
புது வீட்டுக்கு வந்து ஒரு வாரமாகியிருந்தது. சம்பூர்ணா முகம் கொஞ்சமும் சரியில்லை. எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள்.
என்ன வென்று கேட்டுப் பார்த்து தோற்றான் மித்ரன். அவளாக சொன்னால் சரி என்று விட்டு விட்டு வேலையை பார்த்தான்.
அன்று அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது, செய்தி வந்து சேர்ந்தது. புதிய எண்..
“என்னை ப்ளாக் பண்ணுற அளவுக்கு போயிட்டல? ஏன் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குதா?” என்று கேட்டு வந்திருந்தது.
மித்ரன் அந்த செய்தியை முதலில் புரியாமல் பார்த்தான். ஆனால் அடுத்த நொடி வந்து விழுந்த படம் அனைத்தையும் விளக்கியது.
சம்பூர்ணாவும் செந்திலும் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட போது எடுத்துக் கொண்ட செல்ஃபி அது.
“உன் பொண்டாட்டிக்கு என்ன ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் பிடிக்கும்னு தெரியுமா? தெரியலனா என் கிட்ட கேளு” என்று வந்திருக்க, மித்ரனுக்கு கோபம் ஏறியது. அவனை நன்றாக திட்ட வேண்டும் போல் இருந்தது.
அதே நேரம் ஆச்சரியமாகவும் இருந்தது. இவன் இதைத்தான் செய்வான் என்று சம்பூர்ணா சரியாக கணித்து விட்டாளே.
அந்த செய்தியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சம்பூர்ணாவிடமிருந்து செய்தி வந்தது.
“உனக்கு என்ன டின்னர் வேணும்?”
அதைப்படித்து சலித்தவன், “இப்ப ரொம்ப முக்கியமா?” என்று பதில் அனுப்பி வைத்தான்.
“சமையல் செய்ய கேட்குறாங்க. நான் வெஜ்னா வாங்கி செய்யனும்ல? என் கிட்ட ஏன் சலிச்சுக்கிற?”
“ப்ச்ச்.. என்னவோ செய்ய சொல்லு.. என்னமோ எல்லாம் என் விருப்பப் படி நடக்குற மாதிரி சீன் போட வேண்டியது”
“கரெக்ட்.. நான் ஆல்ரெடி சிக்கன் செய்ய சொல்லிட்டேன்”
“திருந்தவே மாட்டடி நீ” என்று முறைப்போடு அனுப்பினான்.
“நான் ஏன் திருந்தனும்? முடிஞ்சா நீ திருந்திக்கோ”
“அத தான் பண்ணனும்.. இப்ப கூட அந்த செந்தில் புது நம்பர்ல இருந்து உங்க ஃபோட்டோ அனுப்பியிருக்கான்.. அவன கொல்ல கூட முடியாம உட்கார்ந்துருக்கேன்.. எல்லாம் என் விதி”
“ரியலி? திருந்தாத கேசு அது.. அவன நம்பி பொண்ணு கொடுத்தவன சொல்லனும். என்னனு அனுப்பிருக்கான்?
உடனே ஸ்க்ரீன் சாட் எடுத்து அனுப்பி வைத்தான்.
“நோ தாங்க்ஸ்.. அவளுக்கு வேற எதெல்லாம் பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. காலேஜ் டேய்ஸ்லயே அதெல்லாம் நாங்க பேசி முடிச்சாச்சு. நீயே ஒரு ஏமாளி உன் கிட்ட எனக்கென்ன தெரிஞ்சுக்க வேண்டியது இருக்க போகுது? அப்படினு அனுப்பி விடு”
படித்தவனுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு, “இதயே காபி பண்ணி அனுப்புறேன். இரு” என்று விட்டு அப்படியே அனுப்பி வைத்தான்.
