நிற்க… பெண்ணவள் அதிர்ந்து திரும்பினாள்.

தன்னை நோக்கி திரும்பியவளின் மீது தன் முழுதேகமும் உரச ஒட்டி நின்றவன், ஒரு கையால் அவளது இடையை அழுத்தமாக பற்றித் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான். அவனது செயலில் பெண்ணவளின் கண்கள் தானாக மூடி கொண்டது.

அவளது கழுத்து வளைவில்,  மேலும்… கீழுமாக அவனது விரல்கள் உரச… சிலிர்த்து நின்றவள் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

கழுத்து வளைவில் பயணித்த அவனது விரல்கள் சற்றுக் கீழிறங்கிய தருணம்… தன்னை மறந்து விழித்துக் கொண்டாள் பெண்ணவள்… அவளது கண்களில் தெரிந்த பயத்தை உணர்ந்தவனின் கரம் மீண்டும் மேலேறி அவளது நெற்றியில் படர தொடங்கியது.

மீண்டும் அவள் சம்மதமாகக் கண்களை மூட… அவளது முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினான் அபிமன்யு.

மூடிய விழிகளிலும்… அவளது கருவிழிகள் அச்சத்தில் அங்கும் இங்கும் அசைந்தாட… இமை வழியே அதனைக் கண்டு கொண்டவன்… மெல்ல தன் இதழ் கொண்டு அதற்கு அமைதி அளித்தான் மென்மையிலும் மென்மையாக…

இமைகளில் அவனது இதழின் குளிர்ந்து தீண்டலை உணர்ந்தவளின் விழிகள் சற்று அமைதியடைய… அடுத்த முத்தம் வெட்கத்தால் சிவந்திருந்த அவளது நாசிக்குக் கிடைத்தது.

அவனது ஒவ்வொரு தீண்டலுக்கும் பெண்ணவளின் உதடுகள் மொழியில்லா முனகலை வெளிப்படுத்த… அதனை உணர்ந்து இறுதியாக அவன் இளைப்பாற இடம் தேடியது இதழ்களில் தான்… அதுவும் அவனது இதழ் தொடுகைக்கு ஏங்கி துடிக்க… துடிக்கும் அவளது இதழ்களில் துணிந்தவனின் முதல் முத்தம், மெய்யான உணர்வில்…
பொய்யான பிம்பம்…

இதழ்களில் இளைப்பாறியவனது கரம் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த அவளது கரத்தை அழுந்த பற்றி விடுவித்துத் தன் மார்பில் அதற்கு இடமளித்தது…

அவளது இதழ்களில் இருந்து தன் இதழை பிரித்தெடுத்தவன்…

இதழ் கொண்டு மெல்ல அவள் காது மடல் வருடி “நீ ரொம்ப மோசம்டி… இப்படி எல்லாமா என்னை நெனச்சு பார்ப்ப?” என்று அவன் கேட்க…

தடுமாறி போனவள்… தவித்துப் போய்த் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

மதிமயக்கும் மாலை பொழுதில்… சிந்தை எங்கும் அவன் யோசனையும்… மேனி எங்கும் அவன் வாசனையும்… கனவுலகமோ? இருக்கலாம்!!! ஆனால் அவனை அவள் உணர்ந்தது உண்மை…

“ச்சே என்னது இது இப்படி எல்லாம் கனவு வருது…” என்று தன் தலையை உலுக்கி கொண்ட கீர்த்தி எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

*******

நந்தினியோ அவனை அனல் தெறிக்கப் பார்க்க… விக்ரமனோ, “என் கிட்ட விளையாட நினைக்காத… நான் திரும்ப விளையாட ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட” என்றவன் அவளது கழுத்தில் இருந்த கத்தியில் அழுத்தம் கொடுக்க, அப்போதும் பெண்ணவள் பயந்தாள் இல்லை…

‘உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்’ என்பது போல இருந்தது நந்தினியின் பார்வை…

