Loading

அத்தியாயம் 21

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்

எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதில் என்ன பாவம் எதற்கு இந்த சோகம் கிளியே

எப்போதோ கேட்டப்பாடல் இப்போது நினைவு வந்து தொலைத்தது ஆனந்திக்கு. அந்த வரிகளின் தாக்கமா? இல்லை அவளையும் மீறி நடந்த நிகழ்வா? ஏதோ ஒன்று அவளின் கண்களைக் கலங்கச் செய்திருந்தது. கலங்கிய கண்களை வெளிக்காட்டாது இமைகளை இறுக மூடி சீட்டில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

மங்கையின் இமை மூடும் தருணத்திற்குக் காத்திருந்ததோ கண்ணீரும் அவள் விழிகளை மூடியதும் கண்களை விட்டு வெளியேறியது. அதைத் துடைக்கக் கூட மனமில்லாமல் அமர்ந்திருந்தவளின் காதில் “குளோரி…” என்ற சோழாவின் அழைப்பு கேட்டது.

சின்னவனின் குரலில் சட்டெனக் கண்களைத் திறந்தவள் கண்களைத் தாண்டி வெளிவந்தக் கண்ணீரை உள்ளங்கையால் அழுந்த துடைத்து விட்டு சோழாவிடம் திரும்பி “என்ன தம்பி…” எனக் கேட்டாள். 

“பயமா இருக்கு…” கண்களை உருட்டிப் பயந்த குரலில் கூறினான் சின்னவன். ஏன்?எதுக்கு பயப்படற? என்ற கேள்விகளைக் கேட்கவில்லை. அதற்கான விடையை அவள் அறிந்திருக்கும் போது எப்படிக் கேட்பாள். 

‘ இங்க வா…’ என்றவள் சிறியவனை மடியில் கிடத்திக் கொண்டாள்.

சோழா மடியில் படுத்ததும் ஆனந்திக்கு இடதுபுறம் அமர்ந்திருந்த குந்தவையும் அவளின் மடியில் அடைக்கலமானாள். இருவரின் முதுகையும் தடவிக் கொடுத்தவள் அதீத வேகத்தில் பின்னால் நகரும் கட்டிடங்களையும், மரங்களையும் சரளத்தின் வழியே பார்த்தாள்.

அதனைப் போலவே அவளின் மனமும் நேற்று இரவை நோக்கி வேகமாகப் பயணித்தது. அதே நினைவுகளைச் சுமந்தபடி வாகனதைக் இயக்கி கொண்டிருப்பவனும் பயணித்தான். 

*****

“எனக்கு இவர் மேல துளியும் இன்ரஸ்ட் இல்லை மேம். இதுக்கு அப்பறமும் அப்படியான எண்ணம் வராது. என்னை மன்னிச்சிடுங்க எனக்கு இதுல விரும்பமில்லை..” என்ற ஆனந்தியை விழி விரித்துப் பார்த்தான் அபி. 

தன் அன்னைக் கேட்டதற்கு உடனே சரியென்று கூறிவிடுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவளின் மறுப்பு இவனுக்கு ஆச்சரியத்தையும்,ஆசுவாசத்தையும் கொடுக்க, நிமிடம் இமைக்காமல் ஆனந்தியைப் பார்த்தான். 

அவனின் பார்வையை ஆனந்தி உணர்ந்தாளோ என்னவோ சட்டென நிமிர்ந்து அபியை பார்த்தாள். நொடி இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டது. அதே கணம் நான்கு வாலிபர்களின் தாய், தந்தை உறவினர்கள் என்று அவ்விடத்திற்கு வேக நடையுடன் வந்தனர்.  

அம்மனுக்கு அலங்கார பூஜை என்பதால் அந்த நான்கு இளைஞர்களின் தாய்,தந்தை உட்பட ஊர் பொது மக்கள் அனைவரும் கோவிலில் தான் இருந்தனர். அதனால் தான் ஒருசிலரைத் தவிர மற்றவர்களுக்கு ராமன் இளைஞர்களை அழைத்து வந்தது தெரியாமல் போனது. 

தற்போது தான் விசயம் கேள்விப்பட்டு இவ்விடம் வருகின்றனர் என்பது அவர்களின் வேக நடையிலேயே தெரிந்தது. தங்கள் வீட்டு பெரியவர்களைக் கண்டதும் வாலிபர்கள் நால்வரின் கை,கால் நடுக்கமெடுத்தது. 

அதை அவர்களின் பெற்றோர்கள் கண்டுகொண்டால் தானே! பிள்ளைகளின் மேல் ராமன் சுமத்திய பழி மட்டுமே முன் வந்து நிற்க, வெள்ளை வேஷ்டியை மடித்து கட்டியபடி ராமனை அடிக்க வேகவேகமாக முன்னால் வந்தனர். 

