Loading

காதல் -26

 

” சிந்து….. ” என அருகில் ஓடி வந்த கணவனை தடுத்தார் சிந்தாமணி…

 

” கொஞ்சம் நேரம் என்ன பேச விடுங்க … இல்லைனா இவனுக்கு எந்த உண்மையும் தெரியாமலே போயிடும்… அந்த பொண்ணை கொடுமை படுத்துனதுக்கு இவன் அனுபவிச்சே ஆகனும்ங்க ” என கணவனை அடக்கி விட்டு நேராக மகனிடம் வந்தார்.

 

” என்ன டா உனக்கு தெரியனும்.. இப்ப கேளு நான் பதில் சொல்லுறேன்… ” என்ற தாயை இயலாமையுடன் பார்த்தவன்…

 

” என்ன மா இதுக்கு மேலே என்ன நடக்கனும், எவ்வளவு விஷயம் எனக்கு தெரியாம நடந்திருக்கு… இப்ப திடீர்னு சாயாலி உங்களுக்காக தான் கொலை பண்ணான்னு சொல்லுறீங்க.. எப்படி மா… ஆனால் இத்தனை நாளா உங்களுக்கு நடந்த கொடுமைக்கு அவ தான் காரணம்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.. எனக்கு வந்த தகவல் அப்படி மா ”

 

” மண்ணாங்கட்டி தகவல் ” என முதத்தை சுழித்தவர்.. ” ஆமா சாயாலி கொலைகாரி தான் டா… இப்ப என்ன அவளை பிடிச்சு உள்ள போட போறியா , அப்படினா போடு.. கூட என்னையும் சேர்த்து ஜெயில்ல போடு.. அவ மேல தப்பு இருக்குன்னா என் மேலையும் தப்பு இருக்கு தான் ”

 

” அம்மா…. என்ன தான் நடந்துச்சு.. தயவு செஞ்சு முழுசா சொல்லுங்க… சாயாலி மேல தப்பு இல்லைனா , நான் காதலிச்சு கல்யாணம் பண்ணி இப்போ அவளை விட்டுட்டு நிக்கிறேன் மா ” என பதிலுக்கு கத்திய மகனை அதிர்ச்சியாக பார்த்தவர்..

 

” எது… காதலிச்சு கல்யாணம் பண்ணியா.. எப்படி டா உன்னால காதலிச்சுட்டு இப்படி கொடுமை பண்ண மனசு வந்துச்சு ” என சிந்தாமணி கேட்டதும் அமைதியாக தலை குனிந்து நின்றான் மறவன்.. அவன் அடிபணியும் ஒரே நபர் அவனது தாய் தான் என்பதால் மூர்த்தி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தார்.

 

” உங்களுக்காக தான் மா.. என் மனசை கல்லாக்கிட்டு இதை பண்ணிட்டேன்… ”

 

” ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட மறவா… இனிமே எப்படி டா அவ உன்கிட்ட வருவா , ஐயோ இது தெரியாம நானும் அவசர பட்டு நீ அவளை கொடுமை படுத்துறன்னு வீட்டை விட்டு வெளியே அனுப்பி வச்சிட்டேனே.. ” என புலம்பிக் கொண்டே அங்குள்ள சோபாவில் அமர்ந்து அவரை ஆசுவாசம் செய்து கொள்ள .

 

” சிந்து இப்போ தான் உனக்கு உடம்பு சரி ஆகி இருக்கு, இப்ப எதுவும் பேச வேணாம்… ஆர போட்டு பேசலாம்… நம்ம மருமகள் எங்க போக போறா.. கண்டிப்பா மகனை புரிஞ்சு திரும்ப வருவா ” என மூர்த்தி ஆறுதல் அளித்தும் அதை ஏற்றுக் கொள்ளாமல்… ” உங்க யாருக்குமே சாயாலியை பத்தி சரியா தெரியலை .. அவளோட அடுத்த முடிவு என்னவா இருக்கும்னு கூட எனக்கு நல்லா தெரியும் ”

 

” என்ன சிந்து சொல்லுற”

 

” ஆமாங்க… சீக்கிரம் சாயாலி வீட்டுக்கு கிளம்புங்க… ” என அவசர படுத்தும் அன்னையை விசித்திரமாக பார்த்தவன்..

 

” இப்ப என்ன மா அவசரம்… முதல்ல எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு ஆகனும்.. அப்பறம் நீங்க போய் அவளை பாருங்க, நான் தடுக்க மாட்டேன்… ” என வழி மறைத்த மகனை சற்றும் கண்டு கொள்ளாமல்…

 

” நீங்க வாங்க … இவன வந்து பேசிக்கிறேன் ” என சிந்தாமணி வெளியேற.. மூர்த்தி காரை கிளப்பியவுடன்  அவருடன் ஏறி கிளம்பி விட்டார் சிந்தாமணி..

