Loading

மறுநாள் பொழுது அந்த ஊரின் அனலைத் தாங்கியபடியே வெம்மையாகவே விடிந்தது.

தனது வீட்டிலிருந்து வெளியே வந்தான் அர்ஜுன். அப்பொழுது சில பல பெண்கள் புடைசூழ அவனைக் கடந்து சென்றாள் அக்னி.

அவள் முகத்திலும் சரி, அவளைச் சுற்றி இருக்கும் பெண்களின் முகத்திலும் சரி.. அப்படியொரு மகிழ்ச்சி! நட்புணர்வு!

அவள் ஒரே இரவில் அவ்வளவு சுதந்திரமாக இந்த மக்களுடன் கலந்துவிட்டதைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தான் அவன்.

இந்த ருத்ரன் ஏன் இப்படி செய்கிறான் என்று அவனுக்கும் ஒன்றுமே புரியவில்லை.

இத்தனை நாட்களாக ருத்ரனின் எந்தவொரு செய்கையிலும் யாருக்கும் மறு அபிப்பிராயமே இருந்ததில்லை.

அந்தப் பிராந்தியத்தின் பெரும் தலைவனாக அவனை ஏற்றுக்கொண்டனர் அந்த மக்கள். அதிலும் அர்ஜுனுக்கு, தன்னையும்.. இந்த மக்களையும் ரட்சிக்க வந்த ரட்சகன் அவன் என்ற பிரம்மை தான்.

ஆனால் இப்பொழுது அமரேந்தரே, அக்னியின் தொடர்பாக ருத்ரன் எடுக்கும் முடிவுகளை வரவேற்பதை போலத் தோன்றவில்லையே.

இவனுக்கும் மனத்தோரஞ் சிறு சுணக்கம் தான்!

இத்தனை நாட்கள் அரசு உளவாளிகள் என்று இந்த ஊருக்கு வந்த அத்தனை ஆண்களும் இங்குச் செய்த கொடுமைகளை இந்தப் பெண் செய்யவில்லை தான்.

ஆனால்.. இவளும் உளவாளி தானே?

அவளைச் சிறையில் அடைத்ததை எண்ணி வருந்துவதா அன்றி சந்தோசம் கொள்வதா என்று அர்ஜுன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், ஜுவாலாமுகியின் வார்த்தைக்காக அவளை விடுதலை செய்து இந்த ஊருக்குள்ளேயே சுதந்திரமாக அலையவிட்டிருக்கிறான்.

அவளை இங்கிருந்து மொத்தமாக விடுதலை செய்து, அவளை அவள் வீட்டுக்கே அனுப்பியிருந்தாலும் இவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை தான்.

என்ன? மிஞ்சி மிஞ்சிப் போனால்.. அக்னி கூறும் அடையாளத்தை வைத்து அவர்களது உருவங்கள் வேண்டுமானால் வரைபடங்களாகத் தயாராகலாம்!

ஆனால் அதை வைத்து இந்த அரசாங்கம் எதையும் செய்துவிட இயலாது. அதிலும் இன்று அவர்கள் திட்டமிட்டிருக்கும் காரியம் மட்டும் வெற்றிகரமாக நடந்தேறிவிட்டால், இந்திய அரசாங்கமே நடுநடுங்கித் தான் போகும்.

வெறும் இந்தத் திட்டத்தினைப் பற்றி அறையும் குறையுமாக அறிந்து கொண்டதற்கே அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் அக்னியை இன்னமும் இங்கேயே ருத்ரன் உலவவிட்டிருப்பதன் காரணம் தான் அர்ஜூனுக்குப் புரியவில்லை.

சரி.. ருத்ரனுக்குக் காதல் தான் பெரிது.. அந்தக் காதலால் தான் அவளை விடுதலை செய்திருக்கிறான் என்றால், திருமணமாவது செய்துகொள்வானா என்று பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

தன் வாழ்க்கையில் திருமணம் என்ற உறவுக்கு இடமே இல்லை என்று இப்பொழுதும் கூறிக் கொண்டு தான் இருக்கிறான்.

