
போலீஸ் நிலையத்தில் போதையில் இருந்த ரிஷிகேஷிற்கோ அவர்கள் அடித்த அடியில் போதையில் முற்றாகக் கலைந்து விட்டது.
என்ன நடக்கிறது எனப் புரியவே அவனுக்கு வெகுநேரம் எடுத்தது.
அதற்குள்ளே அடி வெளுத்து விட்டார்கள்.
போதை தெளிந்தவனுக்கு முதலில் சகுந்தலா எங்கே என்று நினைவு வந்தது.
ஆனால் போலீஸாரின் பேச்சிலேயே என்ன நடந்தது என அறிந்த ரிஷிகேஷிற்கு சகுந்தலாவின் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
ரிஷிகேஷிடம் இருந்து தப்பிய சகுந்தலாவை கமலி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூற அவர்களுக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி.
தம் மகளும் இதே போலத் தானே கஷ்டப்பட்டு இருப்பாள் என எண்ணிய அப் பெற்றோர்களுக்கு தம் கண்ணீரை அடக்க முடியவில்லை.
அடுத்த சில நாட்களுக்கு கமலியுடன் தங்கிய சகுந்தலா ஒருவாறு தன் தாயகம் திரும்பினாள்.
ஆனால் வாயும் வயிறுமாக வந்த மகளை வரவேற்கத் தான் சகுந்தலாவின் பெற்றோருக்கு மனம் வரவில்லை.
இவ்வளவு நடந்தும் கூட அவர்கள் சகுந்தலாவை நம்பவில்லை.
ஏனெனில் அவர்களின் மனதை அந்த அளவுக்கு மாற்றி வைத்து இருந்தான் ரிஷிகேஷ்.
லண்டன் சென்ற பின் சகுந்தலா தன் பெற்றோருடன் பேசியது குறைவாக இருந்தாலும் ரிஷிகேஷ் அவர்களுடன் நாள் தவறாது பேசி சகுந்தலாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகக் கூறி அவர்களது மனதில் சகுந்தலாவின் மீது வெறுப்பை வளர்த்து வைத்து இருந்தான்.
அதே நேரம் தான் ஒரு சிறந்த கணவன் என்பது போல அவர்களை சகுந்தலாவை எதுவும் கூறவும் விடவில்லை.
இது எதையும் அறியாமல் சகுந்தலா வயிற்றில் குழந்தையுடன் தன் பெற்றோரை நம்பிச் செல்ல, அவர்களோ கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக சகுந்தலாவை விரட்டினர்.
அதன் பின்னர் தனியே வந்த சகுந்தலாவிற்கு கமலி தான் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் உதவினாள்.
வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டே தான் படித்த கல்லூரியில் தன் சான்றிதழ்களை மீண்டும் கஷ்டப்பட்டு வாங்கி எடுத்தவள் ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்து தன் குழந்தைக்காகவே தன்னை மொத்தமாக அர்ப்பணித்தாள்.
ரிஷிகேஷிடம் சகுந்தலா அனுபவித்த துன்பமே அவளுக்கு யாரையும் மீண்டும் நம்ப விடாமல் செய்தது.
அதுவே அவளை சுயமாக அனைத்தையும் செய்து சொந்தக் காலில் நிற்க வழி வகுத்தது.
ஆரம்பத்தில் கிடைத்த ஓரளவு வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டியவளின் திறமையே அவளை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றியது.
சில மாதங்களிலேயே ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்று எடுத்தவளுக்கு அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது குழந்தைக்கு இருந்த இதய நோய்.
அன்றில் இருந்தே ஒரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் மகனின் மருத்துவம் என அவளின் நாட்கள் வேகமாகப் பயணித்தன.
பரத்தைக் குணப்படுத்த அவள் போகாத இடம் இல்லை. காணாத மருத்துவர் இல்லை.
ஆனால் அனைவருமே கையை விரித்து விட்டார்கள்.
இறுதியாகத் தான் ஹைதராபாத் வந்து சேர்ந்தவளுக்கு துஷ்யந்த் மீண்டும் அறிமுகம் ஆனான்.
