
அத்தியாயம் 27
“சோழா உன் டேர்ன் முடிஞ்சது… நெக்ஸ்ட் நான் தான்…” என்ற குந்தவியின் குரலில் தூக்கத்தில் இருந்து விழித்தான் அபிநயன்.
“ஷ்…” என்ற மெல்லிய முனகலோடு எழுந்து அமர்ந்தான். இரவு வெகு நேரம் கழித்தே உறங்கியதால் கண்கள் இரண்டும் தீயாய் எரிந்தது…
கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவன் சுவர் கடிகாரத்தை பார்த்தான். அது அதிகாலை ஆறு மணியை காட்டியது. ‘நேரத்திலேயே பிள்ளைகள் இருவரும் எழுந்து விட்டனரா? இத்தனை மணிக்கு எழுந்துக்கிற பழக்கம் இல்லையே…’ என நினைக்க நினைக்கவே இடையிட்டது அவன் மனம்…
‘நீ கவனிச்சது இல்லைன்னு சொல்லு. சும்மாவே உன் பிள்ளைகளை நீ கண்டுக்க மாட்ட, அந்த பொண்ணு வந்ததுல இருந்து உன் பிள்ளைங்க இரண்டு பேரையும் கவனிக்கிறது இல்லை. எத்தனை மணிக்கு எழுந்துக்கிறாங்க, எத்தனை மணிக்கு தூங்கறாங்க, சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட கவனிக்கிறது இல்லை நீ…” என்றது… ஓரடியாக குற்றம் சுமத்திய மனதிற்கு பதில் சொல்லாமல் எழுந்தமர்ந்தான்.
உறக்கமின்மையால் கண்கள் ஒரு பக்கம் எரிச்சலைக் கொடுத்தது என்றால்,இன்னொரு பக்கம் இந்த மனம் வேறு கண்ட நேரத்தில் அதையும் இதையும் பேசிப் பேசி தலைவலியை கொடுத்தது. நெற்றியை அழுத்தமாக தேய்த்தால் நன்றாக இருக்குமென நினைத்தவன் நெற்றியை வருட கையைக் கொண்டு செல்ல அதுவோ இன்னும் வலியைக் கொடுத்தது.
“ச்சை..” என்றபடி கைகளை கீழ் இறக்கி கொண்டான்.
“இது உனக்கு தேவையா?…” என்று கைகளிலிருந்த வெள்ளை நிற கட்டு இவனைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது…
இத்தனைக்கும் தன் கோபம் தான் காரணமென நினைத்தவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. கொஞ்சம் கோபத்தை அடக்கி நிதானித்து இருந்தால் இத்தனையும் நடந்திருக்காது அல்லவா.
அவள் பேசியதெல்லாம் பெரியதாக எடுத்துக் கொண்டு குடித்துவிட்டு வந்ததும் இல்லாமல் அவளது அறைக்கு சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று முற்றும் முழுதாக நிதானத்திற்கு வந்த பிறகே உணர்ந்தான்.
தெரியாமல் செய்யும் தவறுகள் கூட சில நாட்களில் மறந்து விடுமோ என்னவோ. தெரிந்தே செய்யும் சில தவறுகள் நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். மனதின் ஓரத்தில் நெருஞ்சி முள்ளைப் போல் உறுத்திக் கொண்டே இருக்கும். தற்பொழுது அபிக்கும் அதுதான் நடக்கிறது.
அவனால் அவன் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை கோபம் தான் வந்தது…கோபத்தை அடக்க கண்களை இறுக மூடிக் கொண்டான் கண்களுக்குள் நேற்றைய ஆனந்தியின் உருவம் வந்து விழுந்தன…
“ப்ச்…” என்றபடி கண்களை திறந்த
நேரம் “சோழா, குந்தவி தண்ணில விளையாடினது போதும்…” கண்டிப்போடு ஒலித்தது பெண்ணின் குரல்… சட்டென படுக்கையிலிருந்து எழுந்தவள் பால்கனியை நோக்கி நடந்தான்.
பால்கனியின் கதவைத் திறக்க குளிர் காற்றோடு சேர்ந்து செண்பக மலரின் வாசமும் இதமாய் தீண்டியது ஆடவனை… ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவனுக்கு இத்தனை நேரமிருந்த தலைவலி கூட காற்றோடு கலந்தது போல் உணர்ந்தான்.
