
அத்தியாயம் 16
யுகேந்திரன் மென்மொழியின் படுக்கையில் படுத்திருக்க, அவனருகே அமர்ந்திருந்த மென்மொழியோ அவனிற்கு வந்து கொண்டிருந்த அழைப்புகளை எடுக்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘திரும்பத் திரும்ப கூப்பிட்டுட்டு இருக்காங்களே… ஏதாவது முக்கியமான வேலையா இருக்குமோ? காலை அட்டெண்ட் பண்ணலாமா?’ என்றும், ‘அட்டெண்ட் பண்ணி என்னன்னு சொல்லுவ?’ என்றும் மாறி மாறி எண்ணிக் கொண்டிருந்தாள்.
யுகேந்திரன் எழுந்து அமர்ந்தது கூட தெரியாத அளவிற்கு, அவளின் சிந்தனை தீவிரம் பெற்றிருக்க, “என் மொபைல்ல அப்படி என்ன தெரியுதுன்னு இப்படி உத்துப் பார்த்துட்டு இருக்க?” என்ற யுகேந்திரனின் குரலில்தான் நிகழ்விற்கு வந்தாள் அவள்.
“நீங்க எப்போ முழிச்சீங்க? இப்போ ஓகேதான? ஹாஸ்பிட்டல் போலாமா?” என்று அவள் படபடக்க, “ஈஸி மொழி. ஐ’ம் ஆல்ரைட். அதுவும் மொழி டிரீட்மெண்ட் குடுத்ததுக்கு அப்புறமும் ஹாஸ்பிட்டல் போகணுமா என்ன?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.
அவனைக் கண்கள் சுருக்கிப் பார்த்தவளோ, “சர்காஸ்டிக்கா பேசுற மாதிரி தெரியுதே…” என்றவள், மீண்டும், “ஆமா, நீங்க எப்படி எந்திரிச்சீங்க?” என்றவள், அவனின் புருவம் ஏறி இறங்கியதைக் கண்டு, “அதாவது, நீங்க முழிக்க இன்னும் நேரமாகுமேன்னு நினைச்சேன். ஆனா, நீங்க அதுக்குள்ள எந்திரிச்சுட்டீங்களேன்னு கேட்டேன்.” என்று விளக்கினாள்.
“ரொம்ப நேரமா யாரோட மைண்ட்வாய்ஸோ சத்தமா கேட்டுட்டே இருந்துச்சு.” என்றவன் அவளைக் காண, “க்கும், கேட்டுடுமே…” என்று உதட்டைச் சுழித்து முனகியவள், “உங்களுக்குத்தான் அப்போயிருந்து ஏகப்பட்ட கால்ஸ் வந்துட்டே இருக்கு.” என்று அவனது அலைபேசியை நீட்டினாள்.
அன்வரும் செல்வாவும் மாறி மாறி அழைத்திருந்ததைக் கண்டவன், அன்வருக்கு அழைக்க, அவன் பேசுவதற்குத் தனிமை கொடுக்க வேண்டி, “நான் உங்களுக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று வெளியேறினாள் மென்மொழி.
அழைப்பை ஏற்ற அன்வரோ முகமன் தெரிவித்த கையோடு, “சார், நீங்க எங்க இருக்கீங்க? ரொம்ப நேரமா உங்களை ரீச் பண்ண முடியல. ஏசிபி வேற உங்களை விசாரிச்சுட்டு இருந்தார்.” என்று அழைப்பிற்கானக் காரணத்தைக் கூறினான்.
“எனக்கு ஒரு சின்ன ஆக்சிடெண்ட் அன்வர்.” என்று யுகேந்திரன் கூற, “சார், இப்போ எப்படி இருக்கீங்க? எந்த ஹாஸ்பிட்டல்?” என்று மறுமுனையில் அன்வர் பதறினான்.
