Loading

மகனை அருகே படுக்க வைத்துக்கொண்டு, சுழலும் மின்விசிறியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி! இன்று நடந்த சிறு நிகழ்வைக் கூட விட்டுவைக்காமல் அசைபோட்டபடி உறங்காமல் தவித்தாள்.

அவளது ஆழ்மனம் அவளுடன் பேச ஆரம்பித்திருந்தது.

“ஏன் கல்யாணம் வேண்டாம்?!” எனக் கேட்டது. அனைவருக்கும் சொன்ன பதிலைத்தான் அதனிடமும் சொன்னாள். அப்பதிலைக் கேட்டதும் அவள் மனம் கேலியாகச் சிரித்தது.

மனிதர்களிடம் உண்மையை மறைக்கலாம், ஆனால் உள்மனதிடம் மறைக்க முடியுமா என்ன? அதனிடம் வசமாகச் சிக்கிக்கொண்டாள்.

“உண்மையாகவே உனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாமா?” என மீண்டும் கேட்டதற்கு அவளுக்குள் ஓர் அமைதி.

“உனக்குக் காதல், கணவன், குழந்தை என வாழ ஆசை இல்லையா?” என்ற கேள்விக்கு பதில் இருந்தும், அவள் மனதிடமே சொல்லாமல் மறைத்தாள்.

அதுவோ பெரிதாய்ச் சிரித்தது… வெளிச்சத்தில் எதையும் மறைக்க முடியுமா? அவள் மனம் அவளது எண்ணங்களை வெளிச்சம் போட்டல்லவா காட்டியது.

அவளுக்கும் கல்யாணம், காதல், கணவன், குழந்தை என்று வாழ ஆசைதான். அதற்கு முதல் முட்டுக்கட்டையே பயம்தான். அவளது வாழ்க்கையில் முதல் கணவனால் ஏற்பட்ட பாதிப்பு, மனதின் ஓரத்தில் அழியாமல் பதிந்திருந்து அவ்வப்போது நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

அதே போல மீண்டும் ஒரு வாழ்க்கை அமைந்துவிடுமோ என்ற அச்சமே அவளது இரண்டாவது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

அடுத்தது சச்சின். இரண்டாம் திருமணத்தில் பெரிய சிக்கலே பிள்ளைகள்தான். துணையாக வருபவர் முழுமனதாக மகனை ஏற்றுக்கொள்வாரா? அந்தக்கந்து வட்டிக்காரன் கூடத் தொழில் ஆதாயத்திற்காகத்தானே தன்னைத் திருமணம் செய்துகொள்ள எண்ணியிருந்தான். அவன் தன்னால் வரும் லாபத்தைத்தானே பார்ப்பான்? சச்சினைக் கடமைக்குப் பார்ப்பான்; கடமைக்கு உடனிருந்து உறவில் இருப்பான். பிள்ளை பெற்றுக்கொள்ளச் சொல்வான். இதெல்லாம் குடும்பம் சார்ந்த தொழில்தானே அவனுக்கு! இவனிடம் காதலையும் சச்சினுக்குத் தந்தை பாசத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

போதாத குறைக்கு மஞ்சுளா விருப்பமின்றி வீட்டிற்கு அழைத்து வந்து, வள்ளியைப் போல மாமியார் கொடுமை செய்வாரோ! “போதும்டா சாமி” எனப் பெருமூச்சை விட்டாள்.

இதையெல்லாம் நினைக்கையில், இரண்டாம் திருமணத்தைப் பற்றிய பயம்தான் முதன்மையாக வந்து நிற்கிறது.

“நீ எதிர்பார்த்தது போல ஒருவன் முழுக்க முழுக்கக் காதலோடு, சச்சினுக்கு முழுமனதோடு தந்தையாக வந்தால் என்ன செய்வாய்?” என்று மனம் கேட்க,

“அப்படி யாரும் வரப்போவதில்லை இந்தச் சுயநல உலகில். அப்படியே வந்தாலும் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள அனுமதித்தாலும், சில கசப்பான சம்பவங்கள் மனதை நெருட, அதை முழுதாய் ஏற்றுக்கொள்ள யோசிக்க வைக்கிறது.