நேராக பால்கனியின் கம்பியில் கைகளை வைத்தபடி நின்று கொண்டான். அவனது பார்வை முழுவதும் கீழே தோட்டத்தில் பிள்ளைகளோடு நின்றிருந்த ஆனந்தியின் மீது தான் இருந்தது… எப்பொழுதும் துறுத்துறுவென இருப்பவள் இன்று அத்தனை அமைதியாக காணப்பட, அவளையே இமைக்காது பார்த்தான்.
நேற்றைய நிகழ்வுகள் மீண்டும் கண்களுக்குள் மின்னி மறைந்தன…
சிறு பெண்ணை எந்த நிலையில் கொண்டு சென்றோம் என நினைத்தவனின் மனம் குற்ற உணர்வில் தவித்தது. நேற்றிரவு அவள் கண்களில் தெரிந்த பயமும், கோபமும் இப்பொழுதும் இவனின் கண்களுக்குள் மின்னி மறைந்தன…
‘தன்னை தானே கொலை செய்து கொள்ளுமளவுக்கு துணிந்து விட்டாள் பாரேன்… சரியான பயந்தாங்கோழி (பயந்தாரி)…’ என நினைத்த கணம்
‘அவள் அதை செய்ய துணியவே நீ தான் காரணம்…’ என்றது இவனது மனம்…
“அப்ப என்னைக் கொல்ல வேண்டியது தானே. தப்பு செஞ்ச என்னை விட்டுட்டு அவளுக்கு அவளே குத்திட்டு செத்தா எல்லாம் சரியா போயிடுமா? தற்கொலை எல்லாத்துக்கும் தீர்வாகாது…” என்றான் அக்மார்க் நல்லவன் போல…
‘வில்லன் வேலையைப் பார்த்திட்டு வந்துட்டு என்னவோ ரொம்ப நல்லவன் மாதிரியே பேசறான் பாரேன்…’ என்ற மனதை துளியும் கண்டுகொள்ளாமல்
ஆனந்தியை பார்த்தது பார்த்தபடி நின்றான்.
எப்பொழுதும் போல கண்களுக்கு உறுத்தாத உடை தான் அணிந்து இருந்தாள். உச்சியில் முடிந்த கற்றை கூந்தல் அவளின் கிளிர்ப்பிற்கு அடங்காது அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தது. அதனை செவியோரத்தில் ஒதுக்கி கொண்டே பிள்ளைகளிடம் ஏதோ தீவிரமாக கூறிக் கொண்டிருந்தாள்.
சாதாரணமாக தான் பார்த்து கொண்டிருந்தான் வேறு எவ்வித எண்ணமும் அவனிடமில்லை ஆனால் அவளை காண காண மனதில் எழும் கேள்வியை மட்டும் தடுக்க முடியவில்லை இவனால்.
அது ‘நேற்று இவனை எதுவும் செய்யாமல் விட்டது ஏன்? என்ற கேள்வி தான். அப்பொழுதே அதற்கான காரணத்தை கூறினால் தான் ஆனால் அதனை இவன் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.
அவனது பிள்ளைகள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக இவன் இல்லாமல் தான் வளர்த்தனர் என்பது அவள் அறிந்தது தான்…
அது மட்டுமா, பிள்ளைகளை பெத்து போட்டது மட்டுமே இவர்கள்… மற்றபடி பிள்ளைகளை பார்த்துக் கொண்டது அனைத்தும் அவர்களது அன்னைகள் மட்டுமே என்பதும் சீதாவின் மூலம் ஆனந்தி அறிந்தது தானே… அப்படியிருக்க நேற்று தான் நடந்து கொண்டதற்கு அவள் கூறிய காரணத்தை தான் அபியால் ஏற்க முடியவில்லை.
“என்ன நினைக்கிறாள் அவள்…” என்ற எண்ணம் தான் அவனது மனம் முழுக்க ஓடிக் கொண்டிருந்தது…
நேற்று இரவு வரையிலும் அவள் தன்னை திட்டமிட்டு திருமணம் செய்து கொண்டால் என்ற காரணத்தை அப்படியே விட்டுவிட்டு இன்று மற்றொரு காரணத்தை பிடித்து கொண்டிருக்கிறான்… இது எந்த நிலைக்கு இருவரையும் கொண்டு செல்லுமோ..
இங்கு பிள்ளைகளோடு நின்றிருந்த ஆனந்தியின் உள்ளம் ஏதோ ஓர் எச்சரிக்கையை எழுப்பிக் கொண்டே இருந்தது…. மனதின் விடாத நச்சரிப்பில் சுற்றும், முற்றும் பார்வையை சுழல விட்டாள். பின்
நிதானமாக அண்ணார்ந்து பால்கனியை பார்த்தாள். அவள் உள் மனம் கூறியது சரியென்பதை போல அபி தான் நின்றிருந்தான். நொடியேனும் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி கொண்டது..
