Loading

நிறம் 8

 

அவன், “மிஸ். மயூரவர்ஷினி” என்றதில் திகைத்து தான் போனாள் வர்ஷினி. சிறுவயதிலிருந்தே மற்றவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘வர்ஷினி’ என்று தான் கூறுவாள்.

 

வீட்டிலும் அவள் தந்தை அழைப்பது வர்ஷினி என்று தான். அவளின் சித்தி இதுவரை வர்ஷினி என்றே அழைத்ததில்லை. அவர் எப்படி முழுப்பெயர் கொண்டு அழைக்கப் போகிறார்? அவளிற்கே தன் பெயர் மயூரவர்ஷினி என்பது அவளை பள்ளியில் சேர்க்கும்போது தானே தெரியும்!

 

அவளின் முழுப்பெயர் தெரிந்தபின்பும், ஏனோ அதை வெளியில் சொன்னதில்லை. ஆனால், சில இரவு நேர கனவுகளில் யாரோ ஒருவர் மிகுந்த பாசத்துடன் ‘மைய்யூ’ என்று அழைப்பது போல இருக்கும். அந்த கனவு வரும் நாட்களில் எல்லாம் அவள் மனது எதையோ இழந்ததை போல மிகுந்த பாரமாக இருப்பதை உணர்ந்திருக்கிறாள்.

 

அவள் வளர்ந்த பின்னர், தான் மூத்த தாரத்தின் மகள் என்பதை அறிந்த பின்னர், அந்த கனவுகளில் வருவது அவளின் அன்னை என்று நம்பினாள். தாயின் முகத்தை காணவில்லை என்றாலும் அவரின் குரலை கேட்டே தன் சோகங்களை மறக்க பழகினாள்.

 

இப்போது அவன் ‘மயூரவர்ஷினி’என்று அழைக்கவும் மீண்டும் அவளின் நினைவுகளில் மூழ்கியிருந்தவளை வாகனத்தின் ‘ஹாரன்’ சத்தம் கலைத்தது.

 

முன்னே ஊர்ந்து கொண்டிருந்த வண்டியை முந்தி சென்றான் அவன். வர்ஷினியோ அவனின் முகத்தையே பார்த்திருக்க, அவன் முகமோ எப்போதும் போலவே நிர்மலமாக இருந்தது.

 

“இப்படி எவ்ளோ நேரம் என் முகத்தையே பார்த்திட்டு இருக்க போற?” என்று அவன் வினவ, வர்ஷினியோ அவசரமாக திரும்பிக் கொண்டாள்.

 

‘இவனுக்கு எப்படி என் முழுப்பெயர் தெரிஞ்சுருக்கும்? ஒரு வேளை அம்மாவோட சொந்தமா இருக்குமோ? இல்ல இல்ல, அப்படின்னா இவ்ளோ நாள் இல்லாம இப்போ எதுக்கு புதுசா உறவு கொண்டாடப் போறாங்க? இவன் யாரா இருக்கும்?’ – இப்படி பல கேள்விகள் அவளின் மூளையைக் குடைந்து கொண்டிருக்க, புருவம் சுருக்கி அவள் அமர்ந்திருப்பதை கண்டவன், ‘அவளே கேட்கட்டும்’ என்று தன் வேலையை கவனித்தான்.

 

சற்று நேரத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனிடம் கேட்டே விட்டாள் வர்ஷினி.

 

“உங்களுக்கு எப்படி என்னோட முழுப்பெயர் தெரியும்?” என்று வர்ஷினி வினவ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா!’ என்பதைப் போல் அவளைக் கண்டவன், “உன் செர்டிஃபிகேட்ல அந்த பெயர் தான இருக்கு.” என்று தோளைக் குலுக்கிக் கொண்டான்.

 

அவளோ எதையோ எதிர்பார்த்து ஏமாந்ததை போல ஒரு பெருமூச்சுடன் விட்ட வேலையை செய்ய துவங்கினாள். (வெளியே வேடிக்கை பார்க்கும் வேலை) அவள் கவனிக்காத விஷயம், அவன் எப்போது அவளுடைய சான்றிதழ்களை பார்த்தான் என்பது தான்!

