Loading

“அபி இருக்கீங்களா.?” என்று வந்த ஆதிராவின் குறுஞ்செய்தியை வருடியவன் ம்ம்ம்ம் என்றான்.

“நீங்க என்னைய பத்தி என்ன நினைக்கறீங்கனு தெரியல.. கோவில்ல பார்த்தப்பவே எனக்கு உங்களைய பிடிச்சிருந்துச்சு.. அப்பறம் உங்க கூட வண்டில வந்தப்ப எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா.? ஏன் உங்களைய பிடிச்சுச்சுனு இப்ப வரைக்கும் என்கிட்ட நானே கேட்டுட்டு இருக்கேன்..

ஆனா ஒண்ணு நீங்க மட்டும் என் காதலை மறுத்துட்டா…” என்று முதலில் அனுப்பி விட்டு பின்பு “சாக எல்லாம் மாட்டேன்.. இதுதான் என் வாழ்க்கைனு வாழ்ந்துட்டு போய்ருவேன்.. எல்லாரோட வாழ்க்கைலயும் காதல் ஜெயிக்கறது இல்லையே.. சொல்லாம என் காதல் தோற்கறதை நான் விரும்பல..” என்றாள் அழுத்தமாக.

முதலில் வந்த குறுஞ்செய்தியை கண்டு இவன் பதறி இருக்க, பின்பு வந்த செய்தியில் ஆடவனின் இதழ்கள் லேசாக விரிந்தது புன்னகையில்.!!

“என் காதலை ஏத்துக்கங்கனு வற்புறுத்த மாட்டேன்.. உங்க முடிவு எதுவா இருந்தாலும் நான் ஏத்தக்க தயாரா இருக்கேன்.. ரெண்டு பேருக்கும் காதல் இருந்தா தான் வாழ்க்கை நிலைக்கும்.. வற்புறுத்தி காதலை வர வெச்சு வாழ வைக்க இது என்ன நாடகமா.? வாழ்க்கைமா வாழ்க்கை” என்று தெளிவாக உரைத்து இறுதியில் அவளுக்கே உரிதான குறும்பில் முடிந்தாள்.

ரூபன் எந்த பதிலும் கூறவில்லை.. அமைதியாக அவளின் செய்தியை மட்டும் படித்திருந்தான்.. ‘உன்னோட இந்த பேச்சு தான்மா என்னைய உன் பக்கம் காந்தமா இழுத்துச்சு’ என்று நினைத்து கொண்டவன் அப்போதும் எதிர்வினையின்றியே இருந்தான்.

அவனிடம் இருந்து பதில் வரும் என்று காத்திருந்த ஆதிரா நிமிடங்கள் கடக்க கடக்க சோர்ந்து போய் “அபி.????” என்று அனுப்பிட, உடனே அதை அவன் பார்த்து விட்டதற்கான அறிகுறியும் காட்டியது. ஆனால் பதிலில்லை.

தறிகெட்டோட தொடங்கிய மனதை ஒருநிலைப்படுத்த சீராக மூச்சை இழுத்து விட்டு “டைம் எடுத்துக்கங்க அபி.. இப்பவே உங்க பதிலை சொல்லணும்னு அவசியமில்லை.. ரெண்டு நாள கழிச்சு இதே நேரத்துல உங்க பதில் என்னனு எனக்கு தெரிஞ்சுருக்கணும்..” என்று செல்லக் கட்டளையை இட்டவள் “பாய் டேக் கேர்” என்பதில் முடித்து கொண்டாள்.

என்ன பதில் வந்தாலும் பெண்ணவள் ஏற்று கொள்ள தயாராகி விட்டாள். இவள் காதலிக்கிறாள் என்பதற்காக அவனும் இவளை காதலிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே. நிதர்சனத்தை உணர்ந்ததும் அவளின் மனதும் தெளிவடைய தொடங்கி இருந்தது.

ஆனால் மனதின் ஓரத்தில் கட்டாயம் அவள் அபியின் பதில் தனக்கு சாதகமாக தான் இருக்கும் என்று சிறு நம்பிக்கையும் துளிர் விட்டிருந்தது. மனதிலேறி இருந்த பாரம் காதலை கூறியதும் இறங்கி இருந்ததால் பெண்ணவளின் முகமும் குழப்பத்தை துடைத்தெறிந்து விட்டு தெளிவாக இருந்தது.