“ஆரம்பத்திலிருந்தே அவளது கல்யாண வாழ்க்கை சரியாக அமையவில்லை. தனக்குப் பிடித்தது போல வாழ ஆசை இருந்தும், அதைத் பூட்டி வைத்திருக்கும் சராசரிப் பெண்தான் ஜனனி.

இரண்டாம் திருமண வாழ்க்கையில் விருப்பம் இருந்தாலும், அதை வெளியே சொல்லத் தயக்கமும், பயமும், சமூகத்தை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனமும்தான் அவளுக்குள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

இவையெல்லாம் மீறி என்னால் என் விருப்பத்தைச் சொல்ல முடியாது என்று இவள் எண்ணியிருக்க, அவளுக்கு அவளே போட்டுக்கொண்ட முட்டுக்கட்டையைத் தகர்த்தெறிய அவனும் இந்தியா வர ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறான்.

கற்பனையில் தனக்கும் சச்சினுக்கும் உறவாக ஒருவன் வரலாம், ஆனால் நிஜத்தில் சாத்தியமில்லை, அப்படி ஒருத்தன் இருக்கப் போவதுமில்லை என்று எண்ணிக் கொண்டிருக்க,

“இருக்கேன்” என்பது போல இளா அழைத்தான்.

சச்சினின் தூக்கம் கலையாதவாறு அலைபேசியை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்தாள். அவனது அழைப்பை ஏற்றுக்கொண்டு “இளா” என்றாள்.

அந்த ஒற்றை அழைப்பே காலையிலிருந்து இரவு வரை உண்டான உள்ளம் மற்றும் உடல் சோர்வை முற்றிலுமாக அகற்றி, புதுத் தெம்பையும் உற்சாகத்தையும் அவனுக்குக் கொடுத்தது.

“என்ன பண்றீங்க அன்னம்மா மேடம்?”

“வேற என்ன? விட்டத்தை வெறிச்சு வெறிச்சுப் பார்த்திட்டு இருக்கேன்!”

“பாருங்க பாருங்க… என்ன உங்க பழைய படத்தை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தீங்களாக்கும்? எப்பவும் ஓடுன படத்தையேதான் பார்ப்பீங்களா?

புதுசா எதுவும் இல்லையா பார்க்க?” என நக்கலாகக் கேட்டுச் சிரித்தான்.

“ஏன் சிரிக்க மாட்ட? நீ சிரி மேன்! நீ சிரி! என் இடத்துல இருந்தாத்தான் தெரியும் என் நிலைமை… அதுவரைக்கும் என்னைப் பார்த்தா சிரிக்கத்தான் தோணும்.”

“அன்னம்மா!!! எல்லாமே அதுவா அமையறது இல்ல… நாம உருவாக்கிக்கிட்டதுதான். உன் நிலைமை உன்னால வந்தது; என் நிலைமை என்னால வந்தது. இதை நீ மறுத்துச் சொல்லுவியா என்ன? சோ , நாம எடுக்கிற முடிவுகளோட விளைவுகள்தான் நம்ம நிலைமைக்கு முதல் காரணம் அன்னம்மா! யாரையும் பிளேம்  பண்ண முடியாது! என்ன சொல்ற?” என்றான் தத்துவமாக.

“சரிதான் சார், ரொம்பப் பெரிய இலவசத் தத்துவமெல்லாம் சொல்றீங்க?”

“இப்போதான் எல்லா வேலையும் முடிஞ்சது அன்னம்மா!! உன்கிட்ட பேசலாம்னு எடுத்தா, நீ என்னைத் தத்துவமா பேச வைக்கிறீயே!”

“ம்கூம்…” என்றாள்.

“அன்னம்மா!!” என்றான் உற்சாகமாக. அவளோ “ம்ம்” என்றாள்.

அவளுடன் பேச ஆவலோடு அழைத்தான். ஆனால் அவளது இரண்டு எழுத்துப் பதிலைக் கண்டு கடுப்பானான்.

“என்ன அன்னம்மா!! சச்சினோட சேர்ந்து நீயும் இன்னைக்குத் தமிழ் படிச்சியா என்ன?” என்றான் சம்பந்தமில்லாமல்.

அவளோ புரியாமல், “தமிழ் படிச்சேனா? நானா? ஏன் கேக்குற?”

“நிறைய வார்த்தை பேசுவீங்கன்னு பார்த்தா, நீங்க ‘ம்’னு மெய்யெழுத்துல ஒத்தப் பதிலைச் சொன்னீங்களா!!! அதான் கேட்டேன்” என்றான் சலிப்பாக.