 

“ஏன் விக்ரம் கிட்ட வேலைக்கு சேர்ந்த?” என்று அவன் வினவ, அவளோ திரும்பாமலேயே, “பணத்துக்காக தான்…” என்றாள் விரக்தியாக.

 

அவளின் உதடுகள் கீழநோக்கி வளைவதை அவள் புறம் திரும்பாமலேயே உணர்ந்து கொண்டான் அவன்!

 

வர்ஷினிக்கு இத்தனை நாட்களாக மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது போலும். ஆனால், அவளின் மனம் அந்த ‘யாரோ’வாக இவனை உணர்ந்தது எதற்காக என்பதை சிந்திக்க மறந்து விட்டாள்.

 

“சித்திக்கு சின்ன வயசுலேயே என்னை பிடிக்காது. நான் நல்லா படிச்சு பரிசு வாங்குனாலோ, டான்ஸ் பாட்டுன்னு போட்டில வெற்றியடைஞ்சாலோ அவங்க முதல் வேலையா என்னையும் ரித்தியையும் கம்பேர் பண்ணுவாங்க. ரித்திகா என் சித்தி பொண்ணு. என்னை விட ஏழு வயசு சின்னவ. இப்படியே என்னையும் அவளையும் கம்பேர் பண்ணி, அவளோட மனசுல என்னை பத்தி தப்பான இமேஜ் கிரியேட் பண்ணிட்டாங்க. சோ, அவளுக்கும் என்னை பிடிக்காம போயிடுச்சு. எங்க வீட்டுல என்கூட அன்பா பேசுறது எங்க அப்பா மட்டும் தான். அவரும் சில நேரம் என் சித்தியோட வாய்க்கு பயந்து அளவா தான் பேசுவாரு.”

 

“இப்படியே நாட்கள் போக, என் சித்தி மூலமா வந்த தடங்கல்களையெல்லாம் எப்படியோ தகர்த்துட்டு படிச்சு முடிச்சேன். அவ்ளோ நாள் என் படிப்புக்காக காசு செலவாகுதேன்னு கவலைப்பட்டு சண்டை போட்டுட்டு இருந்த சித்தி வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் சம்பளத்தை முழுசா அவங்க கையில கொடுத்துடனும்னு கறாரா இருந்தாங்க. அட்லீஸ்ட் வேலைக்கு போறேன்னு சொல்லியாவது இவங்க பேச்சிலிருந்து தப்பிக்கலாம்னு நானும் வேலைக்காக ரொம்ப எதிர்பார்த்தேன். அப்படி கிடைச்சது தான் விக்ரம்க்கு சொந்தமான கார்மெண்ட்ஸ்ல சூப்பர்வைசர் வேலை.”

 

“எனக்கு முதல்ல அது விக்ரமோட கார்மெண்ட்ஸ்னு தெரியாது. ஏன்னா, அது அவரோட பினாமி பெயர்ல இருந்துச்சு. இது தெரிஞ்சுருந்தா இன்டெர்வியூவே அட்டெண்ட் பண்ணியிருக்க மாட்டேன். ரிசல்ட் வந்ததும் ஒரு ஆர்வத்துல சித்திகிட்ட சொன்னதுக்கு அப்பறம் தான் என் பிரெண்டு மூலமா அது விக்ரமோட கார்மெண்ட்ஸ்னு தகவல் கிடைச்சது.” என்று கூறியவள் அன்றைய நாளிற்கு நினைவுகளின் மூலம் பயணப்பட்டாள்.

 

*****

 

“ம்மா, அவ என்னன்னா வேலைக்கு போறேன்னு வந்து நிக்கிறா. நீ எதுவும் சொல்லாம இருக்க?” என்று ரித்திகா அவளின் அன்னையிடம் வினவ, “நான் சும்மா இருக்குறதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எல்லாம் உன்னோட நன்மைக்காக தான்.” என்றார் அவரின் வழக்கமான வெண்கல குரலில்.