ஆனால்.. இவளிடம் எப்படி, என்ன காரணத்திற்காகக் காதல் வந்தது என்று எண்ணிய அர்ஜுனுக்கு தலை தான் வலித்தது!

பாவம்.. காதல், எந்தக் காரணத்தையும் உடனழைப்பதில்லை என்று அவனுக்குப் புரியவில்லையே!

இதிலேயே உழன்று கொண்டிருந்தால் இன்றைய வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று சற்று நேரத்திலேயே தெளிவு கொண்ட அர்ஜுன், ருத்ரனை நோக்கி அவனது பேலசுக்குத் தான் சென்றான்.

இந்த பேலஸ், ருத்ரனைப் பொருத்தமட்டில் ஒரு அழியாச் சின்னம்!

அவன் அன்புக்குரியவர்களின் கல்லறை!

மற்றவர்களுக்கோ இது அடக்குமுறையின் சின்னம். அதைக் கண்கொண்டு பார்ப்பது கூடப் பாவமென்று அவர்கள் விலக்கி.. ஒதுக்கிவைத்திருக்கும் இடம்.

ஆனால் அதில் தான் நான் குடியிருப்பேன் என்று ஒற்றை ஆளாக அதில் குடியேறினான் ருத்ரன்.

அவனது பதினைந்தாவது வயது தொட்டு இந்த பேலஸில் தான் தன்னந்தனியாக வசிக்கிறான்.

உதவிக்கு வேலையாட்கள் ஒரு படைபோல அந்த பேலஸில் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள்!

ஏதாவது தேவையென்றால் மட்டுமே அர்ஜுன் அங்குச் செல்வதுண்டு.

அமரேந்தரோ.. அதுவும் கூட இல்லை!

இப்பொழுது இன்றைய இரவின் வேலைகளுக்காக ருத்ரனை சந்திக்கச் சென்றான் அர்ஜுன்.

ருத்ரனின் காதல் விவகாரம் மட்டுமே அர்ஜுனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மற்ற விதத்தில் அவன், ருத்ரனின் கண்ணசைவைக் கொண்டே காரியம் முடிப்பவனாகத் தான் இன்னமும் இருக்கிறான்.

ருத்ரனைத் தேடி அவனது அறைக்குச் சென்ற பொழுது, அவனது அறை திறந்திருந்தது.

அதற்குள்ளாக எழுந்து தயாராகி வெளியே கிளம்பிவிட்டானா? என்று எண்ணியபடியே அங்கிருந்த வேலையாள் ஒருவனை அழைத்துக் கேட்க, அவன் காலையிலிருந்தே அங்கு ருத்ரனைப் பார்க்கவே இல்லை என்று கூறவும் திகைத்தான் அர்ஜுன்.

ஆறு தளங்கள் கொண்ட அந்த பேலஸ் முழுக்க சுற்றி சுற்றி வந்துத் தேடினான். எங்கேயும் ருத்ரனைக் காணவேயில்லை.

அப்பொழுது தான் அவன் மூளையில் பொறி ஒன்று தட்டிட, இதுவரை அவன் செல்லாத அந்தப் பகுதிக்குச் சென்றான்.

ருத்ரனே இதுவரையில் அந்தப் பகுதிக்குக் சென்றதில்லையே.. அதனால் தானே அவன் இவ்வளவு நேரம் அந்தப் பகுதியைத் தவிர்த்து பேலஸின் மற்ற பகுதிகளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

அந்த இடம்.. முந்தைய நாள் ருத்ரன் நின்றிருந்த பால்கனி தான். ருத்ரன், தன் தாயைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பகுதிக்கு இத்தனை நாட்கள் சென்றதே இல்லையே? எனவே தான் இப்பொழுதும் அங்கே சென்று தேட அர்ஜுன் முதலில் நினைக்கவில்லை.