அவர்களின் வேகத்திற்கும், கோபத்திற்கும் துளியும் பயப்படவில்லை ராமன். ‘வாங்கடா பார்த்துக் கொள்கிறேன்…’ என்பதைப் போல் தான் நின்றிருந்தான். 

அவனைப் பொறுத்த வரையில் தன் வீட்டுப் பிள்ளையின் மீது தவறில்லை அப்படியிருக்க நான் ஏன் பயந்து பின் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதனாலேயே அவர்களுக்குப் பயப்படாது நிமிர்ந்து நின்றான்.

ராமனின் துணிச்சலும், திடமும் எதிரில் வந்தவர்களை யோசிக்க வைத்திருக்க வேண்டும்! ஆனால் பிள்ளைகளின் மேல் கொண்ட பாசமும், சற்று முன் அவர்களிடம் கூறப்பட்ட செய்தியும் பெற்றவர்களின் கண்களை மறைத்திருக்க ராமனை நெருங்க நெருங்கவே 

“உம் பொறந்தவ குடோன்ல பண்ணுன அட்டூழியத்தை மறைக்க எம்படூட்டுப் புள்ளைங்க மேல பழி போட்டு…” அதற்குப் பின் பேசியது முழுவதும் அவர்களுக்குப் பின் வந்த காவல்துறை வாகனத்தின் ஹாரன் சத்தத்தில் கலந்தது…  

வருட வருடம் நடக்கும் தேர்திரு விழா எந்தளவிற்கு அமர்க்களத்தையும், ஆர்ப்பரிப்பையும் கொடுக்கிறதோ அந்தளவிற்கு அடிதடியையும், ஆர்ப்பாட்டத்தையும் கொடுக்கும். 

அது பல முறை காவல் நிலையம் வரை சென்றிருப்பதால் திருவிழா நடக்கும் தினங்களுக்கு மட்டும் காவல் துறையினர் அவ்வூரிற்கு வந்து செல்வது உண்டு

அதன்படி இன்று காவல்துறையினர் திருவிழாவிற்கு வந்திருந்தனர்… அவர்கள் வரும் சமயம் பார்த்து ராமன் அடித்த விசயம் கசிய, நேராக இங்கேயே வந்துவிட்டனர். 

“என்னய்யா? என்ன பிரச்சனை?…” எனக் கேட்டுக் கொண்டே வாகனத்திலிருந்து இறங்கினார் காவலர். 

காவலரின் அதட்டலான பேச்சிற்கு ஒருவரும் பதில் கூறவில்லை ஆழ்ந்த அமைதி மட்டுமே அவர்களிடத்தில். அவர்களின் அமைதியை அழுத்தமாகப் பார்த்த காவலர் சுற்றும் தன் பார்வையைச் சுழற்றினார். 

ராமையும், அபியையும் மற்ற மூவரையும் பார்த்தவர் அவர்களுக்குப் பக்கவாட்டில் சற்று தூரத்தில் நின்றிருந்த நால்வரையும் கண்டார். இவர்களிடத்தில் இருக்கும் துணிவும், திடமும் அந்த வாலிபர்களிடம் துளியுமில்லை என்பதை முதல் பார்வையிலேயே அறிந்து கொண்டவர்  

“இங்க வாங்க டா…” என்று அந்த நால்வரையும் அதட்டலாக அழைத்தார் காவலர். 

தங்களின் வீட்டுப் பெரியவர்களைக் கண்டே நடுங்கிப் போனவர்கள் காவலரைக் கண்டதும் சொல்லவா வேண்டும் முகம் முழுவதும் வெளிறிப் போனது. 

உண்மையை சொல்லப்போனால் சற்று முன்னர் வரைக்கும் பயந்து நின்றவர்கள் செண்பாவின் செயலாலும், பேச்சாலும் இனி தங்களை எவரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கை எழுந்தது. இனி யார் கேட்டாலும் இதே கதையைக் கூறிவிடலாம் என்று வேறு நினைத்தனர். ஆனால் அந்த நம்பிக்கை காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் சுக்குநூறாக உடைந்து போகுமென்று துளியும் எண்ணியிருக்கவில்லை…  

வாலிபர்களின் முகத்தைக் கூர்ந்து கவனித்த காவலர் “என்னங்கடா கூப்பிட்டே இருக்கேன் கல்லு மாதிரி நிக்கறீங்க? வாங்க டா இங்க…” மீண்டுமொருமுறை அதட்டல் போடவும் தயங்கியபடி முன் வந்து நின்றனர் நால்வரும்.

