Loading

நிறம் 7

 

“ஹலோ பாஸ்.” என்று பவ்யமாக ஆரம்பித்தான் பிரதீப்.

 

“என்ன பிரதீப், உன்னை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சா இப்படி கோட்டை விட்டுட்டு இருக்காங்க உன் ஆளுங்க. தேர்தல் நெருங்குற நேரம். என்னால அங்க வர முடியாதுன்னு தான, பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சேன்.” என்று பிரதீப் பேசுவதற்கான அவகாசத்தை தராமலேயே விக்ரம் பேசிக் கொண்டிருக்க பிரதீப்பிற்கு எரிச்சலானது தான் மிச்சம்.

 

“பாஸ், இன்னைக்கே அந்த **** கண்டுபிடிச்சு அவனோட பொனத்தை போட்டோ எடுத்து அனுப்புறேன்.” என்று சரளமாக கெட்ட வார்த்தைகளை கையாண்டான் அந்த எம்.பி.ஏ பட்டதாரி.

 

ஆம், பிரதீப் படித்தது என்னவோ எம்.பி.ஏ தான். ஆனால், அவனிற்கு பிடித்தது இந்த அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் எல்லாம். தன் எம்.பி.ஏ படிப்பின் மூலம்  கிடைக்காத பலவற்றை எதேச்சையாக அவன் கைகள் தூக்கிய கத்தி அவனிற்கு பெற்று தர, அன்றிலிருந்து புத்தியை தீட்டாமல், கத்தியை தீட்ட ஆரம்பித்தான். விளைவு, விக்ரமின் கண்களின் சிக்கினான் இந்த படித்தவன்.

 

அப்போது விக்ரமும் மும்பையில் வளர்ந்து வரும் (!!!) தாதாவாக, ஏற்கனவே அங்கு டானாக இருக்கும் நிர்மலுடன் கூட்டணி வைத்திருக்க, தனக்கு கீழ் வேலை செய்ய நம்பிக்கையான ஒருவனை தேடிக் கொண்டிருந்தான். பிரதீப் விக்ரமின் கண்களுக்கு சிக்க, அவனின் படிப்பையும் பிடிப்பையும் தனக்கு மூலத்தனமாக்கிக் கொண்டான் அந்த வியாபாரி!

 

அப்போதிலிருந்து இப்போது வரை விக்ரமின் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்பவனான பிரதீப், அந்த வழக்கத்தை மாற்றியது வர்ஷினி விஷயத்தில் மட்டுமே.

 

பிரதீப்பின் பெண்களுடனான பழக்கம் அவர்களின் அபார வளர்ச்சிக்கு பின்னரே ஆரம்பித்தது. விக்ரமும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க, போ(பே)தையின் பிடியில் தன்னை தொலைத்தான் பிரதீப்.

 

ஒரு கட்டத்தில் அதுவும் சலித்துப் போக, அடுத்து என்னவென்று அவன் சிந்திக்கும்போது தான் வர்ஷினி விக்ரமிடம் வேலைக்கு சேர்ந்தாள். வர்ஷினி  விக்ரமிற்கு சொந்தமான ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்ற வந்திருந்தாள்.

 

ஆனால், அவளிற்கே தெரியாமல் அவளின் மேல் பிரதீப்பின் பார்வை பட்டதனாலேயே அவளின் சங்கட காலம் ஆரம்பித்தது.

 

பிரதீப், அனைத்து போதைகளிலும் விழுந்து எழுந்து தெளிந்ததனால், புதுவித போதைக்காக காத்திருக்க, அந்த போதையை அள்ளித்தருபவளாகவே வர்ஷினியை பார்த்தான். அவளை எப்படியாவது தனக்கு அடிப்பணிய வைத்துவிட வேண்டும் என்று அவளை பார்த்த அன்றே முடிவு செய்தான் அந்த காமுகன்.

 

இதற்காகவே பல சமய சந்தர்ப்பங்களை உருவாக்கி அவளை தனியே சந்திக்க ஏற்பாடு செய்தான் பிரதீப். ஆனால், முதல் முறை சந்திக்கும்போதே அவனின் அத்துமீறும் பார்வையை உணர்ந்த வர்ஷினி, புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அவனின் கண்களில் தனித்து படாமல் தன்னை தானே பாதுகாத்துக் கொண்டாள்.