“எனக்கு எதுவும் இல்ல அன்வர். நான் வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா பெட்டரா இருக்கும். ஏசிபி கிட்ட நான் பேசிக்கிறேன். வேற ஏதாவது அப்டேட்ஸ் இருக்கா?” என்றான் யுகேந்திரன்.
“பெருசா எதுவுமில்ல சார். அந்த வருணை ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க. அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளிய போகலன்னு சொன்னாங்க.” என்றான் அன்வர்.
“ஓகே அன்வர். தொடர்ந்து அவனைக் கண்காணிச்சுட்டே இருங்க. வேற எதாவதுன்னு கால் பண்ணுங்க.” என்ற யுகேந்திரன் அழைப்பைத் துண்டித்து விட்டு, அடுத்ததாக அவனது உயரதிகாரிக்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பை ஏற்ற உயரதிகாரியிடமும் அதே காரணத்தைக் கூறியவனிடம், “ஓஹ், என்ன உங்களுக்கு அடிக்கடி ஆக்சிடெண்ட் ஆகுது? எனிவே, டேக் கேர். இனிமே, என்னைக் கேட்காம எந்த பழைய கேஸையும் நோண்டாதீங்க.” என்ற எச்சரிக்கையுடன் அழைப்பைத் துண்டித்து விட்டார் அவர்.
இப்போது யுகேந்திரனின் மனதில் பழைய கேள்வி மீண்டும் உதிக்க ஆரம்பித்தது.
‘இவருக்கு எப்படி அந்தச் செக்யூரிட்டி தகவல் சொல்லியிருப்பான்? நான் அவனோட மைண்டை சரியா கண்ட்ரோல் பண்ணலையா?’ என்ற கேள்விக்குப் பதிலாக, அந்த நிழலுறுவத்தின் நினைவு வந்து போனது.
*****
யுகேந்திரனிற்கான பானத்தை எடுக்க வந்த மென்மொழி, யாழ்மொழியின் அறையைக் கடக்க நேரிட்டது.
அங்குதான் மதுசூதனன் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.
உள்ளே பேச்சு சத்தம் கேட்க, அவனை விசாரிக்கலாம் என்று அங்கு சென்றாள் மென்மொழி.
உள்ளே மதுசூதனனிற்குத் துணையாக சுடரொளிதான் இருந்தாள்.
அவன் எழுந்ததும், “ஒருவழியா எந்திரிச்சுட்டீங்க போல மது! இப்போ எப்படி இருக்கு?” என்று சுடரொளி விசாரிக்க, சிறிது சோர்வுடன் காணப்பட்டவன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன். அதான் நம்மகிட்ட டாக்டர் இருக்காங்களே…” என்றான் மதுசூதனன்.
பின் அவனே, “ஆமா, நாங்க எப்படி இங்க வந்தோம்? மொழி நல்லாதான இருக்காங்க?” என்று வினவ, அவனைப் போலவே, “அதான் நம்மகிட்ட டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் இருக்கே.” என்றவள், “மொழி சேஃப்தான். ஹே, உங்களுக்குத் தெரியாதுல, அவளுக்குப் புது பவர் கிடைச்சிருக்கு.” என்றாள்.
அவனும் எழுந்தமர்ந்தபடி, “அட, என்ன பவர்?” என்று வினவ, “ஹ்ம்ம், அதைப் பத்தி பேசுனாலே, என்னமோ இவ செஞ்ச வேலையால, கிடைக்க இருந்த நோபல் பீஸ் பிரைஸ் கிடைக்காம போன மாதிரி சோகத்துல மூழ்கிடுவா.” என்றவளை இடைவெட்ட முயன்று தோற்றுப் போனான் மதுசூதனன்.
அப்போதே அங்கு வந்த மென்மொழியைக் கண்டு ஒருநொடி திகைத்த சுடரொளி மறுநொடியே, “உலகம் எதை நோக்கிப் போகுதுன்னே தெரியல. ஒரு நோபல் பிரைஸ் குடுக்காததுக்கு எவ்ளோ அக்கப்போரு!” என்று கூறி சமாளிக்க முயன்றாள்.