காவலர் அவர்களிடம் என்னவென்று விசாரிக்கும் முன்பே “எம்பட புள்ளைங்க மேல தப்பு இல்லைங்க சார். இவம் பொறந்தவ குடோன்ல பண்ணுன அட்டூழியத்தை மறைக்க எம்படூட்டுப் புள்ளைங்க மேல பழி போட்டு அடிச்சு இழுத்துட்டு வந்துருக்கறானுங்க… முதல்ல அந்தூட்டு புள்ளையையும் இவம் அண்ணங்காரனையும் விசாரிங்க…” ஒருவர் முன் வந்து கூறினார்.

உண்மையில் அவரிடம் என்ன கூறினார்களோ அதை அப்படியே காவலரிடம் கூறினார் அவ்வளவு தான். நால்வரில் ஒருவனின் தந்தையாக இருக்க கூடும் என நினைத்த காவலரின் பார்வை ராமின் பக்கவாட்டில் நின்றிருந்த ஆனந்தியின் மீது விழுந்தது. கண்களை சூழ்ந்த கண்ணீருடன் அண்ணனின் கைகளை இறுகப் பற்றியிருந்தாள் பாவை. 

காவலரின் பார்வை ஆனந்தியின் மேல் ஆராய்ச்சியாகப் படிவதை உணர்ந்த மற்றொரு இளைஞரின் தந்தையோ “பண்ணுனது பூரா இவதானுங்க சார். இவ பண்றதை பண்ணிப்போட்டு அதைய மறைக்க, இவ அண்ணங்காரன் எம்பட புள்ள மேல கைய வெச்சுருக்கறான். பாங்கொழந்தைங்க சார் என்ற பையன். அவம்மேல போயி ஆகாத பழிய போடறாங்க…” என காவலரிடம் கூறியவர் ஆனந்தியிடம் திரும்பி

“ஏம் புள்ளை நீ அரிப்பெடுத்து போனதுக்கு உம் அண்ணங்காரன் எம்பட புள்ளை மேல..” அடுத்த வார்த்தை முடிக்கும் முன் அபியின் கைதடம் பேசியவனின் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது. 

உண்மையில் அபி அடித்த அடி அந்த நிசப்தமான இடத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது என்றால் மிகையல்ல! அபி அடிப்பான் என்று எதிர்பார்க்காதவன் திகைத்து பேசாது நின்றான். 

அதே கணம் நால்வரிடமும் திரும்பிய அபியோ “உண்மையை சொல்லுங்க டா, இல்லைன்னு வைங்க, அங்க விழுந்தடி இங்க விழும்…” என்று அதட்டினான்.

“என்ன சார் நாங்க விசாரிக்க விசாரிக்கவே கையை நீட்டிட்டு இருக்கீங்க…”இப்போது வாயைத் திறந்தார் காவலர். அவருக்கு அபி என்ற தொழிலதிபரைத் தெரிந்திருந்தது அதனாலேயே சற்று அடக்கி வாசித்தார். 

“அப்ப அவனுங்க பேசறதை கேட்டுட்டு இருக்க சொல்றீங்களா சார்…” எனக் கடுமையாகவே கேட்டான் அபி.

அபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு நால்வரிடமும் திரும்பிய காவலர் “என்ன நடந்ததுன்னு சொன்னா வெறும் விசாரணையோட போயிடுவேன். இல்லைன்னா ஸ்டேசன் இழுத்துட்டு போக வேண்டியதிருக்கும் எப்படி வசதி…” என்றார் மிரட்டலான குரலில். 

நால்வரின் பார்வையும் பக்கவாட்டில் நின்றிருந்த அபியின் மீது விழுந்தது. அவனின் பார்வையில் தெரிந்த ரௌத்திரம் அவர்களை அச்சமூட்டிருக்க வேண்டும் 

மெல்லக் காவலர்களிடம் நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தனர்.

இளைஞர்கள் கூற ஆரம்பித்ததுமே அவர்களைப் பெற்றவர்களின் முகம் தொங்கிப் போனது. 

‘எம்பட புள்ளை மேல தப்பே இல்லைங்க சார்…’ என அடித்துக் கூறிக் கொண்டிருந்தவர்களின் வாய் பசைப் போட்டது போல் ஒட்டிக் கொண்டது. 

நிச்சியம் நால்வரின் பெற்றவர்களும் ஏதாவது கூறுவார்கள் என்று நினைத்தான் ஆனால் அவர்கள் வாய் பேசாது நிற்க, அவர்களை அழுத்தமாகப் பார்த்துவிட்டுத் திரும்பினான். அக்கணம் அவனது கண்களுக்ககுள் சீதாவும் அவரை சூழ்ந்து நின்ற கூட்டமும் விழுந்ததும் 

அப்போதுதான் அவனும் கவனித்தான். அவன் நின்ற இடத்தை சுற்றியும் சிலர் போன்,கேமரா கைகளோடு நின்றிருப்பதை… 

அவர்கள் யாரென்று நன்றாகவே புரிந்தது அபிக்கு. கண்களை இறுக மூடித் திறந்தவன் இனி வருவதை எதிர்கொள்ளத் தான் வேண்டுமென்று நினைத்தபடி சீதாவை நோக்கி நடந்தான்.

