
இரவில் தொலைத்த தூக்கம், அதிகாலை விடிந்தும் அவன் கண்களுக்கு கிடைக்க வில்லை…
வாசு சென்றதும், அனைவரும் கிளம்பி பக்கத்திலிருந்த சிறு கிளினிக்கிற்கு சென்றனர். துருவனுக்கோ , அவனது நண்பர்களுக்கோ சிறிதாய் கீறல் கூட விழவில்லை. அவர்களை பாதுகாத்து இவர்கள் வாங்கிக் கொண்டது தான் ஏராளம்…
சிறு பெண்ணான தன்யாவிற்கும் காயங்கள் ஏற்பட்டிருக்க, அதை கண்ட ரிஷிக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது. தனக்கு ஒன்றும் நேராது தங்களை காக்க, இப்படி காயங்கள் வாங்கியிருக்கும் அசோக் , ஶ்ரீ , ரவி, தன்யா மற்றும் ஜெஸியை பார்த்தான். அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், பணம் தான் வாங்கிறார்களே என்றாலும் அவர்களுக்கு வலி வேதனை இல்லை என்று ஆகிடுமா? பணம் தான் வலியை ஆத்துமா?
ஜெஸிக்கு தான் காயங்கள் கொஞ்சம் அதிகம். அவள் வலியில் முணங்குவதை கூட காண பொறுக்க முடியாமல், தனியாக வந்து நின்றான் துருவன். அவனை தொடர்ந்து வந்த ரிஷி.
“என்னடா ரொம்ப ஹாப்பியா இருக்க போல…? ஜெஸி சிஸ்டர் அடிப்பட்டு நிறைய காயங்களோட மருந்து போட்டுடு இருக்காங்க.. ரொம்ப வலியா இருக்கும் போல போய் பார்த்து சந்தோஷப்படேன்”என்றான்.
துருவனோ அவனை திரும்பி அடிப்பட்ட பார்வை பார்த்தான். “என்னடா சோகமாக இருக்க? ஓ… பெருசா ஒன்னும் நடக்கலையே பீல் பண்றீயா? ஒரு வேளை அவங்க ஜெஸிய யூஸ் பண்ணிக்காம விட்டாங்க பீல் பண்றீயா !”என்று அவன் சொல்லும் போதே துடித்த போன துருவனோ
“டேய் “என்று அவன் சட்டையை பிடித்திருந்தான் கோபத்தில். ஆனா ரிஷியின் குற்றம் சாட்டும் பார்வை அவனை குற்றவாளி கூண்டில் ஏத்த, அவன் சட்டையை விட்டு” ஷிட் “என்று பிடரியை தேய்த்துக் கொண்டு தூரம் சென்று நின்றான்.
ரிஷியின் கண்டன பார்வை இன்னும் மாறவில்லை… அவன் பக்கம் வேகமாக திரும்பிய துருவன்” நிச்சயமா அவளை பழி வாங்கணும்ன்ற எண்ணத்துல நான் இதை செய்யல டா ! என்னை நம்பு ! அந்த கேம் கொடுத்த எக்சைட்மெண்ட், அவங்களோட நக்கல் சிரிப்பு இதெல்லாம் தான்டா இப்படி என்னை பண்ண வச்சது… சத்தியமா ஜெஸியை பழிவாங்கற எண்ணம் எனக்கு அப்போ இல்ல டா ! இப்படி ஆகும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ரிஷி, ட்ரஸ்ட் மீ !”என்றான் கெஞ்சுதலாக
அவனது கெஞ்சலும் கண்களில் தெரிந்த வலியும் உண்மையை தான் கூறுகிறான் என்று உணர்த்த, அவனை அணைத்துக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்தான்.
காயங்களுக்கு மருந்து போட்டதும் அவர்களை போக சொல்ல, அனைவரும் வெளியே வந்தனர். ஜெஸி தனது கார்டை எடுத்து நீட்ட, “மேடம் பீஸ் கொடுத்தாச்சி”என்றாள் ஒரு செவிலியர்.
