Loading

லெட்ஸ் ரெடி ஃபார் தி ப்ராஜெக்ட் ஆரல் என்று கூறிய குரல் ஒலித்து மறைந்தது. திறந்த கதவும் மூடிக் கொண்டது.

அனைவரும் திக்பிரமை பிடித்தது போல் இருந்தனர்.

இது என்ன எதற்காக இப்படி ஒரு பனிமலையின் நடுவில் தங்களைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். இது என்ன இடம் என்று பலவிதமான கேள்விகள் அவர்களுக்குள்.

அங்கே நிலவிய மயான அமைதியைக் கலைத்தது தணிகைதான்.

“அக்கா.. அது என்ன உறல். என்னமோ சொன்னாங்களே. கேட்டுச்சா.. உறலுக்கு ப்ராஜெக்ட்டா..” தணிகை.

“டேய்.. உலக்கை.. அது உறல் இல்ல.. அரல்…” ஆரு..

“ஆமா, ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க. இப்போதான் ஏதோ ஒரு க்ளூ கிடைச்சிருக்கே. அடுத்த என்னன்னு யோசிக்கலாம்” நேரு.

“ஆமா..  உண்மைதான். நல்லன் அப்பா சொன்ன மாதிரி இது குளிர் பிரதேசம். அதான் சாப்பாடு கெட்டுப் போகாம இருக்கதுக்கு காரணம், குளிர் நிலத்துக்கு நடுவுல நாம இருக்கதுதான்” மதுபல்லவி.

“தலையெல்லாம் சுத்துது.. முதல்ல அரல்ன்னா என்னனு சொல்லுங்க” வேதன்.

“அரல்ன்னா தீவுன்னு ஒரு பொருள் இருக்கு. அது வேற மொழிலன்னு நினைக்கிறேன்” மது.

“என்ன தீவா?” வேதன்.

“ஆமா… கிரேக்கத்துலன்னு நினைக்கிறேன்..” மது.

“ஆனா இப்போ ‌நம்ம இருக்கதே தீவு மாறிதானே இருக்கு. எதுக்கு திரும்ப ஒரு தீவுக்கு போகணும்” சித்திரன்.

“அதுவும் சரிதான். அப்பா நீங்க ஏன் பேசாமையே இருக்கீங்க” மது.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரே குழப்பமா இருக்கு” திருநல்லன்.

அனைவரும் தவித்துப் போய் அமர்ந்திருந்தனர். அடுத்த வேளைக்கான உணவு வந்தது. இதுவரை அவர்களுக்கு ஏதேனும் தகவல் அளிக்க வேண்டும் என்றால், ஒரு சீட்டில் எழுதியே அனுப்பப்படும். ஆனால் இன்று புதிதாக இருந்தது.

அவர்கள் குழம்பித் தவிக்கும் பொழுதே ஒரு குரல் ஒலித்தது. மீண்டும் அதே குரல்தான்.

“யாரும் ரொம்ப குழப்பிக்காதீங்க. உங்க உயிருக்கு உத்தரவாதம் இருக்கு‌. யாருக்கும் எதுவும் ஆகாது. ஆரல்ன்னா என்னன்னு எல்லாரும் ரொம்பவே யோசிச்சிருப்பீங்க. அதுக்கான பதில் இன்னும் சில நாள்ல தெரிஞ்சிடும். அதுவரை இதே மாதிரி ஒத்துமையா, நல்லா சாப்டு உடம்பைத் தேத்திக்கோங்க. அதிகமா யோசிச்சு டயர்டாகாதீங்க. குறிப்பா மது. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. நர்ஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் அவுங்களை பார்த்துக்கோங்க” என்று எதிரொலித்தக் குரல் அடங்கிப்போனது.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அந்த கடத்தல் காரன் சொல்றது நிஜம்தான். இனி நான் யோசிக்கிறதா இல்லை.‌ நான் பெருசா யோசிச்சதே இல்ல. இந்த வேதன் திருடனான்னு கண்டுபிடிக்க முளையைக் கசக்கிப் பிழிஞ்சுட்டேன். அவன் சொல்ற மாதிரி சாப்டு நிம்மதியா தூங்கலாம்” தணிகை.