 

“ப்ச், அப்படி என்ன காரணமா இருக்கப் போகுது? ஏற்கனவே நான் அவ அளவுக்கு படிக்கலைன்னு அப்பாலயிருந்து என் ஸ்கூல் டீச்சர்ஸ் வரைக்கும் திட்டுறாங்க. இப்போ அவ வேலைக்கு போய் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டானா என்னை யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க.” என்று சிணுங்கினாள் ரித்தி.

 

இவையெல்லாம் தான் செல்லப்போவது விக்ரமின் தொழிற்சாலைக்கு என்று சொல்ல வந்த வர்ஷினியின் காதில் விழுந்தது.

 

‘ஹ்ம்ம், இத்தனை நாள் இவங்க தான் என்னை மதிக்கல. வீட்டுல இருந்தா திட்டுறாங்கன்னு வேலைக்கு போகலாம்னு நினைச்சது கூட நடக்காது போல. எல்லாம் என் தலைவிதி!’ என்று நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது வர்ஷினியால்.

 

“அட லூசே, பணத்துக்கு தான் இந்த உலகத்துல மதிப்பு அதிகம். பணத்துக்கு முன்னாடி படிப்பெல்லாம் எம்மாத்திரம்? அவளை வேலைக்கு அனுப்புறதே, அவ சம்பாதிச்சு கொண்டு வரத உனக்கு நகையா மாத்துறதுக்கு தான்.  இப்போ இருந்தே சேர்க்க ஆரம்பிச்சா தான் நல்ல சொத்து இருக்குற ஆளா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க முடியும். சாதாரண வேலைக்கு போறவனே இந்த காலத்துல லட்ச லட்சமா பணமும் அம்பது பவுனுக்கு குறையாம நகையும் கேட்குறான். இதுக்கெல்லாம் உங்க அப்பாவை நம்புனா உனக்கு எதுவுமே செய்ய முடியாது பார்த்துக்கோ. அதுக்கு தான் அவளை வேலைக்கு அனுப்ப ஒத்துகிட்டேன்.” என்று தன் ‘இராஜதந்திரங்களை’ மகளிற்கும் போதித்து கொண்டிருந்தார் வர்ஷினியின் சித்தி.

 

இவற்றை கேட்ட வர்ஷினிக்கு விரக்தி சிரிப்பு தான் வந்தது. இதில் நல்ல விஷயமாக அந்த அம்மா – மகள் கூட்டணி தன் வேலைக்கு உலை வைக்கப் போவதில்லை என்பதை அறிந்து சிறிது ஆசுவாசப்பட்டாள்.

 

“சூப்பர் ம்மா. ஆமா, என் கல்யாணத்துக்கு நகை சேர்க்குறேன்னு சொல்ற. அப்போ அவளுக்கு?” என்றாள் ரித்தி.

 

“அவளுக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடா? உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் யாராவது வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா தள்ளிவிட்டுடலாம்.  ஆனாலும், உனக்கு கல்யாணத்துக்கு அப்பறமும் சீரெல்லாம் செய்ய வேண்டியதிருக்கே. அதான் யோசனையா இருக்கு. ம்ம்ம், அதை அப்பறம் பார்ப்போம்.” என்று சித்தி கூற, வர்ஷினி மனதிற்குள் ‘ஏன் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று ஆயிரமாவது முறையாக கேள்வியெழுப்பி அதற்கான விடையை தேடிக்கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்திற்கு பிறகே தன்னை சுதாரித்துக் கொண்டவளாக அந்த அறைக்குள் நுழைந்தாள். அப்போது அம்மாவும் மகளும் வேறெதோ கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்க, வர்ஷினி உள்ளே நுழைந்ததும் அதை நிறுத்திவிட்டு இருவருமே வர்ஷினியை அளவிடும் பார்வை பார்த்திருந்தனர்.

