
விடியும் முன்..!
அத்தியாயம் 28
விழிகளால் தன்னருகே வரச் சொன்ன தோழனை முறைத்தவாறு அவனருகே வந்தமர்ந்தான்,பாலா.
“என்னடா பாசமா கூப்டு பக்கத்துல வந்து உக்கார சொல்ற..?”
“சும்மா தான் மச்சீ..”
“ஆமா..சும்மான்னு சொன்னதும் நா அப்டியே நம்பிருவேன் பாரு..அமைதியா இருக்குற அலப்பற உன்ன பாத்தா பக்கு பக்குன்னு தான் இருக்கு..”
“என்ன பன்ச் அடிக்கிறன்னு நெனப்போ..எதுகை மோனைல பேசி கடுப்படிக்காத..”
“ஆமா இவரு மட்டும் பன்ச்னு க்ரிஞ் பண்ணா நாங்க பொத்திட்டு கேக்கணும்..ஆனா நாங்க ரைமிங்கா டைமிங்கா ரெண்டு வார்த்த பேசுனா பையனுக்கு புடிக்காது..”
“ஃபேஸ் ரியாக்ஷன மாத்துடா..பாக்க சகிக்கல..” தமக்குள் இருவரும் இரகசியமாய் சண்டை பிடித்துக் கொண்டிருக்க மெல்ல இமைப் பிரித்தான்,ரகு.
மூடிய இமைகளுக்குள் கருமணியை அங்குமிங்கும் அசைக்கும் போதே அவனுக்கு விழிப்புத் தட்டுவதை உணர்ந்த கிருஷ்ணா மெதுவாய் அவனுக்கு கை கொடுத்து எழ வைக்க சுவற்றில் சாற்றி வைக்கப்பட்டிருந்த தலையணையில் சாய்ந்து விழி திறந்தவனுக்கு தான் இருக்கும் இடத்தை கிரகித்துக் கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது.
அதீத பயத்தில் ரகுவின் உடல் சூடு உயர்ந்திருப்பதை கண்டு கொண்ட கிருஷ்ணாவுக்கு அவன் வெகுவாய் பயந்து போயிருப்பது புரியாமல் இல்லை.
விழித்தெழுந்தாலும் அவனுக்கு விழிகளுக்குள் அந்த கொடூர முகமே வந்து போக உடலில் மெல்லிய நடுக்கம்.
ஒரு விழி மூடியிருக்க அகன்ற விழியின் நடுவே சிறு புள்ளியாய் தோன்றிய கருமணியும் இதழ்களின் ஒரு முனையில் இருந்து வழிந்து கொண்டிருந்த உதிரமும் என இருந்த அந்த முகம் இன்னுமே அவனை பயமுறுத்திக் கொண்டு தான் இருந்தது,எத்தனை தடுத்தும்.
நினைவில் ஏதோ வந்து அவன் பயப்படுவது புரிந்த கிருஷ்ணாவோ மெதுவாய் அவனின் தோளைத் தட்டிக் கொடுத்து தண்ணீர்ப் போத்தை திறந்து வாயருகே சரிக்க மடமடவென விழுங்கியவனுக்கு உள்ளத்தில் தோன்றிய பயம் தணிவதாய் இல்லை.
அந்த சமயம் தான் உள்ளே வந்தான்,சத்யா.
இத்தனை நேரமும் விஜய்க்கும் ஜீவாவுக்கும் அவன் பாணியில் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.
ரகுவின் நிலையை கண்டவனோ எதுவும் கேட்கவில்லை.ஏற்கனேவ பயத்தில் குளித்திருப்பவனை இன்னும் கேள்விக்கனைகளால் பதற வைப்பது உசிதம் அல்லவே.
அயர்ந்திருந்த ரகுவைப் பார்த்து புன்னகையொன்றை சிந்த அவனும் பதிலுக்கு சிறிய முறவலை இதழ்களில் தேக்கிக் கொண்டாலும் விழிகளில் இருந்த பயத்தில் கொஞ்சமும் குறைந்து இருக்கவில்லை.
“ம..மச்சீ..நா உன..உனக்கு கால் ப..பண்ண வந்தேன்..டா..தோள்..ல ஏத..ஏதோ வி..ழுற மாதிரி..இரு..ந்துச்சு..மேல..பாத்தா..ஒரு..அழு..குன மொ..கம்..” என்கையிலேயே உடல் வெளிப்படையாய் நடுங்கி குரல் உடையத் துவங்கிட சத்யா கையமரத்தி தடுக்க கிருஷ்ணாவும் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்தினான்,அவனை.
