Loading

நிறம் 6

 

விக்ரமின் மகள்  மருத்துவமனையில் இல்லை என்ற செய்தி வேகமாக பரவ, அதை எப்படி சமாளிப்பது என்று தீவிர ஆலோசனையில் இருந்தனர் காவலர்கள்.

 

“ஷ்யாம், இந்த தகவல் எப்படி பிரெஸுக்கு தெரிஞ்சுது?” என்று குணசேகரன் வினவ, ஏற்கனவே அவரின் மீது கடுப்பில் இருந்த ஷ்யாமோ, “நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இருக்க கருப்பு ஆடு யாரோ தான் இந்த தகவலை லீக் பண்ணியிருக்கணும் சார்.” என்று அவரைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

 

அதில் முகம் கருத்தவர், அதை மறைக்க படாதபாடுபட்டார். பின்னர் தன்னையே சமாளித்தவராக, “இப்போ என்ன பண்ணலாம். எந்த விஷயம் வெளிய தெரியக்கூடாதுன்னு நினைச்சோமோ அது தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு. “ என்று தலையைப் பிடித்துக் கொண்டார். அவருக்கு தானே தெரியும், அவருக்கு மண்டையிடி இரு பக்கத்திலிருந்து என்று!

 

அவரைப் பார்த்து என்ன தோன்றியதோ ஷ்யாமிற்கு, “சார், இன்னும் விக்ரமோட பொண்ணு இங்க தான் இருந்தாங்கிறதுக்கான எந்த ஆதாரமும் பிரெஸ் கிட்ட இல்ல. அப்படி ஏதாவது ஃபோட்டோ கிடைச்சுருந்தா, இந்நேரம் அதை போட்டு இன்னும் வைரல் ஆக்கியிருப்பாங்க. சோ விக்ரமோட பொண்ணை நாம அந்த இடத்துல பார்க்கவே இல்லன்னு ஸ்டேட்மெண்ட் கொடுப்போம். இங்க ஷீதலை அட்டெண்ட் பண்ண டாக்டர்ஸ், நர்ஸ் எல்லாரையும் ஷீதல் பத்தின தகவலை ரகசியமாக வச்சுக்க சொல்லுவோம்.” என்றான்.

 

“இது ஒர்க்-அவுட்டாகுமா?” என்று சந்தேகமாக குணசேகர் வினவ, “இப்போதைக்கு டெம்பரவரியா இப்படி சொல்லலாம். பட் ஷீதல் சைட்ல இருந்து வேற யாராவது அவளைத் தேடி வரதுக்குள்ள அவ எங்க போனான்னு விசாரிக்கணும்.” என்றவன், அடுத்தடுத்த திட்டங்களை தீட்டுவதில் ஆயத்தமானான்.

 

“அகில், அந்த ஷீதல் சொன்ன இந்திரஜித்தோட அட்ரெஸ் விசாரிக்க சொன்னேனே, அது எந்த நிலைமைல இருக்குன்னு பாருங்க. இங்க வந்தவன் தான் இந்திரஜித்னு எனக்கு தோணல. ஐ டவுட் இட். ரெண்டு பேரை பத்தியும் தரோவா செக் பண்ணுங்க. எந்த லூப்ஹோல்ஸும் விடக்கூடாது.” என்றான்.

 

பின் குணசேகரிடம், “சார், நீங்களே பிரெஸ் கிட்ட பேசுங்க. நான் போனா, இன்னும் நோண்ட தான் செய்வாங்க.” என்றான்.

 

‘ஹும், இந்த வேகம் தான் இவனை இவ்ளோ சீக்கிரம் இந்த பதவிக்கு கொண்டு வந்துருக்கு.’ என்று குணசேகரன் மனதினுள் சொல்லிக் கொண்டார்.