ரூபனின் நிலை என்னவென்று கூறிட.??? அவனின் காதல் கை கூடி விட்டது என்று மகிழ்வதா.? இல்லை உடன்பிறந்த சகோதரனாக தன்னிடம் பாசம் காட்டிடும் சிவாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறோம் என்று வருந்துவதா.? என்று புரியாமல் குழம்பிய குட்டையாகி போனான்.

அவனின் ஆதியை விட்டுவிட நினைத்தாலும் அவ்வளவு எளிதில் அவன் மனமும் அதை ஏற்று கொள்ள மறுத்தது. வீட்டின் சூழ்நிலையும் அவனுக்கு சாதகமாக இல்லாமல் இருக்க, இந்நேரத்தில் என்ன முடிவெடுப்பது என்றே விளங்காமல் தூக்கத்தை தொலைத்திருந்தான்.

ஆனால் இதற்கு காரணமான ஆதிராவோ மனதில் இருப்பதை அவளவனிடம் கொட்டி விட்டதால் நிம்மதியான உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

காப்பி ஷாப்பில் எதிர் எதிர் இருக்கையில் அமர்நதிருந்தனர் சிவாவும் ரஞ்சித்தும்.. “ப்ரோ பேசணும்னு கூப்பிட்டு ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்.?” என்று அமைதியை கலைத்தான் ரஞ்சித்.

“இருங்க ரஞ்சித்.. ஆர்டர் பண்ணுன காப்பி வரட்டும்.. குடிச்சுட்டே பேசுவோம்.. என்ன அவசரம்.?” என்று சாதாரணமாக சிவா கூறிட, பெருமூச்சுடன் ரஞ்சித் மௌனமானாலும் எதற்கு இந்த சந்திப்பு.? என்ற கேள்வியே அவன் மனதை குடைந்தது.

காப்பியை அருந்தியபடி சிவாவோ “நீங்களும் திராவும் காதலிக்கறது உண்மையா.?” என்று கேட்க நினைத்ததை கேட்டிட, இந்த வினாவை எதிர்பாராதவன் சற்று திகைத்தாலும் “ம்ம்ம்ம் ஆமா ப்ரோ” என்றான் திகைப்பை மறைத்து கொண்டு.

“ஆனா திரா அப்படி இல்லனு சொன்னாளே.?” என்று கேட்டவனின் விழிகள் அவனை கூர்மையாக அளந்து ரஞ்சித்தின் தடுமாற்றத்தையும் நன்றாக உள்வாங்கி கொண்டது.

“இப்படி பொய் சொல்லி கல்யாணம் பண்ண நினைக்கறது தப்பில்லயா.? இந்த தப்பு உங்க மனசை உறுத்தலயா.?” – சிவா

“தப்புதான் ப்ரோ தப்புதான்.. நான் இல்லனு மறுக்கல..” – ரஞ்சித்

“உங்க மேல இருந்த நம்பிக்கைல நீங்க சொன்னதை நம்பி நான் திராகிட்ட கூட ஒரு வார்த்தை கேட்கல..” – சிவா

“நான் பொய் சொல்லல ப்ரோ.. இப்பவும் சொல்றேன் ஆதிராவுக்கு என்னைய பிடிக்கும்..” – ரஞ்சித்

“ப்ச் புரில..” – சிவா

“என்னைய ஒரு ப்ரெண்டா ஆதிராவுக்கு பிடிக்கும் ப்ரோ.. ஆனா காதல் இருக்கானு கேட்டா.. அது எனக்கே தெரியல.. எப்படி இருந்தாலும் அவங்க மேரேஜ் பண்ணிக்க தான் போறாங்க.. அது நானா இருக்கறதுல என்ன தப்பு.?” என்றான் ரஞ்சித்.

‘இவன் என்ன தான் சொல்றான்.? அன்னைக்கு என்னடானா ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொன்னான்.. இப்ப என்னடானா காதல் இருக்கானே தெரிலனு சொல்றான்.. இவனை நம்பறதா.? வேணாமா.?’ என்று பலவாறான யோசனையில் இருந்தான் சிவா.

“இவன் என்னடா இப்படி சொல்றானு நினைக்கறீங்களா.? எனக்கு ஆதிராவை ரொம்ப பிடிக்கும் ப்ரோ.. அவங்க கிட்டயே இன்னும் என் லவ்வை சொல்லல..  ஒருநாள் சும்மா பேசிட்டு இருந்தப்ப வீட்டுல யாரை கை காட்டறாங்களோ அவங்களைய தான் கல்யாணம் பண்ணுவேனு சொன்னாங்க..

