Loading

பாதி சாப்பாட்டில் கை கழுவிக்கொண்டு எழுந்து செல்லும் செல்வத்தைத் தனமும், காயத்ரியும் அதிர்ச்சியுடன் பார்க்க,

 

“என்னம்மா, அப்பா இப்படிச் சொல்லிட்டுப் போறது மட்டும் இல்லாமல், சாப்பாட்டில் கை கழுவிட்டுப் போறாரு.”

 

“அப்பா அந்த மாதிரிச் செய்ய மாட்டாரு, அதாண்டி எனக்கும் புரியல, எனக்கு இப்போ பயந்து வருது. நான் தனா கிட்டயும், சரவணா கிட்டயும், பாக்கியத்து கிட்டயும், அக்கா கிட்டயும் உங்க அப்பாகிட்டப் பேசி இந்தக் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வைக்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன். உங்க அப்பா சட்டுனு கையைக் கழுவிட்டுப் போறாரு சாப்பாட்டுல, ஒன்னும் புரியல” என்றார்.

 

தனம் கையைப் பிசைந்து கொண்டு இருக்க,

 

“ஒன்னும் இல்லம்மா, விடு மா… அப்பா ஏதாச்சும் யோசிச்சு இருப்பாரு. என்னடி இப்படி ஒரே வார்த்தையில சொல்ற.”

 

“வேற எப்படி மா சொல்லணும்?”

 

“இப்ப எனக்கு அடி வயிறே கலங்குதடி. உங்க அப்பா கை கழுவிட்டுப் போனதைப் பார்த்து.”

 

“அம்மா பொறுமையா பேசலாம், இப்ப என்ன அவசரம்?”

 

“என்னடி அவசரம்னு இப்படிக் கேக்குற?”

 

“ஆமா அம்மா பேசலாம் பொறு”.

 

“ஆனா, அப்பா ஏன் இப்படிப் போனாருன்னு தெரியலையே…”

 

“தெரியலையே…”

 

“அப்பா  அப்படிப் பேசினதால தாண்டி யோசிக்கிறேன். மனுஷன் பசிக்குதுன்னு சொன்னாருன்னு சொன்ன, சாப்பாடு கூடச் சாப்பிடலை.”

 

“ஒரு வேளை, நான் சமைச்ச சாப்பாடு சரியில்லையோ?” என்று அந்த நேரத்திலும் காயத்ரி கவுண்டர் கொடுக்க,

 

தன் மகளைப் பார்த்து முறைத்த தனம், “நீ வேற ஏண்டி, நேரம் கெட்ட நேரத்துல” என்று மகளின் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டுச் செல்வம் சென்ற பக்கம் செல்ல,

 

செல்வம் பின் கட்டில் யோசித்துக் கொண்டிருந்தார்.

 

“ஏங்க?” என்று தோளில் கை வைக்க,

 

“என்ன தனம்?” என்று கேட்டார்.

 

“ஏன் மாமா, சாப்பாட்டில் கையைக் கழுவிட்டு வந்துட்ட, நான் பேசுனது புடிக்கலையா?”

 

“பேசுனது புடிக்கலைன்னு சொல்லல, சரவணனுக்கு வேற இடம் பாத்துக்கலாம்.”

 

“மாமா எனக்குப் புரியல… சரவணனுக்குத் தனாவைப் புடிச்சிருக்கு. நம்ம தனாவை  நீ ஏன் மாமா வேணாம்னு சொல்ற, என்ன விஷயம்?”

 

“தனா புடிச்சிருக்குன்னு  சொன்னாளா?”.

 

“மாமா இது என்ன கேள்வி?”.

 

“தனாவும் புடிச்சிருக்குன்னு சொன்ன பிறகு தானே நான் பேசினேன்.”

 

“நீயா முடிவு பண்ணிப் பேசிட்டு வந்துரு.”