சத்யாவின் விழிகளை ரகுவை முழுமையாக ஆராய்ந்து முடித்திருக்க ஏனோ ரகு சொல்வதை நம்புவதில் சிரமம்.அவனின் வெண்ணிற சட்டை தான் எந்த வித அழுக்குமின்றி தூய்மையாய் இருந்ததே.
“விடு மச்சீ..நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு..அப்றமா பாத்துக்கலாம்..”என்ற படி விழிகளை சுழற்ற அப்போது தான் விடயம் உரைத்தது,அவனுக்கு.
“நிவேதா..”
“எ..என்ன சத்யா..?” அவனின் அழுத்தமான குரலில் அவளுக்குள் குளிரெடுத்தது.
“வேர் ஈஸ் தர்ஷினி..?” என்று காட்டமாய் கேட்க தலை தாழ்த்துவதை தவிர அவளிடம் வேறு பதிலாய் ஏது இருந்திடப் போகிறது..?
அவளின் செயலிலேயே தர்ஷினி என்ன செய்திருப்பாள் என்று புரிந்திட தாடை இறுக நின்றவனோ பற்களை கடிக்க அவனின் கோப முகத்தில் அனைவருக்குள்ளும் சிறு பயம்.
“இடியட்ட்ட்ட்ட்ட்ட்..” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்ப தலையில் கை வைத்துக் கொண்ட கிருஷ்ணாவுக்கு தலைவலி ஆரம்பிப்பது போல்.
கோபம் உச்சிக்கு சென்றிருக்க அதை அடக்கும் வழி தெரியாது குறுக்கும் நெடுக்கும் சத்யா நடக்க தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர அவனுக்கும் வழமைக்கு மாறாய் அதிக நேரம் தேவைப்பட்டது மறுப்பதற்கல்ல.
“ஊப்ப்ப்ப்..” பெருமூச்செறிந்து நிதானப்படுத்திக் கொண்டவனின் மேல் தான் அனைவரின் பார்வையும்.
“ஓகே..காய்ஸ் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுன எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்..அன்ட் யூ ஹேவ் டிட் அ க்ரேட் ஜாப்..நாம எதிர்பாத்த அளவு டீடெயில்ஸ் கெடக்காததுனால அந்த தோப்பு வீட்டு பக்கம் போறது தான் பெட்டர் ஆப்ஷன்..யாரயும் போர்ஸ் பண்ணல..விருப்பம் இருக்குறவங்க வரலாம்..”
“அதுல்ல..இன்னொரு விஷயம்..இப்போ நா இரு போட்டோ ஷேர் பண்றேன் க்ரூப்ல..அவங்க தான் அந்த தோப்பு வீட்டுல மர்மமான முறைல எறந்து போனதா சொல்றாங்க..ஸோ அதுப்பத்தி போட்டோஸ் டீடெய்ல்ஸ் ஏதாச்சும் கெடச்சா கன்பார்ம் பண்ணி சொல்லுங்க..” என்க ஆமோதிப்பாய் தலையசைத்தவர்களின் முகத்தில் அதீத ஆர்வம்.
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சத்யா அனுப்பிய புகைப்படத்தை பார்த்த நிவேதாவில் இருந்து தன்னை மீறி ஒரு அலறல் சத்தம்.
●●●●●●●●●
வலிய கரத்தின் ஸ்பரிசத்தை வைத்து யாரென்று உணர்ந்து கொண்டவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
“கத்தாதடி பட்டாசு..அமைதியா இரு..” அழுத்தமாய் வார்த்தைகள் வெளிவர அந்த நிலையிலும் அவனின் கரத்தை கடித்து வைக்க தோன்றிய பற்களை அடக்குவதில் தோற்றுப் போனவளோ அவனின் கரத்தை பதம் பார்த்திட பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்டிருந்தான்,பையன்.
“உன்னயெல்லாம் அந்த நாதாரி கிட்ட அற வாங்க விட்டுட்டு போயிருக்கனும்..உன்ன காப்பாத்த வந்தேன் பாரு..எனக்குதான் அடிச்சிக்கனும்..” இரகசிய குரலில் சொன்னாலும் அடக்கப்பட கோபம் அடங்காமல் தொனித்து நின்றது,பையனின் வார்த்தைகளில்.
