Loading

நிறம் 2

எத்தனை நொடிகள் அதிர்ச்சியின் பிடியில் இருந்தனர் என்று தெரியவில்லை. முதலில் சுயத்திற்கு வந்தவன் ஷ்யாம் தான். அவன் மூளை வேகமாக விக்ரம் சிங் பற்றி தான் சேகரித்து தெரிந்து கொண்ட தகவல்களை நினைவிற்கு கொண்டு வந்தது.

விக்ரம் சிங், ஆரம்ப காலத்தில், தன் சகாக்களின் துணை கொண்டு கடத்தல், வழிப்பறி, கொலை முயற்சி முதலிய குற்றங்களை செய்து லோக்கல் டானாக உருவெடுத்தவன். பின், அவனின் கவனம் பெரிய தொழிலதிபர்கள் பக்கம் திரும்ப, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, சட்டவிரோத கடத்தல்களை செய்வது என்று நிழல் உலக தாதாவாக மாறினான்.

அதுமட்டுமில்லாமல், தனக்கு கீழே பெரிய கூட்டத்தையே உருவாக்கி மும்பையையே ஆட்டுவித்துக் கொண்டிருப்பவன். பல அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுகொண்டு, மும்பை காவலர்களுக்கு தண்ணீர் காட்டி வருபவன். இவனை எதிர்ப்பவர்களுக்கு மரண பயத்தை காட்டுவது, சில நேரங்களில் மரணத்தையே பரிசாக வழங்குவது போன்றவை இவனின் பொழுதுபோக்குகள். இவனுக்கு சர்வதேச மாஃபியா குழுவுடன் தொடர்பு இருக்கிறது என்றும் காவலர்களால் நம்பப்படுகிறது.

ஷ்யாம் அவனின் மூளையில் சேமித்த அத்தனை தகவல்களையும் நொடிக்குள் ஆராய்ந்து பார்த்தான். அதில் அவன் குடும்பத்தைப் பற்றிய தகவல் எதுவும் சிக்கவில்லை. இதைப் பற்றி விசாரிக்க சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன், லேசாக செருமி அங்கு அதிர்ச்சியில் உறைந்திருந்த மற்ற இரு ஜீவன்களையும் சுயத்திற்கு அழைத்து வந்தான்.

அந்த ஷீதலோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவளின் முகத்தைக் கண்டே, அவளிற்கும் அவளின் தந்தைக்குமான தொடர்பை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

“நீங்க எப்படி அந்த இடத்துக்கு போனீங்க? உங்களை மட்டும் விட்டுட்டு அவங்க தப்பிச்சுட்டாங்களா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் ஷ்யாம்.

அவளோ தன்னை நோக்கி வந்த கேள்விக் கணைகளை உணராதவளாக, அவளின் சோகத்திலேயே மூழ்கியிருந்தாள்.

ஐந்து நிமிடங்களாகியும் எந்த பதிலும் வராததால், அவளை நோக்கி நடந்தவன் சற்று கடினமான குரலில், “மிஸ். ஷீதல், நான் உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.” என்றான்.

அவளோ கண்களில் கண்ணீர் வழிய, “என்… என் இந்தரை அவங்க… அவங்க…” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே மயங்கிவிட்டாள்.

அவள் மயங்கியதும் பரபரப்பான மருத்துவர், “மிஸ்டர். ஷ்யாம், ப்ளீஸ் பேஷண்ட்டோட ஹெல்த் கன்டிஷனை புரிஞ்சுக்கோங்க. அவங்க ரொம்ப அதிர்ச்சில இருக்காங்க. அவங்களுக்கு ரெஸ்ட் ரொம்ப அவசியம்.” என்று கூற, தலையசைத்து வெளியே வந்தவன், “ப்ச், தேவையானதை சொல்லாம மயங்கிட்டா. இப்போ அந்த ‘இந்தர்’ யாருன்னு வேற கண்டுபிடிக்கணும்.’ என்று தகவல் கிடைக்காத கோபத்தை அந்த பேதை பெண்ணின் மீது மானசீகமாக இறக்கிக் கொண்டிருந்தான்.

