Loading

அத்தியாயம்- 2

 

          பேருந்திலிருந்த மாணவர்கள் பேராசியர்கள் என்று அனைவரது பார்வையும் பின்னே தான் இருந்தன. அவன் நண்பனின் கழுத்தை வளைத்துப் பிடித்துத் தலையில் கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தான். கொட்டு வாங்கியவனும் சிரித்துக் கொண்டிருந்தான். அனைவரும் பார்க்கிறார்கள் என்று அவர்கள் விலகவில்லை. எங்களின் இயல்பு இதுதானென்று தங்களது விளையாட்டைத் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். அவனது நண்பர்கள் சிலர்,

 

          “மச்சான் போதும் விட்றா. மண்டைல கொண்டை மொளச்சுற போகுது.” என்கவும் அவன் அவனை விடுவிக்க, அவன் நண்பன் சிரிக்க, அவனும் சிரித்து அவன் முதுகில் செல்லமாக அடித்தான். பின் அவர்கள் மீண்டும் தங்களுக்குள்ளான கேலிப் பேச்சுகளில் இறங்கிட, வேடிக்கைப் பார்த்த அனைவரும் உதட்டில் உறைந்தப் புன்னகையோடு திரும்பி அமர்ந்தனர்.

 

          அனைவரும் திரும்பியதால் நம் ஐவர் குழுவும் திரும்ப வேண்டியதாகிட, தமிழ் மட்டும் மீண்டும் ஒருமுறை திரும்பி அவனைப் பார்த்து மென்முறுவல் பூத்த வண்ணம் திரும்பினாள். நிலா புன்னகை முகமாகவே இருக்க, முகில், துளசி, தென்றல் மூவரும் கண்களால் பேசிக் கொண்டு அவளையே பார்த்திருந்தனர். தமிழும் நிலாவின் புன்னகை எதற்கென்று புரியாமல் அவளைப் பார்த்தாள். தோழிகள் பார்ப்பதைப் பார்த்த நிலா,

 

        “அவன் மதுரன். என் ஃப்ரெண்டு.” என்றபோதும் அவள் உதட்டினில் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.

 

        அதைக் கேட்ட மற்றவர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியாது தமிழுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது ஏனென்று ஆராயும் மனநிலையில் அவளில்லை. அவளது மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் உற்சாகமாய் குதித்தாலும் வெளியே இயல்பாக முகத்தை வைக்க பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியும் கண்டாள்.

 

        “ஓஓஓ. உன் க்ளாஸா நிலா?” என்று கேட்டது துளசி.

 

         “இல்லை. அவன் என் ஸ்கூல் ப்ரண்டு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஒரே க்ரூப், ஒரே க்ளாஸ்.”, நிலா.

 

          “சூப்பர். இப்போ ஒரே காலேஜ் அப்போ ஒரே டிபார்ட்மெண்ட்டா தான் இருப்பீங்க.” , தென்றல்.

 

          நிலா மறுத்துத் தலையாட்ட, “அப்ப மதுரன் வேற டிபார்ட்மெண்ட்டா?” என்று கேட்டாள் முகில்.

 

           “ஆமா. மெக்கானிக்கல்.” என்றதும் தமிழ் மட்டுமல்ல முகில், தென்றல், துளசி என்று அனைவருமே புன்னகைத்தனர்.

 

         “அப்ப கெத்து தான்.” என்று தென்றல் சிரிக்க, நிலாவும் வேகமாக ஆமென்று தலையாட்டிச் சிரிக்க, அச்சிரிப்பு மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

 

          அதற்கு மேல் யாரும் மதுரன் பற்றி வினவவில்லை. அனைவருள்ளுமே அவனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள ஆர்வம் மேலெழுந்தாலும் நிலா தவறாக எண்ணக் கூடுமென்று விழிகளை ஜன்னல் வழியே சாலையோரம் பதித்தனர்.

 

          தமிழ்செல்விக்கு இப்பொழுது காய்ச்சலால் வந்த களைப்பெல்லாம் காணாமல் போயிருந்தது. உறக்கம் போய் உற்சாகம் பிறந்திருந்தது. நிலாவை திரும்பிப் பார்ப்பதுப் போல் கருவிழியைச் சுழற்றி மதுரனை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி அமர்ந்துப் புன்னகைத்துக் கொண்டாள்.