“டேய்.. உன்னை எங்கடா அவன் யோசிக்க வேண்டாம்னு சொன்னான். மது அக்காவைத்தான் வேண்டாம்னு சொன்னான்” ஆரு.

“ஏய்.. ஆரு.. யோசிக்க மூளை வேணும்டி.. அவனுக்கு அதுதான் இல்லையே…” என்று நேருவை முறைத்தான் தணிகை.

“சாரி.. சாரி… மூளை இல்லைன்னு தெரியாம சொல்லிட்டேன்” என்று கூற, “அது” என்றான் அவன் விரல் மடக்கி‌.

“அது இல்ல தம்பி. உனக்கு மூளைதான் புதுசா பறிச்சக் கொத்தமல்லித் தழையா இருக்கே. அதை வாடாம அப்புடியே டப்பால போட்டு ஃப்ரிட்ஜில வச்சிடு. அப்புறமா அவ கேக்கமாட்டா. மூளையை வேலை செய்யவிடுன்னு” என்று கூற, அனைவரும் நகைத்தனர்.

“உன்னைக் கொலை செய்யாமவிடமாட்டேன்” தணிகை‌.

“ஏய்.. நேரு.. இதை மறந்துட்டியே. டப்பால சின்னதா ஓட்டைப் போட்டு வச்சா பல நாளைக்கு கெட்டுப்போகாம இருக்கும் கொத்தமல்லி” ஆரு.

“பர்கர் மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுற. வாயா அது. ஊர்ல உள்ள எல்லாரையும் வசைபாடவே இந்த வாயப் படைச்சிருக்கான் அந்த ஆண்டவன்” தணிகை.

“எங்களுக்கு ஏதோ ஒன்னு வேலை செய்யிது. ஆனா உனக்கு?” ஆரு.

“ஆரு.. கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? எல்லாரும் என்னனு தெரியாம தவிக்கிறோம். இப்போ போய் சண்டைப் போட்டுக்கிட்டு..” மது.

“மது… கடத்துனவுங்களுக்கு உங்களோட நிலைமை நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதுக்காகவே ஆருவையும் நேருவையும் கடத்திருப்பாங்களோ?” சித்திரன்.

“புது கண்டுபிடிப்பு.. சின்ச்சானுக்கு வேற வேலையில்ல” என்று தணிகை கூற, “இந்த வாயை உடைக்க நான் தயார்.. ஆனா திருப்ப சாப்பாடு இல்லாமல் எல்லாரும் கஷ்டப்படணும். அதான் பொறுமையா இருக்கேன்” என்றான் சித்திரன்.

சாப்பாடு கிடைக்காது என்று கூறியதும் வாயை மூடிக்கொண்டான் தணிகை.

“எல்லாரும் ஒரு விஷயம் கவனிச்சீங்களா?”  என்று திருநல்லன். கூற அனைவரும் அவரை ஆர்வமாக பார்த்தனர்.

“இப்போ பேசும் போது அவன் சொன்ன பேரு ஆரல். அரல் இல்லை” திருநல்லன்.

“சரி.. அப்படியே இருந்தாலும் அதுக்கு பொருள் நமக்கு தெரியலையே” மதுபல்லவி.

“லெட்ஸ் வெயிட் ஃபார் தி ப்ராஜெக்ட் ஆரல். இந்த வாக்கியத்தில் ஆரல்ங்கிறது மட்டும் தமிழ் சொல்” திருநல்லன்.

“ஆரம் கேள்விப்பட்டிருக்கேன். இது புதுசா இருக்கே..” ஆரு.

“மீன், நெருப்பு” இப்படிலாம் ஆரல்ங்கிற வார்த்தைக்கு பொருள் இருக்கு.

” இரால் மீன் கேள்விப்பட்டிருக்கேன். ஆரல்மீன் நல்லாருக்குமா ஐயா..” தணிகை.

“எப்பப்பாத்தாலும் திங்கிறதுலே இரு..” வேதன்.

“டேய் உனக்கும் எனக்கும் பேச்சு இல்லை” தணிகை.

“திரும்பவும் ஆரம்பிக்காதீங்க” மது.

“ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. நம்மள வச்சு நிறைய வேலை வாங்கப் போறாங்களோ.. நல்லா சாப்புட சொல்றாங்க..” தணிகை.

“மது அக்காவை எப்படி வேலை வாங்க முடியும். யோசிக்கிறதும் நியாயமா வேண்டாம். இன்னொரு விஷயமும் இருக்கு..” ஆரு..

“அது சரிதான்.‌‌ ஆமா அந்த இன்னொரு விஷயம் என்ன?” தணிகை.

“உன்னைய வச்சு என்ன வேலை வாங்க முடியும்” என்று ஆரு கூற, அதில் இருந்த ஞாயம் தணிகைக்கு விளங்கினாலும் கோவம் வராமலில்லை.

**************

கணி, கீர்த்தி, அதி மூவரும் சோழர் ஐயா முன் அமர்ந்திருந்தனர். திராவிடன் மூலம் அனைத்தையும் அறிந்த சோழர் அவர்களை அழைத்திருந்தார். திராவிடனைப் பற்றி மொத்தமாக அலசி ஆராயும்படி தன் நண்பன் மணிக்கு கட்டளையிட்டிருந்தான் கணி. எங்கு சென்றாலும் ஆரம்ப புள்ளியில் வ்நது நிற்பது கணிக்கு எரிச்சலாக வந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்லை வைத்து ஏன் இப்படி நாடகம் ஆட வேண்டும். அங்கு விசாரித்ததில் ஒன்று மட்டும் தெளிவாகியது. ஒரு வருடம் முன்னரே இந்த கிராமத்தில் புதிதாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். அதாவது காத்தவராயன் இறந்த பிறகு. ஊருக்குள் யாரும் வராமலிருக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட நிலத்தில் காத்தவராயனின் ஆவி சற்றுகிறது என்று இட்டுக்கட்டிவிட்டிருக்கின்றனர். இந்த ரகசியம் ஊரில் சிலர் மட்டுமே அறிவர். மக்களும் அதை நம்பினர். காத்தவராயன் அவர்களையும் அவர்களின் நிலத்தையும் காப்பாற்றுவான் என்று தீவிரமாக நம்பினார்கள்.

“சொல்லுங்க தம்பி.. என்ன விஷயமா வந்திருக்கீங்க” சோழர்.

“அதெப்படி இந்த ஊரே மத்தவங்களோட ஒட்டாம தனியா இருக்கீங்க‌” கணி..

“அது தப்பா?” என்று அவர் வினா எழுப்ப கணியால் பதில் கூறமுடியவில்லை.

“இல்ல..  தப்புன்னு சொல்ல வரல. ஆனா இது எப்படி சாத்தியம்” கணி.

“நினைச்சா முடியாததுன்னு எதுவுமே இல்லீங்களே” சோழர்.

இந்த வயதிலும் அவரின் கம்பீரமும் நம்பிக்கையும் அவர்களை பிரமிக்க வைத்தது‌.

“எங்க கை மீறி எல்லாமே நடந்திருச்சு. மீத்தேன் எடுக்க எங்க வயக்காடுதேன் கிடைச்சுதா? அம்புட்டையும் கோட்டு போட்டவனுக்கு வாரி இறைச்சிட்டு, ரூபாய்க்கு ஒரு நெல்லுன்னு வாங்கி சாப்பிடுவீங்களா?” சோழர்.

அவர் கேட்டக் கேள்வியில் உள்ள வினா நன்றாகவே விளங்கியது.

“ஐயா.. நாங்க அதெல்லாம் தப்பு சொல்ல. ஆனா குறுக்கு வழில சொய்றது தப்புயில்ல” அதி.

