நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! – அத்தியாயம் 37

Loading

முதலில் நிரஞ்சனாவைக் கண்டு கொண்டது பரத்.

உடனே பரத்தின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போக, நிரஞ்சனாவை வெறித்துப் பார்த்தான்.

பரத்தின் பார்வை சென்ற திசையை நோக்கிய சகுந்தலா உடனே பரத்தின் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, “வா நிரஞ்சனா. ஏன் அங்கயே நின்னுட்ட?” எனக் கேட்டாள் புன்னகையுடன்.

துஷ்யந்த் அமைதியாக நிரஞ்சனாவின் முகத்தில் பார்வையைப் பதித்து இருந்தான்.

வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் உள்ளே நுழைந்த நிரஞ்சனா பரத்தின் அருகில் தான் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு, “பரத் குட்டிக்கு ஆன்ட்டி உங்களுக்கு பிடிச்ச டாய்ஸ் எல்லாம் கொண்டு வந்து இருக்கேன். பரத் சீக்கிரமா எழுந்து வந்து இதெல்லாம் விளையாடுவீங்களாம்.” என்றாள் பரத்திடம் புன்னகையுடன்.

தன்னை மீறி பரத்தின் முகத்தில் குட்டியாக ஒரு புன்னகை வந்து போக, அதுவே நிரஞ்சனாவிற்குப் போதுமாக இருந்தது.

“நான் போய் பரத்தோட ரிப்போர்ட்ஸ செக் பண்ணிட்டு வரேன். யூ கேரி ஆன்.” எனப் பொதுவாகக் கூறிய துஷ்யந்த் தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்தவாறு பரத்திடம் இருந்து தன் கரத்தை விலக்க முயன்றான்.

அப்போது தான் கவனித்தாள் பரத்தின் பிடியின் உறுதியை.

துஷ்யந்த் பரத்தைக் குழப்பமாக நோக்க, சிறுவனின் பார்வையோ நிரஞ்சனாவிடமே இருந்தது.

அதனைக் கண்ட துஷ்யந்தினால் பரத்தின் மனநிலையை ஓரளவு கணிக்க முடிந்தது.

மறு கையால் பரத்தின் முடியைக் கோதி விட்ட துஷ்யந்த், “சேம்ப்… அங்கிள் சீக்கிரயா வந்துடுவேன். அது வரைக்கும் குட் போயா இருக்கணும்மெதுவாகத் தளர, அங்கிருந்து கிளம்பிய துஷ்யந்திற்கு நிரஞ்சனாவின் முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை.

இவ்வாறே இரண்டு மூன்று நாட்கள் கழிய, பரத்தின் உடல்நிலையிலோ எந்த மாற்றமுமே இல்லை.

ஆனால் சிறுவனோ அடிக்கடி மயங்குவதும் மூச்சு வாங்குவதுமாக இருக்க, துஷ்யந்திற்கு மனம் தாளவில்லை.

பரிமளமும் சந்திரசேகரனும் கூட அடிக்கடி வந்து பரத்துடன் நேரம் செலவழித்தனர்.

இடைக்கிடையே நிரஞ்சனாவும் வந்து போக, அவளைக் காணும் நேரம் எல்லாம் பரத்தின் முகத்தில் ஒரு வெறுமை.

அதே நேரம் துஷ்யந்தின் கைப்பேசி ஒலி எழுப்ப, எடுத்துப் பேசியவனின் முகத்தில் புன்னகை.

உடனே தன் வீட்டினரையும் சகுந்தலாவையும் தேடி வந்த துஷ்யந்த், “அப்பா… அம்மா…. சகுந்தலா… பரத்துக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ணத் தேவையான ஹார்ட் கிடைச்சிடுச்சு.” என்றான் உற்சாகமாக.

அதனைக் கேட்டு சகுந்தலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அவளின் வேண்டுதல்கள் வீண் போகவில்லை அல்லவா.

“என்னப்பா சொல்ற? தெளிவா சொல்லு.” என்றார் சந்திரசேகரன்.

