விழியால் தொட்ட அழகே 1

Loading

அத்தியாயம் – 1

“கெட்டி மேளம் கெட்டி மேளம்,” என்று கூறியதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி கைகையும் காட்டிய புரோகிதர், பட்டு வேஷ்டி சட்டையில் நிமிர்வாய் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த மணமகனின் கரத்தில் தாலியை கொடுத்து விட்டு,… “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனாகண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று கூற, புரோகிதரின் இந்த மந்திரத்தை தொடர்ந்தே தனதருகில் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கி கொண்டான் அவன் ரிஷிமித்ரன்,…

தலைகுனிந்து அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டவளின் விழிகளிலிருந்து விழுந்த இரு சொட்டு கண்ணீர் அவனது மணிக்கட்டில் வந்து விழவும் தான், அவள் ஏதோ இக்கட்டில் இருப்பதாய் எடுத்து காட்டியது, தாலி கட்டும் நேரத்தில் பல பெண்களுக்கு கண்ணீர் வர தான் செய்யும், ஆனால் அது சந்தோசத்தில் தன் மனதை கொள்ளைக்கொண்டவனை கைபிடித்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியினால் வரும், ஆனால் இம்மணமகளுக்கோ தன் விருப்பம் இலலாமல் ஒருவனின் கையால் தன் கழுத்தில் தாலி ஏறுகிறதே என்ற வலியிலும் விரக்தியிலும் கண்ணீர் வடிந்தது, அவள் நித்யஸ்ரீ நம் கதையின் நாயகி,…

அவளது கண்ணீரை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, சின்ன முறுவலுடன் மூன்றாவது முடிச்சையும் ஸ்ட்ராங்காக முடிந்தவன், அவள் நெற்றி வகிட்டிலும், அவன் கட்டிய மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து விட்டான் புரோகிதர் கூறியது போலவே,…

அவள் தளிர் கரத்தை பற்றி அவளுடன் சேர்ந்து அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அவளது பொன் காலில் மெட்டியை அணிவிக்கும் ஒவ்வொரு சடங்கிலும் ரிஷிமித்ரனின் இதழ் புன்னகை மாறாமல் அழகாக முறுவழித்து கொண்டிருந்து, ஆனால் நித்யஸ்ரீயின் முகத்திலோ அத்தனை கலக்கம், பேருக்கு கூட அவள் இதழில் புன்னகை வரவில்லை, ரோபோ போல் அனைத்தையும் இயந்திரதனமாய் செய்தாலும், மனம் நீ வேறொருவனின் மனைவியாகிவிட்டாய் என்று கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது,…

பெரிய வீட்டு கல்யாணம் போல் சுற்றி போலீஸ்காரர்கள் கூட்டம், கோர்ட்சூட் போட்டவர்களின் கூட்டம் என்று எங்கு பார்க்கிலும் பெரிய பெரிய தலைகளாக தான் தெரிந்தது, இருக்காதா பின்ன இங்கு நடந்து கொண்டிருப்பது எஸ்பி ரிஷிமித்ரனின் கல்யாணமாயிற்றே, அதனால் தான் அவன் காவல் துறையை சேர்ந்த மொத்த நபரும் வருகை தந்திருந்தனர்,….

எப்போதும் காக்கி உடையில் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு, அவனின் தடித்த உதட்டில் சிரிப்பு வருமா என்ற சந்தேகத்துடன் வலம் வந்தவன், இன்று பட்டு வேஷ்டி சட்டையில் இதழில் புன்னகை தவழ, முகத்தில் சாந்தம் குடிக்கொண்டு அக்மார்க் மணமகனின் தோரணையில் அமர்ந்திருந்தவனை பார்த்து அவர்களுக்கு வியப்பிலும் வியப்பு தான்,…

ஆஜாகுபாவான அவனது கட்டுடலுக்கு காக்கி உடை எவ்வளவு கச்சிதமாக பொருந்திருக்குமோ, அதை விட மிகவும் கனகச்சிதமாய் பொறுத்திருந்து அவன் அணிந்திருந்த பட்டுவேஷ்டி சட்டை,…

திருமணம் முடிந்த தருவாயில் உரிமையுடன் மனைவியின் கரத்தை பற்றிக் கொண்டு, ரிஷிமித்ரன் முதலில் ஆசீர்வாதம் வாங்க சென்றது தன் தாத்தா பாட்டி இருவரிடமும் தான்,…

தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்திருந்த அவனை வளர்த்து ஆளாக்கியது எல்லாம் அவன் தந்தையை பெற்றவர்களான அவனது பாட்டியும் தாத்தாவும் தான், அவனுக்கு இருக்கும் உறவுகளும் அவர்கள் மட்டுமே, தாயை அவன் பிறந்ததிலிருந்தே பார்த்தில்லை, அதனால் தாயின் பாசத்தையும் அவன் பெறவில்லை, தந்தை அவனது பத்து வயதிலேயே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார், தாய் தந்தையின் பாசத்தை இழந்தவனுக்கு அவனின் பாட்டி செவ்வந்தியும், தாத்தா தர்மதுரையும் தான் அவனுக்கு தங்களால் முடிந்தளவிற்கு பாசத்தை கொட்டி வளர்த்தனர்,…

தங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற, பேரனையும் அவனது மனைவியையும் மனதார வாழ்த்தி ஆசீர்வதித்தவர்கள், அவர்கள் நெற்றியில் முத்தமிட்டு விலகினர்,….

நித்யஸ்ரீயின் தாயான செந்தூரவள்ளி, மகளையும் மருமகளையும் ஆனந்த கண்ணீருடன் நிறைவான மனதுடன் ஆசீர்வாதம் செய்தார்,…

“வாழ்த்துக்கள்டா மச்சான்” ரிஷியை அணைத்து வாழ்த்து கூறினான் வருணேஷ், முன்னால் நண்பன், தற்போது ரிஷியின் மச்சினன், நித்யஸ்ரீயின் உடன் பிறந்த அண்ணன்,……

“ஸ்ரீ குட்டி கங்கிராட்ஸ்டா, உன்னை இப்படி பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” ஆனந்த கண்ணீருடன் தங்கையை அணைத்துக் கொண்டான் வருணேஷ், நித்யா எந்த எதிர்வினையையும் காட்டவில்லை, இரும்பை விழுங்கியது போல் நின்றாள், பின்னே திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க, அவளை கட்டாயப்படுத்தி எமோஷனலாய் மிரட்டி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது அவள் தமையனும் தாயும் தானே, அதனால் அவர்களின் மீது கோபம் நிறையவே இருந்தது,…

வந்திருந்த விருந்தினர்கள் ரிஷியையும் நித்யாவையும் வாழ்த்தி பரிசு பொருட்களை கொடுத்து விட்டு உணவருந்த சென்றனர், அடுத்த இரண்டு மணி நேரத்திலெல்லாம் கூட்டம் குறைந்து விட, மணமக்களையும் சாப்பிட வைத்து விட்டு, வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்கள்,…

நித்யா தன் தாயையும் தமையனையும் முகம் கொடுத்து பார்க்கவில்லை, மகளை பிரிய போகிற கவலையில் தாய் வடித்த கண்ணீரையும் அவள் கண்டுகொள்ளவில்லை, தமையன் கூறிய அன்பான வார்த்தைகளையும் செவி சாய்த்து கேட்கவில்லை, தலையை கொஞ்சமும் நிமிர்த்தி அவர்களை பார்க்காமல், கணவன் இழுத்த இழுப்பிற்கு சென்று விட்டாள்,  அவளது தாய் தமையனுக்கு அவளது பாராமுகம் வேதனையை தந்தாலும், அவளை நிம்மதியான வாழ்கைக்குள் தான் தள்ளி விட்டிருக்கிறோம் என்ற நிம்மதியில் மனதை தேற்றிக் கொண்டனர்,…..

ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காரில் தங்கள் வாழ போகும் வீடு வந்து சேர்ந்தனர் மணமக்கள்கள், வரும் வழியிலும் கல்லை விழுங்கியது போல் வெளியே வேடிக்கை பார்த்தபடி தான் வந்தாள் நித்யா, முகத்தில் கொஞ்சமும் சந்தோசமில்லாமல் இருந்த அவளது முகத்தில் தற்போது சிறிது பயமும் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தது, கதவைஒட்டி நெருங்கி அமர்ந்தபடி ஓரகண்ணால் தன்னை நோட்டம்விட்டபடியே வந்தவளை அவனும் அவளுக்கு தெரியாமல் கவனித்து கொண்டு தான் வந்தான், ஆனால் எதுவும் வாய் திறந்து பேசவில்லை, இப்போதும் அந்த முறுவல் அவனது உதட்டில் அழகாய் படர்ந்திருந்தது,…

வீட்டின் காம்பனுண்டினுள் கார் நுழைந்த பின்னர், இருவரும் காரை விட்டு இறங்க, செவ்வந்தி பாட்டி கையில் ஆரத்தியுடன் தயாராக நின்றார், சுற்றி அவ்விடத்தை ஆராய்ந்தாள் நித்யா,… வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர், நடு நாயகமாக நின்ற மூன்றடுக்கு மாடி வீடு பழையகாலத்து வீடு போல் இருந்தது, வீட்டை சுற்றியிருந்த தோட்டத்தில் பல வகை செடிகளும் அதில் பூக்களும் பூத்து குலுங்கியது, அவ்வளவு தான் அவள் கவனித்தாள், பிறகு தலையை கவிழ்த்துக் கொண்டாள்,…