 

           ஒன்றரை மணி நேர பயணம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாமோ என்றே தோன்றியது தமிழ்செல்விக்கு. பேருந்து கல்லூரிக்குள் நுழைய, அனைவரும் பையை மாட்டிக் கொண்டு இருக்கை விட்டு எழுந்தனர். தமிழ் கம்பியைப் பிடிப்பது போல் பின்னால் பார்க்க, மதுரன் படிகளில் இறங்குவதற்கு தயாராய் நின்றிருந்தான். வீசியக் காற்று அவனது கேசத்தைக் கலைத்து விளையாடிச் செல்ல, தமிழ் விழியசைக்காமல் அவனைப் பார்த்தாள். 

           

      பேருந்து வேகம் குறைந்து ஊர்ந்துச் செல்ல அவன் கால்கள் தரையைத் தொட்டு இரண்டு எட்டுக்கள் ஓடி நின்றன. அவன் நண்பரகளும் ரன்னிங்கிலேயே இறங்கிடவும் அனைவரும் கேண்ட்டின் நோக்கிச் சென்றனர். பெருமூச்சு விட்டு திரும்பிய தமிழின் விழிகளும் அதிர்ச்சியில் அகல விரிந்தன.

      

      முகில், தென்றல், துளசி மூவருமே செல்லும் மதுரனையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

       “ஹே பை டி. ஈவ்னிங் பார்க்கலாம்.” என்று அவசரமாக இறங்கிய நிலாவை கூட மூவரும் கவனித்ததுப் போல் தெரியவில்லை.

 

        “பை நிலா. மூனு பேரும் இங்கயில்லை. நா சொல்லிக்கிறேன். நீ கிளம்பு.”, தமிழ்.

 

           மதுரன் கண்விட்டு மறைந்ததும் மூவரும் திரும்ப, 

 

          “இறங்குற மாறி ஐடியா இல்லையா மூனு பேருக்கும். பின்னாடி வர்றவங்களுக்கு வழிவிட்டு நின்னுக்கிட்டேயிருக்கீங்க.” என்று கீழே நின்றபடி தமிழ் கேட்க, மூவரும் திருதிருவென்று விழித்தனர்.

 

          மூவருமே ஒருவரையொருவர் கேள்வியாகப் பார்த்துக் கொண்டு இறங்கி வந்தனர். 

 

           “வாங்க போலாம்.” என்று தமிழ் முன்னே நடக்க, மூவரும் பின்னே நடந்தனர். 

 

            “இவளுக ஏன் அவன அப்டி பார்த்தாளுக? அது சரி அவளுக பார்த்தா உனக்கென்ன? ஏன் நீயும் தான் பார்த்த. ஆமால்ல. பார்க்கலாம் பார்க்கலாம் தப்பில்ல. ஆமா நான் ஏன் அவன பார்த்தேன்? அட ச்ச இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியம். அட அட அவன் அழகென்ன பஸ்ஸ விட்டு இறங்குன ஸ்டைல் என்ன. சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போல.” என்று தனக்குள்ளே உரையாடிக் கொண்ட தமிழின் இதழ்களில் அனிச்சையாய் புன்னகை விரிந்தது. அப்புன்னகையோடே தன்னோடு வந்த மூவரையும் பார்க்க, அவர்கள் இதழ்களிலும் புன்னகைக் கசிவதைக் கண்டு இம்முறை அவள் அதிராமல் மேலும் புன்னகைத்துக் கொண்டாள்.

 

       கேண்ட்டினை கடந்து தான் அவர்களது வகுப்புகள் இருக்கும் கட்டிடத்திற்குச் செல்ல வேண்டும். கேண்ட்டினை நெருங்குகையிலேயே நால்வரது விழிகளும் அலைப் பாய்ந்தன. வடையை பிய்த்து சாம்பாரில் தொய்த்து வாயிலிட்டுக் கொண்டே எதிரே அமர்ந்திருந்த நண்பனோடுப் பேசிக் கொண்டிருந்த மதுரனை ஒரு ஜன்னலோரம் கண்ட தமிழின் இதழ்களில் மீண்டும் புன்னகை. மனதினில் மழைச் சாரல் அடித்து ஓய்ந்தது. மற்ற மூவரும் அவனைத் தேடி கிடைக்காமல் அதற்கும் புன்னகைத்துக் கொண்டனர். 