ஆனால்.. இப்பொழுது அவன் ஆழ்மனம் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தது, ருத்ரன் அங்கே தான் இருப்பான் என்று.

அஜுன் மெல்ல அந்த பால்கனியை அடைந்து அங்குச் சென்று பார்த்தால்.. அவனது ஆழ்மனதின் கூற்றுப்படி ருத்ரன் அங்கே தான் வெறும் தரையில், மேல் சட்டையைக் கூட அணியாமல் ஆதரவற்ற குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அர்ஜுனின் மனதுக்குள் சுரீரென்ற ஒரு வலி!

இவன் ஏன் இத்தனை நல்லவனாய் இருக்கிறான்? இவன் ஏன் அப்பொழுதே சுயநலமாய் ஒரு முடிவை எடுக்கவில்லை? இவனுக்கு ஏன் இந்தக் காளிக்ஷேத்ராவின் மீது இத்தனை அக்கறை வந்தது?

இப்பொழுது கூட இவன் நினைத்தால் இங்கிருந்து விலகிச் சென்றிட முடியும்!

இந்த ஊரிலிருந்து இவன் விலகிப் போனால்.. நூற்றில் ஒரு வாய்ப்பாக அக்னி இவன்மீது காதல்வயப்பட்டாலும் அதிசயப்படுவதற்கில்லை!

ஆம்.. ருத்ரனைப் போல ஒருவனைக் கணவனாக அடைய எந்த ஒரு பெண்ணும் பதினாலு ஜென்மங்களில் தவமிருந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா?

ஆனால்.. இப்போது வரைக்கும் வாய்ப்பிருந்தும் இந்த ருத்ரன் ஏன் மற்ற எல்லாவற்றையும் விட இந்தக் காளிக்ஷேத்ராவையே தேர்ந்தெடுக்கிறான்?

இத்தனை பெரிய மாளிகையில், அணைத்துத் தேற்றக் கூட ஆளின்றி வெற்றுத் தரையில் படுத்துக்க கிடக்கும் அவனைப் பார்த்து விழியோரம் சிறிதாய் நீர் கசிந்தது தான் அர்ஜுனுக்கு.

ஆனால்.. அழுகை, ருத்ரனுக்குப் பிடிக்காத ஒன்று!

“கண்ணீருல தான் உன்னோட முழு பலமும் இருக்கு. உன்னோட வலி, இந்தக் கண்ணீர் மூலமா வெளில வந்துடுச்சுன்னா, உன்னோட ரத்தத்துல இந்த வெறி இருக்காது!

கண்ணீரை அடக்கு! அப்போ தான் உன் ரத்தத்தோட சூடு தனியாம, உன்னை உன் இலக்கை நோக்கி எந்தப் பயமும் இல்லாம ஓட வைக்கும்!” என்பான் அவன்.

இப்பொழுதும் அவன் கூற்றுப்படியே முயன்று ருத்ரனுக்கான தன் சோகத்தை மனதுக்குள் அடக்கியவன், ஒரு பெருமூச்சுடன் ருத்ரனை அணுகி, அவனை எழுப்பினான்.

அர்ஜுனின் ஒரே குரலில் சட்டெனக் கண் விழித்துவிட்டான் ருத்ரன்.

தான் இங்கே பால்கனியில், தரையில் படுத்திருப்பதைக் கண்ட அர்ஜுன் ஏதாவது சொல்வானோ என்று ஒரு கணம் அவனுக்கு அவகாசம் கொடுத்தவன், அவன் அப்படி எதுவும் கூறாததால் சாதாரணமாகிவிட்டான்.

“அஞ்சு நிமிஷம்.. சீக்கிரம் ரெடியாகி வந்துடறேன்..” என்று நடந்து கொண்டே கூறியவனின் வேகத்துக்கு இணையாக நடக்க முடியாமல், எப்பொழுதும் போல ஓடத் தான் முடிந்தது அர்ஜூனால்.