அவளும் தன் தவறைப் புரிந்துகொண்டு, “சாரி இளா! அப்செட்ல இருந்தேன்டா! அதான் சரியா பதில் சொல்லலை” என்று மன்னிப்புக் கோரினாள்.

அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவன், “என்ன அப்செட் மேடமுக்கு?” எனக் கேட்க, அவளும் ஒன்றுவிடாமல் இன்று நடந்ததைச் சொல்ல, அவன் நெஞ்சில் விதவிதமான பூகம்ப அதிர்வுகள் வந்து போனது.

“நான் இப்படியே இருந்துக்கிறேன்னு சொன்னா யாருமே கேட்க மாட்டேங்குறாங்க இளா! எனக்குச் சச்சின் போதும். அவனை வளர்த்து ஆளாக்கணும், தொழில்ல நல்ல முன்னேறணும், வேற எதுவும் வேணாம் எனக்கு” என்றாள்.

“ஓ… இது போதும் உங்க வாழ்க்கைக்கு, அப்படித்தானே?”

“ஆமா, போதும். வேற எதுவும் வேணாம் எனக்கு” என்றாள்.

“சரிங்க மேடம்!! நீங்க பண்ற இந்தத் தியாகச் செயலுக்கு எந்தச் சேனல்ல இருந்து உங்களைக் கூப்பிட்டு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தருவாங்க?” என நக்கலாகக் கேட்டான்.

“என்ன பேசற நீ? என்ன தியாகம் பண்ணிட்டேன் நான்?”

“வேற என்ன? உன் வாழ்க்கையைத்தான். சச்சின் போதும், தொழில்ல முன்னேறணும் போதும்னா உனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தருவாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா முட்டாள்! இல்ல, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்காமத் தனியா நின்னு உன் மகனை வளர்த்தா உனக்குத் தியாகிப் பட்டம் தர்றோம்னு சொன்னது யாரு? இந்தச் சமூகமா? இல்ல உன் குடும்பமா?” எனக் கேட்க, அவளுக்குச் சுருக்கென இருந்தது.

“அதுக்காக நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியா?”

“ஆஃப்கோர்ஸ்  பண்ணிக்கிட்டா என்ன?”

“நீயும் மத்தவங்க மாதிரி என் மனசுல இருக்கிறது புரிஞ்சுக்காமப் பேசாதே இளா” என்றாள் பட்டென.

“அவங்களை விட நல்லாப் புரிஞ்சதுனாலதான் பேசறேன். நீ இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறதுல தப்பு இல்லைனு…”

“என்ன என் மனசைப் புரிஞ்சுக்கிட்டீங்க சார்? கொஞ்சம் சொல்லுங்க…” என்றாள் நக்கலாக.

“உனக்குக் காதல், கணவன், குழந்தைனு மத்தப் பெண்கள் போல வாழ ஆசை இருக்கு! ஆனா முதல் வாழ்க்கை கொடுத்த அனுபவம், இடையில ஒரு கட்டாயக் கல்யாணம்… இதெல்லாம் உனக்கு இன்னொரு வாழ்க்கையை ஏத்துக்கத் தடையா இருக்கு. இதெல்லாம் மீறிச் சச்சினுக்கு ஒரு நல்ல தகப்பனா வர்றவன் இருப்பானான்ற கேள்வி வேற. இதெல்லாம் தான் உனக்கு முட்டுக்கட்டையா இருக்கு அன்னம்மா” என்று அவள் மனதை ஸ்கேன் செய்து படித்தது போலச் சொல்ல, பேச்சற்றுப் போனாள்.

“என்ன மேடம்? நான் சொன்னது சரிதானே! இதுதானே உன் மனசுல இருக்கு?” என்று சொல்ல, சட்டென ஒத்துக்கொள்ளத்தான் அவளுக்கு மனமில்லை.

“அப்படியெல்லாம் என் மனசுல எந்த ஆசையும் இல்லை… நீயா கற்பனை பண்ணிச் சொல்லாதே” எனத் தடுமாறியபடி சொல்ல, “ஓஹோ!!.. நம்பிட்டேன் மேடம்.”

