
அத்தியாயம் 48
“நம்மில் ஒருவரை அசிங்கமாப் பேசுற, அராகஜமா நடத்துற இந்த வீடு நமக்கு வேண்டாம். மானம், மரியாதை எல்லாத்தையும் இழந்தா தான் இந்த வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் னா அது நமக்கு வேண்டவே வேண்டாம். நாம நம்மளோட வீட்டுக்கு போயிடலாம்.” என்றுவிட்டு லீலா தன்னுடைய சகோதரிகளைப் பார்க்க, அவர்களின் முகத்தில் எந்த வித அதிர்ச்சி பாவனையும் இல்லை. அந்த நேரச் சூழ்நிலை அவர்களின் தமக்கை எடுத்த முடிவுக்கு அவர்களை சட்டென்று ஒப்புக்கொள்ள வைத்தது.
“லீலா என்னமா இதுக்குப் போய் பெரிய வார்த்தை எல்லாம் பேசறே.” வடிவேலுவுக்குப் படபடவென்று வந்தது.
“இதுவரைக்கும் ஊர்மிக்கு அவ புருஷன் கிட்ட இருந்து கிடைக்க வேண்டிய எந்தவிதமான மரியாதையும் கிடைக்கல. இனியும் கிடைக்கும் னு எனக்கு நம்பிக்கை இல்ல. அவர் நடந்துக்கிறதை வைச்சுப் பார்த்தா, இனி ஊர்மியோட உயிருக்கு கூட இந்த வீட்டில் உத்திரவாதம் இல்லாமல் போகலாம்.
நாங்க நாலு பேரும் ஒன்னு தான் மாமா. ஒருத்தருக்கு அடிபட்டா கூட நாலு பேருக்கும் வலிக்கும். உடலால் தனித்தனியா இருந்தாலும், மனசால பிணைக்கப்பட்டவங்க நாங்க. எங்களில் ஒருத்தியை கஷ்டப்பட விட்டுட்டு, அவ கஷ்டத்தின் மீது ஏறி மத்த மூணு பேரால் சந்தோஷமா வாழ முடியாது.
அதைவிட முக்கியமான விஷயம், உங்களுக்கும் எங்க மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு. இதுக்கு மேல நாங்க இந்த வீட்டுல இருக்கிறது சரியா வராது. நாலு பேரும் ஒன்னா வாழ்றதுக்குத் தான் இந்த வீட்டுக்கு வந்தோம். அது நடக்கவே நடக்காதுன்னு முடிவானதுக்கு அப்புறம் நாங்க இங்க இருந்து என்ன பிரயோஜனம்.
பொண்டாட்டியை அடுத்தவங்க முன்னாடி கை நீட்டுறவன், அவளைத் தரகுறைவா பேசுறவன் தான் உண்மையில் குடும்ப வாழ்க்கைக்கு வொர்த்லெஸ் மேன் மாமா.” ருக்குவைத் தரம் தாழ்த்தி, நாகா பேசிய வார்த்தைகளை மனதில் வைத்துச் சொன்னாள் லீலா.
“இவ்வளவு நாளா என்னோட அக்கா, தங்கச்சிங்க வாழ்க்கைக்காகத் தான் இதோ இந்த நல்லபாம்பு பண்ண எல்லா அட்டூழியத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். இப்ப எனக்கு பயமா இருக்கு.
ஒருவேளை நாகாவை மாதிரியே மத்தவங்களும் இருந்து, இவங்களுக்கும் என்னை மாதிரி ஒரு நிலைமை வந்தா, இவங்களால் கண்டிப்பாச் சமாளிக்க முடியாது.” ஊர்மி சொல்ல, வடிவேலுவுக்கு கண்ணைக் கட்டியது.
“அக்கா நீ யாரை நினைச்சும் கவலைப்படாத. ஊர்மிக்கு இல்லாத ஒரு வாழ்க்கை நமக்கும் தேவையில்லை. நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம்.” என்றாள் ருக்கு. “போயிடலாம் அக்கா.” தேவகி வந்து அவள் கரம் பற்றினாள்.
“லீலா என்ன நடக்குது இங்க. நாகாவுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பிரச்சனைன்னா நீங்க எதுக்காக இங்க இருந்து வெளியே போகணும்.” பெண்களின் பாதையை மறைத்தது போல் வந்து நின்றான் செல்வா.