அந்த நிலையிலும் பக்கமாய் திரும்பி அவனை தீயாய் விழிக்க மறக்கவில்லை அவள்.உலகமே அழியும் நிலையிலும் ஏட்டிக்குப் போட்டியாய் நிற்பார்கள் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அடங்கியிருந்த பாதச் சத்தம் மீண்டும் செவியை மோத்ததுவங்க வாசு நெருங்கி வருவது புரிந்த பையனோ இன்னும் அவளுக்கு அரணாய் மாற அவளுக்கு முன்பிருந்த பயம் இப்போது இல்லை.பையனவன் தான் அருகில் இருக்கிறானே.அதன் பின் எப்படி அவளுக்கு பயமென்கின்ற உணர்வு தலைதூக்கிடும்..?
“அவன் கிட்ட வர்ரான்..அமைதியா இரு..” என்றவனோ இன்னும் வாயைப் பொத்தியிருந்த தன் கரத்தை அகற்றிக் கொள்ளவில்லை.ஏதேனும் பைத்தியக்காரத்தனம் செய்து வைக்கக் கூடும் என்கின்ற பயமோ என்னவோ..?
“நானும் வாழ்க்கைல எத்தனையே பேர பாத்துருக்கேன்..ஆனா உன்ன மாதிரி ஒரு பைத்தியத்த பாத்ததே இல்ல..” விழிகளோ நாலாப்புறமும் சுழன்று ஆராய்ந்து கொண்டிருக்க இதழ்கள் அவளுக்குத் திட்டவும் மறக்கவில்லை.
பாதச்சத்தங்களின் உரப்பு இன்னும் அதிகமாக ரிஷியின் கையை அழுத்தமாய் பற்றிக் கொண்டவளுக்கு அவனால் ஏதேனும் நேர்ந்து விடுமோ என்கின்ற பயம் தான் அதிகமாய்.கையை பற்றியிருந்த கரத்தின் அழுத்தத்தை இன்னுமே கூட்ட ஏனோ பிணைந்திருந்த கரங்கரை கண்டவனின் இதழ்களில் மெல்லியதாய் ஒரு முறுவல்.
பத்து நிமிடங்கள் அப்படியே கழிய தேடிப் பார்த்த வாசுவுக்கும் சலிப்புத் தோன்றியிருக்க வேண்டும்.ஓய்ந்து போய் அந்த இடத்தில் இருந்து வெளியேறிச் செல்வதைக் பையனவன் கண்டாலும் அதை அத்தனை எளிதில் அவளிடம் சொல்லி விடும் ரகமா அவன்..?
இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே.
முழந்தாளிட்டு நிமிர்ந்து புதரின் மறைவின் ஊடு பார்த்திருந்தவனோ மறுபடியும் கீழே குனிந்து “இன்னும் வாசு எங்கயும் போகல..இங்க பக்கத்துல தான் நின்னுட்டு இருக்கான்..அவன் கைல கன்னு வேற இருக்கு..நம்ம கிட்ட ஒன்னும் இல்ல..பேசாம இரு..” என்பதாய் பொய்யை லாவகமாய் அவிழ்த்து விட துப்பாக்கி என்றதுமே அவள் நெஞ்சில் வந்து உருண்டது,கலவரப் பந்தொன்று.
“எங்க ரெண்டு போட்டுத் தள்ளிருவானோ..” என்று நினைத்தவளுக்கு அந்த நினைப்பே அளப்பறிய பயத்தைக் தர இன்று வரை கண்டில்லாத பயம் மனதில்.
“அமைதியா இரு..அவன் இங்க தான் இருக்கான்..” அவளின் பதட்டத்தை துல்லியமாக கணித்தவனுக்கு பேசாமல் இருக்கத் தோன்றுமா என்ன..?
அவளருகில் அவன் அப்படி இருந்தால் அது ரிஷி இல்லையே.
இன்னும் அவளின் பயத்தை ஏற்றிட விட முயன்றவனாய் அவன் எய்த சொல்லம்புகளின் குறி தப்பவில்லை.
“நெஜமா அவன் போகலியா இன்னும்..?” பொத்தியிருந்த கரத்தை விலக்கி விட்டு பையனின் புறம் திரும்பி அவள் கேட்க கொஞ்சம் நெருக்கத்தில் அவளின் விரிந்த விழிகளைக் கண்டவனுக்கு மூச்சடைத்தது.
நெருங்கி நின்றாலே முட்டிக் கொண்டு நிற்க இப்படி ஆராய்ந்து விழி பார்த்திருக்கும் வாய்ப்பில்லையே.