“என்ன கிண்டலா? எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லை… நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற உங்க எண்ணத்தை என்கிட்ட திணிக்கத்தான் பார்க்கிறீங்க… என் மனசை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க? என் விபு தவிர!! அவன் மட்டும்தான் இதுல விதிவிலக்கா நிக்கிறான். மத்த எல்லாருக்கும் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஃபோர்ஸ் பண்றீங்க… ஏன் கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்றீங்க?! நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” எனக் குரலை உயர்த்தியிருந்தாள்.

.

“உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க மேடம்! நீங்க இந்தக் கல்யாண விஷயம் மட்டும் எடுத்துப் பேசலைன்னா நான் நிம்மதியாத்தான் இருந்திருப்பேன்னு சொல்லுங்க…” என்றிட, அவள் கொஞ்சம் தடுமாறினாள் என்பது உண்மைதான்.

அவளுக்குள் ஏக்கம், ஆசை, காதல், மோகம்… என்று ஒவ்வொரு உணர்வும் அவளைத் தூண்டிவிடத்தான் செய்கிறது. அதையெல்லாம் அடக்கிக்கொண்டுதான் வாழ்கிறாள்.

“என்ன பதிலைக் காணோம்? என்னைப் போல உன் மனசாட்சி உன்னை இடிக்குதா?” எனக் கேட்கவும் அவளிடம் பதில் இல்லை.

“இந்த உலகத்துல நிம்மதியா இருக்கிற மனுஷன்னா அது பச்சைக் குழந்தைதான் அன்னம்மா! அதுவும் வளர்ந்துட்டாலே நிம்மதியைத் தொலைக்க வேண்டியதுதான். இப்போ அது பிரச்சனை இல்லை. எல்லாரும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லக் காரணம் அவங்க சுயநலத்துக்காகவா? சரி அப்படியே இருந்தாலும் அவங்களுக்கு அதுல என்ன லாபம்? வாழப் போறது நீயாச்சே! இருபத்தி ஒன்பது வயசுல என்ன விரக்தி உனக்கு? முதல் வாழ்க்கை சரியில்லைன்னா இன்னொரு வாழ்க்கைனு நீ தேர்ந்தெடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? உன் விபு சுயநலவாதி. அவனுக்கும் இது இன்னொரு வாழ்க்கைதானே!! அவன் தனக்குப் பிடிச்ச பெண்ணோட சந்தோஷமா இருக்கானே! உன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ஏன் சொல்லல? இதுல அவருதான் உன் மனசப் படிச்சவராக்கும்?”

“என் விபுவைப் பத்தி அப்படிப் பேசாதே! அவன் என்னைப் புரிஞ்சு நடந்துக்கிறவன்…. அவனை இன்னொரு வார்த்தை பேசினா நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” என்றாள்.

“சரி… அவனைப் பத்திப் பேசல! இப்போ உன் வாழ்க்கையைப் பத்தியே பேசுவோம். நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு… உன்னோட முதல் வாழ்க்கையில முழு மனசோட, முழு காதலோட ஒரு தடவையாவது உன் புருஷனோட சேர்ந்து இருக்கியா நீ?” எனக் கேட்டிட, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“பச்சையா கேட்கணுமா? எத்தனை தடவை முழுமனசோட அவர் கூட செக்ஸ் வச்சுக்கிட்ட?”

அந்தக் கேள்வியில் மேலும் கொதித்துப் போனவள், “இளா!!! ஸ்டாப் இட் . இதுக்கு மேலே நீ எதுவும் கேட்க வேணாம்… என்னால உன்கிட்ட என்னோட அந்தரங்கத்தைப் பகிர்ந்துக்க முடியாது” என்றாள் திட்டவட்டமாக.

“என்கிட்ட பகிராம யார்கிட்ட பகிரப் போற?”

“என்ன?” என அதிர்ந்து கேட்டாள்.

“ஒரு நண்பனா விபு கிட்ட நீ பகிர்ந்து இருந்தா, என்கிட்ட சொல்றதுல தப்பு இல்லை… என் கேள்விக்கு பதில் சொல்லு! விபு, நீயும்னு ஒண்ணா கேட்காதே! ஒண்ணு இல்லைனாலும் நண்பன் நண்பன்தானே! பதில் சொல்லு.”

“நண்பனாவே இருந்தாலும் என்னால உன்கிட்ட பகிர முடியாது!”

