
திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் சகுந்தலாவை சந்திக்க அவளின் தோழி ஒருத்தி வந்தாள்.
“ஹே கமலி… வா வா… உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. இப்போ தான் இந்தப் பக்கம் எல்லாம் உனக்கு வரணும்னு தோணுதா?” எனக் கேட்டவாறு சென்று தன் தோழியை அணைத்துக் கொண்டாள் சகுந்தலா.
“சாரி டி… ஹயர் ஸ்டடீஸுக்கு அவுட் ஆஃப் ஸ்டேஷன் போனேன். யார் கூடவும் கான்டெக்ட்ல இருக்கல. ஒரு வாரம் முன்னாடி தான் ஊருக்கு வந்தேன். உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அதான் உன்ன அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்றாள் சகுந்தலாவின் பள்ளிக் காலத் தோழியான கமலி.
திருமணம் என்றதும் ஒரு நொடி முகம் மாறிய சகுந்தலா உடனே தன்னை மீட்டுக் கொண்டு, “ஆ…ஆமா டி. சடன்னா டிசைட் பண்ணது. சரி நீ வா நாம மேல போகலாம்.” என்ற சகுந்தலா, “அம்மா… கமலி வந்திருக்கா.” எனக் குரல் கொடுத்து விட்டு கமலியுடன் மாடிக்குச் சென்றாள்.
தோழிகள் இருவரும் வெகுநேரம் பழைய கதைகள் பேசிக் கொண்டிருக்க, இடையில் சகுந்தலாவின் தாய் ரேகா இருவருக்கும் பழரசம் கொண்டு வந்து கொடுத்து விட்டு கமலியின் நலம் விசாரித்து விட்டு சென்றார்.
“ஹேய் உன் ஃபியான்சி ஃபோட்டோ காட்டு டி.” எனக் கமலி கேட்கவும், “ஃபோ…ட்டோவா?” என முழித்தாள் சகுந்தலா.
அவள் தான் திருமணம் பேசியதில் இருந்தே இதுவரை ரிஷிகேஷுடன் ஒரு வார்த்தை பேசியதில்லை.
அவளின் நல்ல நேரமோ என்னவோ சகுந்தலாவிற்கு சங்கடம் தராமல் ரிஷிகேஷும் அவளுக்கு அழைக்கவே இல்லை.
அதுவே சகுந்தலாவிற்கு நிம்மதியாக இருந்தது.
“என்ன டி இப்படி முழிக்குற? ஃபோட்டோ கூட இல்லையா? இராத்திரி எல்லாம் நிச்சயம் கடலை போட்டுட்டு இருப்ப. ஃபோட்டோ கேட்டா இப்படி முழிக்குற.” எனக் கமலி கேட்கவும் அதற்கும் சகுந்தலா திருட்டு முழி முழிக்க, “ஏய்… என்ன டி? அப்போ இதுவரை பேசினது கூட இல்லையா?” எனக் கேட்டாள் கமலி அதிர்ச்சியாக.
சகுந்தலா இல்லை எனத் தலையசைக்க, தலையில் அடித்துக் கொண்ட கமலி, “அவன் அவன் எப்படி எல்லாம் கடலை போடுறான். நீயும் தான் இருக்கியே. சரி விடு. சரி டி நான் அப்போ கிளம்புறேன். வந்து ரொம்ப நேரமாச்சு. மத்த ஃப்ரெண்ட்ஸையும் பார்க்கணும்.” என்றவாறு எழுந்து கொண்டாள்.
“கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடு டி.” என சகுந்தலா தோழியை அணைத்து விடுவிக்க, “ட்ரை பண்ணுறேன் டி. ஆனா ஷியுர் பண்ண முடியாது. சாரி டி. ஒன்னும் நினைக்காதே.” என்றாள் கமலி.
ஆனால் அன்றே ரிஷிகேஷின் புகைப்படத்தை கமலி பார்த்து இருந்தால் சகுந்தலாவின் வாழ்வில் பெரும் புயல் அடிக்காமல் தடுத்து இருக்கலாமோ என்னவோ?
