Loading

அத்தியாயம் 19

 

சில நிமிடங்கள் கழித்தும் அனைவரும் மௌனமாக இருக்க, அமைதி என்றாலே காத தூரம் ஓடும் சுடரொளியோ, அதற்கு மேல் அவளின் சுயத்தை மறைக்க முடியாமல், “எதுக்கு இப்போ ஏதோ எக்ஸாம் ஹால்ல இருக்க மாதிரி எல்லாரும் பின் டிராப் சைலன்ஸ்ல இருக்கீங்க?” என்று வினவினாள்.

 

“பின்ன உன்னை மாதிரி லொடலொடன்னு பேசிட்டேவா இருப்பாங்க? தாத்தா சொன்ன தகவல்களை யோசிக்க விடு.” என்றாள் யாழ்மொழி.

 

“யாரு நீ யோசிக்கிற?” என்று சுடரொளி கேலியாகக் கேட்க, அதற்கு யாழ்மொழி ஏதோ பதில் கூற வருவதற்குள், “ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? சண்டை போடுறதுன்னா, வெளிய போய் போடுங்க.” என்று எரிச்சலாகக் கூறிய மென்மொழி, ஆண்கள் மூவரிடமும், “என்னதான் தாத்தா கற்களைப் பத்தின ஹிஸ்டரியை சொல்லியிருந்தாலும், சில விஷயங்கள் மிஸ்ஸாகுற மாதிரி இருக்கு. அது தாத்தாக்கே தெரியலையா, இல்ல முக்கியமான தகவல் வெளிய கசிஞ்சுடும்னு சொல்லாம விட்டுருக்காரான்னு தெரியல.” என்றாள்.

 

“மேபி, இந்த வீடியோவை அவரு ரெக்கார்ட் பண்ணும்போது, அது அவருக்குத் தெரியாம இருந்துருக்கலாம்.” என்ற யுகேந்திரன், “இப்போ எல்லாருக்கும் இருக்க சந்தேகங்களை லிஸ்ட் பண்ணலாம். அதை லீட் பண்ணிப் போனா, அடுத்து எப்படி மூவ் பண்ணலாம்னு ஒரு கிளாரிஃபிகேஷன் கிடைக்கும்.” என்றான்.

 

“தாத்தா சொன்ன ஏழு கற்கள்ல வயலட் கலர் கல்லு இருந்ததா அவரு சொல்லல. ஆனா, அந்தப் பெட்டில இருந்த க்ளூல VIBGYORனு இருந்துச்சு. அப்போ வயலட் கலர் கல்லுக்கு என்னாச்சு? அதே மாதிரி, பிளாக் கலர் கல்லு இருந்துச்சே, அது என்னாச்சு?” என்று வினவினான் மதுசூதனன்.

 

“நான் சின்ன வயசுல அந்தப் பெட்டியைத் திறந்தப்போ, அதுல வயலட் கல்லு இல்ல. ஆனா, பிளாக் இருந்துச்சு. இப்போ அது எங்க போச்சு?” என்று யோசித்தாள் மென்மொழி.

 

“ரெட் கலர் கல்லை உன் தாத்தா மதுவோட அப்பா கிட்ட குடுத்துருக்காருன்னு வச்சுக்கிட்டாலும், ப்ளூ கலர் கல்லு எப்படி அந்தக் கார்காரன் கிட்ட போயிருக்கும்? ஒருவேளை, அது திருடு போயிருந்தா, அதே மாதிரி பிளாக் கலர் கல்லையும் யாரோ திருடி இருப்பாங்களோ!” என்று இன்பசேகரன் அவனின் கருத்தைக் கூற, “ப்ளூ கலர் கல்லை எப்போ திருடுனாங்கன்னே தெரியல. நான் முதல் முறை பார்த்தப்பவே அது பெட்டில இல்ல. இதுல இந்த பிளாக் வேற!” என்று சலித்துக் கொண்டாள் மென்மொழி.

 

அதுவரை எதையோ தீவிரமாகச் சிந்தித்த யாழ்மொழி, “எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.” என்று முணுமுணுத்தாள்.