“இத கூட என் பொண்டாட்டி தான் சொன்னா.. உனக்கெல்லாம் பதில் சொல்லுறதே டைம் வேஸ்ட்னு சொல்லிட்டா.. கொஞ்சமாச்சும் சூடு சுரணை இருந்தா என் கிட்ட திரும்ப வராத.. வந்தனு வை.. அப்படியே உன் மச்சானுக்கோ இல்ல உன் பொண்டாட்டிக்கோ அனுப்பி விட்டுருவேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டி விட்டு ப்ளாக் செய்து விட்டான்.
“அனுப்பிட்டேன். போய் தொலையுறான்” என்று மித்ரன் சம்பூர்ணாவிடம் சொல்ல, “அவனுக்கு அவ்வளவு சீன் இல்லனு தான் சொல்லுறேன்ல?” என்று நக்கலடித்தாள்.
“அவன் சொன்ன பொய்ய நம்புனதுக்கு எனக்கு தேவை தான்”
“அத நம்பி நான் குடும்பப் பொம்பள இல்லனா சொல்லுற? உனக்கு இருக்குடா” என்று முறைத்ததோடு அவள் முடித்துக் கொள்ள, மித்ரன் பெருமூச்சு விட்டான். இதுவும் தேவை தான் அவனுக்கு.
வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப, சமையல் செய்பவர் சமைத்து முடித்து விட்டு கிளம்பி விட்டார்.
சம்பூர்ணா இன்னும் வராததால் மித்ரன் உடை மாற்றி விட்டு காத்திருந்தான்.
வழக்கமான நேரத்தில் வந்தவள், உடையை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது, கைபேசியில் எதையோ பார்த்தாள். பார்த்ததும் அதிர்ந்தவள் உடனே ஓடிச் சென்று மீண்டும் வேறு உடைக்கு மாறிக் கொண்டு, கார் சாவியை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தாள்.
“ஹேய்.. எங்க கிளம்பிட்ட?”
“வந்து சொல்லுறேன்”
“நில்லு.. நானும் வர்ரேன்” என்ற மித்ரன் கைபேசியை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு அவளோடு காரில் ஏறி விட்டான்.
“மித்ரா..”
“பேசாம போ.. எனக்கு வீட்டுல இருந்து போரடிக்குது”
“ப்ச்ச்.. அங்க வந்து எதுவும் பேசாத” என்று எச்சரித்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பி விட்டாள்.
இவ்வளவு வேகத்தை அவன் பார்த்ததே இல்லை. அவ்வளவு வேகமாக காரை ஓட்டினாள்.
“ஹேய்.. ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டதற்கு அவளிடம் பதிலே இல்லை.
வேகமாக சென்று ஒரு விட்டில் காரை நிறுத்தினாள்.
“யார் வீடு இது?”
பதிலே சொல்லாமல் இறங்கியவள், “கார பூட்டிட்டு வா” என்று விட்டு உள்ளே ஓடினாள்.
மித்ரன் எதுவும் புரியாமல் பார்த்தாலும், சாவியை எடுத்து காரை பூட்டி விட்டு அவளோடு சென்றான்.
உள்ளே நுழையும் முன்பே, “ஏய் விடுடா.. என்னை இப்படி கட்டி வச்சதுக்கு உன்னை சும்மா விட மாட்டேன்..” என்று ஒருவன் கத்துவது கேட்டது.
மித்ரன் உள்ளே செல்ல, சம்பூர்ணாவை பார்த்ததும் அவன் கத்துவதை நிறுத்தி விட்டான்.
மித்ரன் அவன் யாரென புரியாமல் பார்த்தான்.
அங்கே இரண்டு பேர் சற்று தள்ளி நின்றிருந்தனர். ஒருவன் சம்பூர்ணாவின் அசிஸ்டண்ட். அடுத்தவன் யாரென தெரியவில்லை.