கமலி சென்றதும் தன் அறைக்குள் நுழைந்து கொண்ட சகுந்தலா கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தை வெறித்துப் பார்த்தாள்.
சகுந்தலாவையும் மீறி ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளிடம்.
கண்களை மூடிக் கொண்டவளின் மனக் கண்ணில் துஷ்யந்தின் முகம் வந்து போக, பட்டென அதிர்ச்சியில் இமைகளைப் பிரித்தாள் சகுந்தலா.
அதிர்ச்சியாக இமை பிரித்தவள் கண்ணாடியை நோக்க, அதிலும் துஷ்யந்தின் விம்பம்.
“நோ… நோ… இது தப்பு… தப்பு…” என்றவாறு கரங்கள் கொண்டு கண்களை அழுத்த மூடிக்கொண்டு மறுப்பாகத் தலையசைத்தாள் சகுந்தலா.
“தப்பு… தப்பு…” எனத் தனக்கே பல முறை கூறிக் கொண்டு நீண்ட பெருமூச்சுடன் இமைகளைப் பிரித்தவளுக்கு கண்ணாடியில் தன் விம்பம் தெரியவும் தான் நிம்மதியாக இருந்தது.
அடுத்து வந்த ஒரு மாதமும் அவசர அவசரமாக நடந்த திருமண ஏற்பாடுகளில் கண் மூடித் திறப்பதற்குள் கடந்து விட, சரியாக திருமணத்துக்கு முன் தினம் நிச்சயதார்த்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமணம் பேசி முடித்து பெண் பார்க்கும் சடங்கு அன்று பார்த்ததன் பின் இன்று தான் சகுந்தலா மீண்டும் மணமகனான ரிஷிகேஷைக் காண்கிறாள்.
ஆனால் சகுந்தலாவுக்கோ மணமகனைக் காணும் போது கல்யாணப் பெண்ணிற்கு வரும் எந்த உணர்வுகளுமே ரிஷிகேஷைக் காணும் போது எழவில்லை.
மாறாக ஏதோ ஒரு அந்நிய உணர்வில் சிக்கித் தவித்தாள்.
நிச்சயதார்த்த நிகழ்வின் போது ரிஷிகேஷ் சகுந்தலாவின் விரல் பிடித்து மோதிரம் அணிவிக்கும் போது அவளின் உடல் அவனின் தொடுகையில் கூசியது.
முயன்று தன் முக மாற்றத்தை மறைத்தாள்.
போதாக்குறைக்கு ரிஷிகேஷின் பார்வை வேறு உரிமையாக சகுந்தலாவின் உடலை மொய்க்க, அருவருப்பில் உடல் கூசி நின்றாள் சகுந்தலா.
ரிஷிகேஷின் பார்வையையே ஏற்க முடியாமல் தவித்த சகுந்தலாவிற்கு அவனுடன் தான் இனி வாழ்க்கை என எண்ணும் போதே மலைப்பாக இருந்தது.
இன்னுமே சகுந்தலா ரிஷிகேஷுடன் ஒரு வார்த்தை பேசி இருக்கவில்லை.
திருமணத்திற்கான உடை முதல் நகை வரை அனைத்துமே அவளது பெற்றோரின் தெரிவு.
ஏனோ அவளுக்கு எதிலும் நாட்டம் இருக்கவில்லை.
ரிஷிகேஷும் வேலை விடயமாக வெளிநாடு சென்றிருந்தவன் அன்று காலை தான் வந்து சேர்ந்திருந்தான்.
போதாக்குறைக்கு இன்னும் இரண்டு நாட்களில் அவளும் அவனுடன் வெளிநாடு செல்ல வேண்டும்.
வீசா, கடவுச்சீட்டு எல்லாம் அவசர அவசரமாகத் தயார் செய்திருந்தனர்.