“நான் செத்தாலும் உன்னைத் தோற்கடிப்பேன்” என்று நந்தினி வன்மமாகக் கூற…

அவளைப் பார்த்து இதழ்களை வளைத்து ஏளனமாகச் சிரித்த விக்ரமன், “குட் லக்” என்று கூறியவன் கத்தியை அவளது கழுத்தில் இறக்க பார்க்க…

அப்போது சரியாக விக்ரமனுக்கு அழைப்பு வந்தது… சலித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தான்…

மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வரவே “ஷிட்” என்றவன் நந்தினியை விடுத்து, எரிச்சலாக அழைப்பை ஏற்றுப் பேச தொடங்கினான்… பேசினான்! இல்லை கத்தினான்! என்று தான் கூற வேண்டும்…

“போன் கட் பண்ணுறாங்க அப்படின்னா திரும்பக் கூப்பிட கூடாது அப்படிங்குற பேசிக் நாலேஜ் கூட உனக்கு இல்லை… இப்போ அப்படி என்ன தலை போற காரியத்தைச் சொல்ல நீ எனக்குப் போன் பண்ணின?” என்று அவன் கோபத்தில் வார்த்தைகளை அமிலமாக அள்ளித் தெளிக்க… எதிர் முனையில் இருந்தவனோ தயங்கியபடியே தான் அழைத்த விவரத்தை கூறினான்.

“இன்னிக்கு நைட்டா கண்டிப்பா என்னால முடியாது”

“இல்லை சார்… வேற வழி இல்லாமல் தான்… அவங்க இதை உங்க கிட்ட இதை ஒரு ரெக்வெஸ்ட்டா கேக்குறாங்க”

“ம்ம்ம் ஓகே வரேன்னு சொல்லு…”

“சார் அப்படியே நாளைக்குச் சென்னை கிளம்பனும்…” என்று எதிர்முனையில் பேசியவன் கூற…

“சரிடா ஏற்பாடு பண்ணி தொலை வரேன். மறுபடியும் போன் பண்ணி என் உயிரை வாங்காத” என்று கோபமாகக் கூறிய விக்ரமன் அழைப்பை துண்டித்தான்.

போன் பேசிவிட்டு அவன் திரும்ப… “யாரு சார்?” என்று கேட்டான் சத்யன்.

“அது ஒன்னும் இல்லை…” என்றவன் அப்போது தான் கீழே குனிந்து நந்தினியை பார்க்க… அங்கு அவள் இருந்த சுவடே தெரியவில்லை…

“டேய் அவள் எங்கடா?” என்று விக்ரமன் கேட்க…

“அய்யோ சார் இங்க தானே இருந்தாள்” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க… வெளியே நந்தினியின் கார் சத்தம் கேட்டது.

“ஓ… நோ…” என்ற சத்யன் விரைந்து வெளியே ஓட… வெளிப்படையாகத் தலையில் அடித்துக் கொண்டான் விக்ரமன்.

விக்ரமன் போன் பேசிய நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வெளியே வந்த நந்தினி, தனது காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.

சத்யனோ அங்கிருந்த அடியாட்களை நோக்கி, “அவளைப் பிடிங்கடா” என்று கத்த… அவளோ எதிரில் வந்த அனைவரையும் காரால் மோதி தள்ளியபடி அங்கிருந்து வண்டியை ஓட்டி சென்றாள்.

சத்யனோ செல்லும் அவளது வாகனத்தைப் பார்த்தபடி,  “ஏய்” என்று கத்திக்கொண்டு இருக்க.. சாவகாசமாக அவனது தோளில் கைபோட்டு நின்றான் விக்ரமன்.

“கூல்… அவளால இன்னிக்கு நம்ம கிட்ட இருந்து தப்பிக்க முடியாது… என்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இல்லை… இனி அவள் உயிரோட இருக்கக் கூடாது, முடிச்சிட வேண்டியது தான்!” என்று கூறிய விக்ரமன் தன்னுடைய காரில் அவளைப் பின்தொடர்ந்து சென்றான், கூடவே சத்யனும் வந்தான்.

