
அகம் 11
நேரம் நெருங்க நெருங்க அனைவரின் முகத்திலும் பதற்றம் அப்பட்டமாய்த் தெரிய, அவந்திகை மட்டும் எதோ நம்பிக்கையை மனதில் வைத்துக் கொண்டிருந்தாள். திடீரென மேள தாளங்களுடன் பட்டாசு சப்தமும் இணைந்து கேட்க..
“மாப்பிள்ளை வந்துட்டாரு” என ஒரு பொடியன் சொல்லிக்கொண்டே வீட்டினுள் வர, அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தவழ, பார்வதி முகத்தில் மட்டும் ஏமாற்றமாய்க் காட்சியளித்தது.
அகன் வந்துவிடுவான் என யாருக்கும் துளி அளவு நம்பிக்கை இல்லை, அவளை நம்பியிருந்த ஒரே மனம் அவந்திகையின் மனம் தான்.
வாழை மரத்தில் தோரணமும், வீட்டின் முன் போடபட்டிருந்த மணமேடையும் அகத்தினியனை வரவேற்க, சிவசக்தி ஆராத்தி எடுத்தாள்.
“மச்சான் தட்டுல காசு வையுங்க” சிரித்தாள் சிவசக்தி, தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை தட்டில் கழற்றி போட, ஊரே அதிசயித்துப் பார்த்தது. அவனருகே சென்ற காயத்ரி.
“ஏன்டா இப்படிச் செஞ்ச ஒரு நாள் முன்ன வந்திருக்கலாம்ல, எல்லார் முன்னாடியும் கேவலபடுத்திட்ட, நிம்மதியா.? இப்ப உனக்குச் சந்தோசமா” அவன் காதுகளில் கிசுகிசுக்க, எதுவும் பேசாமல் புன்னைகை சிந்தினான் அகத்தினியன்.
“மைனி விடுங்க, அதான் மாப்பிளை வந்துட்டவல்ல” ஜெயக்கொடி காயத்ரியிடம் சொல்ல, சில நிமிடங்களில் பட்டு வேட்டி சகிதமாய், தமிழ்நாட்டின் மருமகனாய் மணமேடையில் அமர்ந்து புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தான் அகத்தினியன்.
ஆரஞ்சு பழச்சாற்றின் நிறத்தில் புடவையும், அளவான ஒப்பனையுடன்., விழிகளில் எதிர்காலக் கனவை தேக்கியபடி, அன்ன நடையிட்டு ஒயிலாய் வந்தாள் அவந்திகை. அவனைப் பார்க்க நாணம் கொண்டு தலைக்கவிழ்ந்து அமர்ந்தபடி அவன் விழி பாராமல் சொன்னாள்.
“நீங்க வருவியன்னு எனக்குத் தெரியும் அகன்” அவள் சொல்ல,
“லவ் யூ அவந்தி” எனச் சொன்னவன் பெரியவர்களால் ஆசிர்வதிக்கபட்ட பொன்தாலியை அவள் கழுத்தில் பூட்டியவனை, காதலுடன் நோக்கிய அவந்திகை கண்சிமிட்டி சிரித்த நொடியிலே, அவந்திகையின் விழிகளில் பட்டென விழி நீர் சுரந்து உதடுகள் நடுங்கியது.
“அகன்..!” என வீறிட்டு அலற, சபையே நடுங்கி போனது. தாலி கட்டியவனின் பின்னந்தலையில் இரத்தம் கசிவதை பார்த்து அவள் அலற. அவள் விழி நோக்கும் திசை பார்த்து, தன் பின்னந்தலையில் கை வைத்துப் பார்த்தான், பிசுபிசுப்பாய் இரத்த கசிவு கையில் தெரிய,
“அவந்தி ஒண்ணுமில்லை சின்ன ஆக்ஸிடன்ட் தான்” அவளைத் தேற்ற முயன்ற வேளையிலே அகத்தினியன் அவந்திகையின் மடியிலே சரிந்தான்.