 

அடுத்த பத்து நிமிடங்களில் குணசேகரன் ஊடகவியலாளர்களின் முன்னே நின்றிருந்தார். ஷ்யாம் கூறியதைப் போலவே விக்ரமின் மகளை சம்பவம் நடந்த இடத்தில் பார்க்கவில்லை என்றும் விக்ரமின் மகள் மருத்துவமனையில் காணாமல் சென்று விட்டார் என்று  செய்தி தவறானது என்றும் கூறினார். அதற்கு பல பத்திரிக்கையாளர்களிடமிருந்து எதிர்கேள்விகள் வந்த வண்ணம் இருக்க, சிலவற்றிற்கு பொறுமையாக பதிலளித்தவர், அவர்கள் மேலும் விஷயத்தைக் கறக்க முற்பட, விசாரணை முடிந்ததும் அதைப் பற்றிய விரிவான செய்திகள் கிடைக்கும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

ஷ்யாமும் எப்படியோ இந்த பிரச்சனையை தற்காலிகமாக தீர்ந்துவிட்டதில் சற்று நிம்மதியாக உணர்ந்தான். ஆனால், தங்களுடன் இருந்து கொண்டு ஊடகத்திற்கு தகவலைக் கடத்திய அந்த கருப்பு ஆடு யார் என்பதை தான் அறிய முயலாமல் விட்டுவிட்டான்.

 

*****

 

‘ஒரு வாய் சாப்பாட்டுக்காக இப்படி கதைய சொல்ல விட்டுட்டுட்டானே!’ என்று மனதில் அவனை திட்டிக்கொண்டே அவளின் ‘சோக’ கதையைக் கூற ஆரம்பித்தாள்.

 

முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, “எங்க வீட்டுல நானும், என் அம்மாவும் மட்டும் தான். வீட்டு வேலையெல்லாம் செஞ்சு என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சது எங்க அம்மா தான். அப்படி எனக்காக கஷ்டப்பட்டவங்களை நான் வேலைக்கு போய் எப்படியெல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சேன் தெரியுமா? ஆனா, அந்த சந்தோஷத்தை கூட எனக்கு கொடுக்க விரும்பல போல அந்த கடவுள்! எங்க அம்மாக்கு கேன்ஸருன்னு தெரிஞ்சப்போ என்னால தாங்கவே முடியல. எப்படியாவது எங்க அம்மாவை காப்பாத்திடனும்னு பணம் சேர்க்க ஆரம்பிச்சப்போ தான்…” என்று சொல்லிக்கொண்டே விழியோரத்தில் அவனைப் பார்க்க, அவனோ அவள் கூறுவதைக் கண்டுகொள்ளாத பாவனையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

‘அடப்பாவி, இப்படி என் சோகத்தையெல்லாம் பிழிஞ்சு கதை சொல்லிட்டு இருக்கேன். இவன் என்னடான்னா கண்டுக்கவே இல்ல.’ என்று கோபமாக நினைத்தவள் அதையே அவனிடமும்  வினவ, “நீ சொன்ன கதை டச்சிங்கா இல்ல. வேறெதாவது சொல்லு.’ என்றான்.

 

“பாஸ், நான் என் வாழ்க்கை கதைய சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடானா டச்சிங்கா இல்லன்னு சொல்றீங்க.” என்று அவள் கூற, அவளை ஒரு பார்வை பார்த்தவன், “இது உன் வாழ்க்கை கதை, இதை நான் நம்பனுமா?” என்று வினவினான்.

 

‘ப்ச், கண்டுபிடிச்சுட்டானா?’ என்று நினைத்தவள் வெளியே இளித்து வைத்தாள்.

 

‘இப்படி ஒருத்தன்கிட்ட வந்து சிக்கியிருக்கேனே!’ என்று நொந்து கொண்டு தன் மூளையை பயன்படுத்தி அடுத்த சோக கதைக்கு தயாரானாள்.

 

அப்போது அவனிற்கு அழைப்பு வர முன்னர் போலவே ஊடலையின் மூலமாக அதை ஏற்றான்.

 

“ம்ம்ம் சொல்லு.”

 

“…”

 

“இல்ல தெரியாது.”

