
அத்தியாயம் 26
குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு மீண்டும் தோட்டத்தில் வந்தமர்ந்தவளுக்கு நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நிழற்படம் போல் மின்னி மறைந்தன… உள்ளுக்குள் ஏதோ அடைத்த உணர்வு. சட்டென்று கண்களை இறுக மூடி கொண்டாள். ஒரே நாளில் தன் வாழ்க்கை முழுவதும் திசை மாறி சென்றதை நினைத்து கலங்கியது மங்கையின் மனம்
‘ உன் வாழ்க்கை திசை மாறியது இப்பொழுதல்ல… உன், தாய், தந்தையை எப்பொழுது இழந்தயோ அப்பொழுதே உன் வாழ்க்கை திசை மாறி விட்டது…’ என்றது பாவையின் மற்றொரு மனம்.
அக்கணம் சிறு வயதிலிருந்து தற்பொழுது நடந்த அனைத்து நிகழ்வுகளும் கண் முன்னே மின்னி மறைந்தன… அதன் விளைவு இதழ்கள் இரண்டும் கீழாக வளைந்தன, கண்களிலிருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது. அந்த கண்ணீர் மெல்ல மெல்லத் தவிப்பாகி துடிப்பாகி, பின் கதறலாக மாறிய நேரம் அவளை வாரியணைத்துக் கொண்டது பெரும் மாமழை..
மழையோடு சேர்த்து நானும் உன்னோடு இருக்கிறேன் என்பதைப் போல தென்றலும் பெண்ணின் வதனத்தைத் தீண்டி சென்றது.
காற்றும், மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு தரணியை ஆக்கிரமித்து கொண்டிருந்த கணம் அதீத வேகத்தில் கேட்டினுள் நுழைந்தது அபியின் நான்கு சக்கர வாகனம்.
அச்சமயம் ஆனந்தியின் எண்ணம் முழுவதும் அவளை சுற்றி மட்டுமே இருக்க, வீட்டினுள் நுழைந்த வாகனத்தையும் கண்டுகொள்ளவில்லை அதிலிருந்து இறங்கி சென்றவனையும் கவனிக்கவில்லை…
பெண்ணின் கவனம் முழுவதும் தன்னிடம் இல்லையென்று உணர்ந்த கருமேகங்களோ ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சத்தத்தை ஏற்படுத்தியது. இடியின் அதீத சத்தமும், அதைத் தொடர்ந்து வந்த மின்னலின் வெளிச்சமும் மங்கையை தன் நினைவிலிருந்து வெளிக் கொண்டு வந்தது…
அப்பொழுது தான் அவளுமே உணர்ந்தால் கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம் என்று… நீண்ட நெடிய பெருமூச்சுடன்
கண்களில் வழிந்த நீரை துடைத்தப்படி எழுந்தவள் வீட்டை நோக்கி மெல்ல நடந்தாள்.
வெகுநேரம் அழுது கொண்டிருந்ததாலோ இல்லை நீண்ட நேரம் மழையில் நனைந்து கொண்டிருந்தாலோ ஏதோ ஒன்று அவளின் தலை வலிக்கு காரணமாக அமைந்தது.
நெற்றியை அழுத்தமாக வருடிக் கொண்டே தனது அறையை நோக்கி சென்றவள் ஹாலில் அமர்ந்திருந்தவனை கவனிக்க தவறி தான் போனாள்… கவனித்து இருந்தால் பின் வரும் விளைவுகளை சமாளித்து இருப்பாளோ என்னவோ…
எந்நேரமும் பிள்ளைகள் இருவரும் இவளது அறைக்கு வருவார்கள் என்பதால் அதிகம் இவளது அறையை தாழிட மாட்டாள். அதே போல் இன்றும் அறையை தாழிடாமல் வெறுமென சாத்திவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவளுக்கு அப்பொழுது தான் மாற்று உடையை எடுக்காமல் வந்தது புரிந்தது.
“ஷ்..” என்று தலையில் தட்டியப்படி குளியலறையிலிருந்து வெளியில் வந்தவளது பார்வையில் படுக்கையில் ஜம்பமாய் அமர்ந்திருந்தவன் விழுந்தான்.