நந்தினியின் கார் புயல் வேகத்தில் அந்தக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

காரில் சென்று கொண்டிருந்த… நந்தினிக்குப் பயத்தில் முகம் எல்லாம் வியர்த்து வடிய தொடங்கியது. மூச்சு விடக் கூட முடியாத அளவுக்குச் சாவு அவளைப் பின் தொடந்து வந்து கொண்டிருந்தது… பயத்தில் பின்னால் பார்த்தபடியே வண்டியை ஓட்டி கொண்டு வந்தாள்.

உடனே ஏதோ யோசனை தோன்ற, தட்டு தடுமாறி… காரில் இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்து கீர்த்திக்கு அழைப்பு விடுத்தாள்.

கீர்த்தியோ குளித்துக் கொண்டிருந்ததால் அவள் அழைப்பை ஏற்கவில்லை. “கீர்த்திப் போனை எடுடி” என்று புலம்பிய நந்தினி மீண்டும் கீர்த்திக்கு அழைப்பு விடுத்தாள்.

அப்போது தான் குளித்துவிட்டு வெளியே வந்த கீர்த்தி அழைப்புச் சத்தத்தை உணர்ந்து அழைப்பை ஏற்றாள்.

“சொல்லு அக்கா” என்று அவள் கூற…

“கீர்த்தி… கீர்த்தி… தேங்க் காட்… நீ போன் எடுத்துட்ட” என்று பெரும் மூச்சு விட்டு நந்தினி பேச.

“என்ன ஆச்சு அக்கா… எதுக்கு இப்போ நீ இவ்ளோ பதட்டமா பேசுற”

“அதெல்லாம் நான் அப்புறம் சொல்லுறேன். இப்போ ப்ளீஸ் நீ என்னோட ரூம்க்கு போ”

“எதுக்கு அக்கா… நான் இப்போ தான் குளிச்சேன், இன்னும் ட்ரெஸ் கூட மாத்தல… கொஞ்சம் நேரம் இரு” என்ற கீர்த்திப் போனை டேபிளில் வைத்து விட்டுக் கப்போர்டை திறந்து ஆடையைத் தேர்வு செய்யத் தொடங்கி இருந்தாள்.

“கீர்த்தி… கீர்த்தி… அதுக்கு எல்லாம் நேரம் இல்லடி… அய்யோ கடவுளே… இவளை வச்சிட்டு… கீர்த்தி அடியே…” என்று போனில் தனியே கத்தி கொண்டு இருந்தாள் நந்தினி.

கீர்த்தியோ இளம் சிவப்பு வண்ண சுடிதார் அணிந்தபடி கண்ணாடியில் தன்னை அழகு பார்த்தவள்… அடுத்த நொடியே மீண்டும் போனை எடுத்து தன் காதில் வைத்தாள் “அக்கா இப்போ சொல்லு அக்கா ட்ரெஸ் மாத்திட்டேன்”

நந்தினியோ பதட்டமாகப் பின்னால் திருப்பிப் பார்த்தபடியே வண்டியை ஓட்டியவள்… கீர்த்தி வருவதற்குள்… அழைப்பை ப்ளூ டூத்தில் கனெக்ட் செய்து ஒயர்லஸ் இயர் போனை காதில் மாட்டி கொண்டாள்.

“கீர்த்தி… கீர்த்தி…”

“அக்கா கேட்குதா? இப்போ சொல்லு”

“ம்ம்ம் கேட்குது… இங்க பாரு கீர்த்தி விளையாட்டுத் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நான் சொல்லுறதை ஒரு அஞ்சு நிமிஷம் பொறுமையா கேளு” என்ற நந்தினிக்கு இன்னும் பதட்டம் குறையவில்லை…

“சரி அக்கா நீ பதட்டப்படாமல் என்ன விஷயம்ன்னு சொல்லு”

“முதலில் என் ரூம்க்கு போ”

“சரி அக்கா… உன் ரூம்க்கு வந்துட்டேன், ரூம் கிளீன் பண்ண எல்லாம் சொல்ல மாட்ட தானே?” என்று அவள் சிறுபிள்ளையாய் பேச… நந்தினியோ ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“அதெல்லாம் இல்லடி… கொஞ்சம் சொல்லுறதை மட்டும் அமைதியா கேளு… இப்படிப் பேசி பேசியே என்னைக் கொல்லாதடி… அங்க மூலையில் லேப் டோர் தெரியுதா?” என்று நந்தினி கேட்க… திருதிருவென முழித்தாள் கீர்த்தி.