 

“மாமா எனக்குப் புரியல, நான் பேசுனது தப்புன்னு சொல்றியா? இல்ல, சரவணா தனாவை விரும்புறது தப்பா?”

 

“எல்லாமே தப்பாவே இருக்கு தனம்”

 

“என்ன மாமா தப்பைக் கண்டுட்ட”

 

“அண்ணா ஒத்துக்குவாரா, யோசிச்சியா?”.

 

“புரியல எனக்கு. மாமா ஏன் ஒத்துக்க மாட்டார் என்று சொல்றீங்க? அவர் ஒத்துப்பாரா இல்லையான்னு நான் சொல்லல.”

 

“அவர்கிட்ட கேட்டீங்களா?”

 

“நான் மாமாகிட்டப் பேசல. உங்ககிட்டப் பேசிட்டு நாம போய் மாமாகிட்டப் பேசலாம்னு அக்காகிட்டச் சொல்லிட்டு வந்தேன்.

 

“பொறுமையா பேசலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது. எதையா இருந்தாலும் யோசிச்சு நிதானமா செய்யலாம் தனம். ஒன்னும் அவசரம் இல்லை தனம், கொஞ்ச நாள் அமைதியா இரு” என்று விட்டு அமைதியாகச் சென்று விட்டார்.

 

தனத்துக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

 

நடந்ததை தனம் தன் மகளுக்கு போன் செய்து சொல்ல,

 

“சரிமா விடு, அப்பா யோசிச்சுச் சொல்லட்டும்” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

ருத்ரன் தான் “என்ன?” என்று கேட்க,

 

ருத்ரனிடம் சொல்ல,

 

“மாமா ஏண்டி இப்படிச் சொல்றாரு?”

 

“அவர் மனசுல ஏதாச்சும் இருக்கும் மாமா, யோசிச்சிட்டு சொல்வாரு. நல்ல முடிவா எடுப்பாரு” என்றாள்.

 

“எனக்கு ஒன்னும் சரியா படலடி, மாமா அப்படிப் பேசறது. என் மச்சானுக்கு என்னடி குறை. ஏன்? அவர் தங்கச்சி பொண்ணைக் கொடுக்க மாட்டாரோ?” என்று கேட்டவுடன், திரும்பி அவனை முறைத்தாள்.

 

“உன்னோட தங்கச்சி தான், அதை மறந்துடாத.”

 

“என் தங்கச்சி தாண்டி. என் மச்சானுக்குக் கொடுக்க முடியாதா? என் மச்சானுக்கு என்னடி கெட்ட பழக்கம் இருக்கு.”

 

“அதப்பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. அவர் நிறைய விஷயம் யோசிச்சு இருக்கலாம்.”

 

“என்னடி யோசிச்சு வச்சிருக்கார், நிறைய விஷயம்”

 

“மாமா நான் நிறைய விஷயம் சொன்னேனே தவிர, இந்த விஷயம் அப்படின்னு எதையும் குறிப்பிட்டுச் சொல்லல…”

 

“அந்த நீ குறிப்பிட்டுச் சொல்லாத விஷயம் தான் என்னன்னு கேட்கிறேன்?”.

 

ருத்ரனை முறைத்துவிட்டு, “எனக்குத் தெரியாது. அவர் எதை வேணாலும் யோசிக்கலாம். அதுக்காக நான் ஒன்னும் பண்ண முடியாது சரியா? நாளைக்கு நீயே கூட ஒரு வார்த்தை சொல்லுவ…”

 

“என்ன டி நானே சொல்லுவேன் என்ன பேசணும்னு நினைக்கிற? மனசுல இருக்கிறதை முழுசாப் பேசிடு. இப்படி விட்டு விட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்ல”

 

“நான் எதையும் விட்டுவிட்டுப் பேசல, பிட்டு பிட்டாவும் பேசல மாமா சரியா? அவர் ஏதாச்சும் யோசிப்பார். நாளை மறுநாள் நீ கூட ஒரு வார்த்தை கேப்ப, என் தங்கச்சிக்கு எப்படி இப்பேர்பட்ட மாப்பிளையைப் பார்த்தேன்னு கேட்கலாம். அந்த வார்த்தையை நீ இல்ல, வேற யாரும் சொல்லிடக் கூடாது இல்லையா?”