அவனின் சிந்தனையை கலைத்த உதவியாளன் அகில், “சார், டி.ஐ. ஜி கிட்ட இந்த பொண்ணைப் பத்தின தகவல் சொல்லணும்ல.” என்று நினைவூட்டினான்.

“ம்ம்ம், இன்ஃபார்ம் பண்ணுங்க.” என்று வேகநடையில் வெளியே சென்று விட்டான் ஷ்யாம்.

இந்த தகவல் காவல்துறை துணைத்தலைவருக்கு மேலும் அதிர்ச்சியை தர, அடுத்த விடியலுக்காக தகவலறிந்த அனைவரும் சற்று திகிலுடனே காத்திருந்தனர். இன்னும் எத்தனை அதிர்ச்சிகளை அவர்கள் தாங்க வேண்டியத்திருக்குமோ!

விக்ரம் சிங்கின் மகள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற தகவல் இன்னும் ஊடகவியலாளர்களுக்கு கசியவில்லை என்பது மட்டும் தான் அன்றைய நாளில் அவர்களுக்கு சாதகமான விஷயமாக முடிந்திருந்தது. அதுவும் கசிந்திருந்தால், இந்நேரம் அந்த மருத்துவமனையே அல்லோலகல்லோலப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

*****

இருளை விரட்டி நாற்திசையும் ஒளியைப் பரப்பி மேலெழுந்தான் செங்கதிரவன். இன்று பல கேள்விகளுக்கு விடை அறியப்போகும் ஆவலிலும் பயத்திலும், அவள் விழிப்பதற்காக காத்திருந்தனர் காவலர்கள். இதையறியாத ஷீதலோ மெல்ல கண்களை விரித்து வெளிச்சத்திற்கு பழக்கப்படுத்திக் கொண்டாள்.

அவள் கண்களைத் திறந்ததும், அவளைக் காண்பதற்காக நின்றிருந்த காவலர்களைக் கண்டதும் பயத்தில் உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பிக்க, அவ்வறையில் இருந்த இருவர், இவர்களின் செயல்களை மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தனர்.

ஒருவர், அவளிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர். ‘அந்த பொண்ணே இப்போ தான் கண்ணு முழிச்சுருக்கு. அதுக்கு முன்னாடி இப்படியா டெரரிஸ்ட்டை பிடிக்க வந்தவங்க மாதிரி நெஞ்சை நிமித்திக்கிட்டு நிக்கிறது!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டார். காவல்துறை துணைத்தலைவரே அங்கு நிற்கும் போது அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

இன்னொரு நபர், ஷ்யாம் தான். அதை வெளியே சொல்ல முடியாதவாறு அவனின் மேலதிகாரிகள் நிற்பதால், வாயை அடக்கிக் கொண்டான்.

இருப்பினும் மனம் கேளாமல், அந்த மருத்துவர், “சார், அந்த பொண்ணு இப்போ தான் முழிச்சுருக்கு. கொஞ்சம் டெஸ்ட் எடுக்க வேண்டியதிருக்கு. ஒரு மணி நேரம் கழிச்சு உங்க விசாரணையை வச்சுக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.” என்று கூற, அரை மனதாக அங்கிருந்து வெளியேறினர் அந்த காவலர்கள்.

*****

ஒரு மணி நேரம் கழிந்த பின்பு, ஷ்யாமும் அகிலும் அவளை விசாரிக்க வந்தனர், அவளும் சற்று இயல்பாகியிருந்தாள், அந்த மருத்துவரின் உதவியால். அகில் தான் அவளிடம் கேள்வி கேட்க துவங்கினான்.