பெற்றோர் ஆசைக்காக மனமேயின்றி செய்யப் போகும் திருமணம் ஒரு பக்கம் வலி என்றால் இனி பெற்றோர், உற்றார் அனைவரையும் பிரிந்து கண் காணா தேசத்தில் வாழ வேண்டும் என எண்ணும் போதே சகுந்தலாவின் நெஞ்செல்லாம் பாரம் ஏறியது.
மறுநாள் காலையில் திருமணம்.
மணமகள் அறையில் படுத்திருந்த சகுந்தலாவுக்கு உறக்கம் வருவேனா என அடம் பிடித்தது.
அருகே படுத்திருந்த தாயைத் திரும்பிப் பார்த்தவள் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் சத்தம் வராது ஜன்னல் அருகே சென்று நின்று நிலவை வெறித்தாள்.
திருமணம் என எண்ணும் போதே துஷ்யந்தின் முகம் தான் அவளது மனக்கண்ணில் தோன்றியது.
கூடவே இரு துளி கண்ணீரும் கன்னம் வழியே இறங்கியது.
ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவளின் கரமோ தன்னையும் அறியாமல் கைப்பேசியில் சேமித்து வைத்திருந்த துஷ்யந்தின் எண்ணை அழுத்தியது.
பள்ளிக் காலத்தில் அவனின் கைப்பேசி எண்ணை எடுப்பதற்கு என்னவெல்லாமோ திருகுதாளம் செய்திருந்தாள்.
ஆனால் இன்றோ அவை எதற்கும் பயனே இல்லாமல் போயிற்று.
“ஹலோ… துஷ்யந்த் ஹியர்…” என்ற ஆளுமையான குரல் சகுந்தலாவின் செவி வழியே பாயவும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் தன்னிலையை அடைந்த சகுந்தலா அப்போது தான் அவளின் கையில் இருந்த கைப்பேசித் திரையைக் கவனித்தாள்.
தன்னையும் அறியாமல் அவளின் கைகள் துஷ்யந்தின் எண்ணுக்கு அழைத்து இருக்க, ஒரு பக்கம் உச்சகட்ட அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மனமெங்கும் நிறைந்திருந்த துஷ்யந்தின் மீதான காதல் அவன் குரலைக் கேட்டதும் மீண்டும் கரைபுரண்டு ஓட முயற்சிக்க, மறுமுனையில் இருந்த துஷயந்தோ, “ஹலோ… ஹலோ… ஹூ இஸ் திஸ்?” எனக் கேட்கவும் சட்டென அழைப்பைத் துண்டித்து விட்டு கைப்பேசியை நெஞ்சோடு அணைத்து மௌனமாக கண்ணீர் சிந்தினாள் சகுந்தலா.
சகுந்தலாவின் சொல்லாக் காதல் உடையவனுக்கும் கூடத் தெரியாமல் அவளுள்ளேயே சமாதி ஆக்கப்பட்டது மறுநாள் ரிஷிகேஷின் கரத்தால் அவள் கழுத்தில் ஏறிய தாலி மூலம்.
அடுத்தடுத்த சடங்குகள் தொடர்ந்து நடைபெற, சகுந்தலாவோ சாவி கொடுத்த பொம்மை போல அனைத்திலும் கலந்துகொண்டாள்.
மண்டபத்தில் இருந்த சனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, மணமக்களும் வீடு செல்லத் தயார் ஆகினர்.
“சம்பந்தி… எங்க குடும்ப வழக்கப்படி பொண்ணு வீட்டுல தான் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணுவோம். எல்லாரும் நேரா கிளம்பி உங்க வீட்டுல மிச்ச சம்பிரதாயம் எல்லாம் முடிச்சிட்டு பொண்ணையும் மாப்பிள்ளையும் நாங்க அழைச்சிட்டு போயிடுறோம். நாளைக்கு நல்ல நேரம் பார்த்து உங்க வீட்டுல திரும்ப கொண்டு வந்து விடுறோம்.” என சகுந்தலாவின் தந்தை சக்திவேல் கூறவும் ரிஷிகேஷின் தந்தை ஏதோ கூற வாய் திறக்க, அதற்குள் இடையிட்ட ரிஷிகேஷ், “நோ அங்கிள்… சாரி… எங்க கம்பனில எனக்கும் சகுந்தலாவுக்கும் மேரேஜ் சர்ப்ரைஸா ஊட்டில ஹனிமூன் சூட் புக் பண்ணி இருக்காங்க. சோ நாங்க ரெண்டு பேரும் நேரா அங்க தான் கிளம்பப் போறோம். டூ டேய்ஸ்ல ரிட்டர்ன் வந்திடுவோம்.” எனத் தகவல் தெரிவித்தான்.