அக்கணம் “குளோரி,இவளை பாரு…” சோழாவின் கத்தலில் இருவரும் தங்களின் பார்வையை அவசரமாக விலக்கிக் கொண்டனர்.
அடுத்தடுத்த வந்த நிமிடங்கள் முழுவதும் பிள்ளைகளுக்காக மட்டுமே அவளது நேரம் செல்ல.. சீதாவின் நேரம் அவரின் பிள்ளையை கவனிப்பதில் சென்றது. பாத்ரூம் வேலைகளை மட்டும் அவனே பார்த்துக் கொண்டான். மற்றவைகளை அவனால் தனியாக செய்யவே முடியவில்லை சீதாவின் உதவியை தான் நாட வேண்டியதாக இருந்தது..
‘அவளுக்கு தண்டனை கொடுத்தது போல தெரியல, உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கிட்ட மாதிரி தான் இருக்கு…’ என்று இந்த மனம் வேறு இவனை ஒரு பக்கம் படுத்திக் கொண்டிருந்தது…
அதற்கு மேல் இந்த கை வலி வேறு ஒருவழி செய்து கொண்டிருந்தது.. ஒரு கையில் அடிப்பட்டிருந்தால் சமாளித்து இருப்பானோ என்னவோ… தற்பொழுது இரண்டு கைகளிலும் காயம் இருக்க இவனால் துளியும் சமாளிக்க முடியவில்லை..
பேசாமல் நர்ஸ் யாராவது அப்பாய்மெண்ட் செய்வோமா என்று கூட யோசித்தான். ஆனால் ஒருபக்கம் செலவே இல்லாமல் இவனை புரோமோட் செய்து கொண்டிருந்தார்கள் யூடியூப் சேனல்காரர்கள்… இதில் இதை செய்தால் அவர்களின் கற்பனை திறனை மேலும் வளர்த்து விட்டது போலல்லவா ஆகும். அதனாலயே அவ்வெண்ணத்தை அப்படியே விட்டுவிட்டான்.
உண்மையை சொல்லப்போனால் இன்றும் அன்றைய திருமண செய்தியே விதம் விதமாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம்! வேறு கண்டன்ட் இன்னும் கிடைக்கவில்லை போல அது கிடைக்கும் வரை இவனது பெட்ரூம் வரைக்கும் பேசிவிட்டு தான் ஓய்வார்கள். அப்படியிருக்க புதியதாக வேறு கன்டன்ட் தர இவனுக்கு விருப்பம் இல்லை…
அன்றைய நாள் முழுவதும் அவனது அறையிலேயே சென்றது. முக்கியமான அலுவலக வேலைகளை மட்டும் அலைபேசியில் பேசி முடித்து கொண்டான். மற்றபடி உண்பது, உறங்குவது என்று தான் அன்றைய பொழுது சென்றது…
மாலை பிள்ளைகள் இருவரும் வந்திருந்தனர். காலையிலிருந்து மாலை அவர்கள் வீடு திரும்பும் வரை மியூசியம் போல இருந்த வீடு… தற்பொழுது உயிர்ப்போடு இருப்பதாக தோன்றியது அபிக்கு.
“குளோரி,எனக்கு இந்த பூ எட்டலை…” என்ற சோழாவின் குரலும்
“பரவாயில்ல, நீயும் குந்தவியும் மல்லிப்பூ எடுங்க…” என்ற ஆனந்தியின் குரலும் அடுத்தடுத்து கேட்டது.
கார்டனில் தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்தது அபிக்கு… சட்டென படுக்கையில் இருந்து எழுந்தவன் பால்கனியை திறந்தான். மிதமான வேகத்தில் தென்றல் இவனை தீண்டி சென்றது.
கண்களை மூடி காற்றை ஆழ்ந்து சுவாசித்தவன் காலையில் நின்றது போல் நின்று கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் இப்படி தான் சென்றது.
அன்றிலிருந்து மெல்லிய புன்னகையுடன் ஆரம்பிக்கும் இவனது காலை பொழுது அதே மெல்லிய புன்னகையுடன் முடியும்…
****
கடந்த ஒரு வாரமாக அறையிலிருந்தபடியே பிள்ளைகளை கவனித்து கொண்டிருந்தவனுக்கு இன்று ஏனோ அவர்களோடு இருக்க வேண்டும் போலிருந்தது.