 

முதலில், அவன் கைகளில் அவள் சிக்காமல் இருப்பது எதேச்சையாக நடப்பதென்று முடிவுக்கு வந்தவன், பின்னரே அவளின் புத்திசாலித்தனத்தை யூகித்தான்.

 

ஒரு பெண் தன்னை இத்தனை நாட்கள் முட்டாளாக்கி விட்டாள் என்பதை தாங்கிக் கொள்ளாதவன் அவளை நேரில் சந்திக்க முயற்சிக்க இப்போது அவனின் முயற்சிகளுக்கு தடையாக இருந்தது என்னவோ விக்ரம் தான்.

 

இவர்களின் தொழில் நாற்புறமும் ‘பரந்து விரிந்து’ இருந்தமையால், தனக்கு நம்பிக்கையானவர்களை ஆளுக்கொரு திசையில் அனுப்பியிருந்தான் விக்ரம். அந்த வகையில் தெற்கில் அவனிற்காக ‘உழைத்து’க் கொண்டிருந்த நசீம் என்பவனின் மேல் சந்தேகம் தோன்ற, நசீமை வேவு பார்க்க பிரதீப்பை தெற்கே செல்லுமாறு கூறினான் விக்ரம்.

 

இதுவரை விக்ரமை மறுத்து பழகியிராததாலும், வர்ஷினி இங்கு தானே வேலை செய்கிறாள், எங்கு சென்றுவிட போகிறாள் என்பதாலும் அப்போது எதுவும் கூறாமல் நாட்டின் தென்பகுதிக்கு வந்தான்.

 

அவர்கள் சந்தேகப்பட்டதைப் போலவே நசீம் இவர்களின் எதிரியான கேசவ் சர்மாவிற்கு ஆதரவாக மாறியிருப்பது தெரியவர, நசீமை போட்டுத்தள்ளினான் பிரதீப். விக்ரமின் தேர்தல் வேலைகள் வேறு இருப்பதால், தெற்கின் தற்போதைய பொறுப்பாளனாக பிரதீப்பையே இருக்க சொன்னான் விக்ரம்.

 

ஏற்கனவே, இங்கு வந்ததிலிருந்து மும்பை செல்லவில்லை என்ற கடுப்பில் இருந்தவனிற்கு விக்ரம் தூக்கிக் கொடுத்த இந்த பொறுப்பு அவனின் மேல் ஏற்றப்பட்ட சுமையாகவே இருந்தது. இதுவே வர்ஷினியை பார்க்கும் முன்பானால், பிரதீப் இந்த பொறுப்பை சந்தோஷமாக ஏற்றிருப்பானோ. எல்லாம் பெண்ணாசை படுத்தும் பாடு!

 

பிரதீப்பிற்கு முன்பு போல வேலையும் இல்லாததால், படுக்க குடிக்க என்றே அவனின் நாட்கள் கடந்து செல்ல, அவனை சற்று நிதானமாக்கியது என்னவோ விக்ரம் சென்னை வரும் செய்தி தான்.

 

தேர்தல் வேலைகளை வைத்துக் கொண்டு விக்ரம் ஏன் சென்னை வரவேண்டும் என்று யோசித்தவனிற்கு பதிலாக விக்ரம் அனுப்பிய ஒலிப்பதிவு வந்து சேர்ந்தது.

 

அவர்களின் முக்கிய தொழிலையும், அந்த தொழிலின் தலைமை இடமாக கருதப்பட்ட அவர்களின் இடத்தையும் காவலர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த ஒலிப்பதிவில் தெரியவர, பிரதீப் சற்று பதறினான்.

 

ஏனெனில், இப்போது அவர்கள் சட்டபூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பல தொழில்கள் செய்து வந்தாலும், அவர்களின் ‘லாபகரமான’ தொழில் என்றால் இது தான். இதை பல காலமாக காவலர்களின் கண்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டு வருகின்றனர். இப்போது அதற்கே பங்கம் ஏற்படும் நிலை வரும்போது பிரதீப் பதற்றமடையவே செய்தான். இந்த சிக்கல் வந்திருப்பது அவன் பொறுப்பேற்றிருக்கும் இடத்தில் அல்லவா.