 

அவர்களின் பார்வையில் சற்று தயங்கியவள், பின் சொல்ல வந்த விஷயத்தின் முக்கியத்துவம் உணர்ந்தவளாக அதை திக்கியபடி அவளின் சித்தியிடம் கூறினாள்.

 

“சித்தி, இப்போ எனக்கு வேலை கிடைச்சுருக்குற கார்மெண்ட்ஸ் விக்ரமோட கார்மெண்ட்ஸ்.” என்று கூறிவிட்டு சித்தியின் எதிர்வினையை நோக்கினாள்.

 

அவளின் சித்தியோ எந்தவித எதிர்வினையும் புரியாமல் இருந்ததால், “விக்ரம்… மும்பையையே ஆட்டிப்படைக்கிற தாதா… விக்ரம்… அவரோட கார்மெண்ட்ஸ்…” என்று விளக்கினாள்.

 

இப்போதும் தான் எதிர்பார்த்த எதிர்வினையில்லாமல், “அதுக்கு என்ன?” என்று சாதாரணமாக வினவிய சித்தியை கண்டு எரிச்சல் தான் ஏற்பட்டது. எனினும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சித்தி, இந்த வேலை… கொஞ்சம் ஆபத்தானது மாதிரி தோணுது. அதான் இதை விட்டுட்டு வேற வேலைக்கு போகலாம்னு…” என்று அந்த வரியை முடிக்காமல் விட்டவளை ஏளனமாக பார்த்தார் அவளின் சித்தி.

 

“ஓஹ், உனக்கு வேலை குடுக்க ‘நான்’ ‘நீ’ன்னு போட்டி போட்டுட்டு நிக்குறாங்கன்னு எனக்கு தெரியாம போச்சே.” என்றார் கிண்டலாக.

 

“இல்ல சித்தி, இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள…” என்று துவங்கியவளை இடைவெட்டியபடி, “அந்த ரெண்டு மாசமும் வெட்டியா வீட்டுல உக்கார்ந்து தண்டச்சோறு திங்கப்போற. அதான?” என்றார்.

 

‘என்னோட சம்பளத்துல உங்க பொண்ணை செட்டில் பண்ண போட்ட பிளானோட கம்பேர் பண்றப்போ, ரெண்டு மாசம் ‘தண்டச்சோறு’ சாப்பிடுறது ஒன்னும் பெருசில்ல.’ என்று வாய்வரை வந்ததை கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள் வர்ஷினி.

 

“சித்தி, அங்க பொண்ணுங்களுக்கு சேஃப்டி இல்லன்னு சொல்றாங்க.” என்று மீண்டும் ஆரம்பித்தாள். ஆனால், சித்தியின் முகம் கொஞ்சம் கூட இளகாமல் இருப்பதைக் கண்டவளிற்கு தெரிந்து போனது, இதற்கும் அவளின் சித்தி ஏதோ பெரிதாக தன்னைக் காயப்படுத்தும் அளவிற்கு கூறப்போகிறார் என்று…

 

“இப்போ எந்த இடத்துல பொண்ணுங்களுக்கு சேஃப்டி இருக்கு. மத்தவங்க எல்லாரும் வேலைக்கு போறதில்லையா? உனக்கு வேலை செய்ய பிடிக்கலை. அதுக்கு இத்தன நொண்டி சாக்கு!” என்றவர், “அப்படி ஏதாவது ஆச்சுனாலும், தொல்லை விட்டுச்சுன்னு நிம்மதியா இருக்கலாம்.” என்று முணுமுணுத்தார்.

 

அந்த முணுமுணுப்பு அருகில் நிற்பவளிற்கு கேட்காமலா இருக்கும்… கேட்க வேண்டும் என்றே சொல்லியதாயிற்றே!

 

என்ன மாதிரியான வார்த்தைகள் அவை? அவ்வார்த்தைகளை கேட்ட பின்பும் அங்கு நின்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வர்ஷினிக்கு மனமில்லை.