“உங்க பேரு என்ன?” என்று எப்போதும் ஆரம்பிக்கும் கேள்வியைக் கேட்க, அவளோ அவனை ஒரு நொடி வெறித்தாள். அப்பார்வையே, ‘நேத்து நான் பேர் சொல்லும்போது நீயும் தான இருந்த?’ என்று கேட்பது போலிருக்க, அது அகிலிற்கு புரியவில்லை என்றாலும், ஷ்யாமிற்கு புரிந்தது.

அதுவே, அவளை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று அவன் மனதில் தோன்றியது. நேற்று அவளிருந்த நிலைக்கும் இப்போது அவளிருக்கும் நிலைக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. என்ன தான் மயக்கம், சோர்வு என்று பல காரணங்கள் இருந்தாலும், அவனால் அவளிடம் ஏதோ தவறாக இருப்பதை உணர முடிந்தது.

ஷ்யாம் இதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவள் தன் பெயரைக் கூறியிருந்தாள்.

“உங்களுக்கும் விக்ரமுக்கும் என்ன தொடர்பு? நேத்து எதுக்கு அங்க போயிருந்தீங்க?” என்று அகில் வினவ, அனைவரையும் ஒருமுறை பார்த்தவள், பெருமூச்சு விட்டவாறே தன் கதையை கூறத் துவங்கினாள்.

“விக்ரம் என்னோட அப்பா. ஆனா, இதுவரைக்கும் வெளியுலகத்துக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கிறதா அவரு காமிச்சுக்கிட்டது கிடையாது. எங்களை வச்சு அவரை யாரும் அடிபணிய வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருந்ததா என் அம்மா சொல்வாங்க. எனக்கும் அவரை அப்பான்னு அறிமுகப்படுத்த விருப்பமில்ல. தப்பு செஞ்சுட்டு இருக்குறவரை அப்பாவா அறியப்படுறதுக்கு பதிலா அப்பா இல்லாத பொண்ணாவே இருந்துடலாம்னு முடிவு பண்ணி தான் நானும் என் அம்மாவும் இத்தனை நாளா தனியா வாழ்ந்துட்டு இருந்தோம்.” என்று கூறி நிறுத்தினாள்.

“உங்க அம்மா இப்போ எங்க?” என்று அவளை மேலும் பேச வைக்க அகில் வினவினான்.

வேறெங்கோ வெறித்த பார்வையை வீசியவள், “எங்க அம்மாக்கு கேன்சர். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க.” என்றாள் மரத்துப் போன குரலில்.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, இப்போது ஷ்யாமே அடுத்த கேள்வியை முன்வைத்தான்.

“அப்போ இவ்ளோ நாள் விக்ரமோட நீங்க தொடர்புல இல்லன்னு சொல்ல வரீங்களா?” என்றான் ஷ்யாம்.

“ஆமா, நான் பிறக்கும்போது கூட வந்து பார்க்காதவருக்கு, அதுக்கு அப்பறம் மட்டும் நான் எதுக்கு தேவைப்படப் போறேன்? ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் அவருக்கு தேவைப்படல. அதனால, என்னை கண்டுக்கல. அப்படியே இருந்துருந்தா நல்லா இருக்கும்னு இந்த ஒரு வாரமா நான் நினைக்காத நாளில்ல.” என்றவளின் கண்கள் லேசாக கலங்கியது.

“ஏன்? என்னாச்சு?” என்று ஷ்யாம் வினவ, “ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணி, அவரோட பார்ட்னரோட பையனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கப்போறதா சொன்னாரு. ஆனா, நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்புறதா சொன்னதும், ரெண்டு பேரையும் பார்க்க சென்னை வரதா சொன்னாரு. ஆனா, எனக்கு அவரைப் பார்க்க பிடிக்கலை. என்னமோ அவருக்கிட்ட ஏதோ தப்பாவே தெரிஞ்சுது. ஆனா, இந்தர் தான் என்னையும் வலுக்கட்டாயமா கூட்டிட்டு போனான்.” என்று கூறி நிறுத்தினாள்.