அசிஸ்டண்ட்டிடம் மித்ரன் செல்லப் பார்க்க, சம்பூர்ணா அங்கிருந்த இருப்புக் கம்பியை தூக்கினாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்தவனை ஓங்கி அடிக்க, மித்ரன் அதிர்ந்து விட்டான்.
“ஏய்..” என்று முன்னால் செல்லப் பார்க்க, அசிஸ்டன்ட் அவசரமாக அவன் தோளை பற்றி தடுத்தான்.
“சார் நில்லுங்க” என்று அமைதியாக சொல்ல “என்ன இது?” என்று கேட்ட மித்ரனுக்கு அதிர்ச்சியில் வார்த்தை கூட சரியாக வரவில்லை.
“எங்கடா அவ? எங்க?” என்று கேட்ட சம்பூர்ணா மீண்டும் அடிக்க, மித்ரன் ஒரு முறை திடுக்கிட்டு அசிஸ்டண்ட்டை கேள்வியாக பார்த்தான்.
“யார கேட்குறா?”
“அவங்க ஃப்ரண்ட்.. கடத்தி கொண்டு போய் ப்ராத்தல்ல வித்துட்டான்.. வித்தப்போ அந்த பொண்ணுக்கு பதினேழு வயசு தான் இருக்கும்”
அசிஸ்டன்ட் சுருக்கமாக சொல்ல, மித்ரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பூர்ணா நிறுத்தாமல் அவனை அடித்தாள். அவனோ வாயை திறக்கவே இல்லை. அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். சம்பூர்ணாவின் கைகள் சளைக்க, மித்ரன் வேகமாக சென்று அடி வாங்கியவனின் முடியை பிடித்து இழுத்தான்.
“கேட்குறாள்ல? எங்க?” என்று அதட்ட, “நீ யாருடா அத கேட்க” என்று தெனாவெட்டாக பேசினான்.
“உனக்கு எமன்” என்றவன், சம்பூர்ணாவின் கையில் இருந்த கம்பியை வாங்கினான்.
“சொல்லுற வரை ஒவ்வொரு பல்லா உடைக்கிறேன் பார்க்குறியா?” என்றவன் டீசர்ட் கையை மேலே ஏற்றிக் கொண்டு கம்பியை கெட்டியாகப் பிடித்து ஓங்கி வாயில் அடித்தான்.
ஒரே அடியில் பல் உடைந்து சிதறியது. அவன் துப்பிய வேகத்தில் பல்லும் ரத்தமும் கொட்டியது.
சம்பூர்ணா அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கோபத்திலும் ஆதங்கத்திலும் அவளது கண்கள் கலங்கியிருந்தது. இப்படியே அடித்துக் கொல்லத்தான் அவளுக்கு விருப்பம்.
இரத்தம் துப்பி இருமியவன், மித்ரன் மீண்டும் கம்பியை ஓங்கவும் பயந்து விட்டான்.
இவ்வளவு நேரம் சம்பூர்ணாவின் அடிக்கு அசராதவன் இதை எதிர்பார்க்கவில்லை. மித்ரனின் அடி அவனை ஆட்டம் காண வைத்தது.
இந்த முறை மித்ரன் அவன் முகத்தில் அடிக்க, தாடை கிழிந்து இரத்தம் வடிந்தது.
மித்ரன் எதையும் கேட்கவில்லை. கேட்க வேண்டிய தேவையும் இல்லை. அடி தாங்காமல் அவனே சொல்வான். அதே நேரம் அவன் மனதில் சின்ன பெண்ணை விற்றவன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
மித்ரன் மீண்டும் கம்பியை ஓங்க, “சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்” என்று அவசரமாக கதறினான்.
அவன் பேசப்பேச அவன் வாயிலிருந்து இரத்தம் தெரித்தது. யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. மித்ரன் ஓங்கிய கையை இறக்காமலே சம்பூர்ணாவை பார்த்தான்.
“சொல்லு.. சொல்லித்தொலை” என்று சம்பூர்ணா கத்தினாள்.