தோழியை முறைத்துக் கொண்டே மதுசூதனனின் உடல்நலத்தை விசாரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மென்மொழி.
“ஷப்பா, இவ லுக்கே சரியில்ல.” என்ற சுடரொளி, மீண்டும் மதுசூதனனிடம் கதையளக்க ஆரம்பித்து விட்டாள்.
*****
கடைசி ஜோடியோ, கூடத்திலிருந்த நீள்சாய்விருக்கையில், ஆளுக்கு ஒரு மூலையில் விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
அந்த அறுவரில், அதிகமாகச் சக்தியை உபயோகப்படுத்தியது இன்பசேகரனாகத்தான் இருக்கும். அதனால், அவனும் மிகுந்த சோர்வுடனே காணப்பட்டான்.
அதைக் கவனித்த யாழ்மொழியோ, ‘அவன்கிட்ட போய் பேசலாமா? பேசுனா ஒழுங்கா பேசுவானா, இல்ல ஏதாவது கத்தி விடுவானான்னு வேற தெரியல.’ என்று அவனை ஓரக்கண்ணில் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
*****
சில நிமிடங்களில், ஆறு பேரும் கூடத்தில் கூடி, அவர்கள் சந்தித்த இன்னல்களைப் பற்றி கலந்துரையாடினர்.
அதில், முக்கிய விவாதப் பொருளாக இருந்தது அந்த மர்ம இருள் மனிதனே!
“அவனைப் பார்க்குறதுக்கே செம டெரிஃபிக்கா இருந்துச்சு. சீரியல் கில்லர் படத்துல வர சைக்கோ கில்லர் மாதிரியே இருந்தான். இத்தனைக்கும் அவன் மூஞ்சியைப் பார்க்கவே இல்ல. அவுட்லுக்கைப் பார்த்ததுக்கே அள்ளு விட்டுடுச்சு.” என்றாள் சுடரொளி. அவளின் தேகம் பழைய நினைவில் சிலிர்த்தது.
“ஹ்ம்ம், அவன் பக்கத்துல வரப்போ நம்மளோட பவர்ஸ் ஒர்க்காகல. அப்போ நம்ம கிட்ட இருக்க கல்லுக்கும் அவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ?” என்று இன்பசேகரன் கேட்க, “நம்ம கிட்ட இருக்க கல்லு மாதிரி அவன் கிட்டயும் ஏதாவது கல்லு இருக்கலாம்.” என்றான் யுகேந்திரன் யோசனையுடன்.
சற்றும் யோசிக்காமல், “பிளாக் ஸ்டோன்.” என்றிருந்தாள் மென்மொழி.
அதில் மற்ற ஐவரும் மென்மொழியைக் காண, “தாத்தா கிட்ட எல்லோ, ஆரஞ்சு, டார்க் ப்ளூ, க்ரீன் கலர் கல்லோட பிளாக் கலர் கல்லும் இருந்துச்சு. அதைச் சேர்த்துதான் அஞ்சு கலர் கல்லு இருந்துச்சுன்னு சொன்னேன்.” என்றாள்.
“அடிப்பாவி, இப்படி ஒரு கல்லு இருக்குன்னு ஏன் இதுவரை சொல்லல?” என்று சுடரொளி வினவ, “ஹே, அந்தக் கருப்பு கலர் கல்லுக்கு இப்படிப்பட்ட பவர்ஸ் இருக்கும்னு எனக்கு என்ன தெரியும்? அதோட, அந்த பெட்டில இருந்து கிடைச்ச குறிப்புல, VIBGYORனுதான இருந்துச்சு? அதைப் பார்த்ததும், வயல்ட்டைதான் பிளாக்னு பார்த்த மாதிரி நினைச்சுட்டேன்.” என்று அவள் பக்க நியாயத்தை எடுத்துரைத்தாள் மென்மொழி.