 

அதற்கு மேலும் அங்கு நிற்க மறவன் மனம் இடம் கொடுக்கவில்லை.. அவர்கள் பின்னே அவனும் காரை கிளப்பிக் கொண்டு சாயாலியின் வீட்டிற்கு சென்றான்.

 

காரை விரட்டிய வேகத்தில் பதினைந்து நிமிடத்தில் அவர்களது வீட்டு வாசலை அடைந்தனர் மூவரும்… கதவு திறந்து இருக்கவும் தான் சிந்தாமணிக்கு மூச்சே வந்தது..

 

வேகமாக காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்ற சிந்தாமணிக்கு வெற்று வீடே காட்சி அளித்தது.. சில பொருட்கள் மட்டும் இல்லாமல் இருக்க, மற்றவைகள் எல்லாம் அப்படியே இருந்தது…

 

“சாயாலி …. ” அழைத்து கொண்டே பின் வாசலுக்கு சென்ற சிந்தாமணி ஏமாற்றத்துடன் உள்ளே வந்தார்.

 

” எங்க மா அவ ”

 

” போயிட்டா டா ” என்றார் மகனை முறைத்த வண்ணம்..

 

“எங்க” என்றான் புருவங்கள் இடுங்க…

 

” ம்ம் மொத்தமா உன் வாழ்கையை விட்டே போயிட்டா டா ” என சிந்தாமணி கூறவும் அதிர்ந்து போனான் மறவன்.

 

மூர்த்தியுமே இதை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..  வீட்டை சுற்றி பார்வையிட்ட மறவனுக்கு கிடைத்தது அவளது நினைவுகளாக இருந்த பத்து புத்தகங்கள் மட்டுமே..

 

தமிழ் காதலன் எழுதி இருந்த அனைத்து புத்தகத்தையும் அவள் கையோடு எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.. அதோடு அவள் எப்போதும் உபயோகப் படுத்தும் படிக்கும் மேஜையில் சில தாள்கள் பறந்து கொண்டிருக்க.. அதனருகில் சென்று அதை கையில் எடுத்து வாசிக்க தொடங்கினான்.

 

” இந்த வீட்டை எங்க பேருக்கு மாத்தி கொடுத்ததுக்கு நன்றி..  இப்போ எங்களுக்கு இந்த வீடு வேணாம்.. கீழே பத்திரம் இருக்கு.. கிழிச்சு போட்டிடுங்க .. சிந்தாமணி அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க.. அப்பறம் மூர்த்தி மாமாவையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்… என்னைக்குமே நீங்க ரெண்டு பேரும் என் நினைவுல தான் இருப்பீங்க… போறேன்.. ” என்றதோடு முடிந்து இருந்தது அந்த கடிதம்..

 

பெயருக்கு கூட மறவன் பற்றி ஓரிரு வரிகள் கூட அதில் இல்லை.. முதல் முறையாக அப்படி ஒரு வலியை உணர்ந்தான் மறவன்.. இதயத்தை இறுக்கி பிழிந்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரு வலியை அனுபவித்தான் ..

 

” யாழி …. ” என கடிதத்தை கீழே போட .. அதை எடுத்து படித்து பார்த்த சிந்தாமணியும் மூர்த்தியும் செய்வதறியாது நின்றனர்.

 

“கவலைப்படாத டா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்பி இருப்பாங்க … எப்படியும் நம்ம கண்டு பிடிச்சுடலாம் ” என மூர்த்தி மகனுக்கு ஆறுதல் கூற…

 

” ஆமா டா… நீ மனசை விட்டுடாதே… கண்டிப்பா கண்டு பிடிக்கலாம் , வாங்க போகலாம் ” என சிந்தாமணி மகனை இழுத்தார்.

 

ஆனால் ஒரு அடி கூட அவன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை … கல்லாக சமைந்து நிற்கும் மகனை பார்த்தவர்.. ” என்ன டா மறவா வா போகலாம் ” என அழைக்க…

 

” இல்ல மா … நீங்க எல்லாம் சொல்லுறத வச்சு பார்த்தா நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் போல, அதான் என்ன விட்டு நிம்மதியா இருக்கணும்னு போயிருக்கா… திரும்பவும் அவ வாழ்கையை குழைக்க எனக்கு மனசு இல்ல மா.. எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கனும்… ”

 