“அப்பா… நான் நிறைய ஹாஸ்பிடல்ஸ்ல கூட பரத்துக்கு தேவையான ஹார்ட் கிடைச்சா சொல்ல சொல்லி சொல்லி வெச்சு இருந்தேன். அதான் ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து இப்போ கால் வந்தது. ஏதோ ஆக்சிடன்ட் கேஸாம். ப்ரைன் டெத்னு. பரத்துக்கு எல்லா விதத்துலயும் பொருந்துதான்னு டெஸ்ட் பண்ணிட்டு இப்போ உடனே அனுப்பி வெச்சிருக்காங்க.” என்றான் துஷ்யந்த்.

அவனின் குரலிலேயே அவ்வளவு மகிழ்ச்சி.

“அப்போ என் பையன் முழுசா குணம் ஆகிடுவானா துஷ்யந்த்?” எனக் கேட்டாள் சகுந்தலா ஆர்வமாக.

“ஆமா… உடனடியா சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணணும். இன்னைக்கு நைட்டுக்கே சர்ஜரிய ஆரம்பிக்கலாம். நான் போய் அதுக்கான ஏற்பாடு எல்லாத்தையும் கவனிக்கிறேன்.” என்று விட்டு அங்கிருந்து சென்றான் துஷ்யந்த்.

“நான் போய் கோவில்ல ஒரு வேண்டுதல நிறைவேத்திட்டு பரத் பெயர்ல பூஜை பண்ணிட்டு வரேன்.” எனப் பரிமளம் கிளம்ப, அவருடனேயே சந்திரசேகரனும் கிளம்பினார்.

நிரஞ்சனாவும் சகுந்தலாவும் பரத் இருந்த அறைக்குள் நுழைய, அப்போது தான் கண் விழித்து இருந்தான் பரத்.

“பரத்… அம்மா ரொம்ப ரொம்ப ரொம்….ப சந்தோஷமா இருக்கேன்.
என் செல்லப் பையனுக்கு புது ஹார்ட் வந்துட்டு இருக்கு. பரத் சீக்கிரமே குணமாகி ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடலாம். ஸ்கூல் போகலாம். எல்லாமே பண்ணலாம். மம்மி ஒன்னும் சொல்ல மாட்டேன்.” என்ற சகுந்தலா அளவுக்கு அதிகமான சந்தோஷத்தில் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

அது நிரஞ்சனாவிற்குமே புரிந்தது.

சகுந்தலாவின் மனதில் இருந்த அழுத்தங்கள் குறையட்டும் என்று நிரஞ்சனாவும் அவளை அவள் பாட்டில் விட்டாள்.

சகுந்தலா கூறியதைக் கேட்ட பரத்தின் முகத்திலோ கிஞ்சித்தும் சந்தோஷம் இல்லை.

மாறாக ஏதேதோ யோசனையில் இருந்தவனின் தலையைத் தடவிய நிரஞ்சனா, “என்னாச்சு கண்ணா?” எனக் கேட்டாள் பரிவாக.

பரத்தோ நிரஞ்சனாவின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவளின் முகத்தையே விழி சிமிட்டாமல் நோக்கினான்.

சில நொடிகள் கழித்து தன் தாயின் முகத்தைப் பார்த்த பரத், “மம்மி… பசிக்குது.” என்றான் மெல்லிய குரலில்.

இன்னுமே பரத்தால் சரியாகப் பேச முடியவில்லை.

ஓரிரு வார்த்தைகள் பேசும் போதே சிறுவனுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.

மகன் வாய் விட்டு பசி என்று கூறவுமே சகுந்தலாவிற்கு அனைத்தும் மறந்து போக, “நிரஞ்சனா… நீ பரத் கூட இரு. நான் போய் பரத்துக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்.” என்றவள் உடனே அங்கிருந்து கிளம்பினாள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் சகுந்தலா திரும்பி வந்த போது பரத் உறங்கி இருக்க, நிரஞ்சனாவின் கண்கள் சிவந்து போய் முகம் களையிழந்து காணப்பட்டது.

“என்னாச்சு நிரஞ்சனா? ஏன் ஒரு மாதிரி இருக்க? கண் எல்லாம் வேற கலங்கி இருக்கு.” எனக் கேட்டாள் சகுந்தலா குழப்பமாக.

உடனே தன் முகத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்ட நிரஞ்சனா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ஒன்னும் இல்ல சகுந்தலா. கண்ணுல தூசி விழுந்துடுச்சு. வேற ஒன்னும் இல்ல.” என்றாள்.