 

இப்போது அனைவரின் பார்வையும் அவளில் படிய, அவர்களைத் தயக்கத்துடன் பார்த்தபடி, “ஆக்சிடெண்ட் நடந்த அன்னைக்கு… அந்த ஷோக்கு போறதுக்கு முன்னாடி, நான் தாத்தா வீட்டுக்குப் போனேன்ல… அப்போ அங்க… ஏற்கனவே பொருளெல்லாம் கலைஞ்சு இருந்துச்சு. கற்கள் இருந்த பெட்டியும் திறந்து இருந்துச்சு. அதுல இருந்த ஆரஞ்சு கலர் கல்லு, என் டிரெஸுக்கு மேட்ச்சா இருக்குமேன்னு எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று கூறினாள்.

 

அதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்வினையைக் கொடுக்க, சுடரொளியோ, “அடிப்பாவி, எவ்ளோ முக்கியமான மேட்டரை எவ்ளோ லேட்டா சொல்ற? அதுசரி, நீ எதுக்கு அந்த நேரத்துல உன் தாத்தா வீட்டுக்குப் போன? உனக்குத்தான் அந்தக் கற்களைப் பத்தி அப்போ தெரியாதே!” என்று வினவ, மென்மொழியும் கேள்வியுடன் சகோதரியைக் கண்டாள்.

 

உடன் பிறந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அம்மாதான் கால் பண்ணி அங்க போகச் சொன்னாங்க மொழி.” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “தாத்தா வீட்டோட பத்திரத்தை எடுத்துட்டு வரச் சொன்னாங்க.” என்றாள்.

 

அதைக் கேட்ட மென்மொழி அவளை முறைக்க, “நான் போனப்போ, பேப்பர்ஸ் அங்க இல்ல மொழி. நான் அதை எடுக்கவும் இல்ல.” என்று அவள் வாக்குமூலம் கொடுக்க, “எப்படி இருக்கும்? அதை நான் ஏற்கனவே பத்திரமா எடுத்து வச்சுட்டேன்.” என்று பல்லைக் கடித்தாள் மென்மொழி.

 

அப்போதும் சுடரொளிக்குச் சந்தேகம் தீறவில்லை.

 

“ஆரஞ்சு கலர் கல்லை நீ எடுத்த சரி… இவன் எதுக்கு க்ரீன் கலர் கல்லை எடுத்தான்?” என்று இன்பசேகரனைச் சுட்டிக் காட்ட, அவனும் தன் பங்கிற்கு யாழ்மொழியை முறைத்தான்.

 

“அது… அந்தக் கலர்லயும் என்கிட்ட டிரெஸ் இருந்துச்சு. அதனாலதான்…” என்ற யாழ்மொழி முழுதாகக் கூறாமல் பாதியிலேயே விட, “க்கும், அவனவன் உயிரை விட்டுக் கல்லைக் உருவாக்குனா, நீ உன் டிரெஸுக்கு அதை மேட்ச் பண்ணியிருக்க!” என்று சுடரொளி கூற, “ப்ச், அது அப்போ… ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.” என்ற யாழ்மொழி மென்மொழியை நோக்க, அவள் இன்னும் முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்.

 

“யாழ், எவ்ளோ முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுருக்கன்னு இப்போயாவது உனக்குப் புரியுதா? நான் அன்னைக்கே உனக்குக் கால் பண்ணேன்ல… எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அப்போ கூட நான் கேட்டேன், ரூம் ஏன் இப்படிக் கலைஞ்சு இருக்குன்னு. அப்போ கூட உனக்கு அதைச் சொல்லத் தோணலையா?” என்று மென்மொழி கண்டிப்புடன் வினவ, அதற்குப் பதிலில்லாமல் உதட்டைக் கடித்தாள் யாழ்மொழி.

 

“ப்ச், ஐ’ம் சோ டிஸ்ஸப்பாயின்டட் இன் யூ!” என்று மென்மொழி கூற, அவளைச் சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் விழித்தாள் யாழ்மொழி.