“உங்க அக்கா கிளம்பலாம் னு கூப்பிட்ட உடனே, அவங்க பின்னாடியே போயிடுவீங்களா? அப்ப நான் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை அப்படித்தானே. இன்னும் எத்தனை முறை என்னை நம்ப வைச்சுக் கழுத்தை அறுக்கப் போறீங்க. இத்தனை நாள் நீங்க என்கிட்ட பேசின பேச்சு, பார்த்த பார்வை, பழகின பழக்கம் எல்லாம் பொய் தான் இல்ல.” கோபமாய் கேட்டான் தெய்வா.
“தேவகி, உங்களை நான் பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சிருந்தேன். நம்ம எதிர்காலத்தைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முடிவெடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல. அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு.” என்றான் தர்மா.
“எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்க. நான் முதலில் உங்க எல்லார்கிட்டையும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். உங்க நாலு பேரைப் பத்தி மாமா சொன்னதையும் மீறி, நிச்சயமா எங்களால் உங்களை ஒற்றுமையா வைச்சிருக்க முடியும் னு மலை போல நான் நம்பினது, என்னோட முதல் தப்பு.
என் தங்கச்சிங்க உண்மையிலே சந்தோஷமா தான் இருக்காங்களான்னு தெரிஞ்சிக்காம விட்டது இரண்டாவது தப்பு. இதுவரைக்கும் பண்ண இரண்டு தப்புக்கே இவ்வளவு பெரிய நஷ்டமாகிடுச்சு. என் ஊர்மியோட சுயகௌரவம் ரொம்பவே பாதிக்கப்பட்டுடுச்சு.
தப்புகளில் இருந்து பாடம் படிக்கிறவன் தான் உண்மையான மனுஷன். நான் தேவையான பாடம் படிச்சிட்டேன். உங்களை நாங்க இல்ல, உலகத்தில் உள்ள யாராலும் ஒற்றுமையாக்க முடியாது. உங்க நாலு பேருக்காக எங்க நாலு பேரால் பிரியவும் முடியாது.
கொஞ்ச நேரமா இருந்தாலும், சாதக பாதகங்களை யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன். கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆகுது. இந்தக் கொஞ்ச நாளை முயற்சி பண்ணா கடந்து வந்திடலாம். காலம் கடந்து நமக்குள்ள செட்டாகாதுன்னு தெரிய வந்து, நொந்து போய் பிரியுறதுக்கு இப்பவே பிரியுறது பெட்டர்.
உங்ககிட்ட இருந்து எந்த விதமான பணமோ, நகையோ எதிர்பார்க்காம விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறோம். உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி நல்ல இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு திசையில் போங்க. எங்களையும் எங்க பாதையில் போக விடுங்க.” என்றவள் தன் இரு கைகளிலும் ஊர்மியையும், தேவகியையும் பிடித்தவாறு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
திருமணம் என்று வரும் போதும் தாங்கள் மணக்கப்போகிறவர்களின் விருப்பத்தை இரண்டாம் பட்சமாக்கி, தங்கள் நலனை முதலில் வைத்த லீலா பிரச்சனையென்று வரும் போதும் தங்களின் உணர்வுகளை முதலில் வைத்துத் தவறு செய்தாள்.
வடிவேல் மகன்கள், மருமகள்கள் என இருவருக்கும் நடுவில் நில்லாது மகன்கள் பக்கம் சாய்ந்துவிட்டார் என்று நினைத்தவளே இப்போது நடுநிலை தவறிவிட்டிருந்தாள்.
நாகா என்ற ஒருவன் செய்த தவறுக்காக மற்ற ஆண்கள் மூவரையும் தண்டிப்பது தவறு என்பது தெரிந்தும் அதைச் செய்தாள். ஊர்மியின் சுயகௌரவத்தோடு சேர்த்து அவள் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் நாகா நடந்துகொண்டதால், ஊர்மியின் உடன்பிறந்தவளாக, அவளுக்கு இருக்கும் ஒற்றை உறவாக அடுத்து அவள் வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டு தான்.