“யாரு கொடுத்தா?”என்று கேட்க, “மிஸ்டர் துருவன்”என்றதும் அவளுக்கு சுள்ளென்று கோபம் எகிறியது.
“சிஸ்டர், அந்த பணத்தை கொடுங்க “என்றாள் பட்டென்று. அதை கேட்டு அதிர்ந்த அந்த செவிலியர் பணத்தை எடுத்து நீட்ட, அதை வாங்கிக் கொண்டு, தன் கார்ட்டை நீட்டி” இதுல தேவையான பணத்தை எடுத்துக்கோங்க”என்று கொடுக்க, அவளும் வாங்கி பணத்தை எடுத்து விட்டு மீண்டும் கொடுத்தாள். கார்ட்டை வாங்கிக் கொண்டு வாசலை நோக்கி வர, அவர்களுக்காக காத்திருந்தனர் துருவனும் அவனது நண்பர்களும்.
மற்றவர்களுக்கு அவள் கண்ணை காட்டி காரில் ஏறச் சொல்ல, இவள் மட்டும் துருவன் அருகே வந்து, அவன் கையில் பணத்தை திணித்தாள்.
“டோண்ட் பே எனிதிங் ஃபார் மீ!”என்று அவள் சென்று விட “ஜெஸி” என்ற அழைப்பு காற்றில் கரைந்தது.
வலியுடன் அவள் கையில் திணித்து சென்ற பணத்தை பார்த்தான். அன்று நண்பன் சொன்ன ‘ தன்மானத்திற்கு’ அர்த்தம் புரிந்தது.
அதை கையில் இறுக்கிப் பிடித்த படி, அவனும் வண்டியில் ஏறிக் கொள்ள அவனது நண்பர்களும் ஏறிக் கொண்டனர்.
வழி எங்கும் அவன் கண்ணாடியூடே அவளை பார்க்க, அவளது விழிகளை வெளியே வெறித்திருந்தன… ஹோட்டலுக்கு வந்ததும் துருவன் அவளுடனும் மற்றவர்களுடன் பேச எத்தனிக்க அவர்களோ அவனை கடந்து, தவிர்த்து விட்டு சென்றனர்.
அவனை அவர்கள் தவிர்த்தது நெஞ்சில் முள்ளாய் குத்தியது… இரவு முழுக்க அவனை தூங்க விடவில்லை , ஜெஸியின் அழுத்தமான பார்வை அவன் எண்ணத்திலிருந்தும் மனதிலிருந்து அகன்ற பாடில்லை. இரவு முழுக்க தூக்கமில்லை.
அறைக்குள் இருந்து மூச்சு மூட்ட வெளியே வந்து, நீச்சல் தடாகத்தில் நடந்தான்.
கால் வலித்தது உட்கார்ந்தான். அப்படியே சாய்ந்தான். தூக்கம் இல்லை கண்ணை மட்டுமே மூடிக் கிடந்தான்.
இருள் மெல்ல அகல, வானத்தில் வெளிச்சம் மெல்ல மெல்ல படர, அவனோ கண்களை திறந்தான். நன்றாக எரிந்து அவனை மேலும் இம்சை செய்தன அவனிரு விழிகளும். முகத்தை அழும்பி துடைத்து விட்டு நிமிர, அங்கே ஜெஸி தனியாக நடந்து செல்வதை பார்த்தவன், தனது போனில் மணியை பார்க்க, ஐந்து என காட்டியது.
“இந்த நேரத்துல எங்க போறா?”என எண்ணிக் கொண்டே பின் தொடர்ந்தான்.
வெள்ளை நிற குர்தி, நீல நிற பேன்ட் அணிந்து தலையில் துப்பட்டாவை போட்டு அதை கழுத்தில் சுற்றிக் கொண்டு நடக்க , அவளுக்கு தெரியாமல் அவளை தொடர்ந்தான். அவள் நேராக சென்றது என்னவோ ஆலயத்திற்கு தான். உள்ளே சென்று அதிகாலை பிராத்தனையில் கலந்து கொண்டாள்.