“என்ன அட்வான்டேஜ்  எடுத்துப்பேன் என்ற பயமா? என்னை நீ நம்பலையா அப்போ?!” எனக் குரல் தழுதழுத்தான்.

“லூசு மாதிரி பேசாதே!! விபு கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்து இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கியா? எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லணும்னு இல்லை. இட்ஸ் மை பெர்சனல். ஷேர் பண்ணிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை….” என்றாள் பிடித்த பிடியில்.

“சோ… நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறதைப் பார்த்தால் அப்படி ஒண்ணும் நடக்கலை போலையே!” என நக்கலாகக் கேட்டு அவளது கோபத்தைத் தூண்டினான்.

“இளா! திஸ் இஸ் தி லிமிட்! இதுக்கு மேலே எதுவும் பேசாதே!” என்றாள் கண்டிப்புடன்.

“லிமிட்டா? எனக்கா? வாய்ப்பே இல்லை… நான் பேசிட்டுத்தான் இருப்பேன். நான் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாம விட மாட்டேன். எனக்குப் பதில் வேணும்” என்று அவனும் அதே பிடியில் நின்றான்.

“நான் ஏன் உன்கிட்ட பதில் சொல்லணும்? நீ யாரு எனக்கு? நீ கேக்குற கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லணும்?”

“நான் உனக்கு யாரோன்னா? எதுக்கு என்கிட்ட பேசிட்டு இருக்க? பிளாக்  பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே!”

“இன்னொரு வாட்டி இப்படிப் பேசினா நான் பிளாக் பண்ணுவேன்.”

“நான் என்னை மாத்திக்க மாட்டேன். அப்படித்தான் பேசுவேன்.. பிளாக் பண்றதா இருந்தா பண்ணிக்க!” என இவனும் வீம்பாகப் பேச, அவளும் கோபத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவனது எண்ணைப் பிளாக்கில் போட்டு அலைபேசியை எறிந்துவிட்டுப் படுத்துவிட்டாள்.

அவனும் அழைத்து அழைத்துப்பார்த்தான்; அழைப்பு போகவில்லை. ‘பிளாக்கில் போட்டிருப்பாள்’ என்று எண்ணித் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

அதே நேரம் அவன் முன்னே வந்து நின்றாள் மித்ரா. நிமிர்ந்து அவளைப் பார்த்து அதிர்ந்தான். பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்தவன்,

“என்ன வேணும்?” என்றான்.

“யார்கிட்ட பேசிட்டிருந்த?”

“அது என் பெர்சனல். உன்கிட்ட ஏன் சொல்லணும்?”

“என்கிட்டதான் நீ சொல்லணும்… ஏன்னா நீ எனக்கு மட்டும்தான். இன்னொருத்தர் உன் வாழ்க்கையில இருக்கவே கூடாது” என மிரட்டல் விடுத்தாள்.

“என் வாழ்க்கையில ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு. அதுவும் என் அன்னம்மாவுக்கு மட்டும்தான்! சும்மா காதல்னு வந்து பினாத்திட்டு இருக்காம ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு” என நகர இருந்தவளின் சட்டையைப் பிடித்து,

“அன்னம்மாவா? யாரு அவ?”

“என் வருங்கால பொண்டாட்டி! நானும் அவளும் காதலிக்கிறோம், கல்யாணம் பண்ணிக்கப்போறோம்” என்றான்.

ஆத்திரம் தாங்காமல் “ஆவென” அலறியவள்,

“இங்க பாரு! நான்தான் உனக்குக் காதலி, வருங்கால பொண்டாட்டி. என்னை விட்டுட்டு இன்னொருத்தியைப் பார்த்தா, பார்த்தா என்ன நினைச்சாக்கூட… உன்னைக் கொன்னுடுவேன்! உனக்கு ஒரு வாரம் டைம் (Time), அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்து என்னை ஏத்துக்கிற… இல்ல, நீ உயிரோட இருக்க மாட்ட…!” என்று மிரட்டிவிட்டுச் செல்ல, அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அசட்டை செய்தான். அதன் விளைவுகளை அவன் அனுபவிக்கப் போவதை அன்று அறியாது போனான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இந்த மித்ரா தொல்லை தாங்க முடியல.. ஜனனியும் இளாவும் புரிதலை இன்னும் ஆழப்படுத்த போகிறார்கள்..