“இங்க எங்க அக்கா இருக்கு” என்று கீர்த்திப் புரியாமல் கேட்க.

“கீர்த்தி ப்ளீஸ். என் நிலைமை புரியாமல் நீயும் என்னைச் சாவடிக்காதடி… ரைட் சைட் கார்னர்ல பாரு. கிரீன் கலர் கதவு… பக்கத்துல புக் செல்ப் கூட இருக்கும் பாரு…”

“ம்ம்ம் ஆமா… அக்கா கண்டு பிடிச்சிட்டேன்… நீ இதுவரை என்னை உன் ரூமுக்குள்ள விட்டதே இல்லல்ல அது தான் எனக்குத் தெரியல…” என்ற கீர்த்தித் தன் அறியாமைக்கு விளக்கம் கொடுத்து கொண்டாள். பின்னர் நந்தினியின் சொல்படி அந்த லேப் டோரை திறக்க முயன்றாள். ஆனால் அதைத் திறக்க முடியவில்லை.

“கீர்த்தி என்ன ஆச்சு உள்ள போனியா இல்லையா?”

“இல்லை அக்கா டோர் ஓப்பன் ஆகலை”

“அடியே!!! அதுல பாஸ்வேர்ட் போட்டால் தான் டோர் ஓப்பன் ஆகும்…” என்ற நந்தினி பாஸ்வேர்டை கூற… அந்தக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனாள் கீர்த்தி… முற்றிலும் வேறு ஒரு உலகம் போன்று இருந்தது அந்த ஆய்வு கூடம்.

“அக்கா அழகா இருக்கு அக்கா… நம்ம வீட்டுக்குள்ள இப்படி ஒரு இடமா?” என்று கீர்த்திப் பிரமிப்பாய் கேட்டாள்.

“கீர்த்தி ப்ளீஸ்… இது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… முதலில் போய் அங்க இருக்கப் பீரோவை ஓப்பன் பண்ணு…” என்று நந்தினி கட்டளை இட…

“அக்கா இதுக்கும் அதே பாஸ்வேர்ட் தானா?” என்று கேட்டாள் கீர்த்தி.

“ஆமா அதே தான்! ஓப்பன் பண்ணு” என்று நந்தினி கூற… கீர்த்தியும் அதனை ஓப்பன் செய்தாள்.

“அக்கா ஓப்பன் பண்ணிட்டேன் உள்ள முழுக்க… பைல் தான் இருக்கு”

“ம்ம்ம் அதோட உள் ரேக்ல ஒரே ஒரு பைல் இருக்கும் பாரு எல்லோ கலர்ல”

“ம்ம்ம் இருக்கு அக்கா எடுத்துட்டேன் இதுல என்ன இருக்கு” என்ற கீர்த்தி அதனைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“அது உனக்குத் தேவை இல்லை… அதுல, ‘தேவன் சக்ரவர்த்தி’ அப்படின்னு பேரு இருக்கா பாரு…”

“ஓ இருக்கு அக்கா… அது யாரு உங்க ஓனரா?”

“அது எதுக்கு உனக்கு? இப்போ அந்தப் பைலை எடுத்துட்டு வெளியே வா…”

“ம்ம் வந்துட்டேன் அக்கா”

“என் கட்டிலில் ஒரு பை இருக்கும் பாரு… அதுக்குள்ள இதை வச்சிக்கோ…”

“சரி அக்கா” என்ற கீர்த்திப் பையினைத் திறந்து பார்க்க… அதில் சில பொருட்கள் இருந்தது… அதிலிருந்த ஒரு மெட்டல் க்யூப்பை பார்த்தவள்… “ஐ அக்கா இந்த க்யூப் அழகா இருக்கு… நிறைய நம்பர் எல்லாம் போட்டு இருக்கு இதை நான் வச்சிக்கவா?” என்று கீர்த்திக் கேட்க.. தலையில் அடித்துக் கொண்டாள் நந்தினி.