தாலி கட்டிய மறு நொடியே, தன் கணவனைக் குருதி வெள்ளத்தில் கண்டு பயந்து போயிருந்தாள்.
“அகன் எழுந்திருங்க..! அகன்.!” என அலற குங்குமம் துலங்க வேண்டிய அவளின் நெற்றி வகிட்டில், தன் குருதியை வைத்து அங்கீகாரம் கொடுத்தவன் மயங்கி போயிருந்தான்.என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் குடும்பமே அதிர்ச்சியில் உரைந்து போயிருக்க, அகத்தினியனை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து அழைத்துச் சென்றார்கள்.
***************
மருத்துவமனையின் ஐசியூ அறையின் முன் பதற்றத்தில் மணக்கோலத்தில் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.அவன் புதிதாய் கட்டிய தாலியுடன், அகனின் மனைவி என்ற அங்கீகாரத்துடன் நின்றிருந்தாள் அவந்திகை.
“அவனுக்கு ஒன்னும் ஆகாதும்மா பயப்படாத” காயத்ரி பரிவாய் சொல்ல, துக்கம் தொண்டையை அடைக்கக் காயத்ரியின் தோள் சாய்ந்து, தேம்பி அழுதாள் அவந்திகை.
“அவி நீ வீட்டுக்கு போட்டி, நாங்க மாப்பிளையை அழைச்சிட்டு வர்றோம்” என ஜெயக்கொடி அவளை அங்கிருந்து அனுப்ப முயல, வார்த்தைகள் வர மறுக்க,போகமாட்டேன் என மறுப்பாய் தலையை மட்டும் அசைத்தாள் அவந்திகை.
அதே சமயம் முத்துவேலின் அருகில் வந்த ராஜபூபதி..
“முத்து மாப்பிள்ளை, இது நம்ம ஊருக்குள்ளய நடந்திருக்கு..?” எனக் கேட்டார் ராஜபூபதி.
“தெரியலையே மச்சான்..!எங்க நடந்திச்சின்னு ஒன்னும் விளங்கலையே”
“நம்ம வீட்டு பிள்ளை மேலையே கை வச்சிருக்கானுவ சும்மா விடக்கூடாது மாப்பிள்ளை” என ராஜபூபதி தன் ஆதங்கத்தை வெளிபடுத்த,
“இதெப்படி நடந்திருக்கும் மச்சான், நமக்கு யாரு எதிரி இருக்கா..? இது ஆக்ஸிடன்ட்டா தான் இருக்கும், உயிரை கையில பிடிச்சிக்கிட்டு என் மக கழுத்துல தாலி கட்ட வந்திருக்காரே” என வருந்திக்கொண்டிருந்த நேரம் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த மருத்துவர்.
“பயப்பட எதுவும் இல்லை, தலையில லைட்டா வெட்டுக் காயம் இருக்கு, பேஷண்ட்ட கேட்டா கல்லுல விழுந்துட்டேன்னு சொல்றாரு, என்னோட அனுபவத்தை வச்சு சொல்றேன் வெட்டுருவாளால வெட்டிருக்காங்க,ஆன காயம் மாதிரி தெரியுது, இப்ப எல்லாரும் அவரைப் பார்க்கலாம்.” எனச் சொல்லிவிட்டு மருத்துவர் நகர. அதிர்ச்சியுடன் கூடிய கலக்கம் அனைவரின் முகத்திலும் குடியேறியிருக்க,ஒவ்வொருவராய் அகனை பார்த்துவிட்டு வெளியே வந்து விட இறுதியாக அவந்திகை உள்ளே சென்றாள்.
“அவந்தி வா..!” அன்போடு அழைத்தவளின் இதழில் புன்னகை தவழ்ந்தது.
“அகன் யாரு செஞ்ச வேலை இது..? என்ன தான் நடந்திச்சு” எனக் கேட்கும் போதே கண்ணீ்ர் பொங்கி வந்து விட.