செவ்வந்தி மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆழம் சுற்றி உள்ளே அழைத்து சென்றார், உள்ளே சென்றதும் விசாலாமான முற்றம், அதற்கேற்றாற்போல் பெரிய பெரிய ஆன்டிக் சோபாக்கள் போட்டிருந்தது, அதில் தான் அமர சொன்னார்கள் அவளை, அவள் கணவன் அங்கிருந்த யாரோ ஒருவரிடம் பேச போய்விட்டான்,…

புதிதாக ஒரு வீட்டிற்கு வந்திருக்கும் போது, ஒரு பெண்ணின் மனம் எப்படியெலலம் படபடக்குமோ அப்படி தான் படபடத்து கொண்டிருந்தது அவளுக்கும், யாரென்றே தெரியாத ஒருவனை திருமணம் செய்து கொண்டு, சொந்தபந்தத்தை எல்லாம் விட்டுவிட்டு, இப்படி முன்ன பின்ன தெரியாத வீட்டில் வந்து அமர்ந்திருப்பது அவளுக்கு ஒரு மாதிரி பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது…

அவர்களை சுற்றி திருமணத்திற்கு வந்திருந்த சில விருந்தாளிகள் நின்று, கேலி செய்கிறேன் பேர்வழி என்று அவள் நிலை தெரியாமல் அவளை எரிச்சல் படுத்தி கொண்டிருந்தனர்,,….

“ஏமா புது பொண்ணு, கொஞ்சம் தலையை நிமிர்த்தி தான் பாரேன், தலை வலிக்க போகுது” ஒருவள் நகைத்தபடி கூற,… “மாப்பிளை முகத்தையாவது பார்த்தியா? இல்லையா? அது சரி, நீயே முகத்தை கழுத்துக்குள்ள போய் நுழைச்சிக்கிட்டு பாவம் உன் புருஷனை உன் முகத்தை பார்க்க விடாம படாத பாடு படுத்தற நீயா பார்க்க போற?” என்றாள் இன்னொருவள்…

“இப்போவே இப்படி உட்கார்ந்துட்டு இருக்கியே, நைட் எப்படி இருப்ப, இருந்தாலும் நம்ம ரிஷி தம்பி தான் பாவம்” ஒருவள் சிரிக்காமல் சொல்ல, அதற்கு பக்கத்திலிருந்தவள் முன்னே பேசியவளின் காதில் ஏதோ முணுமுணுக்க,… வாய் விட்டு கலகலவென்று சிரித்தாள் அவள், நித்யாவிற்கு தான் அவர்களின் கிண்டல் பேச்சும் சிரிப்பும் ஒரு மாதிரி எரிச்சலையும் பதட்டத்தையும் உண்டு பண்ணியது,…

“என் பேத்தியை என்ன சொல்லி கிண்டலடிச்சிக்கிட்டு இருக்கீங்க,” என்று அதட்டலுடன் கேட்டபடி வந்த செவ்வந்தி பாட்டி, சற்று தொலைவில் நின்று யாரோ ஒருவரிடம் உடையாடி கொண்டிருந்த ரிஷியை, “ரிஷி கண்ணா இங்க வாப்பா, உன் பொண்டாட்டி பக்கத்துல வந்து உட்காரு” என்று அவனை அழைத்து அமர சொன்னவர், அவர்கள் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார்….

ஒரு டம்ளர் பாலை இருவரையும் மாறி மாறி குடிக்க சொல்லிவிட்டு, ஒரு வாழை பழத்தையும் இருவரையும் பகிர்ந்து சாப்பிட சொன்னார்,… நித்யாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அவள் மறுத்து பேசும் நிலையில் இல்லாததால் வேறு வழியின்றி அனைத்தையும் செய்து முடித்தாள்,…

“ரிஷி கண்ணா,… நீ ரூமுக்கு போப்பா, கல்யாண அழைச்சல்ல ரொம்ப சோர்வா இருப்ப, நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு,…” பாட்டி கூறவும், “சரி பாட்டி” என்று எழுந்தவன்,… நித்யாவை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து விட்டு, முதல் மாடியில் இருக்கும் தனது அறையை நோக்கி விரைந்தான்,…

“நீ வாடா கண்ணு” நித்யாவை ஒரு அறைக்கு அழைத்து சென்ற செவ்வந்தி,… “இப்படி உட்காரு கண்ணு” என்று அங்கிருந்த விசாலமான கட்டிலில் அமர வைத்தார்,….