 

“…”

 

“ஓகே” என்று அலைபேசியை துண்டித்தவன், அத்தனை நேரம் கவனத்தை அவனின் பேச்சில் வைத்திருந்த வர்ஷினியை நோக்கினான்.

 

“ஹும், அடுத்தவங்க பேச்சையெல்லாம் ஒட்டுக் கேட்குற பழக்கம் எனக்கில்லை. அப்படியே கேட்டாலும் ‘ம்ம்ம்’ ‘ஓகே’ தவற என்ன இருக்கப்போகுது?” என்று முதல் வரியை சற்று சத்தமாக கூறியவள் இரண்டாம் வரியை முணுமுணுத்தாள்.

 

அவனோ வழக்கம் போல அவளின் பேச்சை கண்டுகொள்ளாமல், தனக்கு வந்திருந்த காணொளியைக் காண ஆரம்பித்தான்.

 

***** கட்சியில் விக்ரம் சிங் சேர்ந்ததற்கான அதிகாரப்பூர்வ செய்தி தான் அது. மேலும் அந்த காணொளி எடுக்கப்பட்டதாக சொன்ன நாள், முந்தைய தினம். அதாவது, விக்ரம் தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை என்ற ஆதாரத்தை உருவாக்கவே அந்த காணொளி இப்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது.

 

“ஆனாலும் உங்க அப்பன் இவ்ளோ கேடியா இருக்கக்கூடாது.” என்று அவன் நக்கலாக கூற, இத்தனை நேரம் அவனுடன் சேர்ந்து அந்த காணொளியைக் கண்டு கொண்டிருந்தவள் அவனின் கூற்றில்  கோபம் கொண்டவளாக, “ப்ச், அந்த ஆளு ஒன்னும் என் அப்பா இல்ல.” என்றாள்.

 

அவனோ அவளை நம்பாத பார்வை பார்க்க, “பாஸ் சொன்னா நம்புங்க. அந்த ஆளுக்கு பொண்ணா இருந்துருந்தா இந்நேரம் நான் ஏன் உங்ககிட்ட என்னை விட்டுட சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்கப்போறேன்.” என்று உதட்டை சுழித்துக் கொண்டாள்.

 

*****

 

அதே நேரம் இந்த காணொளி காவலர்களிடையே பெரும் தலைவலியை உண்டாக்கியது. விக்ரம் எதிர்கட்சியுடன் இணைந்த தகவல் ஆளுங்கட்சிக்கு சிறிது பீதியைக் கொடுத்ததாலோ என்னவோ, ஒருபுறம் அவர்களும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க, மறுபுறம் நடக்கும் நிகழ்வுகளுக்கு விளக்கம் கேட்டு அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிடும் ஊடகவியலாளர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

 

“ச்சே, நம்ம வேலையை செய்யுறதுக்கு கூட ஆயிரம் விளக்கம் கொடுக்க வேண்டியதா இருக்கு. என்ன வேலையோ?” என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர் காவலர்கள். அதே நிலையில் தான் தன் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தான் அகில்.

 

“என் புஜ்ஜிமால… மாமாக்கு இங்க வேலை இருக்கு டா. அடுத்த வாரம் கண்டிப்பா ஊருக்கு வரேன்.”

 

“…”

 

“அப்படியெல்லாம் ஏமாத்துவேனா?”

 

“…”

 

“அது… போன மாசம் ரொம்ப வேலையா இருந்துச்சுன்னு வரமுடியலை. அதுக்காக இப்பவும் உன்னை ஏமாத்துவேன்னு நினைக்குறதா? மாமா கண்டிப்பா வருவேன் டா  புஜ்ஜி.” என்று மென்குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

அப்போது தான் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வந்த ஷ்யாமின் கண்களிலும் இந்த காட்சி பட, கண்களை மூடி இருபுறமும் தலையை ஆட்டிக்கொண்டான்.

 

அவனைக் கண்டதும் அகிலும் அலைபேசியை அணைத்துவிட்டு அவனருகே வந்து, “சார், என்னாச்சு?” என்றான்.