 

அவளை முறைத்துவிட்டு அமைதியாக இருந்தான்.

 

அவள் வேறு எதுவும் பேசாமல் படுத்தவுடன் அடுத்த நொடி, “விஷயம் என்னன்னு சொல்லுடி, மண்ட காயுது” என்றான்.

 

அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாயில் எழுந்து உட்கார்ந்தவள்,

 

“மாமா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. நானுமே கூட யோசிக்கல, மறந்துட்டேன். இப்ப அப்பாவே வேணாம்னு சொன்னாங்கன்னு அம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் யோசிச்சேன்”.

 

“அப்படி என்னடி முக்கியமான விஷயம்?”

“மாமா, நம்ம தனாக்கு மூல நட்சத்திரம். அது தெரியுமா உனக்கு”.

 

“அதுக்கு என்னடி, மூல நட்சத்திரமாக இருந்தால் என்ன?”

 

அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, “மூல நட்சத்திரம் இருந்தால் மாமனார், மாமியார் ரெண்டு பேத்துல யாராச்சும் ஒருதவங்க இல்லாத இடத்துக்கு தான் போற மாதிரி வரும். இல்ல அப்படி இருந்தாங்கன்னா போன ஒரு வருஷத்துல ரெண்டு பேருல ஒருத்தவங்களை அடித்து விடும் என்று சொல்வார்கள் போதுமா?”.

 

“ஏண்டி இன்னும் எந்தக் காலத்தில இருக்கீங்க?”

 

“மாமா இது உனக்கு நம்பிக்கை இல்லாத விசயமா கூட இருக்கலாம். அப்பாவுக்கு நம்பிக்கை தரக் கூடிய விஷயம், சரியா? வெளி இடத்துல கொடுக்கறதுக்கே அவ்வளவு யோசிப்பாங்க அப்பா. அண்ணனுக்குக் கொடுக்க யோசிக்காம ஏதாவது செய்வாங்களா? இதுக்கு மேல எனக்கு உன்கிட்டச் சொல்ல பதில் இல்லை” என்றாள்.

 

“அதுக்காக இப்ப அவனோட காதலைச் சாகடிக்கப் போறியா?”

 

அவனைப் பார்த்து முறைத்து விட்டு, “உன் தங்கச்சியும் தான்  லவ் பண்றா மறந்துடாத. ரெண்டு பேருமே தான் லவ் பண்ணிட்டு இருக்காங்க. இந்த நிமிஷம் வரைக்கும் ரெண்டு பேருமே சொல்லிக்கல, அவ்வளவுதான். விஷயம், இங்கே யாரோட காதலையும் சாகடிக்கணும்னு நான் நினைக்கல. அதுக்காக உயிரோட இருக்க மனுசனையும்  சாவடிக்கனும்னு நினைக்கல”.

 

“ரெண்டும் ஒன்னு தாண்டி. உயிருக்கு உயிராக விரும்புறவங்க கூடப் பேசிட்டு, அடுத்தவங்களுக்குக் கட்டி வைக்கிறதும் ஒன்றுதான். உயிரோட இருக்கவங்களுக்குச் சமாதி கட்டறதுக்குச் சமம்”.

 

“இப்போ நான் உங்களை உயிரோட சமாதி கட்டிட்டேன் என்று சொல்ல வரீங்களா?”

 

அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், எழுந்து அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தான். ஒரே ஒரு நிமிடம் அவள் கண் மூடி நின்றவுடன், அவளை அடிக்காமல் கையைக் கீழே விட்டு இருந்தான்.