“VIBGYORக்கு க்ளூ குடுத்த தாத்தா ஏன் இந்தக் கருப்பு கல்லைப் பத்தி எதுவும் சொல்லல?” என்று யாழ்மொழி வினவ, “மேபி, கருப்பு கல் நம்ம கிட்ட இருக்க கல்லோட பவர்ஸுக்கு ஆப்போசிட்டா இருக்கலாம். அதைப் பத்தி யாருக்குமே தெரிய வரக்கூடாதுன்னு நினைச்சுருக்கலாம்.” என்றான் மதுசூதனன்.
“இப்போ அந்தக் கல்லுக்கு என்னென்ன பவர்ஸ் இருக்கு?” என்று சுடரொளி எச்சிலை விழுங்கியபடி வினவ, “நம்ம கிட்ட இருக்க பவர்ஸை அடக்குற சக்தி…” என்றான் இன்பசேகரன்.
“மத்தவங்களை கண்ட்ரோல் பண்ற சக்தியா இருக்கும்னு தோணுது. ஏன்னா, ஆர்க்கைவ்ஸ்ல எங்களைத் தாக்க வந்த ஆளுங்க ஏதோ கண்ட்ரோல்ல இருந்த மாதிரி இருந்துச்சு.” என்றான் யுகேந்திரன்.
“ஏன் இப்படி இருக்கக் கூடாது? அவனோட கண்ட்ரோலை ரெசிஸ்ட் பண்ணதான், உங்ககிட்ட இருந்த கல்லு க்ளோ ஆகி, உங்களுக்கு வலியை உண்டாக்கி இருக்கலாம்ல… டிஃபன்ஸ் மெக்கானிஸம் மாதிரி!” என்றாள் மென்மொழி.
“ஹ்ம்ம், நல்ல பாயிண்ட்தான்!” என்ற யுகேந்திரன், மற்றவர்களிடம் அவர்கள் அந்தந்த இடங்களில் சேகரித்த தகவல்களைப் பற்றிக் கேட்டான்.
யாழ்மொழி அவள் வேடம் தரித்து எடுத்து வந்த பெட்டியைக் காட்டி, “இந்தப் பெட்டி பார்க்குறதுக்கு நம்ம கிட்ட இருந்த பெட்டி மாதிரியே இருந்துச்சு.” என்றாள்.
அதைக் கண்ட யுகேந்திரன், அவனது அலைபேசியில் எடுத்த புகைப்படத்தைக் காட்டி, “இதே பெட்டிதான்!” என்று அதில் ஆராவமுதன் வைத்திருந்த பெட்டிகளைச் சுட்டிக் காட்டினான்.
“அப்போ ரெண்டு பெட்டியா?” என்ற மதுசூதனன், “இந்தப் பெட்டிலயும் ஸ்டோன்ஸ் இருந்துருக்குமோ?” என்று வினவ, “அந்த மியூசியத்துல வேலை செஞ்சவங்க கிட்ட கேட்டப்போ, இந்தப் பெட்டியை ரீசண்ட்டா நடந்த எக்ஸ்கவேஷன்லதான் கண்டுபிடிச்சாங்கன்னு சொன்னாங்க.” என்றாள் யாழ்மொழி.
அப்போது அதைத் தொட்ட சுடரொளிக்கு, மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அத்துடன், அவளது மனதில் ஏதேதோ காட்சிகள் விரிய, அவளது வாய் தன்னாலேயே, “இல்ல, இந்தப் பெட்டிதான் முதல்ல கிடைச்சது. மொழியோட தாத்தா இதைத் திரும்பக் கடல்ல வீசி இருக்காரு.” என்ற சொற்களை உதிர்த்தன.
அதில் அனைவரும் அவளைப் பார்க்க, அப்போதே அதை உணர்ந்த சுடரொளி, “இதுதான் என்னோட இன்னொரு பவரோ?” என்று கேட்டு விழித்தாள்.