 

அதுவரை அமைதியாக, நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த யுகேந்திரன், “சோ, யாழ்மொழி போறதுகு முன்னாடியே யாரோ அந்த வீட்டுக்குப் போயிருக்காங்க. பிளாக் கல்லை எடுத்துருக்காங்க.” என்று கூற, “அந்த ‘யாரோ’தான் நம்மள ஆர்க்கைவ்ஸ்ல அட்டாக் பண்ண அந்த கருப்பு மனுஷன்!” என்றான் இன்பசேகரன்.

 

“இப்போ அவனை எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று மதுசூதனன் வினவ, “அது சிம்பிள்தான். அன்னைக்கு யாழ்மொழி அங்க போறதுக்கு முன்னாடி, யாரு போனதுன்னு தெரிஞ்சா போதும்.” என்று யுகேந்திரன் கூற, “அங்கதான் சிசிடிவி எதுவும் இல்லையே! அப்போ எப்படி கண்டுபிடிக்க?” என்றாள் மென்மொழி.

 

“அதுக்குத்தான் உன் தாத்தா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தன் இருக்கானே…” என்று யுகேந்திரன் கூற, “யூ மீன் அந்த ‘நடமாடும் சிசிடிவி’?” என்று கேலியாக வினவினாள் சுடரொளி.

 

“அவனை எப்படி விசாரிக்க? நம்மளே பெரிய ஆபத்துல இருக்கோம். இதுல, அவனையும் இதுக்குள்ள இழுத்து விடணுமா?” என்று கவலையுடன் கேட்டாள் மென்மொழி.

 

அவளின் கவலையைப் போக்குபவன் போல, “அவனை நாம விசாரிக்குறது யாருக்காவது தெரிஞ்சாதான?” என்ற யுகேந்திரனின் பார்வை சுடரொளியை நோக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த சுடரொளியோ, “ரைட்டு, டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மாதிரி சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் சர்வீஸா?” என்றாள்.

 

அடுத்த நொடி அவர்களிற்கானத் திட்டம் உருவானது.

 

அத்திட்டத்தின் படி, சுடரொளி, இன்பசேகரன் மற்றும் மென்மொழி மூவரும் கிருஷ்ணாவை விசாரிக்கக் கிளம்பினர்.

 

மென்மொழியின் வீட்டிலிருந்து மறைந்தவர்கள், கிருஷ்ணாவின் வீட்டிற்கு வெளியே தோன்ற, “இன்பா, சரியான லொக்கேஷனுக்கு போகவே தெரியாதா உனக்கு? எப்போ பார்த்தாலும், டார்கெட்ல இருந்து கொஞ்சம் தள்ளியே டிராப் பண்ற!” என்று நொடித்துக் கொண்டாள் சுடரொளி.

 

“ஒவ்வொரு முறையும் உங்களை எல்லாம் கூட்டிட்டு சுத்துறதே பெரிய விஷயம்… இதுல, கரெக்ட் ஸ்பாட்ல வேற இறக்கி விடணுமா?” என்று சலித்தபடி கூறினான் இன்பசேகரன்.

 

“ஷ், ரெண்டு பேரும் அமைதியா இருங்க.” என்ற மென்மொழி, “இப்போ எப்படி கதவைத் தாண்டி உள்ள போறது?” என்று யோசிக்க, அவர்களின் நல்ல நேரத்திற்குக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் கரிகாலன்.

 

அவர் எங்கோ வெளியூருக்குச் செல்ல கிளம்புவதை அவரின் கையிலிருந்த பயணப்பொதி கூறியது.

 

“பார்த்துக் கவனமா இருங்க. ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா உடனே எனக்குக் கால் பண்ணு.” என்று கரிகாலன் அவரின் மனைவியிடம் கூறிக் கொண்டே வாகனத்தை நோக்கி நடக்க, அவரின் மனைவியும் வெளியே இருந்த கம்பிக் கதவைப் பூட்டச் சென்றார்.