” என்ன டா பெரிய தியாகி போல சினிமா வசனம் எல்லாம் பேசுற, உன்னால அவளை விட்டு இருக்க முடியுமா ?” தாய் கேட்ட கேள்விக்கு பதில் தான் கூற முடியவில்லை.. எப்படி முடியும்… அவனால் எப்படி முடியும், அவளை விட்டு பிரிவது என்பது சாத்தியம் அற்றது என்பது அவனுக்கே நன்றாக தெரியும் பொழுது மனதை கட்டுப் படுத்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

” இல்ல மா , நான் என் முடிவில தெளிவா தான் இருக்கேன்.. ”

 

” இன்னமும் நீ அந்த பொண்ணை தப்பா நினைக்கிறியா டா ”

 

ஏனோ அவருக்கு பதில் கூற விருப்பம் இல்லாமல் , அவள் அமர்ந்து புத்தகம் படிக்கும் மேஜையில் அவனும் அமர்ந்து, புத்தகம் இருக்கும் மேஜையில் தலையை வைத்து படுத்துக் கொண்டான்.

 

அதேநேரம்… மலை கிராமங்களை எல்லாம் விட்டு வெளியூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் தேனுவும் சாயாலியும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

 

மனம் ரணமாக வலித்தது.. தேனுவிடம் கூறி இன்னும் அவரது நிம்மதியை கெடுக்க மனம் வராமல்… கையில் வைத்திருந்த கட்டப்பையில் இருக்கும் அவளது மருந்தை எடுத்தாள்… அதுதான் தமிழ் காதலன் புத்தகம்..

 

புத்தகத்தை பார்த்ததும் தமிழ் மறவனின் நினைவுகள் வாட்டி வதைக்க.. அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு ஒரு முடிவோடு அந்த புத்தகத்தை திறந்தாள்..

 

வழக்கம் போல கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பக்கத்தை தான் திறந்தாள்… பக்கம் என் 222 என்று இருக்க… அதிலிருந்த வாசகத்தை படிப்பதற்குள்…

 

” யம்மா எந்த ஊருக்கு மா போகனும், டிக்கெட் எடுக்குறது இல்லையா ?” என நடத்துனரின் சத்தத்தில் பட்டென்று திறந்த புத்தகத்தை மீண்டும் மூடி விட்டு.. கைப்பையில் இருந்த காசை எடுத்து அவரிடம் நீட்டினாள்.

 

” என்ன மா எந்த ஊரு ”

 

அருகில் இருக்கும் தேனு, ” ரெண்டு திண்டுக்கல் ” என டிக்கெட் வாங்க.. மூடி வைத்த புத்தகத்தை மீண்டும் திறந்தாள் சாயாலி… ஆனால் அதே 222 வது பக்கம் வரவில்லை.. தற்போது 120 வது பக்கம் திறந்து கொண்டது….

 

வாழ்க்கையில் ஒருவர்

காரணமின்றி வருவதும்

காரணமின்றி போவதும்

இயல்பு!

 

காரணமற்ற காரியங்களை

தவிர்த்து விட்டு..

வாழ்க்கையில் நடக்கும்

நற் காரியங்களுக்கு

நாமும் ஒரு காரணமாக

இருக்கவேண்டும் !

 

என்று இருக்க, பெரும் மூச்சை விட்டு கொண்டே அந்த புத்தகத்தை மூடினாள் சாயாலி..

 

” அம்மா… நடந்ததை சொல்லுங்க மா ” கண்களை மூடிக் கொண்டே கேட்டான் மறவன்…

 

” சொல்லுறேன் டா , அவளை வார்த்தைக்கு வார்த்தை கொலைகாரின்னு சொன்னியே… அவ யாரை கொலை பண்ணான்னு தெரியுமா ?” என சிந்தாமணி கேட்டதும் மறுப்பாக தலை அசைத்தான் மறவன்.

 

“அப்பறம் எப்படி அவளை கொலைகாரின்னு சொன்ன ?”

 

” நான் சொல்லலையே மா.. ஒரு நாள் அவ அம்மா தேனு தான் பேசிட்டு இருந்தாங்க… ”

 

“யார்கிட்ட ”

 

” அவங்க அப்பா ஃபோட்டோ பார்த்து ”

 

” ஓஹோ… ”

 

” அப்போ யாருன்னு சொல்லலையா?”

 

” இல்ல மா ”

 

” அவ கொலை பண்ணதே அவளோட அப்பாவை தான் டா ” என சிந்தாமணி கூறவும் அதிர்ந்து விழித்தான் மறவன்…

 

” வாட்…. ”

 

” ஆமா அவளோட அப்பாவை அவ கையாள தான் கொலை பண்ணா ” என அழுத்தமாக கூறினார் சிந்தாமணி…

 

சிந்தாமணி கூறியதை கேட்ட இரு ஆடவர்களும் ஆடி தான் போனார்கள்..

 

சனா💖

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்