“இந்தர்?” என்று ஷ்யாம் கேள்வியாக நிறுத்த, “என்னோட லவர்.” என்றாள் அவனை நேர்பார்வை பார்த்தவாறே.

“நீங்க அங்க போனதுக்கு அப்பறம் என்னாச்சு?” என்று ஷ்யாம் கேட்க, இம்முறை அங்கிருந்த அனைவருக்குமே ஒருவித ஆர்வம் அவள் கூறப்போகும் பதிலில்.

“ஹ்ம்ம், நானும் இந்தரும் அங்க போனோம். அந்த இடம் அவரு பார்ட்னரோட இடம்னு சொன்னாரு. அங்க அவரோட பார்ட்னரும் அவர் பையனும் இருந்தாங்க. முதல்ல எனக்கு அன்ஈசியா தான் இருந்தது. யாரை என் வாழ்க்கைல பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேனோ அவரு கூட சிரிச்சு பேச எனக்கு தோணல. ஆனா, அவங்க இந்தர் கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. அப்போ தான் அந்த பார்ட்னர், அவரோட பையனை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கட்டாயப்படுத்துனாரு. நானும் இந்தரும் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கப்போவே அந்த பார்ட்னரோட பையனுக்கும் இந்தருக்கும் சண்டை நடக்க ஆரம்பிச்சுது. நான் தடுக்க போனப்போ, அவன் என்னைத் தள்ளி விட்டதுல மயக்கமாகியிருக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு அப்பறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல.” என்றவள் கண்ணீருடன், “ப்ளீஸ் என்னோட இந்தரை எப்படியாவது அவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்க.” என்று கெஞ்சினாள்.

ஷ்யாமோ, ‘இப்படி இவங்க குடும்ப விஷயத்தை கேட்கவா ராப்பகலா காவல் காத்தோம்?’ என்று சலிப்பாக எண்ணினான்.

இதில் புது பிரச்சனையாக, ஷீதலின் காதலனை கண்டுபிடிக்கும் பணியும் சேர்ந்ததை எண்ணி உள்ளுக்குள் புலம்பிக் கொள்ளத்தான் முடிந்தது ஷ்யாமினால்.

ஷீதல் கூறியவை எல்லாம் அலைபேசியின் வழியே காவல்துறை துணைத்தலைவருக்கு ஒலிபரப்பப்பட, அவரோ, “உங்க இந்தரை கண்டுபிடிச்சுடலாம். அவரைப் பத்தின தகவல்களை கொடுங்க.” என்று ஷீதலிடம் கூறிவிட்டு, “ஷ்யாம், நீங்களே இந்த கேஸ் ஹாண்டில் பண்ணுங்க.” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

ஷ்யாமோ, ‘ப்ச், உடனே தூக்கி எனக்கு கொடுத்துடுவாங்க!’ என்று மனதிற்குள் புலம்பினான். ஷீதலின் கதை கேட்டதால் லேசாக தலை வலிப்பது போலிருக்க, அகிலிடம், “அவங்க கிட்ட இந்தர் பத்தின டீடெயில்ஸ் வாங்கிட்டு எனக்கு கால் பண்ணுங்க.” என்று வெளியே சென்று விட்டான்.

ஷ்யாம் வெளியே சென்ற உடனே கட்டிலில் படுத்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் நேராக அமர்ந்தாள்.

“உனக்கு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா? உன்னை என்ன பண்ண சொன்னா, என்ன பண்ணிட்டு இருக்க? சாதாரணமா ஏதாவது கதை சொல்லி எஸ்கேப் ஆகுறதை விட்டுட்டு இப்படி இல்லாத கேரக்டர் எல்லாம் உள்ள கொண்டு வருவியா? இப்போ அந்த ‘இந்தரை’ப் பத்தின டிடெயில்ஸ் கேட்டுட்டு போயிருக்கான் அந்த கஞ்சி சட்டை. என்ன சொல்லப் போற?” என்று புலம்பிக் கொண்டிருந்த அகிலை தன் இமை கொட்டி பாவமாக பார்த்து வைத்தாள் ஷீதல்.