சகுந்தலா பரத்தை எழுப்பி அவனுக்கு உணவை ஊட்ட, நிரஞ்சனாவோ வெளியே சென்று அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.

சில மணித்துளிகள் கழித்து அங்கு வந்த துஷ்யந்த் தலை குனிந்து அமர்ந்து இருந்த நிரஞ்சனாவை நெருங்கி, “நிரஞ்சனா…” என அழைத்தான்.

ஆனால் அது கூட நிரஞ்சனா வின் செவிகளில் விழவில்லை.

தலை குனிந்தவாறே அமர்ந்து இருந்தவளோ, “நிரஞ்சனா…” என அழுத்தமான குரலில் அழைத்தவாறு துஷ்யந்த் அவளின் தோளில் கை வைக்கவும் சட்டென தன்னிலை அடைந்தவள் எழுந்து நின்றாள் பதட்டமாக.

“ஹேய் கூல் கூல்… நான் தான்.” என்றான் துஷ்யந்த் அவசரமாக.

நிரஞ்சனா பதில் ஏதும் கூறாமல் துஷ்யந்தின் முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.

துஷ்யந்திற்கு இன்னுமே நிரஞ்சனாவுடன் மனம் விட்டுப் பேச ஒரு சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.

துஷ்யந்த் ஓய்வில் இருக்கும் நேரம் நிரஞ்சனா வீட்டுக்குச் சென்று இருப்பாள்.

ஆனால் கைப்பேசியில் பேசுவதை விட நேரில் பேசுவதே சிறந்தது என்பதால் அவளுக்கு அழைப்பதைத் தவிர்த்தான்.

மருத்துவமனையிலோ எப்போதுமே சகுந்தலா அல்லது பரத்துடனேயே நிரஞ்சனா இருக்கவும் அவளுடன் பேசவே முடியவில்லை துஷ்யந்தால்.

இப்போது சந்தர்ப்பம் கிடைக்கவும், “நிரஞ்சனா…” என துஷ்யந்த் ஏதோ கூற வர, அதற்குள் கோயிலுக்குச் சென்று இருந்த பரிமளமும் சந்திரசேகரனும் திரும்பி வந்து இருந்தனர்.

அதே நேரம் சகுந்தலாவும் பரத்தின்‌ அறையை விட்டு வெளியே வர, துஷ்யந்திடம் இருந்து விலகிய நிரஞ்சனா சகுந்தலாவின் அருகே சென்று அவளின் கரத்தைப் பிடித்து அழைத்து வந்து துஷ்யந்தின் அருகில் நிறுத்தினாள்.

துஷ்யந்தைத் தவிர மற்ற மூவருமே நிரஞ்சனாவின் செய்கையைப் புரியாமல் நோக்க, துஷ்யந்தோ எதுவும் பேசாமல் நிரஞ்சனாவின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.

பின் துஷ்யந்தைப் பார்த்து லேசாகக் புன்னகைத்த நிரஞ்சனாவின் முகம் இப்போது நன்றாகவே தெளிந்து இருந்தது.

சகுந்தலாவின் கரத்தை எடுத்த நிரஞ்சனா துஷயந்தின் கரத்தைப் பிடித்து அதன் மீது சகுந்தலாவின் கரத்தை வைக்கவுமே அனைவருமே ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

துஷ்யந்த் அதிர்ந்து நின்று இருந்தது சில நொடிகளே.

எதுவும் பேசாமல் நிரஞ்சனாவை அழுத்த நோக்கினான் துஷ்யந்த்.

“நிரஞ்சனா…” என்றாள் சகுந்தலா அதிர்ச்சியுடன்.

சகுந்தலாவைப் பார்த்து புன்னகைத்த நிரஞ்சனா துஷ்யந்த் மற்றும் சகுந்தலாவின் கரத்தை சேர்த்துப் பிடித்துக் கொண்டு, “இது தான் கடவுள் போட்ட முடிச்சுன்னு நினைக்குறேன். அதனால தான் இவ்வளவு எல்லாம் நடந்த அப்புறமும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கீங்க. நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உட்பட யாருமே சந்தோஷமா இருக்க மாட்டோம். கடமைக்கு ஒரு வாழ்க்கைய வாழ வேண்டி வரும். அது கடைசியில பிரிவுல தான் எங்கள கொண்டு வந்து நிறுத்தும். ஆனா இப்போ அப்படி இல்ல. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா உங்க ரெண்டு பேரோட பையன் ரொம்ப சந்தோஷப்படுவான். பிறந்ததுல இருந்தே தனியா வளர்ந்த பரத்துக்கு ஒரு குடும்பமே கிடைக்கும். ஒரு அழகான குடும்பத்த கலைச்ச பாவம் எனக்கு வேணாம்.” என்றவளின் குரல் கடைசியில் உடைந்து விட்டது.