“தம்பி, இந்த நியாயம் அநியாயம் எல்லாம் யாரு எழுதி வச்சா.. கொஞ்சம் சொல்றீகளா? அரிசிக்கு இணையா காசுன்னு எப்படி வந்துச்சு. விவசாயிக்கு ஞாயம் கிடைக்கோணும்னு வந்திருந்தா பரவாயில்லை. ஆனா விளையிற அரிசிய வயிறுமுட்ட தின்னுட்டு, விளைய வச்சவனோட சாவ பேப்பர்ல கூட போடாம போறதுதான இப்போ உள்ள நியாயமா இருக்கு. அதனால எங்க கிராமத்துக்கு உள்ள வழிய நாங்க தேடிக்கிட்டோம். இங்க அரிசிக்கு விலையில்லங்க. எல்லாமே பண்டம் மாற்றும் முறைதான். பண்டைய காலம் மாதிரி. காத்தவராயனோட சாவ எங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டோம். இந்த பய திராவிடன் ஏதோ செய்யுறேன்னு சொன்னான். அது என்னனுலாம் எனக்கு தெரியாது. அவன் சொன்ன மாதிரி அந்த நிலத்துல விளைஞ்ச நெல்லு அப்புடியே இருக்கு. அதை வச்சு நாங்க ஊருக்குள்ள ஒரு பயல விடல. எங்க நிலம் எங்களுக்குத்தான்.‌ இங்க விளையிற நெல்லும் எங்களுக்குத்தான். இனி தனக்கு போகத்தான் தானமும் தர்மமும். அதனால இந்த ஊர்ல விளைஞ்சதுல எங்களுக்கு போக, மிச்சம்தான் வெளில விக்கிறோம். ஊர்ல உள்ள எல்லாருக்கும் என்ன தேவையோ அதை நான் செஞ்சு கொடுப்பேன். நீங்க எத்தனை நாள் வேணா இங்க இருங்க தம்பி. ஆனா திருநல்லனைக் கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டு போங்க. நீங்க சந்தேகப்படுற மாதிரி இங்க யாரும் கடத்தல” என்று நீண்ட விளக்கவுரை அளித்தார்.

அவரின் கூற்றைக் கேட்டு அதியும் கீர்த்தியும் குழம்ப, கணி குழம்பாமலே இருந்தான்.

மூவரும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.

“கணி சார், அவர் சொல்றத வச்சுப் பார்த்தா, திராவிடனுக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லையா?” அதி.

“எனக்கும் அப்படித்தான் தோணுது” கீர்த்தி.

“இல்ல நிச்சயம் தொடர்பு இருக்கு” கணி.

“அதெப்படி சார் அவ்ளோ உறுதியா சொல்றீங்க?” அதி.

“இவருக்கும் தெரியாம திராவிடன் வேற என்னவோ வேலை செய்றான்” கணி.

“சார்.. ரொம்ப குழப்புறீங்க. இங்க காணாம போனவரை நம்மள கண்டுபிடிக்க சொல்றாங்க. எனக்கு என்னமோ வழக்குலேந்து நம்ம திசைத் திரும்பி போற மாதிரி இருக்கு” அதி.

“சரி..‌ நீ சொல்றது எல்லாம் சரியா இருக்குன்னே வச்சுக்குவோம். எதுக்கு நேத்து திராவிடன் யாருக்கோ போன் பேசிட்டு அதை மறைக்க நினைக்கணும். எனக்கு ஒரு க்ளு கிடைச்சா போதும். அதை வச்சு நூலு பிடிச்சு போயிடலாம்” என்று கணி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவனது கைபேசி ஒலித்தது. அதை எடுத்து காதில் வைத்தான்.

அவனுக்கு கிடைத்தத் தகவலில் அவனுடைய முகம் சற்றே மலர்ச்சியடைந்தது.

“சார்.. என்ன ஆச்சு? சொல்லுங்க..”

“காணாம போன எல்லாருக்கும் ஓ நெகட்டிவ் குரூப் ப்ளட். அது மட்டுமில்லாம காணாம போன எல்லாருக்கும் இன்னொரு ஒத்துமையும் இருக்கு. எல்லாரும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுத்திருக்காங்க. அதுவும் சரியா காணாம போறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி. இதுலையும் ஒரு விதிவிலக்கு இருக்கு. அது திருநல்லன் ஐயா மட்டும்தான். அவரு மட்டும்தான் இந்த மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிக்கலை” என்ற தகவலை உரைக்க, மற்ற இருவரும் சற்று மகிழ்ந்தனர்.

ஆரல் தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்