 

அதுவே சரியான சமயம் என்று எண்ணிய மென்மொழி, மற்ற இருவருக்கும் சைகையில் கூற, மூவரும் திறந்திருந்த கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

 

அடுத்து, ‘கிருஷ்ணாவை எப்படி கண்டுபிடிப்பது?’ என்ற கேள்விக்கு விடையாக அவனே உணவுண்ணனும் அறையில் ஒரு கையால் வாய்க்குள் உணவை தள்ளிக் கொண்டும், மறு கரத்தால் அலைபேசியின் திரையைத் தள்ளிக் கொண்டும் வீற்றிருந்தான்.

 

மறைந்திருந்தே அவனருகே சென்றனர் மூவரும்.

 

முதல் முறை போலல்லாது, இம்முறை கிருஷ்ணாவின் வாயை அடைத்த பின்னரே மறைவிலிருந்து வெளியே வந்தாள் சுடரொளி.

 

யாரோ தன்னை ஸ்பரிசிப்பதை உணர்ந்த கிருஷ்ணா ஏற்கனவே பயத்தில் இருக்க, இதில் சட்டென்று மூவரும் அவன் முன்பு தோன்றியதில், பதற்றத்தில் புரையேறி விட்டது அவனிற்கு.

 

அவனின் இருமல் சத்தம் கேட்டு, வாயிலிலிருந்த அவனின் அன்னை என்னவென்று வினவ, அவன் முன்பிருந்த சுடரொளியோ, கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

 

அதைக் கண்ட கிருஷ்ணா எச்சிலை விழுங்கியபடி, “ஒன்னுமில்லம்மா. நான் சாப்பிட்டுட்டேன். ரூமுக்குப் போறேன்.” என்று கூறியவன், அந்த மூவரையும் அழைத்துக் கொண்டு, வேகவேகமாக அவனது அறைக்குச் சென்றான்.

 

உள்ளே சென்றதும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தவன், அடுத்த நொடியே அந்த மூவரையும் பார்த்து, “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? நான்தான் அன்னைக்கே சொன்னேனே… என் அப்பா கிட்ட எதுவும் சொல்லாதீங்கன்னு… ஏற்கனவே, அவருக்கு ஏதோ பிரச்சனை போல… இதுல இந்த விஷயம் தெரிஞ்சா, என்னை அடி வெளுத்துடுவாரு.” என்று புலம்பினான்.

 

“கேப்பே விடாம நீ பேசுறதைப் பார்த்தா, ஏற்கனவே பிராக்டீஸ் பண்ணி வச்சுட்டு பேசுற மாதிரி இருக்கே! சரி அதை விடு, நாங்க வந்தது உன்னைப் போட்டுக் குடுக்க இல்ல. உன் கிட்டயிருந்து போட்டு வாங்க.” என்று சுடரொளி கூற, அவனோ திருதிருவென்று முழித்தான்.

 

தோழியை அடக்கிய மென்மொழியோ, “கிருஷ்ணா, எங்களுக்குச் சில டீடெயில்ஸ் வேணும். அதைக் கேட்கத்தான் வந்தோம். நீ எதுவும் பயப்பட வேண்டாம். இதுக்கு மேல உன்னை இதுல இன்வால்வ் பண்ண மாட்டோம்.” என்று வாக்கு கொடுத்தாள்.

 

என்னதான் மென்மொழி அவ்வாறு கூறினாலும், அவனிற்குப் பயம் இருக்கத்தான் செய்தது. எனினும், தலையை மட்டும் சம்மதமாக அசைத்தான்.

 

“கிருஷ்ணா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, தாத்தா வீட்டுக்கு யாழ்மொழி வந்ததை நீ பார்த்தியா?” என்று மென்மொழி வினவ, அவனோ பயந்தபடி ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

 

“அட, நீ பயப்படாத. அன்னைக்கு நீ தாத்தா வீட்டை வேவுப் பார்த்தது, இன்னைக்கு எங்களுக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப்பா இருக்குத் தெரியுமா? சிசிடிவி இல்லாத குறையை நீ போக்கிட்ட.” என்று சுடரொளி கேலியாகக் கூற, அங்கு நிலவிய தர்மசங்கடமான சூழல் விலகியது. சற்று இலகுவான கிருஷ்ணாவும் சுடரொளியை லேசாக முறைத்தான்.