ஆம்,அபியின் செய்தி காட்டு தீயாய் பரவிக் கொண்டிருந்தது… இன்றைய காலத்தில் வீட்டுக்கொரு பாத்ரூம் இருக்கிறதோ இல்லையோ வீட்டிற்கொரு யூடூப் சேனல் நிச்சியம் இருக்கும். அப்படியிருக்க அபியின் செய்தியெல்லாம் எம்மாத்திரம். சில நிமிடங்கள் என்றாலும் பெயர் சொல்லுமளவிற்கு இருக்கும் யூடுப் சேனல்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வந்திருந்தனர்… . 

தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அபியை பார்த்தவர்கள் உன்னைவிட்டு என்னைப் பிடி என்பதற்கு ஏற்ப சீதாவை விட்டுவிட்டு அபியை சூழ ஆரம்பித்தனர்.

“உங்களுக்கும் உங்க வீட்டு வேலைக்கு வந்த பொண்ணுக்கும் தொடர்பு இருக்குன்னு பேசிக்குறாங்களே அது உண்மையா சார்?..” என்றவரை அழுத்தமாகப் பார்த்தான். 

“இல்லைனா ஏன் நீங்களும் இவங்களும் இப்படியான இடத்தில் தனியா சந்திச்சுக்கனும்…” அபியின் பார்வையை நேராக சந்தித்தபடி கேட்டான் மற்றொருவன். 

“நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்ததை மறைக்கத் தான் அந்த பசங்க மேல பழியைப் போட்டு இருக்கீங்கன்னு சொல்றாங்க ?

உண்மையா சார்…” 

“சாதாரண கான்வென்ஸ் வேலைக்கு வர பொண்ணோட வீட்டுக்கு நீங்க கெஸ்ட்டா தான் வந்திருக்கீங்கன்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை சார்…”அப்படி கேட்டதும் கேட்டவனைப் புருவம் உயர்த்தி பார்த்தவன் அதற்கு பதில் கூறும் முன்பே 

“ஆனந்தியை என் பையனுக்கு எப்பவோ பேசி முடிச்சுட்டோம்…நாள் குறிக்கத் தான் இங்க வந்தோம்…” அத்தனை பேரின் கேள்விகளையும் தாண்டி ஒலித்தது சீதாவின் குரல்… 

*****

சட்டெனப் போட்ட விசையால் நிமிடம் அதிர்ந்து தன் நிலைக்கு வந்தது அபியின் நான்கு சக்கர வாகனம்… அதே நேரம் தன் மடியில் படுத்திருந்த குழந்தைகளை இறுக பற்றி கால்கள் இரண்டையும் நன்றாக ஊன்றி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அபியை பார்த்தாள். 

அவனோ, கோபத்தில் முகம் இறுக எதிரில் சென்ற மாட்டு வண்டியை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டுச் சுற்றி முற்றி பார்வையைத் திரும்பினாள் ஆனந்தி. பழக்கப்பட்ட இடமாகத் தான் தெரிந்தது மீண்டுமொரு முறை அபியை பார்த்தாள்.

‘ நீ பிளேன் போட்டது போல எல்லாம் நடந்திருச்சுன்னு சந்தோசப்படாத இதுக்கு மேல தான் இந்த அபியோட இன்னொரு முகத்தைப் பார்க்க போற…’ சில மணி நேரத்திற்கு முன் அவன் பேசிய சொற்கள் கண் முன்னே வந்து தாண்டவமாடியது…

அவன் பேச்சில் எரிச்சலும், கோபமுமாக அமர்ந்திருந்தவளுக்கு தற்போது வேகமாக பிரேக் போட்டது அந்த கோபத்திற்கும், எரிச்சலுக்கும் தூபம் போட்டது. 

“சோழா, குந்தவி…எழுங்க…” சற்றே சத்தமாக எழுப்பினாள். அவளின் குரலில் அபியின் கேசம் கூட அசையவில்லை.

ஆனந்தியின் அழைப்பிற்கு அபி திரும்பவில்லை என்றாலும் முன்னால் அமர்ந்திருந்த சீதா திரும்பிப் பார்த்தார். அவரை கண்டுகொள்ளாமல் குழந்தைகளை எழுப்பியவள் கார் கதவைத் திறந்து வெளியேற, தற்போது உணர்வு வந்தவனாய் இறங்கி நின்றவளை அழுத்தமாகப் பார்த்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்