இமை தாண்ட இருந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து அடக்கியவாறு விரக்தியாகப் புன்னகைத்தாள் நிரஞ்சனா.

தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த சகுந்தலா தன் கரத்தை நிரஞ்சனாவிடம் இருந்து இழுக்க முயல, நிரஞ்சனா சகுந்தலாவின் கரத்தை துஷ்யந்தின் கரத்துடன்‌ சேர்த்து மேலும் அழுத்திப் பிடித்தாள்.

“நிரஞ்சனா நீ என்ன பேசிட்டு இருக்க? இது ஜஸ்ட் ஒரு ஆக்சிடன்ட். துஷ்யந்த் மேல ஒரு தப்பும் இல்ல. பரத்துக்கு குணமானதும் நான் என் பையன அழைச்சிட்டு இங்க இருந்து போய்டுவேன். உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு.” என சகுந்தலா கூறவும் துஷ்யந்தைப் பார்த்து நிரஞ்சனா கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

“என் பையனுக்கு அப்பா, அம்மா எல்லாமே நான் மட்டும் தான். எங்களால வீணா உங்க வாழ்க்கைய அழிச்சிக்க வேணாம்.” என்ற சகுந்தலா நிரஞ்சனாவின் பிடியில் இருந்த தன் கரத்தை விலக்க முயன்றாள்.

ஆனால் இம்முறை சகுந்தலாவின் கரத்தை விடுவிக்காது அழுத்தமாகப் பற்றி இருந்தது என்னவோ துஷ்யந்த் தான்.

சகுந்தலா துஷ்யந்தை அதிர்ச்சியுடன் நோக்க, அவனோ சகுந்தலா பரத்தை அழைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்புவதாகக் கூறிய வார்த்தைகளிலேயே கோபமாக நின்று இருந்தான்.

அதனால் தான் செய்து கொண்டு இருக்கும் காரியத்தை துஷ்யந்த் உணரவில்லை.

ஆனால் இரு பெண்களுமே அதனைத் தெளிவாக உணர்ந்தனர்.

சகுந்தலாவிற்கு அதிர்ச்சி என்றால் நிரஞ்சனாவோ வலி, வேதனை, விரக்தி என உணர்வுக் குவியலாகக் காணப்பட்டாள்.

“சகுந்தலா ப்ளீஸ்… நான் என் முடிவுல உறுதியா இருக்கேன்.‌ உங்க பையனுக்காக வேண்டியாவது நீங்க இதை ஏத்துக்கிட்டு‌ தான் ஆகணும். நானும் அதைத் தான் விரும்புறேன்.” என்ற நிரஞ்சனா சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் கோர்த்து இருந்த கரங்களை லேசாக அழுத்தி விட்டு துஷ்யந்தைப் பார்த்து புன்னகைத்தாள்.

நிரஞ்சனாவின் விழிகளில் குளம் கட்டி இருந்த கண்ணீரைக் கண்டு துஷ்யந்தின் குற்றவுணர்வு அதிகரித்தது.

அதே நேரம் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கவும் துஷ்யந்த் விரும்பவில்லை.

துஷ்யந்திடம் பார்வையாலேயே விடை பெற்ற நிரஞ்சனா அங்கிருந்து கிளம்பும் போது, “நிரும்மா…” என்றார் பரிமளம் வருத்தமாக.

சந்திரசேகரனும் நிரஞ்சனாவை வருத்தமாக நோக்க, பெரியவர்கள் இருவரினதும் கால்களில் விழுந்து எழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட நிரஞ்சனாவோ திரும்பியும் பார்க்காமல் வேகமாக அங்கிருந்து கிளம்பிப் போனாள்.

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்