 

“போதும். இதுக்கு மேல என்னை வார்த்தையால கொல்லனும் என்று நினைக்காதே. நான் பேசின வார்த்தை தப்பு தான், ஒத்துக்குறேன். உன் அண்ணா அன்னைக்குச் சொன்னான். இந்த செகண்ட் வரைக்கும் எனக்குப் புரியல. ஆனா, நீ என் ஆழ் மனசுல இருக்கடி. அது எப்படி என்று எனக்கும் புரியல சரியா?

 

இன்னொரு விஷயம் இந்த செகண்ட் வரைக்கும் நீ எனக்கு என் கூட சின்ன வயசுல இருந்து ஒன்னு மண்ணா வளர்ந்தவ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக அதையே  குத்திக் குத்திக் காமிக்காத. நான் பேசின வார்த்தையைச் சொல்லிக் காமிக்காத. நான் அப்போ இருந்த மன நிலையில அப்படிப் பேச வேண்டி இருந்தது.

 

அதுக்காக என்னைச் சாவுற வரைக்கும் இப்படிப் பேசிப் பேசிச் சாகடிக்கணும் என்று இருக்க இல்லையா? நீ தாண்டி என்னைக் குழி தோண்டிப் புதைக்கிற, இப்படிப் பேசிப் பேசி…” என்று விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றான்.

 

தமிழ் அமைதியாக போகும் ருத்ரனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

மறுநாள் காலைப் பொழுது ருத்ரனே தனது மாமாவைத் தேடிச் சென்றிருக்க,

 

“ஏன் மாமா?” என்று விவரத்தையும் கேட்க,

 

செல்வம் தனது மனைவியையும் கூப்பிட்டு விவரத்தைச் சொல்ல,

 

“நான் கூட மறந்துட்டேன். நீங்க வேணாம்னு சொன்ன உடனே தமிழுக்கு போன் பண்ணி அந்த நேரத்துல சொல்லிட்டேன். என்ன எதுன்னு எனக்கு ஒன்னும் புரியல.”

 

“என்ன விசயம் என்று  என்கிட்டக் கேட்டு இருக்கலாம் இல்ல.”

 

“கேட்டு இருக்கலாம் தாங்க, நீங்க சொல்லிட்டுப் பாதிச் சாப்பாட்டில் எழுந்திருச்சுப் போன உடனே எனக்குப் பயம் வந்துருச்சு.”

 

“அவ்ளோ தான், உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?”. என்று செல்வம் தனத்தைப் பார்த்துக் கேட்டார்.

 

“எத்தனை வருஷம் வாழ்ந்திருக்க என்கூட”  என்று கேட்டார்.

 

தனம் எதும் பேசவில்லை அதன்பிறகு.

 

ருத்ரன் தான் “மாமா இன்னமுமா இந்த ஜாதகம், பஞ்சாங்கம் அதையே இழுத்துப் பிடிச்சி வச்சிட்டு இருப்பீங்க?”

 

“அதை இழுத்துப் பிடித்து வச்சிட்டு இருக்கிறது விஷயம் இல்லை ருத்ரா இதுல ஒரு உயிர் சம்பந்தப்பட்டு இருக்கு. தெரிஞ்சே  நாம ஒரு உசுரோட விளையாடக் கூடாது. நமக்கே  தெரியும். தெரிஞ்சிருக்கும் போது நம்ம இந்த மாதிரி ஒரு காரியத்தைப் பண்றது சரியா?” என்றார்.

“மாமா, இருந்தாலும் ரெண்டு பேருமே விரும்புறாங்களே மாமா. இப்படி அவங்க விருப்பத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறது சரியா?”

 

“ருத்ரா ரெண்டு பேரும் விரும்புறாங்க ஒத்துக்குறேன். ரெண்டு பேரும் அவங்க விருப்பத்தைச் சொல்லலன்றதுக்காக அவங்க மனசு கஷ்டப்படாது. அவங்க மனசுல ஒன்னுமே இருக்காதுன்னு சொல்ற அளவுக்கு நான் பிற்போக்கு வாதியும்  இல்லைன்னு நினைக்கிறேன். யோசிக்கணும் ருத்ரா. யோசிக்காம  எந்த ஒரு விஷயத்தையும் செஞ்சுற முடியாது.