 

அங்கிருந்த மற்ற காவலர்களும் ஷ்யாம் என்ன சொல்லப்போகிறான் என்று கவனிக்க, அவனோ ஒரு பெருமூச்சுடன், “இன்னும் ஒரு வாரத்துல அந்த விக்ரம் சிங்கை கைது பண்ணனுமாம்.” என்றான்.

 

நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் இந்த வேலையை தன்னிடம் ஒப்படைத்தவர்களை மனதில் வஞ்சகம் இல்லாமல் திட்டித் தீர்த்தான் ஷ்யாம்.

 

அப்போது அகிலோ, “சார், மும்பை போலீஸுக்கே ஆட்டம் காட்டிட்டு இருக்குறவனை எப்படி நம்ம அர்ரெஸ்ட் பண்ண முடியும்?” என்று வினவ, “அதென்ன மும்பை போலீஸுக்கே? அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரைனிங்கா கொடுக்குறாங்க?” என்று சிடுசிடுத்தான் ஷ்யாம்.

 

‘ஐயோ! இந்த கஞ்சிசட்டை கிட்ட வாய கொடுத்துட்டோமே!’ என்று சற்று தாமதமாகவே உணர்ந்தான் அகில்.

 

“அது… அப்படி சொல்ல வரல சார். மும்பைல அவன் மேல நிறைய கேஸ் இருக்கு. அவங்களே அவனை அர்ரெஸ்ட் பண்ண முடியாதப்போ, நம்ம எந்த கேஸ்ல அவனை அர்ரெஸ்ட் பண்றது?” என்று தான் கேட்க நினைத்ததை ஒரு வழியாக கேட்டுவிட்டான்.

 

ஷ்யாமோ ஒரு பெருமூச்சுடன், “அதுக்கு தான் அவன் சொந்த ஊருக்கு போய் அவனைப் பத்தி விசாரிக்க சொல்றாங்க.” என்றவன், “இருக்குற கேஸ் வச்சு பிடிக்க முடியலையாம். இதுல புதுசா ஒரு கேஸ் உருவாக்க போறாங்களாம். ரிடிக்குலஸ்!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு முணுமுணுத்தான்.

 

அகிலோ ஷ்யாம் கூறியதைக் கேட்டதும் கண்கள் மின்ன நின்றிருந்தான். ஆனால், அனைத்தும் ஒரு நொடி தான். மற்றவர்களுக்கு தெரியாமல் தன் பாவனையை மாற்றிக் கொண்டான். ஆனால், ஷ்யாமின் கண்களுக்கு அது தப்பவில்லை.

 

அகிலைக் கண்ட ஷ்யாம் எதையோ சிந்தித்தவன் பின் அகிலிடம், “அகில், நீங்களும் நானும் தான் விக்ரமோட சொந்த ஊருக்கு போகப்போறம். சோ ரெடியாகிக்கோங்க.” என்றான்.

 

‘ஐயோ கண்டுபிடிச்சுருப்பானோ!’ என்று உள்ளுக்குள் பயமிருந்தாலும், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

 

*****

 

“அட போங்க பாஸ். இதுவரைக்கும் அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், அக்கா சென்டிமென்ட், அண்ணா சென்டிமென்ட், தம்பி சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட்னு ஆறு கதையை சொல்லிட்டேன். இனி கதை சொல்லனும்னா, மாமா பையன், ஒண்ணு விட்ட சித்தப்பா பையனை தான் இழுக்கணும்.” என்று சலித்துக் கொண்டாள் வர்ஷினி.

 

“ஆஹான், இவ்ளோ யோசிச்சு கதை சொல்றதுக்கு உன் சொந்த கதையவே சொல்லலாமே.” என்றான் அவன்.

 

ஒரு நொடி அவளின் முகம் இருள, அடித்த நொடி அதனை மறைத்துக் கொண்டு, “ஹலோ பாஸ், நீங்க கேட்டது அழுகாச்சி ஸ்டோரி. என் சொந்த கதைல அதுக்கு எங்க போறது?” என்று கிண்டலாக கூறுவது போல அதை தவிர்க்க முயன்றாள்.