அதே போல் தன் கணவனுக்குத் தான் வேண்டுமா வேண்டாமா என யோசிப்பதற்கும் அவளுக்கு உரிமை உண்டு தான். ஆனால் தெய்வா, தர்மா இருவரிடம் இருந்து அவர்களின் மனைவிகளைப் பிரிக்க இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என யோசிக்கவே இல்லை.
ஊர்மி நன்றாகத் தான் இருக்கிறாளா எனக் கவனிக்காமல் விட்டது பிழை என்றால், ருக்குவும், தேவகியும் நன்றாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தும் அவர்களை அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிக்க நினைத்தது எப்படிச் சரியாகும்.
நாகாவின் அளவு அவளும் கோபத்தில் இருந்தாள். அவன் கோபத்தை வார்த்தைகளில் காண்பித்தான். இவள் செயலில் காண்பித்தாள். எப்படி இருப்பினும் இங்கே கோபத்தால் விளைந்தது நஷ்டம் மட்டும் தான்.
“என்னப்பா இது, இதுக்குத்தான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சீங்களா? விவாகரத்து வரை ரொம்ப சுலபமா பேசிட்டுப் போறாங்க.” விரக்தியின் உச்சத்தில் பேசினான் செல்வா. லீலாவிடம் இதை அவன் சுத்தமாக எதிர்பார்த்து இருக்கவில்லை. உன் தங்கைகளை என்னிடம் வரவிடாதே மற்றபடி நீ அவர்களுடன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்னும் அளவு எப்போதும் அவளின் சொந்த முடிவுகளில் தலையிடாதவன் தான் செல்வா. அவளுக்காக யோசித்து செயல்படுபவனை இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்றதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“ருக்குவுக்கு எப்பவும் அவங்க அக்கா தான் முதலில். நான் அவங்க மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்கேன்னு தெரிஞ்சிருந்தும், என்னை விட்டுட்டு போயிட்டாங்க இல்ல. இனி அவங்களாத் தேடி வந்தாலும் நான் மன்னிக்கப் போறதில்லை.” என்றான் தெய்வா.
தர்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தான். ஆனால் அனைத்திற்கும் காரண கர்த்தாவான நாகாவிற்கு மட்டும் லீலாவின் இந்த முடிவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
என்ன நடந்தாலும், எத்தனை பேசினாலும் ஊர்மியை எப்படியும் சமாதானம் செய்து தன்னுடன் வாழ வைக்க தான் லீலா நினைப்பாள் என்று நினைத்து அவன் ஆடிய ஆட்டம் அவன் வாழ்க்கையை மட்டும் அல்ல, அவனுடைய சகோதரர்களின் வாழ்க்கையையும் சேர்த்து கேள்விக்குறியாக்கி விட்டதை உணர்ந்தவனுக்கு, தான் செய்த மடத்தனம் கொஞ்சம் புரிவது போல் இருந்தது.
ஊர்மியின் மீது அத்தனை கோபம் இருந்தாலும், அவளை மொத்தமாக விட்டுவிட அவன் நினைக்கவில்லையே. அவள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூட நினைக்கவில்லை.
அவன் எதிர்பார்த்த ஒரே பதில், ‘இனி உங்கள் மனைவியாக முழு உரிமையுடன் இந்த வீட்டில் நடமாடுகிறேன்’ என்கிற வார்த்தைகளைத் தானே. இப்போது அவள் மொத்தமாகத் தன்னை விட்டுச் சென்றுவிடுவாளோ எனப் பதறினான்.
அன்றைய மாலை நேரம் தங்களின் வீடு வந்து சேர்ந்தனர் பெண்கள் நால்வரும். “என்னடிம்மா நாலு பேர் மட்டும் தனியா வரீங்க. கல்யாணம் ஆகி முதல் முறையா பிறந்த வீட்டுக்கு வர பொண்ணுங்க, இப்படியா தனியா வருவீங்க.” பக்கத்து வீட்டுப் பெண்மணி வம்பழக்க வந்தார்.
இவர்கள் நால்வருக்கும் வந்த வாழ்வைப் பார்த்து, அந்தத் தெருவின் பாதிக்கும் மேற்பட்டோர் ஆனந்தம் அடைந்தார்கள் என்றால் வெகுசிலர் பொறாமைப்படவும் செய்தார்கள். அப்படிப் பொறாமைப் பட்டவர்களில் ஒருவர் தான் இப்போது விசாரிக்கவென்று வந்தது.