“பொருட்களைத் தொட்டா, அதைப் பத்தின ஹிஸ்டரி தெரியுமோ?” என்று மதுசூதனன் ஆவலுடன் வினவ, “அப்படித்தான் போல… இதைத் தொட்டதும், ஏதோ ஷாக்கடிச்ச மாதிரி இருந்துச்சு. அதோட, பல தெளிவில்லாத சீன்ஸ் எனக்குள்ள படம் மாதிரி ஓடுச்சு. அதுல தெளிவா தெரிஞ்சதைத்தான் உங்க கிட்ட சொன்னேன்.” என்றாள் சுடரொளி.
“அப்போ நம்ம கிட்ட இருக்க கல்லைத் தொட்டாலும், உனக்கு அதோட பாஸ்ட் தெரியும்ல?” என்று யாழ்மொழி வினவ, சுடரொளியோ மென்மொழியைப் பார்த்து, “அதனாலதான் உன் கல்லைத் தொட்டப்போ எனக்கு ஷாக்கடிச்சதா?” என்று கண்களை விரித்தாள்.
இப்போது சுடரொளியின் முன்பு ஆறு கற்கள் இருக்க, “தெரிஞ்சே ஷாக்கை அனுபவிக்கப் போறேன்.” என்று முகத்தைச் சுழித்தபடி, அவற்றை தொடப் போக, அனைவரும் அவளையே ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்.
இறுதி நொடியில் கையை விலக்கியவளோ, “மொழி, எனக்கு ஏதாவது நடந்தா காப்பாத்திடுவேல?” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்தபடி வினவினாள்.
“அதெல்லாம் எதுவும் ஆகாது. முதல்ல தொடுடி.” என்றாள் மென்மொழி.
“இப்படி எல்லாரும் என்னைச் சுத்தி உட்கார்ந்து ஏதோ என்டர்டெயின்மெண்ட்டை பார்க்குற மாதிரி பார்த்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எல்லாரும் தள்ளிப் போங்க.” என்று அவள் அதட்ட, “அந்தக் கல்லைத் தொடுறதுக்குள்ள, இன்னும் என்னென்ன அலப்பறை செய்யப் போறான்னு தெரியல.” என்று பெருமூச்சு விட்டாள் யாழ்மொழி.
ஒருவழியாக அந்தக் கற்களை சுடரொளி தொட, அதே சமயம் அந்தக் கற்களும் வெளிச்சத்தை கசிய விட, முதல் முறை போலல்லாது, இம்முறை அவை கொடுத்த அதிர்ச்சியை பொறுத்துக் கொண்ட சுடரொளி, அந்தக் கற்களிற்குப் பின்னிருக்கும் மர்மத்தை அறிந்து கொள்ள முயற்சித்தாள்.
அவளின் மனதிற்குள், பல தெளிவில்லாத காட்சிகள் வேகவேகமாக ஓடிக் கொண்டிருந்தன.
ஏதோவொரு இடத்தில் பலர் ஏதோ பயிற்சி செய்வதும், அவர்களின் உடலிலிருந்து சக்தி வெளிவருவதும், சில சண்டைக் காட்சிகளும், அதனால் பலர் கொல்லப்படுவதும், அவளின் மனதில் காட்சிகளாக வலம் வந்தது.
இறுதியாக மிகப்பெரிய ஆழிப்பேரலை அந்த நிலப்பரப்பை அழிப்பதுடன் அந்தக் காட்சிகள் நின்று போயின.
அதற்கு மேல், அது கொடுத்த அழுத்தத்தை சுடரொளியால் தாங்க முடியாமல் போக, மூச்சு வாங்கியபடி கண்களைப் பிரித்தாள்.
அனைவரும் அவளையே பார்த்திருக்க, அவளோ, “இது சாதாரண விஷயம் இல்ல. இதனாலதான் குமரிக்கண்டமே அழிஞ்சுருக்கு போல.” என்று அந்தக் கற்களை பீதியுடன் பார்த்தபடி கூறினாள்.
அதைக் கேட்ட மற்றவர்களும் அந்தக் கற்களை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
தொடரும்…