 

லேசாக இமையை மீறி வெளிவரதுடித்த கண்ணீரை அடக்கியவளாக அவளின் அறைக்குள் சென்றாள். மனம் முழுவதும் வேதனையுடன் அன்றைய இரவை குழப்பத்திலேயே கழித்தவள், காலையில் அவளின் தந்தை ஏதாவது ஆறுதல் கூறுவார் என்று நினைத்திருந்தாள்.

 

ஆம் ஆறுதலே. வர்ஷினிக்கு நன்றாக தெரியும், சித்தியின் பேச்சை அவளின் தந்தையால் மீற இயலாது என்பது. அதற்காகவே ஆறுதலையாவது அவரிடம் எதிர்பார்த்தாள். ஆனால், ஆறுதலுக்கு கூட அந்த வீட்டில் பஞ்சமாகிப் போனது.

 

சில நாட்களாகவே அவளின் தந்தை ஏதோவொரு குழப்பத்தில் உழன்று கொண்டிருப்பதை வர்ஷினி உணர்ந்து தான் இருந்தாள். அதற்காக வீட்டில் நடப்பவற்றைக் கூட கவனிக்க இயலாத அளவிற்கு என்ன குழப்பம் என்று தான் புரியவில்லை.

 

எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திருந்தவள், நடப்பவை நடக்கட்டும் என்று விதியின் கைகளில் தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டாள். இப்படி தான் அவள் விக்ரமிடம் வேலைக்கு சேர்ந்தாள்.

 

*****

 

வர்ஷினியின் தீவிர பாவனையும் முக சுருக்கமும் அவளின் வேதனையை கட்டியம் கூறியது. அதை ஓரக்கண்ணில் கண்டவனிற்கும் அவளின் வேதனை புரியத்தான் செய்தது. அவன் தான் அவளை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தான் அல்லவா.

 

அவளை அதிலிருந்து மீட்கவே, “ஆமா, ஹாஸ்பிடல்லயிருந்த போலீஸ்காரனை உனக்கு எப்படி தெரியும்?” என்றான்.

 

அவனின் கேள்வியில் தன் சோகத்திலிருந்து வெளியே வந்தவள், “அது ஒரு பெரிய கதை…” என்றாள்.

 

“பெருசுனா வேணாம்.’ என்றான் உடனடியாக.

 

‘ஏன்’ என்பது போல இவள் பார்க்க, “நீ தான் அடிக்கடி ஃப்ரீஸ் ஆகிடுறியே. நீ சொல்ற ஸ்பீடுக்கு நாளைக்கு தான் கதையை முடிப்ப.” என்று அவளை கேலி செய்தான்.

 

அவன் கூறியதைக் கேட்டவள் லேசாக உதட்டை சுழித்துவிட்டு, “அகில் அண்ணா என்னை ஒரு பிரச்னையிலயிருந்து காப்பாத்துனாங்க. அப்போ இருந்து பழக்கம்.” என்றுவிட்டு, “இந்த ஷார்ட் ஸ்டோரி ஓகேவா?’ என்றாள் கடுப்பாக.

 

“ஹ்ம்ம், நீ பெரிய ஆளு தான்.” என்றவனை கண்களை சுருக்கி பார்த்தவளின் மனமோ, ‘எப்படியும் கலாய்க்க தான் போறான். எதுக்கு வாயை திறந்து பேசிக்கிட்டு? அவனே சொல்லட்டும்.’ என்றது.

 

“என்னன்னு கேட்க மாட்டியா? சரி நானே சொல்றேன். ஒரு பக்கம் போலீஸ் சப்போர்ட்டு… இன்னொரு பக்கம் ரௌடிஸ் சப்போர்ட்டு…” என்ற கேலியாக.

 

“ஹலோ பாஸ் ஓவரா தான் என்னை கலாய்ச்சுட்டு இருக்கீங்க.” என்றாள் வர்ஷினி.