சொன்னது போலவே அர்ஜுனை தனது அறையில் காத்திருக்க வைத்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஈரத்தலையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

அர்ஜூனுடன் கீழே சென்றவன், உணவை மறுத்துவிட்டு வெளியே செல்லக் கிளம்ப, அர்ஜுனோ..

“அவசரம் ஒண்ணுமில்ல.. நீங்க சாப்டுட்டே வாங்க ஜி..” என்று சாதாரணமாகத் தான் கூறினான். ஆனால்.. அவனை ஒரு கணம் நின்று நிதானித்துப் பார்த்த ருத்ரனோ,

“இந்த வீட்டுல நீ சாப்பிடுவியா அர்ஜுன்?” என்று அவனை நேராய்ப் பார்த்துக் கேட்க, இதயத்தட்டுக்குள் மீண்டுமாய் சுரீரென்ற வலி அவனிடத்தில்!

நொடியில் பாறையாய் இறுகிய முகத்துடன்.. வார்த்தை பேசாது, தன் மறுப்பை தலையசைப்பில் மட்டுமே அவன் காட்ட, ருத்ரனின் கண்களிலோ இகழ்ச்சி!

“விருந்தாளியைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது இந்த இந்திய மரபிலே இல்லையேப்பா! நான் மட்டும் எப்படி உன்னைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது?” என்று அவன் ஏளனமாய் கேட்க, இப்பொழுதும் கண்கள் கரித்தன அர்ஜுனுக்கு.

அதை ருத்ரனிடம் காட்டப் பிரியப்படாதவன்..

“நான் வெளில ஜீப்புல வெயிட் பண்றேன் ஜி.. நீங்க தயவுசெஞ்சு சாப்பிட்டுட்டு வாங்க..” என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் வெளியே சென்று வாசலிலிருந்து அந்த நீண்ட படிகளில் தடதடவென இறங்க ஆரம்பித்துவிட்டான்.

ஒரு கணம் அவன் செல்வதையே வெறித்துப் பார்த்த ருத்ரனோ, மறுகணம் அந்த பேலஸை கண்களில் வலியுடன் சுற்றி பார்த்தான்.

பிறகு கண்களின் வெறி இன்னமும் கூட, “துர்காம்மா..” என்று அந்த அரண்மனையே அதிரும்படி அழைத்தவன்.. அவர் வேகவேகமாக அவன் முன்பாக வரவும்..

“சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லுங்க..” என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்தவனை ஜீப்பில் ஏற்றிவிட்டு அர்ஜுன் அமரேந்தரின் வீட்டை அடைய, அவரும் அப்பொழுது தான் தனது பைக்கைக் கிளப்பிக் கொண்டு நின்றிருந்தார்.

மூவரும் மீண்டும் சென்றது கடற்கரைக்கே. முந்தைய நாள் அங்குக் கூடியிருந்த அந்தப் பதினைந்து பேரும் இப்பொழுதும் அங்கே தான் இருந்தார்கள்.

எல்லோருடனும் அவன் அந்தக் கப்பலில் ஏற.. ஒவ்வொருத்தருக்காக அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக் காண்பித்தது, மீண்டும் அனைத்தும் சரியாய் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அந்தச் சிறு கப்பலில் வெளிபபார்வைக்குத் தெரியாதபடிக்கு, கப்பலின் அடிப்பாகத்தில் சிறிதாய் இருந்த மறைவு அறைக்குள் தான் சில பல முக்கிய ஆயுதங்கள் இருந்தன.

கடலுக்குள் இறங்கியதும் அந்த ஆயுதங்களைத் தயாராய் வெளியே எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதுவரையில் இவையெல்லாம் பாதுகாப்பாய் அங்கேயே இருக்கட்டும் என்று எண்ணி அங்கே பதுக்கி வைத்திருந்தனர்.