 

‘இப்போ கேளு.’ என்று தோழிக்குக் கண்ஜாடை காட்டிய சுடரொளி இன்பசேகரனிடம் ஏதோ பேச சென்று விட்டாள்.

 

“ஓகே கிருஷ்ணா, அன்னைக்கு வேற யாராவது புதுசா அங்க வந்ததைப் பார்த்தியா?” என்று மென்மொழி வினவ, கிருஷ்ணாவின் பார்வை இன்பசேகரனிடம் நிலைத்தது.

 

அதைப் புரிந்து கொண்ட மென்மொழியோ, “எனக்குத் தெரிஞ்சு, அன்னைக்கு நானும் சுடரும் வந்தோம்… எங்களுக்கு முன்னாடி யாழும் இன்பாவும் வந்துருக்காங்க. அவங்களுக்கு முன்னாடி யாராவது வந்தாங்களா?” என்று வினவ, சற்று யோசித்தவன், “ஹ்ம்ம் ஆமா அக்கா. கோட்-சூட் போட்ட ஒருத்தர் வந்தாரு. அவரை இதுக்கு முன்னாடி நான் பார்த்தது இல்ல. அவரு யாருன்னும் எனக்குத் தெரியல.” என்று உதட்டைப் பிதுக்கினான் கிருஷ்ணா.

 

உடனே பரபரப்பான இன்பசேகரன், “அவன் எதுல வந்தான்? பார்க்க எப்படி இருந்தான்? எத்தனை வயசு இருக்கும்?” என்று கேட்க, “கேப்ல வந்தாருன்னு நினைக்கிறேன். ரொம்ப நேரமா வீட்டுக்குள்ளதான் இருந்தாரு. ஆனா, எப்போ போனாருன்னு தெரியல. நடுவுல எனக்கு வேற வேலை இருந்துச்சுன்னு அதைப் பார்க்கப் போயிட்டேன். சோ, அவரு எப்படி போனாருன்னு கவனிக்கல.” என்று தலையைச் சொறிந்து கொண்டே கூறியவன், “பார்க்க வெல் செட்டிலான ஆள் மாதிரி இருந்தாரு. வயசு… ஃபார்ட்டிக்குள்ள இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று கூறினான்.

 

அதுவரை அனைத்தையும் அலைபேசி வழியே கேட்டுக் கொண்டிருந்த யுகேந்திரன், “வீட்டை எப்படி திறந்து உள்ள போனான்னு கேளு மொழி.” என்று கூற, அவளும் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

 

சிறிது யோசித்த கிருஷ்ணாவோ, “எனக்கு சரியா ஞாபகம் இல்ல.” என்றான்.

 

கிருஷ்ணாவிடமிருந்து தகவல்களைச் சேகரித்துக் கொண்ட மூவரும் கிளம்பும் சமயம், அதுவரை அழைப்பிலிருந்த யுகேந்திரன் அழைப்பைத் துண்டிக்க, அதில் தெரிந்த முகப்புப் படத்திலிருந்த ஒருவரைக் காட்டிய கிருஷ்ணா, “இவர்தான் அன்னைக்கு வந்தாரு.” என்று கூற, அதைக் கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.

 

அதே சமயம், மென்மொழிக்கு அவளின் அன்னையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

படபடக்கும் இதயத்துடன் அதை மென்மொழி ஏற்க, மறுமுனையில் பேசிய அவளின் அன்னையோ, “மொழி, உங்க அண்ணனைக் காணோம்டி. கால் பண்ணா எடுக்கவே மாட்டிங்குறான். ரெண்டு நாளாவே அவன் சரியில்ல. உங்க அண்ணி கூட சண்டை போட்டுக்கிட்டு உம்முன்னே திரிஞ்சான். இப்போ எங்க போனான்னு தெரியல.” என்று கூற, அதைக் கேட்டவளிற்கோ அதிர்ச்சியில் உடல் நடுங்கி, விழிகள் விரிந்து கொண்டன.

 

அவளின் உதடுகள் தானாக, “அகரா…” என்று முணுமுணுத்தன.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்