இவனும் பின்னே அமர்ந்து கொண்டான். பாதிரியாரின் பிரசங்கத்தை கேட்டு கொண்டிருந்தாள். ஞாயிறுதோறும் ஆலயம் செல்வது கடமை. இன்றும் செய்ய, அவளை பின் தொடர்ந்து வந்தவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை , சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ உனக்கு இது தேவை தானா துருவா? ‘ என அவனுக்கு அவனே கேட்டுக் கொள்ள, அதற்கு அவனே ‘இப்போ தேவை இல்ல… ஆனா பின்னாடி தேவைப் படலாம்..’ என சொல்ல, அவனுக்கே அவனை நினைத்து அதிர்ச்சி தான்.’ நானா இது?’ என்ற கேள்வி எழாமல் இல்லை… அவனுக்கே சிரிப்பு வர அதரங்களை அடக்கிக் கொண்டு சிரித்தான்.
பிரசங்கம் முடிய அனைவரும் எழுந்துக் கொள்ள, இவன் தூணில் சென்று மறைந்து கொண்டான். கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு சிலுவை போட்டுக் கொண்டு எழுந்து நடந்தாள்.
இவனும் பின் தொடர்ந்தான்… ஆள் இல்லாத அந்த சாலையில் இவள் நடக்க, பதுங்கி பதுங்கி அவளை தொடர்ந்தான். திடீரென அவனது செல்லில் அலாரம் அடிக்க, அதை அணைத்து விட்டு நிமிர, அவளை காணவில்லை…
‘ எங்க போனா? ‘ தவிப்பாய் அவன் தேடிக் கொண்டிருக்க, பின் பக்கமாக சென்று கழுத்தை இறுக்கி மற்றோரு கரத்தால் துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து, “எதுக்கு என்ன பாலோவ் பண்ற ?”என்றாள்.
அவள் துப்பாக்கி நெற்றியில் வைத்திருப்பது கூட அவனுக்கு பயமில்லை… ஆனால் அவள் நெருங்கி இருப்பது, அவனுக்குள் பல வேதியல் மாற்றம் ஏற்பட்டது. கண நேரத்தில், உடம்பெல்லாம் மின்சாரம் பாய வைத்து விட்டாள்.
‘ நீ எதை வேணாலும் நெற்றியில் வைத்துக் கொள், ஆனால் இப்படியே இரு ! ‘ என உள்ளுக்குள்’ சொல்லிக் கொண்டான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லு, எதுக்கு என்னை பாலோவ் பண்ற?”என்றாள்.
“உனக்கு பாதுகாப்பா வரதுக்கு தான் ” என்றான்.”எனக்கு நீ பாதுகாப்பா? உனக்கே நான் தான் பாடிகார்ட் எனக்கு நீ பாடிகார்ட்டா?”என்று நக்கலடிக்க, அவனது கவனம் எல்லாம் அவள் கையில் அடிப்பட்டிருந்த காயத்தில் தான் இருந்தது. இன்னொரு கையால் அவன் அதை வருடிக் கொடுக்க சட்டென கையை எடுத்துக் கொண்டு அவனை விடுவித்தாள்.
தன் துப்பாக்கியை சொருகி விட்டு முன்னே நடக்க, அவனும் பின்னே அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நடந்தான்.
“ஒரு காபி வாங்கி தர்றியா பசிக்குது?”என்றான் வயித்தை தடவிக் கொண்டு அவளும் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு டீ கடையை தேடினாள். ஒரு வழியாக தேடி அலைந்து, இருவரும் டீ வாங்கி பருகிய படி கடலை ரசித்தனர்.