அதான் காதலை சொல்லி காதலிக்கறதை விட பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கறது தான் எனக்கு சரினு தோணுச்சு.. நான் சும்மா பொண்ணு கேட்க சொன்னா நிவே ஆயிரம் காரணம் கேட்பானு தான் லவ் பண்றோம்னு சொன்னேன் ப்ரோ..

இப்ப எப்படி இருக்காங்களோ அதே மாதிரி எங்க வீட்டுலயும் சுதந்திரமா அவங்க இருக்கலாம்.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. என் அப்பா, அம்மாக்கு பொண்ணு இல்லனு தான் இப்ப வரைக்கும் கவலை.. வீட்டுக்கு வர்ற மருமகளை எந்த குறையும் இல்லாம பார்த்துப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு..

நாங்க உங்க முடிவை சொல்லுங்கனு தான் சொல்லிட்டு வந்துருக்கோமே தவிர நீங்க சரினு சொல்லி தான் ஆகணும்னு சொல்லவே இல்லயே ப்ரோ.. உங்க முடிவு எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்க தயாரா தான் இருக்கேன்” என்று மனதில் இருந்ததை கொட்டி தெளிவாக உரைத்தான் ரஞ்சித்.

சிவாவோ “நீங்க ஆதிராகிட்ட சொல்லிட்டு தான் வந்தீங்களா.?” என்று கேட்க, “இல்ல ப்ரோ.. சர்பிரைஸ் குடுக்கலாம்னு ஒண்ணும் சொல்லல” என்றவனிடம் “ஓஓஓஓ” என்ற சிவா மனதிலோ ‘நல்ல சர்பிரைஸ் பண்ணுன போ’ என்று நினைத்து கொண்டான்.

பெண்ணவளின் பிடித்தமின்மையை அவளின் வாய்மொழியாக சிவா அறிந்திருந்தாலும் அதை ரஞ்சித்திடம் கூறாமல் “இதுல திராவோட முடிவு தான் முக்கியம்.. அவ எந்த முடிவு எடுத்தாலும் நீங்க ஏத்துக்க தயாரா தானே இருக்கீங்க.?” என்று வினவினான்.

“ம்ம்ம் கண்டிப்பா ப்ரோ.. ஆதிரா சம்மதம்னு தான் சொல்லுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் நம்பிக்கை பொய்யாகாது பாருங்க” என்று உறுதியாக கூறியவனை பாவமாக பார்த்த சிவா ‘உன் நம்பிக்கை பொய்யாகாம இருந்தா எனக்கும் சந்தோசம் தான்’ என்று உள்ளுக்குள்ளே நினைத்தவ

ன் லேசாக புன்னகையை சிந்தினான்.

வீட்டில் நடந்த அனைத்தையும் சாதாரணமாக கூறி விட்டு ஆதிராவோ தட்டில் இருந்த பஜ்ஜியை சாப்பிடுவதில் குறியாகி விட, அதனை கேட்ட காவ்யா தான் நெஞ்சில் கை வைத்து கொண்டாள்.

“அடியேய் லூசு என்னடி இதைய இவ்ளோ சாதாரணமா தின்னுட்டு சொல்ற.?” – காவ்யா

“அப்பறம் என்ன அழுதுட்டா சொல்றது.?” – ஆதிரா

“ஹே பைத்தியமே” – காவ்யா

“சரி வெய்ட் பண்ணு பஜ்ஜியை சாப்பிட்டு மறுபடியும் ஒரு தடவை சொல்றேன்..” – ஆதிரா

‘இவளை’ என்று பல்லை கடித்த காவ்யா திட்ட வாயெடுக்கும் போது அவளின் அன்னை சுடச்சுட பஜ்ஜியை கொண்டு வந்து தட்டில் வைத்து “புள்ளயை சாப்பட விடாம ஏன்டி நொய்நொய்னு கத்திட்டு இருக்க.?” என்று மகளை திட்டி விட்டு சென்றார்.

‘இந்த அம்மா வேற நேரங்காலம் தெரியாம.. ச்சைக்.. இவ என்ன முடிவு பண்ணிருக்கானே தெரிலயே’ என்று நொந்து போய் தோழியை காண, அவளோ பஜ்ஜியை காலி செய்வதில் குறியாக இருந்தாள்.

கடுப்பான காவ்யா “தின்னது போதும்டி” என்று தரதரவென அவளை இழுத்துக் கொண்டு அறைக்கு செல்ல, “ஹேய் இருடி நானே வர்றேன்” என்று ஆதிரா கூறியதை அவள் காதில் வாங்கவில்லை.