 

      பின் நால்வரும் அவரவர் வகுப்புகளுக்குச் செல்ல பிரிந்தனர். முகிலும் துளசியும் ஒரே வகுப்பு என்பதனால் ஒன்றாகவேச் சென்றனர். தமிழ் வகுப்பிற்குள் நுழைய, ஒரு வாரம் வராததால் அவளை பாதி பேர் மறந்திருந்தனர். அவள் அதிகம் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்ததனாலும் அவளை பாதி பேர் யாரென்றே அறிந்திருக்கவில்லை. அவள் பென்ஞ்சில் அமர்ந்திருக்கும் கிறிஸ்டி, இசையரசி இருவரில் கிறிஸ்டி அவள் பென்ஞ்சில் அமர்ந்ததும்,

 

      “ஏன் தமிழ்செல்வி ஒரு வாரம் வரல. சவிதா மேம் உன்னை பத்தி கேட்டாங்க ஏன் லீவ்னு. நீ எங்கக்கிட்ட நம்பரும் குடுக்கல. எங்களுக்கு தெரியாதுனு சொல்லிட்டோம். நீ இன்பார்ம் பண்ணலயா மேம்க்கு?” என்று கேட்டாள்.

 

         “வைரல் பீவர் பா அதான் வரல. என்கிட்ட சவிதா மேம் நம்பரில்ல அதான் இன்பார்ம் பண்ணல.” என்ற தமிழுக்கு இதயம் வேகமாக துடித்தது.

 

         “சரி விடு இப்போ உடம்பு பரவால்லயா. நீ சொல்லு மேம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”, கிறிஸ்டி.

 

         “லீவ் ஃபார்ம் ஃபில் பண்ணி கொண்டு வந்தியா? அத குடுத்தா திட்ட மாட்டாங்க.”, கேட்டது இசையரசி.

 

          “இல்ல. இனிமே தான் வாங்கி ஃபில் பண்ணனும்.” 

 

           “சரி இப்போ போய் வாங்கிட்டு வந்து ஃபில் பண்ணிரு. ப்ரேக்ல மேம பார்த்து குடுத்துக்கலாம்.”, இசையரசி.

 

       தமிழ்செல்வி சரியென்று தலையாட்டிவிட்டு அமர்ந்தேயிருக்க, 

 

        “வா நான் உன்கூட வரேன். ஸ்டோர்ல போய் பார்ம் வாங்கிட்டு வந்துரலாம்.”, என்று கிறிஸ்டி எழுந்து அவளது கைப்பற்ற, எப்படி தனியாய் போவது என்று யோசித்துக் கொண்டிருந்த தமிழ் அவளது கையைப் பற்றிக் கொண்டு நடந்தாள். கிறிஸ்டி இவ்வொரு செய்கையில் தமிழின் மனதினில் இடம் பிடித்து தமிழுக்கு வகுப்பில் முதல் தோழியாய் மாறிப் போனாள்‌.

 

          அவர்களது கல்லூரியில் ஸ்டேஷனரி ஸ்டோர் இருந்தது. அங்கு பென்சிலிலிருந்து டிராப்டர் வரை அனைத்தும் கிடைக்கும். அங்கு தான் லீவ் ஃபார்மும் வாங்க வேண்டும். வகுப்புத் தொடங்க பத்து நிமிடங்களே இருந்ததால், வகுப்பிருந்தக் கட்டிடத்திலிருந்துப் பக்கத்துக் கட்டிடத்திற்கு இருவரும் விறுவிறுவென்று சென்று லீவ் பார்ம் வாங்கிக் கொண்டு முதல் மாடியிலிருந்த தங்கள் வகுப்பிற்கு வந்துச் சேரவும் முதல் வகுப்பிற்கான மணி ஒலிக்கவும் சரியாகயிருந்தது. வியர்க்க விறுவிறுக்க வந்தமர்ந்தனர் இருவரும். 