“என்னாச்சு கண்ணு, ஏன் ஒரு மாதிரியா இருக்க, எனக்கு புரியுது கண்ணு, புதுசா யாருன்னே தெரியதவங்க வீட்டுக்கு வந்திருக்க, உன் மனநிலை எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, நான் கூட உன்னை மாதிரி தான், புகுந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சதிலயிருந்தே  ரொம்ப பயந்தேன், யார்கிட்டயும் பேச மாட்டேன், என் புருஷன் கிட்ட பேசுரதுக்கு கூட பத்து பதினைஞ்சு நாள் எடுத்துகிட்டேன், அம்புட்டு பயம் பதட்டம் எனக்கு, எனக்கு அப்போ மாமியார் கூட இல்ல உட்கார்ந்து ஆறுதலா பேசுரதுக்கு, அந்த கடவுள் உனக்கும் மாமியார் இல்லாம பண்ணினாலும், இந்த பாட்டிய வச்சு இருக்கான் உனக்கு, உனக்கு என்ன வேணுமோ, என்ன பிராட்சனையோ, என் கிட்ட சொல்லு, நீ எங்க வீட்டு மருமக மட்டும் இல்ல, எனக்கு பேத்தியும் கூட, என் பேரனை போல தான் எனக்கு நீயும்” என்ற பாட்டியின் சகஜமான உரையாடலில் நித்யாவும் சற்று ஆறுதலடைந்தாள், அதிகமாக இல்லையென்றாலும் ஒவ்வொரு வார்த்தையாக அவரிடம் பேச ஆரம்பித்திருந்தாள், அவள் நகைகளை கழட்ட உதவி புரிந்த செவ்வந்தி, அவளுக்கு லேசான ஒரு புடவையை கொடுத்து மாற்ற சொல்லிவிட்டு, அவளை ஓய்வெடுக்க விட்டுவிட்டு வெளியேறினார்,….

செவ்வந்தி சென்றதும் உறக்கம் வராமல் கொஞ்சம் நேரம் படுத்திருந்தவள், எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை, ஏழு மணியின் போது தான் செவ்வந்தி பாட்டியே வந்து எழுப்பி விட்டார், அவளை ஹாலுக்கு அழைத்து வந்து தேநீர் அருந்த கொடுத்தார், காலையில் இருந்தது போல் அதிக பெண்கள் இல்லாவிட்டாலும், ஐந்தாறு பெண்கள் ஆங்காங்கே ஏதோ வேலை செய்தபடி இருந்தனர்,….

அப்போது தான் சுற்றி அவ்வீட்டை பார்த்தாள், பெரிய சமையலறை, இடது மற்றும் வலது புறத்தில் நான்கு கதவுகள் இருந்தது, மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் ஒரு மூலையில் இருந்தது, அந்த காலத்து வீட்டை கொஞ்சம் இந்த காலத்திற்கு ஏற்ப ஆல்ட்ரேஷன் வேலை பார்த்திருந்தனர், அழகாக தெரிந்தது அவளுக்கு அவ்வீடு,…

“கண்ணு வாடா” நித்யாவை அவள் சற்று நேரத்திற்கு முன்பு ஓய்வெடுத்த அறைக்கு அழைத்து வந்த செவ்வந்தி, “முகம் கழுவிட்டு வாடா” என்று அவளை குளியலறைக்கு அனுப்பி வைத்தார்,….

அவள் முகம் கழுவிவிட்டு வந்த போது பாட்டியோடு சேர்த்து இரு பெண்கள் இருந்தனர்,… ‘இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்’ என்று யோசிக்கும் முன்பே அவளிடம் ஒரு புடவையை கொடுத்து கட்டி வர சொல்லினர், அடுத்த அரை மணி நேரத்தில் சாந்தி முகூர்த்திற்க்காக மிதமான அலங்காரத்துடன் அலங்கரிக்கபட்டிருந்தாள் நித்யஸ்ரீ…

அவள் இதை சட்டென்று எதிபார்க்கவிட்டாலும், இவ்வாறு ஒரு சூழ்நிலை வரும் என்று தன் தாய் தமையனின் கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதே எதிர்பார்த்து இருந்ததுதான், பாட்டி தன் பேரனை பற்றி கூறிய விடயங்கள் எல்லாம் அவள் காதிலே விழவில்லை, அவள் மனமும் மூளையும் அவனிடம் எப்படியாவது தன் விஷயத்தை பற்றி கூறி விட வேண்டும் என்பதை மட்டும் தான் சிந்தித்து கொண்டிருந்தது, இயல்பிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், இப்போது பெரிய முடிவொன்றை எடுத்திருக்கிறாள், தன் மனதில் உள்ளதை தாலி கட்டிய கணவனிடமும் கூற போகிறாள், அப்படி என்ன விஷயமாக இருக்கும் என்பதை அடுத்த அப்டேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாசகர்களே….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்