“வர்ஷினி, நான் ரொம்ப கோபத்துல இருக்கேன். இப்படி பாவமா பார்க்குறேன்னு என்னை மேலும் கோபப்படுத்தாத. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? நான் சொன்னாலும் கேட்காம அங்க போய்…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடைவெட்டி, “ப்ச், இப்போ எதுக்கு இப்படி நான்-ஸ்டாப்பா திட்டிட்டு இருக்க ண்ணா? பாரு எப்படி மூச்சு வாங்குது. இந்தா ஜுஸ் குடி.” என்று அகிலின் பிபியை ஏற்றிக் கொண்டிருக்கும் வேலையே செவ்வனே செய்தாள் ஷீதலாக மாறியிருந்த வர்ஷினி.

அவள் கூறியதைக் கேட்டு, அவன் பல்லைக் கடிக்க, அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “ண்ணா, அந்த பெரிய போலீஸும் விக்ரமோட ஆளா? ஒருநாள், விக்ரமோட ஆஃபிஸ்ல பேசிட்டு இருந்ததை பார்த்தேன்.” என்று துப்பு துலங்க ஆரம்பிக்க, அகில் தான் இது எங்கு சென்று முடியுமோ என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

“ண்ணா, நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ எனக்கென்னன்னு உக்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?” என்று வினவ, “உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை வர்ஷினி?” என்று மீண்டும் ஆரம்பித்தான்.

அவள் ‘திரும்பவுமா’ என்பதைப் போல பார்க்க, அவனோ, “நீ எவ்ளோ பெரிய ஆபத்துல வந்து சிக்கியிருக்கன்னு தெரியுதா? நீ சொன்ன கதையெல்லாம் பொய்யுன்னு அந்த ஷ்யாமுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்! அதுமட்டுமில்ல, இப்போ நீ இங்கயிருந்து தப்பிச்சுட்டாலும், அந்த விக்ரமோட ஆளுங்க சும்மா விட்டுடுவாங்கன்னு நினைக்குறியா? உன்னைப் போட்டு தள்ளிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க.” என்று கூற, தனக்காக சிந்திக்கவும் இவ்வுலகில் ஆள் இருக்கிறதே என்று எண்ணி அவளின் மனம் குளிரத்தான் செய்தது.

அதே யோசனையில், “ப்ச், கொன்னா கொல்லட்டும் ண்ணா. என்னை கொன்னா, ஏன்னு கேட்க ஆளாயிருக்கு!” என்று விரக்தியாக பேசியவளை நோக்கி ஓரடி முன்வைத்த அகில், “அப்போ நான் யாரு, வர்ஷு?” என்றான்.

ஏதோ யோசனையில் மனதிலிருப்பதை உளறியிருப்பது அப்போது தான் வர்ஷினிக்கு தெரிந்தது.

அதை சமாளிக்கும் விதமாக, “அச்சோ உன்கூட பேசி பேசி தொண்டை தண்ணி வத்துனது தான் மிச்சம். இந்த ஜூஸ் உனக்கு வேணாம்ல?” என்று சம்பிரதாயத்திற்கு வினவியவள், அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் அதை தொண்டைக்குள் சரித்திருந்தாள். அவளின் செயலில், அகிலிற்கு லேசான சிரிப்பும் எட்டிப் பார்த்தது.