 

      “வாங்கிட்டீங்களா?” என்று இசையரசி கேட்க, தமிழ் பார்மை காட்டி புன்னகைக்க, அவளும் புன்னகைத்து 

 

       “சரி சார் வர்றாரு.” என்று இசை எழுந்து நிற்க, முதல் வகுப்பிற்கான ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களும் வேகமாக எழுந்தனர். ஒரு வாரம் வராததால் வகுப்பைத் தொடர்வதற்கு தமிழுக்கு சற்று சிரமமாகவேயிருந்தது. கல்லூரி திறந்து இரண்டு வாரங்களே ஆனதால் தான் வராத நாட்களில் அதிகமாக பாடம் நடித்திடவில்லை என்பதே அவளுக்குச் சற்று ஆறுதலளித்தது‌. 

 

       அதன்பின் பாடங்கள் அவளை உள்ளிழுத்துக் கொண்டன. தேநீர் இடைவேளையின் போது தமிழும் கிறிஸ்டியும் சென்று சவிதா மேமிடம் விடுப்பு விண்ணப்பத்தைக் கொடுக்க, இனி விடுமுறை எடுத்தால் அவருக்கு தெரிவிக்க வேண்டுமென்று கண்டித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ள, தமிழுக்கு அப்பொழுதுதான் அப்பாடா என்றிருந்தது. 

       

         உணவு இடைவேளையின் போது கிறிஸ்டி விடுதியில் தங்கிப் படிப்பதால் அவள் விடுதிக்குச் சென்றுவிட, தமிழ்செல்வி, இசையரசி இருவரும் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கீழே வந்து வராண்டாவில் சாப்பிட அமர்ந்தனர். 

 

         “தமிழ் டெய்லி அவ்ளோ தூரத்துலேர்ந்து வந்துட்டு போறது உனக்கு கஷ்டமாயில்லயா?”, இசை.

 

         “வந்த ஒருவாரம் கஷ்டமா தான் இருந்துச்சு. லாங் ட்ராவல் ஒத்துக்காம தான் பீவர் வந்ததே. கஷ்டமாயிருந்தாலும் இனி பழகிக்கத் தானே வேணும்.”, தமிழ்.

 

          “பேசாம நீ ஹாஸ்டல்ல சேர்ந்தர்லாம்ல.”

 

           “ஹாஸ்டலா ம்ஹூம். நானே என்னை சமாதானம் பண்ணிக்கிட்டு ஹாஸ்டல் போறேன்னு சொன்னாலும் வீட்ல விட மாட்டாங்க. விட்றதாயிருந்தா அட்மிஷன் போடும்போதே ஹாஸ்டல் பீஸ் கட்டிருப்பாங்களே. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எங்க மூஞ்சிய பார்க்கலனா தூக்கம் வராது. கோடை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டு வந்தாலே நீங்க ரெண்டு பேருமில்லாம வீடே நல்லாலமானு சொல்லுவாங்க. என்னாலயும் அவங்கள விட்டு இருக்க முடியாது.” என்ற தமிழை பார்த்து இசை சிரித்தாள்.

           

         “நான் என்ன ஜோக்கா சொன்னேன் சிரிக்கிற.” என்று தமிழ் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கேட்டாள்.

         

          “இல்லை உனக்கு கல்யாணம் நடந்தப்பறமும் இப்பிடி தான் இருப்பியா?.” என்று இசை கேட்க, திருதிருவென்று விழித்த தமிழ்,

          

          “அது….. அது…. அப்ப பார்த்துக்கலாம். இப்ப நீ சாப்பிடு.” என்று தமிழ் குனிந்து உணவை அள்ளி வாயில் போட்டாள். 

