Loading

அத்தியாயம் – 34

விக்ராந்தும் நித்திலாவும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தாலும், இருவர் முகத்திலும் எந்தப் பொலிவும் இல்லை. நித்திலா மருத்துவமனைக்குச் சென்று வந்ததால், வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக அவளிடம் நலம் விசாரித்தனர். மனதைக் கல்லாக்கிக் கொண்ட நித்திலா, மருத்துவர் சொன்ன உண்மையை மறைத்துவிட்டு, அனைவருக்கும் ‘ஃபுட் பாய்சனிங்’ என்ற பொய்யான பதிலையே கூறிவிட்டு மாடியேறினாள். விக்ராந்தும் உடை மாற்ற அறைக்குள் சென்றுவிட்டான்.

​இவர்கள் இருவரையும் இப்படிப் பார்ப்பது குடும்பத்தினர் அனைவருக்கும் வருத்தத்தைத் தந்தது. ‘இவர்கள் எப்போது ஒன்று சேருவார்களோ, அப்போதுதான் நம் வீட்டில் வசந்த காலம் வரும். அதுவரை நமக்கும் இந்தக் கஷ்டகாலம் தான்,’ என ஒவ்வொருவரும் தத்தம் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

​சுமித்ரா இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்பினாள். வந்ததும் வராததுமாக நேராக நித்திலாவிடம் சென்று, மருத்துவர் என்ன சொன்னார் என்று துருவித் துருவி விசாரித்தாள். தன் அக்காவிடம் உண்மையைச் சொல்ல முடியவில்லையே என்று மனதிற்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நித்திலா, மற்றவர்களிடம் சொன்ன அதே பொய்யான பதிலையே சுமித்ராவிடமும் கூறிச் சமாளித்தாள்.

தனிமை கிடைத்ததும், நித்திலா தன் தாய் – தந்தையின் புகைப்படத்தின் முன்னால் நின்றாள். வழக்கமாகத் தன் வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை அவர்களிடம் பகிர்வது தானே அவள் வழக்கம். யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த மாபெரும் மகிழ்ச்சியான செய்தியை, தான் தாயாகப் போகும் அந்த விஷயத்தை அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து அழுதுகொண்டே பகிர்ந்து கொண்டாள். தன் மொத்தத் தவிப்பையும் கண்ணீராகக் கொட்டித் தீர்த்ததற்க்குப் பின்பே மனதிற்குச் சற்று நிம்மதி கிடைத்தது.

​’நாளை டாக்டர் ஸ்கேனுக்கு வரச் சொல்லியிருக்கிறாரே… எப்படிப் போவது?’ என்ற சிந்தனையிலேயே அன்றைய இரவு அவளுக்குக் கழிந்தது. காலையில் விக்ராந்த் வழக்கம்போல அலுவலகம் சென்றுவிட, வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்.

​நித்திலா மெல்ல ஊர்மிளாவிடமும் சுமித்ராவிடமும் பேச்சை வளர்த்தாள். தன் திட்டத்தை நிறைவேற்ற இதுவே சரியான நேரம் என்று அவளுக்குத் தோன்றியது.

​”அத்தை… இன்னைக்கு நான் பாட்டி தாத்தாவைப் போய் பார்த்துட்டு வரட்டுமா?” எனத் தயக்கத்துடன் கேட்டாள். அவள் கேட்ட விதத்தைப் பார்த்து ஊர்மிளாவும் சுமித்ராவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.

​வழக்கமாக மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது தன் பாட்டி தாத்தாவைப் பார்க்க நித்திலா சென்றுவிடுவாள். அவர்கள் வயதானவர்கள் என்பதால் அவர்களை வரவிடாமல், இவளே உரிமையுடன், முகத்தில் சந்தோஷம் பொங்க அனுமதி கேட்பாள்.
ஆனால் இன்று, ஏதோ தவறு செய்தவள் போல அவள் காட்டிய அந்தத் தயக்கம் அவர்களுக்குப் புரியவில்லை.