“இன்னைக்குத் தலையாடி தானே. அவங்க வீட்டு சைடு இந்தக் கெடுபிடி கொஞ்சம் அதிகம். அவங்க கொண்டு வந்து இங்க விடுறேன்னு தான் சொன்னாங்க. ஆனா முறைப்படி புருஷங்காரங்க கூட வரக் கூடாதாமே. அதான் நாங்க தனியா வந்தோம். ஆடி முடியும் போது அவங்களே வந்து எங்களைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க.” புகுந்த வீட்டில் பொறுமை இல்லாமல் பேசிய வாய்க்குத் தண்டனையாக பிறந்த வீட்டிற்குள் நுழையும் முன்னர் பொய் சொல்லும் தண்டனை கிடைத்தது லீலாவிற்கு.
வீட்டிற்குள் வந்ததும், “ஏன் அக்கா நாம தான் அந்த வீடே வேண்டாம் னு சொல்லிட்டு வந்துட்டேமே. அப்புறமும் எதுக்கு அந்த வீட்டில் உள்ளவங்களை விட்டுக் கொடுக்காம பேசுற.” ஊர்மி தான் முதலாவதாகக் கேட்டது.
“தெரியல ஏதோ என்னையும் மீறி அப்படி வார்த்தைகள் வந்துடுச்சு. சரி அதை விடுங்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கோம். ரொம்ப டயர்டா இருக்கும். ஒரு ரூமை மட்டும் க்ளீன் பண்ணிட்டு, போய் ரெஸ்ட் எடுங்க.” என்க, அதன்படியே கிளம்பினர் மற்ற மூவரும்.
லீலாவுக்குத் தான் நெஞ்சாங்குழி கலகலத்துக் கிடந்தது. செல்வாவின் பார்வை, தெய்வாவின் ஏக்கம், தர்மாவின் கோபம், வடிவேலுவின் கெஞ்சல் என ஒவ்வொன்றாய் நினைவு வந்து பெரிய தவறு செய்துவிட்டாய் என ஓலமிட்டது அவள் மனசாட்சி. பேருந்தில் வரும்போதே கண்ணை மறைத்த ஆத்திரம் கடந்திருக்க, சுயமிழந்த மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக தெம்பாக எழுந்து இப்போது அவளை கேள்வி கேட்க ஆரம்பித்து இருந்தது.
இரண்டு நாள்கள் தன்னைப் போல் கடந்திருக்க, “என்ன பண்ணி வைச்சிருக்கீங்க அங்கிள். நாகா பிரச்சனையை ஆரம்பிக்கும் போதே, அவனைக் கண்டிச்சு தேவைன்னா நாலு அப்பு அப்பி இருந்தீங்கன்னா இப்ப இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா. செல்லமான பையன்னு அவனைக் கெடுக்கிறதே நீங்க தான்.” கத்திக் கொண்டிருந்தான் அரசு.
கொலுசொலியும், வளையொலியும் கேட்டுக்கொண்டிருந்த வீடு அம்மன் இல்லாத கருவறை போன்று களையிழந்து கிடக்க அதைத் தவிப்பாய் பார்த்தபடி, “ஆமா அவனுக்குத் தான் புத்தியில்லை, உங்களுக்குமா புத்தி இல்லை. அவங்க போறேன்னு சொன்னா போங்கன்னு விட்டுடுவீங்களா?” மற்ற ராஜ் சகோதரர்களைப் பார்த்துக் கேட்டான்.
“எங்களைக் கேட்டா வீட்டை விட்டு போகணும் னு முடிவு பண்ணாங்க. நாங்க எதுக்குத் தடுக்கணும். எங்க மேல கொஞ்சமாச்சும் மரியாதை இருந்திருந்தா வலது கால் எடுத்து வைச்சு வந்த வீட்டை விட்டு, இடது காலை எடுத்து வைச்சு வெளியே போய் இருப்பாங்களா?” கோபமாகக் கேட்டான் தெய்வா.