 

        இசையோ உணவை மென்றுக் கொண்டே சிரிக்க, நிமிர்ந்து அவளை முறைத்த தமிழும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே திரும்பியவளின் விழிகளில் கேண்டினிலிருந்து நண்பர்கள் குழாமோடு வெளிவந்த மதுரன் விழ, அவள் விழிகளில் ஆயிரம் மின்னல் வெட்டுக்கள். அவ்வப்போது தலையைக் கோதியபடி பின்னால் திரும்பி தன் நண்பர்களோடு சிரித்துப் பேசியபடிச் சென்ற மதுரனை இரசனையேறிய விழிகளால் நினைவடுக்குகளில் சேமித்துக் கொண்டிருந்தாள் தமிழ். 

 

         “தமிழ் உங்க அம்மா சமையல் சூப்பர்.” என்று அவளது டிபன் பாக்ஸிலிருந்து சிறிது உணவை எடுத்து உண்ட இசையின் குரலில் தன்னுணர்வு அடைந்த தமிழ் சட்டென்று விழியை இசையை நோக்கித் திருப்பிப் புன்னகைத்தாள்.

 

         “உங்க அம்மா சமையலும் சூப்பர்.” என்று அவளது பிரியாணியை கை நிறைய அள்ளி வாயில் தள்ளியபடி கூறிய தமிழை இசை அழுது விடுவது போல் பார்க்க, தமிழ் பிரியாணியை ருசித்துக் கொண்டே,

 

         “ஆஹா. சூப்பர். இசை இனிமே பிரியாணி கொண்டு வந்தா அதிகமா கொண்டு வா. கொஞ்சமா கொண்டு வந்தா பத்த மாட்டேங்குது பாரு.” என்றிட, பாதி காலியாகியிருந்த டிபன் பாக்ஸை கண்ட இசை அழுகவும் முடியாது முறைக்கவும் முடியாது அவளை இரண்டும் கலந்து ஒரு பார்வைப் பார்க்க, தமிழ் சிரிக்க, இசை 

 

          “போடி இனிமே பிரியாணி கொண்டு வந்தா உன்கூட உக்காந்து சாப்பிட மாட்டேன்.” என்று சிணுங்கினாள்.

 

        தமிழ் சிரிக்க, இசையும் சிரித்து விட்டாள்.

 

         “எங்கம்மா பிரியாணி செய்றதே அதிசயம் தமிழ். அப்பிடியே செஞ்சாலும் அளவாதான் சாப்புடணும்னு அளவா தான் குடுப்பாங்க. நீ இப்பிடி சாப்பிட்டா நான் எப்படி சாப்பிட்றது. இனி கொஞ்சம் கருணை காட்டு தாயே.” 

 

        “ஓஓஓ. ம்ப்ச் பாவம் தான் நீயி. இருந்தாலும் நீ சொன்னத ட்ரை பண்ண பார்க்குறேன்.” என்று தமிழ் குறும்பாய் சிரிக்க, இசை அழுது விடுவது போலானாள்.

 

         “சரி இருக்கறதயாவது சாப்பிடு. இல்லனா அதையும் நா சாப்பிட்ருவேன்.” என்று தமிழ் கூறியதும் டிபன் பாக்ஸை இழுத்துத் திரும்பிக் கொண்டு வேகமாக பிரியாணியை வாயில் அள்ளி போட்ட இசையை பார்த்து தமிழுக்கு அப்படி ஒரு சிரிப்பு. இசை பிரியாணியே கருத்தென்று இதையாவது விட்டாளே என்று விழுங்கி முடித்தாள். பின் இருவரும் மீண்டும் வகுப்பிற்குச் சென்றனர்.

 

         ரேங்கிங்கை தடுப்பதற்காக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரி நேரம் வேறு வேறாக வைத்திருந்தனர் நிர்வாகத்தினர். காலையில் மூத்த மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியப் பிறகு கவ்லூரிக்குள் நுழையும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாலை மூத்த மாணவர்கள் வகுப்புகள் முடித்து கிளம்பிய பின்னே தான் வகுப்புகள் முடியும். அதிலும் தமிழுக்கு 5 மணிக்கு முடிந்தால் நிலாவிற்கு 4.45 க்கே முடிந்துவிடும். தமிழ் வகுப்பு முடிந்து அவள் வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏற, முதலிலேயே வந்திருந்த நிலா மற்ற தோழிகள் நால்வருக்கும் சேர்த்து இடம் பிடித்து வைத்திருந்தாள். 