​”தாராளமா போயிட்டு வா நித்திலா. இதைக் கேட்க உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?” என ஊர்மிளா கேட்க, “இல்ல அத்தை… போன வாரம்தான் போயிட்டு வந்தேன். இப்போ மறுபடியும் கேட்க சங்கடமா இருந்தது, அதான்.” நித்திலா சட்டெனச் சமாளித்தாள்.

​”அடி வாங்கப் போற நீ! உரிமையா கேட்கிறவ, இப்போ என்ன தயங்கிட்டு இருக்க? தாராளமா போயிட்டு வா. பாட்டியையும் தாத்தாவையும் கேட்டதாச் சொல்லு,” என ஊர்மிளா அன்புடன் அனுமதி தந்தார்.

​மரகதப் பாட்டியிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பாட்டி – தாத்தாவைப் பார்க்கப் போவதாகக் கூறி வீட்டை விட்டுப் புறப்பட்டாள் நித்திலா. ஆனால் அவள் சென்றது பாட்டி வீட்டிற்கு அல்ல, தன் கருவில் வளரும் உயிரின் துடிப்பைக் காண மருத்துவமனைக்கு!

மருத்துவமனையில் நித்திலாவிற்கு ஸ்கேன் செய்யப்பட்டது. முதன்முதலாகத் தன் குழந்தையின் மெல்லிய இதயத்துடிப்பை அந்தத் திரையில் கேட்டபோது, அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் அந்தப் பேரின்பம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

ஸ்கேன் ரிப்போர்ட் மருத்துவரின் கையில் இருந்தது, ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவரின் முகத்தில் தெரிந்த கலவரமே ஏதோ விபரீதம் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

​”என்னாச்சு டாக்டர்? எதுவும் பிரச்சனை இல்லையே? என் குழந்தை நல்லாத்தானே இருக்கு?” எனப் படபடப்புடன் கேட்டாள்.

​மருத்துவர் தயக்கத்துடன், “உன் ஹஸ்பண்ட் வரலையா மா?” என்று கேட்க, “அவர் வேலையில பிஸியா இருக்காரு டாக்டர்… என்னாச்சுன்னு சொல்லுங்க,” என நித்திலா கலவரமானாள்.

​நிதானமாக அவளைப் பார்த்த மருத்துவர், “இங்க பாரு நித்திலா, நான் உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்க விரும்பல, ஆனா உண்மையை மறைக்கவும் முடியாது. குழந்தையோட வளர்ச்சி இப்போ இருக்க வேண்டிய அளவை விட ரொம்பக் கம்மியா இருக்கு. அதைவிட முக்கியமா, உன்னோட கர்ப்பப்பை ஒரு குழந்தையைத் தாங்குற அளவுக்குப் பலமா இல்லை,” என்றார்.

​நித்திலா அதிர்ச்சியில் உறைந்திருக்க, அவர் மேலும் தொடர்ந்தார். “உன்னுடைய விலா எலும்புகள் அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை மா. பிரசவ வலியின் போது அவை உடைவதற்குக் கூட வாய்ப்பு இருக்கு. இது மருத்துவ ரீதியா ரொம்பவே ‘ரேர் கேஸ்’, இந்த மெடிக்கல் கண்டிஷன் அம்மாவுக்கு, அதாவது உனக்கு ரொம்பப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.”

​”இது ரொம்பவே ‘காம்ப்ளிகேட்டடான பிரக்னன்ஸி’  என்னோட அட்வைஸ் என்னன்னா… நீ இந்த பிரக்னன்சியை ‘கண்டினியூ’ பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கருவை கலைச்சிடுறது தான் உனக்கு நல்லது,” என அவர் முடிக்க, நித்திலாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