 

எவ்வாறு இதை எதிர்கொள்வது என்று விக்ரமுடன் கலந்தாலோசிக்கும்போதே, ஆளுக்கட்சியின் அழுத்தத்தினால் விக்ரமை கைது செய்ய முனைப்பாக இருப்பதாகவும் இவர்களுக்கு தகவல் வர, விக்ரமின் சென்னை திட்டமும் அலசி ஆராயப்பட்டது.

 

அதன்படியே விக்ரம் சென்னை வரப்போவதில்லை என்றும், ஆனால் விக்ரம் சென்னை வந்தது போல காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், தேர்தல் முடியும் வரை அவர்களின் முக்கிய தொழிலை செய்ய வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

 

இந்த முடிவின் படியே, விக்ரம் சென்னை வந்தது போல காட்டுவதற்காக சென்னை வருவிக்கப்பட்டவள் தான் வர்ஷினி. வர்ஷினி சென்னை வரும் விஷயத்தை பிரதீப் விரும்பவில்லை. ஒருவேளை அவள் காவலர்களிடம் மாட்டிக்கொண்டால், அவளை தனக்கு கீழே கொண்டு வரமுடியாது என்று எண்ணமே அவனிற்கு.

 

இதன்காரணமாக, முதல் முறையாக விக்ரமை எதிர்த்தான் பிரதீப். ஆனால், விக்ரமோ அவள் தான் இந்த வேலைக்கு சரியானவள் என்று கூறியதால் பிரதீப்பினால் வர்ஷினியின் சென்னை வருகையை தடுக்க முடியவில்லை.

 

தடுக்க மட்டுமல்ல, அவளைப் பார்க்கக் கூட முடியாமல் அவனின் வேலைகளில் மூழ்கிப்போனான்.

 

வர்ஷினியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விஷயம் கேள்விபட்டபோது, காவல்துறையில் இருக்கும் கருப்பாடுகளின் மேல் கொண்ட நம்பிக்கையினால் சற்று மெத்தனமாக இருந்ததனாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தன்னையே நொந்து கொண்டான் பிரதீப்.

 

“சொன்னதை செஞ்சா சந்தோஷம் பிரதீப். அப்பறம் அந்த பொண்ணு வர்ஷினி எப்படி இருந்தாளோ அப்படியே எனக்கு வேணும். அதாவது உயிரோட வேணும்.” என்று தீவிரமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் விக்ரம்.

 

அவனின் கடைசி வரை பிரதீப்பின் மூளையை குடைந்து கொண்டே இருந்தது. இதுவரை வர்ஷினியின் விஷயத்தில் நடந்தவை அனைத்தையும் மனதினுள் ஓட்டிப் பார்த்தவனிற்கு தன் முயற்சிகள்  விக்ரமிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் கொண்டான். இந்த சந்தேகமே இவனின் அழிவிற்கு வழிவகுக்குமோ!

 

*****

 

வர்ஷினி அமைதியின் மருஉறுவமாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எதை அவள் மறக்க வெளியே தன்னை துறுதுறுவெனவும் மகிழ்ச்சியாகவும் காட்டிக் கொள்கிறாளோ, அதையே நினைவுபடுத்தியதாலோ அவளின் வேடிக்கை பேச்சை நிறுத்திவிட்டு மௌனத்தை கடைபிடித்தாள்.

 

வெளியே வேடிக்கை பார்க்கிறேன் என்ற பெயரில் எதையோ வெறித்த வண்ணம் தன் மொத்த வாழ்க்கையையும் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருந்தவளிற்கு, அந்த வாகனம் நின்றது தெரியவில்லை.

 

அவளின் மோனநிலையை கண்டவன், இறங்கி அவள் புறமிருந்த கண்ணாடியை தட்டியதும் தான் சுயத்தை அடைந்தாள் வர்ஷினி.

 

ஒருவித தயக்கத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தவளிற்கு பதிலளிக்காமல் கண்களாலேயே அந்த மோட்டலை சுட்டிக் காட்டினான்.

 

வர்ஷினியோ அவனையும் அந்த மோட்டலையும் மாறி மாறிப் பார்த்தவள், அப்போதும் வாயைத் திறக்காமல் இருக்க, அவனோ கடுப்புடன் அவளை அழைக்காமலேயே உள்ளே சென்று விட்டான்.