“அதையெல்லாம் அந்தப் பைக்குள்ளேயே வை… மாமா எங்க?”

“மாமா வீட்டுல இல்லை அக்கா எங்கேயோ வெளியே போயிட்டாரு போல”

“நல்லதா போச்சு… அந்தப் பையில் நீ கோயம்புத்தூர் போறதுக்கு டிக்கெட் வச்சி இருக்கேன்… அப்புறம் கொஞ்சம் பணம் இருக்கு… அப்புறம் அந்த டிக்கெட் கூடவே ஒருத்தரோட நம்பர் இருக்கும் அவர் பேரு அதியன்… நீ அங்க வந்த பிறகு அவருக்குப் போன் பண்ணு, மீதியை எல்லாம் அவரு பாத்துப்பாரு” என்று அவள் கூற… கீர்த்தியோ உறைந்து போய் நின்றாள்.

“கீர்த்திப் பேசு லைனில இருக்கியா? பேசுடி” என்று நந்தினி பதட்டமாகி கேட்க…

“ம்ம்ம் இருக்கேன்… ஆனால் என்னால எல்லாம் எங்கேயும் போக முடியாது” என்றவள் அப்படியே அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

“உனக்குப் புரியுதா? இல்லையாடி… நாம இப்போ உயிர் போற பிரச்சனையில இருக்கோம்… கொஞ்சம் விட்டால் கூட அந்த விக்ரமன் நம்ம எல்லாரையும் கொன்னுடுவான்… அவன் எவ்ளோ மோசமானவன்னு உனக்குத் தெரியாது… அவன் நம்ம எல்லாரையும் கொன்னுடுவான்”

“யாரு அக்கா அவன்?” என்று கீர்த்தி ஏதோ பேய் கதை கேட்பதை போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்க…

“அதெல்லாம் உனக்குச் சொன்னாலும் புரியாது கீர்த்தி… நான் சொன்னா கேளு நீ இப்பவே இங்க இருந்து கிளம்பு”

“அக்கா நான் மட்டுமா? தனியாவா? எனக்குத் தனியா எங்கேயும் போய்ப் பழக்கம் இல்லையே அக்கா… நான் எப்படி? எனக்குப் பயமா இருக்கு…” என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“இதுக்குத் தான் முதலில் இருந்தே உன்கிட்ட சொன்னேன். எப்போ பாரு மாமா… மாமான்னு அவரு கூடவே கங்காரு குட்டி மாதிரி தொத்திட்டு அலைஞ்சா இப்படித் தான். இப்போ பாரு… எல்லாம் என் தலை எழுத்து… என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ இப்பவே இங்க இருந்து கிளம்பி கோயம்புத்தூர் போகனும்…”

“அக்கா… அப்போ அம்மா? அவங்களை யாரு பார்த்துப்பா?”

“நான் பாத்துகிறேன்டி… நீ முதலில் நான் சொன்னதைச் செய்” என்ற நந்தினி விக்ரமனது இடத்தைத் தாண்டி இருந்தாள்.

இங்கு நந்தினி, சத்யனுடன் செல்வதைப் பார்த்து நந்தினியை பின்தொடர்ந்து வந்த மகிழன் வண்டி பஞ்சராகிவிட… அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

வழியில் பைக்கில் மகிழன் நிற்பதை பார்த்த நந்தினி, “மாமா…” என்று முணுமுணுத்தவாறே அவன் அருகில் வந்து வண்டியை நிறுத்தினாள்.

“அக்கா… மாமாவா? அவரு எங்க அங்க?” என்று கீர்த்திக் கேட்க..

“தெரியலைடி இரு” என்ற நந்தினி அழைப்பை துண்டிக்க மறந்து விட்டாள்.

மகிழனோ பஞ்சர் ஆன தனது வண்டியை பார்த்துக் கொண்டிருக்க… அவன் அருகில் வந்த நந்தினி “மாமா நீ எங்க இங்க?” என்று பதட்டமாகி கேட்க…

“நந்தினி… நீ வந்துட்டியா? உனக்கு ஒன்னும் இல்லையே?” என்று அவன் பதட்டத்தில் கேட்க…

“எனக்கு ஒன்னும் இல்லை மாமா… நீ எப்படி இங்க வந்த? எதுக்கு வந்த?” என்றவளின் கண்கள் பதட்டமாகப் பின்னாலேயே பார்த்துக் கொண்டு இருந்தது.