 

       “ஹே தமிழ் இங்க வா. முன்னாடி போகாத ஸ்டாப்ஸ் வந்தா எழுப்பி விட்ருவாங்க. அதான் நடுவுல சீட் பிடிச்சுருக்கேன்.” என்கவும் புன்னகைத்த வண்ணம் சென்று தமிழ் அவளருகில் அமர்ந்தாள்.

 

        “அப்புறம் தமிழ் க்ளாஸ் எப்பிடி போச்சு.”

 

       “ம்ம் நல்லா போச்சு. என்ன ஒரு வாரம் வராததுனால நிறைய நோட்ஸ் எழுதணும். நல்லவேளை சொல்லாம லீவ் போட்டதுக்கு திட்டுவாங்களோனு நினைச்சேன். இனிமே லீவ் போட்டா இன்பார்ம் பண்ணும்னு கண்டிச்சு விட்டுட்டாங்க.”

 

       “அட என்ன தமிழ் நீ. நீ இன்னும் ஸ்கூல விட்டு வெளில வரலயா. லீவ் போட்டதுக்குலாம் பயப்புட்ற. காலேஜ் வந்துட்ட ஞாபகம் வச்சுக்கோ. இங்க தான் நல்ல மெமரீஸ சேர்க்க முடியும். கட் அடிக்குறதுல இருக்குற த்ரில்ல இப்பிடி பயந்தா எப்படி அனுபவிப்ப?” என்ற நிலாவை வாய் பிளந்து பார்த்தாள் தமிழ்.

 

       ஏனெனில் அவள் வளர்ந்த விதம் அப்படி. அப்பா, அம்மா சொல் மீறியதில்லை. அதனால் தானே இன்ஞ்சினியரிங் பிடிக்காவிட்டாலும் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொன்று பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டுமென்று சொல்லி வளர்க்கப்பட்டவள். அவளுக்கு நிலாவின் பேச்சு பயங்கலந்த ஆச்சர்யமே அளித்தது. 

 

       “என்னது கட்டா. நா மாட்டேன் பா. அப்பாவ கூட்டிட்டு வர சொன்னா. அப்பா வெளுத்துருவாரு.” என்றவளை பார்த்து சிரித்த நிலா,

 

       “இவ்வளோ பயம் ஆகாது தமிழ். கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ. சரி அது உன் இஷ்டம். நீ கட்டெல்லாம் அடிக்க வேணாம்.” என்கவும் தான் தமிழுக்கு மூச்சு சீரானது.

 

        முகிலும் துளசியும் வரவும் அவர்களது பேச்சு தடைப்பட்டது. பின் தென்றலும் வந்துவிட, அன்றைய நாளின் வகுப்பறை அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டனர். இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு பின்னால் ஆண்கள் அமரத் துவங்க, இடம் இல்லாமல் நின்ற பெண்களிடமிருந்து பைகளை வாங்கி வைத்துக் கொண்டனர். ஒன்றரை மணி நேரம் அவர்களால் சுமக்கவியலாது என்பது ஒருபுறம் பொதுநலன் போல் தோன்றினாலும் அதில் சுயநலமும் கலந்திருந்தது. 

 

         முன்னிருக்கைகள் நிறைந்து விட்டால் ஆசிரியையகள் நடுவில் வந்து எழுப்பி விட்டு அமர்வர். பைகள் நிறைய வைத்திருந்தால் எழுப்பி வட யோசிப்பார்கள். தங்களை எழுப்பி விட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தானாக முன்வந்து நிற்போரிடம் பைகளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டனர் தோழிகள் ஐவரும்.

         

      அனைவரும் ஏறியதும் பேருந்து கிளம்ப, பின்னே மதுரன் யாரையோ கிண்டல் செய்யும் ஒலிக் கேட்டது. மடியில் பைகள் வைத்திருந்ததால் சட்டென்று திரும்ப முடியாமல் ஐவரும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தனர்.