இப்பொழுது ருத்ரன் அந்த அறைக்குள் தான் தனியாக நின்று அனைத்தையும் தானே சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் அங்கே தன்னைத் தவிர வேறு யாரோ இருப்பது போல ஒரு பிரம்மை தோன்றவும், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது, அந்த அறையில் சிறு நடைபயின்றான்.

பின்பு தனது இதழுக்குள் தோன்றிய மர்மச்சிரிப்புடன் அந்த அறையைப் பூட்டிவிட்டு மீண்டும் மேலே சென்றான்.

அந்த ஆயுத அறையின் மர்மம் தனக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தால் போதும் என்று நினைத்தானோ என்னவோ?

மேலே வந்தவன், மீண்டும் அனைவரும் ஒன்றாய் அழைத்தான். அனைவரும் அங்குக் கூடியதும், அமரேந்திரடம்..

“மாமா.. இன்னைக்கு வேட்டைக்கு நீங்களும், அர்ஜுனும் வர வேண்டாம்.” என்று கூறவும், அங்கிருந்த அத்தனை பேரும் ஒரு சேர அதிர்ந்தர்கள்.

“என்ன பிரதாப் சொல்லற? இன்னைக்கு நடக்கப் போற விஷயம் எவ்வளவு பெருசுன்னு தெரியுமில்ல? அதுவும் எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரியுமில்ல?

அப்படியிருக்கப்போ நாங்க உன் கூட வரவேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவர் சற்று படபடப்பாகக் கேட்க, ருத்ரனோ..

“இந்தக் காரியம் ரொம்ப ஆபத்தானதுன்னு தெரிஞ்சு தான் மாமா உங்களை வரவேண்டாம்னு சொல்லறேன்.” என்று கூறவும் மற்றவர்களுக்குக் குழப்பமே மிஞ்சயது.

“சொன்னா புரிஞ்சுக்கோங்க மாமா.. இந்த வேட்டை, ரொம்ப ஆபத்தானது. இதுல எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, காளிக்ஷேத்ராவுக்கான அடுத்த தலைவனா அர்ஜுன் இருக்கணும்.

அவனுக்கு வழிகாட்ட நீங்க இருக்கணும்.

அதுவுமில்லாம, முன்னாடி நான் கொஞ்சம் இலகுவா இருந்தேன். உங்களைப் பாதுகாப்பேன்ற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு.

இப்போ என்னோட கணம் கூடிட்ட மாதிரி எனக்குத் தோணுது. அதனால உங்களை அங்க கூட்டிட்டுப் போய், உங்களையும் ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பல.” என்று கூற, அவனது பேச்சு முழுதாகப் புரியாவிட்டாலும், அவனது கூற்றிலிருந்த நியாயம் இருவருக்குமே புரிந்தது.

அதனால் இருவரும் அவனை மறுத்து எதுவும் பேசாவிட்டாலும், சிறு தயக்கத்துடன் தான் அங்கிருந்து சென்றார்கள்.

அவனை மறுத்துப் பேசியும் அவர்களுக்குப் பழக்கமில்லையே? ருத்ரன் என்ன செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும் அன்று அவனை அத்தனையாய் நம்புபவர்களல்லவா அவர்கள்?!

அன்று பகல் முழுதும் ஒருவகையான இறுக்கமான மனநிலையில் தான் இருந்தான் ருத்ரன்.

தான் செய்வது சரியா பிழையா என்று அவன் சிறிதும் யோசிக்கவில்லை. அந்த நிலையையெல்லாம் அவன் எப்பொழுதோ தாண்டிவிட்டான். ஆனால்.. இன்றைய அத்தியாயம் தனது வாழ்வின் புதிய தொடக்கம் என்பதில் மட்டும் அவனுக்கு ஐயமே இல்லை!

வானின் கதிரோன் கடல் மடியில் விழுந்து இளைப்பாறத் துவங்கிய நேரம், உதட்டில் சிறு மர்மச்சிரிப்புடன் அந்த ஆயுத அறையை நோக்கிக் சென்றான் ருத்ரன்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்