​மருத்துவர் சொன்ன வார்த்தைகளை நித்திலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “நீங்.. நீங்க ஏதோ தப்பா சொல்றீங்க டாக்டர். ரிப்போர்ட்ல ஏதோ தப்பு நடந்திருக்கும்னு நினைக்கிறேன். நா.. நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கு எந்த ஹெல்த் ப்ராப்ளமும் இல்லை. நான் இந்த பிரக்னன்சியை கன்டினியு பண்ண நினைக்கிறேன் டாக்டர், என் குழந்தையை இந்த உலகத்துக்கு கொண்டு வர நினைக்கிறேன், எ.. எனக்கு என் குழந்தை வேணும் டாக்டர். ப்ளீஸ், மறுபடியும் ஒருமுறை டெஸ்ட் பண்ணிப் பாருங்க!” எனக் கதறினாள்.

​”நீ ஹெல்த்தியா இருக்கேன்னு எனக்குத் தெரியும் நித்திலா. ஆனா மருத்துவ ரீதியா இது ரொம்ப சிக்கலானது. குழந்தையின் வளர்ச்சியும் கம்மியா இருக்கு, உன்னோட உடல் நிலையும் இதற்கு ஒத்துழைக்காது,” என மருத்துவர் மீண்டும் பொறுமையாக விளக்கினார்..

“இங்க பாருங்க டாக்டர், எல்லா பிரட்சணைக்கும் சொல்யூஷனும் இருக்கு, ட்ரீட்மெண்ட்டும் இருக்கு, நீங்க இதுக்கான சொல்யூசனை தேடுங்க, எந்த நிலையில இருந்தாலும் என் குழந்தையை பெத்தெடுக்க நான் விரும்புறேன் டாக்டர், தயவு செஞ்சு என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க,..” என்றாள் கெஞ்சுதலாய்…

“ஒரு டாக்டரா மட்டும் இல்லாம, ஒரு பெண்ணாவும் உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது நித்திலா, ஆனா இப்போ பிரச்சனை என்னன்னா உன்னோட வாழ்வா? சாவா? என்பதுதான். இதைப் புத்தியால யோசிச்சு முடிவு எடுக்கணும். குழந்தையின் உயிரோட சேர்த்து உன் உயிருக்கும் ஆபத்து இருக்கு.
இந்த மாதிரி சிட்சுவேஷன்ல
அபார்ஷன் பண்ணுறது தான் நல்லது” மிகவும் பொறுமையாக விளக்கினார்..

“இல்ல டாக்டர், நான் அப்படி பண்ண மாட்டேன், நான் ஏதாவது செஞ்சு என் குழந்தையை இந்த உலகத்துக்கு கூட்டிட்டு வந்தே தீருவேன், நான் அபார்சன் கண்டிப்பா பண்ண மாட்டேன் டாக்டர், ப்ளீஸ் டாக்டர்” என்றாள் கண்ணீருடன்,…

“இங்க பாரும்மா, எதுக்காக டென்ஷன் ஆகுற, நீ மறுபடியும் கன்சீவ் ஆக முடியும்,
இந்த சந்தோசம் மறுபடியும் உன் வாழ்க்கையில வர வாய்ப்பிருக்கு, இது ஒன்னும் கடைசி கிடையாது, இந்த நேரத்துல நீ உன்னோட ஹெல்த்தை பத்தி மட்டும் தான் யோசிக்கனும், நான் ஒன்னும் உன்னை பயமுறுத்தல, ஆனா இந்த பிரக்னன்சி உன் உயிருக்கே ஆபத்து” என்றார்

“எனக்கு என்னோட உயிரை பத்தி கவலை இல்ல டாக்டர், என்னோட உயிருக்கு என்ன ஆனாலும் பரவால்ல, ஆனா ப்ளீஸ் நீங்க ஏதாவது செய்ங்க, என் குழந்தை எனக்குள்ள இருக்கிறதை நான் உணருறேன், என் மூச்சுக் காத்தோட அதோட மூச்சு காத்தும் இணைந்து இருக்கு, இது எனக்குள்ள இருக்க பந்தம், ப்ளீஸ் டாக்டர் எனக்கு வேற ஏதாச்சும் வழி சொல்லுங்க, அபார்சன் வேணாம், என் குழந்தையை காப்பாத்த எனக்கு ஏதாச்சும் சொல்யூஷன் சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்” என கண்ணீருடன் கேட்டாள்…