நிமிடம் திடுக்கிட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் “இங்க என்ன பண்றீங்க நீங்க?” புருவத்தை உயர்த்தி அதிகாரமாக கேட்டாள்.
மங்கையின் இந்த தொனி அவனது கோபத்திற்கு மேலும் தூபம் போட்டது…கண்களை இறுக மூடித் திறந்தவன் “உன்மேல இருக்கிற சகதியை கழுவ வந்தேன்…” என்றான் சலனமில்லாமல்.
அவனது பேச்சில் அதிர்ந்து நின்றவளுக்கு நன்றாகவே புரிந்தது
மதியம் தான் பேசியதற்கு எதிர்வினை தான் இது என்று…
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள் இழுத்து வைத்த பொறுமையான குரலில் “இதோ பாருங்க சார். உங்ககிட்ட சண்டை போடறளவுக்கு இப்ப என்கிட்ட தெம்பில்லை. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் போங்க..” என்று அறைக்கதவை கைக்காட்டிட, அவனது பார்வை அறைக்கதவில் நக்கலாக படிந்து மீண்டது.
அவனது நக்கல் பார்வையில் புருவங்கள் சுருங்க அவனைப் பார்த்தவள் அப்பொழுது தான் தாழிட்டிருந்த அறைக்கதவை கண்டாள். மனம் நொடியேனும் பலமாய் அடித்துக் கொண்டது.
கண்ணுக்கே புலப்படாத மெல்லிய பயம் அவளை சூழ்ந்தது. பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நின்று ஆடவனைத் தீர்க்கமாக பார்த்தாள். அவளது நிமிர்வும், தீர்க்கமான பார்வையும் இவனை மேலும் உசுப்பேற்றியது.
அவளது பார்வைக்கு பதில் பார்வை பார்த்தபடி நிறுத்தி நிதானமாக பெண்ணை மேலிருந்து கீழாக பார்த்தான். அவனது பார்வையில் பல்லைக் கடித்தாள்.
எப்பொழுதும் போல சுடிதார் அணிந்து துப்பட்டாவை பின் பண்ணிருந்தாள்.மழையில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவன் மேலிருந்து கீழாக பார்க்குமளவிற்கு எல்லாம் அவளது உடையும் இல்லை, அவளும் இல்லை.
“ப்ச்ச்…இது உங்க வீடு இல்லையா? நீங்க எங்க வேணாலும் இருப்பீங்க நானே போறேன்…” என்றவள் அவனைத் தாண்டி செல்லப் பார்க்க பட்டென மங்கையின் முன் வந்து நின்றான்.
அவனது செயலில் அதிர்ந்து விழித்தவள் இருவருக்கும் இடையேயான இடைவெளியை பார்த்துவிட்டு மெல்ல பின்னே நகர அவனோ அவளை நோக்கி முன்னே நடந்தான்.
“என்ன ட்ரை பண்ண பார்க்கறீங்க? நான் பயப்பட வேணும்ன்னா?..” அழுத்தமாக தான் கேட்க நினைத்தாள் ஆனால் குரலில் நடுக்கம் நன்றாகவே தெரிந்தது…
அவளது நடுக்கத்தில் இவனது இதழ்கள் லேசாக வளைய
“பெருசா ஒன்னுமில்லை.என் கைப்பட்ட இடத்தில…” தன் இதழ்களை காட்டி “படனும்…” என்றான்.
முடிவே செய்து விட்டாள் இன்று மதியம் தான் பேசியதற்கு தான் இந்த ஆட்டம் ஆடுகிறான் என்று… கண்களை இறுக மூடித் திறந்தவள்
“மதியம் நீங்க பேசின பேச்சுக்கு நான் பேசினது ரொம்ப கம்மி. அதை மனசுல வைச்சுட்டு இப்படி நடந்துக்கிறது உங்களுக்கே சின்னப் பிள்ளை தனமா தெரியலையா?…” என்றாள்.
‘ஆப்ட்ரால் நீ ஒரு வேலைக்காரி, என்னை சாக்கடைன்னு சொல்லுவ.. அதை கேட்டுட்டு நானும் சும்மா இருக்கணுமா? அதுக்கான பாடத்தை கத்து தர வேண்டாம். நீயிருக்கற இடம் எதுன்னு உனக்கு காட்ட வேண்டாம்…’ வார்த்தைகளால் இதனைக் கூறவில்லை ஆனால் அவனது கண்கள் இந்த வார்த்தைகளை தான் பிரதிபலித்தது.