இங்கோ போலீஸில் இருந்த ரிஷிகேஷுக்கு எதிராக போதுமான அளவு உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் ஐந்து வருட சிறைத் தண்டனை மட்டுமே கிடைத்தது அவனுக்கு.
சிறைத்தண்டனை அனுபவித்து முடித்தவன் நேராக இந்தியா கிளம்பினான் சகுந்தலாவைத் தேடி.
ஏனெனில் சிறையில் இருந்தவனின் தொழில் படுமோசமாக வீழ்ந்து விட்டது.
லண்டனில் சட்டங்கள் சரியான உறுதி என்பதால் எங்கே ரிஷிகேஷிற்கு உதவி செய்யப் போய் தாமும் மாட்டிக் கொள்வோமோ என்று ரிஷிகேஷின் பங்காளிகள் ரிஷிகேஷுடன் இருந்த தொடர்புகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டனர்.
சிறையை விட்டு வெளியே வந்தவனுக்கோ எந்தப் பக்கமும் செல்ல முடியாத நிலை.
அதனாலேயே அவள் மீது பழி வெறி அதிகரித்துக் கொண்டே சென்றது.
போதாக்குறைக்கு அவ்வளவு காலமும் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தவர்கள் கூட ரிஷிகேஷைப் பற்றி ஒவ்வொரு விதமாக செய்து பரப்பினர் அவனது ஆண்மைக் குறைவைப் பற்றிக் கூட.
அதனாலேயே ரிஷிகேஷிற்கு எங்கும் தலை காட்ட முடியவில்லை.
அனைத்தும் இருந்து விட்டு திடீரென இல்லாமல் போகவும் ரிஷிகேஷின் மனநிலை மிகவும் மோசம் அடைந்து விட்டது.
தனது இந்த நிலைக்குக் காரணமான சகுந்தலாவை நிம்மதி இழக்கச் செய்து இறுதியாக அவளையே இல்லாமல் செய்து விட வேண்டும் என்பது தான் ரிஷிகேஷின் திட்டம்.
அதன் படி இந்தியா வந்தவன் முதலில் சென்றதே சகுந்தலாவின் பெற்றோரை சந்திக்கத் தான்.
அவர்கள் முன் அழுது மாயம் செய்து சகுந்தலா தனக்கு துரோகம் செய்து விட்டதாகக் கூறினான்.
சும்மாவே சகுந்தலாவின் பெற்றோருக்கு தம் மகளை விட ரிஷிகேஷ் மீது அவ்வளவு நம்பிக்கை.
இதில் சகுந்தலாவின் தவறான நடத்தைக்கான ஆதாரத்தையும் கையில் வைத்திருப்பவனை நம்பாமல் விடுவார்களா?
அதனால் தான் பல வருடங்கள் கழித்து சந்தித்த மகளை மனசாட்சியே இன்றி வார்த்தைகளால் கொன்றது.
சகுந்தலா தன் கடந்த காலத்தைப் பற்றி மொத்தமாகக் கூறி விட்டு மௌனமாகக் கண்ணீர் வடிக்க, அங்கோ பலத்த அமைதி.
எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத அநீதி எல்லாம் சகுந்தலாவிற்கு நடந்து விட்டது.
சந்திரசேகரனும் பரிமளமும் சகுந்தலாவின் கடந்த காலம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என்று கிஞ்சித்தும் எண்ணவில்லை.
நிரஞ்சனாவோ வாய் விட்டு அழுதே விட்டாள்.
அழுது கொண்டு இருந்த சகுந்தலாவை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த துஷ்யந்திற்கு தன்னவள் அனுபவித்த வலியை எல்லாம் தானே அனுபவித்து விட்டு வந்த உணர்வு.
நிரஞ்சனா ஓடிச் சென்று சகுந்தலாவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
தோள் சாய ஒரு தோள் கிடைத்த மறு நொடியே இத்தனை நாட்களும் தன்னை அழுத்திய பாரத்தை எல்லாம் அழதே கொட்டித் தீர்த்தாள் சகுந்தலா.
துஷ்யந்த் வெறும் பார்வையாளனாகவே நின்று இருந்தான்.