 

        “அது என்ன மரம்? மஞ்ச கலர்ல ஒரு பூ பூத்துருக்கு.” என்று நிலா கேட்க, பேருந்து அந்த மரத்தைக் கடப்பதற்குள் திரும்பி பார்த்த தமிழ் சிறு புன்னகையோடு,

 

         “அது பூவரச மரம் நிலா.” என்றாள்.

 

         “இதுதான் பூவரச மரமா. நா கேள்விப்பட்ருக்கேன். இலைகூட பார்த்துருக்கேன். ஆனா மரமா பார்க்கும்போது அதுதான்னு அடையாளம் கண்டுபுடிக்க முடியல. பொறந்ததுலேர்ந்து டவுனுக்குள்ளயே இருக்கனா அதான் தெரில. நீ எப்படி கண்டுபிடிச்ச?” 

 

        “அது ஒன்னும் கஷ்டமில்ல நிலா. நான் அடிக்கடி பார்க்குறேன்ல. எங்க வீட்ல அந்த மரம் நாலஞ்சு இருக்கு. நீயும் டெய்லி வரும்போது மரத்தை கவனிச்சனா இது இந்த மரம்னு கண்டுபுடிக்கலாம்.”

 

      “ஓஓ பார்த்துக்கிட்டேயிருந்தா கண்டுபுடிக்கலாமா?! அப்ப அது என்ன மரம்?” என்ற போது கட்டடிப்பது பற்றி பேசிய நிலாவாக தமிழுக்கு தெரியவில்லை. சிறுபிள்ளை போலவே தெரிந்த நிலாவை கண்டு மென்முறுவலித்த தமிழ், வழியில் நிலா அவளை ஈர்த்த மரங்களைச் சுட்டிக் காட்டிக் கேட்டுக் கொண்டு வர, அவளுக்கு அது என்னென்ன மரம் என்று கூறி கொண்டு வந்தாள். தென்றல் உறங்கிவிட, துளசியும் முகிலும் வகுப்பறை நண்பர்களை பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் பேசிக் கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் ஐவருமே உறங்கிவிட்டனர்.

 

         ஒரு நிறுத்தத்தில் இறங்கும் பெண் பையை வாங்குவதற்காக தமிழை எழுப்பியப் போதுதான் அனைவரும் உறக்கம் கலைந்து எழுந்தனர். இன்னும் இரு நிறுத்தங்களில் தென்றலும் துளசியும் இறங்க வேண்டியிருந்ததால் அவர்கள் தங்கள் பைகளை தேடியெடுத்துத் தயாராயினர். இரண்டு நிறுத்தங்களில் அவர்கள் இருவரும் இறங்கி விட, பேருந்து மார்க்கெட்டில் இருந்த ட்ராபிக் ஜாமில் ஊறிக் கொண்டு அரைமணி நேரத்தில் சத்திரத்தை அடைந்தது. முன்னே முகில் நின்றுக் கொண்டிருந்ததாலும் பின்னே நிலா அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாலும் தமிழ் பின்னே திரும்பிப் பார்க்காமல் இறங்கி நிலாவிற்கு கையசைக்கும் போது கடைசி இருக்கையின் ஜன்னலோரம் தெரிந்த மதுரனின் முகத்தைக் கண்டவுடன் அவளது மனம் துள்ளியது. அவளை அழைத்துச் செல்ல அவளது தந்தைக் காத்திருந்ததால் இதழைத் தாண்டி வெளிவர துடித்தப் புன்னகையை உள்ளுக்குள்ளேயே அடைத்து வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

 

     “நீ பஸ்ல போயிருவியா மா?” என்று குமாரவேலன் முகிலிடம் வினவ,

 

      “ஆமா ப்பா. பக்கம் தானே.” என்ற முகில் தமிழுக்கு கையசைத்துவிட்டு புறப்படயிருந்த பேருந்தை நோக்கி வேகமாகச் சென்றாள். வண்டியில் செல்கையில் தமிழின் இதழ்களில் புன்னகைத் துளிர்த்த வண்ணமிருந்தது.

 

“சில்லென்று சிதறிய

சாரலாய் உன் சிரிப்பு!

இதழ்விரித்துக் கொண்டேயிருக்கின்றன

என் புன்னகை பூக்களை!”

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்