“நீ அவன் கூட வண்டியில போறதை பார்த்தேன்… ஏதோ சரி இல்லன்னு தோணிச்சு… அது தான் உன்னைப் பாலோ பண்ணிட்டு வந்தேன்… வந்த இடத்தில் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு… அது தான் என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் அப்படியே நின்னுட்டேன்”

“சரி மாமா நீ என்கூட வா… இங்க நிற்க வேண்டாம்… நம்ம போயிடலாம்” என்ற நந்தினி பயத்துடன் அவனது கரம் பற்றிக் கார் அருகில் அழைத்து வர…

“நந்தினி” என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் வந்த திசை பக்கம் அவள் மிரண்டு போய்த் திரும்ப… சரியாக அவளைத் துப்பாக்கியில் குறி வைத்தபடி காரில் இருந்து இறங்கி நின்றான் விக்ரமன்…

அவனைக் கண்டு பதட்டம் அடைத்த நந்தினி, “மாமா நீ இங்க இருந்து போ… உனக்கு ஏதாவது ஆகிடும்… நீ போ…” என்று மகிழனை போகச் சொல்ல… மகிழனுக்கோ ஒன்றுமே புரியவில்லை…

“என்ன நந்தினி யாரு இவங்க எல்லாம்” என்று மகிழன் கேட்க…

“அய்யோ மாமா இவன் தான் அந்த விக்ரமன்… கண்டிப்பா நம்ம எல்லாரையும் கொன்னுடுவான்” என்று நந்தினி கூறியது. போனில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தியின் காதிலும் நன்றாக விழுந்தது.

“இவரா? ஆனால் இவரை வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்று அவன் கூறவும்… ஒரு தோட்டா நந்தினியை நோக்கி பாய்ந்தது. இருவரும் அதில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

“நந்தினி… யூ லாஸ்ட்” என்று கூறிச் சத்தமாகச் சிரித்த விக்ரமன், நந்தினியை நோக்கி மீண்டும் குறி வைக்க… அதனைப் பார்த்துக் கொண்டு இருந்த மகிழனுக்கு இதயம் நின்று துடித்தது.

துப்பாக்கி சத்தம் போனில் கேட்க… பயந்து போன கீர்த்தி, “மாமா… அக்கா…” என்று அலற துவங்கினாள்.

விக்ரமன் நந்தினியை நோக்கி சுட்டவுடன்… நந்தினியை தோட்டா துளைக்கும் முன் அவளுக்கு முன்னால் வந்து விழுந்து, அவள் மீது பாய வேண்டிய தோட்டாவை தன் நெஞ்சில் வாங்கிக் கொண்டான் மகிழன். நந்தினியின் மீது பாய வேண்டிய தோட்டா… இடையில் வந்து விழுந்த மகிழனின் நெஞ்சை துளைத்தது. தோட்டா அவனது நெஞ்சை துளைக்க… நந்தினியின் முகம் முழுவதும் உதிரம் தெறித்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்த மகிழனை இறுதியாக ஒரு முறை நந்தினியின் மடி, தாங்கி கொண்டது… மூச்சுக்கு போராடியபடி இருந்த மகிழனது இதழ்கள், “கண்ணம்மா” என்று நந்தினியை அழைக்க… நந்தினியின் விழியோரம் தன்னிச்சையாக ஒரு துளி கண்ணீர் வழிந்து அவனது கன்னம் நிறைத்தது.

உன் மடியில் வாழும் வரத்தை தான் அந்த இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை…

உன் மடியில் சாகும் வரத்தையாவது எனக்குக் கொடுத்தானே…

அந்த மகிழ்ச்சியில் நிம்மதியாக உன்னை விட்டுச் செல்கிறேன்…

என் இறுதி சுவாசம் உள்ளவரை, “என் காதல் நீயே என் கண்ணம்மா”

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்