 

இப்படியே பேசிக்கொண்டே அந்த ஊரின் எல்லையை வந்தடைந்தனர் இருவரும். எல்லையில் பெரிய பலகையில் ‘சோலைப்புதூர்’ (கற்பனை ஊர்) என்றிருந்தது.

 

அதைக் கண்டதும், “இது தான் உங்க ஊரா?” என்றாள் வர்ஷினி.

 

அவனோ இதுவரை இருந்த இலகுபாவம் நீங்கியவனாக, “ம்ம்ம்” என்றான்.

 

‘என்னாச்சு இந்த ரவுடிக்கு? இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தான்.’ என்று நினைத்தவள், எதையும் கேட்டு வைக்காமல் வெளியே அந்த ஊரின் அழகை வேடிக்கை பார்த்தாள்.

 

சூரியன் மறையும் வேளையானதால் வேலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்களை கண்டாள். கிராமத்திற்கே உரிய கலகல பேச்சுடன் அவர்கள் நடந்து செல்வதை கண்டவளிற்கு மனது இதமாக இருந்தது. நகரத்தின் நெருக்கடி இல்லாமல் இருப்பதால் உண்டான மகிழ்ச்சியா என்பது அவளிற்கே தெரியவில்லை.

 

ஆனால், அங்கு அவள் கண்ட விசித்திரமான விஷயம் என்னவென்றால் அனைவரும் இவர்களின் வாகனத்தை பார்த்து மரியாதையுடன் ஒதுங்கி சென்றனர்.

 

‘இவனுக்கு எதுக்கு இவ்ளோ மரியாதை தராங்க? ஒருவேளை இவன் இந்த ஊர்ல பெரிய ஆளா இருப்பானோ?’ என்று எண்ணியவள் அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.

 

அவனையே சிறிது நேரம் ஆராய்ச்சியாக பார்க்க, “எதுக்கு இப்படி புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற? ஒண்ணுக்கும் உதவாத உன் மூளை இப்போ என்ன சொல்லுச்சுன்னு இந்த பார்வை?” என்று அப்போதும் அவளை கேலி செய்தான்.

 

‘எதே ஒண்ணுக்கும் உதவாத மூளையா? இருடா எனக்கும் ஒரு காலம் வரும்!’ என்று கருவினாள் மனதிற்குள். “அது இங்க இருக்க மக்கள் எல்லாரும் மரியாதையா ஒதுங்கி போறாங்களே. அதான் நீங்க அவ்ளோ பெரிய அப்… ஆளான்னு பார்த்தேன்.’ என்றாள், ஒரு ஃப்ளோவில் வந்த ‘அப்பாட்டக்கரை’ சுதாரித்து விழுங்கியவளாக!

 

“ஆஹான், சரி உங்க ஆராய்ச்சியோட முடிவு என்ன?” என்று வினவியதும், “ஹான், ரவுடியை பார்த்தா கூட பயத்துல இப்படி ஒதுங்குவாங்க.” என்றாள் வர்ஷினி. அவன் கேலி செய்ததற்கு பழிக்கு பழியாம்!

 

அதைக் கண்டுகொள்ளாதவன் அந்த பெரிய வீட்டிற்கு முன்னே வாகனத்தை நிறுத்தினான்.

 

அந்த வீட்டை பார்த்தவளிற்கு மனதிற்குள் இனம்புரியாத சந்தோஷம் உருவானது என்னவோ உண்மை தான். கிராமத்திற்கே உரிய வகையில், சுற்றிலும் மரங்கள், செடி கொடிகள் சூழ்ந்திருக்க, பழங்கால பாணியில் கம்பீரமாக எழும்பியிருந்தது அந்த வீடு.

 

அவனோ வாகனத்திலிருந்து இறங்கி, அவள் புறமிருந்த கதவை திறந்து அவளை வெளியே வருமாறு அழைத்தான்.