மிடறு டீயை உதட்டால் முத்தமிட்டு உள்ளே அழைத்து தொண்டை வழியே இறங்குவதை இயந்திரங்கள் இல்லாது அவளது பளிங்கு கழுத்து வழியே பார்த்தான். அவளை மேலிருந்து கீழ் பாதம் வரை பார்த்தான். அவள் பாதத்தில் அதில் ஓரமாக சின்னதாக மறைந்து ஒளிந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த நுனி விரலை ரசித்தான். அதன் மேலே ஒரு குட்டி மச்சம் அழகாக இருந்தது. பிறந்த குழந்தையின் விரல்கள் போல இருந்தது. பிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளே தீயாய் எழ, அடக்க அரும்பாடு பட்டான்.
பின் அவள் புறம் திரும்பி “ஐ ஆம் சாரி !”என்று காற்றுக்கும் வலிக்காது மன்னிப்பு கேட்டவனை கண்டு இதழில் ஒரு நக்கல் சிரிப்பு அவளுக்கு.
அதை கண்டு கொண்டாலும் தான் சொல்ல வந்ததை தொடர்ந்தான்
“இல்ல… நான்… நேத்து …”என தடுமாற,
” எனக்கு புரியுது ! அங்க முதல் தடவை யார் போனாலும் இப்படி தான் கோவப்படுவாங்க ஆனா அதை பார்த்து பழக்க பட்டவங்க இதெல்லாம் ஒரு விஷயமான்னு போயிடுவாங்க. சூதாட்ட விடுதி தான அதுவும். ஃபர்ஸ்ட் டைம்னால் நீ பீல் பண்ற, எனக்கு இதெல்லாம் பார்த்து பழகிப் போகிடுச்சி”என்றாள்.
“இதுக்கு முன்ன நீ இங்க வந்திருக்கியா?”
“ம்ம்… பல தடவ !”என்றாள்.
“பல தடவையா? தனியாவா?” எனக் கேட்டான் ஆச்சர்மாய். இடது வலது பக்கமாக இல்லை என்று ஆட்டினாள்.
“அப்போ யார் கூட?”
அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு”என் புருசன் கூட !”என்று அவள் முன்னேறி நகர, இவன் அதே இடத்தில் தலைவர்களின் சிலை போல நின்றான்.
“என்னது புருஷனா??” என அதிர்ச்சியில் வாயை பிளந்தவனிடமிருந்து கிளாஸை வாங்கி, கடைக்குள் நுழைந்தாள். தேநீருக்கு பணத்தை செலுத்தி விட்டு அவள் வெளியே வரும் வரையில் அப்படியே சிலை போல நின்றிருந்தான் துருவன்.
அவன் நிற்கும் தோரணையை கண்டு அவளுக்குள் புன்னகை அரும்பிட, அவனை பார்த்து சிரிப்பை அடக்கியப்படி முன்னே நடந்தாள்.
அவள் சிரிப்பை அடக்குவதை கண்டதும் அதை தவறாக நினைத்துக் கொண்டவன், தான் கேட்ட கேள்விக்கு நக்கலாக பதில் அளித்து விட்டு போவதாக தவறாக நினைத்துக் கொண்டான்.
‘ சதா, வேலைன்னு சொல்லிட்டு என் கூட தான் இருக்கா ! இதுவரை புருசன் பேசறான் தனியா கூட போய் பேசினது இல்லையே… மணிக்காக போனே கதின்னு இல்லை. இவளுக்கா புருசன் இருக்கும்? அப்படியே இருந்தாலும் அவன் என்ன இவளை வேலைக்கா அனுப்ப போறான். ஒரு வயசு பையனுக்கு பாடிக்கார்டா அனுப்ப எந்த புருசன் தான் ஒத்துப்பான் என்ன? இப்படி ஐஞ்சு நாளைக்கு டூர் அனுப்பி வைச்சிட்டு அவன் சும்மாவா இருப்பான்? புருஷனாம் புருசன்.
என்னைக்கு இவ, நமக்கு ஒழுங்கா பதில் சொல்லிருக்கா, இன்னைக்கு சொல்ல…. நக்கல் அடிச்சிட்டு போறா !’ என தவறாக எண்ணிக் கொண்டு அவளை தொடர்ந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