நம்ம மட்டும் முடிவெடுக்கிற விஷயமும் கிடையாது இல்லையா? அண்ணா அண்ணி, இன்னும் வீட்டில் இருக்கவங்க கிட்டயும் அதைப் பத்திப் பேசனும்” என்றார்.

 

“சரி வாங்க மாமா, நம்ம போயிட்டு பெரிய மாமாகிட்ட கூட பேசிட்டு வரலாம், நானும் வரேன். நம்ம மூணு பேருமே போலாம்” என்றான்.

 

“ருத்ரா, இப்ப தான சொன்னேன். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம்.”

“மாமா, நான் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யணும்னு நினைக்கலையே. என் மச்சானுக்கு வயசு ஏறிட்டே போகுதே, நான் அதைப் பார்க்க வேண்டாமா? எனக்கு எந்த அளவுக்கு என் தங்கச்சி முக்கியமோ, அதே அளவுக்கு என் நண்பனும் முக்கியம் மாமா…

 

இதுக்கு மேல நான் என்ன பேசணும்னு எனக்குத் தெரியல. வந்தீங்கன்னா நம்ம மூணு பேரும் போயிட்டுப் பேசலாம்.”

“அப்படி இல்ல டா.”

“நம்ம பேசினா மட்டும்தான் அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிய வரும் மாமா. சரவணன் வீட்ல இதைப் பத்திப் பேசுவான் என்று மட்டும் நீங்க நினைக்காதீங்க. கிட்டத்தட்ட எட்டு வருஷமா அவன் நம்ப தனாவை  விரும்புறான் மாமா. அப்படி இருந்தும் இத்தனை வருஷத்துல ஒரு நாள் ஆச்சு அவன் தனா கிட்டயோ இல்ல, வீட்ல இருக்க உங்க கிட்டயோ அவன் மனச வெளிப்படுத்தி இருக்கனா?

 

நண்பனா என்கிட்டச் சொல்லி இருக்கான். ஆனா, அதை நான் இந்த நிமிஷம் வரைக்கும் பெருசா எடுத்துக்கிட்டதில்ல. ஆனா, இப்ப அவனுக்கு வயசு ஏறிட்டுப் போகுது. இதுக்கு அப்புறமும் நான் வாயை மூடிட்டு இருந்தா அவனுக்கு உண்மையான நண்பனா இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

 

என்னோட உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுப்பீங்க நினைக்கிறேன் மாமா, அகிலாவுக்கு இப்படி ஒவ்வொரு விஷயமும் யோசிச்சா மாமா செஞ்சோம்? அகிலா வேற, சரவணன் வேறனு இருக்கா மாமா?” என்றான் ஆதங்கமாக.

 

தன் மருமகனைப் பார்த்துச் சிரித்து செல்வம், “நான் எப்பயா அப்படிச் சொன்னேன். அகிலாவை என் பொண்ணா நெனச்சு தானே ஒவ்வொரு விஷயமும் செஞ்சேன். அதே மாதிரி, சரவணன் என் பையன் தானே… இருந்தாலும் யோசிக்க வேண்டி இருக்கு ருத்ரா. நீ இவ்ளோ பேசுறேன்னுறதுக்காக நான் உடனே போய் அண்ணன் முன்னாடி நின்ற முடியாது.”

 

“ஏன் மாமா, நின்னா அத்தையும், மாமாவும் தப்பா எடுத்துப்பாங்கனு நினைக்கிறீங்களா?”

 

அவனை அமைதியாக செல்வம் பார்த்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Saro be like “Ennada nadakuthu inga… Nanae innum love sollala athukulla mudichu vitratheengaya”