“இந்த வாய் மட்டும் இல்லைன்னா, அண்ணன் தம்பி நாலு பேரையும் நாய் தூக்கிட்டுப் போய் இருக்கும். தெரியாமத் தான் கேட்கிறேன் உங்களுக்குத் தான் பாசம், மண்ணாங்கட்டின்னு எதுவுமே இல்லை. அவங்களுக்கும் அப்படி எதுவும் இருக்கக் கூடாதுன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.
அவங்களும் மனுஷங்க தான். நீங்க நில்லுன்னு சொன்னா நிக்கிறதுக்கும், போன்னு சொன்னா போறதுக்கும், மத்தவங்க கூட பேசு, பேசாதன்னு சொல்றதைக் கேட்கிறதுக்கும், உங்க அப்பா சந்தையில் இருந்து வாங்கிக் கொடுத்த பொம்மை இல்ல.
அவங்களில் ஒருத்தரை அடிச்சா இன்னொருத்தருக்கு வலிக்கத் தான் செய்யும். கேள்வி கேட்கத் தான் செய்வாங்க. சமாளிக்கவோ, சமாதானப்படுத்தவோ முடியலன்னா நீங்க என்ன புருஷங்க.
வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கேட்கணும் னு எதிர்பார்க்கிற நீங்க, அவங்க வீட்டைவிட்டு போகும் போது ஏன் தடுக்கல. இந்த வீட்டு வாசலுக்கும் கேட்டுக்கும் எவ்வளவு தூரம் இருக்கு. நடந்து போனா கண்டிப்பா ஐந்து நிமிஷம் ஆகும். உங்களில் ஒருத்தராவது ஓடிப்போய் அவங்களைத் தடுத்தீங்களா? அமைதியா நின்னுக்கிட்டுத் தானே இருந்திருக்கீங்க.
நாகாவுக்கு மட்டும் தான் கல்யாணம் பிடிக்கலன்னு நினைச்சிட்டு இருந்தவங்க, நீங்க அமைதியா இருக்கவும் உங்களுக்கும் அப்படித்தான் போலன்னு இந்நேரத்துக்கு முடிவு கட்டி இருப்பாங்க.” கொதித்தான் அரசு.
“அப்படிக் கூட நடக்குமா அரசு. லீலா எப்படியும் என்னைத் தேடி வந்திடுவாங்கன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா நீ இப்படி சொல்ற.” பதறிவிட்டான் செல்வா.
“நீ இப்படி நினைக்கிற, அதே மாதிரி தப்பு உங்க வீட்டு ஆளுங்க மேல தான். அதனால் நீங்களா வந்து அவங்களைக் கூட்டிக்கிட்டு வரணுமுன்ன அவங்க அங்க எதிர்பார்த்து காத்திருக்கலாம் இல்லையா?” அரசு விடுவதாக இல்லை.
“ப்ச் நாங்க எதுக்கு இதையெல்லாம் பண்ணனும். ஒன்னும் இல்லாத விஷயத்தைப் பெருசாக்கினது அந்த நாகா. அதனால அவங்க கோச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அவன் ஒருத்தன் பண்ண தப்புக்கு நாங்க மூணு பேரும் போய் அவங்ககிட்ட கெஞ்சணுமா?” கேட்டவன் தெய்வா.
“வடிவேலு அங்கிள் பசங்க மனசுக்குள்ள ஆணாதிக்க எண்ணமா? இது நல்லா இல்ல தெய்வா. பொண்டாட்டிகிட்ட ஒருத்தன் ஆசைப்பட்டு தோத்துப்போறது கூட வாழ்க்கையில் அவனை ஜெயிக்க தான் வைக்கும்.
உங்க அப்பாவை மரியாதைக்குறைவா யாராவது பேசினா நீ பார்த்துக்கிட்டு சும்மா இருப்பியா? அதே நிலை தானே அந்தப் பொண்ணுங்களுக்கும்.
இப்படி, அவங்க இறங்கி வர நீயும், நீ இறங்கி வர அவங்களும் வெயிட் வெயிட் பண்ணி காலம் கடந்து போயிக்கிட்டே இருந்துச்சுன்னு வைச்சிக்க வாழ்க்கை கசந்திடும், பிரிவும் பழகிடும்.