அபியின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று இவளுக்கு கிளியைப் பரப்பியது…அது அவளது கண்களிலும் பிரதிபலித்தது. கால்கள் தன்னாலேயே ஈரெட்டு பின்னால் நகர்ந்தது.
ஆனந்தியின் கால்கள் பின்னால் நகர, இவனது கால்கள் முன்னோக்கி நகர்ந்தன… அவன் நெருங்க நெருங்க இதுவரை இருந்த மொத்த தைரியமும் நீரில் கரைந்த உப்பானது பாவைக்கு. மனம் ஒருபுறம் அடித்துக் கொண்டது தொண்டைக் குழி ஏறி இறங்க அபியைப் பார்த்தாள்.
அக்கணம் ‘நிமிர்ந்து நில்…உன்னை அவனால் ஒன்றும் செய்ய முடியாது…’ ஒரு பக்கம் மனம் கத்த…
மற்றொரு பக்கம் நேற்றைய அவனது செயல்களை சுட்டிக் காட்டியது… ‘வெறி நாய்களின் கைகளில் சிக்காமல் தப்பித்து வந்தவளுக்கு பாதுகாப்பு கரம் கொடுத்தவன் இவன் தானே. அந்த நேரம் இவனிடத்தில் வேறு எவராக இருந்தாலும் நிச்சியம் தவறாக நடந்திருக்க கூடும் ஆனால் அவனின் நிழல் கூட உன் மீது விழவில்லையே. அத்தனை கண்ணியம் காத்தான் அல்லவா.. அவனை கண்டு இந்தளவுக்கு பயப்பட தேவையில்லை..” என்றது.
ஆனால் இரு மனங்களின் பேச்சைத் தாண்டி கேட்டது ஒரு குரல். “சாதாரண ஆளா இருந்தா உன்னால சமாளிக்க முடியும். ஆனா அவன் குடிச்சிருக்கான். உன்னால அவனை சமாளிக்க முடியாது. எப்படியாவது தப்பிச்சு போ.ஏதாவது யோசி யோசி…” என்றது…
ஏனோ இன்று அவளிருந்த நிலைக்கு மற்ற இரு மனங்களின் பேச்சை துளியும் காதில் விழவில்லை… அவன் நெருங்க நெருங்க இவளது கால்கள் பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தது.
அப்பொழுது பின்னாலிருந்த கையில்லா நாற்காலியில் இடித்தாள். அவள் இடித்த வேகத்தில் ஸ்டூலில் வைத்திருந்த பழத் தட்டு கிழே விழுந்தது. அதனுடன் கூர்மையான கத்தியும் விழ,சட்டென குனிந்து அதனை எடுத்துக் கொண்டாள்.
அபி சுதாரிக்கும் முன்பே இது நடந்திருக்க, ஆனந்தியை கேலியாக பார்த்தான் அபிநயன். “என்ன? குத்த போறயா?உன்னால அது முடியுமா?..” எனக் கேட்டான்.
அவனது கேள்வியில் அவளது கைகள் கத்தியை இறுக்கமாக பற்றியது. “உங்களை எதுக்கு சார் கொல்லப் போறேன். என்னை மாதிரியே அம்மா, அப்பா இல்லாம அனாதை மாதிரி இந்த இரண்டு பிள்ளைகளும் வளர நான் விரும்பல…” அவன் புறமிருந்த கத்தியை அவள் புறம் திருப்ப, அபியின் கால்கள் ஒரு நொடி நின்று மீண்டும் அவளை நோக்கி நடந்தது.
அவன் நெருங்க நெருங்க அவளின் பிடி இன்னும் இறுகியது. கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்ற தைரியமோ என்னவோ சற்றே குரல் உயர்த்தி
“இதோ பாருங்க சார்… இன்னும் ஒரு எட்டு என்னை நோக்கி நீங்க வந்தாலும் என்னை நானே குத்திப்பேன்…” இவனது பார்வை மாறவே இல்லை அவனது நடையின் வேகமும் குறையவில்லை.