ரிஷிகேஷ் அனுமதி வாங்காமல் கடமைக்கு தகவல் தெரிவித்தது சகுந்தலாவின் பெற்றோருக்கு ஏதோ போல் இருக்க, ஆனால் பெண்ணைப் பெற்றவர்களாக அமைதியாக இருந்தனர்.
சகுந்தலாவோ இதனைக் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்காது அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் கணவனாகப்பட்டவனுடன் எவ்வாறு தனியே இருக்கப் போகிறோம் என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு திருமணம் முடிந்த அன்றே தாம் இருவரும் மட்டும் தனியே செல்லப் போகும் பயணம் பற்றி அறிந்ததுமே உள்ளம் வேப்பங்காயாய் கசந்தது.
இருவரின் பெற்றோரிடம் தான் கூறவில்லை.
சம்பந்தப்பட்ட தன்னிடமாவது ஒரு வார்த்தை கூறி இருக்கலாமே என மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள்.
சகுந்தலா அதிர்ச்சியாகவும் கேள்வியாகவும் ரிஷிகேஷின் முகத்தை நோக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.
அடுத்த சில மணி நேரங்களில் மணமக்கள் இருவரும் ஊட்டியை அடைந்திருந்தனர்.
திருமணக் களைப்பில் சகுந்தலா காரிலேயே உறங்கி விட, ஹோட்டலை அடையும் வரை சகுந்தலாவை ரிஷிகேஷும் தொந்தரவு செய்யவில்லை.
திடீரென ப்ரேக் அடிக்கவும் சகுந்தலாவின் உறக்கம் கலைந்து விட, படபடப்பான மனதுடன் வெளியே பார்த்தாள்.
அவர்களின் கார் ஹோட்டலை அடைந்திருக்க, ரிஷிகேஷ் எதுவும் கூறாமல் வண்டியை விட்டு இறங்க, அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும் இறங்கிக் கொண்டாள்.
வெகுநேரம் பயணம் செய்ததால் உடல் அடித்துப் போட்டது போல் வலிக்க, களைப்பு தீர ஒரு நீண்ட, அமைதியான உறக்கத்தை ஆவலாக எதிர்ப்பார்த்தாள் சகுந்தலா.
அப்போது தான் அவளுக்கு ஊட்டி வந்த நோக்கமே சட்டென நினைவு வர, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இதயம் படபடவென அடித்துக்கொள்ள, முகமெல்லாம் வியர்த்து வழிந்தது.
ஏனோ ரிஷிகேஷுடன் தனிமையில் இருக்கப் போகிறோம் என நினைக்கும் போதே அவளது உடல் முழுவதும் ஏதோ ஒவ்வாமை போல் கூசியது.
ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் தம் அறைச் சாவியை வாங்கிக் கொண்ட ரிஷிகேஷ் சகுந்தலாவிடம் கண் காட்டி விட்டு முன்னே நடக்க, அவனின் வேகத்திற்கு ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.
அறையை அடைந்ததும் சகுந்தலாவிடம் சாவியைக் கொடுத்த ரிஷிகேஷ், “சகுந்தலா… நீ ரூம்ல இரு. எனக்கு சின்ன வேலை ஒன்னு முடிக்க வேண்டி இருக்கு. நான் சீக்கிரம் வரேன்.” என்றவன் அவளின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது சகுந்தலாவின் கரத்தில் சாவியைத் திணித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