ஒரு நல்ல நண்பனா நான் சொல்ற அட்வைஸ் ஒன்னு தான். பொண்டாட்டி வாழ்க்கையில் சரிபாதி, அவளைத் தொலைச்சுட்டுத் தனியா நிக்கிறது எவ்வளவு பெரிய கொடுமைன்னு எடுத்துக்காட்டா ஒருத்தரை உங்க வீட்டிலே வைச்சிருக்கீங்க.
யார் மேல் தப்பு இருக்குன்னு கிண்டிக் கிழங்கெடுக்காம, ஈகோ பார்க்காம உங்க பொண்டாட்டிங்களைச் சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, நல்ல படியா வாழுற வழியைப் பாருங்க.” என்றான் அரசு
“நீ சொல்றது எல்லாம் புரியுது அரசு. ஒருவேளை அவங்க நாகாவும், ஊர்மிளையும் சேர்ந்தா தான் நாங்களும் வருவோம் னு சொல்லிட்டா?” பெண்களின் நிலையில் இருந்து யோசித்தான் தர்மா.
“கண்டிப்பா அப்படித்தான் சொல்லுவாங்க. உங்களுக்கு உங்க பொண்டாட்டிங்க வேணும் னா எப்பாடு பட்டாவது ஊர்மியையும், நாகாவையும் சேர்த்து வைக்கணும். அதைச் செஞ்சுட்டீங்கன்னா அவங்க தன்னால் உங்களைத் தேடி வந்திடுவாங்க. உங்க கெத்து அவங்ககிட்ட குறையாம இருக்கும். என்ன சொல்றீங்க.” எதிர்பார்ப்போடு நிறுத்தினான் அரசு.
“அந்த நாகாவினால் தான் எல்லாப் பிரச்சனையும். எங்க வாழ்க்கைக்காக அவன்கிட்ட போய் கெஞ்சணுமா?” கோபமாகக் கேட்டான் தெய்வா.
“எப்பா டேய், பொண்டாட்டி கிட்டவும் இறங்கிப் போகக்கூடாது. சரி, உன் கூடப்பிறந்த தம்பி தானே அவன் கிட்ட பேசுங்கன்னு சொன்னா, அவன்கிட்டேயும் இறங்கிப் போக முடியாதுன்னு சொன்னா எப்படி.
எப்ப பார் நான் உச்சி மரத்தில் தான் இருப்பேன். ஆனா எனக்கு பலாப்பழம் வேணும் னு சொன்னா, அது எந்த ஊர் நியாயம். நடுஆற்றில் நிற்காம ஏதாவது ஒரு கரைக்கு வாங்க.
நீங்க உங்க தம்பி மேல இருக்கிற பாசத்துக்காக ஒன்னும் அவனை அவன் பொண்டாட்டியோட சேர்த்து வைக்க வேண்டாம். உங்க வாழ்க்கையை காப்பாத்திக்க அதைச் செய்யுங்க.
முடியலையா அந்தப் பொண்ணுங்க சொன்ன மாதிரி விகாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு சுமூகமாப் பிரிஞ்சிடுங்க.” அரசு சொல்ல விதிர்விதிர்த்துப் போயினர் அனைவரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்படி கேளுப்பா அரசு … கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்க பாரு … லீலா பண்ண தப்பை உணர்ந்துட்டா … நாகா நீ தப்பை உணர்ந்துட்டாலும் …
உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா அப்படின்னு அவங்கவங்க பொண்டாட்டியை பார்த்து … டயலாக் பேசி சமாதானம் பண்றதை விட்டுட்டு அமைதியா விட்டுட்டாங்க …
ஒரு பெரிய சண்டை வரும் போது எல்லாரும் உணர்ச்சி வசப்படுவாங்க … அப்போ பிரச்சனையை தீர்க்க நடுநிலைமையா லீலா நீ மன்னிப்பு கேளு … நாகா நீயும் மன்னிப்பு கேளுன்னு தீர்த்து வச்சிருக்கலாம் வடிவேலு …
ஆனா லீலா வை மட்டும் மன்னிப்பு கேட்க சொன்னா அது தப்பை அவளே ஏத்துக்குற மாதிரி தான … அதெப்படி அவ ஏத்துக்க முடியும் … சினேக் பாபு விஷத்தை கக்கிருச்சே …