“இதுக்கு சொல்யூசன்னா அது ஆபரேஷன் மட்டும் தான், உன்னால நார்மல் டெலிவரி கண்டிப்பா முடியாது, பிரசவ வலி வரதுக்கு முன்னாடியே ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட்டாகி, ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுக்கணும், பட் முன்னாடியே உனக்கு வலி வந்துடுச்சுன்னா உன் உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு” அவர் தெளிவாக சொல்ல,…”ஓகே டாக்டர்,.. நான் எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன்” என்றாள்,…

அவளது இந்த முடிவை கேட்டு ஒரு பெருமூச்சு விட்டவர்…”ஓகே,…நீ எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு முன்னாடி நான் உன் ஹஸ்பண்டை பார்த்தாகனும், குழந்தையோட அப்பாவா இருக்கிறதால அவருக்கு இதை பத்தி கட்டாயமா தெரிஞ்சிருக்கனும், நீ இந்த பிரக்னன்சியை கண்டினியு பண்ணுறது உன் உயிருக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்னு அவர்கிட்ட சொல்லனும், அவரோட விருப்பம் இல்லாம என்னால நிச்சயமா உனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது” என உறுதியாகச் சொல்லிவிட்டார்.

​அவர் சொன்னதைக் கேட்டு நித்திலாவிற்கு இடிக்கு மேல் இடி விழுந்தது போல இருந்தது. விக்ராந்திற்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்ய நினைத்த காரியத்தில் இப்போது அவனே வந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. கனத்த இதயத்துடன் மருத்துவர் தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள் நித்திலா.

நித்திலாவின் மனம் வேதனையில் துடித்தது. ‘தான் தாயாகப்போகும் செய்தியை விக்ராந்திடம் எப்படிச் சொல்வது? சொன்னால், தன் உயிருக்கு ஆபத்து என்பதால் அவன் உடனே கருவை கலைக்கச் சொல்லுவானே!’ என்று அவள் அஞ்சினாள். ஆனால், சொல்லாமல் மறைக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தன் பெற்றோர் புகைப் படத்தைப் பார்த்துப் புலம்பி அழுதாள்.

அன்றைய நாள் முழுவதும் சோகமாகவே இருந்தவள், வீட்டில் உள்ளவர்கள் விசாரித்தபோது சாமர்த்தியமாகச் சமாளித்துவிட்டாள்.

​இரவு, சுமித்ராவிற்குச் சமையலறையில் உதவி செய்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள். அங்கே விக்ராந்த் மடிக்கணினியில் மூழ்கியிருந்தான். அவனிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என ஒரு மனமும், ‘வேண்டாம்… உன்னை வார்த்தைகளால் நோகடித்தவனிடம் எதையும் சொல்லாதே, இவன் சாவுகாசமே வேண்டாம், நீயே பார்த்துக் கொள்’ என இன்னொரு மனமும் அவளைப் பாடாய்ப்படுத்தின.

​அவள் குழப்பத்தோடு தன்னைப் பார்ப்பதைக் கவனித்த விக்ராந்த், “என்கிட்ட ஏதாச்சும் பேசணுமா?” எனக் கேட்டான். ஒரு நொடி நிலைதடுமாறியவள், சொல்ல வந்ததை விழுங்கிக்கொண்டு, “ம்ம்ம்… இன்னும் 28 நாள்தான் நான் இங்கே இருக்கப்போறேன். இதை உங்ககிட்டச் சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்!” என முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு வாஷ்ரூமிற்குள் தஞ்சம் புகுந்தாள்..