“அவ.. அவ செத்துட்டா.. புதைச்சுட்டேன்” என்றதும் சம்பூர்ணாவுக்கு வெறி வந்து விட்டது.
நாற்காலியை கோபமாக எட்டி உதைத்தாள். அவன் அதோடு கீழே விழ, “நீயும் செத்துடு நாயே” என்று அவனை கொல்ல கிளம்பி விட்டாள்.
மித்ரன் ஒரு நொடி அதிர்ந்து, கம்பியை கீழே போட்டு விட்டு சம்பூர்ணாவை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
“விடுடா.. அவன ஏன் கையால கொன்னுடுறேன்.. செத்துப்போடா நாயே.. உனக்கெல்லாம் எதுக்குடா உசரு? ஒரு வாழ்க்கை?” என்று அவள் துள்ள, மித்ரன் அவளை அசைய விடவில்லை.
அதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவன், அவளை மொத்தமாக தூக்கிக் கொண்டு, “போலீஸ்க்கு ஃபோன் பண்ணு” என்று அசிஸ்டண்ட்டிடம் சொல்லி விட்டு வெளியேறினான்.
துள்ளிக் கொண்டே இருந்த சம்பூர்ணா, வெளியில் வந்ததும் அழ ஆரம்பித்து விட்டாள்.
மித்ரன் காரின் அருகே வந்து அவளை இறக்கி விட, அங்கேயே அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
மித்ரனும் அவளோடு அமர்ந்து தலையை தடவினான். என் ஆறுதல் சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை. தன் மார்பில் போட்டுக் கொண்டு அழ விட்டான்.
சில நிமிடங்கள் வரை நன்றாக அழுது ஓய்ந்தாள். வெளியே ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்க, “போலீஸ் வந்துட்டாங்கனு நினைக்கிறேன்” என்றான்.
உடனே பிரிந்து எழுந்தவள், முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டாள்.
காவல் துறையினர் திறந்திருந்த கதவை நன்றாக திருந்து உள்ளே வந்தனர்.
“ஹலோ மேடம்” என்றதும் தலையை மட்டும் ஆட்டினாள்.
மித்ரன், “உள்ள இருக்கான்” என்று கை காட்டினான்.
உடனே உள்ளே சென்று விட்டனர். சம்பூர்ணா அங்கேயே நிற்க, மித்ரனும் அங்கேயே நின்றான்.
சில நிமிடங்களில் மயங்கிக் கிடந்தவனை இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினர்.
“மேடம்.. நீங்க ஒரு ஸ்டேட்மண்ட் எழுதிக்கொடுக்கனும்” என்றதும் மித்ரனை மனைவியை பார்த்து விட்டு, “காலையில வரலாமா? இப்ப ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா” என்றான்.
“ஓகே சார்.. பட் சீக்கிரமா வந்தீங்கனா கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுற ஃபார்மாலிட்டிய முடிச்சுடுவேன்” என்று விட்டு கிளம்பி விட்டார்.
உள்ளே இருந்த புதியவன் வந்து, “டேக் கேர் மேடம்.. நாம அப்புறம் பேசலாம்” என்று விடை பெற்றான்.
அசிஸ்டன்ட் வந்து நிற்க, “வீட்ட பூட்டிட்டு கிளம்பு..” என்றாள் சம்பூர்ணா.
“உள்ள க்ளீன் பண்ணனுமே?”
“நாளைக்கு பார்த்துக்கலாம்”
சம்பூர்ணாவை காரில் ஏற்றி விட்டு மித்ரன் காரை ஓட்ட ஆரம்பிக்க, வெளி கதவையும் பூட்டி விட்டு அசிஸ்டண்ட் பெருமூச்சோடு சென்று விட்டான்.
சில காயங்கள் தழும்புகளாகலாம், வலிக்காமல் போகலாம், ஆனால் அழிவதில்லை.
வாசம் வீசும்.