 

மாலை வேளையானாலும், அந்த வீட்டிற்குள்ளே மனிதர்களின் நடமாட்டம் இருப்பதை உணர்ந்தவள், ‘கடத்தி கூட்டிட்டு வர்றவன் இப்படி பெரிய வீட்டுல, அதுவும் ஆள் நடமாட்டம் இருக்குற வீட்டுக்கா கூட்டிட்டு வருவான்?’ என்று யோசித்தாலும் அவனின் கட்டளைக்கு ஏற்ப, அவளின் கால்கள் அவன் பின்னே சென்றன.

 

அங்கு அவள் முதலில் கண்டது, வீட்டு முற்றத்தில் யாரையோ அதிகாரம் செய்து கொண்டிருந்த வயதான பாட்டியை தான். கண்டாங்கி சேலையும், காதுகளில் பெரிய தொங்கட்டானும், மஞ்சள் பூசிய முகமுமாக இருந்தவரை பார்த்தபோது  அவரின் முகம் பரிச்சயமாக தோன்றியது.

 

இவர்களின் காலடி சத்தத்தில் அவரும் யாரென்று திரும்பி பார்க்க, அவர் முதலில் பார்த்தது அவனைத் தான்.

 

“ஐயா, சந்திரா வந்துட்டியா?” என்று பாசமாக வினவியபடி அருகில் வந்தவர் அப்போது தான் அவனருகே இருந்த வர்ஷினியை கண்டார்.

 

அவளை கண்டது முதல் அவரின் முகம் காட்டிய மாயாஜாலத்தை ஒருவித பரவசத்துடனே கண்டாள் வர்ஷினி.

 

ஆச்சரியம், மகிழ்ச்சி, உவகை, சோகம், அழுகை என்று அவரிடம் மாறி மாறி வந்து போன உணர்வுகளை கண்டவன் மெதுவாக அவரின் தோளில் ஆதரவாக கைவைத்து கொண்டான், அவரால் ‘சந்திரா’ என்றழைக்கப்பட்டவன்.

 

“சந்திரா, இது… இது… நான் பார்க்குறது உண்மையா? கடவுளே, எங்க மேல உன் பார்வை பட்டுடுச்சா?! ஹையோ, இப்போ நான் என்ன செய்வேன்!” என்று பேசியவரை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் வர்ஷினி.

 

“ஷ், பாட்டி நீங்க பார்க்குறது உண்மை தான். அதுக்குன்னு இவ்ளோ பதட்டப்படாதீங்க. உங்களுக்கு ஒத்துக்காது.” என்றான் அவன்.

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுய்யா. இந்த சந்தோஷமான நேரத்துல எனக்கு என்ன ஆகப்போகுது? டேய் பரமா எல்லாரையும் வரச்சொல்லுடா.” என்றவரின் குரலே அவர் இட்ட பணியை செவ்வனே செய்ய, அந்த வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்தனர்.

 

முதலில் ஏதோ உணர்வின் பிடியில் சிக்கிக்கொண்டவள், அதன்பின்பு பாட்டி செய்த குட்டி கலாட்டாவில் சுயத்திற்கு வந்தாள்.

 

‘இவங்க எதுக்கு என்னை பார்த்து இப்படி எக்ஸைட் ஆகுறாங்க?’ என்று நினைத்தவள், அங்கு வந்த ஒவ்வொருவரின் முகமும் அதையே பிரதிபலிக்க, குழம்பித்தான் போனாள்.

 

அவனிடம் வினவலாம் என்றால், அவனோ பாட்டியை கவனித்துக் கொண்டதில் இவளை கவனிக்கவில்லை.

 

‘ஐயோ, இங்க என்ன நடக்குதுன்னு யாராவது எனக்கு சொல்லுங்களேன்.’ என்று மனதிற்குள் புலம்பியது கடவுளிற்கு கேட்டதோ, அவளின் குழப்பத்தை போக்குவதற்கான ஆளை அவளின் முன்பு நிறுத்தினார்.

 

ஆனால், அவரை பார்த்ததும் குழப்பம் நீங்குவதற்கு பதிலாக இன்னும் குழம்பித்தான் போனாள் வர்ஷினி.

 

அப்படி அவள் கண்டது யாரோ?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்