பட்டென தலையை உலுக்கிக் கொண்டு அவளை பின்னோக்கித் தள்ள அவளுக்கு எகிறியது.
“மெண்டல் கிறுக்கு..தள்ளி விட்டுத் தொலயாத..பொதர தாண்டி விழுந்தா வாசு சைக்கோ என்ன கொன்றுவான்..”தாழ்ந்த குரலில் திட்டியவளோ குனிந்த படியோ தள்ளிப் போக தன்னிலை மீள பையனவனுக்கு தேவைப்பட்டது,சில கணங்கள்.
“என்ன இப்டி இருக்கு இவ கண்ணு..” இருபுறமும் தலையாட்டிய படி நிமிர மித்ரஸ்ரீயோ தெரிந்த இடைவெளிகளின் ஊடு இல்லாத வாசுவை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள்.
“என்ன தேட்ற..?”
“இல்ல வாசு சைக்கோவ காணோம்..பொய்ட்டானா..?”
“அவன் அப்போவே பொய்ட்டான்..எழுந்துக்க..” என்ற படி பையனவன் எழுந்து கொள்ள அவனின் வார்த்தைகளை கிரகித்தவளின் விழிகளில் செந்தணல்.
●●●●●●●●
“இது தான் அந்த ரெண்டாவது தடவ வரம் கெடச்ச கத..அத தான் வரஞ்சு வச்சிருக்காங்கன்னு அப்பா சொன்னாரு..இதே இந்த பெயின்டிங்க்ல இருக்குறது தான் செவ்வேலரசன்..இது அவரோட வைஃப் அல்லிமலர்..” என்ற படி முதலாவது ஓவியத்தை சுட்டிக் காட்ட அவற்றை விழி விரித்துப் பார்த்தாள்,தர்ஷினி.
“இந்த கத தொடங்குறது செவ்வேலரசனோட அப்பா காலத்துல இருந்து..அவருக்கு கடவுள் நம்பிக்க இல்ல..ஆனாலும் மக்கள் தன்னோட விருப்பப்படி கடவுள வணங்குறது அவர் எந்த விதமான தடயும் விதிக்கல..தன்னால முடிஞ்ச அளவு கோயில் கட்றது,பாத யாத்திர போற பக்தர்களுக்கு நன்கொட வழங்குறதுன்னு இருந்துருக்காரு..ஒரு தடவ அளவுக்கு மீறி கள்ளு குடிச்சதால அவருக்கு புத்தி மழுங்கிப் போயிருக்கு..”
“ம்ம்ம்ம்..”
“அப்டி இருக்குறப்போ அரண்மனக்கி அந்த நைட் டைம் உதவி கேட்டு வந்த சித்தர ரொம்ப அவமானப்படுத்தியிருக்க்காரு..அவரு பேச்சால கோபப்பட்ட சித்தர் அவருக்கு ஊமயாகிடனும்னு சாபம் கொடுத்துட்டு போக அன்னைல இருந்து அவருக்கு பேச முடியல..அடுத்த நாளே பதினேழு வயசான தன்னோட மகன் செவ்வேலரன் கிட்ட ஆட்சிய கொடுத்துட்டு காட்டுக்கு பொய்ட்டாரு அந்த சித்தர தேடி..”
“அப்றம் என்னாச்சு..?”
“சித்தர் கிட்ட அவரு மன்னிப்பு கேக்க தான் இப்போ பண்ணப்போற தவத்துக்கு பெறகு பாக்கலாம்னு சொல்லிட்டு அவரு தவத்த ஆரம்பிக்க கிட்டத்தட்ட ஆறு வருஷம் தவத்துல இருந்த மனுஷன் கண்ண தெறக்குறப்பொ தன் முன்னாடி இருந்தவர கண்டு ஷாக் ஆகிட்டாராம்..ஏன்னா அவரு தன்னோட மன்னிப்புக்காக அங்கேே காத்துகிட்டு இருப்பாருன்னு சித்தர் நெனச்சு கூட பாக்கல..”
“அப்றம்..”
“பழய டெரெஸ்ஸும் கலஞ்ச தலயுமா கந்தல் கோலத்துல இருந்தவருக்கு சாப விமோச்சனம் கொடுத்து பேச்ச வர வச்சுட்டு மனசு குளிர்ந்து இருந்தவரு என்ன வரம் வேணும்னாலும் கேளுங்கன்னு சொன்னாராம்..அரசரும் இப்போதக்கி வேணாம் அவரே மன்னிச்சதே போதும்னு சொல்லிட்டு கெளம்பி நாட்டுக்கு வந்து செவ்வேலரசனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாராம்..”