​விக்ராந்த் குழம்பிப்போனான்.
‘நான் இப்போ அவளை என்ன பண்ணேன், நான் பாட்டுக்கு செவனேன்னு தானே இருக்கேன், இப்போ எதுக்காக இதை சொல்லி கடுபேத்துறா’ என மனதில் எண்ணியவன்… ‘அவ நார்மலா இல்ல, வேற ஏதோ சொல்ல வந்து, அதை சொல்லாம இப்படி மாத்தி சொல்ற போல இருக்கு, வழக்கத்தை விட இன்னைக்கு ஒருமாதிரியா தான் இருக்கா, நான் கேட்டாலும் கண்டிப்பா சொல்ல மாட்டா, அண்ணி கிட்ட கேட்டு பார்க்கலாமா?’ என யோசித்தவன், அடுத்த கணம் தன் தமையனின் எண்ணிற்கு அழைத்து, சுமித்ராவிடம் இன்று நடந்ததை பற்றி விசாரித்தான்,…

‘பாட்டி தாத்தாவை பார்க்க போயிருக்கான்னு அண்ணி சொல்றாங்க, ஒரு வேளை பாட்டி தாத்தா கிட்ட எல்லாத்தையும் சொல்லி, அவங்க டென்ஷன்ல எதுவும் பேசி, ஏதாச்சும் பிராப்ளம் ஆகிருக்குமா’ என்று யோசித்தவன்,

‘நான் தாத்தாக்கு போன் பண்றேன்’ என ஒரு முடிவுக்கு வந்து தன் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்,… அப்போது தான் வாஷ்ரூமிலிருந்து வெளியே வந்த நித்திலா அவனை கண்டுகொள்ளாமல் தன்னிடத்தில் வந்து படுத்துக்கொண்டாள்…

“தாத்தா எப்படி இருக்கீங்க” போனில் ஜெயமோகன் தாத்தாவின் “ஹெலோ”என்ற குரல் ஒலிக்கவே உற்சாகமாக நலம் விசாரித்தான் விக்ராந்த்,..

“எனக்கு என்னப்பா, அமோகமா இருக்கேன்” என்றார் உற்சாகமாய்… அவரின் குரலில் தெரிந்த உற்சாகத்தை வைத்தே அவருக்கு எதுவும் தெரியவில்லை என்பதை புரிந்து கொண்ட விக்ராந்த், பாட்டியை பற்றியும் விசாரித்து, சில பொதுவான பேச்சுக்களையும் இழுத்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தான்,…

“நித்தி என்ன பண்ணுறாப்பா, போன வாரம் வந்துட்டு தான் போனா, ஆனா நீ வரலயேப்பா, ரொம்ப பிஸியா?” எனத் தாத்தா எதார்த்தமாகக் கேட்க, விக்ராந்திற்குத் தூக்கி வாரிப்போட்டது..

​அவள் பாட்டி வீட்டிற்குச் செல்லவில்லை என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தாத்தாவிடம் பேசி முடித்துவிட்டுப் போனை அணைத்தவன், ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான்.

‘நிலா அவ வீட்டுக்குப் போகலைன்னா வேற எங்க போயிருப்பா? எதுக்காக எல்லார்கிட்டயும் பொய் சொல்லிருக்கா? இதுல ஏதாச்சும் பெரிய விஷயம் இருக்கா இல்ல எனக்குத்தான் அப்படித் தோணுதா?’ என அவன் கண்கள் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சொந்த அக்காவாக அன்புகாட்டும் சுமித்ராவிடமாவது விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் இவள்.

    யாருக்கும் எதுவும் தெரியாமல் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்.

    விக்ராந்த் மீது நித்திலாவிற்கு வெறுப்பு இல்லை கோபமும் ஆதங்கமும் தான் உள்ளது.

    அப்படியிருக்க இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் காலம் கடத்துவது ஏனோ?

    குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றை செய்தே தீருவேன் அதுவும் தனியாய் நின்று செய்வேன் என்று வீம்பாய் இருக்கின்றாள்.

    விக்ராந்த் இப்பொழுதாவது விழித்துக்கொண்டு அவளிடம் பேசுகிறானா பார்ப்போம்.