அவர்கள் மட்டுமே இருக்கும் உலகத்தில் அவனும் இணைந்து கொள்ள வேண்டுமென்று மனம் பரபரத்தது. அதன் விளைவு அன்று மாலையே இளையவர்களை தேடி வீட்டு தோட்டத்திற்கு சென்றான்.
எப்பொழுதும் போல ஆனந்தி ஜாதிமல்லி பந்தலின் அருகில் இருக்க, பிள்ளைகள் இருவரும் சற்று தள்ளியிருந்த மல்லிகை செடியில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தனர்…
மெல்லிய புன்னகையுடன் இருவரையும் நெருங்கியவன் “என்ன பண்றீங்க …” எனக் கேட்டான். தந்தையின் குரலில் இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர். முதலில் ஆச்சரியம் காட்டிய அவர்களது கண்கள் பின் சிரித்தது மெளனமாக
“பூ பறிச்சுட்டு இருக்கோம்…” முதலில் குந்தவி பதில் கூறி பின் சோழா அக்காவை போல பதில் சொல்ல மெல்ல சிரித்தான்.
“பூ பறிச்சு முடிச்சதும் என்ன பண்ண போறீங்க? ஹோம் வொர்க் எல்லாம் முடிஞ்சதா?…”விடை தெரிந்தே கேள்வியைக் கேட்டான்.
இருவரும் அதிசயமாக தந்தையை பார்த்தாலும் பதில் கூறினர். அடுத்தடுத்து அவனது கேள்விகள் நீள, அவர்களது பதில்களும் தொடர்ந்தது.
அதே கணம் இங்கு ஆனந்தியும் அவனது குரலில் திரும்பினாள். ஏனோ அவனைக் கண்டதும் அவளையும் அறியாமல் மெல்லிய நடுக்கம் சூழ்ந்தது. அதை மறைக்க முயன்று தோற்றவள் பூக்கூடையை அருகிலிருந்த கல் பெஞ்சில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். செல்லும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் சிறு தோள் குலுக்களுடன் பிள்ளைகளின் புறம் திரும்பி கொண்டான்.
குழந்தைகள் இருவருக்கும் தந்தை வந்து பேசியதில் அத்தனை மகிழச்சி. அது முகத்திலும் வெளிப்பட சிறு துளியாய் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலை சொல்லி கொண்டிருந்தவர்கள் நேரம் செல்ல செல்ல சலசலக்கும் அருவியாய் பேச தொடங்கியிருந்தனர்.
குழந்தைகள் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து இன்று தானே பார்க்கிறான். தவறு மொத்தமும் தன் மீது அல்லவா… அவர்களுடன் நேரம் செலவழிக்காத தன்னை நினைத்தவனுக்கு மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது… சீதா பேசிய பிறகு அவர்களை அழைத்து வருவது, அவர்களோடு உண்பதென்று இருந்தான் தான் ஆனால் அது ஒரு வாரம் மட்டுமே நீடித்தது.
அதற்கு பின் அவனது நாட்கள் இறக்கை இல்லாமல் தான் பறந்தது
காலையில் பிள்ளைகள் எழும் முன் பணிக்கு செல்பவன் இரவு அவர்கள் உறங்கியதும் தான் வருவான்.
அதுவே அனிதா இருக்கும் பொழுது அவனது நேரம் முழுக்க அவளோடு மட்டுமே செல்லும் அவள் இல்லா நேரத்தில் அவர்களோடு அபி இருந்தது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக தொழில் தொழில் என்று சுற்றிக் கொண்டிருந்தவன் சில மாதங்களுக்கு முன்பு தான் சிறுவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்து கொண்டான். அப்பொழுதும் கூட இளையவர்களோடு இவனில்லை…
அதிசயம் போல ஏதாவது ஒரு நாள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வான். மற்றபடி அவர்களோடு இவனிருந்த நேரம் என்பது குறைவு தான். ஆனந்தி வந்த பிறகு அதுவுமில்லை..
அன்றைக்கு அவனது மனமும், அவனது அன்னையும் பலமாக குற்றம் சாட்டவும் தான் தினமும் மாலையில் பிள்ளைகளோடு இருக்க முயற்சித்தான். ஆனால் தனக்கும், பிள்ளைகளுக்கும் இடையே விழுந்த விரிசல் சரியாகவே இல்லை. அதனை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்பதை விட சரிசெய்ய தெரியவில்லை என்பது சரியாக இருக்கும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
40
+1
5
+1
2