 

அவளின் மனமோ, ‘கண்ணீர் எல்லாம் எப்போவோ வத்திப்போச்சு.’ என்று கூக்குரலிட்டது.

 

“அப்படியா என்ன? அப்போ வாழ்க்கைல ஒரே எஞ்ஜாய்மெண்ட் தான் போல. பின்ன மும்பை போலீஸையே ஆட்டுவிக்குற விக்ரம் சிங்கோட பொண்ணுன்னா சும்மாவா?” என்று வேண்டுமென்றே அவளை சீண்டுவதைப் போல அவன் பேச, வர்ஷினிக்கு கோபம் எல்லை மீறி வந்தது.

 

“ஹலோ, என்ன சும்மா சும்மா அவனோட பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்கீங்க? என் அப்பா பேரு ராஜரத்தினம், சித்தி கனகவள்ளி. சித்தி கொடுமை தாங்காம தான் அந்த விக்ரம் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். என்னோட வாழ்க்கை ரொம்பவே சோக மயமா தான் இருக்கு. எவ்வளவு சோகம்னா நானே நினைச்சாலும் இப்போ என் கண்ணுலயிருந்து கண்ணீர் வராது. ஏன்னா சின்ன வயசுலயிருந்து அழுது அழுது கண்ணீரே வத்திப்போச்சு. போதுமா? இதைத் தான என் வாயிலிருந்து வரவைக்க இவ்ளோ பிளான் பண்ணீங்க.” என்று கோபமாக பேசியவள் ஜன்னல் புறம் திரும்பிவிட்டாள்.

 

அவளின் செயலைக் கண்டவன் தோளைக் குலுக்கிக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தான். அதன் பிறகு இருவருக்குமிடையே மௌனமே ஆட்சி செய்தது.

 

*****

 

“அண்ணா…” என்று அழைத்தவாறே உள்ளே வந்தவனை, சிவப்பேறிய கண்களுடன் பார்த்தான் பிரதீப்.

 

இரவு குடித்த சரக்கு இப்போதும் அவனை நிதானத்திற்கு வரவிடவில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் குணசேகர் அழைத்தது கூட அவனின் சிந்தையில் ஏறிடவில்லை.அந்தளவிற்கு போதையின் பிடியில் இருந்தான்.

 

“என்னடா, இங்க நின்னுட்டு என் வாயை பார்த்துட்டு இருக்க? சொல்ல வந்ததை சொல்லிட்டு போ.” என்றான் அதட்டலாக.

 

“அது வந்து ண்ணா…” என்று தான் சொல்லப்போகும் விஷயங்களைக் கேட்டு என்ன ஆட்டம் ஆடப்போகிறான் என்ற பயத்தில் இழுத்துக் கொண்டிருந்தான் அந்த அடியாள்.

 

“என்னடா இன்னும் வந்து போயின்னு? என்னன்னு சொல்லித் தொலை!” என்று காலையிலேயே (!!!) தன்னை தொந்தரவு செய்த கடுப்பில் தன் கட்டைக்குரலை மேலும் கடுமையாக்கினான்.

 

“அண்ணா, போலீஸ் கிட்ட மாட்டுன அந்த வர்ஷினி பொண்ணை காணோமாம். அங்க இருக்க நம்ம ஆளுங்க ஹாஸ்பிடல்ல இருந்து அந்த பொண்ணை யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்றாங்க.” என்று அவன் கூறும்போதே கோபத்துடன்  அவனை எட்டி உதைத்தவன், “ஏன்டா நாயே இந்த விஷயத்தை இவ்ளோ லேட்டா வந்து சொல்ற? எவன்டா அது அவளை தூக்கிட்டு போனது?” என்று கர்ஜித்தவனையே பயமாக பார்த்திருந்தான் அவனிடம் உதை வாங்கி  கீழே விழுந்தவன்.