“……………….”
“கல்யாணம் பண்ணி வச்சது யாரன்னா ரணதீர வம்சத்த சேந்த பொண்ண..ரணதீரனுக்கு அப்றம் அவரு வம்சத்துல அதுக்கப்றமா வந்த தலைமுறைல வந்த பொண்ண..அப்றம் அவங்களும் கர்ப்பமாயிட்டாங்களாம்..”
“கொஞ்சம் இருங்க..இதுல சித்தருக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்..?”
“அது தான் ஹைலைட்டே..சித்தர்கள் பல வருஷம் வாழ்வாங்கான்னு சொல்லுவாங்கல..ரணதீரனுக்கு மீள்ஜனனத்துக்கு வரம் கொடுத்த சித்தரும் செவ்வேலரசனோட அப்பாவுக்கு வரம் கொடுத்த சித்தரும் ஒருத்தர் தானாம்..”
“ஆஹ்..சொல்லுங்க..”
“அவங்க கர்ப்பம் தரிச்சதுக்கு அப்றம் தான் பிரச்சினயே ஆரம்பிச்சுதாம்..பொதுவா பர்ஸ்ட் வாரிசுக்கு கெடக்கிற வரம் தான் மீள்ஜனனம்..ஆனா இந்த கோயில்ல சாமி சன்னிதில பொறந்தா அவங்களுக்கு கெடக்கிற எக்ஸ்ட்ரா வரங்கள இதுவும் ஒன்னு..”
“அப்டியா என்னன்னு சொல்லுங்க..” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே அவளின் அலைபேசி ஒலிக்க சத்யாவின் பெயரைக் கண்டதும் உலகம் நின்றது,அவளுக்கு.
“ஐயோ சத்யா..” என்ற படி காவேரியையும் இழுத்துக் கொண்டு அவள் திரும்பிச் செல்ல முயல காவேரிக்கும் ஏதோ புரிந்தது.
தடதடவென ஏறியவளின் பார்வை அங்கு ஒரே மாதிரி வரையப்பட்டிருந்த குழந்தை ஓவியங்களில் படிந்து மீள மறக்கவில்லை.
●●●●●●●●●
நேரம் மாலை ஐந்து மணி.
பிணவறையின் முன்னே அமர்ந்து அழுது கொண்டிருந்த பெரியவரைக் கண்டு மனம் கனத்தாலும் ஏனோ அவனின் மீதிருந்த கோபம் மட்டும் இறங்க மறுக்கவில்லை.
வாசலில் சாய்ந்தவாறு நின்றிருந்த பிரகாஷுக்கும் அலைந்து திரிந்ததில் அப்படி ஒரு களைப்பு.அதிலும் முன்னே அமர்ந்திருந்தவரின் அழுகை ஒரு வித எரிச்சலைத் தந்தாலும் அவரின் நிலையிலும் பிழை சொல்ல இயலாதே.
“வேணா..வேணான்னு சொன்ன கேட்டியா டா..இப்டி பாதியில விட்டுட்டு பொய்ட்டியே..” மாரில் அடித்துக் கொண்டு அழவும் அவனின் கைகளுக்கு போஸ்ட் மார்டன் ரிப்போர்ட் வந்து சேரவும் சரியாய் இருந்தது.
ரிப்போர்ட் அடங்கிய கோப்பை கையில் கொடுத்த படி அவனருகே வந்து நின்றது,எஸ் ஐ விமலன் தான்.
“ஆள அடையாளங்காட்டி கன்பார்ம் பண்ணிட்டீங்களா..?”
“ஆமா சார்..இவரு தான் கன்ஃபார்ம் பண்ணாரு..” என்ற படி முதியவரை சுட்ட விழி நிமிர்த்திப் பார்க்கவில்லை,அவன்.
“ம்ம்..இந்த தாத்தாவ கூட்டிட்டு போ..நா டாக்டர் கிட்ட பேசிட்டு வர்ரேன்..” என்ற படி அவன் உள்ளே செல்ல “ஐயோ அப்பாவ மாதிரி என்ன பாதில விட்டுட்டு பொய்ட்டியே ஆர்யா..” என தலையில் அடித்துக் கொண்டு அழுதார்,தேவசகாயம்.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.28