“ஆமா உங்க டிப்பார்ட்மெண்ட்டே இப்படி தான் இருப்பீங்களா? காலைல ஒரு சின்ன பிள்ளையை இப்படி தான் பயமுறுத்துவீங்களா? நல்ல வேளை துப்பாக்கி எடுத்து நெத்தி பொட்டுல வைக்காம விட்டீங்க. இல்லைன்னா பயத்துல அப்போவே உண்மையெல்லாம் சொல்லித் தொலைச்சுருப்பேன்.” என்று சலித்துக் கொண்டவளைக் கண்டவனிற்கு இப்போது சிரிப்பு பெருகியது.

அவனும் வர்ஷினியின் அப்போதைய எதிர்வினையை பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவனாகிற்றே!

அகில் வாய்விட்டு சிரிக்க, அவனை முறைத்தவள், “இதுல நீ வேற உன் பேர் என்ன, ஊர் என்னன்னு ஸ்கூல் பிள்ளை கிட்ட கேக்குற மாதிரி கேட்டுட்டு இருக்க!” என்று கூற, “ஓஹ், அதுக்கு தான் அப்படி பார்த்தியா? நான் கூட ஏதாவது உளறிட்டேனோன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று மீண்டும் சிரித்தான்.

“ண்ணா, ஆனாலும் உன் சீனியர் இவ்ளோ கஞ்சி சட்டையா இருக்கக்கூடாது. நீ சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா, இப்போ தான் தெரியுது. எப்பா எவ்ளோ கேள்வி? நானே, நான் அவுத்து விடுற கதையெல்லாம் மண்டைக்குள்ள ஸ்டோர் பண்ணனுமே, அடுத்த முறை கேட்டா தப்பா சொல்லிடக் கூடாதேன்னு கவனமா சொல்லிட்டு இருந்தா, அந்த ஆளு கேப்பே விடாம கேள்வியா கேட்டுத் தள்ளுறாரு. எப்படி தான் சமாளிக்குறீங்களோ?” என்று அலுத்துக் கொண்டாள்.

“அட நீ வேற வர்ஷு, நானே அவரு நீ சொன்ன கதையை நம்பலையோன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று அகில் கூற, “ஏன்? நான் சரியா தான சொன்னேன்? எதுவும் சொதப்பலையே?” என்று புருவம் சுருக்கி வினவினாள் வர்ஷினி.

“ஹ்ம்ம், அவரு முகத்தைப் பார்த்தா, அப்படி தான் தெரிஞ்சுது. பார்ப்போம்.” என்றவனிற்கு அப்போது தான் ஷ்யாம் தனக்கு இடப்பட்டிருக்கும் பணி நினைவிற்கு வந்தது.

“சரிங்க மேடம், இப்போ அந்த இந்தர் யாருன்னு சொல்லுங்க.” என்றான் சிரிப்புடன்.

“என்னைக் கேட்டா, எனக்கென்ன தெரியும்? நீங்களே சும்மா உங்களுக்கு தோணுனதை அடிச்சு விடுங்க.” என்று அசால்ட்டாக கூற, அகில் தான் தலையிலடித்துக் கொண்டான்.

‘இன்னும் எத்தனை தடவை தலையில அடிக்க வைப்பான்னு தெரியலையே!’ என்று மனதின் புலம்பல்களுடனே இந்தரைப் பற்றி அவன் கற்பனையை காகிதத்தில் தீட்டத் துவங்கினான். மேலும், எழுதி முடித்ததும் அதை அவளிற்கும் ஒருமுறை படித்துக் காண்பித்தான். மாற்றி சொல்லிவிடக் கூடாதல்லவா!

இங்கு இவர்கள் இருவரும் பேசியதை வேறொருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை இருவரும் அறியாமல் இந்தரைப் பற்றிய தகவல்களில் மூழ்கிப் போயினர்.

இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவனோ, “ம்ம்ம் இன்ட்ரெஸ்ட்ங்.” என்று உதட்டை வளைத்தான்.

இந்த புதியவனின் பிடியில் சிக்கப்போகும் புள்ளிமானா வர்ஷினி?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்