“ஏய் அவந்தி அழாதே..! ஐ யெம் ஆல்ரைட்” அவளைத் தேற்ற முயன்றான்.
“ஆஸ்பத்தரிக்கு போயிட்டு வீட்டுக்கு வந்திருக்கலாமே அகன், ஏன் இப்படிப் பண்ணிங்க” அவன் கரம்தனை பிடித்து அதில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
“நான் போயிட்டு வந்திருந்தா மூகூர்த்த நேரம் முடிஞ்சிருக்கும் அவந்தி, நான் வருவேன்னு நம்பிக்கையோட காத்திருந்தல்ல, உன்னை எப்படி அவந்தி என்னால ஏமாத்த முடியும்” என அவன் சொன்ன நொடி, அமர்ந்திருந்தவனைக் கட்டி அணைத்தவள் மார்பில் முகம் புதைத்து, அவனின் இனிமையான இதயத் துடிப்பை கேட்டுக்கொண்டிருந்தவள்.
“என்னை உங்களுக்குப் பிடிக்குமா அகன்..?”
“பிடிக்காமல உயிரை கையில பிடிச்சிட்டு வந்தேன்”என அவளை எதிர் கேள்வி அவன் கேட்க, அவன் முன்நெற்றி கேசத்தை ஒதுக்கி தன் இதழ் முத்திரையைப் பதித்தவள். அவன் விழியை நேராய் பார்த்து சொன்னாள் அவள்.
“உங்களை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு அகன், உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா ஐ லவ் யூ அகன்” என அவள் சொல்ல., புன்னகை சிந்தினான் அகத்தினியன்.
என்ன தான் அவனிடம் சிரித்துப் பேசி மகிழ்ந்தாலும், அவனை இப்படிச் செய்தவர்களைக் கண்டறிய வேண்டும் என்ற வெறி அவளுக்குள் இருக்கத் தான் செய்தது. தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் கழுத்தில் மாலையிட வந்த மன்னவனின் மேல் காதல் துளிர்க்க, அவனுடைய அருகாமையும், அவள் முதல் முதலாய் கொடுத்த முத்தமும் இந்தக் கசந்த வேளையிலும் தித்திக்கத் தான் செய்தது, திருமணப் பட்டாடையில் அழகாய் ஜொலித்த மணையாளை இடையில் கைக்கொடுத்து தன் பக்கம் இழுத்தான் அகன்.
“அவந்தி..! எனக்காக நீ ஆம்புலன்ஸ்ல அழுதிட்டு வந்தப்பவே, உன் காதலை உணர்ந்தேன், நீ சொல்லலனாலும், எனக்காகக் காத்திக்கிட்டு இருந்த அவந்தி என் மேல எவ்ளோ நம்பிக்கையும் லவ்வும் வச்சிருக்கான்னு தெளிவா புரிஞ்சிது” அவன் உணர்ச்சியோடு பேசினான்.
இருவருக்குள்ளும் புரிதலும், நம்பிக்கையும் ஏற்பட்டது, திருமண உறவுக்கான அஸ்திவாரமான காதலும் இருவர் மனதிலும் பூத்துக் குலுங்கியது. காதலும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் கைகோர்த்துக்கொள்ள, அவசர சிகிச்சை அறை, அவசர காதல் அறையை மாறிப் போனது. காதலுக்கு இடம், பொருள், ஏவல் இருக்கிறதா என்ன..? இருமணம் ஒரே சிந்தனையிலும், காதலுடனும் இருந்தாலே போதுமே, அனைத்து இடமும் காதல் செய்யக் கூடிய இடம் தான், காதல் எனும் பூந்தோட்டத்தில் அவந்திகையின் மனதை கொய்துவிட்டான் அகன்.
படபடவெனக் கதவு திறக்கபட அங்கே மூச்சு வாங்கியபடி மன்னராசா நின்றிருக்க, அவந்திகை பட்டென அகனிடம் இருந்து விலகி நிற்க, தலைக் கவிழ்ந்தபடி மன்னராசா,
“அவி ஆளை பிடிச்சாச்சு” என்றான்.