 

“ஐயையோ, இவன் என்ன கூப்பிடாம உள்ள போயிட்டான்? ச்சே, தப்பு பண்ணிட்டேனோ! ஃபர்ஸ்ட்டே உள்ள போயிருக்கணுமோ?” என்று பசித்த வயிறை தடவியபடி சோகமாக அமர்ந்திருந்தாள்.

 

பத்து நிமிடங்களில், அவன் வருவதை கண்டவள் அதுவரை இருந்த சோக முகபாவத்தை மாற்றிக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

 

அவனோ வந்ததும் அவளின் முன்னே உணவு பொட்டலத்தை வைத்துவிட்டு, அத்துடன் வேலை முடிந்ததை போல வாகனத்தை உயிர்பித்து விட்டான்.

 

வர்ஷினியோ, “வாயை திறந்து சாப்பிடுன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவான்?” என்று முணுமுணுத்தவள் சற்று நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள்.

 

ஆனால், அவளின் முயற்சியை முறியடிக்கவே அந்த உணவு பொட்டலத்திலிருந்து அவளிற்கு பிடித்த ‘மசால் தோசை’யின் வாசனை வர, தன் பிடிவாதத்தையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, அந்த மசால் தோசையுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள் வர்ஷினி.

 

அதை ஓரக்கண்ணில் பார்த்தவன் எதுவும் கூறாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

*****

 

அன்றைய நாள் தன் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ஷ்யாம். தன் ராயல் என்ஃபீல்டில் சென்று கொண்டிருந்தவனின் கண்களில் மீண்டும் ஒருமுறை விழுந்தாள் அவள்.

 

அவளின் டியோவை நிறுத்தி அதனருகே நின்றிருந்தவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது அவளின் உடல்மொழியிலேயே புரிந்தது. அவளை பார்த்ததும், அவனின் ராயல் என்ஃபீல்டிலும் அவள் பார்க்க முடியாத வண்ணம் சற்று, அவன் அவளை அலசி ஆராயும் தொலைவில் நின்றது.

 

அவள் சற்று பரபரப்புடன் இருந்ததை அவளின் கரங்கள் துப்பட்டா நுனியை சுருட்டுவதிலேயே தெரிந்தது.

 

அதைக் கண்டவன் ஒரு பெருமூச்சுடன், “ஹ்ம்ம், இது மட்டும் தான் மாறல.” என்று முணுமுணுத்தான்.

 

யாரையோ தேடுவதும், மீண்டும் அலைபேசியை பார்ப்பதுமாக கழிந்த அந்த பத்து நிமிடங்களில், ஷ்யாம் அவர்களின் கல்லூரி காலங்களை நினைத்துப் பார்த்தான்.

 

அவன் அந்த கல்லூரியில் படித்தபோது, தன் பின்னிலேயே சுற்றித் திரிந்த ஷர்மியை அவன் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஷர்மி, எப்போதும் இதழ்களில் வழியும் சிரிப்புடன், அவன் என்ன திட்டினாலும் மீண்டும் அவனிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசுவாள்.

 

அப்படிப்பட்டவள் இன்று தானே வழிய சென்று பேசும்போது விலகிச் செல்வதால் ஏற்பட்ட ஆர்வத்தினாலோ என்னவோ, அவளை சுற்றிக் கொண்டிருந்தன அவனின் கண்கள்.

 

அப்போது, அழுக்கு சட்டையும் முட்டி தொடும் ஷார்ட்ஸுடனும் வந்தான் ஒருவன். ஷ்யாம் சற்று தொலைவில் நின்றிருந்ததால் அவனால் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்க முடியவில்லை. இருப்பினும், இருவரும் எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

 

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சென்று விசாரிக்கலாம் என்று தயாராகவே நின்றிருந்தவன், அந்த புதியவன் ஷர்மியின் கைகளை பற்றி இழுக்கவும், அவர்களின் அருகே சென்று விட்டான்.

 

ஆனால், இருவரும் தங்களின் இழுபறியில் தீவிரமாக இருந்ததால் ஷ்யாம் வந்ததை கவனிக்கவே இல்லை.

 

“விடுடா, சொன்னா கேளு.” என்று அவளும், “ப்ச், உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? இதுல எதுக்கு தேவையில்லாம தலையிடுற?” என்று அவனும் பேசிக் கொண்டே இழுபறியில் ஈடுபட்டனர்.