சகுந்தலாவின் கடந்த காலத்தில் இருந்த மீண்ட பெரியவர்களுக்கோ இன்னும் ஒரு விடை தெரியாத கேள்வி அவர்கள் முன் இருந்தது.
“ஆனா துஷ்யந்த் இதுல எங்க சம்பந்தப்பட்டான்?” எனக் கேட்டார் சந்திரசேகரன் குழப்பமாக.
துஷ்யந்தைத் தவிர அனைவருக்குமே அதற்கான பதில் தெரிய வேண்டி இருந்தது.
“சத்தியமா எனக்குத் தெரியாது அங்கிள். கொஞ்சம் நாள் முன்னாடி நானும் பரத்தும் ஊருக்கு போய் இருந்த நேரம் ரிஷிகேஷ் என்னை சந்திக்க வந்து இருந்தான். அப்போ தான் அவனுக்கும் பரத்துக்கும் எடுத்த DNA டெஸ்ட் ரிப்போர்ட்ட காட்டி பரத் தன்னோட பையன் இல்லன்னு சொன்னான். எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியல. ஆனா அந்த ரிப்போர்ட்ல தெளிவா போட்டு இருந்தது. அப்போ தான் ரிஷிகேஷ் சொன்னான் அவன் பண்ண கேடு கெட்ட காரியத்த. IVF ட்ரீட்மென்ட் அப்போ ரிஷிகேஷ் தந்தது வேற ஒருத்தரோட உயிரணுவ. ஏன்னா ரிஷிகேஷுக்கு ஆண்மை குறைவு. அதை மறைக்க தான் அந்தக் குழந்தை அவனுக்கு தேவைப்பட்டது. இது எதுவுமே எனக்குத் தெரியாது. யாரோ ஒருத்தரோட குழந்தைய தான் நான் என் வயித்துல சுமந்து இருக்கேன்னு தெரியவும் எனக்கு என்னையே பிடிக்கல. ஏன் எனக்கு இவ்வளவு பெரிய துரோகத்த பண்ணன்னு அவன் சட்டைய பிடிச்சு கேட்டேன். ஆனா அவன் இந்த உண்மைய வெளிய சொல்லுறதா மிரட்டினான். அதுவும் என்னைத் தப்பானவளா காட்டி. என் பெயர் கெட்டுப் போறது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனா என் பையனுக்கு தெரிஞ்சா அவன் சத்தியமா இதைத் தாங்க மாட்டான். அதுவும் இல்லாம கோர்ட்ல என் நடத்தைய தப்பா காட்டி பரத்த தன் கூட அழைச்சிட்டு போறதா மிரட்டினான். அதனால தான் வேற வழி இல்லாம நான் எல்லாத்தையும் பொறுத்துப் போனேன். ஆனா எனக்குமே சத்தியமா தெரியாது துஷ்யந்த் எப்படி பரத்தோட அப்பான்னு.” என்றாள் சகுந்தலா கண்ணீருடன்.
அனைவரும் பதிலுக்காக துஷ்யந்தின் முகம் நோக்க, சில நொடிகள் அமைதி காத்த துஷ்யந்த் பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான்.
“என் ஹயர் ஸ்டடீஸுக்காக நான் லண்டன் போய் இருந்தப்போ எங்க ஹாஸ்பிடல்ல இன்ஃபர்டிலிட்டி பத்தி ஒரு அவயார்னஸ் ப்ரோக்ரேம் நடந்தது. கூடவே ஸ்பர்ம் டொனேஷனும். பல மில்லியன் கணக்கான உயிரணுக்கள் வீணாப் போற நேரம் அதுல கொஞ்சத்த தேவைக்கு சேமிச்சு வைக்கிறது தான் இந்த டொனேஷன் கேம்ப்போட நோக்கம். அது மூலமா எங்கோ ஒரு மூலைல யாரோ ஒரு குழந்தை இல்லாத தம்பதி தமக்குன்னு ஒரு குழந்தைய பெத்துப்பாங்கன்னு. எனக்கு அப்போ எல்லாம் கல்யாணம் பண்ணுறத பத்தி அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. அதுவும் இல்லாம ஆஸ் அ டாக்டர்ஸா மக்களுக்கு நாங்க முன்னுதாரணமா இருக்கணும்னு நானும் என்னோட கொலிக்ஸுமே ஸ்பர்ம் டொனேட் பண்ணோம். அதைத் தான் சகுந்தலாவோட ட்ரீட்மென்ட்டுக்கு யூஸ் பண்ணி இருப்பாங்க.” என்றான் துஷ்யந்த்.