“திரா விளையாடாம சொல்லு.. நீ என்ன முடிவுல இருக்க.?” – காவ்யா

“எல்லாம் அபி சொல்ற முடிவை பொறுத்து தான்..” – ஆதிரா

“அவங்களுக்கும் உன்னைய பிடிக்கும்னு சொன்னீயே.?” – காவ்யா

“ஆமா பிடிக்கும்.. ஆனா அதைய ஏன் ஒத்துக்க மாட்டிங்கறாங்கனு தான் எனக்கு புரில..” – ஆதிரா

“அப்ப அவங்களும் உன்னைய லவ் பண்றாங்களா.?” – காவ்யா

“அதான்டி எனக்கும் தெரிலனு சொல்றேன்ல.?” என்றவளை கொலைவெறியில் பார்த்த காவ்யா ‘இவ லூசா.? இல்ல இவளை ஒரு ஆளா மதிச்சு பேசற நான் லூசா.?’ என்று மனதினுள் கடுகடுத்தாள்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, திடீரென்று காவ்யாவோ “ஹேய் திரா ஓடி போக எல்லாம் பிளான் பண்ணலயே.?” என்று கேட்டிட, “ஆமா ஓடி போறேன்.. ஏன் நீயும் வர்றீயா.?” என்று கேட்ட ஆதிரா தலையில் அடித்து கொண்டாள்.

“ஏன்டி.?” – காவ்யா

“பின்ன என்னடி.? இன்னும் என் ஆளே சம்மதம் சொல்லல.. இதுல எங்குட்டு ஓடறது.?” – ஆதிரா

“ஹிஹிஹிஹி ஆமால.?” – காவ்யா

“அப்படி ஓடுனாலும் நான் மட்டும் தான் தனியா ஓடணும்..” – ஆதிரா

“சாரி சாரி மறந்துட்டேன்” என்று பல்லை காட்டிய காவ்யா பின்பு “நான்தான் அன்னைக்கே ரஞ்சித் கிட்ட பேச சொன்னேன்.. நீதான் நிவே அக்கா என்ன நினைப்பாங்கனு சொல்லி அமைதியா இருந்த.. இப்ப என்னடானா அவங்க தான் உன் லவ்வுக்கு வில்லியா வந்துருக்காங்க” என்றாள்.

“நிவே அக்காவை கூட மன்னிச்சுருவேன்டி.. ஆனா அந்த ரஞ்சித்தை மட்டும் நேர்ல பார்த்தேன் கண்டிப்பா மண்டையை உடைச்சுருவேன்.. அவன் மேல அந்த அளவுக்கு வெறில இருக்கேன்.. அவனை நான் லவ் பண்றேனு எப்பவாவது சொல்லிருக்கனா.?” என்று சீறினாள்.

“அதுக்கு ஏன்டி என்கிட்ட கத்தி தொலையற.? வெளில அம்மா இருக்காங்க.. உன் வாயை கொஞ்சம் மூடேன்” என்று தோழியை அடக்கினாள் காவ்யா.

முகத்தை சுருக்கி “அம்மா, அப்பா என் பேச்சுக்கு சரினு சொன்னாலும் இந்த நிவே அக்கா அவங்ககிட்ட பேசி பேசியே மனசை மாத்திருவாங்களோனு பயமா இருக்கு காவு.. இப்ப வரைக்கும் எனக்கு பிடிச்சுருக்கானு ஒரு வார்த்தை கூட அவங்க கேட்கல..” என்றாள் வருத்தமாக.

“உங்க சிவா மாமா கூட கேட்கலயா.?” – காவ்யா

“மாமா கேட்டாங்க..” – ஆதிரா

“அப்ப எனக்கு விருப்பமில்லனு சொல்லிருக்க வேண்டியது தானே.?” – காவ்யா

“அவங்க கேட்டதே நீயும் ரஞசித்தும் லவ் பண்றது உண்மையானு மட்டும்தான்..” – ஆதிரா

“அதுக்கு நீ என்னடி சொன்ன.?” – காவ்யா

“இல்லனா இல்லனு தானே சொல்ல முடியும் லூசு.. அப்பறம் மாமாவும் எதுவும் பேசல..” என்று ஆதிரா கூறிட, “எல்லா பக்கமும் கேட் போட்டாச்சா.? சூப்பரு சூப்பரு.. பேசாம நீ அண்ணன் கிட்டயே பேசுடி” என்றாள் காவ்யா.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்