 

“க்கும்…” என்ற சத்தத்தில் ஷர்மியின் கவனம் பிசக, அவளின் கைகளில் இருந்த வஸ்து அந்த புதியவனின் கைகளுக்கு சென்றது. ஷ்யாம் அதைக் கவனித்தாலும், அவன் கவனித்ததாக காட்டிக் கொள்ளவில்லை.

 

“என்ன இங்க பிரச்சனை?” என்று அந்த புதியவனை நோக்கி வினவ அவனோ, “அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.” என்றான்.

 

இம்முறை ஷர்மியின் புறம் திரும்ப, அவளோ அதுவரை முகத்திலிருந்த பதற்றத்தை நொடியில் மறைத்தாள்.

 

ஷ்யாம் மனதிற்குள், ‘எமோஷன்ஸை மறைக்குற அளவுக்கு வளர்ந்துட்டியா?’ என்று எண்ணிக்கொண்டவன் அவளையே கூர்மையாக பார்த்தான்.

 

அவனின் பார்வை அவளிற்கு ஏதோ போலிருக்க, “அவன் என் தம்பி தான். சின்ன சண்டை வேற ஒன்னுமில்ல.” என்றாள் அவனின் கண்களை பார்க்காமல்.

 

‘இன்னைக்கு காலையில இருந்து என் கண்ணைப் பார்த்து பேசுனவ, இப்போ கண்ணைப் பார்க்காம தவிர்க்கிறதிலேயே தெரியுது நீ ஏதோ மறைக்குறன்னு. என்னன்னு சீக்கிரமா கண்டுபிடிக்கிறேன்.’ என்று நினைத்தான் ஷ்யாம்.

 

“என்ன ஷர்மிக்கா, உன் க்ரஷ் உன்னை பாதுகாப்பா பார்த்துக்கிறாரு போல!” என்று கிண்டலாக அவளின் தம்பி கூற, ஷ்யாமிற்கு அது வெறும் கேலிப்பேச்சு என்று தோன்றவில்லை.

 

“ப்ச்,வினய் இங்கயிருந்து கிளம்பு முதல.” என்று கண்டிப்பாக கூறினாள் ஷர்மி. இத்தனை நேரம் அந்த வினய்யை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் பார்வை இப்போது ஷர்மியின் பக்கம் திரும்பியது.

 

ஷ்யாமின் மனம் ஆராய்ச்சியை மறந்து சற்று உல்லாசத்தை தத்தெடுத்ததோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவனின் பார்வை மாற்றம். அதைக் கண்ட ஷர்மியின் உள்ளத்திலோ வெறுமை படர்ந்தது.

 

இருவரையும் மாறி மாறிப் பார்த்த வினய், “நீங்க உங்க ரொமான்ஸ் கன்டினியூ பண்ணுங்க. நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்குறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

செல்லும் அவன் முதுகையே கண்ட ஷ்யாமிற்கு அவனை எங்கோ கண்டது போல நினைவு எழ, அதை யோசித்துக் கொண்டிருந்தவனை கலைத்தவள் ஷர்மி தான்.

 

அவள் அங்கிருந்து செல்வதைக் கண்ட ஷ்யாம் அவளை வழிமறித்தவாறு, “உனக்கு ஸ்கூல் படிக்கிற தம்பி இருக்கான்னு சொல்வியே அவன் தான் இவனா?” என்று ஷ்யாம் வினவ, ஒரு பெருமூச்சுடன், “மிஸ்டர். ஷ்யாம்,  நான் காலேஜ்ல உங்க பின்னாடி சுத்துனது எல்லாம் உண்மை தான். ஆனா, இப்போ ஐ ஹாவ் மூவ்ட் ஆன். இப்போ நமக்குள்ள எதுவும் இல்ல. எதுவும் ஏற்படவும் எனக்கு விருப்பமில்ல.” என்று முகத்தில் அடிப்பதைப் போல கூறிவிட்டு, வேறு பக்கம் பார்த்தாள்.

 

‘பழிக்குப் பழியோ!’ என்று மனதிற்குள் நினைத்த ஷ்யாம், “ஆனா, எனக்கு அப்படி தோணலையே சோடாபுட்டி.” என்று அவளை நெருங்கியவன், அவளின் உதட்டை சுற்றி காற்றில் வட்டம் வரைந்து, “இந்த வாய் வேணாம்னு சொன்னாலும்…” என்றவன் இம்முறை அவளின் கண்களை சுற்றி வட்டம் வரைந்து, “இந்த கண்ணு ரெண்டும் வேணும்னு சொல்லுதே.” என்று கண்ணடித்தான்.