“எவாம்ல அது நம்ம ஊர்காரனா.?” கேள்வியாய் அவனை நோக்கினாள்”
“மன்னராசா சொல்லாத” கட்டளையாய் வந்து விழுந்தது அகனின் குரல்.
“அகன் அண்ணேன்.! ஏன் மறைக்கப் பாக்குறிய.?அவந்திக்கு தெரியட்டும்” என மன்னராசா உரிமையாய் பேசியதே அகனையும், அவந்தியையும் வியப்பில் ஆழ்த்தியது.
“வேண்டாம் சொல்லாத..!”
“அவந்தி..! பக்கத்து ஊர்காரணுக தான் இந்த வேலையைச் செஞச்சிருக்கானுவ”
“அவனுகளுக்கு என்னவாம்.? அவனுகளை என்ன பண்ணுறேன் பாரு.” எனக் கிளம்பியவளை கை நீட்டி தடுத்தான் மன்னராசா.
“ஏம்ல குறுக்கக் கை நீட்டுத.?” கோபமாய் முறைத்தாள்.
“நீ ஒன்னும் செய்ய வேண்டாம் எல்லாத்தையும் அண்ணனே வச்சி செஞ்சிட்டு தான் வந்திருக்காவ, இவியளுக்குப் பெரிய காயம்ல இல்ல அவி, அவனுக எல்லாரும் கை , கால் முறிஞ்சு கிடைக்கானுவ” எனச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள் மெல்ல அகனை திரும்பி பார்க்க அவன் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.
“என்ன சிரிக்குதிய.? அப்படி என்ன தான் பிரச்சனை?” அதிர்ந்து போய்க் கேட்டாள் அவந்திகை.
“அது சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங் அவந்தி, ஒன்னுமில்லை” என அகன் சமாதானம் சொன்னாலும் அவந்திகை மனம் ரொம்பவே தவித்துப் போனது. எதோ ஒன்று தவறாய் இருப்பதாய் அவளின் உள்ளுணர்வு அடித்துச் சொல்லியது. அவளுக்குள் குடியிருக்கும் காட்டம்மனோ கதறிக்கொண்டிருந்தாள்., அதை அவள் சரியாக உணர முடியவில்லை என்றாலும், காட்டம்மனின் உருவம் அவள் கண் முன் நிழலாய் வந்து ஓட, பயந்தே போனாள் அவந்திகை.
தற்போதைய சூழ்நிலையில் அகனை நல்லபடியாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், பிறகு என்னவென்று விசாரித்துக்கொள்ளலாம் என எண்ணியவள், மீண்டும் அதைப் பற்றி விசாரிக்கவே இல்லை, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டதே என்று மனதை தேற்றிக்கொண்டாள் அவந்திகை.
“அகன் நீங்க கண்ணை மூடி உறங்குங்க, நாங்க வெளிய நிக்குதோம்” என அவந்திகை சொல்ல.
“என் அருமை பட்டிகாடே, எனக்கு ஒன்னும்மில்லை நல்ல தான் இருக்கேன், எதுக்காகத் தூங்கணும், டாக்டரே வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க” அகன் அவளை வம்பிழுக்க.
“யாரு நான் பாட்டிக்காடா.?” பொய்யாய் கோபம் கொண்டாள் அவந்திகை, அவளின் போலியான கோப முகத்தைக் கண்டு சிரித்துவிட்டான் அகன். அதன்பின் மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர் மணமக்கள். அவந்திகையின் எண்ணங்களும் வரிசைக்கட்டி நின்றது. சடங்கும் சம்பிராதயங்களும் வரிசைக்கட்டி நிற்க, அனைத்தையும் முடித்துவிட்டு அவர் அவர் அறைக்கு உறங்க சென்றனர். அகன் அவந்திகையின் அறையில் அவளுக்காய்க் காத்திருந்த சமயம், அவனின் செல்பேசி இசைந்தது.