“வெறும் வாய்ச் சொல்லு தான், செய்ய மாட்டான்னு நினைக்காதீங்க. இன்னும் ஒரு அடி எடுத்து வைச்சாலும் என்னை நானே குத்திப்பேன்…” என்றாள் மிரட்டலாக.
அவனோ அவளது மிரட்டலை எல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் முன்னேற… அவளின் கைகளில் இருந்த கத்தியின் நுனி ஆனந்தியின் வயிற்றை நெருங்கும் நேரம் பட்டென அவளது கையிலிருந்த கத்தியை மறுபக்கத்தில் இருந்து பிடித்து இழுக்க, கத்தியின் கூர்மை அவனது கையை பதம் பார்த்திருந்தது.
“ஸ்…ஏய் கத்தியை விடு டி…” வலதுக் கையில் ஆழமாக தடம் பதித்திருந்த காயம் வலித்தது அதன் விளைவு அவளிடம் கத்தினான்.
அவனின் கத்தல் தன்னை துளியும் பாதிக்கவில்லை “மாட்டேன்…” என்றாள்.
அவள் கண்களில் பயமும், கோபமும் போட்டிப் போட்டு நின்றது. அதையும் மீறி அவள் கத்தியை பிடித்திருந்த விதம், அபியை நிதானிக்க வைத்தது. அவனது மொத்த கோபமும் காற்றில் கரைந்த கற்பூரமானது. இத்தனை நேரமும் அவளது பேச்சை நடிப்பு என்றே நினைத்தான். ஆனால் அவளது திடமும், பேச்சும், அவள் கண்களில் தெரிந்த தீர்க்கமும் இவனை யோசிக்க வைத்தது.
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவன் “இந்த தைரியம் நேத்தே வந்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமைக்கு நீயும்,நானும் வந்திருக்க மாட்டோம்…’ நிதானக் குரலில் கூறினான்.
அவனது நிதானக் குரலும், அவன் கண்களில் தெரிந்த கனிவும் இவளது இறுக்கத்தை மெல்ல தளர்த்தியது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்டவன் அவளது கையிலிருந்த கத்தியை பிடுங்கி எறிந்திருந்தான்… அபியின் செய்கையில் திடுக்கிட்டு அவனைப் பார்க்க, அவனோ இவளை தீர்க்கமாக பார்த்தான்.
அபியின் பார்வையை கண்டுகொள்ளாமல் அவனைத் தாண்டி சென்றவள் பின்னால் திரும்பிக் கூட பார்க்காது அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.
அதே கணம் அபியின் இரு கைகளிலும் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக தரையில் விழ ஆரம்பித்திருந்தது.
ஆனந்தி வெளியில் சென்ற அடுத்த சில நிமிடங்களில் அவசரமாக ஆனந்தியின் அறைக்குள் ஓடி வந்தார் சீதா. அபியிடம் ஒன்றும் விசாரிக்கவில்லை, கீழே தாழ்ந்திருந்த அவனது கையை தூக்கிப் பிடித்தபடி ஆராய்ந்தார். காயம் பெரியதாக ஆழமில்லை என்றாலும் இரத்தம் நிற்காமல் வழிந்தது.
“முருகனை வண்டி எடுக்க சொல்றேன்.ஒரேட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வரலாம்…” என்றவர் கையோடு அபியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
44
+1
3
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவளே அவள் வாழ்வில் ஒரே நாளில் நடந்தேறிவிட்ட அனர்த்தங்களை எண்ணிவருந்தி கொண்டிருக்க இடையில் இவன் வேறு.
இவனை மீறி யாரும் பேசி விட கூடாது, அலட்சியமாக எண்ணி விட கூடாது என்றால் எப்படி?
கோபத்தில் அறிவை இழந்து என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறான்.
அவளை பயங்கொள்ளச் செய்து அடிப்பணிய வைத்துவிட வேண்டும்.
எல்லா நேரமும் வீரமாக விவேகமாக செயல்பட முடியுமா என்ன? அதை இவனே செய்திருக்காலாமே? அவள் கண்ணீரை காரணம் காட்டி இவனே இவனை சமாதானப்படுத்திக்கொள்கிறான்.