 

லேசாக கலங்கிய கண்களை சுதாரித்து மறைத்தவள் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 

அவள் கண்களிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம், “உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல சோடாபுட்டி. ஆனா, கண்டிப்பா உன்னை அதிலிருந்து வெளிய கொண்டு வருவேன். ஃபர்ஸ்ட் இந்த விக்ரம் கேசை முடிக்குறேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணு சோடாபுட்டி.” என்று முணுமுணுத்தான்.

 

இந்த காட்சிகளையெல்லாம் பார்த்த அந்த ஒரு ஜோடி கண்கள், முதலில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தின. மறுநொடியே இந்த காட்சி செய்தியாக வேறொரு நபருக்கு பகிரப்பட்டது.

 

*****

 

மசால் தோசையை சுவைத்து தன் பசியைப் போக்கியவள், அருகில் தனக்கும் அங்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவனை நேர்பார்வை பார்த்து, “நான் தான் உங்களுக்கு என் சொந்த கதை சோக கதை எதையும் சொல்லலையே. அப்பறம் எப்படி சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்க?” என்றாள்.

 

“இதை அந்த மசால் தோசையை சாப்பிடுறதுக்கு முன்னாடி கேட்டுருந்துருக்கணும்.” என்று வழக்கம் போல கேலி செய்ய, அவளோ அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், “முன்னாடி சொன்ன மாதிரி எங்க அப்பாவோட ஃபர்ஸ்ட் ஒய்ஃப்போட பொண்ணு தான் நான்.” என்று அவள் ஆரம்பித்தாள்.

 

“எங்க அம்மா, என்னோட சின்ன வயசுலேயே இறக்க, எங்க அப்பாவோட அத்தை பொண்ணையே எங்க அப்பாக்கு இரண்டவதா கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. சின்ன வயசுல அவங்க என்கிட்ட எப்படி நடந்துகிட்டாங்கன்னு எனக்கு சரியா ஞாபகம் இல்ல. ஆனா, ரித்தி வளர ஆரம்பிச்சதுல இருந்தே என்னை ஓரம்கட்ட என்னென்ன வேலை செய்யணுமோ அதெல்லாம் சரியா செஞ்சாங்க. அதுக்காக  அடிக்கவெல்லாம் செய்யல. ஆனா, அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் மனசை ரணப்படுத்தாம விடாது.” என்று விரக்தியாக கூறியவளிற்கு அவள் நினைவடுக்கில் இருந்த நினைவுகள் ஒவ்வொன்றாக நினைவு வர துவங்கியது.

 

யாரோ பெத்ததுக்கெல்லாம் நான் சோறு பொங்கி போட வேண்டியதாயிருக்கு!”

 

 “என் பிள்ளை பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு காசு கட்ட முடியலையாம். இந்த அம்மணி டான்ஸ் கிளாஸ் போறதுக்கு காசு கேட்டதும் எடுத்து குடுத்துருவாராம். அப்படி என்னத்த ஆடி கிழிக்கப் போறாளோ?”

 

காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்தோமான்னு இல்லாம, யாரு கூடயாவது கூத்தடிச்சுட்டு வீட்டுக்கு வர வேண்டியது. இதை சொன்னா, என்னை திட்ட வேண்டியது. எவன் கிட்டயாவது ஏமாந்துட்டு வரட்டும், அப்போ தான் புத்தி வரும்!…”

 

என்ன இன்னுமா சம்பளம் போடல? உண்மைலேயே சம்பளம் போடலையா, இல்ல மொத்தமா வேறெதுக்காவது செலவு பண்ணிட்டியா?”

 

இன்னும் அவளின் எண்ணங்கள் எவ்வழியெல்லாம் பயணித்திருக்குமோ, யாரோ அவளை அழைப்பது போல் தோன்ற, நினைவிலிருந்து நிகழ்விற்கு வந்தாள்.

 

“மிஸ். மயூரவர்ஷினி.” என்று அவளின் முழுப்பெயர் கொண்டு அழைத்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.