“இனியன்.!” குழைந்தது அந்தப் பெண்ணின் குரல். அவள் யாரென ஊகித்தவன்.
“சொல்லு லேகா..!”
“பராவயில்லையே சரியா கண்டுபிடிச்சுட்ட” நக்கலாய் சிரித்தாள்.
“லுக் லேகா.! எவ்ரிதிங் ஸ் ஓவர், எனக்குக் கால் பண்ணாத” கோபமாய்ச் சொல்லிவிட்டான் அகன்.
“இனியன்.! இனி தான் எல்லாமே ஸ்டார்ட் ஆகப் போகுது, வெயிட் அண்ட் வாட்ச்.” எனச் சொன்னவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
அவள் எதற்கோ துவக்க புள்ளியை வைத்திருப்பதை உணர்ந்தவனாய், அதைச் சார்ந்த யோசனையில் முழ்கி போனான் அகன். அவந்திகை பட்டென அறைக்கதவை திறந்து உள்ளே வந்துவிட, பட்டுபுடவை சரசரக்க, மல்லிச்சரம் சூடி வெட்கம் தழைய அவன் முன் வந்து நின்றவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க.
“அகன்..!” மெல்ல அழைத்தாள் ஒரு வித கிறக்கத்தில்.
“அவந்தி..!”
“என் கூட வர்றியளா..?” அவள் கேட்க,
“ம்ம போகலமே.! எங்க.?”
“வாங்க சொல்றேன்” என அவள் முன்னே நடக்க, பின்னே அவளைத் தொடர்ந்து சென்றான் அவன்.
மல்லியுன் மணத்துடன், பாரிஜாத பூவின் மணமும் சேர்ந்து வர., நள்ளிரவில் அந்த ஒற்றை அடி பாதையைத் தாண்டி, வெறிச்சோடி இருந்த சாலையை நோக்கி இருவரும் நடந்துக்கொண்டிருந்தனர்.
“அவந்தி..! இந்த ராத்திரில எங்க போறோம்..?”
“என் பின்னாடியே வா அகன்” மெல்லச் சொன்னாள் அவள். இருவரும் ஊரின் எல்லைக்கே வந்து விடப் பாரிஜாத மலரின் நறுமணம் ஆளையே தூக்கும் அளவிற்குச் சகந்தம் கொடுத்தது
“அவந்தி உனக்கு அந்த வாசனை தெரியுதா..?”
“எந்த வாசனை அகன்”
“எதோ பூ வாசனை அவந்தி”
“மல்லிப்பூவா அகன்..?”
“இல்லை வேற எதோ அவந்தி”
“அது பாரிஜாதம் அகன்” எனச் சொன்ன நொடியில் அவன் முன்னே ஒயிலாய் நடந்துக்கொண்டிருந்தவள்., வெந்நிற புகையாய் கரைந்து போனவளை கண்டு மிரண்டு போனவன் நின்றிருந்த இடமே, வெந்நிற புகை மேலெழும்பி செல்ல, அதில் பெண் உருவம் ஒன்று உருவாகி மறைய பயந்தே போனான் அகன்.
அவன் நின்றிருந்த சாலையோரத்தில் இருந்த மரத்தில் இருந்து பாரிஜாத பூக்கள் உதிர்ந்து, சாலை முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் இருக்க, அதில் ஒருவர் நடந்து செல்வது போல் பாத சுவடுகள் உருவாகி மறைந்ததைப் பார்த்து மிரண்டே போனவன்..
“அவந்தி..!” என அலற,
“அகன்..!” காற்றில் கீதமாய்க் குரல் மட்டும் கேட்க, அங்கயே மயங்கி சரிந்தான் அகன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


காதல், குடும்ப கதைன்னு நினைச்சா மர்மம், திகில் கதையா இருக்கு