 

‘இதுக்கே இப்படி உதைக்கிறாரே, இன்னும் சொன்னா என்ன பண்ணுவாரோ?’ என்று பயந்தவன் மெல்ல எழுந்து, “அண்ணா…” என்றான்.

 

“இன்னும் என்ன டா?” என்றான் பிரதீப்.

 

“காலையில அந்த போலீசு உங்களுக்கு போன் பண்ணி, அந்த பொண்ணுக்கு லவரா நடிக்க யாரையாவது அனுப்ப சொல்லி சொன்னாராம் ண்ணா.” என்று நிறுத்தினான். அப்போது தான் பிரதீப்பிற்கு அதிகாலையில் அலைபேசியில் அகிலிடம் பேசியது நினைவிற்கு வந்தது.

 

மனதிற்குள் தன்னையே கடிந்துகொண்ட வேளையில் அந்த அடியாள் மீண்டும் தொடர்ந்தான். “கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அதே மாதிரி ஒரு ஆள் வந்து அந்த பொண்ணோட லவர்னு சொன்னதாகவும், அவன் தான் அந்த பொண்ணை கடத்திட்டு போனதாகவும் சொன்னாரு ண்ணா.” என்றான்.

 

“யாரு வந்தாலும் அனுப்பிடுவானா அந்த போலீசு? ச்சை இதுக்கு தான் அவளை அங்க அனுப்ப வேணாம்னு பாஸ் கிட்ட சொன்னேன். ப்ச்…” என்று சலித்துக் கொண்டான். ஆனால், அவன் சலித்ததற்கான அர்த்தம் வேறு.

 

வர்ஷினி விக்ரமிடம் வேலைக்கு சேர்ந்தபோதிலிருந்தே பிரதீப் அவள் அழகின் மேல் பித்தானான். அப்போதிலிருந்தே அந்த மானை வேட்டையாடும் நாளிற்காக காத்திருந்தது அந்த குள்ளநரி. ஆனால், வர்ஷினியின் நல்ல காலமோ, அவள் அவனிடம் அகப்படும் சூழ்நிலை அமையாமல் போனது.

 

இந்த சூழலில் தான், விக்ரம் தான் செய்து வரும் வேலைகளின் மேல் காவல்துறையின் கவனம் விழாது இருக்க,  வர்ஷினியை காவல்துறையிடம் மாட்டிவிட்டு அவர்களின் கவனத்தையும் ஊடகத்தின் கவனத்தையும் ஒருங்கே திசை திருப்ப எண்ணினான். முதலில் சற்று மறுத்த பிரதீப்பினாலும் விக்ரமை மீறி செயல்பட முடியவில்லை.

 

அதையெல்லாம் நினைத்து பார்த்தவன், தன் இயலாமையினால் தன் கோபம் முழுவதையும் அவன் முன்னிருந்த ‘பாக்சிங் பேக்’கில் காட்டினான்.

 

“நீ எங்க போனாலும், யாருக்கிட்ட இருந்தாலும், உன்னை விடமாட்டேன் டி.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான் பிரதீப்.

 

“ண்ணா…” என்று மீண்டும் சத்தம் கேட்க, “இன்னும் என்னடா?” என்று கோபமாக வினவ, “பாஸ் உங்க கூட பேசனும்னு சொன்னாரு ண்ணா. ஏற்கனவே அவருக்கு அந்த பொண்ணு காணாம போன விஷயம் தெரிஞ்சுருச்சு.” என்று கூற, “ச்சை, காலைல ஒரு நல்ல விஷயமாவது சொல்றீங்களா டா? நான் அப்போவே அனுப்ப வேணாம்னு சொல்லியும் அந்த மனுஷன் கேட்கல. இப்போ வந்து என்கிட்ட கேள்வி கேட்க வேண்டியது.” என்று கோபமாக ஆரம்பித்தவன் சலிப்புடன் முடித்தான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Naveena Ramesh

      நிறைய முடிச்சுகள் இருக்கும் போலயே எந்த புள்ளில முடியும் 🤔🤔🤔🤔