அவன் குரலில் எந்தவொரு குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ, எதுவுமே இல்லை.
மாறாக ஏதோ ஒரு நிம்மதி.
அதனை சரியாகக் கண்டு கொண்ட சந்திரசேகரனுக்கு திக் என்று ஆனது.
ஒரு மருத்துவராக துஷ்யந்த் கூறியது நியாயமாக இருந்தாலும் ஒரு தந்தையாக, அதே வேளை தம் நாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு அதனை சற்றும் ஏற்க முடியவில்லை.
ஆனால் என்ன பிரயோஜனம்?
எல்லாவற்றிற்கும் காலம் தாழ்ந்து விட்டதே.
பரிமளமோ பல வித உணர்வுகளால் சூழப்பட்டு இருந்தார்.
யாரை இங்கு குற்றம் சொல்ல என்றே அவருக்குப் புரியவில்லை.
சகுந்தலாவிற்கோ துஷ்யந்த் கூறியதைக் கேட்டு ஏகத்துக்கும் அதிர்ச்சி.
முதலானால் கொஞ்சமாவது மகிழ்ந்து இருப்பாளோ என்னவோ?
ஆனால் இப்போதோ பெரும் குற்றவுணர்வில் மூழ்கித் தவித்தது அவளது இதயம்.
சகுந்தலாவின் பார்வை எல்லாமே நிரஞ்சனாவிடம் தான்.
அப் பெண்ணின் வாழ்வும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறதே.
துஷ்யந்தின் பெற்றோர் கூட நிரஞ்சனாவைத் தான் வருத்தமாக ஏறிட்டனர்.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி அப் பெண்ணுக்கு.
நிரஞ்சனாவின் விழிகள் தம்மை அறியாமல் கண்ணீர் வடிக்க, அவளின் பார்வையோ துஷ்யந்தைத் தான் வலியுடன் நோக்கிக் கொண்டு இருந்தது.
துஷ்யந்தும் நிரஞ்சனாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் முகமோ வலி, வேதனை, குற்றவுணர்வு, ஆனால் அதையும் தாண்டி ஒரு உணர்வுடன் காணப்பட்டது.
அது என்ன என்று உடனே கண்டு கொண்ட நிரஞ்சனாவின் கண்ணீரின் அடர்த்தி அதிகரித்தது.
அதே நேரம் அங்கு ஓடி வந்த தாதி ஒருவர் துஷ்யந்தை நெருங்கி, “டாக்டர்… அந்தப் பையனோட ஹார்ட் பீட் ரொம்ப ஸ்லோ ஆகிட்டு போகுது. உங்க ஹெல்ப் உடனடியா தேவைப்படுது. சீக்கிரம் வாங்க.” என அவசரப்படுத்தினார்.
அதில் அனைவரின் கவனமும் கலைந்து பரத்துக்கு என்னவோ எனப் பதறத் தொடங்கினர்.
அதுவும் பரிமளமும் சந்திரசேகரனும் என்ன தான் இருந்தாலும் பரத் தம் வீட்டு வாரிசு என அறிந்ததில் இருந்தே பரத்திற்காக இன்னும் அதிகமாகத் துடித்தனர்.
சகுந்தலாவின் நிலையையோ சொல்லவே வேண்டாம்.
துஷ்யந்த் பரத்தைக் காண வேகமாகச் சென்று விடவும் ஐ.சி.யூ வாசலிலேயே அழுது கரைந்தாள் சகுந்தலா.
இதில் நிரஞ்சனா தன் துக்கத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சகுந்தலாவிற்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள்.

